பக்கங்கள்

03 ஏப்ரல் 2011

பிரித்தானியாவிற்கு வந்த பீரிஷிற்கு ஏமாற்றம்!

பிரித்தானியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி சந்திக்க மறுத்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடந்தவாரம் .ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பிக்க முன்னர், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தார்.சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்படாத நிலையிலும், அவரைச் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் லண்டன் சென்றிருந்தார். ஆயினும், அவரை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி சந்தித்துப் பேசவில்லை. இதன்காரணமாக, பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர், லியம் பொக்ஸ், வர்த்தக முதலீட்டு அமைச்சர் லோர்ட் கிறீன், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் ஆகியோரையே அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேச்சு நடத்தியுள்ளார். பிரித்தானிய வெளிவகார அமைச்சருடனான சந்திப்பு சாத்தியமாகாத நிலையில், தமது அதிகாரபூர்வ பயணத்தை இடையிலேயே முடித்துக் கொண்டு, தொடர்ந்தும் அங்கு தனிப்பட்ட ரீதியாகத் தங்கவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார். சிறிலங்கா அமைச்சர் பீரிசின் மகளும், பேரக்குழந்தையும் லண்டனில் இருப்பதைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். லண்டனில் இருந்து அடுத்த வாரமே கொழும்பு திரும்பவுள்ள அவர், தனிப்பட்ட ரீதியாக அங்கு தங்கவுள்ளதாகக் கூறியுள்ள போதும் , அதிகாரபூர்வமான பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காவைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்களின் சங்கத்தில் சிறிலங்கா அமைச்சர் பீரிஸ் உரையாற்றவுள்ளார்.ஸ்ரீலங்கா வம்சாவழியினரான சுமார் 400 துறைசார் வல்லுனர்கள் இந்தக் கூடத்தில் கலந்து கொள்வர் என்று லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. அத்துடன் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் பங்கேற்கும் ஊடகச் சந்திப்பு ஒன்றிலும் பீரிஸ் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் கோரியதன் பின்னர் சிறிலங்காவுடன் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமரின் இந்த வேண்டுகோளை சிறிலங்கா நிராகரித்து விட்டது. இந்தநிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து சமாதானப்படுத்தவே சிறிலங்கா அமைச்சர் பிரீஸ் முயற்சி மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. நன்றி:புதினப் பலகை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.