பக்கங்கள்

30 ஏப்ரல் 2011

கிருபாகரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய புள்ளிகளிடம் விசேடமாக மனித உரிமை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் எதற்காக ஐ. நா. சபை உலகில் உள்ள வேறுபட்ட விடயங்களில் மௌனம் காக்கிறது என்ற கேள்விகளை நாம் தொடுக்கும் ஒவ்வொரு வேளையும், அவர்கள் கூறும் பதில் (Mills of UN grind slow, but sure) அதாவது ஐ. நா. சபை நடவடிக்கையை தாமதித்தாலும் நிட்சயமாக நடவடிக்கை எடுத்தே தீரும் என்பார்கள்.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களாகிய நாம் பல தடவை ஐ. நா. விடயங்களில் ஏமாற்றங்களை சந்தித்துள்ளோம். ஐ. நாவை பொறுத்தவரையில் அதாவது 192 அங்கத்துவ நாடுகளுக்கும் முன்னுரிமை வழங்குவது வழமையானதும் அவர்களது புரிந்துணர்வும்.
முள்ளிவாய்கால் யுத்தத்தை சிறீலங்கா, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் தான் வெற்றிகரமாக நடத்தி முடித்தது என்று பலர் நம்பினார்கள். இதே வேளை இன்று சர்வதேச சமுதாயம், ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் வெட்கத்தில் தலைகுனிந்து மௌனிகளாகிவிட்டனர்.
முள்ளிவாய்கால் வெற்றிக் களிப்பில் தெருப் பொங்கல், பால் பொங்கல், பிரித் ஓதியவர்கள் தமது கபட நாடகங்கள் வெளியாகி உள்ளதே என்று ஓடி ஒழிக்கின்றனர்.
பல சர்வதேச ஊடகங்கள், நிறுவனங்கள், உலகின் முக்கிய புள்ளிகள், ஈழத்தமிழர் மீதான சிறீலங்காவின் யுத்தம் ஓர் போக்கிலித்தனமான முறையில் நடைபெற்றுள்ளது என்பதை கண்டு, இதுதானா சிறீலங்கா கூறிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமென வியப்படைகின்றனர்.
ஐ. நா. வின் அறிக்கை:
ஐ. நா. வின் அறிக்கை 214 பக்கங்களை உள்ளடக்கியதுடன், மூவர் கொண்ட நிபுணர் குழு எந்த ஒழிப்பு மறைப்புமின்றி சிறீலங்கா அரசின் பிரதிநிதிகளுடன் தமக்கு இருந்த கடிதப் பரிமாற்றங்கள்களையும் வெளியிட்டுள்ளனர்.
இக்குழு சிறீலங்காவுக்கு செல்ல இருந்ததாக கூறப்பட்ட செய்திகளின் உண்மையான விபரங்களையும், சிறீலங்கா இக்குழு மீது சவாரி செய்ய முயற்சித்ததையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது.
இவ் அறிக்கை இறுதிநேர யுத்தத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், சர்வதேச மனித உரிமை, மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் சிறீலங்காவில் இடம்பெற்ற முழு யுத்தத்தையும் அலசி ஆராயுமாறு கூறுகின்றது.
இக்குழு தகவல் சேகரிப்பு, அறிக்கை தயாரிப்பை ஆரம்பித்தவேளையில், இவர்கள் நிட்சயம் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சாடுவார்கள் என்பதை எனது முன்னைய கட்டுரைகளில் கூறியிருந்தேன்.
அதேபோல் சிறுபிள்ளைகளை இராணுவத்தில் சேர்த்தமை, பொதுமக்களை மனித கேடயமாக பாவித்தமை, போர் நடைபெறாத இடங்களில் குண்டுகள் வைத்தமை, தற்கொலைத் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டும் இதில் கூறப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசைப் பொறுத்தவரையில் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல் மூலம் பொதுமக்களை கொலை செய்தமை, வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மறுத்தமை, மோசமான மனித உரிமை மீறல்களை பொதுமக்கள், விடுதலைப் புலி போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மீது மனித உரிமை மீறல்களை மேற்கொண்டமை, யுத்தப் பிரதேசத்திற்கு வெளியில் அரசிற்கு எதிரானவர்கள், ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவை போன்ற குற்றச் சாட்டுக்கள் அடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சிறீலங்கா அரசு உடனடியாக, ஒரு சர்வதேச தரத்திற்கு ஏற்ற முறையில் ஒரு விசாரணையை ஆரம்பிக்க வேண்டுமென்றும், அவ் விசாரணைக் குழு காலத்திற்கு காலம் ஐ. நா. செயலாளர் நாயகத்திற்கு தமது விசாரணைகளின் முன்னேற்றங்களை அறிவிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது.
அதேவேளை சிறீலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு எனக் கூறப்படும் நலிந்த குழு, சர்வதேச தரம் அற்றது மட்டுமல்லாது, இக் குழு இன்றுவரை இறுதி யுத்தத்தில் நடந்த எந்த நிகழ்வுகள் பற்றி விசாரிக்க முன்வரவில்லையெனவும் அறிக்கை கூறுகிறது.
வேறு விடயங்கள்:
சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமென்றுகூறி யுத்தத்தின் வெற்றியை கொண்டாடியதன் மூலம் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை மறுத்ததுடன், தமிழ் மக்களின் அரசியல் விடயத்திற்கு இராணுவத் தீர்வே வழியெனக் கூறியுள்ளது ஏற்கமுடியாத ஒன்று என அறிக்கை கூறுகிறது.
அத்துடன் தொடர்ச்சியாக யுத்தம் நடந்த இடங்களை இராணுவமயப்படுத்தல், ஒட்டுக் குழுக்களை பாவித்தல், ஊடக அடக்குமுறை ஆகியவற்றுடன,; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுத்தகாலத்தில் புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் உதவினார்கள் என்பதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டை புலம் பெயர் வாழ் தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் ஏற்க மறுப்பதாக அறிக்கை கூறுகின்றது.
இவ் அறிக்கையின் வேண்டுகோள்களில், முக்கியமாக தடுப்புகாவலில் உள்ளவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதுடன், சிறீலங்கா அரசு தனது மோசமான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் எனவும் கூறுகிறது.
அறிக்கையின் விசேட தன்மை என்னவெனில், யுத்தம் முடிந்தவுடன், 2009ம் ஆண்டு மே மாதம் ஐ. நா. மனித உரிமைச் சபையில,; சிறீலங்காவிற்கான விசேட அமர்வில,; நிறைவேற்றப்பட்ட சிறீலங்காவிற்கு சார்பான தீர்மானத்தை ஐ. நா. மனித உரிமைச் சபை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளது. இத் தீர்மானம் அவ்வேளையில,; எவ்வித உண்மைத் தகவலும் அற்ற நிலையிலேயே ஐ. நா மனித உரிமைச் சபையினால் நிறைவேற்றப்பட்டதாக இவ் மூவர் குழுவின் அறிக்கை கூறுகிறது.
இவற்றுடன் இறுதி நேர யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர், பெண்கள் மற்றவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கூறுகிறது.
முக்கிய குறிப்பு:
இவ் அறிக்கை முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட இறுதி நேர யுத்தத்தை முக்கியமாகக் கருத்தில் கொண்டிருந்தாலும், இவ்யுத்தத்திற்கான முக்கிய காரணிகளை மனதில்கொண்டு, அவற்றின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு அங்கு உருவாக்கப்பட வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
அத்துடன் நியாயமான முறையில் சர்வதேச தரத்திற்கு ஏற்றவகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விரும்பம் மட்டுமல்லாது, சர்வதேச சமூகத்தின் விருப்பமாகவும் உள்ளது.
இவ் அடிப்படையில் இவ் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கும்வேளையில் ஒரு மறைந்துள்ள உண்மை வெளியாகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பல நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு, இன்று வரையில் யாரும் தடைக்கு எதிராக சர்வதேச ரீதியாக வழக்குத் தாக்கல் செய்யவில்லை. இவ் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி இவ் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையினாலும் சர்வதேச சமூகத்தினாலும் எப்படியாக பார்க்கப்படும் என்பதை தமிழீழ மக்கள,; விசேடமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், சங்கங்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ் அறிக்கையில் சிறீலங்கா அரசிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு புலம்பெயர் வாழ் தமிழர் நீதி கேட்கும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதனால், புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், சங்கங்களும் தமது சகல செயற்பாடுகளிலும் ‘‘முன் எச்சரிக்கையாக’’ நடப்பது புத்திசாலித்தனமானது.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
நன்றி: ஈழமுரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.