பக்கங்கள்

31 ஜனவரி 2014

நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு ஆரம்பமாகியது!

பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவும், இணைந்து ஏற்பாடு செய்த சிறிலங்கா அரசின் நில அபகரிப்பு தொடர்பான மகாநாடு இன்று காலை 10மணியளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் 14 ஆம் இலக்க அறையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. பிரித்தானியர் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான நிகழவில் தாயகத்திலிருந்து தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியப் பாரராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். தாயகத்தில் இன்னுயிர் நீர்த்த எமது உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது மகாநாட்டின் முதற்கட்டமாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மற்றும் லீ-ஸ்கொட் ஆகியோர் ஆரம்ப உரைகளை நிகழ்த்தினர். இம்மாநாட்டில் இலங்கை, இந்தியா, மலேசியா, தென் ஆபிரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து அறிவுஜீவிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சிவஞானம் சிறிதரன், கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர் நாகேந்திரன், வடகிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

29 ஜனவரி 2014

ஜெனீவா செல்வது பற்றி முடிவில்லை-அனந்தி

ஜெனீவாவிற்கு விஜயம் செய்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளில் காணாமல் போதல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய ஆனந்தி சசிதரன் ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெனீவாவிற்கு தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாகாணசபையில் ஆனந்தி சசிதரன் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்திருந்தார். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா விஜயம் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவிற்கு விஜயம் செய்வது குறித்து கவனமாக சிந்தித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

28 ஜனவரி 2014

"ஸ்டாலின் விரைவில் செத்துவிடுவார்"திட்டினார் அழகிரி!

திமுக தலைவர் மு கருணாநிதி தனது மூத்த மகனும் கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளருமான அழகிரி, தனது இளைய மகனும் கட்சியின் பொருளாளருமாகிய ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்து தன்னிடம் பேசியதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்ததாலும்தான் அவரை திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்ததாகக் கூறியிருக்கிறார். கடந்த வாரம் அழகிரி தனது தந்தையை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துவிட்டுச் சென்ற சில மணி நேரத்தில் திமுகவிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் முறையாக பகிரங்கமாகவும் நேரடியாகவும் கருத்து தெரிவித்திருக்கும் கருணாநிதி ”அழகிரிக்கு தி.மு. கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கெல்லாம் உச்சகட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற்காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார்கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளையெல்லாம் மளமளவென்று பேசி, என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக்கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது,” என்றார். ”என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் நான்கு மாதங்களில் செத்து விடுவார் என்று கட்சித்தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்,” என்றும் கருணாநிதி வலியுறுத்தினார். தவிரவும் கட்சித்தலைமை எடுக்கும் சில முடிவுகள் அவருக்கு உடன்பாடானதில்லையென்பதற்காக அதைப் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது, அழகிரியோ தொடர்ந்து அவ்வாறு பேட்டியளித்து வந்தார் என்றார் கருணாநிதி. மதுரையில் தனது ஆதரவாளர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து அவருக்கு அதிருப்தி என்கிறார்; ஆனால் மதுரை மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி மீது தாழ்த்தப்பட்டோர் உரிமை தொடர்பான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என வினவினார் அவர். அழகிரி தனது நடத்தைகளுக்காக மன்னிப்பு கோரினால், அவர்மீதான தற்காலிக நடவடிக்கை ரத்து செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இந்தக் கேள்வியை நீங்கள் அவரைப் பார்த்துத்தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார் கருணாநிதி.

27 ஜனவரி 2014

விக்கியை மீறி நினைவுத்தூபி அமைக்க பிரேரணை நிறைவேற்றம்!

வடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். சபையின் இன்றைய அமர்வுக்கு முன்பாக உறுப்பினர்களை நேற்று அவசரமாகச் சந்தித்தார் முதலமைச்சர். வடக்கு மாகாண சபைக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் செயற்படாமல் மென்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அப்போது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார் முதலமைச்சர். அத்துடன் மூன்று உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள பிரேரணைகள் கடுமையானவையாக இருப்பதால் அவற்றில் திருத்தங்களைச் செய்யும் படியும் அவர் வலியுறுத்தினார். சர்வதேச விசாரணை, முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம், நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலை என்று பிரகடனப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அரசுடன் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறி வுறுத்தினார் என்று அறிய முடிகிறது.அதனையும் மீறி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று (27) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போது ‘வன்னிப் பகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களுக்கு இன்றுவரை அவர்களை நினைவுகொள்வதற்கு நினைவுத்தூபி ஒன்று இல்லாத காரணத்தினால் இந்த மக்களை நினைவுகூறும் வகையில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும்’ என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்தார். இதனை மாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் வழிமொழிந்ததைத் தொடர்ந்து, இந்த பிரேரணை சபையில் எதிர்ப்புக்கள் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

26 ஜனவரி 2014

ஈபிடிபி ஊடகவியலாளர் மீது படையதிகாரி தாக்குதல்!

அரச ஆதரவு தரப்பான ஈபிடிபியின் தினமுரசு பத்திரிகையின் பிரதேச செய்தியாளர் ஒருவர் நேற்று இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டுள்ளார்.அத்துடன் அவரது புகைப்படக்கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்த புகைப்படங்கள் பலவந்தமாக அழிக்கப்பட்டுமுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையினில் வலிகாமம் கிழக்கின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட அச்சுவேலி இடைக்காடு பகுதியினில் படையினரால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததென நம்பப்படும் கண்ணிவெடியொன்று பொதுமக்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பினில் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுமுள்ளது. மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதியினில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பற்றி செய்தி அறிக்கையிடச்சென்றிருந்த தினமுரசு ஊடகவியலாளரான கணேசமூர்த்தி விசயந்தன் (வயது 27) என்பவரே படை அதிகாரியொருவரால் பொதுமக்கள் முன்னிலையினில் தாக்கப்பட்டுள்ளார்.தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போதும் அங்கு புகைப்படம் பிடித்ததாக குற்றஞ்சாட்டி அவ்வதிகாரி தாக்குதல் நடத்தியுள்ளார்.அத்துடன் அவரு புகைப்படக்கருவியினையும் பறிமுதல் செய்து சேதப்படுத்தியுள்ளதுடன் அதிலிருந்த புகைப்படங்களை அழித்துமுள்ளார். குறித்த தினமுரசு ஊடகவியலாளரான கணேசமூர்த்தி விசயந்தன் ஏற்கனவே இதே போன்று இனந்தெரியாத நபர்களினால் அண்மையினில் இரவு வேளையினில் தாக்கப்பட்டு காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

25 ஜனவரி 2014

அனந்தியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள பின்னணியில், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அனந்தியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள மார்கோசா விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராப்போசன விருந்துடன் நடந்த இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில், அனந்தியைப் புனர்வாழ்வுக்கு அனுப்பும் பாதுகாப்பு அமைச்சின் திட்டம் குறித்துக் கலந்துரையாடப்பட்டதா என்று கொழும்புத் தூதரகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியதற்கு, எந்தக் கலந்துரையாடல் குறித்த எந்த தகவலையும் வழங்க முடியாது என்று கூறியுள்ளார். யுஎஸ் எய்ட் திட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு 196 மில்லியன் ரூபா உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அவர் யாழ்ப்பாணம் சென்ற மறுநாளான கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உரையாற்றிய போது, அமெரிக்கத் தூதுவர் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடுவதாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 ஜனவரி 2014

நீதிபதி சிறீஸ்கந்தராஜா விஷம் மூலம் கொல்லப்பட்டாரா?

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுந்தரம் ஸ்ரீஸ்கந்தராஜாவின் திடீர் மரணம், சட்டத்துறையினர் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியவர் நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜாவேயாவார். அந்த தீர்ப்பின் முக்கிய பங்கு அவருக்கே இருந்தது. அத்துடன் அந்த தீர்ப்பு இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த போதும் முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானதே. இதனை மாற்றியமைக்க ராஜபக்ஷவினருக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜா வழங்கிய தீர்ப்பு காரணமாக அரசாங்கம் அவர் மீது கோபத்தை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசாங்கம் அவருக்கு உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வையும் வழங்கவில்லை. இவருக்கு பதிலாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த புவனேக அலுவிகார என்பவரை அரசாங்கம், உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தது. இந்த நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜா திடீர் சுகவீனமடைந்தார். இவருக்கு பாரதூரமான நோய்கள் எதுவும் இருக்கவில்லை. 60 வயதான ஸ்ரீஸ்கந்தராஜா திடீரென சுகவீனமுற்றதுடன் அவரது மூளையும் செயலிழந்தது. கடும் விஷம் காரணமாக நீதியரசருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சட்டத்துறையினர் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கமலேந்திரன் விடுதலையானால் ஆபத்து!

கொல்லப்பட்ட ரெக்சியன்
நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் ரெக்சியன் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பிணையினில் விடுவிக்கப்பட்டால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனத்தெரிவித்துள்ளனர் ரெக்சியனின் குடும்பத்தவர்கள்.மரணமடைந்த றெக்சியனினால் மரணத்திற்கு முன்னதாக எழுதப்பட்ட கடிதத்தினை நீதிமன்றினில் சமர்ப்பிக்காது தம்மிடம் ஒப்படைக்க கமலேந்திரனின் ஆட்கள் அச்சுறுத்தினர்.ஆனால் அதையும் தாண்டி அக்கடிதத்தினை நீதிமன்றினில் தாம் ஒப்படைத்து விட்டதாகவும் அதனை தொடர்ந்து தமது வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டு வருவதாகவும் சமூகமளித்திருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையினிலேயே கமலேந்திரன் பிணையினில் விடுவிக்கப்பட்டால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனத்தெரிவித்துள்ளனர். இதனிடையே கமலேந்திரனை அடுத்த மாதம் 6ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அதே வேளை மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதி வழங்கியுள்ள நீதிபதி யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸார் இதன்போது முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். டானியல் ரெக்சியன் கொலை வழக்கு, இன்று காலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது இந்தக் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரெக்சியனின் மனைவி மற்றும் கமலேந்திரன் சார்பாக சட்டத்தரணி சர்மினி விக்கினேஸ்வரன் ஆஜராகி வாதாடினார்.அதாவது, தனது கட்சிக்காரரான கமலேந்திரன் மாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதியளிக்க வேண்டுமென்று கோரினார். இதனையடுத்து பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு அமர்வுகளில் கலந்து கொள்ளலாம் என்றும்,அத்துடன் நீதிமன்ற விசாரணைகள் தொடர்பினில் பேரவையினில் எதுவுமே பேசக்கூடாதெனவும் பணித்ததுடன் அடுத்த தவணைக்காக எதிர்வரும் ஆறாம் தேதி வரையும் யாழ்.சிறைச்சாலையினில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

23 ஜனவரி 2014

விக்கி,சுமந்திரன் ஆகியோரை அமெரிக்கக் குழு சந்தித்தது!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று திடீரென நேற்று புதனிரவு யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. யாழ் சென்றுள்ள குழுவினர் உடனடியாகவே வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது.இரவு 8 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணிநேரம் நீடித்திருந்தது. ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்கா தொடர்பான பிரேரணைகள் கொண்டுவரப்படவுள்ள நிலையில் சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்க அதிகாரி ஸ்ரீபன் ரப் இலங்கை சென்று இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பகுதிக்கு விஜயம் செய்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான சர்ச்சை இன்னமும் ஓய்ந்திருக்கவில்லை.அவர்கள் விஜயம் செய்து திரும்பி இரண்டு வாரங்கள் ஆவதற்குள் மீண்டும் மற்றொரு குழு யாழ் சென்றுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும் இக்குழுவினரது இன்றைய சந்திப்புக்கள் பற்றி தகவல்கள் ஏதும் வெளியாகியிருக்கவில்லை.

22 ஜனவரி 2014

மன்னார் மனிதப்புதைகுழி விவகாரத்தில் கோத்தா!

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைகளை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கையாளவுள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து விசேட குழு ஒன்று மன்னாருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதேவேளை, இந்த மனித புதை குழி புதன்கிழமையும் 11 ஆவது தடவையாக தோண்டப்பட்டபோது மேலும் மூன்று மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மனித புதை குழியை மேலும் அரை மீற்றர் தூரத்துக்கு விசாலமாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதைகுழி தோண்டும் பணிகள் வியாழக்கிழமையும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆதரவு குப்பைகளுக்கு ஐங்கரநேசன் செம அடி!

நாட்டில் பிள்ளையை காணவில்லை கணவனை காணவில்லை என துடிக்கும் மக்கள் மத்தியில் சினிமா காரணுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் தேவையா என்று ஆர்பாட்டகாரர்களுக்கு தகுந்த விளக்கம் கொடுத்துள்ளார் ஐங்கரநேசன்.யாழில் உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட நடிகர் விஜய் படம் தொடர்பிலான விமர்சனத்தை அதன் தொண்டர்கள் என கருதப்படும் சில இளைஞர்கள் எதிர்த்ததுடன் அது குறித்து தங்களிடம் மன்னிப்பு கேட்குமாறு பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் போரில் சொந்தபந்தங்களை இழந்து தவிக்கும் தமிழர்கள் இன்று உலகநாடுகளிடம் நீதிகேட்டு போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான இளைஞர்கள் ஒருசிலர் இருப்பதை காணாக்கூடியதாக உள்ளது இவர்களுக்கு விவசாய அமைச்சர் நல்லதொருகருத்தினை கொடுத்துள்ளார். சினிமா காரர்களுக்கு பால்வார்ப்பதும் கட்டவுட் வைப்பதும் விமர்சனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு எல்லாம் நீங்கள் தமிழர்களா ஒரு பத்திரிகைக்கு எதிராக ஆர்பாட்டம் செய்கின்றீர்கள். நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்து சொல்ல ஆட்கள்இல்லாமல் இன்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்து சொல்லும் ஊடகத்திற்கு எதிராக ஆர்பாட்டம் செய்த இளைஞர்களுக்கு விவசாய அமைச்சர் காட்டமாக எச்சரித்துள்ளார்.

21 ஜனவரி 2014

இறப்பு பதிவுக்கு சன்மானம்!கிளிநொச்சி மக்களின் அவலம்!

காணாமல்போன உறவுகளை இறந்ததாக பதிவு செய்தால் உதவித்திட்டங்கள் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி நேற்று கிளிநொச்சியில் சதி திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது சிங்கள அரசு. காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மறுபுறத்தில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் இந்தப் பதிவு நடவடிக்கை பகிரங்கப்படுத்தப்படாமல் கரைச்சிப் பிரதேச சபையின் கூட்டுறவு மண்டபத்தில் நடத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் மூலம் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இறுதிப் போரில் காணாமற்போனவர்களின் தேவைகள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் நடத்திய விசாரணைகளுக்கு அமைய 426 குடும்பங்கள் இனங்காணப்பட்டதாகவும், அந்தக் குடும்பங்களே நேற்று பதிவுக்கு அழைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்கள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைவாக தம்மிடம் ஒரு வாரத்துக்கு முன்னர் சிலர் வந்து பதிவுகளை மேற்கொண்டதாகவும், அவர்கள் நேற்று (நேற்று முன்தினம்) எமது வீடுகளுக்கு வருகை தந்து இன்று (நேற்று) பதிவுக்காக வருமாறு தெரிவித்திருந்ததாகவும் அதற்கு அமையவே தாம் வருகை தந்தாகவும் அங்கு வந்த மக்கள் தெரிவித்தனர். நீதி சமாதானத்துக்கான அமைச்சு, அரச நிர்வாக அலுவல்கள் அமைச்சு, அரசபாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு, வேலைவாய்ப்பு பணியகம், ஆள்பதிவு திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம் என்பன நேற்றைய இந்தப் பதிவு நடவடிக்கையில் கலந்து கொண்டிருந்தன.ஆசை வார்த்தைகள் அங்குன் தாராளம் காணாமற்போனவர்களை இறந்தவர்களாகக் கருதிப் பதிவு செய்தால் பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என்று மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. நஷ்டஈடு மற்றும் வீட்டு வசதி, கடன்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மக்களிடம் கூறப்பட்டு காணாமற் போனவர்களை இறந்தவர்களாகப் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கை அங்கு முன்னெடுக்கப்பட்டது. இதனால் 110 பேர் காணா மற்போன தமது உறவுகள் இறந்தவர்கள் எனக் கருதி பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7 பேருக்கு நேற்றே தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காசோலை வழங்கும் நிகழ்வில் ஜனாதி பதியின் புதல்வரும் நாடாளு மன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்­ கலந்து கொண்டார். அத்துடன் பங்குபற்றிய 426 குடும்பங்களுக்கும் 10 கிலோ நிறையுள்ள உலர் உணவுப்பொதியும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண விடம் வினவிய போது, புலிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்கள், அவர்களால் காணா மற்போகச் செய்யப்பட்டவர்கள், அவர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும் பங்களுக்கே உதவிகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். குழப்பும் நடவடிக்கையா ? இந்த நடவடிக்கை மாவட்டச் செயலகத்தின் அருகிலுள்ள கூட்டுறவு மண்டபத்தில் முன் னெடுக்கப்பட்ட வேளையில், மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றது. ஆணைக்குழுவின் அமர்வுக்கு அழைக்கப்பட்ட 41 பேரில் 27 பேரே நேற்றைய தினம் அமர்வில் கலந்து கொண்டனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுக்குச் சென்றதால் ஏனையோர் கலந்து கொள்ளாமல் விட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பராக்கிரம பரணகமவிடம் வினவியபோது, இது தொடர்பில் தனக்குத் தெரியா தெனவும், வெளியில் இடம் பெறும் எந்தவொரு விடயத்துக்கும் நான் பதில் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

20 ஜனவரி 2014

ஆணைக்குழு முன் அனந்தி சாட்சியம்!

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் கணவர் சசிதரனை (தமிழீழ விடுதலைப் புலிகளின்
முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன்) இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன்மூதல் அமர்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது. அந்த அமர்பின் மூன்றாம் நாளான இன்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு வாக்குமூலமளிக்கும் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நானும், எனது கணவரும், பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். அப்போது, என்னையும், பிள்ளைகளையும் தனியாக வவுனியாவுக்கு அழைத்துச் சென்ற இராணுவத்தினர், எனது கணவரை விசாரணைகளின் பின் விடுதலை செய்யவதாக தெரிவித்தனர். நானும் எனது பிள்ளைகளும் செட்டிக்குளம் மெனிக்பார்ம் முகாமில் தங்கவைக்கப்பட்டோம். ஆனாலும், கணவர் பற்றிய விபரங்கள் அதன் பின்னர் கிடைக்கவில்லை. கடைசியாக, 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது கணவரை ரயிலில் அழைத்துச் செய்வதைக் கண்டதாக உறவினர் ஒருவர் கூறினார். கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தபோது பூவும் பொட்டுடனும் சுமங்கலியாகவே இருந்தேன். இன்றும் நான் அப்படியே இருக்கின்றேன். இனியும் அப்படித்தான் இருப்பேன்” என்று அனந்தி சசிதரன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, நீங்கள் உங்கள் கணவரை ஒப்படைத்த இராணுவ அதிகாரியினை அடையாளப்படுத்த முடியுமா? என்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள அனந்தி சசிதரன், “எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் நான் அவரை ஒப்படைக்கும் போது மோதலின் அகோரத்தினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். அதனால் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன் என்பதை, அவர்களின் உடைகளிலிருந்த சின்னங்கள் மூலம் உணரமுடிகிறதே தவிர; அவர்களை என்னால் அடையாளப்படுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

19 ஜனவரி 2014

ஊர்காவற்றுறையில் இளைஞர் சடலமாக மீட்பு!

ஊர்காவற்றுறைப் பகுதியில் பற்றைக் காணியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறையைச் சேர்ந்த அன்ரன் ஜஸ்ரின் (வயது 19) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமற்போயுள்ளதாக கடந்த 14ம் திகதி ஊர்காவற்றுறை பொலிசில் முறையிடப்பட்டிருந்தது. இந் நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

18 ஜனவரி 2014

போர்க்குற்ற ஆதாரங்கள் பொய்யென நிரூபித்துக்காட்டட்டும்-மன்னார் ஆயர்

அமெரிக்கப் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை முடிந்தால் சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய்யென்று நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ள மன்னார் ஆயர், அவ்வாறு செய்த பின்னர் எங்களைக் கைது செய்வது தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ‘நாங்கள் பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை’ என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார்.
ஆதாரங்கள் கையளிப்பு
யாழ்ப்பாணத்துக்கு கடந்த 8 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள விசேட போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் வந்திருந்தார். இவருடன் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். இறுதிக் கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் கொத்துக்குண்டுகள், இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்ற ஆதாரங்கள் இந்தச் சந்திப்பில் ஆயர்களால் ஸ்ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்டன.
 பொய்க் குற்றச்சாட்டுக்கள்
அரசின் மீது பொய்க் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தி வரும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இவர்கள் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்ததாகப் பொய்யான தகவல்களை வழங்கியுள்னர். இதனாலேயே ஸ்ரீபன் ராப் இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென்று தெரிவித்துள்ளார். எனவே பொய்யான தகவல்களை வழங்கிய இரு ஆயர்களையும் கைது செய்ய வேண்டும்’ என்று இராவண பலய என்ற சிங்கள பௌத்த கடும் போக்கு அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளது.
நிரூபியுங்கள் பார்க்கலாம்
கொடுத்த ஆதாரங்களை முடிந்தால் பொய்யென்று நிரூபிக்கட்டும். அவ்வாறு செய்த பின்னரே எங்களைக் கைது செய்வது தொடர்பில் கதைக்க முடியும் என ஆயர் குறிப்பிட்டார். எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இறுதிக் கட்டப் போரில் சிக்குண்ட மக்கள், பங்குத் தந்தையர்கள் எல்லோருடனும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். அவர்கள் எங்களுக்குப் பல தகவல்களை வழங்கியுள்ளனர் என்றார். அதனையே நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். அந்த மக்களிடம் வெளியாள்கள் சென்று தகவல் பெற முடியாது. அவர்கள் எம்மை நம்பியே வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இறுதிப் போரில் நடந்த உண்மைகளைப் பலர் இரகசியமாக ஐ.நாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நாங்கள் பகிரங்கமாகச் சொன்னதால் எங்களை எதிர்ப்பதாக ஆயர் மேலும் தெரிவித்தார்.

17 ஜனவரி 2014

அனந்திக்கு புனர்வாழ்வு அளித்தால் அரசு மோசமான நிலைக்கு செல்லும்!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்க முற்பட்டால் அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இன்று இதனை அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் nஐனீவா கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அச்சம் கொள்ளத்தொடங்கியுள்ளது. இதனாலேயே இங்குள்ளவர்களை அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது இதனொரு செயற்பாடாகவே இனத்திற்காக போராடி வருகின்ற அனந்தி சசிதரன் போன்றோரை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யாராலும் அச்சுறுத்தி அடிபணிய வைக்கமுடியாரெதன்றும் அவர் தெரிவித்தார். அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு வடுதலை செய்யப்பட்டவர்களை மீண்டும் புனர்வாழ்விற்கு அனுப்புதல், அதே போன்று பலரை புனர்வாழ்வுக்கு அனுப்பபடுமென எச்சரிக்கை செய்தல், புதிதாக பலரை புனர்வாழ்விற்கு அனுப்புதல் போன்ற மிக கேவலமான செயல்கள் இங்கு தான் இடம்பெறுகின்றது. குறிப்பாக தனது கணவரை காணாமல் தேடி அலையும் சாதாரண குடும்பத் தலைவியாக போராடியவர் இன்று மக்கள் ஆணையுடன் தன்னைப் போன்ற பிரச்சனைகளையுடைய குடும்பங்களின் தலைவியாகவும் மக்களுடன் மக்களாக நின்று தனது இனத்திற்காக சக உறுப்பினர் அனந்தி சசிதரன் போராடி வருகின்றார். இவ்வாறு தமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுகின்றவர்கள் மற்றும் இந்த இனத்திற்காகப் போராடுகின்ற அனந்தி சசிதரன் போன்றவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுவதும்; மிரட்டப்படுவதுமான சம்பவங்கள் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக கடந்த வாரம் அனந்தி சசிதரனுடைய இடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நிகழ்வில் அனந்தி சசிதரன் கலந்து கொண்டால் தமாம் கலந்து கொள்ளப் போவதில்லை என பொலிஸ் மற்றும் படையினர் தெரிவித்ததுடன் நிகழ்வையும் புறக்கணித்திருந்தனர். இதே போன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் இராணுவத்தினர் அதீதிகளாக அழைபக்கப்பட்டனர். அதே வேளையில் அந்த நிகழ்வில் நானும் அழைக்கப்பட்டிருந்தேன். இதனை அறிந்து கொண்ட இராணுவத்தினர் இந்நிகழ்விற்கு சிவாஜிலிங்கம் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. ஆயினும் அரசின் இத்தகைய செயற்பாடுகளினால் நாம் பயந்து விடுவோமென அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் நாம் ஒரு போதும் பயப்படப்போவதில்லை மாறாக இந்த அரசாங்கமே ஜெனிவாக் கூட்டத்
தொடரை நினைத்து நினைத்து பயப்படுகின்றது. அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் முற்பட்டால் அது மிக மோசமான நிலையைத் தோற்றுவிக்கும். குறிப்பாக தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போடுவது போன்றதாகவே அமையுமென்றார்.

16 ஜனவரி 2014

எனக்கு புனர்வாழ்வளிப்பது விந்தையானது:அனந்தி

நான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என்று வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். சிங்களவர்களுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மக்களின் பிரதிநியான நான் முதலமைச்சரின் அனுமதியுடனேயே வெளிநாட்டு பிரதிநிகளை சந்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார். காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டி வழங்கியுள்ளேன்.இதற்காக எனக்கு புனர்வாழ்வளித்தால் அது விந்தையானதாகவே இருக்கும் என்றார். அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது, ’2009 மே மாதம் போரின் முடிவில் கைது செய்யப்படாதவர்கள் அல்லது சரணடையாதவர்கள் இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டத்தை தவறவிட்டுள்ளனர். புனர்வாழ்வுத் திட்டத்தில் இருந்து தப்பியவர்களில் அனந்தியும் அடங்குகிறார். அவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். ஒருவேளை அனந்தி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், அவர் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்திருக்கமாட்டார். அனந்தியை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைப்பதால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், அனந்தியை புனர்வாழ்வுக்கு உட்படுத்தாவிட்டால், போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை சீரழிக்கும் அவரது நடவடிக்கைகள் தொடரும் என்று இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். வடக்கு மாகாணசபையின் உறுப்பினராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளரான எழிலனின் மனைவியாவார். இவர், வடக்கு மாகாணசபை உறுப்பினராப் பதவியேற்ற பின்னர், கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அண்மையில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ராப், அனந்தி சசிதரனை சந்தித்து காணாமற்போனவர்களின் நிலை மற்றும் இறுதிப்போர் குறித்த விபரங்களை கேட்டறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

15 ஜனவரி 2014

அனந்திக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டுமாம்!

வட மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது என தெற்கின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரிவினைவாத கொள்கைகள் கோட்பாடுகளை பிரச்சாரம் செய்வதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் அனந்தி சசிதரன் அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வட மாகாணசபைக்கு தெரிவானார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படாத சிலர் இருப்பதாகவும் அவர்களில் அனந்தி சசிதரனும் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டிருந்தால் அனந்தி சசிதரன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இவ்வாறான கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருக்க மாட்டார் என பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு அளித்தால் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அனந்தி சசிதரன் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

14 ஜனவரி 2014

யாழில் ஆக்கிரமித்த வீடுகளை விட்டு படைகள் வெளியேறுகின்றன!

யாழ்ப்­பா­ணத்தில் படை­யி­னரின் உயர்­பா­து­காப்பு வல­ய­மாக்­கப்­பட்டு அவர்­களின் முகாம்­க­ளா­கவும் காவ­ல­ரண்­க­ளா­கவும் இருந்து வந்த பல வீடுகள் உரி­மை­யா­ளர்­க­ளிடம் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் மீள ஒப்­ப­டைக்­கப்­பட்டு வரு­கின்­றன. நாவற்­குழி, கைதடி, நுணாவில் பிர­தே­சங்­களில் உள்ள இரா­ணுவ முகாம்கள் முற்­றாக மூடப்­பட்­ட­துடன் இப்­ப­கு­தி­களில் முகா­மிட்­டி­ருந்த இரா­ணு­வத்­தினர் சாவ­கச்­சே­ரியில் அமைந்­துள்ள பிர­தான முகா­மிற்கு மீளச்­சென்­றுள்­ளனர். அத்­துடன் யாழ்ப்­பா­ணத்தில் மிகவும் சர்ச்­­சைக்­கு­ரிய முகா­மாக இருந்து வந்த செம்­மணி படை முகாங்­களும் காவ­ல­ரண்­க­ளும் அகற்­றப்­பட்­டுள்­ளன. கடந்த 1995ம் ஆண்டு முதல் படை­யி­னரின் முகாம்­க­ளாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருந்த வீடு­களே பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்டு வரு­கின்­றன. வலி.வடக்கின் வலித்­தூண்டல் பகு­தியில் அமைந்­தி­ருக்­கின்ற இரு படை­மு­காம்­களும் முற்­று­மு­ழு­தாக விடு­விக்­கப்­பட்டு பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. அதே­வேளை தெல்­லிப்­பழை அம்பன் பகு­தியில் தனியார் வீடொன்றில் அமைந்­தி­ருந்த முகா­மொன்றும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து இந்த வீட்டின் உரி­மை­யா­ளர்கள் அங்கு சென்று குடி­யே­றி­யுள்­ள­துடன் வீட்டின் வேலி­க­ளையும் அமைத்து வரு­கின்­றனர். மாதகல் தபால் சந்­திக்கு அருகில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவக் காவ­ல­ரண்­களும் நேற்று முதல் திடீ­ரென அகற்­றப்­பட்­டுள்­ளன. வட­ம­ராட்சி பிர­தே­சத்தில் மந்­திகை மற்றும் மாலி சந்­தியில் அமைந்­தி­ருந்த சிறிய முகாம்­களும் நேற்று முன்­தினம் அகற்­றப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேலும் வலி­காமம் கிழக்கின் நவகிரி, நிலா­வரை பகு­தி­களில் அமைந்­தி­ருந்த சிறு­மு­காம்­களும் அகற்­றப்­பட்­டுள்­ளன. வலி. மேற்குப் பிர­தேச சபைக்­குட்­பட்ட வட்டு.கேணி­ய­டியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சர்ச்­சைக்­கு­ரிய இரா­ணுவ முகாம்­களும் அகற்­றப்­பட்­டுள்­ளன. 1995ம் ஆண்டு யாழ். குடா­நாட்­டினை இரா­ணு­வத்­தினர் கைப்­பற்­றிய போது இந்தப் படை­மு­காம்கள் அமைக்­கப்­பட்­டன. யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் குறித்த முகாம்­களை அகற்­று­மாறு வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­களும் உல­க­நா­டுகள் பலவும் இலங்கை அர­சாங்­கத்­தினை வலி­யு­றுத்தி வந்­த­போதும் அகற்­றப்­ப­டா­ம­லி­ருந்த இந்த முகாம்கள் யாழ். மாவட்­டத்­திற்­கான இரா­ணுவக் கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் உத­ய­ பெ­ரேரா பத­வி­யேற்ற பின்னர் திடீர் திடீ­ரென தற்­போது அகற்­றப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

13 ஜனவரி 2014

இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை!

இலங்கைக்கு எதிராக இம்முறை ஜெனிவாவில் கடுமையானதொரு பிரேரணை கொண்டுவரப்படாலாமென எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு கொண்டு வரப்படவுள்ள தீர்மானமானது சர்வதேச விசாரணையாகவே அமையுமென தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். இந்தப்பிரேரணைக்கு ஆதரவு கோரி புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நடவடிக்கைகளை கூட்டமைப்பு தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு தகுதியற்ற அரசாகவே ஆட்சியிலிருக்கின்ற மகிந்த அரசாங்கம் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த நாட்டில் காலம் காலமாக ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கங்களும் இதே போன்றே செயற்பட்டுள்ளதென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை இடம் பெற்ற பத்தி
ரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கருத்து வெளியிடுகையிலையே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்.. இங்கு கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரிந்துரைகள் எவையுயும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அரசாங்கம் சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருகின்றது. இதற்கு மாறாக யுத்தம் முடிவடைந்த பின்னர் தொடர்ந்தும் காணி ஆக்கிரமிப்புக்கள் இரானுவ முகாம்களை அமைத்தல் மற்று தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஆகிய செயற்பாடுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் அடுத்தமாதம் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திலிருந்து தப்புவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதாவது யுத்த கணக்கெடுப்புக்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக பொய்யான தகவல்களைத் திரட்டி ஜெனிவாவிற்கு கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமையவே காணமல் போனவர்கள் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பொய்யான தகவல் திரட்டினை மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் அரசு நியமித்துள்ள காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு கூட கண்துடைப்பே.ஏற்கனவே அரசின் மனிதவுரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றில் மக்கள் புகார் செய்துள்ளனர்.முதலில் அதற்கு என்ன நடந்ததென்பதை இக்குழு விசாரிக்கட்டுமென்றார். தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அரசினால் எதிராக இழைக்கப்பட்டுள்ள அல்லது இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளுக்கு சர்வதே விசாரணையே இங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய விசாரணையொன்றே இம்முறை ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ளதாக நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

12 ஜனவரி 2014

பிரான்சில் தமிழர் ஒருவரின் அகதி அந்தஸ்து இரத்து!

இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டதற்காக, ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பிரான்ஸ் மீளப்பெற்றுக்கொண்டுள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்று வந்துள்ளார். அத்துடன் இலங்கை தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ளார். இவரது குடும்ப விபரங்களை நிர்வாக ரீதியாக ஒழுங்கு படுத்துவது தொடர்பான ஒரு சந்திப்பில் இந்த விபரங்கள் பிரான்ஸ் அகதிகள் திணைக்களமான OFPRA க்கு தெரியவந்தைதையடுத்து அந்த அமைப்பு அந்த இலங்கைத் தமிழருக்கு வழங்கிய அகதி தகுதி நிலையை திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக OFPRAஅவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில். '2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அகதிகளுக்கான ஜெனீவா சட்டத்தின் 1சி 1 சரத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட அகதி தகுதி நிலையை பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு 3 தடவைகளுக்கு மேல் சென்று வந்தது,நிர்வாக ரீதியாக தொடர்பு கொண்டது.இலங்கைவில் உள்ள அரச நிர்வாகத்துடன் எந்தவித தடங்கலுமின்றி தொடர்பு கொண்டது ஆகிய காரணங்களின் அடிப்படையில் மீளப் பெற்றுக்கொள்கிறோம்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் அச்சுறுத்தல் உள்ளது என்று அகதி தகுதிநிலை பெறுவதற்காக நீங்கள் தெரிவித்த காரணங்கள் இலங்கை அரசாங்கத்துடன் நீங்கள் எந்தவித நெருக்கடிகளுமின்றி தொடர்பு கொண்டதன் மூலம் வலுவற்றதாகியுள்ளதென தெரிவித்துள்ள பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் (OFPRA)) வெளிநாட்டவர் வருகை மற்றும் தங்குவதற்கான உரிமை தொடர்பான பிரான்சின் எல் 731-1,எல் 731-2 மற்றும் ஆர்733-10 ஆகிய சட்ட சரத்துக்களின் கீழ் தங்களது முடிவை ஒரு மாத காலத்துக்குள் CNDA எனப்படும் அகதிகளுக்கான மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. படம்'பிரான்சில் அகதி தகுதி நிலை பெற்ற ஒருவர் இலங்கை அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாகவே அல்லது வேறெந்த வகையிலுமோ எந்தவித தொடர்பும் வைத்திருக்க கூடாது' என்ற விடயம் தனக்கு தெரியாது என்று பாதிக்கப்பட்டவர் தெரிவித்த கருத்தை பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் ஏற்க மறுத்துவிட்டது.புலம் பெயர்ந்த தமிழர்களுடைய வரலாற்றில் பிரான்சில் ஒருவருக்கு வழங்கப்பட்ட அகதி தகுதிநிலை திரும்பப் பெறப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

11 ஜனவரி 2014

படை முகாமை அகற்றக்கோரி வட்டுக்கோட்டையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் பிளாவத்தை கிராமத்திலுள்ள இராணுவ முகாமினை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்றிரவு ஆரம்பித்துள்ளனர். குறித்த படை முகாமினை சேர்ந்த சிப்பாய்கள் அருகாகவுள்ள மக்கள் குடியிருப்புக்களை சேர்ந்த பெண்கள் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்றிரவும் அருகாகவுள்ள வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக பெண்கள் வசித்து வரும் வீடுகள் மீதே படைமுகாமில் இருந்து கற்கள் வீசப்பட்டுள்ளன. இதையடுத்து திரண்ட பொதுமக்கள் படைமுகாமை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்திருந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுமிருந்தது. இதனிடையே சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் ஒன்று திரண்டு வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்பட்ட போதும் பொலிஸார் அம்முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுதலித்துள்ளனர். எனினும் முறுகல் நிலை வலுவடைந்ததையடுத்து தற்போது குறித்த முகாமினைச்சேர்ந்த படையினர் அம்முகாமிலிருந்து வெளியேறி அருகாகவுள்ள பிரதான முகாமான வடலியடைப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அண்மையில் குறித்த முகாமினை சேர்ந்த சிப்பாய்கள் குளித்துக் கொண்டிருந்த கிராமப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்த நிலையில் மக்களது போராட்டத்தையடுத்து அச்சிப்பாய்கள் முகாமிலிருந்து இடமாற்றப்பட்டதுடன் அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் குழந்தைகளுடன் தாய் மரணம்!

இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இளம் தாய் ஒருவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து வடமேற்கு லண்டன் வூட்கிரான்ஸ் குளோஸ் பகுதிக்கு சென்ற பொலிசார், ஏழு மாத ஆண் குழந்தை, ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட மற்றும் அவர்களின் தாயாரின் சடலங்களை மீட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையா? என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த பொலிசார், இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தனர். அயலவர்களில் 34 வயதுடைய தஸ்மா என்பவர் கூறுகையில் சக்திவேல் வாகீஸ்வரன் மற்றும் ஜெயவானி வாகிஸ்வரன் ஆகிய இளம் தம்பதியினர் தனது அயல்வீட்டில் வசித்து வந்ததாக தெரிவித்தார். அடிக்கடி அவர்களை பார்க்க முடிவதில்லை. ஆனால் ஒருவர் மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் சத்தம் போட்டு வாதிட்டு சண்டை பிடிப்பது கேட்பதாகவும் பின்னர் அமைதியாகி விடுவார்கள் எனவும் கூறியுள்ளார். 18 வருடங்களாக அந்தப் பகுதியில் வசிக்கும் லெஸ்லி கொற் கூறுகையில் கடந்த 1 வருடமாக இந்த மாடிவீட்டு தொடரில் இலங்கை வம்சாவழி என நம்பப்படும் இந்தக் குடும்பம் வசித்து வந்ததாக தெரிவித்தார். இந்த மரணங்கள் குறித்த விசாரணையை ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிசார் மேற்கொள்கின்றனர். 

10 ஜனவரி 2014

யுத்த சூனிய வலயம்– 2 இல் ஸ்டீபன் ஜே.ரெப்!

  1. யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று நேரில் சென்று யுத்தகாலத்தின் யுத்த சூனியப் பிரதேசத்தை பார்வையிட்டார். இதன்போது யுத்த சூனிய வலயம் – 2 அமைக்கப்பட்டிருந்த புதுமாத்தளன் பாடசாலை, வைத்தியசாலை மற்றும் யுத்த காலத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்து ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் ரெப் சென்றுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் இந்த பயணத்தில்; இணைந்துகொண்டார் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யுத்த சூன்ய வலயத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பொதுமக்கள் அகப்பட்டிருந்தனர். யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் யுத்த சட்டங்களை மீறுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் 2009 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மிகவும் ஒடுங்கிய பகுதியான யுத்த சூன்ய வலயத்தில் அகப்பட்டுள்ள பொதுமக்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு புலிகள் தடுத்துவருகின்றனர். அதேவேளை அரசாங்க தரப்பினர் அந்த பகுதியில் திரும்ப திரும்ப கண்மூடித்தனமாக ஷெல் தாக்குதலை மேற்கொண்டனர் என்றும் அவ்வமைப்பு அன்று தெரிவித்திருந்தது.புதுமாத்தளன் வைத்தியசாலையின் தற்காலிககொட்டகையும் இந்த யுத்தசூன்ய வலயத்தில் இருந்ததாகவும் 2009 ஆம் ஆண்டு 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் காயமடைந்தவர்கள் அந்த கொட்கையில் சிகிச்சை பெற்றுவந்தனர் என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் 2009ல் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

09 ஜனவரி 2014

ஈ.பி.டி.பி கமலுக்கு விடுமுறை,கொதித்து எழுந்த சிவாஜிலிங்கம்!

நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், அவை நடவடிக்கையில் பங்குகொள்ளாமல் இருப்பதற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் அவருக்கு விடுமுறை வழங்குவதற்கு வடமாகாண சபை இன்று வியாழக்கிழமை அனுமதியளித்தது. தனக்கு விடுமுறை வழங்குமாறுகோரி வடமாகாண சபையின் தலைவர் கந்தையா சிவஞானத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தினை சபையின் அனுமதிகோரி அவர் அவைக்கு வாசித்துக் காட்டினார். இதன்போது குறுக்கிட்ட வடமாகாண சபை உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ‘கண்டவாறு விடுமுறை வழங்கமுடியாது என்றும் இந்த விடுமுறையினை அனுமதிக்க வேண்டாம்’ எனவும் கேட்டுக்கொண்டார். இதன்போது எழுந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவருக்கு இருக்கும் சட்டச் சிக்கல்கள் காரணமாக அவரது விடுமுறையை ஏற்று அவருக்கு விடுமுறை வழங்க அனுமதிப்போம் எனக்கேட்டுக்கொண்டார். இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் சபையின் அடுத்த அமர்வின்போது கமலேந்திரன் கலந்துகொள்ளாவிட்டால் அது தொடர்பாக அவர் ஒரு முடிவினை சபைக்கு அறிவிக்க வேண்டும். அதன் பின்னரே நாம் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்ற முடிவினை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்தே எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் சபையமர்வில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு விடுமுறை வழங்க சபை அங்கீகாரமளித்தது. எதிர்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் அவைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நான் விசாரணைக் கைதியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளேன். வடமாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான அனுமதியினை எனக்கு வழங்குமாறு எனது வழக்கறிஞர் முடியப்பு ரெமீடியஸ் நீதவானிடம் கோரியிருந்தார். இருந்தும் 11.12.2013, 31.12.2013 ஆகிய தினங்களில் என்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதும் அதற்காக அனுமதியினை நீதிமன்றம் எனக்கு வழங்கவில்லை. எனினும் இன்று 09ஆம் திகதி என்னை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் வேளையில் எனக்கு அனுமதி கிடைக்கும் என நினைக்கின்றேன். அவ்வாறு அனுமதி கிடைத்தாலும் நான் இன்றைய வடமாகாணசபை அமர்வில் கலந்துகொள்வது என்பது சிரமமானது. ஏனெனில், சில சட்ட ரீதியான பாதுகாப்பு விடயங்கள் எனக்கு செய்யப்பட்ட பின்னரே என்னால் அமர்வுகளில் கலந்துகொள்ள முடியும். ஆகவே இன்றைய அமர்வில் கலந்துகொள்ள முடியாமையினால் எனக்கு விடுமுறை வழங்கும் படி தாழ்மையுடன் சபையிடம் கேட்டுகொள்கின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மீன் வயிற்றில் பாம்பு!

சந்தையில் வாங்கப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் பாம்பு ஒன்று இருந்த சம்பவம் வாழைச்சேனை பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனை 5ஆம் வட்டாரத்தில் வசிக்கும் ஏ.எம் வலிஹான என்பவர் செப்பலி வகை மீன் ஒன்றை சந்தையில் வாங்கிச் சென்றுள்ளார். அவரது மனைவி சமையலுக்காக மீனை வெட்டியபோது மீனுக்குள் ஒன்றரை அடி நீளமான பாம்பு ஒன்று இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவத்தை பார்வையிட வந்த பிரதேச மீனவர்கள் மாரி காலங்களில் செப்பலி,கொய்,கொடுவா போன்ற மீன் இனங்கள் நீர்பாம்புகளை பிடித்துண்ணும் பழக்கம் கொண்டவை எனத் தெரிவித்தனர்.

07 ஜனவரி 2014

யாழை கலக்கிய கொள்ளைக் குழுவில் இளம் பெண்!

யாழ் மாவட்டத்தை கலங்கடித்த 'ஆவ' எனப்படும் குழுவின் பெண் தலைவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு யாழ்ப்பாணம் பொலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மேற்படி குழுவைச் சேர்ந்த தலைவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கலாக 16பேர் ஆயுதங்களுடன் யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவு பலவற்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து இப்பெண் தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. இரவு வேளைகளில் குறித்த பெண் நடமாடுவதாகவும், கொக்குவில் பிறவுன் வீதியை சேர்ந்த ராஜகுமார் ஜெனிட்டா என்கிற (வயது 23) என்பவரே இவர் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தேடியதையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

06 ஜனவரி 2014

இலங்கை அரசு எதனையும் கொடுக்காது- இராயப்பு ஜோசப்!

தமிழர்களுக்கு எதையும் இலங்கை அரசு கொடுக்காது என்பது நன்றாக தெரியும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு யோசப் தெரிவித்தார். வவுனியா நகர மண்டபத்தில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தில் 14 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர். தமிழ் மக்களுக்காக பணியாற்றிய குமார் பென்னம்பலம் அவர்கள், பால் பொங்கி வரும் போது பானை உடைந்தது போல் அவர் தனது பணியை ஆர்வத்துடன் செய்யவேண்டிய நேரத்தில் எங்களை விட்டு பிரிந்துள்ளார். எனினும் அவர் ஆற்றிய தொண்டுகளும் அவருடைய சிந்தனைப் போக்குகளும் எம்மை உற்;சாகப்படுத்தி தமிழர்களுக்கான அரசியல் உரிமைக்காக பாடுபடுமாறு தூண்டிவிட்டுள்ளது. இவரது தந்தையாரும் சிறந்த அரசியல்வாதியாக சட்டமேதையாக இருந்தவர். தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ்ந்த இனம். ஐம்பதுக்கு ஐம்பது என்ற உரிமை பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமைத்தாகம் எல்லோருக்கும் உள்ளதைப் போலவே தமிழ் மக்களுக்கும் உள்ளது. தமிழ் இனம் ஓர் தேசியம் அந்த உரிமையில் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அவர்கள் தம்மை ஆள்வதற்கான கோரிக்கையை வைப்பதற்கான உரிமை இருக்கின்றது என்பதனை முன்வைத்து செயற்பட்டவர். அந்தவகையிலேயே ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மகனான குமார் பொன்னம்பலம் அவர்கள் விட்டுச்சென்ற பணியை நாம் தொடரவேண்டும். அதாவது தமிழ் மக்களினுடைய விடுதலையிலும் அரசியல் உரிமையிலும் அடித்தளம் கொண்டதாக அவர்கள் தங்களையே ஆட்சி செய்து முன்னேற்றம் காணும் வகையிலாக தமிழர்களின் உரிமை அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதிலே நாமும் பாடுபடவேண்டும்.குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு நன்றாக தெரியும் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதையும் கொடுக்காது என்று. ஏனெனில் இந்த நாட்டில் தேச பிதா என்று சொல்லக்கூடிய உயர்ந்த தளத்திற்கு ஏறி வந்தவர் கிடையாது. அரசியல்வாதிகள் எல்லாம் தங்களுடைய கட்சி அரசியலுக்கும் தங்களுடைய அதிகாரத்தை பெற்றுக் கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். முழு தேசத்தையும் எடுத்து பார்த்தால் அல்லது அரசியல் ஜதார்த்தத்தை எடுத்துப் பார்த்தால் எங்களுடைய நாட்டின் பல மொழிகளையும் கலாசாரத்தையும் கொண்டவர்களுக்கு மத்தியில் சுயநிர்ணய உரிமைக்கு நாம் தகைமை கொண்டவர்கள் என்பதை இவ்வாறான நினைவு நாளில் எடுத்து சொல்லியிருக்கின்றார். அதன் அடிப்டையில் இந்த அரசாங்கம் எமக்கு எதனையும் செய்து விடாது. எங்காவது அதை இதை செய்து வீதி போட்டுத் தாருங்கள் உங்களுக்கு என்று கூறி ‘பிள்ளையை அழுக்குகின்ற மிட்டாய்’ மாதிரி எதையாவது எமக்கு எரிந்து விடுவார்கள். அதை எடுத்துக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என்பார்கள். எமக்கு சலுகைகளும் வேண்டாம். நீ எங்களிடம் இரங்கவும் தேவையில்லை. ஆனால் எங்களுக்கு உள்ள உரிமையை தா. உரிமையை பறித்த நீ. உரிமையை கொடு. எனக்கு உரிமை புதிதாக வரவில்லை. ஏற்கனவே வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்து வந்தோம். நம்மை நாமே ஆண்டு வந்தோம். ஆகவே புறநாட்டவாகள் வந்து எம்மை ஒன்றாக சேர்த்து அங்குமிங்குமாக கொண்டு சென்றார்கள். ஆனால் நாங்கள் எமது பிரதேசத்தில் எம்மை ஆளவேண்டும் என உரிமையை தரவேண்டும் என நாம் போராடவேண்டும். ஆனால் இந்த போராட்டத்தில் தனி நாடு என்பதனை அவர்கள் காதில் கொள்ளாவிட்டாலும் இந்த உரிமைகளையும் தரமாட்டார்கள் என்று குமார் பொன்னம்பலத்திற்கு தெரியும். தமது உள்ளத்தில் இருந்து வருவதுதான் உண்மை என்று கூறுபவர்கள் வேறு எதுவும் உண்மை என்று ஏற்றுக்கொள்வும் மாட்டார்கள் எமக்கு உரிமையையும் தரமாட்டார்கள்.ஆகவே இப்படிப்பட்ட அரசாங்கத்திலே நம்பிக்கை வைக்காது குமார் பொன்னம்பலம் சர்வதேச சமூகத்திடம் சென்று மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டார். அவ்வாறான மனிதர் எம்மை விட்டு சென்றமை பேரிழப்பாகும் என தெரிவித்தார்.

05 ஜனவரி 2014

சிறுவன் துடிதுடித்து மரணம்!

கிளிநொச்சி, திருநகர் தெற்கைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று திடீரெனத் துடிதுடித்து வீழ்ந்து உயிரிழந்தான். அவனது சாவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 9 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 45 வயதுதுடைய சுப்பிரமணியம் வீரலிங்கம் என்பவரின் மகனான வீ.நிதர்சனின் உடல் பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உணவருந்தியவுடன் காலை 8.30 மணியளவில் வெளியே புறப்பட்ட சிறுவன் திடீரெனத் துடிதுடித்து வீழ்ந்து மூர்ச்சையாகிப் போனான் என்று உறவினர்கள் தெரிவித்தனர். தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது படிப்பை நிறுத்திவிட்ட நிதர்சன், கூலி வேலைக்குச் சென்றே குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளான். குடும்பத்தின் ஒரே உழைப்பாளியான தந்தை சிறைக்குள் தள்ளப்பட்டதால் தாயையும் மூன்று சகோதரிகளையும் இந்தப் பிஞ்சு வயதிலேயே சுமக்க வேண்டிய பொறுப்பு சிறுவனின் தோள்களில் சுமத்தப்பட்டது. அவன் தச்சுவேலை செய்தே தனது சகோதரிகளையும் தாயாரையும் கவனித்து வந்துள்ளான். இப்போது அவனையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாது பரிதவித்து நிற்கின்றது அந்தக் குடும்பம். சிறுவனின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான வழிவகை அறியாது தவிக்கும் தாயும் சகோதரிகளும் மகன் இறந்த செய்தியை தந்தைக்கு எப்படித் தெரிவிப்பது என்று அறியாமல் தவிக்கிறார்கள். குழந்தைகளை போதிய அக்கறையுடன் வளர்க்காத பெற்றோர்கள் சிலரைக் கடந்த காலங்களில் தண்டித்துள்ள நீதித்துறை, இந்தச் சிறுவனை கல்வி கற்கும் வயதில் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்த இலங்கை அரசையும் அதன் அதிகாரிகளையும் தண்டிக்க முன்வருமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

04 ஜனவரி 2014

போர்க்குற்ற ஆணையர் கொழும்புக்கு விஜயம்!

போர்க் குற்றங்களை ஆராயும் தூதுவரான ஸ்டீவன் ஜே ரெப் நாளை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார். இதனை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நேற்று அறிவித்தார். ஸ்டீவன் அவர்கள் நாளை கொழும்பு வருகின்றார் இவர் 11ம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருந்து பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புகளின் போது, அவர் இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க பரிந்துரைகளின் அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தவுள்ளார். ஸ்டீவன் ரெப் இரண்டாவது தடவையாக இலங்கைக் விஜயம் செய்கிறார். முன்னதாக அவர் கடந்த 2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்தார். அவரது விஜயத்தின் அடிப்படையிலேயே 2012ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை அமெரிக்கா முன்வைத்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் அவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற நிலையில், அது எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையை கருதியதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

03 ஜனவரி 2014

யார் என்ன சொன்னாலும் மஹிந்தவை சம்பந்தனும் சந்திப்பார்-சுமந்திரன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இந்த மாதம் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்துவார் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். சம்பந்தன் இந்தியாவின் சென்னைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். சம்பந்தன் நாடு திரும்பியதன் பின்னர் ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் கட்சி பேச்சுவார்த்தை நடத்தும். அண்மையில் சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் ஜனாதிபதி கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து பேசினார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதில் சாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்புவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

02 ஜனவரி 2014

தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு செல்வோருக்கு பணகுவியல்!

ஜெனீவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் வாழும் சிங்களவர்களையும் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக செயற்படும் தமிழர்கள் சிலரையும் இணைத்து எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் அலுவலகம் முன்பாக சிறிலங்கா அரசாங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா உட்படலான பல்வேறு நாடுகளில் வாழும் சிங்களவர்கள் ஒன்றிணைந்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை பிரான்ஸின் தலைநகரான பரிஸில் இடம்பெற்றுள்ளது. இதில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிராக செயற்படும் சில தமிழர்களும் கலந்து கொண்டனர். பெருந்தொகையான பணம் தரப்படும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை திரட்டி வருமாறும் இந்த கூட்ட ஏற்பாட்டாளர்கள் அங்கு கலந்து கொண்டவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வட மாகாணம் முதலிடம்!

வெளியான க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் படி ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்தில் அதிகளவான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் என யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார். மாவட்ட மட்டங்களில் முதலிடம் பெற்ற 20 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில், ஏனைய எட்டு மாகாணங்களை விட வடமாகாணம் 2013 க.பொ.த உயர்தரத்தில் முதல் நிலை வகிப்பது என்பது பெருமைக்குரிய விடயமாகும். இம்முறை 63.8 வீதமானவர்கள் வடமாகாணத்தில் சித்தி அடைந்துள்ளதானர். அத்துடன் 1996ஆம் ஆண்டளவில் 40பிள்ளைகளுக்கு ஒருஆசிரியர் வீதம் நியமிக்கக்கப்பட்டனர். தற்போது 17 பிள்ளைகளுக்கு ஒருஆசிரியர் வீதம் நியமனம் வழங்கப்பட்டு போதுமான ஆசிரியர் வளம் வடமாகாணத்தில் உள்ளது. மேலும் வடமாகாண கட்டமைப்புக்களில் பின்தங்கிய பிரதேசமான பூநகரி, ஒட்டுசுட்டான், மடுபோன்ற பிரதேசங்களில் கூட கல்வித்துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு போதியளவு ஆசிரியர் வளங்களையும் கொண்டுள்ளது. மேலும் கணிதம் ,விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற்றமான எதிர்காலம் கிடைக்க வாய்ப்புள்ளதுடன் இனி நல்ல கல்விப்பெறுபேறு கிடைக்க வேண்டுமாயின் அது பெற்றோர் முயற்சியில் மட்டும் தான் தங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஐந்து மதகுருமார்களுக்கு ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனம் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறியால் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வுக்கு வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன் , பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

01 ஜனவரி 2014

இராணுவ களியாட்ட நிகழ்வில் தளபதி பாப்பா!

இறுதி யுத்தத்தினில் காணாமல் போயிருந்த விடுதலைப்புலிகளது மற்றொரு தளபதியான பாப்பா உயிரிடனிருப்பது உறுதியாகியுள்ளது. பாப்பா உயிருடன் உள்ளார் அங்கு போனார் இங்கு வந்தார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அவரை நேரினில் கண்ட சாட்சிகள் ஏதுமிருந்திருக்கவில்லை.இந்நிலையினில் யாழ்.நகரினில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போது பகிரங்கமாக பலரும் பாப்பாவை கண்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தினில் பணியாற்றுகின்ற மூத்த இராணுவ அதிகாரிகள் சிவிலுடையினில் அந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்த நிலையினில் அங்கு அவர்களுடன் பாப்பாவும் பிரசன்னமாகியுள்ளார்.குறித்த அதிகாரிகள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி கத்துருசிங்கவின் உதவியாளர்கள் என்ற வகையினில் பலாலியிலிருந்தே வந்திருந்ததாகவும் அவ்வகையினில் பாப்பாவும் அங்கிருந்தே வந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.இறுதி யுத்தத்தினில் சரணடைந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளது நிலை பற்றி தகவல்கள் அற்றிருக்கின்ற நிலையினில் அவர்களுடன் சரண் அடைந்த பாப்பா உயிருடனிருப்பது காணாமல் போனோரது குடும்பங்களிடையே சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.அரச தரப்பினால் இரகசிய தடுப்பு முகாம்கள் பேணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையினில் பாப்பா பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏற்கனவே புலிகளது தளபதிகளான பதுமன் மற்றும் ராம் நகுலன் ஆகியோர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையினில் தற்போது பாப்பாவும் வெளியே வந்துள்ளார்.வருட இறுதி கொண்டாட்டமாக கொழும்பிலிருந்து தருவிக்கப்பட்ட சிங்கள குமரிகளது குத்தாட்ட நிகழ்வொன்று மதுபான விருந்துடன் குறித்த விடுதியினில் ஏற்பாடாகியிருந்தது.இந்நிகழவிற்கே பாப்பா வருகை தந்துள்ளார்.