பக்கங்கள்

28 ஜூலை 2018

கருணாநிதியின் உடல்நிலை குறித்து தவறாகப் பதிவிடவேண்டாம்-சீமான்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிடக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரிசையாக அரசியல் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் அவர் உடல்நிலை மோசமாக இருக்கும்போது கூட அவருக்கு எதிராக கருத்துக்களை உமிழ்ந்து வருகிறார்கள். சில பாஜக, நாம் தமிழர் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுரை வெளியிட்டு இருக்கிறார். அதில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேஸ்புக் உள்ளிட்ட எந்த சமூக இணையதளங்களிலும் எதிர்மறை கருத்துகளை நாம் தமிழர் கட்சியினர் பதிவிடக்கூடாது. பதிவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும். அவர் உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும், என்றுள்ளார்.

கருணாநிதியின் உடல்நிலை மோசம்,தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!

Police protection increased in TN as Karunanidhi admitted in hospital திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நிலை தற்போது மோசமாகி உள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் செய்யப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு தொண்டர்கள் குழுமுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கலைஞர் மருத்துவமனையில் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது விடுப்பில் உள்ள காவலர்கள் அனைவரையும் பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலும், திருக்குவளை கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. பதட்டத்தை தணிக்கவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் விரிவான பாதுகாப்பு அளிக்கப்படுவதாக போலீஸ் கூறியுள்ளது.

பழைய விடையங்களை மறந்துவிடுமாறு மஹிந்தவிடம் கோரினேன்-சம்பந்தன்!


புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்  அவர் இதனை குறிப்பிட்டுள்ளர்.புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். அண்மையில் கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் சம்பந்தன் ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து ஊடகவிலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த இரா.சம்பந்தன், “அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொழும்பில் சந்தித்து பேசியிருந்தேன். நான் அவர்களை சந்தித்து பேசியிருந்தது உண்மை. இந்த சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து பேசியிருந்தோம். தனது அரசாங்க காலத்தில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை வழங்க விரும்பியதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.அந்த காரியங்களை செய்ய முடியாமல் போனமைக்கு பல காரணங்களையும் கூறியிருந்தார். இந்நிலையில், பழைய விடயங்களை மறந்து விடுமாறு நான் அவரிடம் கோரினேன். தற்போது புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுகின்றது. அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரினதும் அவசியம். உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம். அதனை நீங்கள் வழங்க வேண்டும் என அவரிடம் கோரினேன். நாடு தற்போது அடைந்திருக்கும் நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டுமாக இருந்தால் அது அத்தியாவசியமான ஒன்று. அந்த விடயத்தில் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். தான் அதைப்பற்றி சிந்திப்பதாக சொல்லியிருந்தார். மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நாங்கள் யாருடைய பகைமையையும் சம்பாதிக்க விரும்பவில்லை” என இரா. சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

26 ஜூலை 2018

தமிழ் தேசியத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டமைப்பு!

ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் மீண்டும் கொண்டு வரவுள்ள அரசியலமைப்பை நிராகரிக்க தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக விளக்கமளிக்க நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'புதிய அரசியல் அமைப்பிற்கான முயற்சிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு, ஒற்றையாட்சி அரசியலமைப்பை வலியுறுத்தி தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிப்பதற்கான நிலமையைக் காட்டுவதற்காக முயற்சிகள், கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போது கூட்டமைப்பிற்கு கிடைத்த தோல்வியின் பின்னர் கைவிடப்பட்ட நிலையில், மீளவும் அரசியலமைப்பு தொடர்பாக ஆட ஆரம்பித்து விட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு உரிமைப் போராட்டத்திற்கு மாறான அமைப்புக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் தமிழ் தேசிய நீக்கத்தினைச் செய்வதற்கான முடிவிற்கும் வருகின்றார்கள். இலங்கையில் உள்ள பேரினவாத கட்சிகள் மட்டுமன்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டீ.பி , புளொட் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் இவ்வாறு செயற்படுவதாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பேரிவாதத்தினைப் பேசும் பேரினவாதி என்ற வகையில், மஹிந்த ஆட்சியில் இருந்த போது, தமிழ் தேசிய நீக்கத்தினை செய்ய முடியாது என்ற பிரச்சினை இருந்ததினால், மஹிந்த ராஜபக்ஷ சீனா சார்ந்த போக்குடையவர் என்ற காரணத்தினாலும், மஹிந்தவை அகற்றி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் மக்கள் தமிழ் தேசிய கோட்பாடுகள் அனைத்தையும் கைவிட்டு, ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அடிப்படை திட்டம். தமிழ் தேசிய கூட்டமைப்பில், இரா.சம்பந்தன் தலைமையில், தேசியவாதி இல்லாத ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இணைத்து தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான பங்களிப்பைச் செய்வதற்காக சுமந்திரன் இணைக்கப்பட்டுள்ளார். சுமந்திரன் அடிப்படையில் தமிழ் தேசியவாதி அல்ல. அவர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர். சுமந்திரனை வல்லரசுகளும், ஐக்கிய தேசிய கட்சியும், சிங்கள தேசிய நலன்சார்ந்த தரப்புகளும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் ஒத்துழைப்புடன், தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. அதன் ஒரு பிரதிபலிப்பு தான் கடந்த காலங்களில் வெளியாகிய புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கைகள். புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையினை சுட்டிக்காட்டியே கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது. தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. அவற்றினை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றையாட்சியை மீளக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த இருவாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை சிங்கள தேசியவாதத்தின் அங்கமாக தமிழ் தேசியத்தினை நீக்குவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ஒற்றையாட்சி மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ ஆணித்தரமாக பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு என்பது ஒரு ஒற்றையாட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் எனப் பல தடவைகள் தெரிவித்து வந்தோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து, ஒற்றையாட்சிக்கான ஒரு அரசியலமைப்பினையே உருவாக்குகின்றார்கள். மஹிந்த அணியினர் தமது அரசியலுக்காகவே, அரசியலமைப்பை எதிர்க்கின்றார்கள் என பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்தோம். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது கூறிய அனைத்து விடயங்களும் இன்று அம்பலமாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள் என்பதனை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை மற்றும், பிரதி சபாநாயகர் போன்ற விடயங்கள் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏனைய அரசியல்கட்சிகளும் மஹிந்த ராஜபக்ஷ சீன சார்ந்தவர் என்பதற்காக எதிர்க்கின்றார்களே தவிர, மஹிந்த அணி மீண்டும் அரசியலுக்கு வந்தால், அரசியலமைப்பை ஒற்றையாட்சிக்குள் கொண்டு வருவதற்கு முனைகின்றதுடன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனிடம், நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலிற்குள் செயற்பட வேண்டாம், எங்களுடன் ஒத்துழைத்தால், ஐக்கிய தேசிய கட்சியிடம் கேட்கும் கோரிக்கைகளை தாங்கள் செய்யத் தயார் என்ற கோணத்தில் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தனிடம் தெரிவித்திருக்கின்றார். தமிழ் தேசிய நீக்கத்தினை செய்வதற்கு 2009 ஆம் ஆண்டு செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்தது மட்டுமன்றி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக தமது விடயங்களை நிறைவேற்றினால், சிங்கள மக்கள் மத்தியில், இரு கட்சிகளையும், நிலை நிறுத்த முடியும் என்ற கோணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்த உண்மைகளை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால், மீண்டும் ஒற்றையாட்சியை நிறைவேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்பதுடன், மஹிந்த ராஜபக்ஷவே அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலமையில் இருக்கின்றார் எனின், தமிழ் தேசியத்திற்கு மாறான அரசியலமைப்பு என்பதனை மக்கள் உணர்ந்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

20 ஜூலை 2018

சிறையில் இருந்து வெளியே வந்தார் சீமான்,வாசலில் அமோக வரவேற்பு!

சென்னை-சேலம் 8 வழிச்சாலை குறித்த பொதுமக்களிடம் கருத்து கேட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.சென்னை-சேலம் 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் நிலத்தை கையகப்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை அழிக்கும் இந்த திட்டத்திற்கு அதிமுக, பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில் நேற்று முன்தினம் சேலம் அருகே உள்ள கூமாங்காடு என்ற பகுதிக்கு சென்ற சீமான், அந்த பகுதி மக்களிடம் சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து கருத்து கேட்டார். அப்போது திடீரென அங்கு வந்த மல்லூர் போலீசார் சீமானை கைது செய்து மாலை வரை திருமண மண்டபத்தில் வைத்து பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சீமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால் இன்று காலை அவர் சேலம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சேலம் சிறை வாசலில் அவரை நாம் தமிழர் கட்சியினர் சிறப்பாக வரவேற்றனர்.

18 ஜூலை 2018

நாம் தமிழர் சீமான் திடீர்க் கைது!

Seeman arrested near Salem சென்னை-சேலம் நடுவே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு சீமான் சென்றபோது, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசியிருந்தார் சீமான். இதற்காக அவர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனவே, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சேலத்தில் ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் காலை 10 மணிக்கு ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில்தான், இன்று பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அப்போது திடீரென ஓமலூர் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் சீமான் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை இதுபோன்ற காரணத்திற்காக காவல்துறை கைது செய்திருந்தது. மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாக காவல்துறை குற்றம்சாட்டி பாலபாரதியை கைது செய்திருந்தது. இதேபோன்ற காரணத்திற்காகவே சீமானையும் கைது செய்துள்ளனர் போலீசார்.

14 ஜூலை 2018

திருக்குறள் நூலை வைத்து உறுதிமொழி எடுத்த கனடாத் தமிழன்!

கனடாவின் ஒன்ராரியோ பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக யூலை 11ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யூன் 7ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளையவர் விஜய் தணிகாசலம் யூலை 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். தாங்கள் விரும்பிய புனித நூலை முதன்மைப்படுத்தி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் வாய்பபைப் பயன்படுத்தி தமிழ் மறையாம் திருக்குறளை முதன்மைப்படுத்தியே அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பெரும் சவால் நிறைந்த மேற்கத்திய அரசியல் அரங்கில் தனது உரிமைகளை சரிவரப்பயன்படுத்தி அவர் தனது பதவிப்பிரமாணத்தை மேற்கொண்டதையிட்டு பலரும் மகிழ்ச்சியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.

08 ஜூலை 2018

எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரன்-விஜயகலா!


எத்தகைய தடைகள் வந்தாலும், எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரனை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எத்தகைய தடைகள் வந்தாலும், எம் இனத்திற்காக போராடிய தலைவன் பிரபாகரனை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று உரையாற்றியதால் பதவியிழந்த விஜயகலா மகேஸ்வரன் , ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். “எனது மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய கடமை எனக்கு உள்ளது. மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அப்படி செய்ய முடியாமல் போனால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதங்களை மீற வேண்டிய நிலை ஏற்படும். எனது மனதில் உள்ள வேதனையை கூற எனக்கு உரிமை உள்ளது. ஊடகங்கள் ஊடாக தான் அந்த பிரச்சினை வெளியே வருகின்றது.எனினும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஊடகத்திற்கு முன்னால் இந்தப் பிரச்சனையை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. இந்த விடயம் தொடர்பில் நட்புறவுடனேயே நான் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்தேன். எனினும் ரஞ்சன் ஸ்பீக்கரில் போட்டு ஊடகத்திற்கு முன்னால் வெளிப்படுத்தினார் என்று அதுவரை எனக்கு தெரியாது. இது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உள்ள உரிமை மீறலாகும். அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார். பெண் இனத்திற்கு துரோகம் செய் துவிட்டார். ஹிட்லருடன் எங்கள் தலைவர் பிரபாகரனை இணைக்க முடியாது. அவர் அந்தளவு கொடூரமானவர் இல்லை. நீங்கள் விரும்புகின்றீர்களோ இல்லையோ அவர் எம் இனத்திற்காக போராடினார் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அவர் இருந்த காலத்தில் எங்களுக்காக போராடிய தலைவராகும். அவர் வரலாற்றை எதிர்வரும் பரம்பரை ஆய்வு செய்யும். தெற்கில் ஹிட்லர் ஆட்சியே இடம்பெறுகின்றது. வடக்கில் எம்மை வாக்குகளுக்காக மாத்திரமே வைத்துள்ளனர். எனினும் ஹிட்லரையும் பிரபாகரனையும் தராசில் வைக்க முடியாது. அவர் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றே போரிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.