பக்கங்கள்

26 நவம்பர் 2019

இருபத்தையாயிரம் மாவீரர்களின் பெயர்களுடன் நல்லூரில் கல்வெட்டு!

யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் நினைவு வணக்கம் செலுத்துவதற்காக  வைக்கப்படவுள்ளன. இன்று மாலை 6 மணி முதல் நாளை 27ஆம் திகதி வரையில் இந்த கல்வெட்டுகள் மாவீரர் நினைவு வணக்கத்திற்காக வைக்கப்படவுள்ளன. இதன்போது, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் வாரத்தின் இறுதிநாளான நாளை மாலை 06.05 மணிக்கு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் குறித்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

15 நவம்பர் 2019

ஜெர்மனியில் போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழர் விடுதலை!

ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரை ஜெர்மன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.தமது தடுப்பு காவலில் இருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினரை சுட்டு படுகொலை செய்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான சிவதீபன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. 2009 யுத்தம் முடிந்த சமயத்தில் ஜெர்மனிக்கு சென்றிருந்த இவரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்தனர். முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 சிங்களப் படையினரை சுட்டுக்கொன்று தீ மூட்டியதாக குற்றம்சாட்டி டயல்டோர்ஃப் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

07 நவம்பர் 2019

தமிழ்க் கட்சிகள் ஐந்தும் தவறிழைத்து விட்டதாக மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு!


ஜனாதிபதித் தேர்தலில்  தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  குற்றம் சாட்டியுள்ளது. 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று  நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து ஒருமித்த முடிவு ஒன்றை எடுக்கவேண்டும் என முயற்சி செய்தோம். அதன் அடிப்படையில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வந்தோம். அதன்படி 13 பிரதான கோரிக்கைகள் அறிக்கையிடப்பட்டது. அதில் மேலதிகமாக இடைக்கால அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியது அது ஏற்றுக்கொள்ளப்படாததால் பேச்சுவர்த்தையில் இருந்து அவர்கள் வெளியேறினார்கள். பின்னர் ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கைகளில் கையொப்பம் இட்டு தென்னிலங்கயைிலுள்ள பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் நேரடியாக பேசுவது என தீர்மானிக்கப்பட்டது. எனினும் நேரடியாகப் பேசுவதற்காக சரியான அணுகுமுறைகளை கையாளவில்லை தென்னிலங்கைத் தரப்புடன் பேசும் விடயத்தில் ஐந்த தமிழ்த் தேசியக் கட்சிகளும் தவறிழைத்துள்ளது. மேலும் 13 அம்சக் கோரிக்கைகளையும் தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரித்தால் ஜனாதிபத் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என மீண்டும் கூடிப்பேசுவதாக இணக்கம் காணப்பட்டது. எனினும் எமது தமிழ்த் தலைமைகள் மாணவர்களாகிய எங்களையும் தமிழ் மக்களையும் முட்டாள் ஆக்கி விட்டனர். குறிப்பாக ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் கூடிப்பேசிக்கொண்டிருந்தபோது முதலாவதாக முந்திக்கொண்டு தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்கினேஸ்வரன் ஒற்றுமையை சிதறடித்தார். பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர். இந்த விடயம் தவறான அணுகுமுறையாகும் கட்சிகள் ஒன்றுகூடி கதைக்கும்போது தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதால் எவ்வாறான நிலைப்பாட்டிற்கு வருவது என நாம் ஆராய்ந்தபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என கோருவோம் என்றார். அதை எழுதியும் தந்தார். அதையே நாம் அன்று ஊடகங்கள் முன்னிலையில் வாசித்தோம் அன்று நடந்த கலந்துரையாடலில் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகவில்லை. அது வந்தவுடன் நாம் முடிவு எடுப்போம் ஏனெனில் நாம் முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளில் பல உள்ளடக்கப்படும் என நம்புவதாக கூறினார். அதற்கு எமக்கு கடிதமும் தந்தார் . ஆனால் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின்னர் யாருடனும் கலந்தாலோசிக்காது தமிழ்த் தலைமைகள் தாமாகவே முடிவு எடுத்து விட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் 13 அம்சக் கோரிக்கைகளை விட சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வலுவற்றதாகவே காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேதமதாஸவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த் தலைமைகள் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் கூடிப் பேசியபோது மூன்று மாததத்தில் தீர்க்கக்கூடிய விடயங்களாக குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்றித் தரவேண்டும் இல்லையெனில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைக்கு பாடம் புகட்டுவார்கள் என்றனர்.

04 நவம்பர் 2019

அன்னம் பாலை குடித்து விட்டு தமிழர்களை தண்ணீராய் கைவிட்டு விடும்!

தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத் துரோகத்தினை செய்துள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென நேற்றைய தினம் தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இவ்வாறு துரோகத்தனமாக செயற்படும் என்பது ஏற்கனவே அறியப்பட்டதே. 6 கட்சிகள் இணைந்து கூட்டு முயற்சி எடுத்தபோது ஒரு கட்சி தவிர்ந்து ஏனைய ஐந்து கட்சிகள் ஓப்பந்தம் ஒன்றை செய்திருந்தனர். அதில் 13 அம்சங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சுமந்திரன் துரோகமான செயற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த கட்சிகள் ஏற்கனவே கூடியபோது தமிழரசு கட்சி இவ்வாறு செயற்படுவார்கள் என்பதை அன்றே அறிந்திருந்தோம். இந்த நிலையில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன விடயத்தை கண்டு அவர்களிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கியிருந்தது? இரண்டு தடவை அன்னம் கவிழ்ந்துவிட்டது. முதல் தடவை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்தோம். அதில் பயன் கிடைக்கவில்லை. இரண்டாவது தடவையாக நல்லாட்சி அரசிற்காக அன்னத்திற்கு வாக்களித்தோம். இரு தடவையும் தமிழ் மக்களிற்கு எவையும் கிடைக்கவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர் குற்றம் இளைத்தவர்களை பாதுகாப்பதாகவே கூறப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா தான் தான் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்கின்றார். அப்போது யார் கொலைகாரன். இந்த சரத் பொன்சேகாவும் கொலைகாரனே. இவர்களை போன்றவர்களை பாதுகாப்பதற்காக தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது? காலத்திற்கு காலம் நாம் ஆட்சி மாற்றத்தை செய்யவில்லை. ஆட்களைதான் மாற்றியுள்ளோம். நாம் ஆட்சியை மாற்றியதாக எண்ணிக்கொண்டு இதுவரை இருந்துள்ளோம். உண்மை அதுவல்ல. சந்திரிக்கா அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷ, அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன அடுத்தது யாராகவோ இருக்கலாம். அதனால் தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்காது. அன்னம் பாலுடன் கலக்கப்பட்ட தண்ணீரிலிருந்து பாலை மட்டும் குடித்து விட்டு தண்ணீராக தமிழர்களை கைவிட்டுவிடும் என்பதே உண்மை என தெரிவித்தார்.