பக்கங்கள்

30 செப்டம்பர் 2010

அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

சம்மாந்துறை நெய்னாமடு கல்லாற்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நெய்னாமடு கல்லாற்றில் நேற்றுக் காலை 7 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, பொலிஸார் ஆற்றிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்டனர். எனினும் சடலம் அடையாளம் காணமுடியாதளவிற்குப் பழுதடைந்துள்ளதுடன் ஒருசோடி செருப்பும் உடைந்த கைக்கடிகாரமும் சடலத்துடன் மீட்கப்பட்டுள்ளன.
சடலம் அடையாளம் காண்பதற்காகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.

மட்டுவிலில் வீடு புகுந்து ஆயுதமுனையில் கொள்ளை!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஆயுத முனையில் அச்சுறுத்தி பல இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிட்டுள்ளனர்.நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மட்டுவில் தெற்கில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. கணவன் வெளியில் சென்ற வேளை வீட்டினுள் நுளைந்த இனம் தெரியாத இருவர் ஆயுத முனையில் தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி நகைகளை அபகரித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
நீளக் காட்சட்டை அணிந்திருந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர் எனவும் துப்பாக்கியை காட்டி பயமுறுத்தியே நகைகளை கொள்ளையடித்தனர். என்றும் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் படையினர் என்றும் வீட்டை சோதனையிட வேண்டும் என அவர்கள் அந்தப் பெண்ணை அச்சுறுத்தினர்.
தாலிக்கொடி மற்றும் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பணமும் கொள்ளையிடப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

29 செப்டம்பர் 2010

மங்கள சமரவீரவிடம் சீ.ஐ.டி.யினர் விசாரணை.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக பொறுப்பாளர் மங்கள சமரவீர எம்.பி. நேற்று செவ்வாய்க்கிழமை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தால் (சி.ஐ.டி.) விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சுவரொட்டி தொடர்பாக அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இடிஅமீனாக சித்திரிக்கும் வகையிலான சுவரொட்டிகளை பொலிஸார் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் அச்சகமொன்றின் 9 ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உகண்டாவின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரியான இடிஅமீன் மற்றும் ஜனாதிபதியின் சகோதரர்கள், புதல்வர்கள் ஆகியோரின் பிரதிமைகளைக் கொண்ட 6 உருவப்படத் தலைகளுடன் கடவுளொன்றை சித்திரிக்கும் சுவரொட்டிகளைப் பொலிஸார் கண்டுபிடித்திருந்தனர்.
சுவரொட்டிகளை அச்சிடுவதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனநாயக ரீதியில் தனது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான உரிமை தமக்கு இருப்பதாக தான் நம்புவதாகவும் சமரவீர கூறியிருந்தார். இந்தச் சம்பவம் குறித்து மிரிகான பொலிஸார் முன்னர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். நுகேகொட,தெல்கந்தவிலுள்ள அச்சகமொன்றில் இந்த சுவரொட்டிகளை அச்சிடுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக சமரவீர கூறியிருந்தார். இதேவேளை, அச்சகத்தின் உரிமையாளரால் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன்னை சட்டவிரோதமாக கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதாக அச்சக உரிமையாளர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
செப்டெம்பர் 09 இல் சமரவீர சில சுவரொட்டிகளை அச்சிடுமாறு தம்மை அணுகியதாகவும் 18 ஆவது திருத்த அமுலாக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகளை அச்சிடுமாறு தம்மை அணுகியதாகவும் அச்சிடுவதற்குரிய நிலைமையில் தான் இல்லையெனவும் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகளை அச்சிடும் வேலையை மற்றொரு அச்சகத்திற்குக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருந்ததாக சண்டேரைம்ஸ் பத்திரிகையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அம்பாறையில் மீள் குடியேற்றபட்ட தமிழ் மக்கள் சிங்களர்களால் விரட்டியடிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட தமிழ் மக்களை அங்குள்ள சிங்கள மக்கள் விரட்டியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1990ம் ஆண்டளவில் இடம்பெற்ற இயல்பற்ற சூழ்நிலைகளின் போது இடம்பெயர்ந்த இந்த மக்கள் அம்பாறை ஊரணி பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு நிலை கொண்டிருந்த சிறப்பு அதிரடிப் படையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்தே அவர்கள் குடியேற்றத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் அங்கு குடியேறுவதற்காக சென்ற மக்களை, சிங்களவர்கள் சிலர் விரட்டி அடித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான நிலப்பகுதிகள் தாரை வார்த்து வழங்கப்படுகின்றன.
இதன் காரணமாகவே தமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குற்றம் சுமத்தியுயள்ளனர்.
கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெறும் 25 குடுமபங்களாக இருந்து இடம்பெயர்ந்த இந்த மக்கள் 20 வருடங்களின் பின்னர் தற்போது 100 குடும்பங்களாக அதிகரித்துள்ளன.
அவர்கள் அக்கரைப்பற்று மற்றம் பொத்துவில் பகுதிகளில் தங்கி இருந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்ய உள்ளனர். ஏனினும் அவர்களை மீள்குடியேற அனுமதிக்காமல் சிங்களவர்கள் துரத்தி அடித்துள்ள நிலையில் அநாதரவான நிலையில் அவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

28 செப்டம்பர் 2010

மன்னாரில் இளைஞர் ஒருவரை கடத்த முயன்ற குமபல்!

மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து போக்குவரத்து சங்கத்தின் தலைவரான 36 வயதுடைய பரமலிங்கம் ரமேஸ் கடந்த சனிக்கிழமை இரவு இனம் தெரியாத குழுவினரால் தாக்குதலுக்குள்ளானார்.
குற்றுயிராக வீதியில் வீழ்ந்து கிடந்து இவரை ரோந்து சென்ற இராணுவத்தினர் மன்னார் பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சனிக்கிழமையிரவு மோட்டார் சைக்கிளில வீடு நோக்கி; புறப்பட்ட ரமேஸ் வேறு மோட்டார் வண்டியில்வந்த நபர்கள் வழிமறித்து தாக்கி
அசிற் ஊற்ற முயன்ற போது தாக்கிய குழுவைச் சேர்ந்த ஒருவர் தடுத்து நிறுத்தி விட்டார். வாகனத்தின் முன் இருக்கை ஒன்றில் இவரை ஏற்றினர். கடத்திச் செல்ல முயன்ற போர் ரமேஸ் சுதாகரித்துக் கொண்டு வாகன சாரதியின் முகத்தைச் சுற்றி மூடப்பட்டிருந்த துணியை கிழித்ததுடன் சாரதியையும் அடையாளம் கண்டு கொண்டார்.
பின் சாரதியின் பக்கமாக உள்ள கதவு வழியாக தலையை வெளியே நீட்டி உதவி கேட்டுப் பெரிதாகச் சத்தமிட்டுள்ளார். இதனால் பீதி அடைந்த காடையர்கள் வாகனத்தில் இருந்து இவரை வெளியே வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

27 செப்டம்பர் 2010

யாழ். மாவிட்டபுரம் பகுதியில் குண்டுவெடிப்பு: படைவீரர் பலி.

யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தை துப்புரவு செய்து கொண்டிருந்த போதே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்திருக்கலாம் என நம்பப்படுவதாக இராணுவப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வியங்காடு குளத்தில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக படையினர் தேடுதல்.

கல்வியங்காடு-செம்மணிப் பகுதியிலுள்ள சந்திரசேகரப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையிலுள்ள குளம் ஒன்றினுள் பெருந்தொகை ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இலங்கைப் படையினர் அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான படையினர் இத்தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர். நீர்ப்பம்பிகளைப் பயன்படுத்தி குளத்து நீரை இறைத்து வெளியேற்றி நடந்த இத்தேடுதல் நேற்று மாலை வரை நடந்துள்ளது. ஆனால் படையினர் எதுவித ஆயுதங்களையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை கூலிப் படைகளுக்கு உக்கிர சண்டை நடந்த முக்கிய இடம் அப்பகுதியாகும். மேலும், 1996-97 காலப்பகுதியில் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட 600 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பகுதியும் அதுவென்பது தெரிந்ததே.
இக்குளத்தில் நடந்த தேடுதல் போலவே யாழ்ப்பாணத்தில் பிற பகுதிகள் சிலவற்றிலும் தேடுதல்கள் நடந்துள்ளதாக அறிய வந்துள்ளது.

போர்குற்ற ஆதாரங்களை நீதிபதிக்கு அனுப்புங்கள்: உலகத் தமிழர்களுக்கு கோரிக்கை!

விடுதலைப்புலிகளின் மீதான தடையால் இலங்கைத் தமிழர்களுக்கு கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாதிட்டுள்ளார். மேலும், புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மிக விரிவான விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். அதில், 'குற்றம் சாட்டுகிறேன்' என்ற அவரது ஆங்கில நூலையும் இணைப்பாக சேர்த்து இருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று நீதிபதி விக்ரம்ஜித்சென் தலைமையிலான தீர்ப்பாயம் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் வக்கீல் ஏ.எஸ்.சந்திர், தமிழக அரசு சார்பில் வக்கீல் தனஞ்சயன் மற்றும் மனுதாரர் சார்பில் வைகோ ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வைகோ தனது வாதத்தின்போது எடுத்துரைத்தது:
விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்து இருப்பதால், அவர்களது கொள்கையை ஆதரித்துப் பேசினால், அரசாங்கம் வழக்குப்போடுகிறது. இப்படிப் பேசியதற்காக, என்மீது இரண்டு தேசத்துரோக வழக்குகளை அரசு போட்டு இருக்கிறது. அந்த வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்திக்கிறேன். விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிப்பதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை.
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து தனி தமிழ் ஈழ நாடு கோருவதால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. தனி ஈழம் என்பது இலங்கைத் தீவில் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம். வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அவர்கள் அரசாண்ட பூமி. தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட அவர்கள் தனி ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இதற்கு மத்திய அரசு ஆதாரத்தை காட்ட முடியுமா? புலிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த மத்திய அரசு செய்யும் திட்டமிட்ட பிரசாரமாகும்.
நான் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ நாட்டை ஆதரிக்கிறோம். அதை அமைப்பதுதான் எங்களின் குறிக்கோள். இனப்படுகொலையால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி, தமிழ்நாட்டுக்கு வந்தால், அவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி, சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள். அல்லது, இலங்கைக்கே திருப்பி அனுப்புகிறார்கள்.
புலிகளின் மீதான தடையால், ஈழத்தமிழர்களுக்கு இப்படிப்பட்ட கொடுந்துன்பமும், துயரமும் நேர்கிறது. இந்தக் காரணத்துக்காகவே, தடையை நீட்டிக்கக் கூடாது என்கிறேன். உலகம் முழுவதும் இணையதளத்தில் புலிகளுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளார்கள். மனித உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற குரல் அது. தமிழர்களுக்கு துன்பம் விளைவிப்பதற்காகவே புலிகள் மீதான தடையை அரசு பயன்படுத்துகிறது. எனவே, புலிகள் மீதான தடையை நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு வைகோ வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, 'உங்கள் மனுவின் மீதான ஆணை பின்னர் பிறப்பிக்கப்படும்' என்று கூறி, நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். அதன்பின், இந்த வழக்கின் அடுத்த விசாரணை, அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையிலும், 20 ஆம் தேதி, ஊட்டியிலும் நடைபெறும் என்று நீதிமன்றப் பதிவாளர் அறிவித்தார். ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், இந்த விசாரணையில், வைகோவுடன் கலந்து கொண்டார்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்திய நீதிபதியான விகிரமஜித் சென் அவர்களுக்கு போர்குற்ற ஆதாரங்களை அனுப்பிவைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இந்தியா புலிகளை நேரடியாகவே வெறுத்து , அதனை இல்லாதொழிக்க அரும்பாடுபட்ட நாடு. இப்படியானதொரு நாட்டில் இருந்துகொண்டு அங்கு புலிகளின் தடையை நீக்கவேண்டும் என வைகோ போன்றோர் போராடும்போது, அதனை புலம்பெயர் வாழ் தமிழ் தலைவர்கள் ஏன் செய்யக்கூடாது ? புலிகள் கொடியைக் கூடக் கொண்டுவரவேண்டாம் எனத் தெரிவிக்கும் ஏற்பாட்டாளர்கள் சிலர் இதைக் கருத்தில் கொள்வது நல்லது !
ஈழவிடுதலைப் போராட்டம் என்று கூறினால் அதில் விடுதலைப் புலிகள் இல்லாத அத்தியாயம் என்பது கிடையாது என்பதை இவர்கள் எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள் ?

JUSTICE VIKRAMAJIT SEN
HIGH COURT OF DELHI
Tel: 011-23382628 (o)
E-mail: vikramajit_sen@rediffmail.com, delhihighcourt@nic.in

26 செப்டம்பர் 2010

நாமல் அனார்கலியிடம் வேண்டுகோள்: வழக்கு வாபஸ்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமலின் வேண்டுகோளுக்கிணங்க பிரபல நடிகையும், தென் மாகாண சபை உறுப்பினருமான அனார்கலி ஆகர்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார். துமிந்த சில்வா மேலும் சிலருடன் வந்து தன்னை கடத்திச் செல்ல முயற்சித்ததாக வெள்ளவத்தைக் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய, கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அனார்கலி சார்பில் ஆஜரான சட்டத்தரணி வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுசம்பந்தமாக, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு வெள்ளவத்தைக் காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதவான் ருச்சிர வெல்லவத்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் அன்றைய தினம் இந்த வழக்கு விசாரணை முடிவுக்குக்கொண்டுவர வாய்ப்பிருக்கிறது.

பண்ணிங்க மட்டுமல்ல சிங்கமும் இப்ப கூட்டமாவே போகுது!

ஜ.நா பொதுக்கூட்டத்திற்காக ஜனாதிபதியுடன் சுமார் 130 பேர் நியூயோர்க் சென்றுள்ளனர். இப் பாரிய பட்டாளத்துக்காக ஹோட்டலில் ஒன்றின் ஒரு பகுதியையே அமெரிக்கா ஒதுக்கிகொடுத்துள்ள நிலையில், இதில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா உட்பட பலர் பகல்வேளைகளில், பொருள்கொள்வனவில் ஈடுபடுவதாகவும், இரவு வந்துவிட்டால் கேளிக்கை விடுதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும் தமது நேரத்தைச் செலவுசெய்வதாகவும் அறியப்படுகிறது. அங்காடிகளுக்குச் செல்லும் இவர்கள் பெரும் பொருட்செலவில் பல பொருட்களை வாங்கிக் குவிப்பதாக அறியப்படுகிறது.
இதேவேளை நமால் ராஜபக்ஷ இரவு நேரக் களியாட்ட விடுதிகளிலேயே தனது நேரத்தை செலவிட்டுவருவதாகவும், இருப்பினும் மது அருந்தக் கூடாது என்று தந்தையிட்ட கட்டளையை பேணிவருவதாகவும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அரசல் புரசலாகப் பேசிவருகின்றனர். இருப்பினும் பெண்களோடு பேசுவது குறித்து தகப்பனார் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காத காரணத்தால், அவர் அதைத் தொடர்ந்தும் செய்துவருகிறாராம். களியாட்ட விடுதிகளில் நமால் பெண்களோடு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் தனிப்பட்ட ரகசிய செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்தனவே நமால் ரஜபக்ஷவை கவணித்துவருவதாக பிறிதொரு தகவல்தெரிவிக்கிறது.
""பண்ணிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்"" என்று பஞ்ச் டயலக் இருக்கு ! ஆனா இப்ப சிங்கமும் பண்டிபோல மாறி கூட்டமாத்தான் போகுது ஜயா!

25 செப்டம்பர் 2010

குடாநாட்டில் பெருகும் விவாகரத்துக்கள்!

யாழ். மாவட்டத்தில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது என நீதிமன்றப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
விவாகரத்துப் பெறுபவர்களில் அரச ஊழியர்களே அதிகளவானவர்களாக இருக்கின்றார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
இந்த ஆண்டில் இதுவரை விவாகரத்துக்கோரி 46 பேர் யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 123 ஆக இருந்தது. 30 வயதுக்குட்பட்ட இளம் தம்பதியினரே விவாகரத்துக் கோருவதில் முன்னணி யில் திகழ்கின்றனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
புரிந்துணர்வின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்மை, பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான மனோதிடம் இல்லாமை என்பனவே விவாகரத்துக்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்று சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.
விவாகரத்துப் பெற வருபவர்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த நீதிமன்றங் கள் முயச்சிக்கின்ற போதும் பிரிந்து செல்வதில் தம்பதிகள் பிடிவாதமாக இருக்கின்றனர் என மாவட்ட நீதிமன்ற உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைப் புகலிடக் கோரிக்கைப் பெண் தடுப்பு முகாமிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்!

சன் சீ கப்பலின் மூலம் கனடாவில் சரணாகதி அடைந்துள்ள இலங்கை தமிழ் பெண் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தடுப்பு முகாமிலேயே குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
வன்குவார் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் குறித்த கர்ப்பிணி, பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையை பிரசவித்த பெண் தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழந்தையின் தந்தையும் குறித்த கப்பலின் மூலம் கனடாவில் சரணகாதி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய நாட்டு சட்டத்தின் பிரகாரம் பிறந்த குழந்தைக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு புகலிடம் வழங்குவது குறித்த வழக்கு விசாரணைகள் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்ததாகவும், குழந்தையை பிரவசித்திருப்பதனால் விசாரணைகள் 28ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் தமக்கு உரிய பாதுகாப்பு கிடையாதெனத் தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி எம்.வீ. சன் சீ கப்பலின் மூலம் 492 புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடவை சென்றடைந்துள்ளனர்.
ஆள் அடையாளத்தை உறுப்படுத்தாத பெருமளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கப்பலின் மூலம் புகலிடம் கோரியவர்களில் 15 பேர் மட்டுமே இதுவரையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

24 செப்டம்பர் 2010

கிளிநொச்சியில் இளம்பெண்கள் உள்ள வீட்டினுள் நுழைய முயன்ற சிப்பாயை ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டிய தந்தை!

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகை குளம் 10 வீட்டுத்திட்டத்தில் திருமணமாகாத 3 இளம் பெண்களுள்ள ஒரு வீட்டினுள்ளே புகுவதற்கு முயற்சித்த இராணுவ வீரர் ஒருவரை வீட்டு உரிமையாளரான தந்தை ஒடஒட விரட்டி விரட்டி கத்தியால் வெட்டியுள்ளார்நேற்று இரவு 9.15 மணியளவில் கனகாம்பிகை குளம் 10 வீட்டுத்திட்டத்திலுள்ள 1 ஆம் இலக்க வீட்டிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வீட்டில் அனைவரும் படுத்துறங்கிய நேரம் வீட்டிற்குள்ளே ஒருவர் புகுவதற்கு முயற்சிப்பதை அவதானித்த தந்தையார் கத்தி எடுத்துக்கொண்டு உரக்கச் சத்தமிட்டு கொண்டு குறித்த நபரை துரத்த ஆரம்பித்ததும் அந்நபர் ஒடி கல்லொன்றின் பின்னால் ஒளிந்துகொண்டு தந்தையாரை தாக்கியுள்ளார்.
இதன்போது சுதாரித்துக்கொண்ட தந்தை அந்நபரை சராமரியாக கத்தியால் வெட்டியுள்ளார். இதனை சமாளிக்க முடியாத அந்நபர் தப்பி ஒட முயற்சித்துள்ளார். இதன் போது கம்பி வேலியில் குறித்த நபரின் சப்பாத்து மாட்டிக்கொண்டது. ஆயினும் சப்பாத்தை விட்டுவிட்டு தொடர்ச்சியான வெட்டுக்காயங்களுடன் அந்நபர் தப்பியோடிவிட்டார்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் குறித்த சப்பாத்தை எடுத்துக்கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போது அது ஒரு இராணுவ வீரர் எனத்தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் தமக்கு அறிவிக்குபடி கூறிச் சென்றனர். இதேவேளை இன்று காலை உழவு இயந்திரமொன்றில் காயமடைந்த இராணுவ வீரர் ஒருவரை இராணுவத்தினர் அழைத்துச் சென்றதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.

ஒபாமாவுக்கு 10 அறைகள் மட்டுமே; ஆனால் மஹிந்த 4 தளங்களிலுள்ள அனைத்து அறைகளும்.

ஐக்கிய நாடுகளின் பொதுவிவாதத்தில் கலந்துகொள்ளச் சென்ற தூதுக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் எண்ணிக்கையில் இலங்கை சாதனையே படைத்துள்ளது எனலாம். நியூயோர்க்கிலுள்ள ஹோட்டலில் இவர்கள் தங்குவதற்கென அந்த ஹோட்டலின் 4 தளங்களிலுள்ள முழு அறைகளுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் வந்தவர்கள் தங்குவதற்கு 10 அறைகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை ஐ.தே.க நா.உ சாந்தினி கொங்கஹேஜ் தெரிவித்துள்ளார். பல மில்லியன் ரூபா செலவு செய்து இலங்கையிலிருந்து 130 பேர் இம்மாநாட்டுக்காகச் சென்றுள்ளனர். ஆனால் மாநாட்டு அரங்குக்குள் 4 பேர் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 130 பேரில் 80 பேருக்கு 120,000 ரூபா பெறுமதியான 80 முதல்வகுப்பு விமானச் சீட்டும், மிகுதி 50 பேருக்கும் விமானச் சீட்டைப் பெற 5 மில்லியன் ரூபா செலவானது என்றும் தெரிய வந்துள்ளது.

23 செப்டம்பர் 2010

கைவிடப்பட்ட புலிகள் முகாமில் கொள்ளையடிக்க முயன்ற 32 பேர் கைதாம்!

தற்போது இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்தில், விசுவமடு, கொட்டியடிப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற 12 பேரைத் தாம் கைதுசெய்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி கூறியுள்ளார். அங்கிருந்த பொருட்களை ஏற்றியபடி நின்ற 7 ட்ராக்டர்களையும் ஒரு லொறியையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட நபர்கள் விசுவமடுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த எவ்வகையான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்ற விவரம் எதையும் போலீஸ் தெரிவிக்கவில்லை.

மீண்டும் கூரைமீது ஏறி போராட்டம்!

அவுஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை மீண்டும் புகலிடம் கோருவோர் குழுவொன்று கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பித்துள்ளது. தடுப்பு நிலையமொன்றிலிருந்த பிஜி நாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 29 மணித்தியாலங்கள் இடம்பெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் நேற்று புதிதாக மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. 9 பேர், பிரதானமாக சீனர்கள் வில்லாவூர்ட் தடுப்பு நிலையக் கூரையின் மீது ஏறியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8 மணியளவில் கூரை மீதான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக குடிவரவு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். இவர்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக வந்தவர்கள் அல்லர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றியோ, அவர்கள் புகலிடம் கோருகின்றார்கள் என்பது குறித்தோ, செயற்பாட்டாளர்களின் அறிக்கைகள் குறித்தோ பேச்சாளர் எதனையும் உறுதிப்படுத்தவில்லை. நேற்று போராட்டத்தை ஆரம்பித்திருப்போரில் 4 பெண்களும் உள்ளனர். இவர்களில் ஒரு பெண் கர்ப்பிணியாவார். அலுவலர்கள் இக்குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பான முறையில் கீழே இறக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக பேச்சாளர் தெரிவித்தார்.

வடபகுதியில் சிங்களவர்களின் வருகை யாழ்.மக்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது!

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை அடுத்து நடைபெற்ற சிறிலங்கா அதிபர் தேர்தல் காலத்தில் யாழ்ப்பாணம் – கண்டி வீயை அரசு திறந்தது.
இந்த ஏ-9 வீதியை திறத்ததன் மூலமாக தென்பகுதியில் வாழும் சிங்களவர்கள் அதிகளவில் வடபகுதிக்கு விஜயம் செய்வார்கள் அதன் மூலமாக தமது யுத்த வெற்றிகளை அவர்கள் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என சிறிலங்கா அரசு எதிர்பார்த்தது.
அந்த ஆசை எதிர்பார்த்ததனைவிடவும் அதிகமாகவே நிறைவேறி வருகின்றது எனலாம். கடந்த 90ம்; ஆண்டு காலத்திற்கு பிந்திய காலத்தில் வவுனியாவுக்கு அப்பால் சிற்களவர்கள் செல்வதற்கு அவசியம் இருக்கவில்லை. அவர்கள் வடபகுதிக்கு செல்வதனை தவிர்த்து வந்தார்கள். 2002ம் ஆண்டுகளில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அதனை அடுத்து ஏற்பட்ட பாதை திறப்பின் போது அவசியம் தேவைகள் இருக்கும் சிங்களவர்கள் மட்டும் வடக்கிற்கு சென்று வந்தார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் தினசரியாக நூற்றுக்கணக்கிலான வாகனங்களில் ஆயிரக்கணக்கிலான சிங்களவர்கள் வடக்கிற்கு சென்று வருகின்றார்கள். ஏறக்குறை மூன்று தசாப்த காலத்தின் பின்னரான காலப்பகுதியில் யாழ்.குடாநட்டை தற்போது சிங்களவர்கள் ஆக்கிரமித்த வருகின்றார்கள்.
வன்னிப்பகுதிக்குள் அவர்கள் செல்வது குறைவாகக்காணப்பட்டாலும் ஏ-9 வீதியில் அவர்களின் நடமாட்டத்தை அதிகம் காணமுடிகின்றது. சிறிலங்கா அரசினால் ஆணையிறவில்.
அமைக்கப்பட்டுள்ள யுத்தவெற்றி நினைவுத்தூபி மற்றும் பல இடங்களை அவர்கள் வன்னிப்பகுதிக்குள் பார்க்கின்றார்கள். ஏ-9 வீதியில் பல இடங்களில் சிறிலங்கா படையினரால் அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதிகளில் கூட்டம் கூட்டமாக அவர்களை பார்க்கமுடிகின்றது.
யாழ்.குடா நாட்டிற்குள் அவர்கள் பிரபல்யம்மிக்க இந்து ஆலயங்கள் மற்றும் நாகவிகாரை போன்ற இடங்களுக்கும் அவர்கள் செல்வதனையும் பார்க்கமுடிகின்றது. அண்மையில் நடைபெற்ற நல்லூர் திருவிழாவின் போதும் அதிகளவிலான சிங்களவர்கள் கலந்து கொண்டனர். தென்பகுதி சிங்களவர்களின் சுற்றுலாப்பயண வருகை யாழ்.மக்களுக்கு எரிச்சலினை ஏற்படுத்தியுள்ளது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

22 செப்டம்பர் 2010

இலங்கை இராணுவத்துக்கு உடந்தையாக இருந்த நபர் கடத்தல்.

போர் நடந்த காலகட்டத்தில் இலங்கை இராணுவத்துக்கு பல உதவிகளைப் புரிந்து உடந்தையாக இருந்துவந்த நபர் ஒருவரை வான் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். மட்டக்களப்பு கல்லடியில் செப்ரம்பர் 15 ஆம் திகதி இக்கடத்தல் நடந்துள்ளதாக கடத்தப்பட்டவரின் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கடத்தப்பட்டவர் கல்லடியிலுள்ள தெருச்செந்தூரை வசிப்பிடமாகக் கொண்ட 30 வயதான முனுசாமி நரேந்திரன் எனக் கூறப்படுகிறது.
நரேந்திரன் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிவந்து திருமணம் முடித்து தனது குடும்ப வாழ்வில் இணைந்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு நகரசபை உறுப்பினர் ஒருவரின் கடத்தலைத் தொடர்ந்து இவர் கடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பழையதை மறந்துவிடுவோம் – கை நீட்டுகிறார் மகிந்தா.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அங்கு நோர்வே பிரதமர் ஜென்ஸ் ரோல்ரென்பேர்க்கை சந்தித்து கலங்துரையாடியுள்ளார்.
பழைய சம்பவங்களை மறந்து சிறீலங்கா அரசுடன் புதிய உறவுளை ஏற்படுத்த நோர்வே அரசு முன்வரவேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் நோர்வே பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளும், வர்த்தகம், முதலீடுகள் மற்றும் காலாச்சார மேம்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மகிந்தா தெரிவத்துள்ளதாக சிறீலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரான் அரச தலைவரையும் மகிந்தா சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிராந்திய ஆதிக்கப் போட்டிகளில் போட்டியிடும் நாடுகளை தனது இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இதுவரை காலமும் அனுசரித்து நடந்துகொண்ட சிறீலங்கா அரசுகள் அதன் மூலம் தாம் நினைத்ததை சாதித்தும் வந்திருந்தன. இந்த நிலையில் தற்போதும் அவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தவே மகிந்தா தந்திரமாக முயல்வதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

21 செப்டம்பர் 2010

நல்லிணக்க ஆணைக்குழு என்பது ஒரு ஏமாற்று வித்தை - வன்னி மக்கள்.

வன்னியில் கடந்த மூன்று நாட்களாக நடந்த அரசின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நேற்று முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகத்தில் நடந்தது. அங்கு சாட்சியம் சொல்ல வந்த கிட்டத்தட்ட 400 பேரில் 15 பேர் மட்டுமே சாட்சியம் அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மிகுதிப்பேர் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து தற்போது எதுவித தகவல்களையுமே அறியமுடியாதுள்ள தமது கணவன்மார், பிள்ளைகள் குறித்து புகார் அளிக்கவும் அவர்களைப் பற்றிய தகவல்களை வேண்டவும் என நேற்று ஏராளமான பெண்கள் கூடியிருந்தும் அவர்கள் தமது சாட்சியத்தை அளிக்க அனுமதிக்கப்படவே இல்லை.
கண்டாவளையில் சாட்சியம் அளித்த பெண்ணொருவர் கூறும்போது, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களை இராணுவத்தினர் 16 பஸ்களில் ஏற்றிச் சென்றனர் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அதன்பின்னர் சரணடைந்தவர்கள் குறித்த தகவல் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதே நிலைப்பாட்டையே நேற்றும் அநேகமான பெண்கள் தெரிவிக்க இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதையடுத்து அரசின் இந்த ஆணைக்குழு விசாரணை என்பது ஒரு கேலிக்கூத்தே என்றும் இதனால் தமிழ் மக்களாகிய எமக்கு எதுவித நியாயமும் கிடைக்கப்போவதில்லை என்றும் மக்கள் விசனப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் போரின் இறுதிக்கட்டச் சண்டை நடந்த இடமான முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் நேற்றையதினம் ஆணைக்குழு விஜயம் செய்துள்ளதாம்.

சீமானின் வழக்கு விசாரணை நாளைய திகதிக்கு ஒத்திவைப்பு.

தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைகப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவ்வழக்கு விசாரணை நாளை 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவுள்ளது.
இவ் வழக்கிற்கான இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்க பட்டு இருந்தது, இந் நிலையில் இன்று சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பு நீதி மன்ற நேரம் முடிந்ததால் நாளை இவ் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

20 செப்டம்பர் 2010

இராணுவம் பொதுமக்கள் மீது கொத்துக்குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசியது!

கிளிநொச்சியில் மூன்று நாட்களாக நடந்துவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வின் முன்னால் 500 க்கும் மேற்பட்டோர் இதுவரை சாட்சியம் அளித்துள்ளனர். பூநகரி பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் சாட்சியம் அளித்த பூநகரி வாசியான கமநல உத்தி யோகத்தர் ந.சுந்தரமூர்த்தி, போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது நாம் வெளியேறுவதைத் தடுப்பதற்காகப் புலிகள் பச்சை மட்டைகளால் அடித்தனர். அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கிச் சுட்டனர். இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை சுந்தரமூர்த்தி விவரித்தார்.
மேலும், பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் சிறு பிரதேசங்களுக்குள் மக்களை முடக்கியதன் மூலம் புலிகள் தமது ஆளணியை இலகுவாகத் திரட்டவும், ஆயுதங்களை வைத்து இயக்குவதற்கு தளங்களை அமைக்கவும் அரசாங்கமே வழிசமைத்துக் கொடுத்தது. அரசு இவ்வலயங்களை அறிவிக்காவிட்டால் நாம் எமக்கான பாதுகாப்பு இடங்களை நாங்களே தேடிக்கொண்டிருப்போம் என்றார் அவர். இந்த பாதுகாப்பு வலயங்களுக்குள் இராணுவத்தின் எறிகணைகளால் தினமும் 200 பேர் இறந்தனர் என்பதைக் குறிப்பிட்ட அவர் தாம் இருந்த தறப்பாள் கூடாரங்களைச் சுற்றி இறந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கரடியனாறு வெடிப்புக்கு இரு வல்லரசுகளின் போட்டியே காரணமாம் : சந்திரசேகரன்.

இலங்கையில் இரண்டு வல்லரசு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளிப்பாடே மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமாகுமென மக்கள் சந்தேகிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று மட்டக்களப்பு ‘கோப் இன்’ விடுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே சந்திரசேகரன் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மக்கள் சந்தேகிப்பது போல இச்சம்பவம் அவ்வாறு இடம்பெற்றிருக்குமானால் கடந்த 30வருடங்களில் இடம்பெற்ற பாரிய யுத்தத்தை விட மிகவும் அச்சம் நிறைந்ததாக இது இருக்கும்.
இதனால் இப்பகுதியில் அச்சநிலை காணப்படுவதை உணர முடிகின்றது.
இன்று நமது நாடு மிக மோசமான அராஜகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. சர்வாதிகார போக்கை அரசாங்கம் கடைபிடிப்பதால் மக்கள் படுபாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என மேலும் தெரிவித்தார்.

19 செப்டம்பர் 2010

இலங்கையில் இருநூறு லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தினர் தயார் நிலையில்.

இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்காக கொழும்பில் வைத்து லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக முன்னரே அறிக்கைகள் வந்திருந்தன. ஆனால் இதை இலங்கை பலமாக மறுத்துவந்த நிலையில், லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் இலங்கையில் பயிற்சி எடுத்து வருவதாகவும், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல்களைத் தொடுக்கவென ஏற்கனவே 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் தயாராக உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
அதோடு, மேற்படி பயிற்சி முகாம்கள் பற்றி வோஷிங்டன் கொழும்புக்கும் தகவல் கொடுத்துள்ளதாம். இந்தியா மீது தொடுக்கவுள்ள தாக்குதலில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளும் ஈடுபட்டார்கள் என்றால் அத்தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என்று புதுடில்லியின் ஆய்வு எச்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மன் பேக்கரியில் நடந்த தாக்குதலில் பங்கெடுத்த, பெய்க் கொழும்புக்கு 2008 இல் சென்று அங்கு லஷ்கர் ஈ-தொய்பாவைச் சந்தித்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாம். மேலும் இவர் எத்தனை தடவைகள் அங்கு விஜயம் செய்தார் மற்றும் இலங்கையை பயிற்சித் தளமாக லஷ்கர் ஈ-தொய்பா பயன்படுத்துகிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் பொருட்டு விசாரணை நடந்துவருகிறது.
மேலும், இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்கென அனுப்பப்பட்டுள்ள 200 பேரும் இதற்கெனத் தனியான பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் தமது நிலைப்பாட்டை நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலும் பலப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியுள்ள அவ்வறிக்கை, நேபாளத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே இந்தியாவுக்குள் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றாலும், தற்போது அவர்களின் புது இலக்காக மாலைதீவும் சேர்ந்துள்ளதாகக் கூறுகிறது.
இவ்வறிக்கை இவ்வாறிருக்க, லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளித்ததில் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை என்று இந்திய மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் போலீஸ் தெரிவித்துள்ளது.

உறவுகளை மீட்டுத் தரும்படி மக்கள் ஆணைக்குழுவிடம் மன்றாட்டம்!

எங்கள் உறவுகளை எங்களிடம் தாருங்கள்' என்று கண்ணீரும் கம்பலையுமாக நேற்றுக் கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேச சபை அலுவலகத்தில் நடைபெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த 350 இற்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களில் பலர் கைது செய்யப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களையும், உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் கைகளில் ஏந்தியவாறு சாட்சியம் அளிக்க வந்திருந்தனர்.
மேற்படி பிரதேச மக்கள் சுதந்திரமாக சாட்சியமளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், இதற்கென விசேட மொழிபெயர்ப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாகவும் அரச தரப்பு தெரிவித்தது. காணாமல் போனோர் தொடர்பாகவும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாகவும் மிகவும் உணர்வு பூர்வமாக கருத்துக்களைத் தெரிவித்த மக்களிடம் ஆணைக்குழு உறுப்பினர்கள் அவ்வப்போது குறுக்கு விசாரணைகளையும் நடத்தினர்.
அதேநேரம் சாட்சியமளித்த அனைவருமே காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதைச் செவிமடுத்த ஆணைக்குழுத் தலைவர், அவைகளை எழுத்து மூலமாகத் தரும்படி கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா, “காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாக சி.ஐ.டி.யினரை அழைத்துப் பேசவுள்ளேன்” என்றார். இதற்காக ஆணைக்குழுவின் ஒருநாள் அமர்வுக்கு சி.ஐ.டி.யினர் அழைக்கப்படுவர் என்று கூறினார்.
மேலும், காணி, தண்ணீர்ப் பிரச்சினைகள் தொடர்பாகவும் எடுத்துக்கூறிவர்களுக்கு, அந்த இடத்தில் அரசாங்க அதிபர், மற்றும் அதிகாரிகளை அழைத்து இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்தாராம்.
ஆணைக்குழு உறுப்பினர்கள், இரணமடுக்குளம், புலிகளின் விமானப்படைத்தளம் அமைந்திருந்த இடங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி!

வடபகுதியில் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து முன்னர் யாழ் மாநகரசபை தேர்தலில் போட்டியிட்ட எஸ் சத்யேந்திரா புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஜனநாயக மக்கள் கட்சி என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. தமது கட்சி விரைவில் சிறீலங்கா தேர்தல் திணைக்களத்தில் பதிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக சந்யேந்திரா தெரிவித்துள்ளார்.
ஐ,தே.கவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக சத்யேந்திரா முன்னர் பதவி வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

18 செப்டம்பர் 2010

மகிந்தவை புறக்கணித்த ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக செல்லும் வழியில் ஒரு நாள் பயணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே நேற்று முன்தினம் ஜெர்மனி சென்றிருந்ததுடன் இதன் போது அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மர்கலை சந்திக்க கடும் முயற்சி மேற்கொண்டதாகவும் எனினும் அது தோல்வியடைந்தாகவும் கூறப்படுகிறது.
ஜெர்மனிக்கான இலங்கை தூதுவர் மடுவேகெதர சந்திப்புக்கான போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதியின் இரகசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ்குணவர்தன குற்றம்சுமத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனர்களின் சடலங்கள் தாய்நாட்டுக்கு!


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சீனர்கள் இருவரின் சடலங்கள் இன்று தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அந்நாட்டுத் தூதரகம் தெரிவிக்கிறது.
இவர்களின் சடலங்கள் நேற்றிரவு 9 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதாக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் தெரிவித்தார்.
வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களைப் பார்வையிட பிரதமருடன் சீனத் தூதுவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

17 செப்டம்பர் 2010

எரிக் சொல்கெய்மை வித்தியாதரன் சந்தித்தார்.

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான என்.வித்தியாதரன் இன்று காலை நேரில் சந்தித்து உரையாடி உள்ளார்.
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சமாதான பேச்சுக்களின்போது நோர்வே மத்தியஸ்தம் வகித்தது.
நோர்வேயின் சமாதான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டிருந்தார். அதே போல இலங்கையில் சமாதான முயற்சிகளில் மிக நீண்ட காலமாக அதீத ஈடுபாடு காட்டி வரும் புத்திஜீவிகளில் வித்தியாதரனும் ஒருவர்.இருவருக்குமிடையிலான சந்திப்பு எரிக் சொல்ஹெய்மின் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலம் வரை இருவரும் பரஸ்பரம் பேசி இருக்கின்றார்கள். இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள்-தமிழர்களின் அரசியல் எதிர்காலம்-யுத்தத்தின் இறுதி நாட்களில் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் ஆகியன குறித்து இப்பேச்சுக்கள் அமைந்தன.
ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க்கில் அடுத்த வாரம் ஆரம்பமாகின்றது.இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் கலந்து கொள்கின்றார். இவரை அங்கு நோர்வே நாட்டுப் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று சந்தித்துப் பேச உள்ளது.
இவ்வுயர் மட்டக் குழுவில் எரிக் சொல்ஹெய்மும் அங்கம் வகிக்கின்றார். எனவே இன்று இடம்பெற்ற எரிக் சொல்ஹெய்ம்-வித்தியாதரன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

மட்டு. வெடிப்புச் சம்பவம்: வைத்தியசாலையில் கதறியழும் உறவுகள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கூடியுள்ள காயமடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவதாகவும் காயமடைந்தோரைப் பார்வையிட பெருந்திரளான மக்கள் வைத்தியாசாலையில் கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இன்று முற்பகல் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றது. இச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மூவர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் தெரிவித்தார்.
இவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும் மற்றையவர் சீன நாட்டுப் பிரஜையெனவும் அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்தில் காயமடைந்த 52 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூவர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

16 செப்டம்பர் 2010

த.தே.கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை இழுக்க ரணில் முயற்சியா?

சமீபத்தில் 18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேறியது. இதன் மூலம் ஜனாதிபதி எத்தனை தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்ட அங்கிகாரம் கிடைத்துள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் அமைவாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க அதிகாரம் கொண்டுள்ள நாடாளுமன்ற சபைக்கு, எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர்களில் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர் என சில இணையத்தளங்கள் செய்திவெளியிட்டு வருகின்றன. அவர் மகிந்தவுக்கு உதவுவதற்காக தனது கட்சியை நாசம்செய்து வருவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், இவர் ஏன் சுமந்திரனை நியமிக்கவேண்டும் என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, அதனைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், சுமந்திரன் எம்.பியை தமது பக்கம் இழுக்க ரணில் முயல்வதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஊடகங்களைத் தடுத்து நிறுத்தக் கழுதைகளை நியமித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவினை ஆட்சேபித்து ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தேர்தல் மனு தொடர்பான அடிப்படை ஆட்சேபனைபற்றிய விசாரணைகள் நேற்று நிறைவுபெற்றன. இரு தரப்பினருக்கும் எழுத்துமூல விளக்கத்தை அளிப்பதற்குக் கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம் இது குறித்த தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த வழக்கு விசாரணையைப் பார்வையிடுவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மன்றுக்கு வந்திருந்தனர்.
மனுவைத் தாக்கல் செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார்.
தேர்தல் மனுவிலுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விளக்கமளிக்கப்படாது உள்ளதால், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு பிரதிவாதிகள் தரப்பு, அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தது.
பிரதிவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு மனுதாரரான சரத் பொன்சேகா சார்பில் பதிலளித்த உபுல் ஜயசூரிய, ஏ.பி நைல்ஸ் ஆகிய சட்டத்தரணிகள், மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டுமெனக் குறிப்பிட்டனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்குகள் எண்ணும் நிலையங்களிலிருந்து மனுதாரரின் பிரதிநிதிகள் விரட்டப்பட்டமை, பதிவுசெய்யப்பட்ட வாக்குச் சீட்டுகள் பல்வேறு இடங்களில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களை மனுதாரரால் தெரிவிக்க முடியாதெனவும் அந்தச் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான சாட்சியங்களை முன்னிலைப்படுத்த முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இத்தகைய சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ள நிலையில் இதனைச் செய்தவர்கள் யாரென்பதை மனுதாரரால் கூறமுடியாமல் போனாலும் மனுவை நிராகரிக்கக் கூடாதெனச் சட்டத்தரணி ஜயசூரிய நீதிமன்றத்துக்கு விளக்கமளித்தார்.
தேர்தல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் மாத்திரமே தேர்தலின்போது இடம்பெற்ற சட்டவிரோதச் சம்பவங்கள் தொடர்பில் சாட்சியங்களை முன்னிலைப்படுத்தமுடியுமெனச் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட முனைந்தபோது அதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது.
அவ்வேளையில் சரத் பொன்சேகா தடை ஏற்படுத்தியவர்களை நோக்கி நீங்கள் பாதுகாப்புக்காகவா அல்லது ஊடகங்களைத் தடுத்து நிறுத்தவா வந்துள்ளீர்களெனக் கோபமாகக் கேட்டார்.
“ஊடகங்களைத் தடுத்து நிறுத்தக் கழுதைகளை நியமித்துள்ளனர். இவர்களுக்கு முறையாக நடந்துகொள்ளத் தெரியாது. பாதுகாப்பெனக் கூறி ஊடகங்களைத் தடுக்க முயற்சிக்கின்றனர். இதையும் நீங்கள் ஊடகங்களில் தெரிவியுங்கள்” எனக் கூறினார்.

15 செப்டம்பர் 2010

தனித்தமிழ் ஈழமே மதிமுகவின் கொள்கை!

அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மதிமுகவின் திறந்த வெளி மாநாடு சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மாநாட்டிற்கு தலைமையேற்றுள்ளார். மாநாட்டில் 15ஆயிரம் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இம்மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானம்: காவிரி ஆறு,முல்லைப்பெரியாறு,பாலாறு போன்றவற்றிற்கு தமிழகத்திற்கான பங்கைப்பெறுவதில் திமுக அரசு தனது ஆட்சிக்காலத்தில் தவறிவிட்டது.
இதனை மதிமுக வன்மையாக கண்டிப்பதோடு தமிழகத்திற்காக உரிமைக்காக மதிமுக தொடர்ந்து போராடும்.
இரண்டாவது தீர்மானம்: இந்தியா என்பது பல நாடுகள் இணைந்ததே இந்தியாவாகும். இந்நாடுகளூக்கு சுயாட்சியுடன் இருக்க மதிமுக போராட்டங்களை நடத்தும். முதற்கட்டமாக இந்தியா என்ற பெயருக்கு பதிலாக இந்திய ஐக்கிய நாடுகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
மூன்றாவது தீர்மானம்: இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவித்த சிங்கள ராஜபக்சே அரசுக்கு ஆதரவு வழங்கிய இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். அதோடு அம்மக்களுக்கும் தனித்தமிழ் ஈழமே இறுதித்தீர்வு. தனித்தமிழ் ஈழம்தான் அம்மக்களை சுதந்திரமான,நிம்மதியான வாழ்வுக்கு அழைத்துச்செல்லும்.
அதனால் தனித்தமிழ் ஈழத்திற்காக அம்மக்களோடு இணைந்து மதிமுக தொடர்ந்து போராடும். தனித்தமிழ் ஈழமே மதிமுகவின் கொள்கை.
இந்த மூன்று தீர்மானங்களை மதிமுகவின் கட்சி முக்கியஸ்தர்கள் முன்மொழிந்தனர். தொண்டர்கள் கைத்தட்டலும் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மஹிந்த நியூயோர்க் செல்கின்றார்; கனடாவில் எதிர்ப்பு போராட்டம்!

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுக் கூட்டத் தொடரில் பங்குபற்ற மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் 18ஆம் திகதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கின்றார். மஹிந்த அங்கு கூட்டத்தில் உரையாற்றுவதுடன் அங்கு ஐந்து நாள்கள் தங்கியிருந்து பல்வேறு கூட் டங்களிலும் வைபவங்களிலும் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் வருகையைக் கண்டித்து கனேடியத் தமிழர் தேசிய அவை கனடா, டொரண்டோவில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்னாலும் மொன்றியலிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்னாலும் நாளைமறுதினம் 17ஆம் திகதி கவன ஈர்ப்புப் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அமெரிக்காவுக்கு வருகை தந்தால் இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கனேடியத் தமிழர் தேசியப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் 7வயது சிறுவன் பலி!


ஆயுதமேந்திய கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 வயது சிறுவனொருவன் பலியாகியுள்ளான். பேருவளையிலுள்ள பூட் சிற்றிக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.முச்சக்கர வாகனமொன்றில் தனது தந்தையுடன் இருந்த நிலையில் அச்சிறுவன் தற்செயலாக சுடப்பட்டுள்ளதாகவும் அச்சிறுவனின் தந்தையும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

14 செப்டம்பர் 2010

மரத்தில் தொங்கிய யுவதியின் சடலம்!


நாவற்குழி தச்சன் தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலை யில் யுவதியின் சடலம் காணப்பட்டது. இவரது சடலத்தை சாவகச்சேரி பொலி ஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதி மன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கனடா சென்றோரில் முதன்முறையாக ஒரு தாயார் 3 குழந்தைகளுடன் விடுவிப்பு.


எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்துள்ள 492 இலங்கையர்களில் முதன்முறையாக தமிழ் தாயார் ஒருவரும் அவரது 3 குழந்தைகளும் கனேடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் வாரியத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட அப் பெண்மணி யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேற்படி கப்பலில் பயணம் செய்தவர்களில் பலர் தங்களை உறுதி செய்யும் வகையில், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு போன்ற ஆதாரங்களைத் தம்முடன் வைத்திருக்கின்றனர்.
எனினும் அவற்றின் நம்பகத்தன்மையை தம்மால் உறுதி செய்யமுடியவில்லையென கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அதிகாரி ரொன் யமாயுச்சி தெரிவிக்கின்றார்.
இக்கப்பல் கடந்த மாதம் 12 ஆம் திகதி கனடாவைச் சென்றடைந்தது.

13 செப்டம்பர் 2010

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருக்குமாறு அமெரிக்காவிடம் இலங்கை கூறுகிறது.


இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் இலங்கை கூறியுள்ளது.இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் தேவையற்றதும் பொறுப்பற்றதுமான விமர்சனங்களை அமெரிக்கா தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இலங்கையின் புதிய அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்காவின் கண்டனத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அராசங்கம் தேவையற்ற விமர்சனங்களை கவனத்திற் கொள்ளாது எனக் கூறிய அமைச்சர், முதலில் அமெரிக்கா தங்களது பிரச்சினைகளை கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இவ்வாறான தேவையில்லாத விமர்சனங்களை செய்வதினூடாக அமெரிக்கா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டுள்ளது மாத்திரமன்றி, எமது நாட்டின் அதியுயர் மன்றமான உயர் நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளது என அமைச்சர் ரம்புக்வெல்ல டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
முதலில் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னராக இலங்கையின் அரசியலமைப்புத் தொடர்பில் கற்றுக்கொள்ளுமாறும் அமெரிக்காவிடம் தாம் தெரிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய அரசியலமைப்புக்கான திருத்தங்கள் இலங்கையில் அரசியல் யாப்புக்கு அமையவே செய்யப்பட்டுள்ளது. நாங்கள் செய்தது சட்டப்படியானது. எனவே, எவருக்கும் இதனை விமர்சிக்கும் உரிமை கிடையாது எனவும் அவர் மேலும் கூறினார்.
இலங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தங்களை கண்டித்து கடந்த சனிக்கிழமை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இத்திருத்தங்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

பார்வதியம்மாவை பழ நெடுமாறனின் சிறப்பு பிரதிநிதி பார்வையிட்டார்.


யாழ்ப்பாணம்-வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ் தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாளை உலகத் தமிழர் பேரவையின் செயலாளரான இராமசாமி பத்மநாபன் இன்று காலையில் சென்று பார்வையிட்டார். இவர் பேரவையின் தலைவரான பழ.நெடுமாறனின் விசேட பிரதியாகவே இவர் வந்திருந்தார். அவர் பார்வதி அம்மாளைப் பார்வையிட்டு நலத்தை அறிந்து கொண்டார்.

12 செப்டம்பர் 2010

பாடகி சொர்ணலதா மரணம்!


இனிமையான குரலால் 23 வருடங்கள் ரசிகர்களை மயங்க வைத்த பாடகி சொர்ணலதா இன்று சென்னையில் காலமானார். அவரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா பாலக்காட்டை பூர்வீகமாகக்கொண்ட சொர்ணலதா தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம், இந்தி,உருது,பஞ்சாபி உட்பட பல மொழிகளில் 23 ஆண்டுகளாக பின்னணி பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் ‘போறாளே பொன்னுத்தாயி...’பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்றார்.
இவரின் தந்தை கே.சி.செருகுட்டி பிரபல ஹார்மோனியக்கலைஞர். தாய் கல்யாணி இசைப்பிரியர். கீ.போர்டு மற்றும் ஹார்மோனியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர் சொர்ணலதா.
1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.
தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத்தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச...’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.
1.எவனோ ஒருவன் வாசிக்கிறான்(அலைபாயுதே)
2.சொல்லாயோ சோலைக்கிளி(அல்லி அர்ஜூனா)
3.குச்சி குச்சு ராக்கம்மா(பம்பாய்)
4.உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி(ஜெண்டில்மேன்)
5.அக்கடான்னு நாங்க (இந்தியன்)
6.மாயா மச்சீந்திரா(இந்தியன்)
7.அஞ்சாதே ஜீவா(ஜோடி)
8.முக்காலா முக்காபலா(காதலன்)
9.காதலெனும் தேர்வெழுதி(காதலர் தினம்)
10.போறாளே பொன்னுத்தாயி(கருத்தம்மா)
11.உளுந்து வெதைக்கையிலே(முதல்வன்)
12.பூங்காற்றிலே..(உயிரே)
13.ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு(உழவன்)
14.காதல் யோகி (தாளம்) என்பன உட்பட ஏ.ஆர்.ரகுமான் இசையில் 35க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
1.மலைக்கோயில் வாசலில்(வீரா)
2.மாடத்திலே கன்னி மாடத்திலே(வீரா)
3.என்னுள்ளே என்னுள்ளே(வள்ளி)
4.ராக்கம்மா கையத்தட்டு(தளபதி)
5.உத்தம புத்திரி நானே(குரு சிஷ்யன்)
6.நான் ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி)
7.மாசி மாசம் ஆளான பொன்னு(தர்மதுரை)
8.மணமகளே(தேவர் மகன்)
9ஆட்டமா தேரோட்டமா(கேப்டன்பிரபாகரன்)
10.நீ எங்கே என் அன்பே(சின்னதம்பி)
11.போவோமா ஊர்கோலம்(சின்னதம்பி)
12.மாலையில் யாரோ மனதோடு பேச(சத்ரியன்) என்பன உட்பட இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களைத்தந்துள்ளார்.
தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார்.
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

போதையில் சுருண்டு விழுந்த கருணா: நெருப்பே நெருப்பைச் சுடுகிறது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மதுபோதையில் புரண்டு விழுந்த சம்பவம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்றுள்ளது என்று பிரதேசவாதம் பேசும் நெருப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த பிரதி அமைச்சர் கருணா அளவுக்கு அதிகமாக மதுபானத்தை உட்கொண்டு நிலத்தில் விழுந்து புரண்டுள்ளார் என்றும் அவ் இணையம் தெரிவித்துள்ளது. தற்போது எல்லாம் மிகுந்த மதுபோதையில் மிதக்கும் கருணாவின் உடல் நிலை பாதிப்படைந்து இருப்பதாகவும் அறியப்படுகிறது.
சிறிய அளவில் மதுவைப் பாவித்தாலும், அவர் உடல் பெரும் வேறுபாட்டை வெளிக்காட்டுவதாகவும், அவர் உட்கொள்ளும் சிறிய மதுபானத்தைக் கூட அவர் உடல் தாக்குப்பிடிக்காதால், கொஞ்ச மது பானத்தை அருந்திவிட்டு அவர் நிலத்தில் உருண்டு புரள்வதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தற்போது தென்னிலங்கையில் இடம்பெறுகின்ற திருமணங்கள், விருந்துபசாரங்கள் போன்றவற்றில் அளவுக்கதிகமாக மது பானத்தை அருந்திவிட்டு, ஆடல் பாடல் என்று தடம்புரண்டு வருகின்றார்.
ஆயுத வழிபோராட்டம் மூலம் தமிழினத்திற்கு உரிமையை பெற்றுகொடுக்க போகின்றார்கள் என்று புறப்பட்ட இவர்கள் இன்று தென்னிலங்கை சிங்கள இனவாதிகளின் மதுவுக்கும், மாதுவுக்கும் மயங்கி இனத்தையே விற்று பிழைக்கும் சந்தர்ப்பவாதிகள் ஆகி விட்டனர். இதனையே இலங்கை அரசு தற்போது தம்மோடு சேர்ந்து இயங்கும் எல்லோருக்கும் பழக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

11 செப்டம்பர் 2010

களைகட்டாத ஜேர்மனிய மாநாடு.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஜேர்மனியில் நடாத்தும் "அகம் புலம் தமிழர் வாழ்வியல் சிறப்பு மகாநாடு இன்று 10:00 மணிக்கு ஜேர்மனியில் RHEINE என்னும் இடத்திலுள்ள Elisabethschule – Aula பாடசாலை மண்டபத்தில் ஆரம்பம் ஆனது.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலக் கல்விப் பொறுப்பாளரும் பேராசிரியர் இ. பாலசுந்தரம் இம்மாநாட்டுக்குத் தலைமை தாங்குகின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன் , பா.அரியநேந்திரன், யோகேஸ்வரன் ஆகியோரோடு மூத்த ஊடகவியலாளர் வித்யாதரனும் பேராளராகக் கலந்து கொண்டார். ஆயினும் இம்மாநாடு சோபிக்கவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் – தமிழ் அரசியல் கைதி.

நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார்.
நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சியை சேர்ந்த ஆனந்தராஜா என்ற கைதி பல வருடங்களாக விசாரணைகளின்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
2006ம் ஆண்டு விடுதலைப்புலி சந்தேக நபராக இவர் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரது தாய் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார். தந்தை இறந்து பல வருடங்களாகின்றது. தற்போது உறவினர்களும் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் தான் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மேற்படிக்கைதி தான் விரைவில் சுயநினைவை இழக்கலாம் என்கூறியுள்ளார்.
அவ்வாறு சுயநினைவை இழந்த நிலையில் இறந்து போனால் மனிதாபிமானமுள்ளவர்கள் தன் வேண்டுதலை நிறைவேற்றுமாறும் கேட்டுள்ளார்.

10 செப்டம்பர் 2010

நாஸிகளின் யுகத்தில் கனடா!

நாட்டுக்கு வருகின்ற அகதிக் கப்பல்களைத் தடுத்து நிறுத்த கனேடிய அரசினால் எடுக்கப்பட இருக்கின்ற கடும்போக்கான நடவடிக்கைகள் நாஸிகளின் யுகத்துக்கு உரியன என்று அந்நாட்டின் லிபரல் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
அக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் பிரித்தானிய- கொலம்பிய தீவின் லிபரல் ரைடிங் அசோஸியேசன்ஸின் தலைவருமான ரோன் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.
நாஸிகள் யூதர்களின் விமானங்களை வானத்தில் பறக்க விடாமல் தடுத்து நிறுத்த எடுத்திருந்த இறுக்கமான நடவடிக்கைகளையே அகதிக் கப்பல்களைத் தடுத்து நிறுத்த கனேடிய அரசு எடுக்க உள்ள இறுக்கமான நடவடிக்கைகள் நினைவுபடுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் வைத்து சட்டவிரோத படகுகளையும், கப்பல்களையும் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட அதிகாரத்தை கனடா பெற்றுக் கொள்ளுதல் , சட்டவிரோத பயணிகளை படகுகள், கப்பல்கள் போன்றவற்றில் ஏற்றி வருகின்ற கப்டன்மார், மாலுமிகள், சிப்பந்திகள் போன்றோருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்குதல், படகுகளும், கப்பல்களும் பாரிய கடல்களை அடையும் முன்பாகவே இடைமறிக்கும் வகையில் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் என்று கனேடிய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கின்ற இந்நடவடிக்கைகளை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். கன்சேர்வேட்டிவ் கட்சியின் இக்கடும்போக்கான திட்டங்கள் நாட்டில் கலவரங்களையே தோற்றுவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கை குறித்து இந்தியாவிடம் அறிக்கை கோரியுள்ள அமெரிக்கா.

இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் ஆசியா கண்டத்தைப் பாதிக்கும் முறைமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்திய அரசாங்கத்திடம் விசேட அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை அறியும் முகமாகவே இந்த அறிக்கையினை அமெரிக்கா கோறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கோரிக்கையினைக் கருத்தில் கொண்டுள்ள இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மேற்படி அறிக்கையினைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

09 செப்டம்பர் 2010

பாக். தீவிரவாதிகளுக்கு கொழும்பில் பயிற்சி முகாம்.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள் என்று பரபரப்புத் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதி ஒருவர் அவரது வாக்குமூலத்தில் இவ்வதிரடித் தகவலை வழங்கி உள்ளார்.
மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.இது தொடர்பாக மராட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்களைக் கண்டு பிடித்துள்ளார்கள்.
இவர்களில் ஒருவர் ஹிமாயத் பெய்க் . இவர் பாகிஸ்தானின் லஹ்கர் -இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர். இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வந்து அங்குள்ள லஹ்கர்-இ-தொய்பா இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகள் பெற்றார் என பெய்க் இப்பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இலங்கையில் முகாம் அமைத்துச் செயற்படுகின்றார்கள் என்பது இப்போதுதான் முதல் தடவையாக வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்புக்கு சுற்றுலா பயணிகள் போல செல்கின்றனர் என்றும் இரு வகையான இராணுவ பயிற்சிகளை இங்கு பெறுகின்றனர் என்றும் அவரும் அவ்வாறே பயிற்சிகளைப் பெற்றார் என்றும் பெய்க் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி முகாம் பற்றிய தகவல்கள் இந்தியாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆயினும் கொழும்பில் எந்த இடத்தில் இப்பயிற்சி முகாம் உள்ளது? எத்தனை பேருக்கு அங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன போன்ற விவரங்களை பெய்க் இன்னும் தெரிவிக்கவில்லை.

மீண்டும் அலெக்ஸ் கனேடிய ஊடகத்துக்கு செவ்வியளித்துள்ளார்.

கனடாவில் இருந்து 07 ஆண்டுகளுக்கு முன் நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன் சஞ்சீவ் குஹேந்திரராஜா எனபவர் மீண்டும் கனடா வருகின்றமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரகசிய இடம் ஒன்றில் இருந்து கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அண்மைய நாட்களில் தொலைபேசி மூலம் வழங்கி உள்ள பேட்டி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டமை, கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டு வந்த குழுக்களுடன் தொடர்பு ஆகியவற்றுக்காகவே நாடு கடத்தப்பட்டு இருந்தார்.
255 இலங்கையர்களுடன் கடந்த வருடம் அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டுச் சென்ற அகதிக் கப்பல் ஒன்று இந்தோனேஷிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட போது அக்கப்பலில் இவரும் பயணித்து இருந்தார். கப்பலில் புறப்பட்டு வந்திருந்த தமிழர்களின் பேச்சாளராக அலெக்ஸ் என்கிற பெயரில் செயற்பட்டார். ஆனால் அவர் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போய் இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

08 செப்டம்பர் 2010

பிரபல நடிகர் முரளி மரணம்!!!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 47 வயதான அவர் இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம், புதுவசந்தம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
நேற்று இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறிய முரளி,சென்னை போரூரில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவார்க்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல்வைக்கப்பட்டது. புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும்முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருவரால் கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளதுடன் அந்த இளைஞனுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.கொள்ளையிடும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிசில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.