பக்கங்கள்

29 மார்ச் 2015

புளியங்கூடல் காட்டு வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

புளியங்கூடல் கிராஞ்சியம்பதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காட்டு வைரவர் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில்,மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையிலே (30.03.2015)திங்கட்கிழமை மற்றும் (31.03.2015)செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் விஷேட பூஜைகள் நடைபெற்று பின்னர்(01.04.2015)புதன்கிழமை மகா கும்பாபிஷேகப்
பெருவிழா ஆரம்பமாகி நடைபெற உள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக நம்பப்படும் காட்டு வைரவர் ஆலய பின் பகுதியில் கல் ஒன்று வளர்ச்சி பெற்று வருவது ஊர் மக்களின் நம்பிக்கைக்கும் ஆச்சரியத்திற்கும் உரிய ஒன்றாக நோக்கப்படுகின்றது.ஆலயத்திற்கு நன்கொடைகள் அளிக்க விரும்பும் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஊர் மக்கள் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

28 மார்ச் 2015

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க சிறீலங்கா முடிவு?

மஹிந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில நபர்கள் மீது விதித்திருந்த தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளார். இதன்படி 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு மைத்திரிபால அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் இது தொடர்பிலான அறிவிப்பொன்றை அண்மையில் பாராளுமன்ற அமர்வின் போதும் தெரிவித்திருந்தார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் போலியான வதந்திகளை பரப்பியிருந்தது. இதனாலேயே குறித்தத புலம்பெயர் அமைப்புக்களுக்கு கடந்த கால அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கத்தின தவறான நிலைப்பாட்டை நீக்குவதென தீர்மானித்து தற்போதைய அரசாங்கம் இதுமாதிரியான ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளது. இதன் அடிப்படையிலேயே குறித்த புலம்பெயர் மற்றுமம் நபர்கள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இத்தீர்மானத்தினால் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆச்சரியமடைந்துள்ளனர். அத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கம் சட்டபூர்வமாக்குவதற்கு தீர்மானித்துள்ளமை கனடியவாழ் தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது உலக தமிழர்கள் பேரவை இத்தடையுத்தரவை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

21 மார்ச் 2015

தளபதி சூசை அவர்களின் குடும்பத்திற்கு விஜயகலா உதவி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினாலும் புலம்பெயர் தமிழ்த் தேசியம் பேசும் ஆதரவாளர்களாலும் கைவிடபட்டுள்ள கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி உட்பட குடும்பத்தினருக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் விவகார பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இரகசியமாக உதவி செய்து வருவதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவியிடம் இருந்த அவர்களுக்கு சொந்தமான சிறு நிலம் ஒன்று அண்மையில் இலங்கை அரசு இராணுவ தேவைகளுக்கு அரச உடமையாகியது.அதன் வர்த்தகமானி அறிவித்தலும் வெளிவந்திருந்த நிலையில் லண்டனில் வசித்துவரும் சூசையின் மனைவியின் சகோதரனால் சூசையின் மனைவி மற்றும் மகள் வாழ்வதற்கு என்று தமக்கு சொந்தமான நிலத்துண்டு ஒன்றை சன்மானமாக வழங்கி இருந்ததார். குறித்த நிலத்தை அரசுடமையாக்கியதை தொடர்ந்து சூசையின் மனைவி பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டு தனக்கு ஏற்பட்ட சிக்கலை எடுத்துக் கூறியதாக தெரிய வருகிறது. விரைந்து செயற்பட்ட விஜயகலா மகேஸ்வரன் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவி புதல்வன் சுரேஸ்(22) மகள் மதி (23) உட்பட குடும்பத்தினர் மீது இலங்கை பாதுகாப்பு தரப்பினர் என சந்தேகிக்கபடுபவர்களால் தொடர்ந்து வரும் துன்புறுத்தல்களை நிறுத்துமாறு இலங்கை ஜனாதிபதியனதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது. இதே நேரம் சூசையின் மனைவியிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலத்துண்டை மீளவும் ஒப்படைக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி சத்தியதேவி புதல்வன் சுரேஸ் மகள் மதி உட்பட குடும்பத்தினர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முற்பட்டவேளை அவர்களை கடற்படையினர் சிறைப்பிடித்து திருமலையில் கடற்படை முகாம் ஒண்றில் அடைத்து வைத்திருந்தமை குறிப்பிடதக்கது. முன்னாள் போராளிகளை தீண்டத்தகாதவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்த்துவரும் நிலையில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

19 மார்ச் 2015

கொலை முயற்சியிலிருந்து தப்பினார் பகீரதி!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணையினில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசு பகீரதி நேற்றிரவு (18-03-2015) கொலை முயற்சியொன்றிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதியையும் அவரது எட்டு வயது மகளும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் விசாரணை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டருந்தது. இந்தநிலையில் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் இருப்பினும் அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். அதனையடுத்து பகீரதியை 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார். எனினும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது. மேலும் பகீரதி வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று கையொப்பம் இடுமாறும் நீதவான் பணித்திருந்தார். இந்நிலையில் முல்லைதீவு கண்டாவளையில் தனது குடும்பத்தவர்களுடன் தங்கியிருந்த பகீரதி அருகாகவுள்ள கடைக்கு நேற்றிரவு சென்றுள்ளார். அவ்வேளையில் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த இருவர் அவரை கொலை செய்யும் முயற்சியாக மோதி தள்ளியுள்ளனர். தாக்குதலாளிகள் தப்பித்து சென்றிருந்ததால் அவர்களை அடையாளம் காணவில்லை என அவர் தெரிவிக்கின்றார். தூக்கி வீசப்பட்ட அவர் அபயக்குரல் எழுப்ப அயலவர்கள் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். முன்னதாக தமது வீட்டை சுற்றி அடையாளம் தெரியாத நபர்கள் வேவுபார்ப்பதில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் குடும்பத்தவர்கள் காவல்நிலையத்திற்கு ஒப்பமிட சென்று திரும்பியவேளையும் அச்சுறுத்தப்பட்டு பின்தொடரப்பட்டதாக தெரிவித்தனர். இதேவேளை, 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த பகீரதி 2005ஆம் ஆண்டில் பிரான்ஸ் சென்று திருமணம் முடித்திருந்தார். விடுமுறையைக் களிப்பதற்கு தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று வன்னியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாதகாலம் தங்கி மீண்டும் பிரான்ஸ் திரும்பும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். ஒருபுறம் நீதியை பேணுவதாக காட்டிக்கொண்டு மறுபுறம் வடிகட்டல்களை அரச படைகள் முன்னெடுத்துவருவதன் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகின்றது.

நன்றி:குளோபல் தமிழ் நியூஸ்

14 மார்ச் 2015

வட,கிழக்கு மக்கள் குறித்து பிழையாக கணித்துவிட்டேன் - மகிந்த

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறித்து தாம் தவறாக கணித்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 80 சதவீதமான வாக்குகள் தமக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இது இவ்வாறு நிகழும் என்று தாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன் இப்படி வாக்குகள் வீழ்ச்சி அடைந்தன என்பது தமக்கு புரியவில்லை. மேலும் வடக்கு கிழக்கின் வாக்குகள் சரிவடைந்துள்ளது என்பது தெரிந்ததோடு, தாம் தேர்தலில் தோல்வி அடையப் போகிறோம் என்பதையும் உணர்ந்துக் கொண்டதாக மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

13 மார்ச் 2015

கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார்!

புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நான்கு நபர்களால் கடத்தப்பட்ட முன்னாள் போராளி வீடு திரும்பியுள்ளார். சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த புதுக்குடியிருப்பை வதிவிடமாக கொண்ட 26 வயதுடைய விஸ்வலிங்கம் வினோதினி என்ற பெண் போராளியே, முன்பள்ளிக்கு செல்லும் போது நேற்றுமுன்தினம் காலை கடத்தப்பட்டிருந்தார். இவர் தற்போது புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடத்தலுடன் தொடர்புபட்டவர்களும் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களென கண்டறியப்பட்டுள்ளது.

12 மார்ச் 2015

பெண் போராளி புதுக்குடியிருப்பில் கடத்தப்பட்டார்!

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியொருவர் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே முன்னாள் பெண்போராளியான கைவேலி பகுதியைச் சேர்ந்த விசுவலிங்கம் வினோதினி(வயது 26) என்பவரைக் கடத்திச் சென்றுள்ளனர். தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்தார். நேற்றுக்காலை வழமை போலவே முன்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர்கள் தாக்கிய பின் தமது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்றுள்ளனர். மயக்கமுற்ற நிலையில் காலை வேளை குறித்த முன்னாள் போராளி கடத்தி செல்லப்பட்ட வேளை இலங்கை காவல்துறையும் அப்பகுதியில் பொதுமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

09 மார்ச் 2015

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி கி.பி.அரவிந்தன் பிரான்சில் காலமானார்!

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) இன்று காலை பிரான்சில் காலமானார். ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் காலமானார். கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலகட்டத்தில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருந்தி உயிர்த்தியாகம் செய்த, ஈழப் போராட்ட முன்னோடியான பொன்.சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர். 1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார். 1972 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான மூன்று தமிழ் இளைஞர்களில் கி.பி.அரவிந்தனும் ஒருவர். 1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார். அதையடுத்து, ஈரோஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கிருந்து அவர், பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதுடன், ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தவர். கி.பி.அரவிந்தன் பல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் வெளியிட்டுள்ளார். அப்பால்தமிழ் என்ற இணைய சஞ்சிகையை நடத்திய அவர், புதினப்பலகை இணையத்தளத்தின் ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.இவர் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

08 மார்ச் 2015

கனடா வந்தடைந்த ஜெசிக்காவிற்கு அமோக வரவேற்பு!

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற ஜெசிக்காவிற்கு கனடாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவைச் சேர்ந்த ஈழ மாணவி ஜெசிக்காவும் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜெசிக்காவுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.அந்த ஒரு கிலோ தங்கத்தையும் தமிழ்நாடு மற்றும் ஈழத்தில் வாழும் அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கினார் ஜெசிக்கா. ஏற்கனவே, தனது இனிமையான குரலால் தமிழ் மக்களைக் கவர்ந்த ஜெசிக்கா, இந்த நற்செயல் மூலம் அவர்களது மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்நிலையில், கனடா திரும்பினார் ஜெசிக்கா. டொராண்டோ விமான நிலையத்தில் ஜெசிக்காவை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெசிக்காவை பாராட்டி அவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.

07 மார்ச் 2015

லண்டனில்"யாழ் வுட்"ரகசிய தடுப்பு முகாம்!அம்பலப்படுத்தியது சனல் 4

லண்டனில் "யாழ் வுட்"
என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். யாழ் வுட் தடுப்பு முகாம் என்றது எங்கே இது தமிழர்கள் தடுப்பு முகாமா என்று நினைக்கவேண்டாம். ஆனால் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம் இங்கே தான் ஈழத் தமிழ் பெண்களையும் தடுத்து வைத்திருக்கிறார்கள் பிரித்தானிய இமிகிரேஷன் அதிகாரிகள்.அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பவென தடுத்துவைக்கப்படும் நபர்களை இந்த முகாமிற்கே அனுப்புகிறார்கள். குறித்த முகாமில் சுமார் 400 பேர் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமானோர் பெண்கள் ஆவர். இவர்களில் 6 பேர் கர்பினிப் பெண்கள் என்பது திடுக்கிடும் தகவல்.இங்கே பலர் எண்ணில் அடங்காத அளவு தற்கொலை முயற்சிகளுக்கு முயன்றுள்ளார்கள். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க இங்கே காவலாளிகளாக பணிபுரிபவர்கள் பெண்கள் குளிக்கும்வேளை பார்த்து அவர்கள் அறைக்குச் சென்று அவர்கள் குளிப்பததை பார்கிறார்கள். ஆபிரிக்க பெண்களைப் பார்த்து அவர்கள் மிருகம்போன்றவர்கள் என்று தமக்கு தாமே பேசும் காட்சிகள் மற்றும் ஒலி நாடாக்களையும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பெண்கள் குளிக்கும்போது பார்பது அலாதியான ஒருவிடையம் என்றும், அதனை இங்கே தான் இலவசமாகப் பார்கலாம் என்றும் ஒரு காவலாளி மற்றைய காவலாளியோடு உரையாடும் ஒலி நாடாக்களும் வெளியாகி பெரும் அதிர்சியை கிளப்பியுள்ளது. இலங்கையில் மட்டும் பாலியல் கொடுமை நடக்கவில்லை. பிரித்தானியாவில் அவை நடக்கிறது என்பதனை மக்கள் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்கள் சனல் 4 தொலைக்காட்சிக் குழுவினர். இதனால் லண்டன் இமிகிரேஷன் அதிகாரிகள் பெரும் சிக்கலில் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

01 மார்ச் 2015

ஜெசிக்காவை பாராட்டினார் நடிகர் சூர்யா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அகரம் என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி ஜெசிக்கா 2ம் பரிசை தட்டிச்சென்றார். இதில் பரிசாக கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்து அனாதை குழந்தைகளுக்கு கொடுப்பதாக மேடையிலேயே அறிவித்தார். இந்த சிறு வயதிலேயே இவருக்கு இருக்கும் நற்பண்புகளை கண்ட நடிகர் சூர்யா, அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், ஜோதிகா கொடுத்த பரிசுப்பொருட்களையும் ஜெசிக்காவிடம் கொடுத்துள்ளார். சூர்யாவுடனான சந்திப்பின் பிறகு ஜெசிக்கா ‘சூர்யாவை நேரில் சந்தித்த தருணத்தை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது’ என்று கூறியுள்ளார்.