பக்கங்கள்

27 பிப்ரவரி 2022

சிறீலங்காவிற்கு கொத்துக் குண்டுகளை கொடுத்ததா உக்ரெய்ன்?

சிங்களம் வீசிய கொத்துக்குண்டு 
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி மக்களை கொன்று வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது உக்ரைன் நாடு இலங்கை ராணுவத்திற்கு இதே வகை கிளஸ்டர் குண்டுகளை கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் எதிர்த்து நின்று களமாடி வருகின்றனர்.உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதால் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்த நிலையில் சில ராணுவ வீரர்கள், தற்கொலைப் படையாக மாறி ரஷ்யப் படைகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் ரஷ்யப் படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துகின்றன. போர் காரணமாக மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் கிளஸ்டர் பாம் எனப்படும் கொத்துக் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெனீவா உடன்பாட்டின்படி தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள்.​ வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகள்,​​ நாபாம் குண்டுகள் ஆகியவற்றை ரஷ்யா பயன்படுத்தி வருதாகவும் புகார் எழுந்துள்ளது.இதேபோல கிளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை கிளஸ்டர் கொத்துக் குண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைப் போரின்போது சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் இதனை இலங்கை அரசு மறுத்த நிலையில் , இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நாளிதழான தி கார்டியன் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.இந்த நிலையில் இலங்கை இறுதிகட்ட போரின் போது அமெரிக்க கூட்டணியில் இருந்த உக்ரைன் ராணுவம் இலங்கை அரசுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கியதாக முகநூல் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசுக்கு உதவியதன் மூலம் இன அழிப்பில் பங்கெடுத்ததாக உக்ரைன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது உக்ரைன் மீதும் அதே கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுவதாக பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இறுதிக்கட்ட போரின்போது இலங்கைக்கு நேரடியாக ராணுவ உதவி மற்றும் ஆயுத உதவியை உக்ரைன் வழங்கியதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

26 பிப்ரவரி 2022

"இறந்தாலும் ஒன்றாக இறப்போம்"உக்ரெய்னில் துப்பாக்கி ஏந்திய திருமண ஜோடி!

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவே ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது. இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டிய இந்த ஜோடி திருமணமான அடுத்த சில மணிநேரத்தில் நாட்டை பாதுகாக்க கைகளில் துப்பாக்கி ஏந்திய சம்பவம் நடந்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டுமழை பொழிந்து வருகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உலக நாடுகளிடம் உக்ரைன் உதவி கேட்டு வருகிறது. இந்நிலையில் தான் உறவினர்கள் சூழ, அச்சதை தூவி, வாழ்த்து மழையில் நனைந்தபடி இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டிய ஜோடி ஒன்று உக்ரைனில் வெடித்து சிதறும் வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவே திருமணம் செய்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:உக்ரைன் கீவ் நகரை சேர்ந்தவர் யார்னா அரிவா (வயது 21). கீவ் நகர கவுன்சில் துணை தலைவர். சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்விடோஸ்லவ் புரிசின்(24). இவர்கள் 2 பேருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் மே மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ரஷ்யாவின் வால்டை மலையில் பிறந்து ஓடும் டினைபர் ஆற்றங்கரையோரம் உள்ள சொகுசு ரெஸ்டாரண்ட்டில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.இதற்கிடையே தான் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. நேற்று முன்தினம் போர் துவங்கியது. அன்று முதல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் முன்னேறி செல்கின்றன.இந்நிலையில் தான் யார்னா அரிவா. ஸ்விடோஸ்லவ் புரிசின் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. போரின் 2ம் நாளான நேற்று வெடிகுண்டுகள் சத்தங்களுக்கு நடுவே கீவ் நகரில் உள்ள தூய மைக்கேல் தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் இருவரின் குடும்பத்தினர், சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இதுபற்றி யார்னா அரிவா இவர் கூறுகையில், ‛‛உக்ரைனில் நிலவும் சூழல் பயங்கரமானதாக உள்ளது. இது கடினமான காலக்கட்டம். நாங்கள் இறந்தாலும் இறக்கலாம். இதனால் அதற்கு முன்பு இருவரும் சேர வேண்டும் என திருமணம் செய்து கொண்டுள்ளோம். நாங்கள் எங்கள் மக்களையும், நாட்டையும் பாதுகாக்க விரும்புகிறோம் '' என உருக்கமாக கூறினார்,இதையடுத்து இருவரும் கீவ் நகரில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு மையத்துக்கு சென்றனர். நாட்டுக்காக ரஷ்ய படையை எதிர்த்து போரிட உள்ளதாக பெயர்களை பதிவு செய்தனர். அதன்பிறகு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை துவக்கினர். இதன்மூலம் திருமணம் முடிந்த கையோடு கையில் துப்பாக்கி ஏந்தி ரஷ்யாவை எதிர்த்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்தோடு, பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.மேலும், ‛‛ரஷ்யா போர் நடவடிக்கையை கைவிடும்போது நாடு இயல்பு நிலைக்கு வரும். ரஷ்ய வீரர்கள் இல்லாத உக்ரைன் நாட்டில் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை துவங்குவர். இது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது அனைவரையும் அழைத்து எங்கள் திருமண விழாவை கொண்டாடுவோம்'' என துப்பாக்கி ஏந்திய கையோடு யார்னா அரிவா-ஸ்விடோஸ்லவ் புரிசின் ஜோடி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.