பக்கங்கள்

19 ஜூலை 2019

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனந்தி சசிதரன் சந்திப்பு

வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பிற்கு மாற்றாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அனந்தி சசிதரன் மற்றும் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் தலைமையிலான கட்சி அல்லது அமைப்புக்களும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சரின் புதிய மாற்று அணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை இணைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அந்தக் கட்சியை இணைத்துக் கொண்டால் தாம் அந்தக் கூட்டுக்கு வரப்போவதில்லை எனவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இதனால் புதிய அணி அமைப்பது தொடர்பான பேச்சுக்கள் பெரும் இழுபறிகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலைமையிலையே சுயாட்சிக் கழகத்தின் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் திடீரென நேற்று பேச்சுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய கூட்டு அமைப்பது தொடர்பான இந்தச் சந்திப்பானது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி தொடர்பில் அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசப்பட்டிருக்கலாம் என இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

07 ஜூலை 2019

புலிகள் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை!

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். மாறிவரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான க.துளசி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், இலங்கையின் தென் பகுதியில் அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்பின் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்பு பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக க.துளசி குறிப்பிடுகின்றார். இந்தியாவின் தலையீட்டில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாட்டு நடைமுறைகள் மற்றும் புரையோடிப் போயிருக்கின்ற தமிழர்களின் இனப் பிரச்சனைகளுக்கான தீர்வு ஆகியன குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் குறுக்கிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், இந்த விடயத்தை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ்