பக்கங்கள்

28 பிப்ரவரி 2011

அன்னைக்கு அஞ்சலியும்,சிங்களத்துக்கு கண்டனமும்!

உலக தமிழினத்தின் தாயாக இருந்தவர் பார்வதி அம்மாள். இவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் உறவினர்களிடமும் சிகிச்சைக்காக அனுப்பாமல் வீட்டில் சிறை வைத்திருந்த இலங்கை அரசு, இப்போது அவரது இறப்பிலும் கூட மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது.
இறுதி அஞ்சலிக்காக தமிழகத்தில் இருந்து சென்ற திருமாவளவனை கொடுங்கோல் ஆட்சி இலங்கை திருப்பி அனுப்பிய பிறகு, தாயாரின் சடலம் எரியூட்டப்பட்ட பிறகு அங்கு தெருவில் திரிந்த நாய்களை கொன்று தாயார் பார்வதியம்மாளை எரித்த இடத்தில் எரித்துள்ளனர் சிங்கள ராணுவத்தினர்.
தொடர்ந்து இதுபோல அவமரியாதை செயல்களில் ஈடுபடும் ராஜபக்சேவை கண்டித்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மாற்று செயலணி மற்றும் தமிழ் உணர்வாளர்களை இணைத்து கண்டன பேரணி நடத்தி ஐநா அலுவலகம் மற்றும் இலங்கை தூதரகத்தில் மனு கொடுப்பதுடன்,
பார்வதி அம்மாளுக்கான கண்ணீர் அஞ்சலி கூட்டமும், இலங்கை அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நாளை மறுநாள் 2.3.2011அன்று நடைபெறும் என்று மாற்று செயலணி தலைவர் கலைவாணர் அறிவித்துள்ளார்.

பிரிகேடியர் தமிழ்செல்வனின் தூபிக்கு பிரான்சில் கெளரவம்!

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவு சின்னத்திற்கு கட்சி சார்பின்றி பிரான்சு நாட்டு La Courneuve மாநகர் ஆட்சி அதிபர், La Courneuve நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச சபை தலைவர்,
மாநகரசபை உறுப்பினர்கள் என்று பலர் இன்று தமிழ்செல்வன் நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்தியதோடு, இதுவரை காலமும் சிறிலங்கா அரசு கொடுத்த அழுத்தங்கள், பொய் பிரசாரங்களையும் மீறி இன்று அந்த நினைவு சின்னம் தமிழ்ச்செல்வனின் நிரந்தர சிரித்த முகத்துடன் கம்பீரமாக நிற்கிறது.

27 பிப்ரவரி 2011

ஊர்காவற்றுறையில் ஈ,பி,டி,பி,முக்கியஸ்தர் கைது!

யாழ். தீவகப்பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் கடந்த 24 ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் உருக்குலைந்து சிதைந்த சடலம் மீட்கப்பட்டது தெடர்பாக ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் ஊர்காவற்துறையில் மேற்கொண்ட இரகசிய விசாரணைகளில் ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் எனத்தெரியவருகின்றது
விசாரணைகளின் பின்பு சந்தேக நபர் நாளை திங்கள் கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

கே,பியை வைத்து சிங்களம் நடத்தும் நாடகம்!

சிறீலங்கா அரசுக்கு எதிரான மேற்குலகத்தின் போக்குகளை மாற்றியமைக்கும் பணியை சிறீலங்கா அரசு குமரன் பத்மநாதனிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்கா அரசுக்கும் – மேற்குலகத்திற்கும் இடையிலான கசப்புணர்வை நீக்கி போர்க்குற்றங்களில் இருந்து சிறீலங்கா அரசை விடுவிக்கும் பொறுப்பை சிறீலங்கா அரசு குமரன் பத்மநாதனிடம் ஒப்படைத்துள்ளது.
இது தொடர்பான கூட்டங்கள் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளன. புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவும், இராஜதந்திரிகளை சந்திப்பதற்குமான கூட்டங்களை பத்மநாதன் மூலம் சிறீலங்கா அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அரச தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்குலகத்தின் போக்குகளை மாற்றவும், சிறீலங்காவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியை பெற்றுக்கொள்ளவும் சிறீலங்கா அரசு இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
கூட்டங்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகளில் உள்ள சிறீலங்கா தூதரகங்கள் முன்னெடுத்துள்ளன.
குமரன் பத்மநாதனின் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவரே தலைமைதாங்கவுள்ளார். அதற்கான பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன. சிறீலங்கா அல்லது நடுநிலையான நாடு ஒன்றில் முக்கிய கூட்டத்தை நடத்தும் திட்டம் தொடர்பிலும் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயம், சிறீலங்கா அரசு மற்றும் பத்மநாதனின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக தமிழத் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறவும் சிறீலங்கா அரசு முயன்று வருவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

ஐ,நாவின் மனித உரிமை பேரவை அமர்வுகளில் கிருபாகரன் உரைநிகழ்த்துகிறார்!

ஜெனீவாவில் நாளை (28) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக் கவுன்சில் தொடர்பான அமர்வின் போது இலங்கைக்கெதிரான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் சந்தர்ப்பம் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்டர் பெய்த் இன்டர்நெஷனல் மற்றும் தமிழர் மனித உரிமைக் கவுன்சில் என்பவற்றின் தலைவரான விஸ்வலிங்கம் கிருபாகரனுக்கே அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. மனித உரிமைக்கவுன்சில் அமர்வின் போது அவர் இலங்கைக்கு எதிரான ஆதாரங்களை முன் வைக்கவுள்ளார்.
இச்செய்தி கேள்விப்பட்டவுடன் அவர் விடுதலைப் புலிகளின் அபிமானி என்று குற்றம் சாட்டி அரசாங்கம் அவரது குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
கனேடிய உளவுத்துறையும் அவர் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்று பட்டியலிட்டுள்ளது. அவ்வளவையும் மீறி நாளை அவர் மனித உரிமைக் கவுன்சில் பேரமர்வில் உரையாற்ற உள்ளார்.

26 பிப்ரவரி 2011

சுவிசில் தனது பிள்ளைகளையே கத்தியால் குத்திய இலங்கைத்தாய்!

சுவிற்சலாந்தின் Pratteln நகரத்தில் வசித்து வரும் இலங்கையரான 35 வயதுத் தாய் ஒருவர் தனது குழந்தைகளை கடந்த வியாழக்கிழமை காலை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி உள்ளார். பெண் பிள்ளைகளான இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகும் நேரத்தில் தகப்பனார் வீட்டில் இல்லை.வீட்டில் நின்ற அம்மம்மா பேரப் பிள்ளைகளை கத்திக் குத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது கத்திக் குத்துக்கு இலக்கானார் என தெரிவிக்கப்படுகிறது.
பின்பு அவர் தனது உடலிலும் கத்தியால் மாறி மாறிக் குத்திப் படுகாயப்படுத்திக் கொண்டுள்ளார் .
காயமடைந்த மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் ஆனால் ஆபத்துக்கள் நேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தகராறுக்கு என்ன காரணம் என்பது இன்னமும் வெளிவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.

52,000 கையொப்பம் ஐ,நாவிடம் கையளிப்பு!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி 52,000 மக்கள் கையொப்பமிட்டுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த மே மாதம் உலகளாவிய ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது. கடந்த 26 வருடங்களாக நடைபெற்ற போரில் இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அது தெரிவித்திருந்தது.
தனது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக மக்களிடம் இருந்து கையெழுத்துக்களையும் அது சேகரித்து வந்திருந்தது. தற்போது 52,000 கையெழுத்துக்களை சேர்ந்துள்ள நிலையில் அதனை கடந்த செவ்வாய்க்கிழமை (22) ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு ஆலோசனைக்குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (22) அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறீலங்கா விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜேலந்தா பொஸ்ரர் மற்றும் வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் ஆகியோருடன் மேலும் சிலர் ஐ.நா அலுவலகத்திற்கு சென்று பொதுமக்கள் கையொப்பமிட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு திருமலையில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் தந்தையே மனோகரன். தமது விண்ணப்பம் தொடர்பில் ஐ.நா விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும், உரிய விசாரணைக்குழு அமைக்கப்படும் வரையில் தமது நடவடிக்கை தொடரும் என அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் ஐ.நா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அனைத்துலக மன்னிப்புச்சபையின் இந்த கோரிக்கையில் இதுவரை அமெரிக்கா இணையவில்லை என்பதால், அவர்களிடம் கோரிக்கை விடுக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனுக்கு கடிதங்களை எழுதுமாறு தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் ஓயப்போவதில்லை என வைத்தியர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

25 பிப்ரவரி 2011

கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை குழிதோண்டி புதைத்த தாய்!

பிறந்த உடனே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் நேற்று காலை கோப்பாய் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்டது. சிசுவின் தாய் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். மேலும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கோப்பாய் வடக்கில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைக் கப்பட்டிருந்த 28 வார சிசுவின் சட லமே மீட்டெடுக்கப்பட்டது. யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு இறந்த நிலையில் பிறந்த சிசுவை வீட்டின் பின்புறம் புதைத்ததாக அதன் தாய் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சிசுவின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரசவத்தின் பின்னர் சிகிச்சைக்காக தாயார் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. சிசுவின் சடலம் மீட்கப்பட்ட வீட்டில் தீவிர விசாரணைகளை நடத்திய நீதிவான், சிசுவைப் பிரசவித்த போது தாயார் பயன்படுத்திய இரத்தக்கறை படிந்த உடைகள் மற்றும் மருந்துக் குளிகைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி மன்றுக்கு அறிக்கை வழங்க உத்தரவிட்டார். சிசுவின் சடலத்தைப் புதைத்தவர் என்று கூறப்படும் ஆண் மற்றும் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர்களான கணவன் மனைவி ஆகியோரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தாயை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
சிசுவைப் பெற்றெடுத்த தாயின் மற்றொரு மகளான சிறுமியை சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் ஒப்படைத்து சிறுவர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் விசாரணையில் சம்பவம் பற்றித் தெரிய வந்ததாவது: இணுவிலில் வசித்து வந்த உதயகுமாரி என்ற 42 வயதுடைய பெண், கடந்த 18ஆம் திகதி தொடக்கம் கோப்பாய் வடக்கு புதிய சந்தைக்கு அருகிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். சுந்தரலிங்கம் என்பவர் 3 வருடம் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். நேற்று முன்தினம் 23ஆம் திகதி நள்ளிரவு வேளை அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையை அவருடன் தங்கியிருந்த நபர் வீட்டின் பின்புறம் நிலத்தில் புதைத்துள்ளார்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு சென்ற குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். நீதிவானுக்குத் தகவலையும் வழங்கினர். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சந்தேக நபரான பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது. நான் எனது கணவர் அல்லாத ஒருவருடன் தற்பொழுது வசித்து வருகின்றேன். கர்ப்பம் தரிப்பதனைத் தடுப்பதற்காக கல்வியங்காடு சந்தியிலுள்ள சிகிச்சை நிலையம் ஒன்றில் கர்ப்பத்தடை சிகிச்சை செய்து கொண்டேன். எனினும் எப்படியோ கர்ப்பம் தரித்து விட்டேன். அதனால் வேறு இடத்தில் கர்ப்பத்தைக் கலைக்க முயன்றேன். நேற்றுமுன்தினம் தீடீரென நள்ளிரவு வேளை வயிற்றுக்குத்து ஏற்பட்டு குறைமாதமாக சிசு இறந்த நிலையில் பிறந்தது. என்னுடன் தங்கியிருந்தவர் அந்தச் சிசுவை புதைத்தார். இப்படி அவர் தனது வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். கோப்பாய் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன.

பஷில் கலந்து கொள்ளும் நிகழ்வில் த,தே,கூட்டமைப்பும் பங்குபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ச கலந்து கொண்டுள்ள நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பங்குகொண்டிருப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள தேசிய வியாபார முகாமை நிலையத்தில் இந் நிகழ்வு நடைபெறுகின்றது.
பசில் ராஜபக்ச பங்கு கொண்டுள்ள இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பசில் ராஜபக்ச இன்று கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய கட்டடத்தினையும் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

24 பிப்ரவரி 2011

லிபிய மக்களை கொல்ல ஸ்ரீலங்கா கடாபிக்கு உதவக்கூடும்!

இலங்கை இராணுவத்தினரின் தற்கால செயற்பாடுகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் தீவிர கண்காணிப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல்கள் கசிந்துள்ளன.லிபியாவில் நடைபெறும் உள்நாட்டுக் கிளர்ச்சியை அடக்க விமானங்கள் மூலம் குண்டு வீசுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற போதிலும் அதற்கு லிபிய வான்படை விமானிகள் யாரும் ஒத்துழைப்பதாக இல்லை.
அதன் காரணமாக அப்பணியில் ஈடுபடுத்தக் கூடிய வெளிநாடுகளின் விமானப்படை விமானிகளை வாடகைக்குப் பெறுவது தொடர்பில் லிபியத் தலைவர் கடாபி கவனம் செலுத்தியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
அதன் காரணமாக அவ்வாறான பணிகளில் ஈடுபட்டு அனுபவம் வாய்ந்தவர்கள் என்ற வகையிலும், லிபியாவின் நட்பு நாடு என்ற வகையிலும் இலங்கை விமானிகள் அங்கு அனுப்பப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
அவ்வாறு லிபிய உள்நாட்டுக் கலகத்தை அடக்க இலங்கை விமானிகள் அனுப்பப்படும் பட்சத்தில் அதற்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்க அரசாங்கம் முன்கூட்டிய ஆயத்த நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊர்காவற்றுறையில் பெண்ணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் தீவகப்பகுதியிலுள்ள ஊர்காவற்துறையில் இராணுவக் காவலரணுக்கு அண்மையிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் உருக்குலைந்து சிதைந்த சடலத்தை இன்று வியாழக்கிழமை காலை அப்பகுதி இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.சடலம் துர்நாற்றம் வீசியதினால் அப்பகுதி மக்கள் இராணுவத்தினருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையியே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதூக யாழ்.ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண்பதற்காக யாழ்.ஊர்காவற்துறை அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சடலத்தில் வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக யாழ்.ஊர்காவற்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 பிப்ரவரி 2011

பல்கலை மாணவர்கள் இரண்டாவது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பு!

பார்வதி அம்மாளின் மரணச் டங்கில் கலந்து கொள்ள பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டனர் என்று குற்றஞ்சாட்டி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். .
வகுப்புக்களை முழுமையாக பகிஷ்கரித்தனர். மதியம் 1.00 மணி வரை பல்கலைக்கழக முன்றலில் கூடி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கண்டன பதாகைகளை தொங்க விட்டு இருந்தனர். ஆயினும் இக்குற்றச்சாட்டை பொலிஸ் பேச்சாளர் முற்றாக நிராகரித்து உள்ளார்.

தமிழ் மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்டு விடவில்லை!

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அரசாங்கம் கூறுவதுபோல் முடிவடையவில்லை. அது உலக நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் ஈழத்தமிழ் மக்களின் தலை மகனுமான வே. பிரபாகரனின் செயலாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளின் இறுதி அஞ்சலி நிகழ்வு வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் நடைபெற்றபோது அஞ்சலி உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதாகவோ, ஒதுக்கப்பட்டதாகவோ இலங்கை அரசாங்கமும் அதனோடு இணைந்தவர்களும் கூறிக்கொள்வது பகல் கனவு காண்பதைப் போலாகும். கடந்த சில வாரங்கள் குடாநாட்டில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.
இதனைக் காரணங்காட்டி வீதிக்கு வீதி இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததாகக் கூறும் அரசாங்கம் தலைவர் பிரபாகரனின் தாயாரின் இறுதி நிகழ்வின்போது கலந்து கொள்பவர்களுக்கு பல சிரமங்களைக் கொடுத்து வருகிறது. 81வயதுடையவரின் மரணச்சடங்கு கூட அவர்களுக்கு புளியைக் கரைத்துள்ளது. தமிழ் மக்களது போராட்டம் முடிந்துவிடவில்லை.
எந்த அரசாங்கம் வந்தாலும் அடக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாப் பகுதியிலுமிருந்து கிளர்ச்சி ஏற்படும். தலைவர் பிரபாகரனின் தாயாரது இறுதி அஞ்சலி நடைபெறும் இடமானது வீரம் செறிந்த மண். தலைவரின் தாய் தந்தையர்கள் அமரர்கள் வேலுப்பிள்ளை, பார்வதியம்மா ஆகியோரின் மூச்சு இந்தக் காற்றில் கலந்துள்ளது. பல மாற்றங்களை உருவாக்கிய இம் மண் அடுத்தக் கட்ட போராட்டத்தின் கால்கோளாக இது இருக்கும் எனத் தெரிவித்தார்.

22 பிப்ரவரி 2011

நள்ளிரவில் வீடொன்றினுள் புகுந்த காமுகன்!

யாழ் உரும்பிராய் செல்வபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் உட்புகுந்த வாலிபர் ஒருவர் குடும்பப் பெண் ஒருவரை கடத்தி வல்லுறவு புரிய முனைந்ததாக தெரிக்கப்படுகிறது. குறித்த வாலிபர் வீடினுள் புகுந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த குடும்பப் பெண் ஒருவரை தூக்கிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்பெண் இட்ட கூக்குரலால் விழித்துக்கொண்ட கணவர் வெளியே ஓடிவந்து, அயலவர் உதவியோடு அவரை மடக்கிப் பிடித்துள்ளார்,பின்னர் அவரை ஊர் மக்கள் நையப்புடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. குறித்த வாலிபர் மதுபோதையில் இருந்தாரா இல்லை வேண்டும் என்று அவ்வாறு செய்தாரா எனத் தெரியவில்லை என்கின்றனர் ஊரார்.
பின்னர் காலை அவர் கோப்பாய் பொலீஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கே கையளிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை யாழ் நீதிமன்றில் கோப்பாய் பொலிசார் ஆஜர் படுத்தியுள்ளனர். அவரை 2 வாரம் காவலில் வைத்து விசாரிக்க யாழ் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இளவாலையில் உடலம் மீட்பு!

யாழ். இளவாலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடைய சடலம் வயல் வெளி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இளவாலை என்ற முகவரி உடைய காந்தன் (வயது 40) என்பவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளதாக எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அவருடைய சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையை வைத்தே அவரது பெயர் இனங்காணப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரவில்லை. கடந்த சில வாரமாக யாழ்ப்பாணத்தில் உயிரிழப்புக்கள் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழ்வதற்கு தகுதியற்ற மோசமான நகர் கொழும்பு!

உலகின் மிக மோசமான நகரங்களின் பட்டியலில் கொழும்பின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொருளியல் புலனாய்வுப் பிரிவு என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உலகில் வாழ்வதற்கு பொருத்தமற்ற முதல் பத்து நகரங்களில் கொழும்பின் பெயரும் பட்டியலிடப்பட்டுள்ளது.
சிம்பாப்வேயின் ஹராரே, பங்களாதேஷின் டாக்கா, பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்சபி, நைஜீரியாவின் லாகோஸ், அல்ஜீரியாவின் அல்ஜியஸ், பாகிஸ்தானின் கராச்சி, கெமரூனின் டாவுலா, ஈரானின் தெஹ்ரான், செனகலின் டாக்கர் மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்கள் வரிசைக் கிரமமாக வாழ்வதற்கு மோசமான நாடுகளாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.
எக்கனோமிஸ்ட் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான நகரமாக கனடாவின் வான்குவார் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன், ஒஸ்ட்ரியாவின் வியன்னா, கனடாவின் ரொரன்டோ, கனடாவின் கல்கரி, பின்லாந்தின் ஹெல்ஸ்ன்கி, அவுஸ்திரேலியாவின் சிட்னி, பேர்த், அடிலெய்ட் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லாண்ட் ஆகிய நகரங்கள் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரம், கலாச்சாரம், சுற்றாடல், கல்வி, தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட 30 காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பொருளாதாரம் வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கை உலகில் எட்டாம் நிலையை வகிப்பதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு நகர அபிவிருத்தி சபையை தற்போது பாதுகாப்பு அமைச்சு நிர்வாகம் செய்து வருவதாகவும், நகரத்தை அழகுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

யாழ்,பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த பொலிஸ்!

வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வில் பங்கெடுப்பதற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தயாராவதாக வெளியாகிய தகவலை அடுத்து யாழ்.பல்கலைக்கழக வளாகம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறை தீருவிலில் மறைந்த வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன. இந்நிகழ்வில் பங்கு கொள்வதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் தயாராகியிருக்கின்றது.
இதேவேளை இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக பார்வதி அம்மாளின் நினைவு தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

21 பிப்ரவரி 2011

தடைகளையும் மீறி அன்னைக்கு மக்கள் அஞ்சலி!

பார்வதி அம்மாவின் மரணச் செய்தி வெளியானதையடுத்து யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சோகமயமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறைப் பகுதியில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திவருக்கின்றார்கள்.
இராணுவம் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பார்வதி அம்பாவின் உடலுக்கு பெருந்தொகையான மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். வல்வெட்டித்துறைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கறுப்புக்கொடிகரள அகற்றுமாறு படையினர் எச்சரித்துள்ள போதிலும் பெருமளவு கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு வல்வெட்டித்துறை சோகமயமாகக் காணப்படுகின்றது.
தீருவில் திடலில் மக்களின் அஞ்சலிக்காக பார்வதி அம்மாவின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பெருமளவு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிவில் உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கறுப்புக்கொடிகளை அகற்றுமாறு படையினர் நிர்ப்பந்திக்கின்ற போதிலும், பொதுமக்கள் அதற்கு மறுத்துவருவதால் அப்பகுதியில் பதற்றநிலை காணப்படுகின்றது.
அதேவேளையில், பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகளில் காணப்படும் பிரபாகரனின் பெயரை அகற்றிவிடுமாறும் படையினர் பொதுமக்களை நிர்பந்திப்பகதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களைத் துன்புறுத்தும் வகையிலான இவ்வாறான நடவடிக்கைகளை படையினர் தொடர்ந்தால் பாதகமான விளைவுகளை படையினர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என வல்வெட்டித்துறை சிவில் சமூக அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்கிழமை காலை இடம்பெறும் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பிரமாண்டமான முறையில் நாளை அன்னையின் இறுதி நிகழ்வுகள்!

நேற்றய தினம் அதிகாலை இயற்கை எய்திய ஈழத்தாய் பார்வதியம்மாளின் பூதவுடல் தீருவில் சதுக்கத்தில் நேற்று மாலை 5 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஊர்மக்கள் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி செலுத்தியவண்ணமிருந்தனர். பேரன்னையின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளன இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 5மணி வரை தீருவிலில் அன்னை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நாளை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 4 மணிக்கு தகனத்துக்காக எடுத்துச்செல்லப்படும்.
ஈழத்தாய் பார்வதியம்மாளின் பூதவுடலுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், யாழ். மாநகரசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கூட்டமைப்புப் பிரமுகர் பிருந்தா மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட பலரும் நேற்றயதினம் அஞ்சலி செலுத்தினர்.
பார்வதி அம்மாளின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இலங்கை வருகிறார் .
திருமாவளவன் ஏற்கனவே ஒரு தடவை வல்வெட்டித் துறைக்கு வருகை தந்து பார்வதி அம்மாளைச் சந்தித்து அவரது நலன் குறித்து விவரமறிந்து சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கறுப்புக் கொடிகளைக் கட்டவோ அஞ்சலி செலுத்தும் சுவரொட்டிகளில் தேசியத் தலைவர் பிரபாகரனின் பெயரைப் பாவிக்கவோ வேண்டாமென இராணுவத்தினர் கடுமையாக உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் இராணுவத்தினரின் உத்தரவையும் மீறி, மக்கள் வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டுள்ளதோடு சில இடங்களில் கைகளால் எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.மேற்படி அஞ்சலி சுவரொட்டிகளை இராணுவத்தினர் இளைஞர்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.

தமிழக மீனவர்களை மிரட்டிய டக்ளஸ்!

இலங்கை மீனவர்களும்,இலங்கைக் கடற்படையினரும் கூட்டாக சேர்ந்தே தமிழக மீனவர்களைக் கைது செய்தனர் என இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாகை திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.
நாகை,காரைக்கால்,புதுக்கோட்டை, இராமேசு வரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்டனர்.
மத்திய,மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர முயற்சியால் தமிழக மீன வர்களை இலங்கை கடந்த வெள்ளிக்கிழமை விடுவித்தது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை காலை நாகை துறைமுகப் பகுதிக்கு வந்தனர்.அப்போது மீனவர்கள் இலங்கையில் தாங்கள் சிறைப்பிடிக்கப்பட்டது குறித்துக் கூறினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வரை இலங்கை மீனவர்களும்,இலங்கைக் கடற்படையினரும் தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கத் தொடர்ந்து ரோந்து வந்து கொண்டிருந்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களே தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டு, கற்கள் ஆகியவற்றை வீசித்தாக்கினர். இலங்கை மீனவர்கள் அழைத்ததும் அவர்களுடன் சென்ற தமிழக மீனவர்கள் தாக் கப்படவில்லை.
அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றவர்கள் மீதே இலங்கை மீனவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை மீனவர்களுக்கு பாதுகாப்பாக இலங்கைக் கடற்படை யினர் செயல்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் வடமராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை காவல் நிலை யத்துக்குக் கொண்டு சென்றனர்.
புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காவல் நிலையத்துக்கு வந்து மீனவர்களைச் சந்தித்தார். அப்போது நீங்கள் எல்லை தாண்டி வந்தது தவறுதானே என்றார். மறுத்துப் பேச முடியாத நிலையில் நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதே கேள்வி,நீதி மன்றத்திலும் கேட்கப்பட்டது அங்கும் ஒப்புக்கொண்டோம்.
தமிழக மீனவர்களின் படகுகளிலிருந்து ஜி.பி.எஸ் கருவிகளையும், மீன்களையும் இலங்கை மீனவர்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் ஒவ்வொரு படகுக்கும் சுமார் ரூ 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டது என அவர்கள் தெரிவித்தனர்.

20 பிப்ரவரி 2011

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அன்னைக்கு அஞ்சலி!

தலைவர் வே.பிரபாகரன் அவர்களது தயார் அன்னை வேலுப்பிள்ளை பார்வதிஅம்மா அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20-02-2011) அன்று எம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அவரது பிரிவுச் செய்தி உலகத் தமிழ் மக்களை ஆறாத் துயரில் ஆழ்தியுள்ளது. அன்னையின் பிரிவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
அடிமை வாழ்வில் சிக்கியிருந்த தமிழ் மக்கள் அடிமை வாழ்வு நீங்கி சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக அன்னையின் மகன் தன்னை அற்பணித்தார். அதனால் அவர் தனது தாய்க்குரிய கடமைகளை ஆற்ற முடியவில்லை. அவரது சகோதரர்களும் தமது தாய்க்குரிய கடமைகளை ஆற்ற முடியாத நிலையிலுள்ளனர்.
இந்நிலையில் அன்னைக்குரிய கடமைகளை ஆற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. தமிழ்த் தேசத்து மக்கள் அனைவரும் தங்களது அன்னையாகக் கருதி பார்வதி அம்மாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அன்னைக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்.

பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்!

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் இன்று உயிரிழந்துள்ளார்.பிரபல பின்னணிப்பாடகரான மலேசியா வாசுதேவன் கடந்த 25 ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த்திரைப் பாடல்களைப்பாடியுள்ளார். ‘’பூங்காற்று திரும்புமா.. என் பாட்டை விரும்புமா’’, ‘’ஆசை நூறு வகை வாழ்வின் நூறு சுவை’’ என்று ஏராளமாக பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.மேலும் இவர் முதல் வசந்தம், ஊமை விழிகள், திருடா திருடா உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராக இருந்தார்.
களத்தில் கேட்கும் கானங்கள் இசைநாடாவில் இடம்பெற்ற நடடா ராஜா மயிலக்காளை என்ற பாடல் உட்பட்ட பெருமளவான ஈழவிடுதலை எழுச்சிப் பாடல்களையும் பாடியுள்ளார்.
இவரது மகன் யுகேந்திரன், பின்னணிப்பாடகராகவும், நடிகராகவும் இருக்கிறார். இவரது மகள் பிரசாந்தினி பின்னணிப்பாடகராக உள்ளார்.
சமீபகாலமாக மலேசியாவாசுதேவன் உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருந்தார். தன்னால் வளர்ந்தவர்களும், திரையுலக நண்பர்களும் தன்னை வந்து நலம் விசாரிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் இன்று பகல் 1 மணிக்கு மலேசியா வாசுதேவன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஈழத்தாயின் இறுதி வணக்க நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை!

இன்று மறைந்த தமிழீழத் தேசியத்தலைவரின் தாயாரான பார்வதியம்மாவின் இறுதிக்கிரியைகள் ஈழமக்களின் அஞ்சலிகளின் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரான பார்வதியம்மாளின் இறுதிக்கிரியை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வல்வெட்டித்துறை பொதுமயானத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 10.30 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக தீருவில் மைதானத்தில் இவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு வல்வெட்டித்துறை, ஆலடி ஒழுங்கையிலுள்ள அவரது மகளின் வீட்டில் பூதவுடல் வைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை ஊரணி பொதுமயானத்தில் மாலை 4 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பூவுடல் தகனம் செய்யப்படுமெனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பல்வேறு இடங்களிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஈழத்தாயின் பூவுடல் ஊரணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பெருமளவான பொதுமக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பகுதியில் துக்கம் அனுஷ்டித்து கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.

19 பிப்ரவரி 2011

வடமராட்சி மீனவர்களை சந்தித்த படையதிகாரி!

யாழ்.வடமராட்சி மீனவர்களுக்கும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஹதுரசிங்க மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று யாழ்.அரச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இன்று நண்பகல் நடைபெற்ற இச் சந்திப்பில் மீனவப்பிரநிதிகள் தாம் எதிர்கொண்டு வருகின்ற அன்றாட நெருக்கடிகள், இந்திய மீனவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் நிலை என்பன குறித்து விரிவாக விளக்கமளித்து தமக்கு இவற்றில் இருந்து தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த இராணுவத்தளபதி கடல் சார்ந்த விடயங்கள் தமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியை சேர்ந்த பலர் ஐ.தே.கட்சி பக்கம் தாவ தயார் நிலையில்!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத்தரப்பினர் ஜனாதிபதியை எச்சரித்துள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின் போது ஆளும் கட்சியின் வாக்கு வீதத்தில் சரிவு ஏற்படுமிடத்து குறைந்தபட்சம் பத்துக்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தாவும் உத்தேசத்துடன் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசுபக்கம் தாவிய சிலருக்கு மீண்டும் தமது பழைய கட்சிக்கே திரும்பிவிடுவது குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
அரசாங்கத்தின் உயர்மட்டமுக்கியஸ்தர்கள் செல்வாக்கிழந்து வருகின்றமை, கட்சிக்காகப் பாடுபட்டவர்களைவிட ராஜபக்ச குடும்பத்தினருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை என்பன போன்ற செயற்பாடுகளே ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியிருப்ப தாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரஸ்தாப அறிக்கை கிடைத்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள அமைச்சர்களைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, உள்ளூராட்சித் தேர்தலின்பின் அவர்களுக்கு முக்கியத்துவம் மிக்க அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதாக வாக்களித்துள்ளதாகவும் அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 பிப்ரவரி 2011

இந்தியாவின் காலக்கெடுவிற்கு அடிபணிந்தது ஸ்ரீலங்கா!

வட பகுதிக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 136 இந்திய மீனவர்களும் இன்று திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டு அடுத்தடுத்த நாட்களில் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்படுவர் என முன்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று மாலை இந்தியாவிற்கு அழைத்து செல்லப்பட்டு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, சிறை வைக்கப்பட்டு இரண்டு நாட்களில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிருப்தி அளிப்பதாக பருத்தித்துறை மற்றும் மாதகல் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கள நடிகை பாலியல் வல்லுறவின் பின் படுகொலை!

படுகொலை செய்யப்பட்ட பிரபல சிங்கள நடிகை வினு வெத்தமுனி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ரசாயனப் பகுப்பாய்வாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அவருடைய படுக்கையின் கீழ் பயன்படுத்தப்பட்ட ஆறு ஆணுறைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் கைப்பற்றப்பட்டிருப்பதே பிரஸ்தாப சந்தேகத்திற்கான காரணம் என்று அறிய முடிகின்றது.
அதுவும் தவிர நடிகையின் இரகசிய பிரதேசத்தில் ஒருவகையான திரவம் தடவப்பட்டிருந்தமை பிரேத பரிசோதனையின் போது சட்ட வைத்திய அதிகாரியினால் அவதானிக்கப்பட்டிருந்தது. அதே திரவம் கண்டெடுக்கப்பட்ட ஆணுறைகளிலும் காணப்பட்டது.
அதன் காரணமாக அவரைச் சந்திக்க வந்த இரண்டு மர்ம நபர்களாலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆயினும் அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருந்தமையே மரணத்திற்கான காரணம் என்பதும் பிரேத பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வாளரின் பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

17 பிப்ரவரி 2011

வன்னி யுத்தத்தில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது!

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்றன என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழு ஒன்று கண்டுபிடித்து உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை இல்லாமல் ஒழிக்கும் ஆணைக்குழு இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்து இலங்கை முறையாக விசாரணை நடத்துவதுடன் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கோரி உள்ளது.
இப்பொறுப்பை இலங்கை தட்டிக் கழிக்க முடியாது என்றும் இது தெரிவித்து உள்ளது.

தி.மு.க.வின் ஏமாற்று வேலை!

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி திமுக நடத்திய ஆர்ப்பாட்டம், தமிழர்களையும், மீனவர்களையும் ஏமாற்றும் வேலை என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. இதை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி,
மீனவர்களின் அவலம் குறித்து, தி.மு.க. சார்பில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது வேடிக்கையாக இருக்கிறது. 2004 ம் ஆண்டில் இருந்து 7 வது ஆண்டாக மத்திய ஆட்சியில் பங்கு வகிக்கும் தி.மு.க., இவர்கள் வேறு, அரசு அதிகாரம் வேறு என்பது போல் போராட்டம் நடத்துகிறார்கள். இது, தமிழர்களையும், மீனவர்களையும் ஏமாற்றும் வேலை ஆகும் என்றார்.

16 பிப்ரவரி 2011

எகிப்தைப்போன்று இங்கேயும் யாராவது கிளர்ச்சிக்கு முயன்றால் எனது கைத்துப்பாக்கிதான் பதில் சொல்லும்!

எகிப்தைப் போன்று இலங்கையிலும் ஆட்சிமாற்றம் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்த முயன்றால் எனது கைத்துப்பாக்கிதான் அவர்களுக்குப் பதில் சொல்லும் என்று அமைச்சர் மோ்வின் சில்வா பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டு இலங்கையில் ஆட்சிமாற்றம் கோரி யாராவது ஆர்ப்பாட்டங்கள் நடாத்த முயன்றால் தனது கைத்துப்பாக்கியின் குண்டுக்கு அவர்கள் பலியாக நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் தேவைக்கும் அதிகமாக ஜனநாயகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், பேரணிகள் நடாத்த, அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க, வேலை நிறுத்தங்களில் ஈடுபட, அரசாங்கத்தை விமர்சிக்க என அனைத்து வகையான சுதந்திரமும் இருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.
அப்படியான சூழ்நிலையில் அதற்கு மேலதிகமாக வேறு என்னதான் தேவை என்று கேள்வியெழுப்பிய அவர், அரசாங்கத்துக்கு எதிராக சதிசெய்ய முயன்றால் முதலாவது குண்டு தனது கைத்துப்பாக்கியிலிருந்தே தீர்க்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

கருணாநிதி கனிமொழி கூட்டுத்தயாரிப்பில் "இலங்கை தூதரகம்".

இந்திய மீனவர்கள் கைதால் இலங்கை தூதரகம் முற்றுகை! கனிமொழி கைது! இந்தவருட சிறந்த நடிகைக்கான விருதை எதிர்பார்க்கிறாராம்
இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, காரைக்கால் மீனவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருவதுடன், இலங்கை தூதரகத்தின் முன் திராவிட முன்னேற்ற கழகத்தினர் இன்று போராட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
யாழ்.வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு 112 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் கரைக்கு அழைத்துவரப்பட்டதை அடுத்து பருத்தித்துறை பொலிஸார் அவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற திமுக எம்பி கனிமொழி உள்ளி்ட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் ‌தொடர்கதையாகி வருவதை கண்டித்து, மாநிலம் முழுவதும் திமுகவினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர். இதன்காரணமாக, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவும் தேர்தல் திரைப்படத்துக்கான தி.மு.க. ஒத்திகையே.

15 பிப்ரவரி 2011

விமானத்தில் குண்டு என மிரட்டிய நபர் விடுதலை!

இலங்கையில் இருந்து மாலைத்தீவு நோக்கி பயணித்த விமானத்தில் குண்டு இருப்பதாக வதந்தியை பரப்பிய பயணியை மாலைத்தீவு பொலிஸார் விடுதலை செய்துள்ளனர் என மாலைத்தீவு பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமான நிலைய ஊழியர் பயணியின் கருத்தினை தவறுதலாக புரிந்து கொண்டதனாலேயே விமானம் தரையிறக்கப்பட நேர்ந்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் தனக்கு இடையூறு என பயணி தெரிவித்ததை தவறாக புரிந்து கொண்ட பயணி, விமானத்தில் குண்டு இருப்பதாக புரிந்து கொண்டு அதனை உயரதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கான ஆதரவு தொடரும் என்கிறார் பிரித்தானிய தூதர்!

பிரித்தானியா இலங்கைக்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்கும் என அந்நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது நியமனப் பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்த பின்னரே ரன்கின் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் வரலாற்று ரீதியில் காணப்படும் நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயற்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவு க்கும் இடையில் வர்த்தகம் சுற்றுலா போன்ற துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது மேலும் அபிவிருத்தியடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட் டார்.அண்மையில் இலங்கை யின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

14 பிப்ரவரி 2011

சர்வதேச நிபுணர் குழுவுடன் கலந்துரையாடல்!

வன்னி இறுதிக் கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு சர்வதேச நிபுணர்கள் பலருடன் விசேட கலந்துரையா டல்களை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கத் தின் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் இலங்கையில் மேற்கொள்ளக் கூடிய நிபுணர் குழுவின் செயற்பாடுகள் மற்றும் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற் கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டு வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுடன் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் நிபுணர்கள் இக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்டாரத்திலிருந்து நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக இச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக் கலந்துரையாடலின் முடிபில் இலங் கை தொடர்பான நிபுணர் குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இறுதி முடிபொன்றை அறிவிப்பார்.இலங்கை அரசாங்கத்தின் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் நிபுணர் குழுவின் முதலாவது கட்ட விசாரணைகள் கூட பூர்த்தி யடையவில்லை எனவும் நிபுணர் குழு எப்படி யும் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கம் பான் கீ மூன் ஒக்ஸ்போர்ட்டில் அறிவித் திருந்த ஒரு சில தினங்களில் இச் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை மேற் கொண்ட இராஜதந்திர நகர்வுகள் தோல்வியடைந்த ஒரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இரண்டாவது தடவை பதவிவகிக்க விரும்பும் பான் கீ முன் இலங்கை விவகாரம் தொடர்பில் காத்திரமான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங் கள் குறிப்பிடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மீன் பிடிப்பதற்கு பாஸ் பெறவேண்டுமாம்,யாழில் உத்தரவு!

யாழ் மாவட்டத்தில் மீண்டும் குடும்பப் பதிவுகளை மேற்கொள்வதற்கு இராணுவம், கடற்படை உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றது.யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் புகைப்படத்துடன்கூடிய குடும்ப விபரங்களை பதிவு செய்வதற்கு கிராம அலுவலர் ஊடாக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள அதே வேளை கடற்படையினரும் கடற்தொழிலாளர்களுக்கு தொழில் செய்வதற்கான பாஸ் நடைமுறையினை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றையதினம் வடமராட்சிப் பகுதியில் பாஸ் நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து தொழிலாளர்களை பாஸினைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதுடன் வடக்குக் கிழக்கு அபிவிருத்திகளை நோக்கிச் செல்வதாக அரசாங்கமும் அரசுடன் சார்ந்தோர்களும் கூக்குரலிட்டவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் இராணுவ சோதனை நடவடிக்கைகளும், பதிவு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றது. தற்போது கடற்படையினரும் கடற்தொழில்களுக்குச் செல்வோருக்கான பாஸ் நடைமுறையை அமுல்ப்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

13 பிப்ரவரி 2011

கடத்தப்பட்ட வர்த்தகர் நாலாம் மாடியில்!

கிளிநொச்சி மாவட்டத்தின் அம்பாள் குளம் பகுதியில் வைத்து நேற்று காலை 11.00 மணி அளவில் மர்மக் கும்பல் ஒன்றால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார் என்று நம்பப்பட்ட வர்த்தகர் தற்போது கொழும்பில் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
கறுப்பையா தியாகராஜா (வயது-53) என்பவரே இவ்வர்த்தகர் ஆவார். இவரின் வர்த்தக நிலையத்துக்கு வந்த சிலர் இவரை வெள்ளை வான் ஒன்றில் ஏற்றிச் சென்று இருந்தனர்.
வந்தவர்கள் யார்? என்பது மர்மமாகவே இருந்தது. பின்னர் வர்த்தகருடன் தொடர்பு கொள்ள எவராலும் முடியவில்லை.
இந்நிலையில் வர்த்தகரின் குடும்ப அங்கத்தவர்கள் இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு மேற்கொள்ளச் சென்றிருந்தனர்.
அப்போது வர்த்தகரை கைது செய்து இருக்கின்றனர் என்று கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்து இருக்கின்றனர்.
வர்த்தகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் கொழும்பில் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றார் என்றும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு இடையில் விடுவிக்கப்பட்டு விடுவார் என்றும் பொலிஸார் தெரிவித்து இருக்கின்றனர்.

நெடுந்தீவிற்கான புதிய பயணிகள் சேவை.

குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவிற்குமிடையில் கடற் பிரயாணத்திற்காக புதிய படகு சேவையில் ஈடுபடவிருக்கிறது.நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையே சேவையில் ஈடுபடுவதற்காகக் கட்டப்பட்ட புதிய படகான “வடதாரகை 2′ நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்குக் குறிகாட்டுவான் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தப் படகு கொழும்பு டொக்யாட் நிறுவனத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருகோணமலை ஊடாக குறிகாட்டுவான் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தப் படகு நாளை திங்கட்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படும் என படகை எடுத்து வந்த இலங்கைக் கடற்படை ஓட்டிகளான குணசிங்க, நவரட்ண ஆகியோர் தெரிவித்தனர். படகில் தண்ணீர் வசதிகள் மலசல கூடவசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் 100 பயணிகளுக்கு மட்டும் என அறிவித்தலும் போடப்பட்டுள்ளது.படகின் கீழ்த்தட்டில் அதிக இருக்கைகள் போடப்பட்டுள்ளதுடன் மேல் தட்டில் குறைந்த அளவிலான இருக்கைகளும் உள்ளன. நேற்று சனிக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களும் படகைப் பார்வையிட்டனர்.திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் படகு கையளிக்கப்படினும், சேவை ஆரம்பமாவது குறித்த முடிவு அமைச்சர்களின் அறிவிப்பிலேயே தங்கியுள்ளதாகவும் தெரிகின்றது.

கிளிநொச்சியில் கடத்தப்பட்டவர் பற்றிய தகவல்கள் இன்னும் இல்லை!

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் நேற்றுக் காலை தனியார் வர்த்தகர்க நிலைய உரிமையாளர் ஒருவர் வெள்ளை வானில் சென்றோரால் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்டவர் மொடேன் ஸ்ரோர்ஸ் என்ற வர்த்தக நிலையமென்றை நடத்தும் 54 வயதுடைய எஸ்.தியாகராசா என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலை 11 மணியளவில் குறித்த வர்த்தகர் தனது வர்த்தக நிலையத்தை திறந்தபோது அங்கு வெள்ளை வானில் சென்றோர் இவரை வாகனத்திற்கருகில் அழைத்ததை அப்பகுதி மக்கள் நேரில் கண்டுள்ளனர். எனினும் நடந்த சம்பவம் தொடர்பில் எவருக்கும் எதுவும் தெரியாது என கூறியுள்ளனர்.
இதேவேளை கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் வர்த்தகரின் கையடக்கத் தொலைபேசிக்கு அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டபோது தான் கொழும்பு சென்று கொண்டிருப்பதாகவும் சில தினங்களில் திரும்பி வந்து விடுவேன் எனவும் அழுது கொண்டே கூறியபோது அழைப்பை துண்டிக்கப்பட்டு உள்ளது.
எனினும் பின்னர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அழைத்த இலக்கம் பாவனையில் இல்லை என பதில் கிடைத்துள்ளது. இது குறித்து கிளிநொச்சி காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 பிப்ரவரி 2011

நான் புலிகள் இயக்க உறுப்பினர் இல்லை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் உறுப்பினர் ஒருவருடைய கரேஜில் தொழில் புரிந்தேனே தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக ஒருபோதும் செயற்பட்டதில்லை என எம்வீ எச் சீ கப்பலூடாகக் கனடாவை சென்றடைந்த இலங்கை அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சன் சீ கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களா என தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் 1996ஆம் ஆண்டு கரேஜில் வேலைக்குச் சேர்ந்த தான், அங்கு வேலை செய்த 6 மாத காலத்திற்குள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ, அவர்களது உறுப்பினராகவோ ஒருபோதும் செயற்பட்டதில்லை என சன் சீ கப்பல் அகதி ஒருவர் கனேடிய பாதுகாப்புப் பிரிவினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்த 492 இலங்கை அகதிகளில் 6 பெண்கள் உட்பட 107 பேர் கனேடிய பாதுகாப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமத்தில் குடும்பப் பதிவுகளை உடன் ஆரம்பிக்குமாறு படை உத்தரவு!

வலிகாமம் பகுதியில் குடும்பப் பதிவுகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு இராணுவம் அறி வித்துள்ளது. கிராம சேவையாளர்களுக்கான கூட்டம் ஒன்று நேற்று மானிப்பாய் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. அவ்வேளையிலேயே மீண்டும் குடும்பப்பதிவு மற்றும் குடும்பப் புகைப்படங்களை எடுக்கும் பணிகளை உட னடியாக ஆரம்பிக்குமாறு படைத்தரப்பு பணித்துள்ளது.
எனினும் அங்கு கலந்து கொண்ட அதிகாரிகள் ஏற்கெனவே பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் புதியவர்களது பதிவுகளை மட்டும் இணைத்துக் கொள்ளலாம் என ஆலாசனை கூறினர். எனினும் படைத்தரப்பு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உடுவில், சங்கானை, சுன்னாகம், சண்டிலிப்பாய், மானிப்பாய் மற்றும் தெல்லிப்பழை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான குடும்பப்பதிவுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கூறியுள்ளது.
ஏற்கெனவே கல்வியங்காடு, கோப்பாய், உள்ளிட்ட பகுதிகளில் இந்த பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வலிகாமம் பகுதியிலும் இந்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம்காட்டி குடும்பப்பதிவு நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

11 பிப்ரவரி 2011

செந்தமிழன் சீமான் நீதிமன்றில் ஆயர்!

நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர் சீமான் இன்று புதுவை கோர்ட்டில் ஆஜரானார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது சீமான் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் விடு தலைப்புலிகளை ஆதரித்தும், இந்திய இறையான்மைக்கு எதிராகவும் பேசியதாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இது தொடர்பாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 3 மாதம் சிறையில் இருந்த டைரக்டர் சீமான் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு புதுவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் டைரக்டர் சீமான் ஆஜரானார்.
நீதிபதி தண்டபாணி இந்த வழக்கை அடுத்த மாதம் 17-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நயினாதீவில் பாரிய புத்தர் சிலை!

நயினாதீவு விகாரையில் 3,157,000 ரூபா செலவில் பாரிய புத்தர் சிலையொன்று புதிதாக அமைக்கப்படவுள்ளதாக வடபிராந்திய தளபதி றியர் அட்மிரல் சுசித வீரசேகர தெரிவித்துள்ளார்.
தென்பகுதியில் இருந்து வரும் பௌத்தர்களின் யாத்திரைத் தலமாக நயினாதீவு விகாரை மற்றியமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிட்ட றியர் அட்மிரல் சுசித வீரசேகர
நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் கடற்படை இறங்கியுள்ளது. கடற்படையின் உதவியுடன் தேசிய கட்டட மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் இந்த விகாரை விரிவாக்கப்படவுள்ளது என்றார்
அத்துடன் விகாரையின் முகப்பும் அதற்கான நடைபாதையும், இறங்குதுறை மற்றும் அதற்காக நடைபாதை ஆகியனவும் புதிதாக அமைக்கப்படவுள்ளன. சுமார் 4 கோடி ரூபா செலவில் இந்தப் புனரமைப்பு வேலைகளை கடற்படை மேற்கொண்டு வருகின்றனர்
வடக்கில் பௌத்த விகாரைகளை அமைப்பது மற்றும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் கடற்படை தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே மாதகல்- சம்பில்துறையில் 2004ம் ஆண்டில் பௌத்த விகாரையொன்றை கடற்படை அமைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

10 பிப்ரவரி 2011

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் சந்தேக நபரை காணவில்லையாம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான விக்டர் ஈ எல்பர்ட் அந்தோனி என்பவர் காணாமல் போயுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி வெள்ளை வானில் சென்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களால் சந்தேக நபர் கடத்திச் செல்லப்பட்டதாக காணாமல் போன சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள எழுத்து மூலமான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் திருகோணமலை சுங்க வீதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சி அலுவலகத்தில் செயற்படும் சுரங்க, விஜி ஆகியோரை சந்தேகப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி வராவெவ, காணாமல் போனவர்கள் சம்பந்தமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிய தருமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது. கட்டுநாயக்க விமான தளம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒரு சந்தேக நபரான பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 5 பேர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மக்களுக்கு கஜேந்திரகுமார் தலைமையில் நிவாரணம்!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி நேற்றய தினமும் மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களது முழுமையான ஒத்துழைப்புடன் அவர்களது நிவாரணப் பணிகள் இடம்பெற்றது.
நேற்றயதினம் இரவு 8.00 -10.00 மணிவரை முனைக்காடு வடக்கு கிராமத்தில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டது. முனைக்காடு கிராமத்தில் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆரம்பித்து வைத்தார்.
இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த இரண்டு தடவைகள் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, மா, சீனி, பருப்பு, கருவாடு, தேயிலை, சேவ்எக்சல் சலவைத்தூள், கோட்டக்ஸ், பால்மா ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

09 பிப்ரவரி 2011

சொந்தச்செலவில் சூனியம் வைத்தது இந்தியா!

அடிப்பவனுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து விட்டு, அடிபட்ட வனுக்கு உணவுப் பொட்டலம் போடுகிற நாடு உலகத்திலேயே அமெரிக்கா மட்டும்தான் – என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்தோ மகிழாமலோ குலாவியோ உலாவியோ இருந்த உங்கள் இந்தியா மட்டும் என்ன கிழிக்கிறது?
அடி அடி என்று இலங்கைக்கு ஆயுதங்களை வாரிவழங்கிவிட்டு, நசுங்கி நாசமாகியிருக்கிற தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகிறதே… இதற்கு என்ன அர்த்தம்? பெண்பிள்ளையைக் கற்பழித்துவிட்டு, பிறக்கிற குழந்தைக்குப் பட்டுச் சட்டை தைத்துக் கொடுப்போம் – என்று பட்டாசு வெடிக்கிறார்களா? இவர்களை எந்த இடத்தில் எட்டி உதைப்பது என்பது கூட தெரியாத சொரணைகெட்ட இனமாகவா மாறிவிட்டிருக்கிறது தமிழினம்!
தங்கள் சொந்தமண்ணில், தாங்கள் ஆண்ட மண்ணில் சிங்களருக்கு முன்பே வாழ்ந்த மண்ணில் உரிமை கேட்டுப் போராடியவர்கள், மானம் மரியாதையோடு வாழ்ந்த ஈழத்துச் சொந்தங்கள். பெரியார் திடல் மேனேஜர்கள் மாதிரியோ, அறிவாலயத்து டேமேஜர்கள் மாதிரியோ டம்மி புலிகள் இல்லை அவர்கள். எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ளாமல் சுயமரியாதையோடு போராடிய நிஜப் புலிகள். நண்பன் இலங்கையோடு சேர்ந்து நேரடியாகவே அவர்களை நசுக்க முயன்று இதே இந்தியா மூக்குடைபட்டது உண்மையா இல்லையா என்று கோபாலபுரத்துக்கு ஒரு கடுதாசி எழுதிப் பாருங்கள். ‘அந்தக் கூலிப்படையை வரவேற்கச் செல்லாத மாவீரன் நான்’ என்று, காங்கிரஸோடு உறவு முறிந்த மறுநாளே உங்களுக்கு பதில் வராவிட்டால் நான் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்.
உண்மையில் விடுதலைப் புலிகளிடம் தோல்விகண்டு அவமானத்தோடு திரும்பியது இந்திய ராணுவம் அல்ல…. ராஜீவ் காந்தியின் பக்குவமற்ற பரிதாபகரமான ராஜதந்திரம். ராஜீவ் காந்தி என்கிற மாஜி பைலட், தனது அறியாமையின் காரணமாக, திட்டமிட்டு தம்மைத் தவறாக வழிநடத்திய அசட்டு அம்பிகளை நம்பிக் கெட்ட வரலாறு அது. தேசப்பற்று ஒன்றே ஆக்சிஜனாக இருக்கும் வெள்ளிப் பனிமலைகளின் மீது நின்று எல்லை காக்கப் போராடும் ஈடு இணையற்ற இந்திய வீரர்களுக்கு ‘கூலிப்படை’ என்கிற வில்லையைக் கட்டி, விபரீத விளையாட்டில் ஈடுபடுத்தினார்கள் அவர்கள். தேசம் காக்கும் எங்கள் வீரர்களைக் கூலிப்படை ரேஞ்சுக்குக் கொண்டுசெல்லாதே – என்று குரல் எழுப்பக்கூட துணிவின்றி மௌனம் சாதித்தது நாடு. ராஜீவ் காந்தி என்கிற ஒரு அரசியல்வாதியின் தவறான முடிவுக்கு, ஆயிரமாயிரம் இந்திய வீரர்கள் விலைகொடுக்க வேண்டியிருந்தது.
‘ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கும் பலனில்லை, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும் பலனில்லை. வேறு யாருக்காக இந்த ஒப்பந்தம் போடப்படுகிறது’ என்று பீல்டுமார்ஷல் மானெக் ஷா போன்றவர்கள் கேட்டது ராஜீவின் காதில் விழவில்லை. ஜெயவர்தனே என்கிற கிழட்டு நரியின் ஊளைச்சத்தம் மட்டும் தான் அவரது காதில் விழுந்தது. தனித்த பண்புகளும் அடையாளங்களும் உள்ள ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க, பாரம்பரியம் மிக்க தன் ராணுவத்தை இரவல் கொடுக்கப்போய், வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொண்டது இளிச்சவாய் இந்தியா. சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது – என்று சொல்லாமல் இதை வேறெப்படித்தான் விவரிப்பது!
இன்று இதைச் சொல்லும்போது காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரலாம். ஆனால், ஒரு லட்சம் தமிழர்களைக் கொல்லத் துணை நின்ற குற்றத்துக்காக காங்கிரஸை நாம் விரட்டி விரட்டி அடிக்கும்போது, தோசையை அப்படியே திருப்பிப் போடுவார்கள்… இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் தவறான முடிவுகளை எடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் காரணமல்ல என்பார்கள்.
இதெல்லாம் கற்பனையல்ல. காங்கிரஸின் எதிர்காலத் தலைவராக 1975ல் முன்நிறுத்தப்பட்டவர், ராஜீவின் தம்பி சஞ்சய் காந்தி. (அப்போதெல்லாம் விமானத்தை விட்டால் சோனியா, சோனியாவை விட்டால் விமானம் என்பதுதான் ராஜீவின் வாழ்க்கையாக இருந்தது) அன்று, அடுத்த தலைவராக முன்நிறுத்தப்பட்ட சஞ்சய்காந்தியின் முன் காங்கிரஸின் மூத்த தலைவர்களெல்லாம் கைகட்டி வாய்பொத்தி நின்றார்கள். இன்று, அதே சஞ்சய் காந்திதான் நெருக்கடி நிலை கால தவறுகளுக்குக் காரணம் என்று கூசாமல் அறிவிக்கிறது காங்கிரஸ். இன்னும் சில ஆண்டுகளில், இலங்கைப் பிரச்சினையில் எடுத்த தவறான முடிவுகளுக்கு ராஜீவ்தான் காரணம் என்று அறிவிக்காமலா போய்விடப் போகிறது காங்கிரஸ்! சஞ்சய்காந்தியின் நிலை ராஜீவுக்கு வராமல் போய்விடப் போகிறதா என்ன?
அன்று ராஜீவ் காந்தி என்கிற விவரமில்லாத திடீர்த் தலைவர் செய்த இமாலயத் தவறுக்கான விலையை, தமிழினம் இன்றுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி எங்கள் மரியாதைக்குரிய தலைவர் – என்று இன்றைக்குக் கடிதம் எழுதும் நமது பழைய நண்பர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவாவது இதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், பான்ஜூர் என்றெல்லாம் ஆரம்பித்து சோனியாகாந்திக்கு நண்பர்கள் கடிதம் எழுதட்டும்… ராஜீவ் காந்தியை மலர்மாலையோ வேறு மாலையோ போட்டு அவர்கள் மதிக்கட்டும். அவர்களுடைய தனிப்பட்ட வியாபாரத்தில் நாம் தலையிடப் போவதில்லை. அதே சமயம், நாடாளுமன்ற உறுப்பினராக ஆகிவிட்டதால் வரலாற்றை மாற்றி எழுதிவிட முடியும் என்கிற அவர்களது அசட்டு நம்பிக்கைகளை நாம் அங்கீகரிக்கப் போவதுமில்லை.
நண்பர்களே இப்படியென்றால், பார்டரில் பாஸ் செய்து பாராளுமன்றத்துக்குள் போனவர்கள் சும்மா இருப்பார்களா? 1991மே 21ம் தேதிக்கு முன் விடுதலைப் புலிகளுக்கும் காங்கிரஸுக்கும் எந்த விரோதமும் இல்லையாம்! போகிற இடமெல்லாம் இப்படி கயிறு திரித்துக் கொண்டிருக்கிறார் சிவகங்கை சிதம்பரம். 1987 செப்டம்பரிலேயே பிரபாகரனைக் கொல்லச் சொல்லி டெல்லியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு உத்தரவு போனதே… 1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால், 1987ல் அவரைக் கொல்லச் சொன்னது அளவுக்கதிகமான பாசத்தாலா? உள்துறைக்கும் உளவுத்துறைக்கும்தான் வெளிச்சம்!
தமிழர்களை எவ்வளவுதான் கேவலமாக நினைத்தாலும், ஒரே ஒரு தீர்மானத்தை மட்டுமாவது இவ்வளவு காலமாக உருப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது காங்கிரஸ். ராஜீவ் சொன்னதைப் போல் இலங்கையில் தமிழர் பகுதிகளான வடக்கையும் கிழக்கையும் ஒரே மாகாணமாக இணைக்க வேண்டும் – என்பதுதான் அந்த தீர்மானம். இந்தமாதம் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தையும் காணோம். ராஜபட்சே மனம் கோணுகிற மாதிரி நடந்து கொள்ளலாமோ… ராஜீவின் கொள்கையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ராஜபட்சேவுடன் சேர்ந்து மாஞ்சா நூலில் காற்றாடி விட்டு மிச்சமிருக்கிற ஈழத் தமிழர்களின் கழுத்தையும் அறுக்கப் பார்க்கிறது சோனியா காங்கிரஸ்.
சோனியாவைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. இத்தாலி, ரோம், பிரான்சு, ஜெர்மன் பற்றித் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு, ஈழத்தைப் பற்றியும் இலங்கையைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் அவர் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது நியாயமுமில்லை. என்றாலும், தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவரப் போவதாக அதிரடியாக அறிவித்துக் கொண்டிருக்கிற ராகுல் காந்தியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன.
ராஜீவ் மகன் ராகுலுக்கும், சித்தப்பா சஞ்சய் காந்திக்கும் நிறைய ஒற்றுமைகள். மூத்த தலைவர்களை அவமதிப்பதிலும் இளைஞர் காங்கிரஸ்தான் காங்கிரஸ் என்கிற தோற்றத்தை உருவாக்குவதிலும் அச்சு அசலாக சித்தப்பாவோடு அப்படியே பொருந்துகிறார் ராகுல். சஞ்சய் காந்தியைப் பார்த்து பயந்து நடுங்கியமாதிரி, ராகுலைப் பார்த்தும் நடுங்குகிறார்கள் காங்கிரஸ் பெருந்தலைகள். தறுதலைகளெல்லாம் பெருந்தலைகள் ஆகிவிட்ட ஒரு இயக்கத்தில் இதுதான் நடக்கும். அதனால்தான், ராகுலுக்கு தேசிய அரசியலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது, தேசத்தின் தலைவராகப் பெரிதுபடுத்திக் காட்டப்படும் அளவுக்கு அவர் என்ன தியாகம் செய்திருக்கிறார்….என்கிற குமைச்சலெல்லாம் இருந்தாலும் அதை மறைத்தபடி மரியாதை காட்டுகிறார்கள் காங்கிரஸில் இருக்கிற மரப்பாச்சி பொம்மைகள். ராகுல் சொல்வதெல்லாம் வேதவாக்காக மாறிவிடுகிறது.
டிசம்பர் இறுதியில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த ராகுல், சென்னையில் அறிவுஜீவிகள் சிலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அறிவுஜீவிகளா, அப்படியென்றால் யார் – என்று கேட்பவர்களுக்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன். திபெத், பாலஸ்தீனம், கிழக்கு திமோர், வட அயர்லாந்து, எரித்திரியா போன்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்களையெல்லாம் அங்கீகரித்துவிட்டு, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க எவரெல்லாம் மறுக்கிறாரோ அவரெல்லாம் இங்கே அறிவுஜீவி. உணர்ச்சி வசப்பட மாட்டார்களாம்… அறிவு சார்ந்தே யோசிப்பார்களாம்…! கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. தங்கள் குடும்பத்து பெண்பிள்ளை யாராவது இசைப்பிரியா மாதிரி கதறக்கதறக் கற்பழித்துக் கொல்லப்பட்டால் இந்த அறிவுஜீவிகள் உணர்ச்சி வசப்படாமல், பொறுமையையும் அமைதியையும் போதித்துக் கொண்டிருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
இங்கே, சமூகப் பொறுப்பும் போர்க்குணமும் இல்லாதவர்களே அறிவுஜீவிகள் என்றாகிவிட்டது. அறிவுஜீவிகளின் இலக்கணம் தலைக்கனம் தான் என்கிற மூட நம்பிக்கை வேறு. இதனால்தான், சிறையில் இருக்கிற சீனத்து அறிவுஜீவிக்கு நோபல் பரிசு கொடுத்துவிட்டு அவரது உறவினர்களாவது வந்து வாங்கிக் கொள்வார்களா என்று காத்துக்கிடந்தது நோபல் பரிசு தேர்வுக் குழு. ராகுல் காந்தி வரமாட்டாரா என்று வழிமேல் விழிவைத்து கன்னிமாரா ஓட்டலில் காத்திருந்தது இங்கேயுள்ள அறிவுஜீவிகள் குழு.
நாளைக்கு ராகுல் பிரதமராகிவிட்டால்? அதனாலேயே அவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைத் தங்களது வாழ்க்கையின் பொன்னான தருணங்களில் ஒன்றாகக் கருதி, காத்துக் கிடந்து பார்த்தார்கள் தமிழக அறிவு ஜீவிகள். அவர்களில் உண்மையான மனிதர்களும் இல்லாமலில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். அந்த மனிதர்களில் ஒருவர், ‘இனப்படுகொலை செய்த ராஜபட்சேவை காமன்வெல்த் விளையாட்டு விழாவுக்கு அழைத்தது நியாயமா’ என்று நேரடியாகக் கேள்வி கேட்க, அலட்டிக்கொள்ளாமல் ராகுல் அதற்கு அளித்த பதில் – ராஜபட்சேவை நான் அழைக்கவில்லை- என்பதுதான்.
நல்லவேளையாக, கருணாநிதி பாணியில், ‘காமன்வெல்த்தா… கல்மாடியிடம் போய்க் கேளு’ என்று அவர் சொல்லிவிடவில்லை.
இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் ராகுல் பேசும்போது, போதனைகளுக்கு பஞ்சமேயில்லை. காமராஜைப் போல், கக்கனைப் போல் அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும் என்று ராகுல் பேசியதற்கு என்ன அர்த்தம்? ஒரு தங்கபாலு மாதிரி, ஒரு இளங்கோவன் மாதிரி, ஒரு சிதம்பரம் மாதிரி, ஒரு வாசன் மாதிரி இருக்கவேண்டும் என்று அவராலேயே கூட சொல்லமுடியாத அளவுக்கு ஆளாளுக்கு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்களா என்ன! ராகுலுக்கே வெளிச்சம்.
காமராஜ் என்கிற பெயரை உச்சரிக்கும் ராகுலுக்கு, அந்த உயர்ந்த மனிதரைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பது தெரியவில்லை. டெல்லிக்குக் காவடி எடுக்காமலேயே 14 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அவர். காமராஜின் ஆதரவாளர்களை – ஒரு கோஷ்டி – என்று பொருள்படுகிற மாதிரி மகாத்மா காந்தி தனது பத்திரிகையில் எழுதிவிட, அவருடைய அந்தப் பார்வை தவறானது என்றும், அப்படி எழுதியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் காமராஜ் கடிதம் எழுதினார். காந்தி வருத்தம் தெரிவித்தபிறகுதான், பிரச்சினை முடிவுக்கு வந்தது. அவர்தான் காமராஜ்! காங்கிரஸில் வேறு எவர் காமராஜ்?
நடமாடும் காமராஜ், வாழும் காமராஜ், குட்டி காமராஜ், ஜெராக்ஸ் காமராஜ் என்றெல்லாம், காங்கிரஸ் தலைகளிடம் மேட்டர்களை முடிப்பதற்காகக் காத்திருப்பவர்கள் அவர்களுக்கு பேனர் வைக்கிறார்களே, அதைப் பார்க்கும் போது, ஜி.கே.வுக்கோ, ஈ.வி.கே.எஸ்.சுக்கோ, கே.வி.க்கோ, பி.சி.க்கோ தொடையின் மீது கம்பளிப்பூச்சி ஊர்வதுமாதிரி அருவருப்பாயிருக்காதா? அல்லது அவர்களுக்கு அருவருப்பு என்கிற உணர்வே இல்லாது போய்விட்டதா? புரியவில்லை! காங்கிரஸ் பெருந்தலைகளை ராகுலிடம் போட்டுக் கொடுப்பதிலேயே குறியாயிருக்கும் இளைஞர் கோஷ்டி, ராகுலின் கவனத்துக்கு இதையும் எடுத்துச் செல்லவேண்டும்.
தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் கோபாலபுரத்தை ராகுல் தவிர்த்துவிடுவதற்கு அரசியல் அடிப்படையிலான காரணங்கள் இருக்கலாம். திருமலைப் பிள்ளை தெருவையும் தவிர்த்து விடுகிறாரே, ஏன்? காமராஜ் ஆட்சி, காமராஜ் ஆட்சி என்று மூச்சுக்கு முன்னூறு தரம் முனகுகிறார்கள் தமிழக காங்கிரஸ்காரர்கள். ராகுல் காந்தியோ, அந்த மக்கள் தலைவர் வாழ்ந்த திருமலைப் பிள்ளை சாலை இல்லத்துக்குப் போய் அஞ்சலி செலுத்துவதைக்கூட தவிர்க்கிறார். அஞ்சலி என்பது வெறும் சடங்கல்ல. காமராஜ் வீடு மாதிரி ஒரு வீட்டுக்குப் போய்ப் பார்த்தால்தானே, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் எளிமையாக வாழ முடியும் என்கிற நம்பிக்கை வலுப்படும்!
லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி என்று இரண்டு பிரதமர்களை உருவாக்கிய காமராஜை கிங்மேக்கர் என்று இந்தியத் தலைவர்கள் அழைத்த காலம் ஒன்று இருந்தது. அது, சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு. காங்கிரஸ் உடைந்து இந்திராவின் தலைமையில் இ.காங்கிரஸும், காமராஜ் தலைமையில் பழைய காங்கிரஸும் இயங்கியபோது, எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராஜை கருணாநிதியுடன் சேர்ந்து நக்கலடித்துக் கொண்டிருந்தது இ.காங்கிரஸ். அப்போது, இ.காங்கிரஸ் மேடைகளில் பிரச்சார பீரங்கி திருவாளர் ப. சிதம்பரம்தான். இப்படியாக, காமராஜுக்கு எதிர் அணியிலேயே இருந்த சிதம்பரமே, காமராஜ் ஆட்சி என்று சொல்லும்போது, ராகுல் மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்று தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். காமராஜைக் காட்டாமல் யுவராஜைக் காட்டியே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நம்புகிறாரா!
தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் இருப்பதை ராகுல் விரும்பவில்லையாம். அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? (நமக்குக் கூடத்தான், காங்கிரஸ் இரண்டாமிடத்தில் இருப்பதாக ராகுல் புளுகுவது பிடிக்கவில்லை….) இளைஞர் காங்கிரசார் கிராமங்களுக்குப் போகவேண்டுமாம்… கிராம அளவில் காங்கிரஸைப் பலப்படுத்தினால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருமாம்…. அப்போது இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முதலமைச்சராக வருவாராம். இதெல்லாம் ராகுலின் கிளிஜோதிடம். இவர் சொல்வதில் எதுவுமே புதிதல்ல! கொக்கைப் பிடிக்க வேண்டுமானால் ஆற்றின் மையப்பகுதிக்குப் போகவேண்டும்… அதற்குப் பிறகு கொக்கின் தலையில் வெண்ணெய் வைக்கவேண்டும்… வெண்ணெய் உருகி கண்ணில் வழியும் போது கொக்கு கண்ணை மூடும்… அப்போது லபக்கென்று பிடித்துவிடவேண்டும்… என்பதெல்லாம் தமிழ்நாட்டில் எவ்வளவோ காலமாக இருக்கின்ற நக்கல் கதைகள். இது இருக்கட்டும்… கிராமங்களுக்குப் போங்கள் – என்பதுதானே அண்ணல் காந்தியின் அறிவுரை. டெல்லியைவிட்டுப் போய்விட்டார்களா இந்திராவின் குடும்பத்தார்?
ராகுல் இப்படியெல்லாம் அலப்பரை செய்து கொண்டிருக்க, அவரது தாயார் டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் பொரிந்து தள்ளியிருக்கிறார். எதற்காகப் பொரிகிறார் என்று பார்த்தால், ஊழலுக்கு எதிராகப் பொரிகிறாராம். அதுவும் ஆவேசத்துடன். ஊழலில் ஈடுபடுவோரை அவரால் சகித்துக் கொள்ளவே முடியாதாம்…. ஊழலுக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டுமாம். இதெல்லாம் சாட்சாத் சோனியா காந்தியே சொன்னது. விட்டால், போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட குவோட்ரோச்சியை பிடித்து உள்ளே தள்ளி விட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார் போல் இருக்கிறது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடிகளால் நாட்டுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்கிறார்கள். ஆனால், தொகை சிறிதாக இருந்தாலும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் இதைக்காட்டிலும் மோசமானது. நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கப்பட்ட பீரங்கிகளிலேயே கமிஷன் என்றால், அதை வாங்கியவர்களின் கைகளில் நாடு பாதுகாப்பாக இருக்கமுடியுமா? ஆட்சியில் இருந்தவர்களுக்குத் தெரிந்தே அந்த கமிஷன் கைமாறியிருந்தால், அவர்கள் குற்றவாளிகள். அவர்களுக்குத் தெரியாமலேயே யாரோ கமிஷன் அடித்திருந்தால், ஆட்சியிலிருக்கவே தகுதி அற்றவர்கள். இந்த இரண்டில் ராஜீவ் எது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் இதே அளவுகோலைத்தான் பயன்படுத்த வேண்டும். ராஜாவுக்குத் தெரிந்தே தவறுகள் நடந்திருந்தால், அவர் குற்றவாளி. அவருக்குத் தெரியாமலேயே நடந்திருந்தால், பதவியிலிருக்கவே அவர் லாயக்கில்லாதவர். ராஜாவை விடுங்கள்…டெல்லி வரை வீல்சேரில் போய், இப்படிப்பட்ட ஒருவருக்காக வாதாடி போராடி பதவியை வாங்கிக் கொடுத்தாரே, அந்த மனிதர் எதற்கு லாயக்கு?
கடைசியில் காமன்வெல்த் ஊழலில் கல்மாடி சொன்னதைத்தான் அத்தனைப் பேரும் சொல்லப் போகிறார்கள். காமன்வெல்த் போட்டி செலவில் 10 சதவீதம்தான் எங்கள்வாயிலாக செலவிடப்பட்டது, மீதி 90 சதவீதத்தை டெல்லி அரசு தான் செலவு செய்தது – என்பது கல்மாடியின் வாதம். 90 சதவீத ஊழல் அங்கேதான் நடந்தது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறார் கல்மாடி. இவர்களையெல்லாம் இங்கே வைத்துக்கொண்டிருந்தால், சோனியா இத்தாலிக்குப் போய் கோட்ரோச்சியுடன் சேர்ந்துதான் ஊழலை ஒழிக்கவேண்டியிருக்கும்.
சொன்னதைப் போலவே ஊழலுக்கு எதிராகப் போர் தொடுக்கவேண்டும் என்று நினைத்தால் சோனியா என்ன செய்யவேண்டும்? ஊழல் புகார் எழுந்தால் அதுபற்றி உடனடியாக விசாரிக்கவேண்டும். அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்குப் பணியாமல் குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆறஅமர பொறுமையாக விசாரித்துக் கொண்டிருந்துவிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் பொரிந்து தள்ளுகிறாரே அக்பர் ரோடு அன்னை…. யாரைக் காப்பாற்ற இப்படி சீன் போடுகிறார்? பிரியாணியை ஒரு பிடிபிடித்து ஏப்பமும் விட்டபிறகு, யார் வீட்டு ஆடு என்று கண்டுபிடித்துவிடப் போகிறாரா சோனியா?
அறிவுஜீவிகள் இதைப்பற்றி யோசிக்கிறார்களோ இல்லையோ, அப்பாவி வாக்காளர்கள் இதைப்பற்றி யோசிக்கவேண்டும். ஒன்றே முக்கால் லட்சம் கோடியைப் பற்றி நாடு கவலைப்படும்போது, ஒரு லட்சம் உயிர்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டும். காலங்கடந்தாவது பொரிந்து தள்ளும் அன்னை சோனியாவால் ஒன்றே முக்கால் லட்சம் கோடியைக் கூட மீட்டுவிட முடியும், முள்ளிவாய்க்காலில் உழுது புதைக்கப்பட்டுவிட்ட ஒரு லட்சம் உயிர்களை அந்த ஆறுதல் மாதாவால் மீட்டுத்தர முடியுமா என்று பொட்டில் அடிக்கிற மாதிரி போட்டு உடைக்கவேண்டும். அப்போதுதான், தமிழகத்தின் அடையாளங்களான காமராஜ், கக்கனைக் காட்டி கடைவிரிக்க முயல்பவர்களுக்கு நம்மால் தடை விதிக்கமுடியும்.
புகழேந்தி தங்கராஜ்.

லண்டன் வந்து தீயில் கருகிய கொடூரம்!

இலங்கையில் போரில் தப்பிய என் தாயார் 7 வருடங்களின் பின்னர் எம்மைப் பார்ப்பதற்காக லண்டன் வந்து தீயில் கருகும் நிலை ஏற்பட்டு விட்டதாக, முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டன் ஊடகங்களுக்கு கவலையுடன் தெரிவித்திருக்கின்றார்.கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் லூசியம், கிறீனிச் அருகிலுள்ள டெட்போர்ட் (Deptford) பகுதியிலுள்ள மரீன் ரவர் என்ற 16 அடுக்குமாடியில் (Marine Tower, Abinger Grove) இடம்பெற்ற தீ விபத்தில் 59 அகவையுடைய சந்திராபதி தர்மலிங்கம், 42 அகவையுடைய குணாழினி அழகரட்னம் ஆகியோர் உயிhழந்திருந்தனர்.
இவர்களில் ஐந்து பிள்ளைகளின் தாயாரான திருமதி சந்திராபதி 2004ஆம் ஆண்டு லண்டன் வந்து சென்ற பின்னர் மீண்டும் தனது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளைப் பார்வையிட 7வருடங்களின் பின்னர் வந்திருந்தார். இவர் தனது மைத்துனியான இரண்டு பிள்ளைகளின் தாயாரான குணாழினியைப் பார்வையிடச் சென்றபோதே அங்கு தீ விபத்து ஏற்பட்டிருந்தது.
இவர்களைக் காப்பாற்ற 50 பேர் வரையிலான தீயணைப்புப் படையினர் போராடிய போதிலும், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயிருந்தது.
இந்த இழப்பு பற்றி செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு கருத்துரைக்க சந்திராபதியின் மகளான 38 அகவையுடைய நந்தினி, தனது தாயாரை 7 வருடங்களின் பின்னர், அதுவும் கொடிய போரில் இருந்து தப்பி வந்த அவரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்திருந்த போதிலும், அந்த மகிழ்ச்சி முழுவதும் அழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அம்மாவின் இழப்பில் தானும் தனது குடும்பத்தினரும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தமது தந்தை 2003ஆம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில், ஊரில் வாழந்த தாயார் 2004ஆம் ஆண்டு லண்டனிற்கும். பரிசிற்கும் வந்து தம்மைப் பார்த்துவிட்டுச் சென்றதாகவும், மீண்டும் வந்திருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்நிருப்பதாகவும் நந்தினி மேலும் கூறினார்.
நந்தினியின் சகோதரனான 33 அகவையுடைய சந்திரலிங்கம் கூறும்போது, தனது தாயாரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அவரது சிரிப்பு முகமே ஞாபகத்திற்கு வருவதாகக் கவலையுடன் தெரிவித்தார்.
தீயில் பலியான மற்றையவரான 42 அகவையுடைய குணாழினி அழகரட்னத்திற்கு 17 அகவையுடைய கோகிலவரதன், 5 அகவையுடைய கிசான் ஆகிய இரண்டு பிள்ளைகள் இருப்பதுடன், தாயகத்திலிருந்து கடந்த 6 வருடங்களின் முன்னரே இவர் லண்டனிலுள்ள தனது கணவர் பொன்னம்பலம் அழகரட்னத்துடன் வந்து இணைந்திருந்தார்.
குணாழினி பற்றிக் கூறிய அவரது உறவினரான லூசியத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய தரினாத் மகேந்திரராஜா, குணாழினி எப்பொழுதும் அனைவரையும் அன்பாகப் பராமரிக்கும் பழக்கம் உடையவர் எனவும், அவரது இழப்பை தம்மால் ஈடுசெய்ய முடியவில்லை எனவும், அவர் எப்பொழுதும் தனது பிள்ளைகளை நன்றாகக் கவனித்து, அவர்கள் சிறப்பாக கல்வி கற்கப் பாடுபட்டவர் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இவர்கள் இருவரும் தீ விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும், தீ வைத்துக் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பிரித்தானிய காவல்துறையினர், குணாழியின் மாடித் தொடரின் பக்கத்து வீட்டில் வசித்த 49 அகவையுடைய சாள்ட்றா கிளார்க் (Sandra Clarke) என்பவரைக் கைது செய்து நேற்று (08-02-2011) கம்பர்வெல் கிறீன் (Camberwell Green) நீதிமன்றில் காணொளி வாயிலாக சாட்சியம் அளிக்க வைத்துள்ளனர். இவரை மீண்டும் எதிர்வரும் 14ஆம் நாள் வூளிச் கிறவுன் நீதிமன்றில் (Woolwich crown court) முன்னிறுத்தமாறு நீதியாளர் உத்தரவிட்டுள்ளார்.