பக்கங்கள்

31 மே 2011

கனடாவில் அரசியல் தஞ்சம் கோரிய தமிழரை நாடு கடத்த உத்தரவு!

சன் சீ கப்பலில் கனடா சென்ற ஈழத் தமிழர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வீடியோவொன்றில் காணப்பட்டமையால் கனடா குடிவரவு மற்றும் ஏதிலிகள் சபை அவரினை நாடுகடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதன்படி சன் சீ கப்பலில் சென்ற சுமார் 493 பேர்களில் நான்காவது நபர் நாடு கடத்தப்பட உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை எழுதப்பட்ட தீர்ப்பில், அவர் முன்னாள் விடுதலைப் புலிகளின் படை உறுப்பினரோ அல்லது ஆயுத யுத்தத்தில் பங்கு பற்றியவரோ கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியாயினும் குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது அக்கரை கொண்டு குறைந்தளவில் ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தினை சித்தரிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் திரைப்படத்தில் குறித்த நபர் அங்கம்வகித்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி குறித்த திரைப்படமானது பொழுது போக்கு நோக்கத்துக்காக காட்சிப்படுத்தப்பட்டதனாலேயே குறித்த நபர் நடித்ததாக தெரிவித்துள்ளார். இதனை அரச தரப்பு சட்டத்தரணி மறுத்துள்ளார். அவ்வாறான திரைப்படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசாரத்தினை நோக்காக கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கராத்தே ஆலோசகராக பணிபுரிந்ததாகவும் அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட போது சந்தேகநபர் எதுவித கருத்துகளையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது என சர்வதேச ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

சிறையில் கொல்லப்படப்போகும் அப்பாவி பட்டதாரி இளைஞர்கள்!

நடந்து முடிந்த ஈழத்திற்கான நீண்ட போரில் சில உலகநாடுகளின் உதவியுடனும் பல கொடுமையான சர்வதேச போர்க்குற்ற நடவடிக்கைகளுடனும் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த சிறிலங்கா ராணுவம் போருக்கு பின்னரும் பல மனிதஉரிமை மீறல்களையும் வன் கொடுமைகளையும் நடத்திவருகிறது. முள்வேலிகளுக்குள் அடக்கப்பட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் காணாமல்போவதும் நூற்றுக்கணக்கில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாவதுமே இதற்கு சாட்சி.
கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் இவர்களிடம் எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர் இன்னும் மீதம் இருப்பது 150 படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே.
போர் நடைபெற்ற காலத்திலேயும் போருக்கு முந்தைய காலகட்டத்திலும் எந்தவித ஆயுதங்களையும் கையில் எடுக்காமல் வன்முறைக்கு உட்படாத புலிகளின் அரசியல் பிரிவுகளிலும், அரசியல் தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த படித்த பட்டதாரி தமிழ் இளைஞர்களை போர்க்காலத்தில் சிங்கள ராணுவம் கைதுசெய்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ‘புலிகளின் அரசியல்’ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே வவுனியாவில் உள்ள தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அந்தச் சிறையில் ஏற்கனவேயுள்ள சிங்களக் குற்றவாளிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். உணவு, உடை போன்ற அத்தியாவசியங்கள் மறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். இது மட்டுமின்றி இவர்களை உளவியல் ரீதியான கொடுஞ் செயல்களுக்கு உட்படுத்தி மனநிலை பாதிக்கச் செய்கின்றனர்.
கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் இவர்களிடம் எந்தவிதமான நீதிமன்ற விசாரணைகளோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளவில்லை. இவ்வாறான பல சித்திரவதைகளால் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். இன்னும் மீதம் இருப்பது 150படித்த பட்டதாரி தமிழ இளைஞர்களே. எந்தவித வன்செயல்களிலும் ஈடுபடாத இந்த 150பேரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்வதற்கான உள் வேலைகளை சிங்கள ராணுவம் செய்துவருகிறது. எந்தவிதக் காரணமும், விசாரணையுமின்றி அப்பாவித் தமிழர்கள் 150பேர் ஒரே கூரையின் கீழ் கொல்லப்படப் போகிறார்கள்.
சிறிலங்கா அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகளும், விசாரணைகளும் நடந்துவரும் நிலையில் எந்தவித காரணமுமின்றி கொல்லப்படப் போகும் இவர்களைக் காப்பாற்ற அனைத்து ஊடகங்களும் முன்வரவேண்டும். இந்தச் செய்தியினை உலகிற்கு தெரிவித்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றி சிறிலங்கா ராணுவத்தின் மீதான போர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

30 மே 2011

இளம் பெண் மீது பாலியல் முறைகேடு!காமுகர்கள் கைது.

வவுனியா – மன்னார் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல், 18 வயது யுவதியொருவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் வவுனியா, நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டனர். முச்சக்கரவண்டியொன்றின் மூலம் பலாத்காரமான முறையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ள இந்த யுவதி குறித்த வீதியில் அமைந்துள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஊர்காவற்றுறை கடலில் தமிழ் மீனவரை விரட்டி விட்டு சிங்கள மீனவருக்கு மீன் பிடி அனுமதி!

யாழ் மாவட்டத்தில் உள்ள வடமராட்சி மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஊர்காவற்றுறை கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம், அவர்களை சிறீலங்கா கடற்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை (27) விரட்டியடித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஊர்காவற்றுறை மீனவர் சங்கத்தின் அனுமதியுடன் தாம் அங்கு பல வருடங்களாக மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளபோதும், சிறீலங்கா படையினர் தமிழ் மீனவர்களை அங்கு மீன் பிடிக்கவிடாது தடுப்பதுடன், தென்னிலங்கையில் இருந்து வந்துள்ள சிங்கள மீனவர்களை மீன் பிடிக்க அனுமதித்துள்ளனர்.
வடமராட்சி மற்றும் குருநகர் கடல் பகுதிகளில் மீன் வளம் குறைவாக காணப்படுவதால் தமிழ் மீனவர்கள் ஊர்காவற்றுறை கடற்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். சிறீலங்கா கடற்படையினருடன் இணைந்து ஈ.பி.டி.பி என்ற ஆயுதக்குழுவும் சிங்கள மீனவர்களின் அடாவடித்தனங்களுக்கு ஆதரவு வழங்கிவருவதாக தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு ஏமாற்று வித்தைக்கு தயாராகிறது சிங்களப்படை!

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை முறியடிப்பதற்கு பல வழிகளில் முயன்றுவரும் சிறீலங்கா அரசு தற்போது சிறிலங்கா இராணுவத்தினரின் படையணிகளைக் கொண்டு ஒரு அறிக்கையை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் இடம்பெற்ற போரில் பங்குபற்றிய 51, 53, 55, 57, 58 மற்றும் 59 ஆகிய படையணிகளிடம் இருந்தும், சிறப்பு படையணி மற்றும் கொமோண்டோ படையணிகளிடம் இருந்தும் வாக்குமூலங்களை பெற்று ஒரு அறிக்கையை தயாரிப்பதற்கான குழு ஒன்றை சிறீலங்கா இராணுவத்தளபதி லெப் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா அமைத்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் சிறீலங்கா இராணுவம் தனக்கு வெள்ளையடிக்க முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஐ.நா அறிக்கைக்கு எதிராக சிறீலங்கா அரசு தனது முழு வழங்களையும் பயன்படுத்தி வருவது தமிழ் மக்களுக்கு மிகவும் கடுமையான நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

29 மே 2011

யாழ் நகரில் கடை தீயில் எரிந்தது.

யாழ்.நகரிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் திடிரென்று சற்று முன்னர் காஸ் சிலிண்டர் ஒன்று தீ பிடித்து எரிந்ததால் பெறுமதியான பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று மதியம் 1 மணியளவில் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் வர்த்தக நிலையமென்றிலேயே இவ்வாறு தீ பிடித்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் வேறு இடங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
யாழ்ப்பாணப் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் உயிர் இழப்புகள் எவையும் ஏற்படவில்லை.

ராஜபக்ஷ கூண்டிலேறும் நாள் விரைவில் வரும்.

8,000 போஸ்னிய முஸ்லீம்களை படுகொலை செய்த செர்பிய படைத் தளபதி ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டிருப்பதைப் போல எம் தமிழினத்தைக் கொன்று குவித்த சிங்கள ராஜபக்‌ஷே விரைவில் கைது செய்யப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்.
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை
கம்யூனிச நாடாக இருந்த யுகோஸ்லாவியாவில் இருந்து இன்று தனி நாடாகத் திகழும் போஸ்னியாவில் 1995ஆம் ஆண்டு ஜூலையில் இந்த இனப் படுகொலை நடந்தது. செர்பிய மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து போராடிய போஸ்னிய மக்களை, செர்பிய இனவெறி இராணுவம் மிருகவெறி கொண்டு அடிக்கி ஒடுக்கி வந்த போது, பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட போஸ்னிய முஸ்லீம்கள் 40 ஆயிரம் பேர் சிறிபிரீனிசா எனும் இடத்தில் ஐ.நா. அமைத்த பாதுகாப்புப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த இடத்தை ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 400 வீரர்கள் பாதுகாத்து வந்தனர்.
இந்த முகாமைச் சுற்றி வளைத்த செர்பிய படைத் தளபதி ராட்கோ மிலாடிச் தலைமையிலான செர்பிய படைகள், முகாமில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் வெளியேற்றிவிட்டு, ஆண்களையும், சிறுவர்களையும், பல நூற்றுக்கணக்கான பெண்களையும் கொன்றொழித்தது. மொத்தம் 8,373 முஸ்லீம் ஆண்களும், சிறுவர்களும், நூற்றுக்கணக்கில் பெண்களும், குழந்தைகளும் ஈவிரக்கமின்றி ராட்கோ மிலாடிச் படைகளால் கொல்லப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டனர்.
இந்த படுகொலை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த மிகப் பெரிய இனப்படுகொலை இதுவென்று, சிறிபிரீனிசா படுகொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தீர்ப்பாயமும், அதன் பிறகு பன்னாட்டு நீதிமன்றமும் கூறின. "1995ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதியில் இருந்து சிறிபிரீனிசாவில் போஸ்னிய, ஹெர்சிகோவீனா முஸ்லீம்களை அழிப்பது என்கிற திட்டத்துடன் செர்பிய படைகள் நடத்திய படுகொலை, ஐ.நா.வின் இனப் படுகொலை � குற்றமும் தண்டனையும் பிரகடனத்தின் பிரிவு 2, துணைப் பிரிவு (ஏ), (பி) ஆகியவற்றின்படி இனப் படுகொலையே என்று பன்னாட்டு நீதிமன்றம் முடிவு செய்கிறது" என்று 2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் தீர்ப்பளித்தது. தமிழீழத்தில், சிங்கள � பெளத்த இனவாத அரசு தமிழ் மக்களை இனப் படுகொலை செய்தபோது எவ்வாறு ஐ.நா. வாய் மூடி வேடிக்கை பார்த்ததோ, கள்ள மவுனம் சாதித்ததோ அதேபோல்தான், அப்போதும் தங்கள் பாதுகாப்பில் இருந்த போஸ்னிய மக்கள் செர்பிய படையினரால் படுகொலை செய்யப்பட்டபோது ஐ.நா.படைகள் அமைதியாக வேடிக்கை பார்த்தன.
ஆனால் பன்னாட்டுச் சமூகம் விடவில்லை. இந்தப் படுகொலையை நடத்திய செர்பிய இராணுவத்தின் தளபதி ராட்கோ மிலாடிச் இனப் படுகொலையாளர் என்று பிரகடனம் செய்தன. அவரை கண்டுபிடித்து போஸ்னிய படுகொலை தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று செர்பிய அரசுக்கு அழுத்தம் தந்தன. அதன் விளைவு 16 ஆண்டுக் காலமாக தலைமறைவாக இருந்த ராட்கோ மிலாடிச் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்த செர்பிய நாட்டு அரசு, போஸ்னிய முஸ்லீம்கள் இனப்படுகொலைக் குற்றத்தை விசாரித்துவரும் பன்னாட்டுத் தீர்ப்பாயத்தின் முன் விரைவில் நிறுத்துவோம் என்று அறிவித்துள்ளது.
8,000 பேரைக் கொன்ற செர்பிய தளபதியின் நடவடிக்கையை இனப் படுகொலை என்று உறுதி செய்துள்ள சர்வதேசச் சமூகம், ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை இன்று வரை போர்க் குற்றம் என்ற அளவில்தான் பேசி வருகிறது. ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை கூட, சிறிலங்க அரச படைகளால் பல பத்தாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை போர்க் குற்றம் என்றுதான் கூறுகிறது.
தமிழினத்தைக் கொன்றொழித்த ராஜபக்ச கும்பல் காலியில் இன்று வெற்றிக் கொண்டாட்டம் நடத்தி வருகிறது. ஆனால் நீதி விசாரணை நடைபெறும்போது, தமிழீழத்தில், சிங்கள � பெளத்த இனவெறி இராணுவம் நடத்தியது இனப் படுகொலைதான் என்ற உண்மை வெளியாகும். 8,000 பேரை இனப் படுகொலை செய்த ராட்கோ மிலாடிச்சிற்கு ஏற்பட்ட அதே நிலை, இனப் படுகொலையாளர் எவரும் நிரந்தரமாக தப்பிவிட முடியாது என்பதற்கு அத்தாட்சி என்பது மட்டுமின்றி, இலங்கையில் எம் தமிழினத்தைச் சேர்ந்த ஒன்றரை இலட்சம் பேரை ஈவிறக்கமின்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்ச கும்பலிற்கும் ஏற்படும்.இதே கும்பல் தமிழினப் படுகொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் நாள் வரும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.
அன்று தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கான நியாயம் உறுதியாகி, தமிழீழம் பிறக்கும்.

28 மே 2011

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வருகிறது தமிழர் தீர்மானம்.

முதல் முறையாக இலங்கை நிலை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர். குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனரா என்ற தலைப்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடொன்றை முதல்முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற வளாகத்தில் யூன் முதலாம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிபுற்று இரண்டு வருடங்களாகியும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதனை தமிழர் தரப்பு தமது தீர்மானத்தின் மூலம் பல ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது.
யூன் முதலாம் திகதி மாலை ஆரம்பமாகவிருக்கும் இம்மாநாட்டில் போல் மேர்ஃபி உட்பட பல இதர ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
இம்மாநாட்டில் போருக்குப் பின்னர் எவை நடைபெற்றிருக்க வேண்டும் எனவும் நடைபெறாமல் இருக்கும் விடயங்கள் எவையெனவும் அலசி ஆராயப்படவுள்ளது. தமிழ் சொலிடாரிட்டி இயக்கம் பல அமைப்புக்களுடன் இணைந்து இதனை ஒழுங்கு செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரைக்கு கிழக்கு பல்கலைக்கழகம் கெளரவம்.

முன்னாள் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் செல்லையா இராஜதுரைக்கு கிழக்கு பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரிக்கு அவர் விஜயம் செய்த போது கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அவரை வரவேற்று விருது வழங்கி கௌரவித்தனர்.
இராஜதுரை பிரதேச அபிவிருத்தி இந்து கலாச்சார அமைச்சராக இருந்த காலத்திலேயே அந்த அமைச்சினால் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பௌதிக வளம் நிறைந்த விபுலாந்த இசைநடனக்கல்லூரி தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இதேவேளை மட்டக்களப்புக்கு அண்மையில் வருகை தந்து அங்கு தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை சமய சமூக நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
சுமார் 25 வருடங்களின் பின்பு மீண்டும் மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள மட்டக்களப்பு தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான செல்லையா இராஜதுரை நேற்று கொக்கட்டிச்சோலை பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
மண்முனைத் துறை ஊடாக படகில் விஜயம் செய்த அவர் தான் அமைச்சராக இருந்தபோது குறிப்பிட்ட துறைக்கு பாலம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கியிருந்தார் ஆனால் நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக இந்த பாலம் அமைக்கப்படவில்லை இதற்காக தனது கவலையையும் அப்போது அவர் வெளியிட்டார்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மற்றும் மகிழடித்தீவு கண்ணகை அம்மன் ஆலயங்கில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு முதலைக்குடா மகாவித்தியாலயம் முனைக்காடு அரசினர் பாடசாலை மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து மாணவர்கள் மத்தியிலும் உரையாற்றியதோடு அப்பிரதேச பிரமுகர்களுடனும் கலந்துரையாடினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சத்திய சாயி பாபா சமித்திகளினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பஜனை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார்.
கடந்த இரு வாரங்களாக மட்டக்களப்பில் தங்கியிருந்த இவர் சமூக சமய இலக்கியங்கள் அரசியல் பிரமுகர்களையும் தனது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகின்றார்.
அரசியலிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில் அரசியல் தொடர்பாக கருத்துக்கள் கூறுவதை தவிர்த்து வருகிறார். இருப்பினும் தமிழ் மக்களின் அவல நிலை தொடர்பாக தனது கவலையை வெளியிட்டுள்ள அவர் ‘பெரியவர் தந்தை செல்வா அன்று கூறியது போல் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று இந்தச் சந்தர்ப்பத்தில் சுருக்கமாக கூறினார்.
1950ஆம் ஆண்டுகளிலிருந்து இலங்கை தமிழரசுக்கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட வந்த அவர் முதலில் மட்டக்களப்பு மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
சொல்லின் செல்வன் என்ற பட்டத்தை பெற்ற இராஜதுரை தமிழரசுக்கட்சியின் சிறந்த பேச்சாளராக திகழ்ந்தார்.
1956ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மட்டக்களப்பில் போட்டியிட்ட இராஜதுரை மட்டக்களப்பு தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் 1977ஆம் ஆண்டுவரை நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் மட்டக்களப்பு தொகுதியில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக 33ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

27 மே 2011

வன்னியில் கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் தோண்டி எடுத்து எரிக்கப்படுகின்றன.

போரின் போது வன்னியில் கொல்லப்பட்ட மக்களது எலும்புக்கூடுகளை அகழ்ந்து எரித்தழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் தீவிரம் பெற்ற 2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதிகளில் புதுமாத்தளன், மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்கள் செறிந்துவாழ்திருந்தனர்.
அந்தப் பகுதிகளில் வீழ்ந்த எறிகணைகள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது பத்து உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறு கொல்லப்பட்ட மக்களின் சடலங்கள் அந்த அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டன.
களப்புவெளி, கடற்கரைப்பிரதேசங்கள், மக்கள் வாழிடங்கள் என வேறுபாடின்றி அனைத்து இடங்களிலும் மக்களது சடலங்கள் புதைக்கப்பட்டன.
இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்கான மீள்குடியேற்றத்தினை தாமதப்படுத்திவருகின்ற அரசு இராணுவத்தினரின் துணையுடன் அங்கு உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களைத் தோண்டி எடுத்து அவற்றினை எரித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்குற்ற விசாரணையினை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், சடலங்களும் அகழப்படலாம் என்ற அச்சம் காரணமாவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக கருத முடிகின்றது என்கின்றனர் நோக்கர்கள்.

26 மே 2011

மண்டைதீவில் மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கடற்படை முகாம்.

யாழ் மாவட்டத்தில் உள்ள மண்டைதீவுப் பகுதியில் சிறீலங்கா கடற்படையினர் அமைத்துவரும் பாரிய கடற்படைத்தளத்திற்கு தமிழ் மக்களின் 40 ஏக்கர் நிலத்தை சிறீலங்கா படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
தீவுப் பகுதியில் உள்ள உயர்பாதுகாப்பு வலையத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்து ஆலயங்கள், மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் விளைநிலங்கள் என்பவற்றை பலவந்தமாக கையகப்படுத்த சிறீலங்கா அரசு முற்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லை என அறிவித்துவரும் சிறீலங்கா அரசு திரைமறைவில் உயர் பாதுகாப்பு வலையங்களை அதிகரித்து வருகின்றது. வலிகாமம் பகுதியிலும் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் 26 கிராமங்கள் உள்ளன.
மண்டைதீவு பகுதியில் சிறீலங்கா படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் முட்கம்பி வேலிகள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 மே 2011

காங்கிரசின் தோல்வியே நெடியவனின் கைதுக்கு காரணம்:

அண்மையில் தமிழகத்தில் இந்திய காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்விக்கு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் நெடியவன் தலைமையிலான புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தான் வலுவான காரணம் என நம்பியுள்ள இந்திய புலானாய்வு அமைப்பு நெதர்லாந்து அரசுக்கு கொடுத்துள்ள அழுத்தம் காரணமாகவே நெடியவன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமான த டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குமரன் பத்மநாதனின் தலைமையை நெடியவன் உட்பட தமிழகத் தலைவர்களான வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோர் தலைமையிலான தனிப்பட்ட பிரச்சாரங்கள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.
இந்த பிரச்சாரம் தான் காங்கிரசுக்கு தோல்வியை கொடுத்தது. தமிழகத்தில் போட்டியிட்ட 60 காங்கிரஸ் உறுப்பினர்களில் 10 பேர் கூட வெல்லவில்லை. சிறீலங்கா அரசுக்கு ஆதரவளித்து விடுதலைப்புலிகளை வஞ்சம் தீர்த்த காந்தி குடும்பத்திற்கு மீண்டும் விடுதலைப்புலிகள் தக்க பதிலடியை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள அலையும் காந்தி குடும்பத்தை கலக்கத்தில் தள்ளியுள்ளது. எனவே தமிழகத்தின் இந்த எழுச்சிக்கு நெடியவன் தலைமையிலான அணியே காரணம் என இந்திய காங்கிரஸ் கட்சியும், றோ புலனாய்வு அமைப்பும் நம்புகின்றன.
இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசுக்கு இந்திய காங்கிரஸ் அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே நெடியவன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடியவன் தொடர்பான தகவல்களை சிறீலங்கா அரசின் கைகளில் இருக்கும் குமரன் பத்மநாதனே காங்கிரஸ் அரசுக்கு வழங்கியிருந்தார். அதன் பின்னர் அந்த தகவல்களை இந்திய புலனாய்வுத்துறை நெதர்லாந்து அரசுக்கு வழங்கியுள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.திசாநாயக்க ஒரு ஒழுக்கம் கெட்ட மனிதர்.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க ஒரு ஒழுக்கம்கெட்ட மனிதர் என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண.திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சி தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், மல்வத்த பீட மகாநாயக்கரை சந்திக்கச் சென்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் மகாநாயக்கர்களின் ஆலோசனைகளைக் கேட்பதில்லை. இதற்கு முன்னரும் நாம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் அரசாங்கம் தாம் நினைத்ததை செய்ய முற்படுவதனாலேயே இவ்வாற நிலைகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் நிலை மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில் பிக்கு மாணவர் ஒருவரின் மரணம் தொடர்பாக எஸ்.பி.திசநாயக்க வெளியிட்ட கருத்து தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் கூறியுள்ளார்.

24 மே 2011

பன்னிரண்டு நாட்கள் உணவருந்தாமல் திலீபன் படத்தில் நடிக்கும் நந்தா!

தியாகதீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வெளிவர இருக்கிறது. இதில் ஆணிவேர் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் நந்தா அவர்கள் நடிக்கவிருக்கிறார். பட இயக்குனரிடம் இப் படம் குறித்தும், தான் ஏற்று நடிக்கவிருக்கும் திலீபனின் வேடம் குறித்தும் அறிந்துகொண்ட நடிகர் நந்தா அவர்கள், தன்னை வருத்தி இப்படத்தில் தத்துரூபமாக நடிகப்போவதாக சத்தியம் செய்துள்ளார். முதல் கட்டமாக தியாக தீபம் திலீபன் போல தனது உடலை மெல்லியதாக்க அவர் தனது உணவைக் குறைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, இறுதி 12 நாட்கள் படப்பிடிப்பின்போது, தான் உண்மையாகவே சாப்பிடாமல் நீரை மட்டும் அருந்தி படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக அதிரடியா அறிவித்தும் உள்ளார். தியாகி திலீபன் அவர்கள் எவ்வாறு தன்னை வருத்தி, உண்ணாவிரதம் இருந்தாரோ, அதன் வலி, ரணம், அதன் உண்மையான வடிவத்தை தான் நிச்சயம் பிரதிபலிப்பேன் எனக் கூறிய நடிகர் நந்தா, உணவை உட்கொள்ளாமல் நடிக்கவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தியாகி திலீபனின் வாழ்க்கை வரலாறு படம் மிகவிரைவில் வெளியாகவுள்ளது. உண்மையான அர்பணிப்போடு நடிகர் நந்தா இந்தத் திரைப்படத்தில் நடிப்பதும், இப் படக்காட்சிகள் தத்துரூபமாக படமாக்கப்படவுள்ளதும் பாராட்டுதலுக்கு உரியவிடையமாகும். இப் படத்தில் வீரகாவியமாகிய தியாகி திலீபனின் பல உண்மைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

நெடியவன் கைது தனக்கு ஆறுதல் என்கிறார் இமெல்டா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவர் நெடியவன் கைது செய்யப்பட்டமை மன ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
மிக அண்மைக்காலம் வரையில் நெடியவன் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் அஞ்சல்களின் மூலம் நெடியவன் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது பதவியை இராஜினாமா செய்யுமாறு நெடியவன் தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மையும் தமது குடும்பத்தாரையும் படுகொலை செய்யப் போவதாக நெடியவன் மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தாம் மிகுந்த மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக எமில்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முல்லைத்தீவை கட்டுப்படுத்திய காலத்தில் எமில்டா சுகுமார் அந்தப் பிரதேசத்தில் எட்டு ஆண்டுகள் அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக ஆற்றி வரும் சேவை தொடர்பில் மக்களும் அரசாங்கமும் கொண்டுள்ள நம்பிக்கை தமக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

22 மே 2011

துபாயில் பெண் மரணம்!கொலையா?தற்கொலையா?

கடந்த சில காலமாக டுபாயில் பணிபுரிந்த வந்த தனது மனைவி (வீட்டுப்பணிப்பெண்ணாக துபாயில் வேலை புரிந்த இலங்கையர்) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது கணவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது மனைவி முன்னர் தான் அங்கு பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவருவதாகவும், தான் நாடு திரும்ப வேண்டும் எனவும் தெரிவத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பணச்சிக்கல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, அவருடன் பணிபுரிந்த அதே தினத்தில் துபாயிலிருந்து நாடு திரும்பும் இலங்கை பெண்ணொருவர் தனக்கு அறியப்படுத்தியதாகவும், இலங்கை வந்ததும் அவர் எதுவித தொடர்பினையும் தன்னொடு ஏற்படுத்தி கொள்ளாததினால் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது மனைவியின் சடலத்தினை இலங்கைக்கு கொண்டுவர சுமார் 5 லட்சம் ரூபா தேவைப்படும் என அந்நாட்டவர்கள் தனக்கு தெரியப்படுத்தியதாகவும், தனது இயலாமையினை கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு மற்றும் உதவிக் கோரிக்கை முன் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

21 மே 2011

சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக ஊரெழுவை சேர்ந்த தமிழர்?

சிங்கப்பூரின் துணைப் பிரதமரும், நீதியமைச்சருமான தர்மன் சண்முகரட்ணத்தை சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநராக நியமிக்க வேண்டும் என தெற்காசிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
யாழ்ப்பாணம் ஊரெழுவைப் வழித்தோன்றலாகக் கொண்ட இவர் 2007ஆம் ஆண்டு முதல் சிங்கப் பூரின் நிதியமைச்சராக செயலாற்றி வருவதோடு இவரை துணைப் பிரதமராக கடந்தவாரம் அந் நாட்டுப் பிரதமர் லீ சென் லூம் நியமித்திருந்தார்.
சிங்கப்பூரின் முக்கிய அரசியற் பிரமுகர்களில் ஒருவரான தர்மன் சண்முகரட்ணம் நேற்று முன்தினம் (19.05.2011) சிங்கப்பூர் நிதி ஆணை யத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இவரை சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநராக நியமிக்க வேண்டும் என பிலிப்பை ன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் இயக்கு நர் பதவியிலிருந்து டொமினிக் ஸ்டி ராஸ் கான் ராஜினாமாச் செய்துள்ள நிலையில், இப் பதவியை தர்மன் சண்முகரட்ணத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடந்த அடிதடி!

குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலினால் இரண்டுபேர் படுகாயமடைந்து சிகிச்சைக்கென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் கொக்குவில் பிறவுண் வீதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த கி.தேவதாஸ் (வயது55) தே.தயாளன் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

20 மே 2011

கனிமொழியை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு.

ஸ்பெக்ரம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார் இருவரது ஜாமீன் மனுக்களும் நிரகாரிக்கப்பட்டுள்ளதுடன், உடனடியாக இருவரையும் கைது செய்யும் படி டில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று நண்பகல், வெளியிடப்பட்ட இத்தீர்ப்பில், இருவரையும் கைது செய்து கஸ்டடியில் வைக்கும் படியும், நாளை காலை 10 மணிக்கு முன்பதாக மீண்டும் ஆஜர்படுத்தும் படி சி.பி.ஐ தலைமை நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.
எனினும் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

மாட்டிக்கொண்ட திருட்டுப் பெண்கள்.

யாழ்ப்பாணத்துக்கும், கண்டிக்கும் இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்ஸில் பெண்ணின் தங்கச்சங்கிலி களவாடப்பட்டது. சாரதி, நடத்துநரின் புத்திசாதுரியத்தால் சில மணித்தியாலங்களில் அது மீட்கப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
நேற்றுக்காலை 6.15 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இயக்கச்சிப் பகுதியில் நான்கு பெண்கள் பஸ்ஸை மறித்து ஏறியுள்ளனர். குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும் அந்த நான்கு பேரும் இறங்கிவிட்டனர்.
சற்று நேரத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணொருவர் தனது சங்கிலியைக் காணவில்லையென்று அலறினார். இயக்கச்சியில் ஏறிய பெண்கள் மீது சந்தேகம் கொண்ட சாரதி பஸ்ஸை திருப்பி அவர்கள் இறங்கிய இடத்தை நோக்கிச் செலுத்தினார். அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி நோக்கி வந்துகொண்டிருந்த பஸ்ஸில் அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தததை அவதானித்தார். சாரதியும் நடத்துநரும் பஸ்ஸை மறித்து குறித்த நான்கு பெண்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அப்போது அதில் இரண்டுபேர் ஓடி விட்டதாகவும் ஏனையோர் பஸ்ஸுக்குள் இருந்து எடுத்ததாகக் கூறி அந்தச் சங்கிலியை ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

19 மே 2011

கவிஞர் புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா?

கவிஞர் புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? என்று சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.05.2011) மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார்.
சங்க காலத்துப் புலவர்கள் தொழில்முறைப் புலவர்கள். இவர்களில் அநேகர் அரசர்களைச் சார்ந்து அவர்களை நாளும் புகழ்பாடிப் பொன்னும் பொருளும் பெற்றுவந்தார்கள். ஆனால், எங்களுடைய இலக்கியப் படைப்பாளிகள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்லர்ளூ எல்லோருக்குமே வாழ்க்கைக்கான தொழில் இருக்கிறது. எனவே, காலம் மாறும் போது, காட்சி மாறும்போது தங்களையும் உருமாற்றிக் கொண்டு, ஆட்சி அதிகாரங்களைத் துதி பாடுபவர்களாக எமது படைப்பாளிகள் இருக்கக் கூடாது என்றும் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
அறிவோர் கூடல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஐங்கரநேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலக்கியத்தின் அடிப்படை மனித நேயம், நல்ல மனிதராக வாழ்வதற்கு முயற்சி செய்யும் ஒருவர்தான் அடுத்த கட்டத்தில் இலக்கியம் படைப்பதற்குத் தகுதி பெற்றவர் ஆகிறார். தன்னுடைய மனைவிக்கு ஒரு நல்ல கணவனாகவும், பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாகவும், சுற்றத்தாருக்கு ஒரு நல்ல அயலவனாகவும், நண்பர்களுக்கு இடுக்கண் களையும் நட்பாகவும் இல்லாமல் ஒருவர் படைப்பாளியாக முடியாது. இந்த மானுட நேயம் இல்லாமல் ஒரு படைப்பாளியால் தனது அனுபவங்களை அடுத்தவரிடம் தொற்ற வைக்க முடியாது.
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிராத கலை இலக்கியவாதிகளை யாழ்ப்பாணத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏறத்தாழ எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோவொரு தேவைக்காக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள்தான்.கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் ஒரு பத்திரிகை நேர்காணலில் 'காலம் என்னைக் கையில் தூக்கி வைத்திருக்கிறது எப்பொழுது என்னுடைய கவிதையின் வேலை முடிகிறதோ அப்பொழுது காலம் என்னைக் கைவிட்டு விடும்' என்று சொல்லியிருந்தார். இப்போது காலம் மட்டுமல்ல: அவருடன் உறவு கொண்டிருந்த கலை இலக்கியப் படைப்பாளிகளும் அவரைக் கைகழுவி விட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரையில் எந்தவொரு படைப்பாளியோ இலக்கிய அமைப்போ அவர் எங்கே எப்படி இருக்கிறார் என்று கேட்கத் துணியவில்லை. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மானுட நேயம் என்னும் தமது அடிப்படைத் தகுதியை படைப்பாளிகள் இழந்துவிடக்கூடாது.
இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்பார்கள். சமீபத்தில் எமது மூத்த எழுத்தாளர் ஒருவர் 'தீராநதி' இல் எழுதிய 'நந்திக் கடலில் கரைந்த கனவுகள்' என்ற சிறுகதையைப் படித்தேன். மாவிலாறு அணையில் சிங்கள மக்களுக்கான நீர்ப்பாசனத்தை தடுத்து விடுதலைப் புலிகள் தொடக்கி வைத்த யுத்தமே ஒரு சனியனைப் போல நந்திக் கடல் வரை பின்தொடர்ந்து இத்தனை பேரழிவுகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதே கதையின் சாராம்சம். இலக்கியவாதிகள் படைப்புகளில் காலத்தைப் பிரதிபலிக்கும்போது கூடவே தங்கள் விமர்சனப் பார்வையையும் பதிந்து செல்வது தவிர்க்க முடியாதது. ஆனால் இந்தக் கதையில் எழுத்தாளர் படைப்பிற்குரிய விமர்சன எல்லையையும் தாண்டி வரிக்கு வரி நஞ்சையே கக்கியிருக்கின்றார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டதற்கான காரணங்கள் அப்படியேதான் நீடிக்கின்றன. அந்த நியாயங்களைப் படைப்புகளில் மறுதலிக்க முற்படுவது வரலாற்றுப் பிழையாகவே அமையும்.
கவிஞர் மட்டுவில் ஞானகுமாரன் சமூகத்தின் மீதான தனது பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் ஆணித்தரமாகச் சொந்தப் பெயரிலேயே பதிவு செய்து வருகிறார். கருத்துகளை புனை பெயர்களில் மறைந்து கொண்டு சொல்ல வேண்டிய காலச் சூழலிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், புனை பெயர் எழுத்துகளுக்கும் ஒரு அறநெறி இருக்கின்றது. ஒவ்வொரு ஊடகத்தினதும் ஆசிரியர் பீடத்திற்கேற்பத் தனது எழுத்தை, கருத்தை, சுயத்தை மாற்றிக் கொண்டு, ஒவ்வொரு ஊடகத்திற்கெனவும் ஒவ்வொரு புனைபெயர் வைத்துக் கொண்டு எழுதும் போக்கு உருவாகி வருகிறது. இந்த எமுத்து விபச்சாரத்தனம் கலை இலக்கியப் படைப்பினுள் ஊடுருவுவது படைப்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.
குப்பிளான் ஐ.சண்முகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் அறிமுக விழாவில் பேராசிரியர் அ.சண்முகதாஸ், கலை இலக்கிய விமர்சகர் சி.ரமேஷ், சு.குணேஸ்வரன், நூலாசிரியர் மட்டுவில் ஞானகுமாரன் ஆகியோரும் உரையாற்றினர்.

18 மே 2011

இறந்தவர்களுக்கும்,தப்பியவர்களுக்கும் நாம் கொடுக்கும் மரியாதை சர்வதேச விசாரணையே!

வன்னியில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் நாம் மதிக்கவேண்டும் எனில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஜோலந்தா போஸ்ரர் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையி;ல் தெரிவித்துள்ளார்.
நேற்று (17) வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற போர் நிறைவடைந்து இன்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என நாமும், போரில் தப்பியவர்களும் வேண்டிக்கொள்கிறோம்.
2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்துவிட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்கவில்லை. அது தற்போதும் எனது நினைவுகளில் உள்ளது.
சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், சிறீலங்கா அரசு பொதுமக்கள் மீது எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளபோதும், சிறீலங்கா அரசு தொடர்ந்து அதனை மறுத்துவருகின்றது.
ஒரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என அது தெரிவித்துவருகின்றது. சிறீலங்கா அரசின் இந்த பொய் போரில் தப்பியவர்களின் உரிமைகளை மறுப்பதாகும். அங்கு கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு மரண நிகழ்வுகளை கொண்டாட முடியாத நிலையிலும், இறப்புச் சான்றிதழ்களை பெற முடியாத நிலையிலும் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.
என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்த விடயம் என்னவெனில், போரின் இறுதி மாதங்களில் வைத்தியசாலைகள் மீது சிறீலங்கா அரசு திட்டமிட்ட முறையில் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது தான்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. சிறீலங்கா அரசு பொதுமக்களை எவ்வாறு குறிவைத்து படுகொலை செய்துள்ளது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
இந்த வைத்தியசாலை மீது 16 மணிநேரம் தொடர் எறிகணை வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அனைத்துலக மன்னிப்புச்சபை தனது கொள்கையிலும், உண்மைத்தன்மையிலும் உறுதியாக நின்று, சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்துலக விசாரணைகளை கோரவேண்டும் என ஒரு இளம் பெண் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஐ.நா அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்துள்ளது. ஆனால் உண்மை வலிமையானது. சிறீலங்கா அரசு மறைக்கமுற்பட்டபோதும், ஐ.நா அறிக்கை உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
எனவே வன்னியில் இடம்பெற்ற போரில் இறந்தவர்களையும், தப்பியவர்களையும் நாம் மதிக்கவேண்டும் எனில் அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 மே 2011

கல்முனை மாணவனின் சாதனை!

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் நடராஜா சஞ்ஜீவநாத் என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருக்கோவிலைச் சேர்ந்த இம்மாணவன் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சூரிய சக்தியில் இயங்கும் இம் மோட்டார் கார் கண்டு பிடித்ததன் மூலம் தமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் வீ.பிரபாகரன் தெரிவித்தார்.
சூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் காரினை தயாரிக்க 22,000 ரூபா செலவு மட்டுமே ஏற்பட்டுள்ளது.இதில் இரண்டு பேர் செல்ல முடியும்.
அத்தோடு அங்கவீனமானவர்களுக்கும் சிறுவியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும் மிகவும் பொருத்தமானதாகவும் பாதுகாப்பான வாகனமாகவும் உள்ளதாகவும் மணிக்கு 25 கிலோ மீற்றர் வேகத்தில் இது பயணிக்கக் கூடியதாகவும் உள்ளது.
வெகு விரைவில் நீரிலும் நிலத்திலும் செல்லக் கூடிய வாகனம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் இந்த மாணவன் சஞ்ஜீவநாத் தெரிவித்தார்.

யாழ்,பல்கலைக் கழகத்தில் பெளத்த சங்கத்திற்கு அனுமதியில்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பௌத்த சங்கம் ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை செய்திகள் கூறுகின்றன. ஆனால் இவ்வாறான சங்கம் ஒன்றிற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகின்றது. இது தொடர்பாக தெரியவருவதாவது.
இந்தச் சங்கத்தின் தலைவராக அமித்புஸ்பகுமார என்ற மாணவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் துணைத் தலைவராக லதீப், ஹாசினி சசித்ரா செயலாளராகவும், தங்கராஜா பிரதீப் துணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று ஆங்கில ஊடகங்கள் தெரிவித்தன. யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக பௌத்த சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவை குறிப்பிடுகின்றன.
எனினும் பல்கலைக் கழக வட்டாரங்களில் இருந்து பௌத்த சங்கம் உருவாக்கப்பட்ட செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.அதற்கான முயற்சிகள் சில இடம்பெற்றன என்பதை மாணவர்கள் சிலர் உறுதிப்படுத்தினர். “சிங்கள மாணவர்கள் சிலர் சேர்ந்து வெசாக் கொண்டாடுவதற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்பின் விவரங்கள் துணைவேந்தருக்கும் சமர்ப்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அதனை அவர் அங்கீகரித்தாரா? இல்லையா? என்பது தெரியாது” என்றார் மாணவர் ஒருவர். பல்கலைக்கழகத்துக்குள் வெசாக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு சிங்கள மாணவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள், “குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் தவிர்ப்பது நல்லது” என்ற அறிவுரையை அடுத்துக் கைவிடப் பட்டதாகவும் ஒரு தகவல் தெரிவித்தது.
பல்லைக்கழகத்துக்குள் பௌத்த சங்கம் ஒன்றை அமைப்பதன் பின்னணியில் படையினர் செயற்படுகின்றனர் என்றும் மற்றொரு தகவல் தெரிவித்தது.

16 மே 2011

ஊடகவியலாளருக்கு இலங்கையில் பாதகமான சூழலே காணப்படுகிறது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து அமைதியும் பாதுகாப்பும் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டாலும் ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் ஆபத்தான சூழலே நிலவி வருவதாக சுதந்திர ஊடகவியலாளர் தர்மசிறி லங்காபேலி தெரிவித்தார்.
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்த தர்மரத்தினம் சிவராம், ஐயாத்துரை நடேசன் ஆகியோரின் நினைவு தின நிகழ்ச்சியில் யுத்தத்தின் பின்னரான கா காட்டத்தில் ஊடக சுதந்திரம் என்ற தலைப்பில் நினைவுப் பேருரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு வெள்ளவத்தை தமிழ்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நினைவுப்பேருரை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இராசநாயகம் பாரதி தலைமையில் நடைபெற்றது.
சுதந்திர ஊடகவியலாளர் தர்மசிறி லங்காபேலி தொடர்ந்து உரையாற்றுகையில் மிக நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கையில் முக்கியமாக வடக்கு கிழக்கில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களான சிவராம், நடேசன் போன்றவர்கள் கொல்லப்பட்டனர். தமக்கு உயிராபத்து என அறிந்து கொண்ட போதிலும் உண்மையை வெளிப்படுத்தியதற்காக அவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டது.
இப்போது இலங்கையில் யுத்தம் முடிந்து விட்டது. அமைதி நிலவுகிறது என பிரசாரம் செய்யப்படுகிறது. யுத்தம் முடிந்து விட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் அமைதி நிலவுகிறது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய சூழல் உள்ளது என கூறமுடியாது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் எவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்களும் உயிராபத்துக்களும் இருந்ததோ அதே போன்றே இப்போதும் அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் தொடர்ந்து காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
இதுவரை 30க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும் கொலையாளிகளில் ஒருவருக்கு கூட தண்டனை வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் பேராசிரியர் கீதபொன்கலன் சிறப்புரையாற்றினார். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதி தலைவர் ஏ.நிக்ஷனும் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன், உட்பட ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

15 மே 2011

ஊர்காவற்றுறையில் சிசுவின் சடலம் மீட்பு!

ஊர்காவற்றுறை மூன்றாம் கட்டைப்பகுதியில் உள்ள பற்றைக்குள்ளிருந்து துணிகளினால் சுற்றப்பட்ட நிலையில் குறைமாத சிசுவொன்றின் சடலம் ஊர்காவற்றுறை பொலிசாரால் இன்று ஞாயிறு மீட்கப்பட்டுள்ளது.அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலமானது மிகவும் சிதைவடைந்து காணப்படுவதாகவும்,இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட சிசுவின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக ஊர்காவற்றுறை அரசினர் மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை பற்றைக்குள் வீசியது தொடர்பாக விசாரணைகள் மேற் கொள்ளப்படுவதாகவும் ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

14 மே 2011

காங்கிரசுக்கு சீமான் கொடுத்த அடியால் தங்கபாலு இராஜினாமா!

தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
2006-ல் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களில் வென்றது. இந்த முறை அதே கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்திருக்கிறது. இது தமிழக காங்கிரஸ் கட்சி பெற்ற மோசமான தோல்வியாகும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்தார். தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஏனைய இடங்களில் படுதோல்வி அடைந்தது.
மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட தங்கபாலுவும் படுதோல்வி அடைந்தார். இதனையடுத்து தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று அவரது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்ப இருப்பதாக கூறியுள்ளார்.தங்கபாலுவின் தோல்வி தமிழக மக்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழினத்திற்கும் சேர்த்து செந்தமிழன் சீமான் பெற்றுக் கொடுத்த வெற்றி.
எல்லாப் புகழும் சீமானுக்கே.

ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துச்சொன்னார் விஜய்.

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், பெரும்பான்மை வெற்றி பெற்றிருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களை, திரைப்பட நடிகர் திரு. விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான திரு. எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
நடந்து முடிந்த தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தேர்தலுக்கு முன்னதாக ஜெயலலிதாவை விஜய் நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்ட போதும், அவ்வாறான சந்திப்புக்கள் ஏதும் நடைபெறவில்லை. ஆயினும் விஜயின் தந்தையார் சந்திரசேகர் இரு தடவைகள் ஜெயலிதாவை நேரில் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விஜயின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் என அறிவிக்கப்பட்டதுடன், இயக்குனர் சந்திரசேகர் நேரடியான தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுகவின் அபார வெற்றி உறுதியானநிலையில், நேற்று மாலை சென்னை போயஸ்கார்டனிலுள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு தனது தந்தையார் சந்திரசேகருடன் , நடிகர் விஜயும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்.

13 மே 2011

நெடுமாறன் ஐயா விடுக்கும் வேண்டுகோள்.

தமிழகத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் மக்கள் அமைதிப் புரட்சி செய்துள்ளனர் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட, பெரும்பாலான திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.
ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் செய்த அப்பட்டமான துரோகத்திற்கும், தமிழக மீனவர்களை காக்கத் தவறியதற்கும், இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்ததற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட முயற்சிக்கும் சரியான பாடத்தினை மக்கள் கற்பித்திருக்கிறார்கள்.
பண பலம், அதிகார பலம், இலவசங்களை வாரி இறைத்தல் ஆகிய எதற்கும் மக்கள் ஏமாறவில்லை. திமுக கூட்டணி செய்த முறைகேடுகளை முறியடித்துள்ளனர்.திருமங்கலம் சூத்திரத்தை செயற்படுத்த விடாமல் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நேர்மையான நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி உள்ளன.
மத, சாதி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்தத் தமிழகமும் திமுக கூட்டணிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது.
மக்கள் அளித்த இந்த தீர்ப்பினை வரவேற்றுப் பாராட்டும் அதே வேளையில் புதிய அரசை அமைக்கவிருக்கும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கும் எனது பாராட்டுதலையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முதல் கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
ஐ நா. விசாரணைக் குழுவினால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இராசபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும்,
இலங்கையில் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கு ஐ. நா. படையை அங்கு அனுப்பி வைப்பதற்கும், தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான அவசர நடவடிக்கைகளைத் தலையாய கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

12 மே 2011

யாழ்,மாணவிக்கு சிங்களத்தால் நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 19 வயது பாடசாலை மாணவியொருவர் சிங்கள இளைஞர்களால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமாராட்சி பிரதேசத்தின் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவியை கடந்த திங்கட்கிழமை வெள்ளை வானில் வந்த 3 சிங்கள இளைஞர்கள் கடத்தி சென்றனர்.
கடத்திச்சென்றவர்கள் மாணவியை தனிச் சிங்களப் பிரதேசமான மஹியங்கனைக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் அவரது தலை முடியையும் வெட்டியுள்ளதோடு அவரை அறையொன்றில் கட்டி வைத்துள்ளனர்.
அவர்களின் பிடியில் இருந்து தப்பிய மாணவி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மாணவியை நேற்று முன்தினம் யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். ஆயினும் இச் சம்பவம் தொடர்பாக சிங்கள இளைஞர் ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது.
குறித்த மாணவியின் தந்தை காலமாகி விட்டார் என்பதோடு குறித்த மாணவி இவ்வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவியை அறிவுறுத்திய ஆசிரியை பணிநீக்கம்.புங்குடுதீவில் சம்பவம்.

அரசின் கொழும்பு மேதினக் கொண்டாட்டங்களுக்குச் சென்ற மாணவியின் முறைப்பாட்டினையடுத்து அவருக்கு பாடம் கற்பித்து வந்த ஆசிரியை பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு விடுத்த உத்தரவையடுத்தே, இப்பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியை யொருவருக்கே இப்பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
கடந்த மேதின அரசின் கொண்டாட்டங்களுக்காக, யாழ்ப்பாணத்திலிருந்தும் ஈ.பி.டி.பி. பொதுமக்களை அழைத்துச் சென்றுள்ளது. கைச்செலவுக்கு பண உதவியுடன், இலவச போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், பலரும் குடும்பம குடும்பமாக தீவகப் பகுதியிலிருந்து கொழும்பு சென்று திரும்பியிருந்தனர்.
குறித்த மாணவியும் தனது தாய், தந்தையருடன் கொழும்பு சென்று நீண்ட நாட்களின் பின்னரே வீடு திரும்பி பாடசாலை சென்றுள்ளார்.இம்முறை சாதாரண தரப்பரீட்சையில் இம்மாணவி தோற்றவுள்ள நிலையில், வரவு சீரில்லையெனக்கூறி குறித்த ஆசிரியை மாணவியை தண்டித்துள்ளார். அத்துடன் பெற்றோர் மேதினத்துக்கு செல்கின்ற நிலையில், மாணவியான நீ படிப்பினை குழப்பக்கூடாதெனவும் அறிவுரை கூறியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த மாணவி பெற்றோருக்குக் கூற ஆசிரியை தாக்கியதால் தனது மகள் மயக்கமுற்றுவிட்டதாக அவர்கள் ஈ.பி.டி.பி.க்கும் அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்தே ஆலோசனை கூறிய ஆசிரியை அமைச்சரின் உத்தரவினில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

11 மே 2011

மகளின் கைபேசியில் ஆபாசப்படம்,தந்தை தற்கொலை.

தனது மகளின் கையடக்க தொலைபேசியில் இருந்த ஆபாச வீடியோ காட்சிகளை தனது மனைவி, மகளுடன் பார்வையிட்ட தந்தை தன்னனைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கொக்கரல்லை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கொக்கரல்லை ஜனபாகமன பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஜே.ஏ.சுகத்தபால எனப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
கொக்கரல்லை பிரதேச பாடசாலையில் மகள் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகளின் கையடக்க தொலைபேசி பாடசாலை அதிபருக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அதில் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தமை கண்டறிப்பட்டமையாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் குறித்த அதிபர் மாணவியின் பெற்றோரை பாடசாலைக்கு வரவழைத்து அவர் முன்னிலையிலேயே குறித்த வீடியோ காட்சிகளை பெற்றோருக்கு காண்பித்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து வீட்டுக்கு சென்ற தந்தை கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொக்கரல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியையிடம் கற்பை கப்பமாக கேட்ட அதிகாரி கைது.

இடமாற்றம் பெற்று தருவதாயின் தனது விரும்பத்திற்கு இணங்கவேண்டும் என தெரிவித்து ஆசிரியை ஒருவருடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட வடமேற்கு மாகாணசபையின் கல்வி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் குருநாகல பகுதியில் உள்ள விடுதி ஒன்றை சோதனையிட்ட சிறீலங்கா காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த கல்வி அதிகாரியிடமும், அவருடன் இருந்த ஆசிரியையிடமும் விசாரணைகளை மேற்கொண்ட போதே இந்த சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
தனது இடமாற்றம் தொடர்பில் கல்வித்திணைக்களத்திற்கு சென்றபோதே தான் குறிப்பிட்ட அதிகாரியை சந்தித்ததாக ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எனினும் இடமாற்றம் கேட்டுச் செல்லும் பல ஆசிரியைகளிடம் குறிப்பிட்ட கல்வி அதிகாரி இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

10 மே 2011

நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு பிரான்ஸ் ஆதரவு.

ஐ.நா செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளுக்கு பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக விதிகளின் மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிபுணர் குழுவின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்ததுபோல, அனைத்துலக சுயாதீன விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு நாம் எமது ஆதரவுகளை வழங்குவோம்.
சிறீலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை கடந்த 2010 ஆம் ஆண்டு அமைத்துள்ளது. இந்த ஆணைக்குழுவின் பணியும், ஐ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் முக்கியமானவை.
எனவே சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்துடன் காத்திரமான வழிகளில் இணைந்து செயற்பட வேண்டும். நாட்டில் இனநல்லிணக்கப்பாடு ஏற்பட முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இந்த இரண்டு வழிகளையும் சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 மே 2011

ஜி.ரி.வி.யின் ஜெர்மன் பொறுப்பாளர் சிவலிங்கம் இலங்கை தூதரகத்தில் இரகசிய சந்திப்பு?

தமிழ் தேசியத்தின் பக்கம் பலமாக நிற்பதாக தம்மை இனங்காட்டி ஜரோப்பிய ஈழத் தமிழ் உறவுகளிடம் பல மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக திரட்டி அந்த பணத்தில் இயங்கி வருவது ஜி.ரி.வி தொலைக்காட்சி. குறித்த தொலைக்காட்சியின் ஜேர்மனி பொறுப்பாளராக யாழ்ப்பாணம் வடமராட்சியை சேந்த சிவலிங்கம் என்பவர் கடமையாற்றி வருகிறார்.
ஜேர்மனி நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் இவர் கடந்த புதன் கிழமை ஜேர்மனி நாட்டின் தலைநகரம் பிறாங்போட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் இரகசிய சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார்.
ஆனால் சாம்பல் நிற கோட்டுடன் இலங்கை தூதுவராலயத்தில் இரகசியமாக உள்நுழைந்த சிவலிங்கம் பல மணி நேரம் ஜேர்மனியில் உள்ள புலி ஆதரவாளர்கள் தொடர்பான தகவல்களை பரிமாறிவிட்டு வெளிவந்ததாக பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.
இது தொடர்பாக நாம் ஜி.ரி.வி ஜேர்மனி நாட்டு பொறுப்பாளர் சிவலிங்கத்திடம் விசாரித்தபோது தான் இலங்கை தூதுவராலயத்துக்கு போய் சந்திப்பை நடாத்தியது உண்மைதான் என்றும் ஆனால் அது ஒரு திருமணத்துடன் சம்மந்தபட்ட விடயம் எனவும் மேலும் தன்னை சந்தித்து கலந்துரையாடிய இலங்கை தூதுவராலய அதிகாரி தன்னை வடமராட்சி என கூறி அறிமுகபடுத்தியதாகவும் எமக்கு தெரிவித்தார்.
இத்தகைய நட்புறவான உறவாடல்கள் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் ஜீ.ரி.வி ஜேர்மனி நிர்வாகி தொடர்பாக சந்தேகத்தை பலப்படுத்தி உள்ளது.

மது போதையில் தள்ளாடும் இள வயதினர்.

யாழ். மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கு இடையே அண்மைக்காலத்தில் புகைத்தல் மற்றும் மதுபானப் பாவனையின் ஈடுபாடு அதிகரித்துக் காணப்படுகிறது.
பாடசாலை மாணவர்களின் வருகை மற்றும் ஒழுக்கம் போன்ற விடயங்களில் ஆசிரியர்கள் உரிய கவனம் எடுக்காமையே இத்தகைய நிலைமைக்குக் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டுகின்றார்கள்.இதற்கு ஏற்ப கடந்தவாரம் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெல்லிப்பழை கல்விக் கோட்டப் பாடசாலையின் மாணவர்கள் சிலர் குறிப்பாக 16 வயதுக்கு உட்பட்டவர்கள் வாடகைக்கு வான் ஒன்றில் காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் சென்று நல்ல மதுபோதையில் திரும்பி உள்ளனர். அவர்கள் நடக்க முடியாத நிலையில் தள்ளாடியபடி சுன்னாகம் ஐயனார் கோயில் வீதியில் காணப்பட்டனர். இவர்களைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.பெற்றோர்களும் பிள்ளைகளிடம் கொடுக்கும் பணம் உரிய தேவைக்குப் பயன்படு கின்றதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

08 மே 2011

ஸ்ரீலங்கா விவகாரம் அவசரமாக கூடுகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் 12 ஆம் நாள் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்த கூட்டத்தில் ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் விவாதிக்கப்படுவதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மேலதிக சுயாதீன விசாரணைகள் அவசியம் என்ற பரிந்துரையையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கிறீன் கட்சியை சேர்ந்த 50 உறுப்பினர்கள் மேற்கொண்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் தொடர்பான தகவல்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறீலங்கா தூதுவர் ரவிநாதா ஆரியசிங்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகமும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அறிக்கையை சக்திவாய்ந்த ஐரோப்பிய ஒன்றியம் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் சுயாதீன விசாரணைக்குழுவை அமைப்பதில் இருந்து சிறீலங்கா தப்பமுடியாது என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வருடம் மே மாதம் அவசர கூட்டத்தை நடத்திய ஐரோப்பிய ஒன்றியம், சிறீலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

07 மே 2011

வேலை பெற்றுத்தருவதாக கூறி இளம் பெண்கள் கடத்தல்.

யாழ். நாவாந்துறைப்பகுயில் சிறீலங்கா படையினரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரிகளின் உதவியுடன் சிறீலங்காவின் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்று இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் சிலரை கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு அந்தப் பிரதேச கிராம அலுவலரும் உடந்தையாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பிராந்திய மக்களை அழைத்த சிறீலங்கா படையினர், உங்கள் பிள்ளைகளுக்கு 17 ஆயிரம் ஊதியத்துடன் வேலை பெற்றுத் தருகின்றோம் எனவும், வேலையற்ற பெண் பிள்ளைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என அறிவுறுத்தியதன் பின்னணியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
படையினரது இந்த தந்திரோபாய அறிவித்தலைத் தொடர்ந்து மக்கள் தமது பெண் பிள்ளைகளுடன் படை முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களை நேர்முகத் தேர்வு செய்த படையினர் குறிப்பிட்ட சிங்கள நிறுவன அதிகாரிகளுக்கு கையளிப்பதாக அழைத்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், அதன் பின்னர் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என தெரியாது எனக் கூறுகின்றனர்.
குறிப்பாக அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது என்றும், அவ்வாறான ஒரு தொழிற்சாலையில் தான் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளதாக மட்டும் பெற்றோர் கூறுகின்றனர்.
இதில் 15 அகவைக்கு உட்பட்ட சில சிறுமிகளும் உள்ளடங்குவதாகவும், அவர்களைக்கூட வேலை பெற்று தருவதாக கூறி ஆக்கிரமிப்புப் படையினர் அழைத்து சென்றுள்ளதாகவும் யாழ் செய்தியாளர் கூறுகின்றார். அத்துடன், 16 அகவைக்கு உட்பட்டவர்களை பணிக்கு அமர்த்துவது சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறீலங்கா அரசாங்கம் தனது நிகழ்சி நிரலில் முக்கிய நிரலிட்டுள்ள விடயம் என்னவெனில், தமிழ் மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தம்மை தனி இனமாக பிரகடனப்படுத்தக் கூடிய கலாசார, பண்பாட்டு, மொழி, மற்றும் நிலப்பரப்பு போன்ற அடையாளங்களை ஊடுருவி அழிப்பதாகும்.
இவ்வாறான கடத்தல்கள் மூலம் தமிழ் இளம் பெண்களிடம் சிங்கள கலப்பு அடையாளம் ஒன்றை உருவாக்கி, அதனை தமிழர் தாயகத்துக்குள் ஊடுருவவிட்டு தனித் தமிழர் பகுதிகள் என தற்போது கணிக்கப்படும் பகுதிகளை இல்லாது ஒழிப்பதற்கான திட்டங்கள் கச்சிதமாக வகுக்கப்பட்டுள்ளன. எனவே இதை தடுக்கும் முகமான நீண்ட கால வேலை திட்டங்கள் தமிழர் தாயகத்திற்கு மிக அவசியம் என்பதை இச்சம்பவம் கோடிட்டு காட்டுகின்றது.

06 மே 2011

ஆலய தீர்த்தக்கேணியில் விழுந்த சிறுவனை காப்பாற்றாது தடுத்த நிர்வாகம்.(மேலதிக செய்தி)

கடந்த 3 ஆம் திகதி அன்று
புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய தீர்த்தக்கேணியில் 10 வயதுடைய
ஞாநேந்திரன் எழிலரசன் என்ற சிறுவன் தவறி விழுந்து உயிர் இழந்துள்ளார்,இவ்
பரிதாபகரமான மரணத்திற்கு ஆலய நிர்வாகத்தினரின் அசமந்தப்போக்கே காரணமென
புளியங்கூடல் மக்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் பறறி மேலும் தெரியவருவதாவது,
குறித்த தினம் அன்று காலை ஆலய தீர்த்தோட்சவம் இடம்பெற்று பிற்பகல் கொடியிறக்க
வைபவம் நிகழ்ந்து கொண்டிருந்தத வேளை குறித்த தீர்த்தக்கேணி அருகில் விளையாடி
கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரான 10 வயதுடைய ஞாநேந்திரன் எழிலரசன் என்பவர்
பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் அறற ஆலய தீர்த்தக்கேணியில் தவறி
விழுந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அப்பகுதியில் நின்ற சிலரால்
ஆலயத்திற்குள் நின்ற நிர்வாக சபையினரிடம் தெரிவிக்கப்பட்டு சிறுவனை உடனடியாக
காப்பாற்ற உதவி கோரப்பட்டது. அப்போது கொடியிறக்க வைபவம் இடமபெற்றுகொண்டிருந்த
படியால் ஆலய நிர்வாக சபையின் முக்கிய உறுப்பினர் ஒருவரால் ``கொடியிறக்கிய பின்பே
குழந்தையை தூக்கலாம்`` என தெரிவிக்கப்பட்டது.இதனால் காப்பற்ற யாரும் இன்றி நீரில்
தத்தளித்த குறித்த சிறுவன் நீரில் முழ்கி பரிதாபகரமாக உயிர் இழந்துள்ளார்.இது
சம்பந்தமாக ஆலய நிவாக சபையிடம் தட்டிக்கேட்க முற்பட்ட இளைஞர்கள் அச்சுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
கடந்தகால போரினால் தந்தையை பிரிந்து
நிர்க்கதியான ஒரு குடும்பம் இன்று தனது பிள்ளைகளில் ஒன்றை இழந்து
பரிதவிக்கிறது.
``தனது பிள்ளை கேணியில் விழுந்திருந்தால் குறித்த ஆலய நிர்வாக சபை
உறுப்பினர் கொடி இறக்கிய பின்னா வந்து பிள்ளையை தூக்கி இருப்பார் ? ``என் அப்பகுதி
இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறித்த சிறுவன் கேணியில் வீழ்ந்தது தெரிந்திருந்தும், காப்பற்ற கூடிய
சந்தர்ப்பம் இருந்தும் காப்பாற்றாமல் கொடி இறக்குவதிலேயே குறியாய் இருந்த கோவில்
நிர்வாகத்தினர் கடந்த கால போரினால் தந்தை பற்றி தெரியாத நிலையில் தனது பிள்ளைகளை
காப்பாற்றி கொண்டுவந்து இன்று அநியாயமாக பறிகொடுத்திருக்கும் தாயின் புலம்பலுக்கு
என்ன பதில் சொல்ல போகிறார்கள்.....????????

புளியங்கூடல் பிள்ளையார் கோவில் தீர்த்தக் கேணியில் மூழ்கிய சிறுவனுக்கு நேர்ந்த அவலம்.

யாழ்,தீவகம் புளியங்கூடல் இந்தன் முத்துவினாயகர் ஆலய தீர்த்தத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை 03.05.2011 அன்று நடைபெற்றதும் அன்றைய தினம் மாலை சிறுவன் ஞானேந்திரன் எழிலரசனின் சடலம் ஆலய தீர்த்தக் கேணியிலிருந்து மீட்க்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே.


ஆனாலும் ஆலயத்தின் கொடி இறக்கப்படும்வரை சிறுவனின் சடலத்தை தூக்கக் கூடாதென சிலர் தடை போட்டதாக அங்கிருந்து ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.அத்துடன் அச்செய்தியை வெளியிட்டவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் அவர் அசெய்தியை தனது வலைப்பூவிலிருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இச்செய்தியை அறிந்ததும் புலம்பெயர் தேசத்தில் வாழும் புளியங்கூடல் மக்கள் பெரும் விசனமடைந்துள்ளனர்.

சிவாஜிலிங்கம் பொலிஸ் விசாரணையில்.

முன்னான் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், உள்ளுராட்சி சபை வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் போது வல்வெட்டித்துறை இராணுவ முகாம் உயரதிகாரிகளும் பங்கெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் குறித்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் தனக்கு அழைப்புக் கிடைத்தது. இந்த அழைப்பிற்கு அமைவாக அங்கு சென்ற போது பொலிஸார் மட்டுமல்லாமல் இராணுவத்தினரும் தன்னை விசாரணைக்கு உட்படுத்தியதாக தெரிவித்தார்.
'வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தையும் அங்குள்ள இராணுவ முகாம்களையும் தற்போதுள்ள இடங்களிலிருந்து அகற்றி வேறிடத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' என கட்சியின் உள்ளுராட்சித் சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தமை தொடர்பில் அவர்களுக்குக் கிடைத்த தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தன்னை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் அதற்கு தனது தெளிவான விளக்கத்தை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

05 மே 2011

யாழில் சிசுக்களுக்கு நிகழும் கொடூரங்கள்.

யாழில் பிறந்து ஒருநாளில் இறந்த சிசுக்களின் சடலங்கள் மூன்று யாழ்.போதன வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பணிப்பில் பரிசோதனைக்காக இன்று வியாழக்கிழமை யாழ்.போதன வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது
யாழ்.சுன்னாகம் பகுதியிலிருந்து ஒரு சிசுவையும், அல்வாய்ப் பகுதியிலிருந்து இன்னொரு சிசுவையும் மற்றும் இளவாலைப் பகுதியிலிருந்து மற்றைய சிசுவும் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சிசுக்களின் மரணம் தொடர்பாக மருத்துவப்பரி சோதனை செய்யப்படவுள்ளதாகவும் மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் குறித்து சிசுக்களின் தாயாரிடம் விசாரனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பீரிசின் கூற்றில் உண்மையில்லை என ஐ.நா.தெரிவிப்பு.

ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து உண்மையல்ல என ஐ.நாவின் பேச்சாளர் மாட்டின் நெசக்கி தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகத்துடன் தான் தொலைபேசியில் கலந்துரையாடியதாக பீரீஸ் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடந்த மாதம் 23 ஆம் நாளே பீரீஸ் இறுதியாக பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
ஆனால் ஐ.நா 25 ஆம் நாளே தனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றுவரை சிறீலங்கா அரசு அறிக்கை தொடர்பில் தனது பதிலை தரவில்லை. அவர்கள் பதில் அளித்தால் நாம் அதனையும் வெளியிடுவோம் என நெசக்கி மேலும் தெரிவித்துள்ளார்.

ஒசாமா கைது செய்யப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்க சிறப்பு படையினர் அல்கைடா தலைவர் ஒசாமா பின்லாடனை உயிருடன் கைது செய்த பின்னரே சுட்டுக்கொலை செய்துள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பின்லாடன் உயிருடன் கைது செய்யப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்லாடனின் மகள் தெரிவித்துள்ளதாகவே அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கப் படையினர் தாக்குதலை மேற்கொண்ட சில நிமிடங்களில் தனது தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதாக பின்லாடனின் மகள் தெரிவித்துள்ளார். பின்லாடன் சுடப்பட்டதை அவரின் மகள்கள் இருவர் நேரடியாக பார்த்துள்ளனர்.
பின்லாடன் தங்கியிருந்த இடத்தில் இருந்து குண்டுகள் துளைக்கப்பட்ட நான்கு சடலங்களை பாகிஸ்தான் படையினர் கைப்பற்றியதுடன், இரு பெண்கள் உட்பட 8 பேரையும் கைது செய்துள்ளனர்.
அவர்களில் 2 வயது முதல் 12 வயது வரையான ஆறு சிறுவர்களும் அடங்கியுள்ளனர். எனினும் அங்கிருந்து ஆயுதங்களோ அல்லது வெடிமருந்துகளோ மீட்கப்படவில்லை.
வீட்டில் இருந்த தப்பிச் செல்வதற்கான பதுங்கு குழிகளோ அல்லது நிலத்திற்கு கீழான பாதைகளோ இருக்கவில்லை. அந்த வீட்டில் பின்லாடன் கடந்த 5 வருடங்களாக தங்கியிருந்துள்ளார். எனினும் அந்த வீட்டில் இருப்பவர்கள் தொடர்பில் அயலவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. 20 அடி உயரம் கொண்ட சுவர்கள் மிகவும் ஆச்சயமானவை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டில் உள்ள இருவர் தனது கடையில் குளிர்பானங்களும், சிகரட்டுக்களும் வாங்குவதாக பின்லாடனின் வீட்டுக்கு அருகில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்லாடனின் வீட்டில் எருமைகளும், மாடு ஒன்றும், 150 கோழிகளும் இருந்ததாகவும் பாகிஸ்தான் படையினர் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் வசித்து வந்த வீட்டைக் கட்டிக் கொடுத்த காண்டிராக்டரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று இவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் குல் முகம்மது. ஆனால் இவரை பெரும்பாலும் செல்லமாக குல் மதா அல்லது மிது கான் என்றுதான் கூப்பிடுவது வழக்கமாம். இவர் அபோதாபாத் அருகில் உள்ள பிலால் நகரில் வசித்து வருகிறார். இவரை நேற்று போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
50 வயதாகும் குல் முகம்மது, கைபர்-பக்தூன்கவா மாகாணத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளாகத்தான் அபோதாபாத் அருகே வசித்து வருகிறார். எனவே பின்லேடனுக்காகவே இவர் இந்தப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவருக்கும் பின்லேடனுக்கும் தொடர்புகள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதுபோக வீடு கட்ட உதவியர்கள், கட்டுமானப் பணிக்கு பொருட்களைக் கொடுத்து உதவியர்கள் என பல தரப்பினரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஹிஸ்புல் முஜாஹிதினுக்கு சொந்தமான வீடு?
இதற்கிடையே, பின்லேடன் வசித்து வந்த வீடு, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்குச் சொந்தமான வீடு என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த அமைப்பினர்தான் லேடனை பாதுகாப்பாக இங்கு கொண்டு வந்து தங்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

04 மே 2011

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் தீர்த்தக்கேணியில் சிறுவனின் சடலம்.

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலிலுள்ள இந்தன் முத்துவிநாயகர் கோயில் தீர்த்தக் கேணியிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை புளியங்கூடலைச் சேர்ந்த எ.எழிலரசன் என்ற 10 வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
நேற்று காலை மேற்குறித்த கோயிலில் நடைபெற்ற தீர்த்தத் திருவிழாவிற்கு சென்ற சிறுவன் வீடு திரும்பாமையால் அவனது பெற்றோர் ஊரெங்கும் தேடியவேளை சிறுவன் தீர்த்தக்கேணியில் சடலமாக இருப்பதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அச்சிறுவனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளைக்கொடி ஏந்தி வருபவர்களை அமெரிக்கப் படையினர் கொல்வதில்லை.

அல் கய்தா இயக்கத்தின் தலைவர் பின் லேடன் வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய முயற்சிக்கவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சரணடைய முயற்சி செய்திருந்தால் பின் லேடனை அமெரிக்கத் துருப்பினர் உயிருடன் கைது செய்திருப்பார்கள் என அமெரிக்க தேசியப் பாதுகாப்புப் பேரவையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு செவ்வியளித்துள்ளார்.
எனினும், பின் லேடனை கொலை செய்யும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய முயற்சி செய்திருந்தால் பின் லேடனை உயிருடன் கைது செய்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகாமையில் அமெரிக்க கொமான்டோக்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பின் லேடன் பங்குபற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின் லேடன் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுக் கூறவில்லை என்ற போதிலும் 40 நிமிட மோதல்களின் பின்னர் பின் லேடனின் தலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின் லேடன் கைது செய்யப்படுவதனை விடவும் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியம் அதிகமாகக் காணப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சரணடைய முயற்சி செய்யும் நபர்களை கொலை செய்வதற்கு அமெரிக்க துருப்பினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க வான்படை துருப்பினர்களே ஒசாமா மீது தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஒசாமா உயிரிழந்ததனை உறுதிப்படுத்தும் நோக்கில் இரசாயன பகுப்பாய்வு அதிகாரியொருவரையும் அழைத்துச் சென்றதாக அதகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புலிகள் அமைப்பின் தலைவரை கொல்லுமாறு தமது அரசு உத்தரவிடவில்லை என்கிறார் ஜெயரத்ன.

பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமையானது சர்வதேச சட்டங்களை மீறவில்லையாவென ஸ்ரீலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரட்ன கேள்வியெழுப்பினார்.
கட்டளையொன்றை வைத்திருக்கின்றோம் என்ற சாட்டில் வேற்று நாடொன்று இறைமையுள்ள ஒரு நாட்டினுள் புகுந்து ஒருவரை கொல்லமுடியுமா? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகாரனை கொல்லுமாறு நாங்கள் ஒருபோதும் உத்தரவிடவில்லை. யுத்தம் நடைபெற்ற வேளையில் அவர் மரணமடைந்தார்.
இது தான் இந்த இரண்டு மரணங்களுக்கும் இடையிலான வித்தியாசம். ஒசாமா பின்லேடனின் சடலம் அவர்களுடைய பாதுகாப்பிலேயே உள்ளது' என புறக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்தார்.

03 மே 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த ரொபேர்ட் ஓ பிளேக்.

நேற்றிரவு இலங்கையை வந்தடைந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் வந்த மறுகனமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இரவு 8 மணி முதல் 9.30 மணியளவு வரை நடைபெற்றுள்ளது.
இரு தரப்பினரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதுடன், தமிழருக்கான அரசியல் தீர்வு மற்றும் அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

02 மே 2011

ஒசாமா பின்லேடனுடன் எல்லாம் முடிந்து விட்டதா?

பின்லேடன் மரணத்தோடு சர்வதேச தீவிரவாதம் முடிந்து போய் விட்டது என்று யாராவது கருதுவார்களேயானால் அது மிகப் பெரிய முட்டாள்தனமாகத்தான் இருக்க முடியும். காரணம், இனிமேல்தான் பயங்கரவாதம் மேலும் வலுவடையும் என்று கருதப்படுகிறது.
பின்லேடன் போய் விட்டாலும், அவர் ஏற்படுத்தி வைத்துள்ள அழுத்தம் திருத்தமான கோட்பாடுகள், வெற்றி பெற்ற முந்தைய தாக்குதல்களின் தாக்கம் உலகம் முழுவதும் விரவியுள்ள பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு இனிமேல் மிகப் பெரிய தத்துவமாக, முன்மாதிரியாக இருக்கப் போகிறது. லேடனை தியாகியாக வரித்து அவர்கள் மேலும் உத்வேகத்துடன் செயல்படும் சாத்தியக்கூறுகள்தான் அதிகம் உள்ளன.
நவீன உலகில், அமெரிக்கா மீது எந்த நாடுமே கை வைத்திராத வரலாற்றை முறித்துப் போட்டவன் பின்லேடன்தான். அமெரிக்கா மீதான அந்தத் தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து இன்று வரை அமெரிக்கர்கள் மீளவில்லை.
இந்த நிலையில் பத்து ஆண்டு போராட்டத்திற்குப் பின்னர் லேடனை வீழ்த்தி ஓய்ந்துள்ளது அமெரிக்கா. ஆனால் இனிமேல்தான் அமெரிக்காவுக்கு பெரும் பெரும் கண்டங்கள் காத்துள்ளன என்கிறார்கள் பயங்கரவாதத்தின் ஆழம் குறித்து அறிந்தவர்கள்.
பின்லேடன் இனி உலக தீவிரவாதிகளின் கடவுளாக பார்க்கப்படப் போகிறார்கள், தீவிரவாத எண்ணம் கொண்டோர். லேடனை மனதில் கொண்டு புதுப் புதுத் தாக்குதல்களில் தீவிரவாதிகளும், தீவிரவாத அமைப்புகளும் இறங்கக் கூடும். தீவிரவாதிகளின் அசைக்க முடியாத ஹீரோவாக அவன் உருப்பெறலாம்.
உலகம் முழுவதும் முன்பை விட பலமாகவே தற்போது தீவிரவாத அமைப்புகள் விரவிக் காணப்படுகின்றன. முன்பை விட அதி நவீனமான சாதனங்கள், ஆயுதங்களுடன் அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றன. அதி நவீன உத்திகள், சாதனங்கள் என காணப்படும் அவர்களுக்கு இனிமேல் பின்லேடன் ஒரு மானசீக குருவாக விளங்கக் கூடும்.
பின்லேடன் விட்டு விட்டுப் போயுள்ள 'லிகசியை' அவர்கள் கட்டிக் காக்க முயல்வார்கள். முன்பை விட மிகவும் பலமான எதிரியாக அமெரிக்காவை இனிமேல் தீவிரவாதிகள் பார்ப்பார்கள்.
தாக்குதலில் அல் கொய்தாவின் நம்பர் டூ தலைவரான ஈமான் அல் ஜவாஹிரி கொல்லப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே இனி அவர் அல் கொய்தாவின் தலைவராக செயல்படுவார். அவரது தலைமையில் அல் கொய்தா புதுப் புதுத் தாக்குதல்களில் ஈடுபடக் கூடும்.
பல முக்கியத் தலைவர்களை அல் கொய்தா இழந்திருந்தாலும் கூட தாக்குதல்களை வகுத்து அதை செயல்படுத்தும் திறமையுடன் கூடியவர்கள் பலர் அந்த அமைப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பின்லேடன் கொலைக்குப் பழி வாங்க உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இனி ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
அதை விட முக்கியமாக அமெரிக்காவைப் பழிவாங்க அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமான, அமெரிக்காவின் தோழமை நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
ஜார்ஜ் புஷ் காலத்தில் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான போர் இனிமேல்தான் முழு வீச்சில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையைச் சொல்வதானால் இனிமேல்தான் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
தீவிரவாத நூலில், ஒரு அத்தியாயம்தான் தற்போது முடிந்துள்ளது. முற்றும் போடப்படவில்லை. அது முடியவும் முடியாது என்றே கருதப்படுகிறது.