பக்கங்கள்

31 ஜனவரி 2011

புலிகளின் படங்கள்,சஞ்சிகைகள் வைத்திருந்ததாக படையதிகாரி கைது!

புலிகளின் சஞ்சிகைகள்,மற்றும் புகைப்படங்கள் வைத்திருந்த ஒரு படை அதிகாரியும் அவரது காதலியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் அவசர இலக்கமான 119 இலக்கத்துக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பொன்றை அடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பஸ் பயணி ஒருவரே குறித்த தகவலை வழங்கியுள்ளார்.குருநாகலில் இச்சம்பவம் நடந்துள்ளது.படைக் கோப்றலின் காதலி குறித்த புகைப்படங்கள்,சஞ்சிகைகளை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு அப்பயணி பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மக்களின் உரிமைகளை மக்களே பாதுகாக்க வேண்டும்!

மக்களின் துயரங்கள் அதிகரித்து வரும் வேளையில் அரசாங்கத்தின் அடக்குமுறைகளும் அதிகரித்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் ஒரு விளைவே லங்கா ஈ நியூஸ் மீதான தாக்குதல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீக்கரையாக்கப்பட்ட லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகத்தை இன்று பார்வையிட்ட போதே ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தமையால் இந்த இணையத்தளம் தாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து நடத்தும் விசாரணைகளில் நம்பிக்கை கொள்ள முடியாது. இந்த சம்பவம் குறித்து நடத்தும் விசாரணைகள் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளை போல் வெறும் புஷ்வாணமான விசாரணையாக இருக்கும் எவ்வாறாயினும் மக்களின் உரிமைகளை மக்களால் மாத்திரமே பாதுகாத்துக்கொள்ள முடியும் இதனால் கொழும்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தப்படவுள்ள, சர்வாதிகார வெறிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பெருமளவில் வந்து கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

30 ஜனவரி 2011

புங்குடுதீவில் கொள்ளையர் அட்டூழியம்!

புங்குடுதீவில் கொள்ளையில் ஈடுபடச்சென்றவர்கள் அங்கு நகைகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த தம்பதியினரைத் தாக்கிக் காயப்படுத்தி விட்டுச்சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவத்தில் காயமடைந்த புங்குடு தீவு 6ஆம் வட்டாரம், ஆலடியைச் சேர்ந்த கே.சுவாமிநாதன் (வயது72), அவரது மனைவி சு.வரதலட்சுமி (வயது65) ஆகியோர் யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த தம்பதியரின் வீட்டுக்குள் அலவாங்குகள்,பொல்லுகளுடன் நுழைந்த கொள்ளையர்கள் இருவரையும் மிரட்டி நகைகளைத் தருமாறு கோரியுள்ளனர்.எம்மிடம் நகைகள் இல்லை நாளை கொழும்பு செல்வதற்காக 5 ஆயிரம் ரூபா மட்டும் வைத்துள்ளோம் என்று அவர்கள் கூறினர்.பணத்தை எடுத்த அந்த ஆயுதக் குழுவினர் நகைகள் வைத்திருக்கும் இடத்தைக் காட்டுமாறு கூறினர்.நகைகள் இல்லை என அவர்கள் திரும்பவும் கூறவே வயோதிபப் பெண்ணின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்தனர். கணவனை அலவாங்கால் தாக்கினர். இருவரும் மயக்கமடையவே கொள்ளையர்கள் கோஷ்டி தப்பிச்சென்றுவிட்டது.அதன் பின்னர் அயலவர்கள் காயமடைந்த இருவரையும் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

யாழின் பாதுகாப்பிற்கு படைகளின் பிரசன்னம் அவசியம் என்கிறார் ஜெகத்.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பிற்கு இராணுவத்தின் பிரசன்னம் அவசியமானது என இராணவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் இன்னமும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அதிகளவு இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கு தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள் தங்களது ஆயுதங்களை காட்சிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

29 ஜனவரி 2011

மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் இன்றாகும்!

முத்துக்குமார் என்ற இனமானமும் தன்மானமும் உள்ள இளைஞன்,தமிழ் இனப் படுகொலையின் மீதான ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராமுகம் தாளாமல் தன்னையே எரித்து கற்பூரமாகக் காற்றி்ல் கரைந்தான்.அதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.ஈழத்தில் தமிழினம் பேரினவாதப் பெருவெறிக்குப் பலியாவது பொறுக்காமல்-அதைக் கண்டுங் காணாமல் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கொண்டவர்களைக் கண்டு மனம்கொதித்து, தன்னைத் தீக்குத் தின்னக் கொடுத்து அவர்களைத் தண்டித்தான். அவன் தற்கொடைக்கான காரணத்தையும், எப்போதும் பார்வையாளர்களாக இருக்கக்கூடிய நமது கையாலாகாத்தனத்தையும் நெருப்பு வரிகளில் பொறித்துவிட்டே தீக்குச்சிக்குத் தன்னுடலைத் தின்னக் கொடுத்தான். ’சா வரினும் நாற்காலியை விட்டுப் பிரியேன்’ என்ற “பதவிப்பித்தர்“ கருணாநிதி அவர்களுக்கும், ’எவன் தடுத்தும் இனவெறியை இழக்கேன்’ என்ற சிங்களப் பேரினவாதிகளுக்கும், ’தமிழரை அழிப்பதன்றி வேறு வேலை எமக்கில்லை’ என்று அறைகூவி நம்மை அழித்த இந்திய வல்லாதிக்க வல்லுாறுகளுக்கும் அவன் உயிராயுதத்தால் ஒரு பாடம் புகட்டினான். நாம் அந்த மாவீரனை மண்ணுக்காகப் பலிகொடுத்தோம். முத்துக்குமாரைத் தொடர்ந்து 16 உயிர்கள் தன்னுயிர் ஈந்தும் ஆட்சியாளர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை,அவர்களின் ஆணவமும் எதேச்சதிகாரமும் முடிந்து போகவில்லை என்பது உண்மைதான்.தமிழனின் உயிர் என்பது அவர்கள் அளவில் உதிரும் மயிருக்குச் சமானம்.எனவே தான் உலகமே அதிர்ந்த முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் முடிந்த பின்னும் இன்னமும் பசி கொண்டு தமிழனின் உயிர்ப்பலி கேட்கிறது ஆட்சி அதிகாரம். அதன் தொடர்ச்சியாகத் தினசரி கடலில் மீன் பிடிக்கும் தமிழனைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது.ஆட்சி அதிகாரத்தின் முன் எம் லட்சியங்கள் தற்காலிகமாகத் தோற்றுப் போயிருக்கலாம்.நம் இனத்தை பகைவர்கள் சூழ்ந்திருக்கலாம்.ஆனால், அவனது சிதையில் எரிந்த நெருப்பு எங்கள் சிந்தைகளில் இன்னமும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருப்பதை அதிகாரங்கள் அறியாது.முத்துக்குமாரின் லட்சியம் அனைத்தும் இன்றில்லையேல் என்றாவது அடைவது உறுதி.அதற்காக எத்தனை தடை வந்தாலும் எதிர்நோக்கத் தயாராய் இருக்கிறோம்.முத்துக்குமார் லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்து எமது பயணத்தைத் தொடருவோம்.
சீமான்.

மகிந்தவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு!

இறுதிக்கட்ட யுத்தத்தில் கண்மூடித்தனமான படுகொலைகளை மேற்கொண்டதற்கு எதிராக 30 மில்லியன் டொலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டுமென்று கோரி ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மற்றும் இன்னும் வேறு இரண்டு சந்தர்ப்பங்களில் கண்மூடித்தனமான படுகொலைகள் மூலம் தமது உறவினர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்து அமெரிக்காவில் வாழும் மூன்று தமிழர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்திலேயே நேற்று (28) இவ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், பிரபல வழக்கறிஞருமான புரூஸ் பெய்ன் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பதில் கிடைக்காது விட்டால், அவர் தரப்பு இல்லாமலேயே வழக்கை முன்கொண்டு செல்ல தாம் தயாராக இருப்பதாக புரூஸ் பெயின் அறிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென நாட்டுக்குத் திரும்புவதற்கான காரணமும் இந்த வழக்கு குறித்த பயம் தான் என்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
1991ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்ட நபர்களுக்கெதிரான சித்திவதைகள் மற்றும் துன்புறுத்தல்கள், படுகொலைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வரும் பட்சத்தில் கைது செய்வதற்கான அதிகாரம் அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு உண்டு.
ஜனாதிபதிக்கெதிரான வழக்கும் அந்தப் பிரிவின் கீழ் தொடரப்படுவதால், அமெரிக்க அரசாங்கத்தினால் எதுவிதத் தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது போய்விடும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை முக்கிய அதிகாரிகள் சிலர் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே ஜனாதிபதி மஹிந்த உடனடியாக நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி சுதந்திர தினமான பெப்ரவரி நான்காம் திகதிக்கு முந்திய நாள் அதாவது பெப்ரவரி மூன்றாம் திகதியளவிலேயே நாடு திரும்புவதாக முன்னர் உத்தேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கெதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கானது வெறுமனே ஊடகப் பரபரப்புக்கான ஒரு ஏமாற்று வித்தை என்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர இன்று தெரிவித்துள்ளார்.
புலிகளின் ஆதரவாளர்கள் பணத்துக்காக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ள போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

28 ஜனவரி 2011

கணவனுக்கு கட்டாயத் திருமண முயற்சி,மனைவி காவற்துறையில் முறைப்பாடு!

தனது மாமனார் மற்றும் மாமியார் தனது கணவருக்கு மற்றுமொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக நேற்றைய தினம் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் சென்னை நகர பொலிஸ் உயரதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 26 வயதான ஆர்.திகான என்ற பெண் 25 வயதான ராகுலன் என்ற இலங்கை இளைஞரை காதலித்து 2005 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்த வேளையில், ராகுலன் 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தியாவிற்கு சென்றுள்ளார். ஆனால் குறித்த திகதியில் அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி ராகுலன், திகானவிற்கு தொலைத் தொடர்பினை ஏற்படுத்தி தனது பெற்றோர் மற்றுமொரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதையறிந்த திகான தனது குழந்தைகளுடன் உடனடியாக சென்னைக்கு விஜயம் மேற்கொண்டார். ஆனாலும் ராகுலனது பெற்றோர் ராகுலனை பார்ப்பதற்கு வாயப்பளிக்கவில்லை. இந்நிலையில் தனது கணவனை தனது மாமனார் மற்றும் மாமியார் அடைத்து வைத்து கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்து வருவதாக திகான சென்னை நகர பொலிஸ் உயரதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இம் முறைப்பாட்டை கவனத்தில் கொள்ளுமாறு சென்னை நகர பொலிஸ் உயரதிகாரி ரீ.ராஜேந்திரன், வடபழனி உதவி பொலிஸ் அத்தியேட்சகருக்கு பணித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

காலி இலக்கிய விழா புறக்கணிப்பு!

இலங்கையின் காலியில் ஆரம்பமாகியுள்ள இலக்கிய விழாவைப் புறக்கணிப்பதாக தென்னாபிரிக்க எழுத்தாளரான தாமுன் ஹல்கட் அறிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் குறித்த நிலைமையை காரணம் காட்டி அவர் அந்த விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
பாரிசை தளமாகக் கொண்ட செய்தியாளர்களுக்கான அமைப்பான எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் இணைந்து வெளியிட்ட விழாவைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை தான் கவனத்தில் எடுத்துள்ளதாக தாமுன் ஹல்கட் தெரிவித்துள்ளார்.
மேற்படி இரண்டு அமைப்புக்களுடன் சேர்ந்து நோம் சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச், அன்ரனி லொவன்;ரின், தாரிக் அலி, உருத்திரமூர்த்தி சேரன், டேவ் ரம்ரன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் இவ்விழாவைப் புறக்கணிக்குமாறு கோரியிருந்தனர்.
இலங்கையில் மாற்றுக் கருத்தாளர்களின் குரல்கள் அடக்கப்படுவதால், அங்கு இந்த நிகழ்வை நடத்துவது உகந்ததல்ல என்று அந்த விழாவைப் புறக்கணிக்குமாறு கோரியவர்கள் கேட்டிருந்தனர்.
இலங்கையில் மனித உரிமைகள் குறித்த சில பிரச்சினைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட விழாவின் ஏற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஷியாம் செல்வதுரை, ஒரு இலக்கிய விழாவை நிறுத்துவது அதற்கான பதிலாகாது என்று கூறினார்.
விழா ஆரம்பித்தவுடனே, பிரபல எழுத்தாளர் தாமுன் ஹல்கட் விழாவைப் புறக்கணிக்க முடிவு எடுத்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தார்கள்.
மேலும் இரண்டு முக்கிய எழுத்தாளர்களான ஓரான் பாமுக், கிரான் தேசாய் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் இருந்து பின்வாங்கியிருக்கிறார்கள்.
ஆனால், அது இந்த எதிர்ப்புடன் சம்பந்தப்பட்டதல்ல என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
அறுபதுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் விழாவில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்ற போதும், தமது எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு இணையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக புறக்கணிப்பவர்கள் கூறுகிறார்கள்.
தற்போதுள்ள அரசாங்கத்தினால் கேலிச்சித்திரக்காரர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இன்றுள்ள சூழ்நிலையில், இலக்கியத்துக்கு விழா எடுக்கும் இந்த நிலைமையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் மிகவும் இடரார்ந்த ஒரு விடயமாகவே கருத்திற் கொள்கிறது. காலி இலக்கிய விழாவுக்குப் போவதற்கு முன்னர் இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு ஏற்கெனவே கோரப்பட்டிருந்தது.
2011 ஜனவரி 26-30 வரை காலியில் நடைபெறவுள்ள ஐந்தாவது இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்புக் கிடைத்துள்ள ஒவ்வொருவரும் இலங்கையில் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவதையும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் அச்சமும் மலைப்பும் தரும் வகையில் அதிகரித்துக் காணப்படுவதையும் கருத்தில் கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டிருந்தது. அதற்குச் செவி சாய்க்கும் வகையிலேயே இந்த தென்னாபிரிக்க எழுத்தாளர் விழாவைப் புறக்கணித்திருக்கிறார்.
போர் முடிவடைந்து பின்னரும் கூட .லங்கையில் படுகொலைகள், உடல் ரீதியான தாக்குதல்கள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், தணிக்கை என்பன தொடர்ந்து கொண்டு வருகின்றன என்றும் ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் உட்பட இலங்கை அரசாங்கத்தின் மிக மூத்த அதிகாரிகளே சிங்கள மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளிலும் மிக மோசமாக ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளிலும் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றனர் என்றும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தனது அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உங்களைப் போன்ற முக்கியத்துவமிக்க சர்வதேச அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்கள் நாட்டினுள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு எள்ளளவேனும் வழி சமைக்காமல் அதனை ஒடுக்கி வருகின்ற இலங்கை அரசாங்கத்துக்கு இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு ஏற்புடமையை வழங்குவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்றே நாங்கள் நம்புகின்றோம்.
எல்லா இடங்களிலும் எழுத்தாளர்கள் தங்களுக்கிடையே ஒற்றுமைக்காக தங்கள் கைகளை இறுகப் பிணைத்து நிற்றும் ஒரு மரபின் தொடர்ச்சியாக பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கும் இலங்கையில் உள்ள உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் ஆதரவாக நீங்கள் இருக்க வேண்டும் என்று உங்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
உங்களுடைய நடவடிக்கைகளும் நீங்கள் தெரிவிக்கும் செய்தியும் தெளிவாக இருக்க வேண்டும் என நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். அதாவது பிரகீத் காணாமல் போனமை குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கையின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரச் சூழலில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும். இல்லாவிட்டால் இலக்கியத்தையும் எழுத்;துச் சுதந்திரத்தையும் நீங்கள் கொண்டாடுவதில் ஏதும் அர்த்தம் இருக்க முடியாது என்றும் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

27 ஜனவரி 2011

நிந்தவூரில் நிலம் வெடித்து பாரிய குழி ஏற்பட்டுள்ளது!

நிந்தவூரில் நேற்று முற்பகல் பாரிய சப்தத்துடன் வீடொன்றின் முற்றத்தில் நிலவெடிப்பு ஏற்பட்டு குழியொன்று வெளித் தோன்றியுள்ளதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளித் தோன்றியுள்ள குழியின் ஆழம் சுமார் எட்டு அடி இருக்கும் என்பதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சப்தம் கேட்டு குறித்த இடத்துக்குச்சென்று நோட்டமிட்ட வீட்டின் உரிமையாளர் பிரஸ்தாப குழியைக் கண்டு, அது குறித்து பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹனீபா பிரஸ்தாப வீட்டுத் தோட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அது குறித்து கொழும்பிலுள்ள சுரங்க மற்றும் கனிய வளங்கள் திணைக்களத்துக்கும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே அண்மையில் திருமலையின் குச்சவெளியில் தோன்றியுள்ள குழிகளுக்கும் நிந்தவூரில் தோன்றியுள்ளதற்கும் ஏதேனும் ஒற்றுமைகள் காணப்படுகின்றதா என்ற கோணத்திலும் ஆய்வுகளை முன்னெடுக்குமாறு அம்பாறை அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

26 ஜனவரி 2011

அனுராதபுரம் சிறைக்கைதிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்!

அனுராதபுர சிறை அதிகாரியை கைதுசெய்யக் கோரியும்,வெளியில் இருந்து சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் உணவுகள் மீதான கண்ணகாணிப்பு, உணவு போதாமை மற்றும் சிறைச்சாலை சனநெரிசல் என்பவற்றை முன்வைத்து அநுராதபுரம் சிறைச்சாலைக் கைதிகள் இன்று புதன்கிழமை மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது கைதியொருவரை சுட்டுக்கொன்றதாக கூறப்படும் சிறை அதிகாரியை கைதுசெய்யுமாறு கோரி அநுராதபுரம் சிறைக்கைதிகள் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கைதிகள் எந்த ஆகாரமுமின்றி கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அநுராதபுர சிறைச்சாலையில் மற்றுமொரு கைதிகள் குழு இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் தெரிவித்துள்ளார்.

படையினரின் வியாபார நிலையம் யாழில் எரியுண்டது!


யாழ் ஆரியகுளம் சந்தியில் இயங்கிவந்த படையினரின் வர்த்தகநிலையம் நேற்று 26.01.2011மதியம் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது. ஆரியகுளம் சந்தியில் உள்ள படையினரின் ' வெஸ்ரா' என்ற பெயரில் அமைந்த வர்த்தக நிலைய மேல்மாடிப் பகுதியே எரிந்து நாசமாகியுள்ளது.

25 ஜனவரி 2011

நாம் தமிழரின் எதிர்ப்பால் சிங்கள கிரிக்கெட் அணி ரத்து!

புதிய தலைமுறை சென்னை சூப்பர் சிக்சஸ் என்ற பெயரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக இலங்கையின் கிரிக்கெட் வீரரும் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அதிபர் ராஜ பக்சேவின் தீவிர ஆதரவாளருமான சனத் ஜெயசூர்யா அவர்கள் கலந்து கொள்ள இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இப்போட்டி ஏற்பாட்டாளர்களான புதிய தலைமுறை கட்சி அலுவலகத்திருக்கு நேரில் சென்று ஜெயசூர்யா அவர்கள் பங்கேற்பதை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மனு அளித்தனர்.
இதனையடுத்து இன்று நிகழ்ச்சி நடக்கவிருந்த மாயாஜால் அரங்கத்திற்கு எதிரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் அதிகமானோர் மாயாஜால் அரங்கின் நுழைவு வாயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்ப இடத்துக்கு வந்த மாநகர காவல் துறை இணை ஆணையாளர் சாரங்கன் அவர்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜெயசூர்யா அவர்கள் அழைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். இதில் சமாதனமடையாத நாம் தமிழர் கட்சியினர் நம் சொந்த உறவுகளை லட்சக்கணக்கில் கொன்ற கொலைகாரன் ராஜபக்சே அரசின் நாடாளுமன்ற உறுப்பினரை புதிய தலைமுறை குழுமத்தினர் சிறப்பு அழைப்பாளராக அழைத்து தாய் தமிழகத்தில் வாழும் தமிழர்களை மட்டுமல்லாமல் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தியுள்ளதாக தெரிவித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ஆர்பாட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாம் தமிழர் கட்சியினர் முன்னிலையில் தங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு ஜெயசூர்யா அவர்கள் வருவது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் முடிவு செய்யப்பட்டது என்றும்,நாம் தமிழர் கட்சியினர் கேட்டுகொண்டதர்க்கு இணங்க மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜெயசூர்யா அவர்கள் இந்த கலந்துகொள்ளவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தையடுத்து மாயாஜால் அரங்கின் நுழைவாயிலில் இலங்கையை சேர்ந்த கிரிகெட் வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள பெளத்த மகாபோதி தாக்கப்பட்டுள்ளது!

இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள மஹாபோதி பௌத்த கேந்திர நிலையம் நேற்றிரவு (24) தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவரின் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோரே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கக் கூடும் என்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
பதினைந்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகளில் இரவு ஒன்பது மணியளவில் அவ்விடத்துக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மகாபோதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு கற்கள் மற்றும் தடிகள் கொண்டு தாக்கியுள்ளனர்.
தாக்குதல் காரணமாக அங்கிருந்த நான்கு போ் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர். தற்போது பௌத்த கேந்திர நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக பொலிசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது.

24 ஜனவரி 2011

அனுராதபுரம் சிறைக்குள் துப்பாக்கி சூட்டுச்சத்தங்கள்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் சற்றைக்கு முன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கேட்டுள்ளதுடன், அதன் காரணமாக அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுர கைதிகள் நேற்று மாலை தொடக்கம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.அதனையடுத்து அப்பிரதேசமெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டார்கள்.
அவ்வாறான நிலையில் இன்று மாலை திடீரென சிறைச்சாலைப் பிரதேசத்தில் இருந்து துப்பாக்கிப் பிரயோக சப்தங்கள் கேட்டுள்ளன. அத்துடன் கல்லெறி சம்பவங்களும் நடந்துள்ளதாக அறியப்படுகின்றது.
அங்குள்ள சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் அவர்கள் எந்தவொரு ஆபத்தான கட்டத்திலும் அவர்கள் ஓடித்தப்ப முடியாதளவுக்கு அவர்கள் தடுக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் தற்போது மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக தற்போதைக்கு நான்கு போ் வரை காயமடைந்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் தமிழ் அரசியல் வாதிகளும், முக்கியஸ்தர்களும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சார்பில் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
சிறைச்சாலையின் கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதியில் சிவில் குண்டர்கள் தீவைத்துள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக நான்கு போ் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதும் சிறைச்சாலைப் பகுதியில் இருந்து பலத்த புகை மண்டலம் கிளம்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தமிழ்க் கைதிகள் இலக்கு வைத்துத் தாக்கப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இரண்டு போ் தற்போதைக்கு காயமடைந்துள்ளனர்.
தற்போதைக்கு ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் இருபதுக்கும் அதிகமான கைதிகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதற்கு மேலதிகமாக சுமார் இருபது வரையான அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு சைரன் ஒலியெழுப்பிக் கொண்டு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் பெரும்பாலும் தலையில் இரத்தம் வழிந்தோடும் நிலையில் காணப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

ஆஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக திசர சமரசிங்க!

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்கவை ஏற்றுக் கொள்வதில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த உயர் படையதிகாரியை தமது நாட்டு உயர்ஸ்தானிகராக ஏற்றுக் கொள்வதில் அவுஸ்திரேலியா நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் கடற்படைத் தளபதி திசர சமரசிங்கவிற்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டுக்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தினால் திசர சமரசிங்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு இறுதித் தீர்மானம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் காரணமாக புகலிடக் குடியேற்றக் காரர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வில் குழப்ப நிலைமை ஏற்படக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கடற்படைத் தளபதி பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட திசர சமரசிங்கவிற்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்காத காரணத்தினால் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறு வெளிவிவகார அமைச்சிற்கு அவுஸ்திரேலியா வாழ் தமிழ் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்காக திசர சமரசிங்கவை பரிந்துரை செய்ததன் மூலம் அரசாங்கம் இராணுவ ஆட்சி நோக்கி நகர்கின்றமை புலனாவதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த சேம் பாரி தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அமரர் ஜானக பெரேரா நியமிக்கப்பட்ட போதிலும் இவ்வாறான எதிர்புகள் கிளம்பிய போதிலும், ஜானக பெரேரா 2005ம் ஆண்டு வரையில் உயர்ஸ்தானிகராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

23 ஜனவரி 2011

தனது பாதுகாப்பு அணியை சேர்ந்தவர்களை அழைத்துச்செல்ல பயந்த மகிந்த!

தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பாதுகாப்பு அணியைச் சேர்ந்த படையினர் எவரையும் அழைத்துச் செல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த புதன்கிழமை அதிகாலை திடீரென அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உள்ளிட்ட 18 பேர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட பயணத்தை சிறிலங்கா அதிபர் மேற்கொண்டுள்ளது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
அதேவேளை, அமெரிக்கப் பயணத்தில் சிறிலங்கா படையினர் எவரையும் தனது பாதுகாப்பு அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.
அதிபர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறையினரை மட்டுமே அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகளின் பேரில் அங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் நோக்கிலேயே அவர் இந்தப் பயணத்தில் சிறிலங்காப் படையினரைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.
அண்மையில் பிரித்தானியாவுக்குச் சென்றிருந்த போது சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பானவரும். புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்குவகித்தவருமான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயும் மகிந்த ராஜபக்சவுடன் லண்டன் சென்றிருந்தார்.
அப்போது மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே மீது போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவரைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் தகவலை அறிந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அவசர அவசரமாக நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமலை குச்சவெளியில் நிலம் பிளவடைந்துள்ளது!

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று அதிகாலை நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி, கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்கு பின்னால் அமைந்துள்ள களப்பு பகுதிலேயே இச்சம்பவம் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
அப்பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தினை காணச்செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதனால் குறித்த பிரதேசத்திற்குள் பொதுமக்கள் பிரவேசிக்காதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் திருகோணமலைக்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தினால் பிரதேச மக்கள் ஒருசிலர் நகரப் பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களது வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

22 ஜனவரி 2011

கொலைக்குடும்ப வாரிசை வாழ்த்திய ரவிசங்கர்!

இலங்கை வந்துள்ள வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சிறந்த சமூக சேவைகளை முன்னெடுப்பதாகப் பாராட்டியே ரவிசங்கர் குருஜி அவருக்குப் பொன்னாடை போர்த்தியுள்ளார்.
2600 வது வருட புத்த ஜயந்தியை முன்னிட்டு இளைஞர்களுக்கான நாளை அமைப்பும், வாழும் கலை அமைப்பும் இணைந்து அறநெறி நிகழ்ச்சியொன்றை முன்னெடுத்துள்ளன. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அதன் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
அதன் போது பெங்களூரிலிருந்து வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜியும் வருகை தந்திருந்தார். விழா மேடையில் வைத்தே அவர் நாமலின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் வாழும் கலை அமைப்பின் செயற்பாடுகளை இளைஞர்களுக்கான நாளை அமைப்புடன் இணைத்து முன்னெடுப்பது குறித்தும் இருவரும் கலந்தாலோசித்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

21 ஜனவரி 2011

பொரளையில் உள்ள தோட்டக்குடியிருப்பு மக்களின் வீடுகள் உடைப்பு!

கொழும்பில் வசிக்கும் வறிய மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டப்படி கொழும்பு பொரள்ளையில் வசிக்கும் வறிய மக்களின் குடியிருப்புகள் இன்று உடைக்கப்படத் தொடங்கியுள்ளன.
பொரள்ளையில் வனாத்தமுல்லைப் பிரதேசத்தில் இருக்கும் 54 மற்றும் 66 ம் இலக்க தோட்ட மக்களின் குடியிருப்புகளே அவ்வாறு உடைக்கப்படத் தொடங்கியுள்ளன. ஆயினும் அந்த மக்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வசதிகள் ஏதும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
நேற்று அப்பிரதேசத்துக்கு வந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அங்குள்ள மக்களை வேறிடங்களுக்குக் குடிபோகத் தயாராகுமாறு கூறிவிட்டுச் சென்ற நிலையில், இன்று காலை திடீரென அப்பிரதேச வீடுகள் இடிக்கப்படத் தொடங்கியுள்ளன.
அதன் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அப்பிரதேச வாசியான ஜயந்த என்பவரும் இன்னும் ஓரிருவரும் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கவும் முயற்சி செய்தனர்.
தமக்கு மாற்றிடங்களில் வீடுகள் அமைத்துத் தரப்படும் என்ற எழுத்துமூலக் கோரிக்கையுடன், அதுவரை தமக்கு மாற்றுக் குடியிருப்பு வசதிகள் அல்லது அதற்கான வாடகைப் பணம் என்பன தரப்பட வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையிலான இழுபறி நிலை தொடரும் அதே வேளை, வீடுகளை உடைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக பெண் வழக்கறிஞர் சிங்களப்படையால் கைது!

இலங்கையில் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களை படம் பிடித்ததற்காக தமிழக பெண் வக்கீல் உள்ளிட்ட இருவரை அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி என்கிற கயல். இவர் திருமலை என்ற தனது நண்பருடன் கடந்த 19ஆம் தேதி சுற்றுலா விசாவில் இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் இருவரும் அங்கு தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அந்நாட்டு ராணுவத்தினரின் அனுமதியுடன் அந்த முகாமுக்கு சென்று அங்குள்ள தமிழர்களை அவர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது புகைப்படம் எதையும் எடுக்கக் கூடாது என்று இவர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு விதித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் முகாமை சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர் கயலின் செல்போனை இலங்கை ராணுவம் பரிசோதித்து பார்த்துள்ளது. அப்போது முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை விளக்கும் படங்களை எடுத்திருப்பதாக ராணுவத்தினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கை ராணுவம் இருவரையும் நிபந்தனைகளை மீறி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள பெண் வழக்கறிஞர் கயல், மறைந்த தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி ஆவார். கைதான இவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

20 ஜனவரி 2011

படையினனிடமிருந்து தப்பித்துக்கொள்ள வயலுக்குள் பாய்ந்த தமிழ் பெண்!

யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பெண்ணொருவர் இராணுவ சிப்பாயொருவரிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வயலுக்குள் பாய்ந்து காயங்களையேற்படுத்திக் கொண்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
பிரஸ்தாப பெண் ஹலோ ட்ரஸ்ட் எனும் கண்ணிவெடி அகற்றும் அமைப்பில் பணியாற்றுபவர் என்றும், வேலைக்காகச் செல்லும் வழியிலேயே அவர் மேற்கண்ட துர்ப்பாக்கிய சம்பவத்துக்கு முகம் கொடுத்திருப்பதாகவும் எமது யாழ். நிருபர் தெரிவித்துள்ளார்.
நாவலடி வீதியின் வழியாக அவர் தனது மோட்டார் சைக்கிளை உருட்டிக்கொண்டு சென்று கொண்டிருக்கையில் திடீரென்று வேலியொன்றுக்குள்ளிருந்து வெளிப்பட்ட இராணுவச்சிப்பாய் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்டதையடுத்து அப்பெண் சத்தமிட்டவாறு அருகிலிருந்த வயலுக்குள் பாய்ந்துள்ளார்.
அவரது அபயக்குரல் கேட்டு அயலவர்கள் திரண்டு வரவும், குறித்த படைச்சிப்பாய் தலைமறைவாகி விட்டார். ஆயினும் பொதுமக்கள் தேடிப்பிடித்து அந்தச் சிப்பாயை விசாரித்துள்ளனர்.
வழியால் சென்றவர் ஒரு ஆணாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேநீர் வாங்கி வருவதற்கு தன்னை மோட்டர் சைக்கிளில் ஏற்றிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளவே தான் வெளியில் வந்ததாக அந்தப் படைச்சிப்பாய் பதிலளித்துள்ளார்.
ஆயினும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாதளவுக்கா அந்தச்சிப்பாய் இருக்கின்றார் என்று பொதுமக்கள் விசனத்துடன் கேள்வியெழுப்பியுள்ளனர். தற்போது சம்பவம் தொடர்பில் பல தரப்பினருடனும் புகார் செய்யப்பட்டுள்ளது.

வாய் பேசா பெண்மீது கடற்படையினன் வல்லுறவு!

வாய்பேச முடியாத பெண்ணொருவர் திருகோணமலை மாவட்டத்தின் கிராமமொன்றில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையின் ரொட்டவெவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் எத்தாபெந்திவெவ எனும் கிராமத்தைச் சோ்ந்த வாய் பேச முடியாத பெண்ணொருவரே கடற்படைச்சிப்பாய் ஒருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வல்லுறவுக்குட்பட்ட பெண் தற்போது திருமலை அரசினர் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை கொடுத்த முறைப்பாட்டின் பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச்சிப்பாய் நேற்று ரொட்டவெவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

19 ஜனவரி 2011

யாழில் இந்தியப்படை காடையன் இளம்பெண் மீது காடைத்தனம்!

யாழ்ப்பாணத்தின் பொது இடமொன்றில் வைத்து இளம் யுவதியொருத்திக்கு பட்டப்பகலில் முத்தம் கொடுத்து இந்தியப் படைவீரரொருவர் அட்டகாசம் புரிந்துள்ளதாக யாழ். நிருபரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் கடமையாற்றும் இந்தியப் படைவீரர் ஒருவரே அவ்வாறு அநாகரீமாக நடந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.
குறித்த படைவீரர் தூதுவராலயத்துக்கு எதிரில் அமைந்திருக்கும் கடைக்குச் சென்ற சந்தர்ப்பத்திலேயே அங்கு வந்த இளம் யுவதி ஒருவருக்கு கன்னத்தில் முத்தமிட்டு அநாகரீமாக நடந்து கொண்டுள்ளார்.
உடனடியாக பொதுமக்களும் அந்த யுவதியும் சோ்ந்து அந்தப் படைவீரரை கடுமையாக எச்சரித்ததுடன், விடயத்தை அத்துடன் முடித்துவிட்டனர். பொலிசில் முறைப்பாடு செய்யவும் இல்லை. யுவதியின் மானம் குறித்து கருத்திற் கொண்டு விடயம் அப்படியே மறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தூதுவராலயத்துக்கு குறித்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வீரருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென தூதுவராலய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

புங்குடுதீவில் இளம்பெண்ணின் உடலம் மீட்பு!

யாழ். புங்குடுதீவில் இளம் யுவதியொருவரின் சடலம் பாழடைந்த கிணறொன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளதாக எமது யாழ். தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவின் மூன்றாம் வட்டாரம் சங்கத்தாக்கேணி பிரதேசத்தில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாடுகளை மேய்க்கச் சென்ற வாலிபர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து வழங்கிய தகவலின் அடிப்படையில் தேடிப்பார்த்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பொலிசார் நீதவான் முன்னிலையில் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதுடன், சடலத்துடன் இளம் யுவதிகள் அணியும் உள்ளாடைகளும் பொலிசாரால் மீட்கப்பட்டதாக தெரிய வருகின்றது.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

18 ஜனவரி 2011

பத்தாயிரம் ஆணிகள்கொண்ட முள் படுக்கையில் பரதம்!

பத்தாயிரம் ஆணிகள் கொண்ட இரும்பு முள் படுக்கையில் பரதநாட்டியம் ஆடியுள்ளார் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த பூர்ணி என்ற இளம் பெண்.
“செபஸ்தியாரின் கலைக் கூடம்” என்ற பெயரில், 20 ஆண்டாக தமிழ் கிராமிய கலை நிகழ்ச்சிகளை, பூர்ணியின் தந்தையாரான செபஸ்தியார் நடத்தி வருகிறார். முள் படுக்கையில், 40 அடி உயரத்தில் கரகாட்டம் ஆடி சாதனை படைத்த செபஸ்தியார், “ஆசியாவின் வியப்புகுரிய சாதனை” பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
செபஸ்தியாரின் கலைக்குழுவில் இடம்பெற்றுள்ள 450 கலைஞர்களில், அவரது மகளான பூர்ணியும் (19) ஒருவர். ப்ளஸ் 1 வரை படித்துள்ள பூர்ணி, சிறுவயது முதலே பரதநாட்டியத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று ஆவல். தஞ்சாவூரில் பரதம் கற்ற பூரணி, பத்தாயிரம் ஆணிகள் கொண்ட இரும்பு முள் படுக்கையில், பரதம் ஆட விரும்புவதாக தன் தந்தையிடம் தெரிவித்தார்.
தன் பூ போன்ற பாதங்களை, அதற்கேற்றார் போல் கரடுமுரடாக பக்குவப்படுத்த அவர், முள் படுக்கை மீது பரதம் ஆடி தன் பாதத்தை தயார் செய்தார். நெஞ்சுரம் கொண்ட பூர்ணிக்கு, மலேசிய அரசின் சாதனை பட்டியலில் இடம் பெற முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது.
தமிழக கலைப்பண்பாடுத் துறை மற்றும் மலேசிய தேசிய கலாச்சாரத்துறை இணைந்து, தமிழகத்தில், திருச்சி உள்பட ஐந்து இடங்களில் நடத்திய கலாச்சார நிகழ்ச்சியில், பத்தாயிரம் ஆணிகள் கொண்ட முள் படுக்கை மீது பரதம் ஆடி அசத்தினார்.
இது பற்றி பூர்ணி கூறியதாவது:
“முள் படுக்கை மீது பரதம் நிகழ்த்தும் விதமாக, என் பாதங்கள் மரத்துப் போக செய்ய வேண்டும். அதற்காக நாள்தோறும் மணலில் சுடு தண்ணீர் ஊற்றி அதன் மீது நீண்ட நேரம் நிற்பேன்.
பாதங்களின் குழியான பகுதியை நேராக்க மூங்கில் தட்டைகளை பாதத்தில் கட்டி நடப்பேன்; நடனமாடுவேன். பயிற்சி முடிந்ததும் ஆணி மீது நடனமாடத் துவங்கினேன். பயம் கிடையாது. நன்றாக ஆட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
பலமுறை முள் படுக்கையில் ஆடியுள்ளேன். ஆடும் போது பலமுறை ஆணி குத்தி, என் பாதங்களிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தினால், சாதனைபுரிய முடியுமா?” இவ்வாறு பூர்ணி கூறினார்.

17 ஜனவரி 2011

மானிப்பாயில் பெண் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு!

யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யாழ். மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்த 31 வயதான சிறிபாலசுந்தரம் நினோஷா என்பவரே பாடுகாயமடைந்துள்ளார்.
இவர் வீட்டு வாசலில் முன்னால் நின்ற போது இவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவிவருவதுடன் குறித்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் ஐந்து கப்பல்கள் தொடர்பான விபரம் கிடைத்துள்ளதாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐந்து கப்பல்கள் தொடர்பான தகவல்களை சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
புலிகளுக்கு சொந்தமான எட்டு கப்பல்கள் தொடர்பான விசாரணைகளின் இந்த ஐந்து கப்பல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
புலிகளின் ஐந்து கப்பல்கள் பழுதடைந்துள்ளதாகவும் அவற்றை பழுது பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீர் வடிகாலமைப்புத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்களின் நிறத்தையும், பெயரையும் மாற்றி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கப்பல்களை கைப்பற்றி இலங்கைக்கு கொண்டு வரும் வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

16 ஜனவரி 2011

வெள்ளத்தினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளது!

சிறிலங்காவில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் குறைந்தது 50 யானைகள் மரணமாகியிருப்பதாக வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் கூறியுள்ளது.
இந்த இயற்கைப் பேரழிவினால் யானைகள் மற்றும் ஏனைய விலங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்ள தொடர்பாக சரியான விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெருவெள்ளத்தினால் சிறிலங்காவில் உள்ள லகுகல, சோமாவதி, மாதுறு ஓயா, குமண, கவுடுல்ல ஆகிய வனவிலங்கு சரணாலயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
அதேவேளை வீடுகளில் வளர்க்கப்படும் பெருந்தொகையான கால்நடைகளும் இந்தப் பெருவெள்ளத்தினால் மரணமாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 48,679 மாடுகள், 22,279 ஆடுகள், மற்றும் 172,884 கோழிகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளால் இங்கு பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகள் தோன்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புறக்கோட்டையில் வர்த்தகர் சுட்டுக்கொலை!

புறக்கோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிக்கப்படுகிறது.
புறக்கோட்டை மிஹிந்து மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கித்சிறி ராஜபக்ஷ என்ற வர்த்தகரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலையுண்ட வர்த்தகர் ஐக்கிய தேசியக் கட்சி தொகுதி அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதாள உலகக் கோஷ்டியினர் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகரின் சகோதரர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் கொலையுண்ட நபர் காவல்துறையினரிடம் பாதுகாப்பு கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் வர்த்தகரின் வீட்டுக்கு அருகாமையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

15 ஜனவரி 2011

நீர்வேலியில் வீடொன்றினுள் புகுந்த சிப்பாய் மடக்கிப் பிடிப்பு!

யாழ்ப்பாணம் நீர்வேலிப்பகுதியில் படைமுகாமிலிருந்து வெளியே சென்று வீடொன்றினுள் உட்பிரவேசித்து யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிப்பாய் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். வீட்டினுள் புகுந்த இந்த சிப்பாய் தொடர்பில் வீட்டில் தங்கியிருந்தவர்கள் அவலக்குரல் எழுப்பியதனை அடுத்து குறித்த சிப்பாய் தப்பி ஓட முற்பட்டுள்ளார். இதனையடுத் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சுற்ற வளைத்துக் கொண்டனர்.
எனினும் தான் நீர்வேலி படைமுகாமைச் சேர்ந்த சிப்பாய் என அடையாளப்படுத்தியிருந்தார். எனினும் பொதுமக்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடவில்லை. மோசமான நையப்புடையலுக்குப் பின்னர் கோப்பாய் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் படைத்தலைமைக்கு இது தொடர்பாக அறிவித்திருப்பதாகவும் கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதே நீர்வேலி முகாம் பகுதிலேயே வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்தை அடுத்து மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் சம்பவங்களுக்கு தமிழரின் பிரிவினைவாதமே காரணமாம்!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சமாதானம் மலர்ந்துள்ள போதிலும் மக்களிடையே குரோதத் தன்மை அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பாக தமிழர்களிடையே பிரிவினைவாதம் தோன்றியுள்ளதாகவும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கை பேரவையின் தலைவர் வெல்லன்வில விமலரத்ன தேரர் குறிப்பிடுகின்றார்.
யாழில் இடம்பெறும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களுக்கு தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாதமே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே அனைவரும் ஒன்றினைந்து மலர்ந்துள்ள சமாதானத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது :-
தமிழர்கள் மத்தியில் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளது. யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் மக்கள் மத்தியில் குரோதத் தன்மை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினைவாதம் தலைத்தூக்கியுள்ளது. இந்த பிரிவினைவாதம் காரணமாகவே யாழில் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. யுத்தம் நிறைவடைந்து சமாதானம் மலர்ந்துள்ளது. எனவே சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக பிரிவினைவாதம் ஏற்படாத வன்னம் தடுத்து நிறுத்த வேண்டும் இதற்கான நடவடிக்கைள் மேற்ககொள்ளப்படவேண்டும். பிரிவினைவாதத்திற்கான வாய்புக்கள் ஏற்படுவதைத் தடுக்க அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும். மலர்ந்துள்ள சமாதானத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். யாழ், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், பதுளை, நுவரெலியா, கண்டி, களுதரை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பிரதிநிதிகளை நியமித்து சமயம், மற்றும் ஏனைய விடயங்களில் மக்களுக்குள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

அனைத்து வாசகர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!


இன்றைய பொங்கல் நாள் தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுத்தரும் நாளாக அமையவேண்டுமென பிரார்த்தித்து,மக்கள் அனைவரும் நிம்மதியாகவும்,சுபீட்ஷமாகவும் வாழ புளியங்கூடல்.கொம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது!

14 ஜனவரி 2011

உலகுக்கு சோறு போட்ட விவசாயி மோசமான நிலையில் இன்று!

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள பொங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது காலம் காலமாகத் தொடரும் நம் தமிழர் நம்பிக்கை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழர் தம் வாழ்வில் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்குத் துன்பமும் துயரமுமாகக் காட்சியளிக்கின்றன. பழந்தமிழர் வீரத்தை நிகழ்காலத்தில் நம் கண் முன்னே கண்ட ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்திய சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு, அவர்களது போராட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், மீதமுள்ள தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உயிரை மட்டும் கையிலேந்தி இந்த உலகில் எங்காவது போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று இலங்கையில் இருந்து படகு கட்டித் தப்பி வந்த தமிழர்கள் மலேசியக் கடற்பரப்பில் சுற்றி வளைக்கப்பட்டனர் .கை கொடுத்து உதவ எந்த நாடும் முன்வரவில்லை. அகதி என்கிற அடிப்படையில்கூட உலகத்தின் பார்வை அந்தப் படகின் பக்கம் படவில்லை. தாகத்துக்குத் தண்ணீர்கூட இல்லாமல், ஒரு மாதத்துக்கும் மேலாக அந்தப் படகில் வந்த தமிழர்கள் மனிதக் கருவாடுகளாக மிதந்தபோதும், இந்த உலகம் உற்றுப்பார்க்கவில்லை. இது தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்குப் போதித்த பழந்தமிழர் வாழ்வின் இன்றைய எதார்த்த நிலை.
இன்னொரு புறமோ தாய்த்தமிழ் நாட்டில் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் இதற்கு முன் நாடு எப்பொழுதும் சந்தித்திராத வகையில் குடும்ப சர்வாதிகாரமும், ஊழலில் ஊறித்திளைக்கும் போக்கும், அடக்குமுறைகளும் மக்கள் விரோத ஆட்சியும், தமிழர் விரோதப்போக்கும் நடைபெறுகின்றன. தமிழகத்தின் உயிர்நாடியான, நம் அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகள் க‌ருணாநிதியின் ‌ஆட்சியில் (2005 சனவரியிலிருந்து 2009 திச‌ம்ப‌ர் வ‌ரை ) அதிகளவில் 3797 விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்துள்ளாகள் என தேசிய குற்றவியல் பதிவாணையத்தின் புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் கூறுகின்ற‌து. உலகுக்கு சோறு போட்ட உழவன் நிலை இன்று இவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது. இது போக மீனவனுக்கு தினந்தோறும் சிங்களன் துப்பாக்கி குண்டுகளைப் பரிசளிக்கின்றான். இதனையும் கேட்பதற்கு நாதியில்லை.
இவ்வாறு கேட்பதற்கு நாதியற்றதாக வேதனையும் துயரமுமாகத் தமிழர் தம் வாழ்வு இன்று மாறிப்போய் விட்டது. ஆனாலும் இதனை மாற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் வாக்கினை முன்னிறுத்தி அநீதிக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, இன அழிப்பிற்கு எதிராக, ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தமிழர் தம் நல் வாழ்விற்காய் போராடுவோம் என்பதனை இந்த நன்னாளில் சூளுரைத்து அதன் வழி பயணிப்போம் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஐ.நா.நிபுணர் குழுவின் சேவைக்காலம் நீடிப்பு.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், மூவர் அடங்கிய நிபுணர்கள் குழுவொன்றை நியமித்திருந்தார்.
இந்த நிபுணர்கள் குழுவின் சேவைக்காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை அடுத்த மாத இறுதியளவில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும், என்ன காரணத்திற்காக காலம் நீடிக்கப்பட்டதென்பது அறிவிக்கப்படவில்லை. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மார்சூகீ தாரூஸ்மானின் தலைமையில் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிபுணர்கள் குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நிபுணர்களின் விசாரணைகள் அவசியமற்றவை என இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

13 ஜனவரி 2011

ராஜபக்ஷே படத்துடன் நாட்காட்டி,தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்.

இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக "எல்லாமே சாத்தியம்" என்று எழுதப்பட்டுள்ளது.
இதை கண்டித்து பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த மனிதாபிமானமற்ற சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் படத்தை வெளியிட்டு எல்லாம் சாத்தியமே என்று இந்திய ராணுவத்துறையே தலைப்பு கொடுத்துள்ளது தமிழர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் செயல்.
தமிழர்களை கொன்றுகுவித்ததை அங்கீகரித்து பாராட்டி பெருமைப்பட்டுள்ளது இந்திய ராணுவம்.
ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டுள்ள சோக நிகழ்வுகளில் இருந்து மீளமுடியாமல் உலகத் தமிழர்கள் உள்ள நிலையில் ராஜபக்சேவின் படத்தை போட்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளியில் கொடுத்து தமிழக மாணவர்களின் வீடுகளில் வைக்கச்சொல்லி கொடுப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது.
தொடர்ந்து இது போன்ற செய்திகளால் தமிழ்நாட்டு மக்களிடம் ராஜபக்சேவுக்கு மரியாதை ஏஎற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் ராஜபக்சேவை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று மத்திய அரசு முயல்கிறது.
இந்த அவமானத்துக்குரிய நாட்காட்டியை திரும்ப பெறவேண்டும். அப்படி இல்லையென்றால் நாட்காட்டிகளை பறித்து தீ வைத்து கொளுத்தும் போராட்டம் நடத்துவோம்," என்று தெரிவித்தார்.

லண்டனில் மகிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் கட்டுநாயக்காவில் கைது!

மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று முன்னதினம் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினுள் இங்கிலாந்தில் இருந்து வந்திறங்கும் போது, அவர் கடத்தப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த பொலிஸில் முறையிடவும் கடத்தப்பட்ட மாணவரின் பெற்றோர் பீதியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி இங்கிலாந்து சென்றிருந்த போது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலாவது ஆர்ப்பாட்டம் லண்டன் விமான நிலையத்தில் சில மாணவர்களால் நடத்தப்பட்டது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் புகைப்படங்களையும், விபரங்களையும் விரைவில் தமக்கு வழங்குமாறு இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரசன்ன சில்வாவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின்னர் தாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பின்னர் தெரியப்படுத்துவதாகவும், ஜனாதிபதி அங்கு பாதுகாப்பு தரப்பினரிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.
தற்போது குறித்த மாணவர் கடத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக லங்கா நியூஸ் வெப் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

12 ஜனவரி 2011

படைத்தளமாக மாறும் மாவீரர் துயிலும் இல்லங்கள்!

யாழ் மாவட்டத்திலுள்ள விடுதலைப்புலிகளது முக்கிய மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றாக இருந்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் வலிகாமத்தின் முக்கிய ராணுவத் தளமாகின்றது. மிகப் பெரிய படைத்தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. நிரந்தர அரையிறுதி தகரங்களைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு நுழைவாயிலை இடித்து வீழ்த்தியுள்ள படைத்தரப்பு அதனை ராணுவ தளத்திற்கேற்ற வகையில் வடிவமைத்தும் இருக்கின்றது.
இப்பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடவும் கடந்த சில வாரங்களாக தடை விதிக்கப்பட்டும் இருந்தது.
இந்த நிலையில் யாழ் நகரில் உள்ள ஞானம்ஸ் ஹோட்டேல் மற்றும் சுபாஸ் ஹொட்டேல் என்பன உள்ளிட்ட பொதுமக்களது விடுதிகள் மற்றும் தனியார் கட்டிடங்கள் வர்த்தக நிலையங்களில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற 512 வது படைத்தளம் அடுத்து வரும் சில நாட்களில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு நகரவுள்ளது.
இதேவேளை யாழ் நகரின் புறநகர்ப்பகுதிகளில் அதாவது பண்ணை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சீன அரசின் உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தளங்களுக்கு ஒரு பகுதியும் பிரதான அலுவலகங்கள் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப்பகுதிக்கும் நகர்த்தப்படவுள்ளது.
ஏற்கனவே வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் இடிக்கப்பட்டு அப்பகுதிகளிலும் பாரிய ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

11 ஜனவரி 2011

காலை வேளையில் சுழிபுரத்தில் கொள்ளை!

வீட்டில் காலை 8.30 மணியளவில் தனித்திருந்த குடும்பப்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 25 பவுண் நகைகளைச் சூறையாடிச்சென்றுள்ளனர் கொள்ளையர். இந்தச் சம்பவம் சுழிபுரம் பத்திரகாளி கோயிலடிப்பகுதியில் நேற்றுக் காலை இடம் பெற்றுள்ளது. இந்தச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
கணவர் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்பட்ட பின்னர் குளித்து விட்டுச் சுவாமியறையில் கும்பிட்டுக்கொண்டிருந்தபோது மூன்று இளைஞர்கள் கத்தியுடன் வந்து கழுத்தில் அழுத்தி வீட்டில் உள்ள நகைகளைத் தரும்படி மிரட்டியுள்ளனர்.அப்போது அந்தப்பெண் வீட்டில் இருந்த "கவரிங் நகைகளை அள்ளிக்கொடுத்தார்."எங்களுக்குக் கவரிங் நகை ஒறிஜினல் நகை எதுவென்று தெரியும். மரியாதையாக நகையெல்லாத்தையும் எடுத்துத்தாடி, இல்லையென்றால் உன்னைக் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
அச்சமடைந்த அந்தப்பெண் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொடுத்துவிட்டார்.நகைகளை வாங்கிக் கொண்டு "உன்ரை தாலிக்கொடி எங்கையடி?� என்று மிரட்டினர்."அது வங்கியிலை அடைவு� என்று கூறினாராம் பெண்மணி."அதையும் விரைவில் எடுத்து வையடி. திரும்பியும் வரு வோம்� என்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் பறந்து சென்றனர் கொள்ளையர்.
இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொள்ளைக்கு வந்த அந்த மூன்று பேரும் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்களாகக் காணப்பட்டதுடன்,சரளமாகத் தமிழில் கதைத்ததாகவும் அந்தப் பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு குறிகாட்டுவான் குமுதினி சேவை விரைவில்.

எட்டுக்கோடி ரூபா செலவில் திருத்தி அமைக்கப்பட்ட குமுதினி பயணிகள் படகு விரைவில் குறிகட்டுவான் நெடுந்தீவு கடற்பயணத்திற்கு ஈடுபடுத்தப்படவிருப்பதாக யாழ். மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இப்படகு அடுத்தவாரம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது. இப்படகு பழுதடைந்தமையால் கடந்த இரண்டு மாத காலமாக நெடுந்தீவு படகுச்சேவை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது குறிகட்டுவான் நெடுந்தீவு கடல்பயணத்துக்கு சாதாரண வள்ளங்கள் மூலமே சேவை நடைபெற்று வருகின்றது. மீள நிர்மாணிக்கப்பட்டுள்ள பயணிகள் படகு 300 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஜனவரி 2011

இனியும் நாம் இரத்தம் சிந்த விரும்பவில்லை!

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு விழா
சென்னையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
“இலங்கையில் புலிகளை ஒடுக்குவதற்காகத்தான் ஆயுத உதவி, போருக்கு பிறகு இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கையை இலங்கை அரசு அமைத்து தர வழிவகைச் செய்வோம் என்று இந்திய அரசு கூறியது. ஆனால், நடந்தது வேறு, நடப்பதும் வேறு.
போரில் புலிகள் அல்லாத லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளுமாய் ஏராளமானோர் கொத்துக் குண்டுகளுக்கு பலியாகினர்.போர் முடிந்தும் ஆயிரக்கணக்கானோர் முள்வேலி முகாமுக்குள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இலங்கை அரசும் ஏதும் செய்யவில்லை. இந்திய அரசும் ஒன்றும் செய்யவில்லை.
மறு குடியேற்றத்திற்கான வீடுகள் கட்ட இந்தியா கோடிக்கணக்கில் பணம் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. ஆனால் அந்தப் பணம் சிங்கள ராணுவத்தினர்களுக்கு பயிற்சி முகாம்கள் அமைக்கவும், ராணுவ குடும்பத்தினர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கவும்தான் பயன்படுகிறது. ஆனால், போரில் பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலி முகாமிற்குள்தான் வதைபடுகிறார்கள்.
இந்தவேளையில், இந்திய அரசையும், இலங்கை அரசையும், தமிழக அரசையும் ஒன்று கேட்கிறோம். தனி ஈழம் ஒன்றுதான் எங்கள் மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும். அதற்கு நாங்கள் இனி யுத்தம் செய்யப்போவதில்லை. இனியும் ரத்தம் சிந்த விரும்பவில்லை. அவையெல்லாம் தேவைக்கதிகமாக ஏற்கனவே அளிக்கபட்டுவிட்டது.
இப்போது நாங்கள் கேட்பது ஜனநாயக முறையில் இலங்கையில் ஓட்டெடுப்பு நடத்துங்கள் என்பதே. அப்போது தனி ஈழம்தான் வேண்டும் என்று எம் தமிழ் மக்கள் கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்கும் பட்சத்தில் பேசாமல் வாய்மூடி தனி ஈழம் கொடுத்துவிடுங்கள். இல்லை, சிங்களவர்களுடன் இணைந்து ஒரே இலங்கை தேசமாக வாழ எம் தமிழர்கள் விரும்புவார்களேயானால் நாங்கள் பேசாமல் வாய்மூடி இருந்துவிடுகிறோம்.
நாங்கள் உங்களை கேட்பது இதுதான், போரினால் பெரும் இழப்பை சந்தித்துவிட்ட எம் தமிழ் சகோதர சகோதரிகள் அமைதியுடன் வாழ ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள். எம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் இதைத்தான் விரும்புவார்கள்”என்றார்.
மேலும் அவர், “ராஜபக்சேவை லண்டனில் விரட்டியடித்தார்கள் அங்கு வாழும் நம் தமிழர்கள். அதேபோல், நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் அணி ஆடுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. இலங்கை அணியை ஆடவிடாமல் ஆறரைக்கோடி தமிழர்களும் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும். நம் இனப்படுகொலைக்கு நாம் இதுவரை என்ன செய்துவிட்டோம் இதையாவது செய்ய நாம் ஒன்று படுவேம். இலங்கை கிரிக்கெட் அணியை உலககோப்பையில் ஆடவிடாமல் விரட்டியடிப்போம்” என்றார்.

09 ஜனவரி 2011

மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு வணக்க நாள்!

மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கக் கூட்டம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(8-1-2011) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு இல43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்வு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் தலைமையில் இடம்பெற்றது.
முதலாவது நிகழ்வாக வைத்தியகலாநிதி திருமதி.யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் ஈகைச் சுடர் ஏற்றிவைத்தார்.
அவரைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முத்தியஸ்த்தர்களான திரு.ஆனந்தராஐா, திரு.வி.மணிவண்ணன், வைத்தியர்.திருலோகமூர்த்தி, திரு.சுப்பிரமணியம், திரு.குழந்தைவேலு, திரு.ஆறுமுகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் ஆகியோரும் மாதகல் கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் திரு.மரியதாஸ், பல்கலைக்கழக மாணவன் தீபன், பல்கலைக்கழக மாணவி யாழினி, மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் ஆகியோரும் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது துணைவியார் வைத்திய கலாநிதி திருமதி யோகலட்சுமி குமார்பொன்னம்பலம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல தமிழ் ஆசான் திரு.குழந்தைவேலு அவர்கள் மலர் வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வின் தலைவர் திரு.வின்சென்ற் டி போல் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
தலைமை உரையினைத் தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்ட வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. தமிழ்த் தேசத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காக உழைத்து தேசத்திற்காக உயிர் கொடுத்த மாமனிதர் குமார்பொன்னம்பலம், மாமனிதர் நடராஐா ரவிராஐ் ஆகியோர் தேசத்திற்கு ஆற்றிய சேவைக்கு மதிப்பளிக்குமுகமாக 24 மாணவர்களுக்கு தலா 5000ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்பட்டது.
மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களது நினைவாக அவரது குடும்பத்தினரால் 12 மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டது. மாமனிதர் ந.ரவிராஐ் அவர்களது நினைவாக 12 மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டது.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து நினைவு வணக்க உரைகள் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கயஸ்த்தர்களான திரு.ஆனந்தராஐா, திரு.சுப்பிரமணியம், திரு.சு.மணிவண்ணன், திரு.இளங்கோ ஆகியோரும் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக திரு.கமல் அவர்களும், மாணவிகள் சார்பாக செல்வி.துர்க்கா அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்கள் முன்னெடுத்துச் சென்ற இலட்சியத்திற்காக உறுதி தளராது உழைப்போமென உறுதியெடுத்துக் கொண்டனர். அத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

யாழில் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றபோதும் ஒருவர் மட்டுமே கைது!

யாழ்பாணத்தில் கடந்த மாதத்தில் நான்கு கொலைகள், மூன்று பாலியல் வல்லுறவுகள், மூன்று கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இதுவரை ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்தினர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மக்கள் இரவு 7 மணிக்குப் பின்னர் வீடுகளின் கதவுகளைத் திறப்பதில்லை. அவர்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்துவருவதாகவும் சிரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு செய்ய காவல் நிலையங்களுக்குச் சென்றாலும் சில முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதில்லை என்பதுடன் அக்கறையும் காட்டப்படுவதில்லை எனவும் விசாரணைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்ட போதிலும் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

08 ஜனவரி 2011

நெடுந்தீவிற்கு வந்தார் புத்தர்!

முதற் தடவையாக நெடுந்தீவில் புத்தர் பெருமானின் உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற சிலைத் திறப்பு விழாவில் நெடுந்தீவில் உள்ள குருமார்கள், அரச அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. சிலைத் திறப்புக்கு முன்பாக பெளத்த குருமாரால் பிரித் ஓதப்பட்டு தானம் வழங்கப்பட்டுள்ளது.

மகிந்தவிற்கு அரசியல் அறிவு இல்லை,-எரிக் சொல்கைம்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே சமாதானச் செயலாளர் எரிக் சொல்ஹேம் தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான பரந்த பார்வையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு எடுத்துரைத்ததாக ஒஸ்லோவில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர்ஸ்தானிகரகத்திற்கு எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளதாக புதிய விக்கிலீக்ஸ் தகவலொன்று ஒஸ்லோவை த​ளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எனக்கு நன்கு தெரியும், அவர் இனப்பிரச்சினை சிக்கல் குறித்து நன்கு அறியாதவர், அவர் சமாதான நடவடிக்கைகளை எவ்வாறு சிறந்த முறையில் முன்னெடுப்பது என்பது தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் ஒஸ்லோவில் அமைந்திருக்கும் உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது என பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07 ஜனவரி 2011

புலிகளின் குரல் வானொலிக்கு ஐக்கிய தேசியக் கட்சி உபகரணங்களை இறக்குமதி செய்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக வானொலி உபகரணங்களை நோர்வேயிடம் கோரியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நோர்வே அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி இந்த உதவியைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் 'புலிகளின் குரல்' வானொலிக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த முனைப்புக்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, நோர்வே தூதரகத்திடம் இந்த உதவியைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2002ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும், நோர்வே அரசாங்கமும் அதிகளவில் புலிகளுக்கு சலுகை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், நோர்வே அரசாங்கம் நேரடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வானொலி உபகரணங்களை வழங்கவில்லை எனவும், இலங்கை சமாதான செயலகத்தின் ஊடாக இந்த உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் வானொலி உபகரணங்கள் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

06 ஜனவரி 2011

விமான நிலையத்தில் அச்சுறுத்தப்படும் தமிழர்கள்!

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தமிழ்ப் பயணிகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையத்தில் குவிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் நாட்டிலிருந்து வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் பிரவேசிக்கும் தமிழ்ப் பயணிகள் கடுமையான வவிசாரணைக்கும் தொந்தரவுக்கும் ஆளாவதாக லங்கா கார்டியன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பயணிகள் பட்டியலைப் பார்வையிடும் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தனியாகப் பயணம் செய்யும் பயணிகளைக் குறி வைத்து அவர்களை விசாரணைக்கென அழைத்துச் செல்கிறார்கள்.
இவ்வாறு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படுபவர்கள் சிலர் விமான நிலையத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பலர் வெள்ளைவானில் இனந்தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
தமிழ் தேசியவாத அரசியலுடனோ அல்லது விடுதலைப் புலிகளுடனோ தொடர்புடையவர்கள் எனக் காணப்படுமிடத்து அவர்கள் நாட்டிலிருந்து வெளியெறுவது தடை செய்யப்படுகிறது.
குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் தகவலடிப்படையில் குறித்த நபர் விமான நிலையத்தில் குடியகல்வு குடிவரவு அதிகாரியிடம் அவர் கட்வுச் சீட்டை அனுமதிக்காக வழங்கும் போது அவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்படுகிறார்.
குறித்த நபருடைய பிரயாணத்தைத் தடுப்பதற்கு பொய்யான இனந்தெரியாத நபர்கள் அனுப்பியதாகக் கூறப்படும் மொட்டைக் கடிதங்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் பயன்படுத்தப்படுகின்றன.
நீண்ட பல மணி நேர விசாரணையின் போது அவரிடமிருந்து பெறப்படும் தகவல்கள் உண்மையானவையா என உறுதிப்படுத்த விசாரணையின் போது அவர் குறிப்பிடும் நபர்களைக் கூட நடமாடும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தேடிச் சென்று விசாரணைக்கு உள்ளாக்குகிறார்கள்.
வெள்ளைவானில் இனந்தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் இவ்விளைஞர்கள் திரும்பி வந்தாலே தவிர அவர்கள் என்னவானார்கள் என்றுகூட எவருக்கும் தெரியாத நிலைமையே காணப்படுகிறது.
அவ்வாறு திரும்பி வரும் இளைஞர்கள் தமது பிரயாணச்சீட்டை புதிதாக வாங்க வேண்டி இருப்பதால் தேவையற்ற வகையில் பெரும் பண இழப்பை எதிர்நோக்க வேண்டி இருக்கிறது.
மகிந்த ராஜபக்சவின் தோல்வியடைந்த பிரிட்டன் பயணத்திற்குப் பின்னர் பிரிட்டனிலிருந்து வரும் இளைஞர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்திருப்பதாகத் தெரிய வருவதாகவும் லங்கா கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

05 ஜனவரி 2011

யாழில் கத்திக்குத்துக்கு உள்ளாகி ஒருவர் பலி!

யாழ் மாவட்டம் திருநெல்வேலி பனிக்கர் வீதியில் வசித்துவந்த ஒருவரை இன்று இரவு இனம்தெரியாத சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட நபர் வன்னியிலிருந்து இறுதி யுத்தத்தின் போது வெளியேறி முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்து யாழ்.திருநெல்வேலியில் வசித்துவந்திருந்த நிலையிலேயே இவர் இன்று 4,5 பேர் கொண்ட குழுவொன்றால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழில் கடந்த சில வாரங்களக பல கொலைகளும்,கொள்ளைச்சம்பவங்களும் நடைபெற்று வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் நடக்குது யாழ்ப்பாணத்தில?

என்னதான் நடந்தாலும், ஊர் உலகத்தில நடக்கிறது பற்றி உங்கள் நாலு பேரோட கதைச்சாத்தான் மனசுக்குள்ள திருப்தி. பழையபடி யாழ்ப்பாணத்தில நாலா பக்கமும் வெடிச்சத்தம் கேட்குது. நீங்கள் நினைக்கிற மாதிரி இதுவொண்டும் நத்தார், வருடப்பிறப்பு சீன வெடியில்ல. நிஜ துவக்கு வெடி. இப்ப பழையபடி மனிசி மாலை 5 மணியோட வீட்டுக்குள்ள இருந்துடோணும் என்றாள். அது சரி வீட்டுக்குள்ள இருந்தால் வாற யம தர்மராசா விலாசம் தெரியாமல் மாறிப்போயிடுவரோ எண்டு நீங்கள் சொல்லுறது கேக்குது.
கடந்த வருடத்தில, கடைசியா பலியெடுத்த அந்த குடத்தனை கிழக்குப் பெடியன் என்ன பாவம் செய்தானோ. அவன்ற்ற மனுசி என்ர மனுசனைக் கொல்லாதையுங்கோ எண்டு கட்டிப்பிடிச்சு கெஞ்சினதாம். அந்த ஊடுவெளியிக்க ஒருத்தன் வெடி வைச்சானாம். அந்த பிள்ளை என்னெண்டு வாழ்நாள் முழுக்க அந்த நினைவோட உயிரோட வாழும்.
முதலில ஒருத்தன் வீட்டுக்குள் வந்து கொப்பியூட்டர் எங்கையெண்டானாம். பொடியன் கூட்டிக்கொண்டு போய் காட்ட போட்டுக்காட்டென்று சொல்லிப்போட்டு சுட்டானாம். அவங்கட ஊரில, நடக்கிற மண் சுரண்டலால, கிராமமே கடலால மூழ்கிப்போறதை அவன் எதிர்த்து குரல் கொடுத்து வந்தவன். கோடிக்கணக்கில சுரண்டி மண் ஏத்துற முதலாளியின்ர லொறியை மறிச்சு அந்த பகுதி சனம் நடத்தின போராட்டங்களில் எல்லாம் பொடியன் முன்னுக்கு நிண்டவனாம். ஐயாமார் வைக்கிற கூட்டத்திலெல்லாம் எதிர்த்துக் கேள்வி கேட்கிறவனாம். செத்த பெடியன் கடல் கொண்டு போன தங்கட கிராமங்கள் பற்றி எடுத்த படங்களெல்லாம் ஏதோ பேஸ்புக்காம் அதில கிடந்தது. உவள் பேத்திதான் போட்டுக் காட்டினாள். மண் தின்னுற பேய்கள் தான் அவனை கொண்டு போட்டுதுகள்எண்டு ஊர் சனம் கதைக்குது. ஆகக்குறைந்தது மாதம் ஒரு எட்டு மட்டில சுழலுமாம். எட்டு இலட்சமில்லை அது கோடி பாவம் கிழக்குச் சனங்கள். ஆற்றை நாதியுமில்லாததுகள். அதுகளுக்குள்ளையும் நாலெழுத்து படிச்சா, அவங்கள் ரவுண் பக்கம் வந்திடுறாங்கள்.
உண்மையில யாழ்ப்பாணத்தில என்னதான் நடக்குதெண்டு புரிய இல்லை. பழையபடி எல்லாரும் காணாமல் போயினம். பெண்டுகளை கூட கோதாரிவிழுவார் விடயில்லை. ஓட்டோகாரர், கல்விப்பணிப்பாளர், புறோக்கர் என பட்டியல் தொடருது. அம்மாவை விடுங்கோவென்று கெஞ்வி பிள்ளையள் பேப்பரில் விளம்பரம் போடுதுகள். செத்தோ,காணாமலோ எல்லோரும் போய்க்கொண்டுதான் இருக்கினம். 2006 – 2008 போல மீண்டும் இருண்டகாலம் ஆயிரத்துக்கும் மேல குஞ்சு, குருமன்கள் காணாமல் போச்சு. வீட்டில, றோட்டிலயென, ஆள்பிடி பேய்கள் பிடித்துக் கொண்டு போச்சு. அதுகள் குடும்பங்கள் இண்டைக்கும் அழுதுகொண்டிருக்கு. என்ன எங்கட சனம்தான் அதுகளை மறந்து போச்சு.
இவ்வளவும் நடந்து கொண்டிருக்கு எதுவுமே நடக்காத மாதிரி அமைச்சரும், பரிவாரங்களும் ஏதோ சொல்லிக்கொணடு திரியினம். போதாக்குறைக்கு உள்ளுர் பேப்பர்காரர் யாவரத்துக்கு எல்லாத்தையும் ஊதிப்பெரிப்பிக்கினமெண்டும் மேல சொல்லினம். தெரிஞ்ச பேப்பர்காரப் பொடியன் ஒருவனிட்ட இதைக் கேட்டன். 'ஓமோம் அண்ணை அவை பாலியல் வல்லுறவை, பாலியல் மெல்லுறவு எண்டு செய்தி போடச்சொல்லிக் கேக்கிறவை எண்டு பொரிஞ்சு போட்டுப் போறான். அவன் நாக்கைப் புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டான். நான் வாயை மூடிப்போட்டன். நடக்கிறதொண்டும் அவைக்கும் தெரியாதாமோ என்றான். என்க்கேன் பொல்லாப்பு. ஒரு முழு வெத்திலையை மடக்கிப் போட்டு வாயை மூடிப்போட்டன். சும்மா இருக்கேலாமல் அவன் சொன்னதை நான் உளற ஏன் பொல்லாப்பு.
இது பறவாயில்லை. எங்கட இராணுவ தளபதி ஹத்துறுசிங்க, இது கூலிப்படைகளின்ரை அநியாயமென்றார். எனக்கு ஒன்றுமே புரியல. கூலிப்படையென்ன கொம்பியூட்டரைப் போட்டுப்பார்த்தோ ஆளைக் கொல்லும்?. அதுவும் மண் அள்ள விடாமல் தடுத்தால் ஆளைப் போடவும் கூலிப்படையோ தேவை. ஏதோ அவர் எங்கட ஆட்கள் முந்தி செய்ததுகளை குறைச்சு மதிப்பிடுற மாதிரித்தான் எனக்கு படுது. நீங்கள் என்ன சொல்றியள்.
சனமெல்லாம் துண்டைக்காணோம், துணியை காணோமெண்டு; பறக்குது எங்களின்ற தமிழ் எம்பிமார் எங்கையெண்டால், சொல்லிக்கொள்ளுமாறு ஒருத்தரையும் ஊரில காணம். அங்கின இங்கினயெண்டு சிறி வாத்தி எம்பி மட்டும் திரியுது. ஏனையவை மூச். ஒருக்கா கண்டிக்கிறம் எண்டேனும்... ஊகூம். எல்லாரும் முடிஞ்சாப்பிறகு எங்கட கலைஞர் ஸ்டைலில கடிதம் எழுதுவினமோ? என்னமோ? இப்ப பார்லிமென்டி எதோ வெட்டி விழுத்தப்போறன் என்டினம். அதையும் ஒருக்கா பார்ப்பம்.
சத்தியமா பிறந்த வருசம் ஒன்றும் பெரிசா சொல்லிக்கொள்ளுற மாதிரி எங்கட சனத்துக்கு மகிழ்ச்சியா இருக்கையில்லை. பழைய படி வீட்டுக்க முடங்கி கிடக்கத்தொடங்கி விட்டுதுகள். கொண்டுவந்து குவிச்ச வெடிகூட விக்கையில்லை என்கிறான் கடைக்கார ராசன். என்னவோ மனசில பட்டத சொல்லிப்போட்டன். காணாமல் அல்லது மேல போகாமல் இருந்தால் பிறகு சந்திப்பம்
என்ன?
கனகண்ணை யாழ்ப்பாணத்திலிருந்து.

04 ஜனவரி 2011

தங்கைக்கு ஆபாச எஸ்,எம்,எஸ்,அனுப்பியவரை துரத்தி வெட்டிய அண்ணன்!

16 வயது சிறுமி ஒருவருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியதால் 20 வயது இளைஞர் ஒருவர் அச்சிறுமியின் சகோதரரால் துரத்தி துரத்திவெட்டப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி புலோலி மேற்குப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதிக்கு தொடர்ச்சியாக ஆபாச எஸ்.எம்.எஸ்களை குறித்த வாலிபர் அனுப்பியுள்ளார்.
இதனை அறிந்த குறித்த யுவதியின் சகோதரர்கள் குறித்த தொலைபேசி இலக்கம் வைத்திருக்கும் இளைஞரை மடக்கி பிடித்து தாக்க முற்பட்ட போது அவர் அவர்களிடமிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.
ஆயினும் அவர்கள் குறித்த இளைஞரை மடக்கிப் பிடித்து அவரது கைகளை வெட்ட முயற்சித்துள்ளனர். இதன்போது அவர் தப்பியோட அவரை கலைத்து கலைத்து வாளால் வெட்டியுள்ளனர் இதன்போது கைகளில் படுகாயமடைந்த நிலையில் குறித்த இளைஞர் சிகிச்சைகளுக்காக பருத்திததுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதில் அதே இடத்தைச்சேர்ந்த வி.மயூரன் வயது 20 என்றவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் தொடர்ச்சியாக வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருபவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தால்தான் அரசை வீழ்த்தமுடியும்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்காக வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணிகள் தென்னிலங்கையிலும், வடகிழக்கிலும் உருவாக்கப்படுவதன் மூலமாகவே இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் பணியை துரிதப்படுத்தப்பட முடியும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த அரசாங்கத்தை தனியொரு கட்சியாலோ அல்லது தனியொரு அரசியல் தலைவராலோ வீழ்த்த முடியாது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து வலுவான கூட்டணி தென்னிலங்கையிலே உருவாக்கப்படவேண்டும்.
அத்தகைய கூட்டணி தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக வடகிழக்கிலும் உருவாக்கப்படவேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொதுச்சின்னத்திலே எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தோம்.
இந்த எதிர்க்கட்சிகளின் பொது கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தொடரவில்லை. பாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சிகளின் பொது கூட்டணி இருந்திருக்குமானால், இந்த அரசாங்கத்திற்கு இந்த அளவிற்கு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்திருக்காது.
அதை பயன்படுத்தி கணிசமான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தினால் வளைத்துப்போட்டிருக்கவும் முடியாது.
பாராளுமன்ற தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் பொது சின்னத்திலே கூட்டணியாக போட்டியிட வைப்பதற்கு இறுதிக்கட்டம் வரை நாம் கடுமையான முயற்சிகளை எடுத்தோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. தலைவர்களுடன் இணைந்து நான் இந்த முயற்சிகளை எடுத்திருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் பிடிவாதம் காரணமாக இது சாத்தியமாகவில்லை. இதுவே இன்றைய அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்துவிட்டது.
எனவே பொது எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் நான் இன்று ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டணி, ஜே.வி.பி. ஆகிய கட்சி தலைவர்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளேன். இத்தகைய தொடர்புகளை சிறிதுங்க ஜயசூரிய, விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோருடனும் ஏற்படுத்தியுள்ளேன்.
அதுபோல இன்னும் சில தினங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சி தலைவர்களை சந்திப்பதற்கும் நமது கட்சி விரும்பியுள்ளது. இந்நிலையில் பொதுச்சின்னத்தில் போட்டியிடக்கூடிய பொதுவான எதிர்க்கட்சி கூட்டணி உருவாக்கப்படுவதன் மூலமாகவே அரசாங்கத்திற்கு எதிராக இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துவருகின்ற எதிர்ப்பு அலையை நாம் ஒருமுகப்படுத்த முடியும். அதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையை தரமுடியும்.
பொது கூட்டணி தொடர்பில் எதிர்க்கட்சிகள் உடன்பாட்டுக்கு வராவிட்டால், ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகரசபை உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து எமது கட்சியின் பிரபலமான ஏணிச் சின்னத்தில் போட்டியிடுவதையே நான் விரும்புகின்றேன் எனக் கூறியுள்ளார் மனோ கணேசன்.

03 ஜனவரி 2011

உயர்மட்ட மாநாட்டுக்கு இமெல்டா அழைப்பு.

யாழ்க்குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஆட்கடத்தல்கள் படுகொலைகள் தொடர்பாக உயர்மட்ட மகாநாடு ஒன்றுக்கு அரச அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்க்குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற ஆட்கடத்தல்கள் படுகொலைகள், காணாமல் போனமை தொடர்பாக உயர்மட்ட மகாநாடு ஒன்றுக்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவிலாளர் மகாநாட்டின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டிருந்தார். இதன் பிரகாரம் யாழ் மாவட்ட ராணுவத் தரப்பு மற்றும் யாழ் மாவட்ட சிரேஸ்ட காவற்துறைத் தரப்பு உள்ளிட்ட பல தரப்பி;னரும் இந்த மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
புத்தாண்டை அடுத்து படையதிகாரிகள் மற்றும் காவற்துறையினர் தமது சொந்த இடங்களான தெற்கிற்கு சென்றிருக்கின்றார்கள். அவர்கள் கடமைக்கு திரும்பி வர வேண்டும். அவர்கள் வந்தவுடன் இந்த உயர்மட்ட மகாநாடு இடம்பெறும் எனுவம் அவர் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
தான் திடீரென குடாநாட்டின் நகரப் பகுதிக்கு நேற்று சென்று இரவிரவாகப் பார்வையிட்டதாகவும் பல இடங்களில் காவற்துறையினரின் ரோந்து நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் பல இடங்களில் குற்றச்செயல்கள் மோசமாக அதிகரித்துக் காணப்படுவதாகவும் அரச கட்சிகளின் ஒத்துழைப்பினை நபர்கள் துஸ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக பெண்கள் வீடுகளில் நடமாட முடியாத நிலை இரவு நேரத்தில் முற்றாக ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதனை அனுமதிக்க முடியாது. கைதுகள், காணாமல் போதல்கள் படுகொலைகள் என்பன தொடர்பில் குடாநாட்டு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் அபிவிருத்தி தொடர்பாக பேசுவது பொருத்தமானது அல்ல. உடனடியாக இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்கு படைத்தரப்பினரினும் காவற்துறையினரினதும் ஒத்துழைப்புத் தேவையாக இருக்கின்றது. இந்த நிலையிNலுயெ அவசர மகாநாட்டிற்கு தான் அழைப்பு விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.