பக்கங்கள்

19 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்காவிற்கு எதிரான விசாரணைகள் விரைவில் நடத்தப்பட வேண்டும்!

இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள போர்குற்றச்சாட்டுக்கள் குறித்து தாமதமின்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மீண்டும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சனல் 4 தொலைக்காட்சிகாட்சி வெளியிட்டுள்ள புதிய ஆதாரங்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது போர் குற்றங்களும், மனிதாபிமானத்திற்கு எதிரான யுத்தமும் இடம்பெற்றதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சனல்4 தொலைக்காட்சி கடந்த சனிக்கிழமை செய்தி அறிக்கையில் விரிவான ஆய்வுத் தொகுப்பொன்றை வெளியிட்டது.
இதில் முன்னர் வெளியிடப்பட்ட ஆதாரங்களையும், ஐ.நா அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களுக்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டுக் கூறிய அந்தத் தொகுப்பில் புதிய ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டன. இறுதிக்கட்ட போர் இடம்பெறுவதற்கு முன்னர் குறிப்பாக 2008ஆம் ஆண்டு வன்னியைச் சேர்ந்த அரச அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்டு இலங்கை அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகளுக்கமைய வன்னியில் நான்கு லட்சத்து 30 ஆயிரம் பேர் இருந்த போதிலும், இறுதிக்கட்ட போர் முடிந்த நிலையில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் மக்களே இடம்பெயர்ந்து, வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் தகவல்களின் அடிப்படையிலேயே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பிய செனல் 4 தொலைக்காட்சி, அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டது. அதேவேளை இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் பேச்சாளராக கடமையாற்றிய கோட்டன் வைசும், இறுதிக்கட்ட போரின் போது நாற்பதாயிரம் வரை மக்கள் கொல்லப்பட்டிருக்கதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் செனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இந்த புதிய ஆதாரங்கள் குறித்தும் ஆராயும் வகையில், சர்வதேசமட்டத்திலான சுயாதீன விசாரணைகளுக்கு ஐ.நா உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.