பக்கங்கள்

27 ஜூன் 2015

கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பணியகம்!

இன்று (27-06-2015) மாலை 3.00 மணிக்கு கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட பணியகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ-9 வீதி, கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள் ராஜன் கட்டடத்தில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான செயலகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஜூன் 2015

கம்(Hamm)காமாட்சி அம்பாள் நாளை இரதோற்சவம்!

ஜெர்மனியின் கம்(Hamm)மாநகரில் கோவில் கொண்டருளியிருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேர்த்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(21.06.2015)நடைபெற உள்ளது.பகல் 12மணிக்கு அம்பாள் தேரேறி புறப்படுவாள்.இவ்வாலயத்தின் தேர் உற்சவத்தை காண ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு வருகின்றனர்.அத்துடன் பிற மதத்தை சார்ந்தவர்களும் குறிப்பாக வெள்ளையின மக்களும் பெருமளவில் கலந்து சிறப்பித்து வருகிறார்கள்.அத்துடன் ஜெர்மானிய பாடப்புத்தகங்களிலும் கம் காமாட்சி அம்பாள் ஆலயம் இந்துக்களின் அடையாளமாக குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டதக்கது.

19 ஜூன் 2015

பிரான்சில் சிங்கள அரச புலனாய்வாளர்கள் அடாவடி!


பிரான்சில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரின் கொலைவெறித் தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் தனது வர்த்தக நிறுவனத்தை மூடிவிட்டு செல்ல முற்படுகையிலேயே அங்கு காத்திருந்த கும்பல் அவர்மீது கண்மூடித்தனமான தாக்குதலைமேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பிரான்சு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் எமது தேசிய செயற்பாடுகளை முடக்கும் முகமாக செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் ஏற்கெனவே கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகியோரை பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் படுகொலைசெய்யப்பட்டமை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் பரிதி அவர்கள் பாரிசில் படுகொலை செய்யப்பட்டமை என்பன இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. அதன் தொடர்ச்சியாக பாரிசில் இருந்து வெளியாகிய ஈழமுரசு பத்திரிகை மற்றும் அதன் இணையத்தளங்கள் யாவும் கொலைவெறியர்களின் எச்சரிக்கை காரணமாக முடக்கப்பட்டன. அத்துடன் நிறுத்திக்கொள்ளதவர்கள், தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் தமது நடவடிக்கைகளை விஸ்தரித்திருந்தனர். இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்நாடுகளில் உள்ள அனைத்து தேசிய செயற்பாட்டாளர்களையும் விசனமடையவைத்துள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து விளிப்புடன் இருக்கவேண்டும் எனவும் - தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள சிறிலங்கா அரச புலனாய்வாளர்களை இனங்கண்டுகொள்ளவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்ஸ்

13 ஜூன் 2015

யாழ்,நீதிமன்ற தாக்குதலில் ஈபிடிபி?

யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈபிடிபியின் முக்கிய கைகள் இருந்தமை தொடர்பான தகவல்கள் விசாரணைக் குழுவிற்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு காவல்துறைக்கே இத்தகவல்கள் கிடைத்துள்ளனவாம்.அவ்வகையில் ஈபிடிபி வசமுள்ள வேலணைப்பிரதேச சபையின் தலைவரான போல் என்றழைக்கப்படும் சி.சிவராசா உள்ளிட்ட வேறு சில கட்சியின் உறுப்பினர்களிடம் மேற்படி வன்முறைச் சம்வங்களின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் டக்ளஸின் வலது கையும் முன்னாள் யாழ்.மாநகர துணை முதல்வாரன றீகனையும் தேடி வலைவிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைதாகியுள்ள விஜயகாந்த் மற்றும் செந்தூரன் இருவரும் இத்தகைய பின்னணியினை கொண்டுள்ளனர். இதனிடையேகைது நடவடிக்கைகளை அடுத்து வன்முறைச்சம்பவங்களில் தொடர்புபட்டனரென அடையாளம் காணப்பட்ட பலர் தலைமறைவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

05 ஜூன் 2015

புளியங்கூடல் அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்!

புளியங்கூடல் ஊர்காவற்றுறை செருத்தனைப்பதியில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் சிறீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 12ம்(12.06.2015)திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற அம்பாளின் அனுக்கிரகம் கூடியுள்ளது.(27.06.2015)சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்,(28.06.2015)ஞாயிற்றுக் கிழமை தீர்த்தோற்சவமும்,18ம் திருவிழாவாகிய திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.இதேவேளை"எனை ஆளும் என் அன்னை"எனும் ஒலிப்பேழை வெளியிடப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ் ஒலிப்பேழைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

04 ஜூன் 2015

நாரந்தனையில் தொடரும் வாள்வெட்டு!

நாரந்தனையில் நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் ஒருவரை வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரு சமூகப் பிரிவுகளுக்கு இடையே கடந்த ஒரு மாத காலமாக நிலவும் பிரச்சினையே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே மது போதையில் சென்ற நால்வர் ஊர்காவற்றுறைப் பகுதியில் வைத்து ஒருவரை வாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

01 ஜூன் 2015

பெண்களுடன் சேஷ்டை விடுவோரைக் கைது செய்ய உத்தரவு!

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண் பிள்ளைகளிடம் சேஷ்டை செய்வோரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா உத்தரவுட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார். புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் பிள்ளைகளுக்கு அவ்வாறான சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லியடியிலுள்ள கல்வி நிலையங்கள், மகாத்மா திரையரங்கு, தொலைத்தொடர்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் நின்று பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்களை கோருபவர்களையும் அவர்களைக் கேலி செய்து அவர்கள் அணிந்துள்ள தொப்பிகளைக் கழற்றுபவர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறான சம்பவம் நடைபெறுவதாக பொதுமக்களால் புகைப்படங்களுடன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டை கவனத்தில் எடுத்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொறுப்பதிகாரி கூறினார்.