பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2012

ரவுப் ஹக்கீம் அரசியல் நாடகம் நடத்துகிறார்;சஜித் பிரேமதாச

newsஅமைச்சர் ரவுப் ஹக்கீம் மக்களுக்கு ஒருமுகத்தினையும் ஜனாதிபதிக்கு இன்னொரு முகத்தினையும் காட்டி அரசியல் நாடகம் நடத்துகிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். நாளுக்கு நாள் அரசுக்கு எதிராக மக்கள் அலை பெருகியுள்ள நிலையில் கிழக்கு மாகாணத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அமைச்சுப் பதவிகளை அனுபவித்துக்கொண்டு அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்,அவர்களுக்காக குரல் கொடுப்போம் எனக்கூறி அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பகலில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தாக்கப்படும் போது எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் இரவிலே ஜனாதிபதியின் வீட்டுக்குப்போய் அவரின் காலில் மண்டியிட்டுக் கொள்கின்றனர்.இதுதான் இன்றைய முஸ்லிம் அமைச்சர்களின் நிலை என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாவை போல் கொள்கையில்லாத நபர் நான் அல்ல: - அரியநேந்திரன்

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை போல் கொள்கையில்லாத சலுகைக்காகவும் அமைச்சு பதவிக்காகவும் கட்சி விட்டு கட்சி தாவும் நபர் தான் அல்ல எனவும் தான் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி தாவாத கொள்கைவாதி எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அலுவலகம் ஒன்று பழுகாமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் மேடைகளில் பொய்யான தகவல்களை கூறுவது சிறந்தல்ல. நான் புலிகளை விட கூடிய பயங்கரவாதி எனவும் பெரிய புலி எனவும் ஹிஸ்புல்லா கூறியுள்ளார். நான் அவருக்கு ஒன்றை கூறி வைக்க விரும்புகிறேன். நான் புலி அல்ல. தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சி விட்டு கட்சி தாவாத கொள்கைவாதி. இனம் நசுக்கப்படும் போது குரல் கொடுக்கும் அரசியல்வாதி நான். நான் இறந்தலும் என்னைப் போல் ஒருவன் இந்த மண்ணில் பிறப்பான் என்பதை ஹிஸ்புல்லா புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அரியநேந்திரன் கூறியுள்ளார்.

30 ஆகஸ்ட் 2012

தமிழ் அரசியல் கைதியான சதீசை மனோ கணேசன் பார்வையிட்டார்.

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு பெரியாஸ்பத்திரி 50ம் வாட்டுக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதியை ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசன்,கட்சி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா,பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோர் சுரேசின் மனைவி கவிதா மற்றும் அவருடைய மகனுடன் சென்று பார்த்த பின் 50ம் வாட்டின் முற்பகுதியில் கலந்துரையாடுவதை படத்தில் காணலாம். மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்க்கைதி சுந்தரம் சதீஸ் அவர்கள் வழக்கு ஒன்றிற்காக காலி நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வழக்குத்தவணையின் பின் காலி கராப்பிடிய வைத்தியசாலையில் சுயநினைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. மனைவி கவிதா சுரேஸ் அவர்கள் தனது கணவரை கொழும்பு பெரியவைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசனிடம் கேட்டுக்கொண்டதிற்கினங்க மனோகணேசன் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றித் தரும்படி கேட்டதற்கினங்க கொழும்பு பெரியவைத்தியசாலை 50ம் வாட்டுக்கு மாற்றப்பட்டார். கொழும்புக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் அவர்களை ஜனநாயக மக்கள் முன்னனித் தலைவர் மனோகணேசன் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தன சென்று பார்த்தபோது அவர் தலையில் பாரிய கட்டுப்போடப்பட்டுள்ளதுடன் கண்விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலையிலும் அவரின் கால் சங்கிலியால் கட்டிலுடன் இணைக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. கடமையில் இருந்த டாக்டருடன் தொடர்பு கொண்டு விபரம் கேட்டபோது மூளையில் இரத்த ஒழுக்கு ஏற்பட்டு அதிகூடிய இரத்த அழுத்தம் காரணமாகவும் மூளைத் தொழிற்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கண்விழித்திருந்தாலும் கூட மற்றவர்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்தார்.

புலம் பெயர் தமிழர்களிடம் அரியநேத்திரன் அவசரவேண்டுகோள்!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்குமாகணத்தில் உள்ள தங்களது உறவுகளை வாக்களிக்க சொல்லுமாறு கேட்டே அந்த அவசர வேண்டுகோளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அன்பான புலம்பெயர் மக்களே! இலங்கை அரசாங்கம் மீண்டுமொரு அரசியல் போரை கிழக்குமாகாண மக்கள்மீது திணித்துள்ளது. அந்தப் போர்தான் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலாகும். இந்தப் போரில் தமிழர்களின் வெற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்மையில் தமிழர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கடந்த காலங்களில் பல ஜனநாயகப் போர்க்களங்களை சந்தித்துள்ளோம் அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். இந்த தேர்தலை ஏன் நான் ஜனநாயகப் போர் என்கின்றேன் என்றால் இது இரண்டு இனங்களுக்கு இடையிலான 60வது ஆண்டுகால உரிமைப் போராட்டம் அதில் ஆயுதங்களுடனும் போரிட்டுள்ளோம் ஜனநாயக தேர்தல் களங்களின் ஊடாகவும் போரிட்டுள்ளோம் இதில் எந்தப் போராக இருந்தாலும் சரி அதில் வடகிழக்கு தமிழர்கள்தான் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்றார்கள். மாறிமாறி வருகின்ற அரசாங்கங்கள் எத்தனையோ பிரித்தாளும் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் செய்தபோதும் எத்தனையோ துரோகிகள் ஒன்றிணைந்து எமக்கெதிராக செயற்பட்டபோதும் எத்தனையோ அப்பாவி தமிழர்களின் நெஞ்சுகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தபோதும் உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற நெஞ்சுறுதியுடன் உரிமைக்காக போரிட்டும் வென்றுள்ளோம் உரிமைக்காக வாக்கிட்டும் வென்றுள்ளோம். இன்றும் அதே போராட்டம் தொடர்கின்றது தமிழர்களாகிய நாங்கள் ஆயுதங்களை மௌனமாக்கியுள்ளோம் இன்று எங்களுக்கான உரிமைகளை தாருங்கள் என்று கேட்டோம் இல்லை தரமுடியாது நீங்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்று சொல்லி அதை கிழக்குமாகாண தேர்தல் களத்தில் நாங்கள் நிறுவித்துக் காட்டுகின்றோம் என்று மீண்டும் ஒருமுறை சிங்கள அரசும் அவர்களது கைக்கூலிகளும் நெஞ்சை நிமிர்த்தி மார்புதட்டி நிற்கின்றனர். தமிழர்களாகிய நாம் தமிழ் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் பல தடவைகள் வீழ்த்தப்பட்ட போதும் மீண்டும் மீண்டும் எழுச்சி கொண்டு எழுந்த வரலாறு ஜனநாயக தேர்தல் களத்தில் பல தடவைகள் நிகழ்ந்துள்ளது. இன்நிலையிலேயே மீண்டும் ஒரு தடவை சிங்களதேசம் தமிழர்களின் உரிமையை பறிப்பதற்காக�� தமிழர்களின் தாயக மண்ணை இரண்டாக பிரித்து கிழக்கு தமிழர்கள் அரசியல் தீர்வு கேட்கவில்லை என்று சர்வதேசத்திற்கு சொல்வதற்காக கிழக்கு மாகாணத்தில் பல கோடி நிதிகளை செலவளித்து பல சுயேச்சைக்குழுக்களை களமிறக்கி தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து தமிழர்களின் வெற்றியை தமிழர்களை வைத்தே தடுத்து நிறுத்துவதற்கு மிகப்பெரிய அமைச்சர் பட்டாளங்களுடன் களமிறங்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான காலகட்டத்தில் கிழக்கில் உள்ள சிலர் யாதார்த்தத்தை அறியாதவர்களாய் அபிவிருத்தியின்பால் ஆசைகொண்டு தமிழர்களின் உரிமைகளை சிங்களதேசத்திடம் அடகுவைப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்களை தமிழ் தேசியத்துடன் இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்குமாகாண தேர்தல் போர்க்களத்தில் வெற்றிபெற வைப்பதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழர்களும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தில் வாழும் தங்களது உறவுகளுக்கு தொலைபேசி மூலமாகவும் ஸ்கைப் ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் இந்த விடயங்களை தெளிவுபடுத்தி வருகின்ற 8ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க துணைநிற்குமாறு அனைத்து புலம்பெயர் தமிழர்களுக்கும் உரிமையுடன் இந்த சந்தர்ப்பத்தில் அவசர வேண்டுகோளை விடுக்கின்றோம். "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் எத்தனை தேர்தல் போர்க்களம் வரினும் தமிழ் தேசியம் வெல்லும்." நன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டம்.

29 ஆகஸ்ட் 2012

தமிழீழ தேசியத் தலைவர் தீவிரவாதியா? க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான கேள்வித்தாளால் பரபரப்பு

யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு அண்மையில் நடத்திய பொது சாதாரண பரீ்ட்சையில் ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் “பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் தொடர்பில்லாத நபர் யார்?” என்பதாகும். அதற்கு 5 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவையாவன- 1. பின்லேடன் 2. பிரபாகரன் 3. சதாம் உசைன் 4. கேணல் கடாபி 5. மாவோ சேதுங் என்பதாகும். இவற்றிற்கு சரியான விடை 5. மாவோ சேதுங் என்பதாகும். அப்படியென்றால் பிரபாகரன்? இதை விட முக்கிய விடயம் இந்த வினாத்தாளை தயார் செய்ததும் தமிழர்கள் தான்! யாரை திருப்திபடுத்த இவ்வாறான வினாக்கள் வினாத்தாளில் இடம்பெற்றன…? அரசையா? அல்லது மாணவர்களையா? ஏன் சிங்களத்தில் ஜே.வி.பி யினர் கலவரங்களை நடத்தினர் அவர்களின் தலைவரின் பெயரை போட்டிருக்கலாம் அல்லவா? அதை விடுத்து பின்னர் ஏன் இப்படி? இதனால் தமிழ் மாணவர் மத்தியில் இவர்கள் சொல்லமுனைவது என்ன? பிரபாகரன் பயங்கரவாதி என்றா? தமிழர்களின் தலைவராக விளங்கும் பிரபாகரனை இவ்வாறு இழிவு படுத்தி வெளிப்படுத்தியமையானது உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கும் தொண்டமனாறு வெளிக்கள நிலையம் இப்படியான அவதூறு பரப்பும் வினாத்தாளை உருவாக்கியமைக்காக உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருமா? எது எவ்வாறெனினும் இந்த வினாத்தாளை தயார் செய்தவருக்கு இந்நேரம் அலரிமாளிகையில் மஹிந்தரின் கையால் விருது கொடுக்கப்பட்டிருக்கலாம்…

கனகாம்பிகைக்குளத்தில் குப்பைக்குள் குண்டு! இளைஞர் படுகாயம்!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் கைவிடப்பட்ட வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில், கிளிநொச்சியில் உள்ள ஐ.நா தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும், யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்த, தியாகராஜா யோகசீலன் என்ற 29 வயதுடைய இளைஞனே காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. குறித்த இளைஞன், தான் வசித்து வருகின்ற வீட்டின் முற்றத்தைக் துப்பரவு செய்து குப்பைகளை எரித்தபோது, குப்பையுடன் கிடந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற இனந்தெரியாத வெடிப்பொருள் ஒன்று வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. வெடித்துச் சிதறிய துண்டுகள் பாய்ந்ததில் இரண்டு தொடைகளிலும் காயமடைந்த குறித்த இளைஞன் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

28 ஆகஸ்ட் 2012

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் சுரேஸ் ஆப்கானிஸ்தானில் பலி!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் சுரேஸ் ஆப்கானிஸ்தானில் பலிஇலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விமானப்படை வீரர் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளார். சுரேஸ் என்.ஏ. க்ரவுஸ் என்ற விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிளக்கொக் ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் சுரேஸ் மற்றும் அவருடன் பயணம் செய்த 3 படையதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இராணுவ சேவை, தேசிய பாதுகாப்பு சேவை, நேட்டோ படையணி போன்றவற்றின் இராணுவ விமானிப் பதக்கங்களை சுரேஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஸ் 2007ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையில் இணைந்து கொண்டதாவும், 2009ம் ஆண்டு முதல் பிளக்கொக் ஹெலிகொப்டர் விமானியாக கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 29 வயதான சுரேஸ் ஆப்கானிஸ்தான் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளார்.

27 ஆகஸ்ட் 2012

மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதி கோமா நிலையில்; காலி சிறையிலும் சோகம்!

காலி சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கடந்த வாரம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அச் சம்பவத்தில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணம் கண்டி வீதி கொடிகாமம் பகுதியை சேர்ந்தவரான சுந்தரம் சதீஸ்குமார் என்ற 34 வயது இளைஞனே இவ்வாறு கோமா நிலையில் காலி களுவாப்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும் புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 21ம் தகிதியே காலி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் திகதி வெள்ளிக்கிழமை வழைமை போன்று தனது கணவனை பார்வையிடப்போன மனைவிக்கு அவர் காலி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக அறியத்தரப்பட்டது. அதையடுத்து காலி சிறைக்கு தேடிச் சென்ற வேளையிலேயே கோமா நிலையில் தனது கணவரை அவர் கண்டுள்ளார். இந் நிலையில் இங்கு இடம்பெற்ற தாக்குதலில் பல கைதிகள் காயமடைந்திருக்கலாம் எனவும் பலர் சிகிச்சை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கைதியான சதீஷ்குமாருக்கு கவிதா எனும் மனைவியும் சாகித்யா எனும் சிறு குழந்தையும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் மகளும் பலி!

ஹொரண, மொரகஹஹெனப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 32 வயதான தந்தை ஒருவரும் 4 வயதான மகள் ஒருவரும் இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் தாயார் காயமடைந்த நிலையில் ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 3 பேரும் சைக்கிளில் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது இவர்கள் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

26 ஆகஸ்ட் 2012

வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது: - ஸ்ரீகாந்தா

வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது. வடக்கு கிழக்கை பிரித்து சிங்கள மயப்படுத்த நினைக்கும் பேரினவாத சக்திகளுக்கும் அவர்களுக்கு பின்னால் திரிபவர்களுக்கும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குசீட்டை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவர்களில் ஒருவருமான சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு தேற்றாத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் கோவிந்தன் கரணாகரம் ஜனாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே அவர் இதனைக் கூறினார். கிழக்கு மாகாணம் முஸ்லீம்களுக்கு உரியது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க விடமாட்டோம் என திமிருடன் பேசிய சிறிலங்காவின் அரை அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு ஸ்ரீகாந்தா பலத்த செருப்படி கொடுத்துள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாதது ஒரு விபத்து என்று கூறமுடியாது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறு. அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டிருந்தால் சிங்கள பேரினாவாதிகளின் சில கைக்கூலிகள் முகவரி இல்லாமல் இருந்திருப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாததால் சிங்கள பேரினவாதிகளின் கைக்கூலிகள் இன்று மீண்டும் முதலமைச்சர் கனவுடன் சுற்றி திரிகிறார்கள். எனினும் இம்முறை கிழக்கு மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என ஸ்ரீகாந்தா கூறியுனார். இலங்கையில் அதிகுறைந்த வயதில் நாடாளுமன்னறம் சென்றவர் என்ற பெருமையை கோ.கருணாகரமையே சாரும். இச்சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியாதுள்ளது. கோ.கருணாகரம் கடந்த 1989 ஆம் ஆண்டு 25 வயதில் இலங்கைப் நாடாளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவராவார். வடக்கு கிழக்கு பிரதேசம் 88,000 சதுரமைல் பிரதேசத்தினைக் கொண்டுள்ளது. இது எமது தாயக பூமி. ஆனால் தற்போது திருகோணமலையிலும் அம்பாறை மாவட்டத்திலும் பெரும்பான்மை இனத்தவர்கள் எமது தாயக பூமியைச் சூறையாடி வருகின்றார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் அவர்களுக்குத் தெரியாமலேயே வடக்கு கிழக்கு இணைப்புக்கு அத்திவாரமிட்டுள்ளார்கள். இதனை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிளையும் வெளிநாட்டின் உதவிகளுடன் புணருத்தருணம் செய்துள்ளார்கள். இது எம்மினத்திற்கும் வடகிழக்கு இணைப்புக்கு இவை பெரும் சாதகமாக அமைந்துள்ளது. எம்மினத்தவர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் போர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். நமக்கு வடகிழக்கில் வேண்டிய நிலங்கள் உண்டு. வெளிநாட்டில் உள்ளவர்கள் மீண்டும் இங்கு வரும் வாய்ப்புக்கள் உள்ளன. இவற்றுக்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உந்து சக்தியாக அமைய வேண்டும். கடந்த 2007 ஆம் ஆண்டு நான் லண்டன் சென்றபோது கோ.கருணாகரன் மிகவும் வசதி வாய்ப்புக்களோடு லண்டனில் வாழ்ந்ததை பார்த்தேன். இந்த அரசியலில் இறங்கி சம்பாதிக்க வேண்டிய தேவை அவருக்கில்லை. ஆனால் நம் உறவுகள் சுவாசிக்கும் காற்றை இந்த வெயிலில் அடிபட்டு நம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான இத்தேர்தல் மூலம் போராட வந்துள்ளார். எனவே இத்தேர்தலில் அரசுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்கு எம்மினம் ஒன்று திரள வேண்டும். வடக்கு கிழக்கினைப் பொறுத்த மட்டில் வடக்கினைவிட கிழக்கு மாகாணம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டதாகும். அந்த வகையில் மக்கள் தங்களது வாக்குச் சீட்டை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் இம்முறை தமிழ்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றும். சிலாபம், உட்பட வடக்கு. கிழக்கு, பிராந்தியம் தழிழர்களின் தாயக பூமியாகும். எனவே இத்தேர்தலை கிழக்கு மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிரும் அரசியல் அனுபவமுள்ள அரசியல்வாதியுமான கோ.கருணாகரம் போன்றவர்களை ஆதரித்து அதிகூடிய விருப்பு வாக்கினால் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்கின்றேன் என ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

சிறிலங்காவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்!

சிறிலங்காவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார். மனித உரிமை மேம்பாட்டிற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் முகவர் நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம், நவனீதம்பிள்ளை அண்மையில், அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்ததாகவும் அந்த அறிக்கையிலேயே சிறிலங்கா தொடர்பில் மேற்படி குற்றச்சாட்டை நவநீதம்பிள்ளை முன்வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகளின் போது சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீர்மானம் நிறைவேற்றிய காலப் பகுதிக்கு முன்னரும், அதன் பின்னரும் இந்த நிலைமை நீடிப்பதாக அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்கப்படும் பாரிய அளவிலான அழுத்தம், சுனிலா அபேசேகர, சந்தியா எக்நெலிகொட, நிமால்கா பெர்னாண்டோ போன்றோர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டமை குறிப்பாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தமை என்பவை குறித்தும் நவனீதம்பிள்ளை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அல்ஜீரியா, பஹ்ரெய்ன், பெலாரஸ், சீனா, கொலம்பியா, ஈரான், கஸகஸ்தான், லெபனான், மலாவி, சவூதிஅரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளிலும் மனிதவுரிமைச் செயற்பாடுகள் குறித்தும் அவ் அறிக்கையில் நவிப்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.

25 ஆகஸ்ட் 2012

தந்தையின் ஊழியர் சேமலாப நிதிக்காக - தாய், தந்தை சகோதரியைக் கொன்றாராம் இவர்!

ஓய்வுபெற்ற தந்தையின் ஊழியர் சேமலாப நிதியிலிருந்து கிடைக்கும் 03 லட்சம் ரூபா பணத்திற்காகவே தந்தை, தாய், சகோதரி மூவரை கொலை செய்ததாக வெள்ளைவத்தை முக்கொலை சூத்தரதாரி வாக்குமூலமளித்துள்ளார். தந்தைக்குக் கிடைக்கும் 03 லட்சம் ரூபா பணத்தை தான் கோரியதாகவும், அதனைத் தர அவர்கள் மறுத்ததால் அவர்கள் மூவரையும் கொலை செய்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். நஞ்சு கலந்த யோகட்டை (இனிப்பு சேர்க்கப்பட்ட தயிர்) மூவருக்கும் வழங்கி மூவரையும் கொலை செய்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை இராமகிருஷ்ணன வீதியில் வீடொன்றில் இருந்து கடந்த 15ஆம் திகதி மூன்று உடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இதனையடுத்து சந்தேக நபரைத் தேடிவந்த காவல்துறையினர் அவரை நேற்று கைதுசெய்திருந்தனர். கொழும்பிலிருந்து குருணாகல் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது கடவத்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கொலைசெய்யப்பட்டவர்களின் மூன்று அடையாள அட்டைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். சந்தேக நபரைக் கைதுசெய்த கடவத்த காவல்துறையினர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் நேற்று (24) சந்தேக நபரை ஒப்படைத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் தலைமயிரை கட்டாயக வெட்டி, அடையாளம் தெரியாத வகையில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். குடும்பத்திலுள்ள மூவரையும் கொலை செய்வதற்காக பயன்படுத்தி நஞ்சில் ஒருபகுதியை அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தன்வசம் வைத்திருந்தார். காவல்துறை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, இந்த சந்தேக நபர், கொழும்பில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். தான் பெறும் ஊதியத்தைவிட இரண்டு மடங்கு செலவு செய்துள்ளார். கடன்வாங்கியே இந்த நபர் இவ்வாறு சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். ஊரில் வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் தான் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துவருவதாகக் காண்பித்துள்ளார். அதிக வாடகைக்கு அமர்த்தப்பட்ட சொகுசு வாகனத்திலேயே இவர் பெற்றோபைர் பார்ப்பதற்குச் சென்றுள்ளார். பாரியளவில் கடன்பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவந்த இவருக்கு, கடன்கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பிக் கேட்கும்போது அதனைக் கொடுக்க முடியாது நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், தந்தைக்கு 3 லட்சம் ரூபா ஓய்வூதியப் பணம் வருவதை அறிந்துகொண்ட சந்தேக நபரை அதனைப் பெறுவதற்கு முயற்சித்துள்ளார். இதற்காக கொட்டகல வீட்டிற்குச் சென்ற சந்தேக நபர், சிலாபம், முன்னேஸ்வரம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தந்தை, தாய், தங்கை ஆகியோரை கொழும்பிற்கு அழைத்துவந்துள்ளார். கொழும்பிற்கு அழைத்துவந்த இவர்களை வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வாடகை வீட்டில் தங்கவைத்துள்ளார். நித்திரை மாத்திரைகளை அளவுக்கதிகமாக கலந்த யோகட்டை மூவருக்கும் கொடுத்துள்ளார். இதன்பின்னர் அயலவர்களுக்கு உடனடியாக சந்தேகம் வராத வகையில், வாசனைத் திரவியங்களைத் தெளித்துவிட்டு வெளியேறிய சந்தேக நபர் அங்காங்கே பல பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே, நேற்றைய தினம் அவர் குருணாகல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டதால், பயணியொருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கண்ணிவெடி அகற்றும் அதிகாரிகளை அவசரமாக வீட்டுக்கு அனுப்புகிறது அரசு!

இறுதிப் போரின் போது அரச படைகள் கொத்துக் குண்டுகள் எனப்படும் கிளஸ்ரர் குண்டுகளை பயன்படுத்தியமையை வெளிக்கொணர்ந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்ததாக குறிப்பிடப்படும் கண்ணி வெடியகற்றல் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு அவசர அவசரமாகச் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஐ.நா. சபையின் ஒருங்கிணைப்பின் மூலம் குழு ஒன்று நியமிக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டு வருகின்றது. குறித்த மேற்பார்வை அலுவலகம் திருப்திகரமாக கண்ணிவெடியகற்றல் பணிகள் நடந்திருப்பதாக உறுதியளித்தாலே மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறான அதிகாரிகளாலேயே வன்னியின் புதுக்குடியிருப்பு பகுதியில் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியமை தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இதையடுத்தே கண்ணிவெடி அகற்றல் பணிகளுடன் தொடர்புடைய படை அதிகாரிகளை வெளியேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே கொத்துக்குண்டு விவகாரம் வெளியில் கசியவந்ததை அடுத்து சில அதிகாரிகளை உயர்மட்டம் நேரடியாகக் கடிந்து கொண்டதையடுத்து அவர்கள் தமது பதவிகளை விட்டு விலகிச் சென்றுள்ளதாக அறியவந்தது. தொடர் அழுத்தங்களை உள்ளுர் பணியாளர்கள் எதிர் கொள்வதனால் கிளஸ்ரர் குண்டுகளை பயன்படுத்தியமை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடாது தொடர்புடைய ஐ.நா. அதிகாரிகள் பின்னடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மனித நேய கண்ணிவெடியகற்றல் பணி களில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனம் கிளிநொச்சியில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியமை தொடர்பாக முழு ஆதாரங்களை மீட்டிருந்த போதும் அதனை அம்பலப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

24 ஆகஸ்ட் 2012

வீட்டிற்குள் நுழைந்ததால் வயோதிபர்களிடம் வாங்கிக்கட்டிய சிப்பாய்! வன்னியில் சம்பவம்!

முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தில் உள்ள செல்வபுரம் என்ற கிராமத்தில் வயோதிபத் தம்பதிகள் வசிக்கும் வீடொன்றுக்குள் நுழைந்த படைச்சிப்பாயை குறித்த வயோதிபத் தம்பதிகள் தாக்க முற்பட்ட பொழுது அந்தச் சிப்பாய் தப்பியோடியுள்ளார். செல்வபுரம் வடக்குப் பகுதியில் வயோதிபத் தம்பதிகள் தனியே வசித்து வந்தார்கள். அவர்களின் வீட்டுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் படைச்சிப்பாய் ஒருவர் நுழைந்துள்ளார். படைச்சிப்பாயை தாக்க முற்பட்ட பொழுது அவர் தப்பியோடினார். அப்பொழுது அவரை பிடிக்க ஊர் மக்கள் துரத்திச் சென்றனர். குறித்த படைச்சிப்பாய் 500 மீற்றர் தூரத்தில் உள்ள இராணுவமுகாம் ஒன்றிற்குள் பதுங்கிக் கொண்டார். இதைப்போலவே சம்பவ தினத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவும் ஒரு சம்பவம் நடைபெற்றதாக செல்வபுரம் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இராணுவத்தின் அராஜகம் குறித்து உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அரசியல் தீர்வைக் காண அரசாங்கம் தவறியமை குறித்து அகாஷியிடம் ஐ.தே.க., த.தே.கூ. கவலை!

அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் தனது பங்கை சரிவர ஆற்றாமை குறித்து, ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷியிடம் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கவலை தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க தூதுக்குழு யசூஷி அகாஸியை புதன்கிழமை சந்தித்தது. ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தாமை, சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்தாமை ஆகியவற்றை ஐ.தே.க. சுட்டிக்காட்டியதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, மீள்குடியேற்றம் அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆகிய விடயங்கள் தொடர்பாக அகாஷியுடன் தான் கலந்துரையாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது காணிகளுக்கு 26 வருடங்களாக செல்ல முடியாத நிலையில் 28,000 குடும்பங்கள் இருப்பதாக த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ. சுமந்திரன் கூறினார். சம்பூரில் 1,500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் நாடு முழுவதும் ஏறத்தாழ 100,000 பேர் இப்போதும் இடம்பெயர்ந்த நிலையிலுள்ளதாக கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.

23 ஆகஸ்ட் 2012

பிள்ளையான் ஓரங்கட்டப்படுகிறார்!

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா அமைச்சர்கள் பலரும் நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்கவில்லை. கோத்தாபாய ராஜபக்சவின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து ஆராய இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு அபிவிருத்தி குறித்து ஆராயப்பட்ட முக்கியமான இந்தக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்காதது அவர் சிறிலங்கா அரசினால் ஓரம்கட்டப்படுகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா, “சந்திரகாந்தன் இப்போது முதல்வர் இல்லை. ஆகவே அந்தக் கூட்டத்தில் பங்கற்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை. சந்திரகாந்தன் இந்த நிகழ்வில் பங்கேற்காததால், சிறிலங்கா அரசாங்கம் அவரை ஓரம்கட்டுகிறது என்ற முடிவுக்கு வரமுடியாது.” என்று தெரிவித்துள்ளார். செப்ரெம்பர் 8ம் நாள் கிழக்கு மாகாணசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில், ஆளும்கட்சி வெற்றியீட்டினால் சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. சிறிலங்காவின் பிரதியமைச்சர் முரளிதரனின் சகோதரி இந்தத் தேர்தலில் போட்டியிடுவதால் அவரை கிழக்கு முதல்வராக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்திற்கு உதவிய மக்களுக்கும் மின்சாரம் கொடுத்துள்ளாராம் சம்பிக்க!

இலங்கை மின்சார சபை நட்டத்திலேயே இயங்குவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் மூன்று மின்சார விநியோகத் திட்டங்களை பொது மக்களிடம் கையளிக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இரத்தமும் கண்ணீரும் கலந்த வீதி வழியாக மரணத்தை நோக்கிப் பயணிப்பதா அல்லது நீர் வசதி மற்றும் மின்சார வசதி என்பவற்றைப் பெற்று வாழ்வை வளமாக்கிக்கொள்வதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபைக்கு இலட்சக்கணக்கில் பணம் செலவாகின்றது. ஆனால் வீட்டுப் பாவனையாளர்களிடமிருந்து மிகக் குறைந்த பணத்தையே நாம் கட்டணமாக அறிவிடுகிறோம்.இது நாடாளாவிய ரீதியில் உள்ள நடைமுறை இதனால் இலங்கை மின்சார சபை எப்போதும் நட்டத்திலேயே தான் இயங்குகின்றது. அத்துடன் வடக்கில் 30வருட காலமாக பயங்காரவாதத்துக்கு உதவியளித்த வடக்கு மக்களுக்கும் இன்று நாம் மின்சாரத்தை வழங்கியுள்ளோம். எனவே பயங்கரவாதப் பிடியில் இருந்து மீண்ட மக்கள் மின்சாரத்தின் துணையூடன் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நாம் உதவி புரிகிறோம். மேலும் இம் மூன்று திட்டம் மட்டுமல்ல அம்பாறை மாவட்டம் முழுவதுக்கும் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நாம் இன்னும் 35 மின் திட்டங்களை இப்பிரதேசத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் இதுவரை காலமும் மின்சார வசதி கிடைக்காத 224 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ் மின்சார விநியோகத் திட்டம் அமைப்பதற்காக 5.42 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன்படி போகஸ்வத்தை மின் திட்டம், கதுருகொட நாமல் ஓயா மின் திட்டம், அம்பகஹவெல மின் திட்டம் ஆகியனவற்றையே நேற்றைய தினம் அமைச்சர் மக்களிடம் கையளித்துள்ளார்.

22 ஆகஸ்ட் 2012

மக்களின் குடிநீரை பறித்து நீராடுகிறது சிங்களப்படை!

வன்னியில் கடும் வரட்சி நிலவுகின்றது இதனால் மிகவும் சிரமமான நினையில் மக்கள் பணம் கொடுத்து குடி நீரைப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டக பூநகரிப் பகுதி மக்கள் குடிக்க நீரின்றி அலைந்து திரிவதுடன் ஒரு லீற்றர் நீரை ஒரு ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்கின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் குடிநீரை அதிகாரத்தினைப் பயன்படுத்தி அபகரிக்கின்ற கடற்படையினர் தினமும் 2000 லீற்றர் நீரைக் குளிக்கப் பயன்படுத்துவதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவருகின்ற கடும் வரட்சி காரணமாக மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் என்றுமில்லாதவாறு வற்றியுள்ளதுடன் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையினால் மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளுக்காக அலைந்து திரிவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் இவ் வரட்சியின் முழுமையான தாக்கத்திற்கு உட்பட்டு குடிநீரைப்பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரதேசத்தில் மக்கள் தமது நாளாந்த தேவைகளுக்கான நீரினை பணம் கொடுத்துப் பெற்று வருகின்றனர். அதாவது பூநகரிப் பகுதியில் ஒரு லீற்றர் தண்ணீர் ஒரு ரூபா கொடுத்துப் பெற்று வருகின்றனர். பிரதேச சபையினர் நீர் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றபோதிலும் அப்பிரதேச மக்களின் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு நீர் விநியோகம் இடம்பெறவில்லை. இதேவேளை முழங்காவில் பிரதேசத்திலும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்ற நிலையிலும் அங்குள்ள கிணற்றில் இருந்து நாளாந்தம் 2000 லீற்றருக்கு அதிகமான நீரினை இராணுவத்தினர் பாரிய நீர்த்தாங்கிகள் மூலம் எடுத்துச் செல்கின்றனர் எனவும் இது அந்த பிரதேசத்தில் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரதான கடற்படை முகாமிலுள்ள நீர்த்தடாகத் தேவைக்காகவும் இராணுவத்தின் இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்துவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது! மனோ கணேசன்

தமிழர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னிணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தமிழர்கள் சட்டவிரோதமானமுறையில் புகலிடம் கோரக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாறாக நாட்டில் இருந்து கொண்டே உரிமைகளுக்காக போராட வேண்டுமென அவர்வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களைப் போல் அன்றி தற்போது போராடுவதற்கான ஜனநாயக சந்தர்ப்பம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் நிலவிவருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இலங்கையில் இருந்து கொண்டே ஜனநாயக ரீதியானபோராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு இலங்கையில் நிம்மதியாக வாழக் கூடிய ஓர் பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என மனோ கணேசன்தெரிவித்துள்ளார். திட்டமிட்ட வகையில் நில பிரதேசங்களில் தமிழர்களின் எண்ணிக்கைகுறைப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை தற்போதைக்கு வழங்க முடியாது எனவும் எதிர்காலத்தில் சான்றுகளுடன் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

21 ஆகஸ்ட் 2012

அகதிகள் முகாம் முற்றுகை போராட்டம்: வைகோ கைது- தொண்டர் தீக்குளிக்க முயற்சி!

பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமை மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும், முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் செந்தூரனை விடுவிக்கக் கோரியும் அகதிகள் முகாம் முன்பு மதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது முகாமை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து மதிமுக தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி கரையான் சாவடியில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள செந்தூரன் என்பவர் கடந்த 6ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி உள்பட அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரி அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரை காப்பாற்றக் கோரியும், முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் மதிமுக சார்பில் இன்று காலை முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது பேசிய வைகோ, பூந்தமல்லி அகதி முகாமில் செந்தூரன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும். அவரை கடந்த வருடம் ஜுன் மாதம் 18ம் தேதி உரிய ஆவணம் இல்லாமல் வந்ததாக செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். பின்னர் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு 2 மாதம் சிறையில் இருந்தார். அவர் மீது ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்றதாக அங்கு வழக்கு போடப்பட்டது. ஆனால் அங்குள்ள நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால் தமிழக போலீசார் செந்தூரனை கேரள போலீசார் உதவியுடன் கைது செய்து செங்கல்பட்டு முகாமில் அடைத்தனர். அங்கு அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். அதிகாரிகளும், கியூ பிரிவு போலீசாரும் உத்தரவாதம் அளித்ததால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். ஆனால் சொன்னபடி அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை. இதற்கிடையே செந்தூரன் உள்பட 5 பேரை பூந்தமல்லி முகாமுக்கு மாற்றி விட்டனர். இங்கு அவர் 6ம் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும், அகதி முகாம்களை மூட வேண்டும். இதற்காகவே இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார் வைகோ. பின்னர் முற்றுகை போராட்டம் நடத்த பூந்தமல்லி முகாம் நோக்கி வைகோ தனது தொண்டர்களுடன் ஊர்வலமாகச் செல்ல முயன்றார். ஆனால், அவர் மேடையில் இருந்து இறங்கியதும் வைகோவை கைது செய்த போலீசார் உடனடியாக வேனில் ஏற்றிச் சென்றனர். வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து தொண்டர்கள் பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் கிலோமீட்டர் கணக்கில் நின்றன. போலீசார் அவற்றை வேறு பாதையில் திருப்பி விட்டனர். அப்போது பூந்தமல்லி புதுச்சத்திரத்தைச் சேர்ந்த மதிமுக கிளைச் செயலாளர் செல்லக்கனி உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் உடனடியாகத் தடுத்து கைது செய்தனர்.

20 ஆகஸ்ட் 2012

புலிகளின் விஞ்ஞானிப் போராளி டனிஸ் மாஸ்டர் படைகளிடம் சிக்கினாரா?

புலிகளின் விஞ்ஞானிப் போராளி டனிஸ் மாஸ்டர் இராணுவத்திடம் சிக்கினாரா ?இறுதி யுத்தத்தின்போது, புலிகளின் விஞ்ஞானிப் போராளியான டனிஸ் மாஸ்டரும் இராணுவத்திடம் சிக்கினார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. புலிகளின் ஆரம்பகால உறுப்பினரான இவர் எம்.ஓ(MO) பிரிவில் இருந்தார். புலிகள் இயக்கத்துக்கு பல ஆண்டுகாலமாக இவர் ஆயுதத்தளவாடங்களைத் தயாரித்துகொடுத்ததோடு, நீர் மூழ்கிக் கப்பல் பலதையும் உள்ளூரில் தயாரித்து காட்டினார். புலிகள் பாவித்த பல நீர் மூழ்கிக் கப்பல்கள் டனிஸ் மாஸ்டரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப்போரில் இவரை இராணுவம் கைதுசெய்ததாகவும், இருப்பினும் இவரை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளது. நீருக்கு அடியில் பயணம் செய்து கடலுக்கு அடியில் புலிகள் நடத்திய பல தாக்குதல்களுக்கு, பொறிமுறைகளை வகுத்து, அதற்கான உபகரணத்தை வடிமைத்தவர் டனிஸ் மாஸ்டரே. புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஒரு முறை கிளாலிக் கடற்பரப்பு ஊடாக கிளிநொச்சிக்கு மாற்ற, இவரது படகு வடிவமைப்பு பெரிதும் உதவியது. தனிப்பட்ட முறையில் இவர் படகுகளை வடிவமைக்கும் திறன் கொண்டவர்.

19 ஆகஸ்ட் 2012

வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி புரியும் அடாவடி!

படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோரது குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் முன்னாள் பெண் போராளிகள், கணவரை இழந்த இளம் பெண்களை இலக்கு வைத்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. குறித்த பொலிஸ் நிலையததின் குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டரான பிரிய தர்சன என்பவருக்கு எதிராகவே இவ்வாறு பொது அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. அவ்வதிகாரியினது அடாவடிகள் எல்லையில்லாது அதிகரித்து செல்கின்ற போதும் பாதிக்கப்படும் பொது மக்கள் அச்சங்காரணமாக பகிரங்கமாக முன்வந்து முறைப்பாடுகளை செய்ய மறுத்தே வருகின்றனரென சிவில் சமூகப்பிரதிநிதியொருவர் தெரிவித்தார். 2006ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் காணாமல் போன தனியார் கல்வி நிலைய நிர்வாகி ஒருவரது மனைவி மற்றும் பிள்ளைகளை தனது கட்டுப்பாட்டுள் வைத்துக் கொண்டுள்ளதுடன் அவர்களை அடிமை போன்றே கையாண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. தெற்கைச் சேர்ந்த குறித்த அதிகாரியினது மனைவி மற்றும் குடும்பம் தெற்கிலுள்ள போதும் தனியாக வாழும் இவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவரது கைங்கரியம் கட்டுப்பாட்டை தாண்டி செல்வதாக நகரசபை அங்கத்தவர்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக வல்வெட்டித்துறை பொலிஸ எல்லைக்குட்பட்ட கிராமமொன்றில் குறித்த சப் இன்ஸ்பெக்டரது பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக முன்னாள் பெண் போராளி யொருவர் தீக்கிரையாகி தற்கொலை செய்து கொண்டமையும் அம்பலத்திற்கு வந்துள்ளது. தனிப்பட்ட ரீதியில் ஆட்களைப் பழி வாங்குவது மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்து அலைக்கழிக்கப்படுவதென இந்நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்புகள் குற்றச்சாட்டுக்களை முனவைத்து வருகின்றன. குறிப்பாக பாடசாலை மாணவிகள் சிலர் கூட இவரது வலைக்குள் வீழ்த்தப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. மக்கள் மனங்களை வெல்லப் போவதாகவும் மக்களுக்கு சேவை ஆற்றப் போவதாகவும் அடிக்கடி பத்திர்கையாளர்களை சந்தித்து அறிக்கைகள் வாசிக்கும் பொலிஸ் அதிகாரிகள் இவரது விடயத்தில் கண்டும் காணாமலும் இருப்பதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது. குறித்த வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பல அதிகாரிகள் தகவல்களை உறுதிப்படுத்தியதுடன் தங்களால் ஏதும் செய்யமுடியாத பரிதாகரமான நிலையில் இருப்பதையும் ஏற்றுக் கொண்டனர்.

17 ஆகஸ்ட் 2012

நல்லூரானின் தேருக்குச் சென்றிருந்த வேளை மாயமாகின 50பவுண் நகைகளும் பணமும்!

வீட்டிலுள்ளவர்கள் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவுக்குச் சென்றதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் குறித்த வீட்டிலிருந்த சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான 50 பவுண் நகைகளையும், 50 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர் இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் கொட்டடி சிவன் பண்ணை வீதியிலுள்ள வீடொன்றில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நேற்றைய தினம் நல்லூர்க்கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா என்பதால் ஆலயத்துக்கு காலையிலேயே வீட்டு உரிமையாளரின் மனைவியும் மகனும் சென்றுவிட்டனர். வீட்டு உரிமையாளரான வேலுப்பிள்ளை குலசிங்கம் என்பவர் வீட்டுக்கு முன்புறமாக உள்ள தனது கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இதன்போதே திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். இது குறித்து வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில்: "எனது மனைவியும், மகனும் காலை 8 மணிக்கு கோயிலுக்குச் சென்றுவிட்டு 10 மணிக்குத்தான் திரும்பி வந்தார்கள். அந்த இரண்டு மணித்தியால இடைவெளியில் கடைக்கு வந்த இருவர் என்னிடம் குளிர்சோடா கேட்டனர். எனவே வீட்டிலுள்ள குளிர்சாதனப்பெட்டியிலேயே சோடா இருந்ததால், அதனை எடுத்துவர வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்தேன். அப்போது தான் வீட்டிலிருந்த நகைகளும் பணமும் களவாடப்பட்ட விடயம் எனக்குத் தெரியவந்தது'' . "வீட்டின் பின்புறமுள்ள கிணற்றடி வழியாக உள்ளே வந்த திருடர்கள் வீட்டுப் பின் கதவின் தாழ்ப்பாளை உடைத்துள்ளனர். பின்னர் அந்தக் கதவு வழியாக வீட்டின் உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். எம்முடைய கவனயீனமும் திருடர்களுக்குச் சாதகமாகப் போய்விட்டது. நாங்கள் நகைகளை அடைவுபிடித்து வருகின்றோம். அவ்வாறு எம்மிடம் அடைவு வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தையுமே திருடர்கள் களவாடிச் சென்றுவிட்டனர்'' என்றார். சம்பவம் நடைபெற்ற வீட்டின் சுவாமி அறையில் நகைகள், பணம் என்பன வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததனால், கதவு திறந்த நிலையில் காணப்பட்ட பக்கத்து அறையின் சுவரில் ஏறி சுவாமி அறைக்குள் திருடர்கள் குதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்த அலுமாரியைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த புடைவைகள் மற்றும் பொருள்களைச் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். இதன்போதே அவர்கள் நகைகளையும் பணத்தையும் "அபேஸ்" செய்துள்ளனர். இது தொடர்பில் யாழ்.பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் இது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் திருட்டுப் போயுள்ளதாக் கூறப்படும் நகைகள் எத்தனை பவுண் பெறுமதியானவை என்று உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

தங்கச் சங்கிலியை பறித்த சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

பெண் மருத்துவர் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட முச்சக்கர வாகன சாரதி ஒருவர் உட்பட சந்தேக நபர்கள் இருவரை ஓகஸ்ட் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நேற்று உத்தரவிட்டார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீதியொன்றில் இம்மருத்துவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரின் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை முதலாவது சந்தேக நபர் பறித்துச் சென்றதாகவும் பின்னர் அவர் முச்சக்கர வாகனமொன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றதால் இச்சம்பவத்திற்கு எதிராக மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் மருதானை பொலிஸ் பொறுப்பதிகாரி லுஷான் சூரியபண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி காமினி ஹேவாவித்தாரண, உதவி இன்ஸ்பெக்டர் மதுர விதான ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். அதையடுத்து அடகு நிலையமொன்றிலிருந்து மேற்படி தங்கச் சங்கிலி மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இச்சந்தேக நபர்களை ஓகஸ்ட் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடத்துமாறும் உத்தரவிட்டார்.

16 ஆகஸ்ட் 2012

சிறிலங்கா செல்லும் பிரித்தானியக் குடிமக்களுக்கு புதிய பயண எச்சரிக்கை!

சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு பிரித்தானியா, மிகவும் அவதானமாக இருக்கும்படி புதிய பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பயண எச்சரிக்கைக் குறிப்பில், “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 மே மாதம் முடிவுற்றாலும், சிறிலங்காவில் தேசியவாதம் எழுச்சி கண்டுள்ளது. இதன்விளைவாக, மேற்குலக எதிர்ப்பு- குறிப்பாக பிரித்தானிய எதிர்ப்பு வாதம் வலுவடைந்துள்ளது. இது பிரித்தானியத் தூதரகம் மற்றும் ஏனைய இராஜதந்திர சுற்றுப்புறங்களில் எதிர்ப்பு வன்முறை போராட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தப் போராட்டங்கள் பொதுவான பிரித்தானிய சமூகத்தை நோக்கியதாக இருந்தாலும், நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதும், சிறிலங்கா அரசாங்கம் பரந்தளவிலான தீவிரவாத எதிர்ப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதுடன், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளது. அதிகளவிலான சிறிலங்கா இராணுவத்தினர் நாடுமுழுவதிலும் நிலை கொண்டுள்ளனர்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

15 ஆகஸ்ட் 2012

பொன்னாலையில் விஷமிகள் குடிதண்ணீர் கிணற்றை மாசுபடுத்தினர்!

newsபொன்னாலைப் பகுதியில் வயல் வெளியில் அமைந்திருந்த நன்நீர் கிணற்றுக்குள் கழிவு ஓயில்,குப்பைகளைக் கொட்டி விஷமிகள் குடிதண்ணீரை மாசுபடுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு விஷமிகள் இந்த நாச வேலையைச் செய்துள்ளதால் அந்த கிணற்றில் குடிதண்ணீரைப் பெற்றுவந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பொன்னாலை குளத்துக்கு அருகில் இருந்த கிணறும் தற்போது பாவனைக்கு உதவாத தண்ணீராக மாறியுள்ளது. குறிப்பாக இந்த கிணற்றுக்கு மேலாக சூரிய ஒளி படாத வகையில் சிமெந்தால் மூடிக்கட்டப்பட்டு சிறிய துவாரம் மட்டும் விடப்பட்டுள்ளது. இதனால் கிணற்றுக்குள் வௌவால்கள் குடிகொண்டு தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றன. குறித்த கிணற்றின் மூடியை அகற்றிச் சுத்தப்படுத்தி தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாம் பலதடவைகள் கேட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதிக்கான குழாய் மூலமான நீர் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நடைபெறுகின்றது.வயல் வெளியில் எஞ்சியிருந்த கிணற்றையும் விஷமிகள் அசுத்தம் செய்துள்ளனர்.இதனால் தற்போது குடிநீரைப் பெறுவதில் தாம் நீண்ட தூரத்துக்கு அலையவேண்டி ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 22ஆம் திகதி பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில் மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் குளத்துக் அருகிலிருக்கும் கிணற்றையாவது தூய்மைப்படுத்தி மக்கள் பாவனைக்கு விடுமாறு மீண்டும் தாம் கோரிக்கை விடுப்பதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

14 ஆகஸ்ட் 2012

புனர்வாழ்வு அளித்து விடுவிக்கப்பட்ட போராளி கைது!

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து, சிறிலங்கா படையினரின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சதீஸ்வரன் (வயது 34) என்ற முன்னாள் போராளியே கைது செய்யப்பட்டுள்ளவராவார். கடந்த சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் இவரது வீட்டுக்குச் சென்ற வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இவரைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். முன்னதாக, அப்பகுதி கிராம அதிகாரியுடன் சதீஸ்வரனின் வீட்டுக்குச் சென்ற சிறிலங்கா காவல்துறையினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதையடுத்து மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்வதாக கூறி, கைதுசெய்யப்பட்டதற்கான பற்றுச்சீட்டையும் அவரது மனைவியிடம் கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சதீஸ்வரன் ஐந்து ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பின்னர், 2000ம் ஆண்டில் அதைவிட்டு விலகியிருந்தார். போரின் இறுதிக்கட்டத்தில் ஓமந்தையை சென்றடைந்த அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த அனைவரும் சரணடைய வேண்டும் என்ற சிறிலங்கா இராணுவத்தினரின் உத்தரவுக்கமைய சரணடைந்தார். இதன்பின்னர் சிறிலங்கா படையினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே விடுதலை செய்யப்பட்டார். இதன்பின்னர், முள்ளியவளையில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் சிறிலங்கா படையினரால் விசாரணைக்குட்படுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருவது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் குடும்பங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆகஸ்ட் 2012

புலம்பெயராளர்கள் 22பேர் கோத்தபாயவுடன் சந்திப்பாம்!

புலம்பெயர் தமிழர்கள் 22 பேர் சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அவரது தலைமையிலேயே குழுவினர் கோத்தபாயவைச் சந்தித்துப் பேசினர். இலங்கையில் முதலீடுகளைச் செய்வது குறித்தே இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இலங்கை அரசு குறித்து தவறான பரப்புரைகளில் ஈடுபடவேண்டாம் என்று இந்தச் சந்திப்பில் கோத்தபாய அப்போது கேட்டுக் கொண்டார் என்று நம்பகமாகத் தெரியவந்தது. முன்னாள் புலிகளின் புனர்வாழ்வு நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விவடுதலை தொடர்பான விடயங்கள் என்பவற்றைக் கோத்தபாயவிடம் இருந்து அவர்கள் கேட்டறிந்து கொண்டனர். அதேவேளை இலங்கையில் முதலிடுவதாக இருந்தால் தமக்கு அதற்குச் சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் அத்தகைய ஒரு சூழல் ஏற்படுவது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில்தான் தங்கி இருக்கிறது என்று அவர்கள் கூறியதாகவும் அவ்வாறான சூழலிலேயே நம்பிக்கையுடன் முதலிட புலம்பெயர் தமிழர்கள் முன்வருவார்கள் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர் என்றும் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய ராச்சியம் (லண்டன்), சுவிஸ், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய 22 பேரே இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கும் பயணப்பட்டு நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளனர்.

டெல்றொக்சனின் மரணத்திற்கு மகிந்த அரசு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!

டெல்றொக்சனின் மரணத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தம் முடிந்த பின்பு நாம் அனைவரும் எண்ணியிருந்தோம் நாட்டில் சமாதானத்துடன் வாழலாம் என்று ஆனால் இப்போது நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்த்தால் இன்னும் யுத்தம் முடிவடையவில்லை என்று தெளிவாக தெரிகின்றது. டெல்றொக்சன் இறந்தது நோயினாலோ அல்லது வீதியில் நடந்து அவர் விபத்திலோ கொல்லப்படவில்லை.அரச பாதுகாப்புக்களுடன் கூடிய ஒரு சிறைச்சாலையில் இருக்கும் போது தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றான். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.இங்கு கூடியிருக்கின்ற எங்களுக்கு ஒரு கடமை இருக்கின்றது.இவரை கொலை செய்தது யார் என்று அரசு வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தார் ஏன் இந்தக் கொலைக்கு மக்கள் முன்னிலையில் வந்து மன்னிப்புக் கோரமுடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கொலையினை தெற்கின் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.இந்த நாட்டில் சாதாரண மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் ஏன் நிமலரூபன்,டெல்றொக்சன் போன்ற கைதிகளுக்கு கிடைக்கவில்லை. எனியும் நாம் பொறுத்திருக்க முடியாது சடலத்திம் முன்நின்று கூறுகின்றோம்.இந்தக் கொலைக்கு எதிரான நடவடிக்கை எடுப்போம் இந்தக் கைதி இன்று இறந்துவிடமில்லை வீரமரணம் அடைந்துள்ளார் எனவே நாம் அனைவரும் இவருக்கு வீர வணக்கத்தை தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

10 ஆகஸ்ட் 2012

டில்ருக்ஷனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணம் வந்தடையும்!

Dill rucksan_CIவவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து கோமாநிலையில் போராடி உயிர் இழந்த மரியதாஸ் டில்றுக்ஸனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணம் வந்தடையவுள்ளது. இறுதிக்கிரியைகள் நாளை சனிக்கிழமை அவரது சொந்த இடமான பாசையூரில் நடைபெறவுள்ளது. அதேவேளை அவரது படுகொலைக்கெதிரான எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் புதன் கிழமை யாழ்.நகரில் இடம்பெறவுள்ளது. முன்னதாக நீண்ட இழுபறிகளின் பின்னரே மரியதாஸ் டில்றுக்ஸனது பூதவுடல் குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவரது பூதவுடலுடன் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் செல்கின்றனர். இந்தக் கட்சியினரின் பாதுகாப்புடன் நேற்றிரவு பூதவுடல் தாங்கிய வாகனம் கொழும்பிலிருந்து புறப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் போராளியான அவர் தகவலொன்றின் அடிப்படையினில் 2009ம் ஆண்டின் பிற்பகுதியினில் குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

புலி உருவத்தைப் பச்சை குத்தியிருந்த பிரான்ஸ் இளைஞன் கைதாகி விடுதலை!

இலங்கைப் படத்தினுள் புலியின் உருவத்தை கையில் பச்சைகுத்தி, நல்லூர்த் திருவிழாவுக்கு வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞரை யாழ். பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவுக்காக பிரஸ்தாப 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் பிரான்ஸிலிருந்து தனது தாயாருடன் வந்திருந்தார். திருநெல்வேலியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவர் திருவிழாவுக்குச் சென்று வந்துள்ளார்.அவர் தனது கைத்தோள்பட்டையில் இலங்கைப் படத்தினுள் புலியின் முழு உருவமும் அடங்கும் வகையில் பச்சை குத்தியுள்ளார். அவரைக்கண்ட பொலிஸார், இராணுவப் புலனாய்வாளர்கள் பின் தொடர்ந்துள்ளனர். பிரஸ்தாப இளைஞர் இந்துப்பாரம்பரியப்படி மேலங்கி அணியாமல் வேட்டி சால்வையுடன் ஆலயத்தினுள் நுழைந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்றுமுன்தினம் புதன்கிழமை இவர் கைது செய்யப்பட்டு ஒருநாள் பொலிஸ் தடுப்பில் வைத்து கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பிரஸ்தாப இளைஞர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினார் என்று குற்றஞ்சாட்டி யாழ். நீதிமன்றில் நேற்றுமுற்படுத்தினார். விசாரணையின் போது தான் பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தமை பற்றி எடுத்துக்கூறிய இளைஞர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமைக்கான ஆதாரமாக கடவுச்சீட்டை நீதிவானிடம் காண்பித்து தான் நிரபராதி எனத் தெரிவித்துள்ளார். அதனைப் பரீசிலித்த பின்னர் நீதிவான் இளைஞனை விடுதலை செய்தார். அந்த இளைஞன் தமிழ் மொழியை விட ஆங்கிலம் மற்றும் பிரான்ஸ் மொழிகளில் சரளமாகப்பேசினார். என்றும் கூறப்பட்டது.

09 ஆகஸ்ட் 2012

டெல்றொக்சன் படுகொலைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்.

வவுனியா சிறைச்சாலையில் சிறிலங்கா படையினரால் தாக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதி டெல்றொக்சன் கைது செய்யப்பட்டமைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறீலங்கா அரசினது சிறைக்காவலர்களும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து கடந்த 01-07-2012 அன்று ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். அத் தாக்குல் காரணமாக கணேசன் நிமலறூபன் என்ற அரசியல் கைதி 03-07-2012 அன்று உயிரிழந்தார். இந்நிலையில் மேற்படி தாக்குதலின்போது படுகாயமடைந்து கோமநிலையில் இருந்த டெல்றொக்சன் என்ற தமிழ் அரசியல் கைதியும் நேற்றய தினம் 07-08-2012 அன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அரசாங்கம் தனது கட்டுப்பாட்டிலுள்ள சிறை ஒன்றில் குறிப்பாக நீதித்துறையின் பாதுகாப்பில் இருந்த ஓர் கைதியை விசாரணை நடாத்தி அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்காக எத்தகைய தண்டனையும் வழங்கும் அதிகாரம் அரசின் நீதித்துறைக்கு இருந்தது. அவ்வாறு செய்யாது தனது கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரை இவ்வாறு அரசு படுகொலை செய்துள்ள செயற்பாட்டின் மூலம் ஆட்சியாளர்கள் எவ்வளவு குரூரகுணம் மிக்கவர்கள் என்பதனை இந்தக் கொலை மூலம் உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது. சிறீலங்கா அரசு தனது பாதுகாப்பில் இருந்தவர்களை தானே தாக்கிக் காயப்படுத்தியது மட்டுமன்றி, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிசசை வழங்காகது சாகடித்துமுள்ளது. நிமலரூபன் அவர்கள் உரிய சிகிச்சைகள் இன்றி சாகடிக்கப்பட்ட பின்னரும் கூட டெல்றொக்சன் அவர்களது உயிரைக் காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது அவரை அரசு சாகடித்துள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தலைவர்
செல்வராசா கஜேந்திரன், பொதுச்செயலாளர்

08 ஆகஸ்ட் 2012

அபாயமணி ஓசையால் விழுந்தடித்தோடிய மாகாணசபை உறுப்பினர்கள்!

வடமேல் மாகாணசபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை குருணாகல் அவை மண்டபத்தில் நடைபெற்ற வேளை திடீரென அபாய மணி ஒலித்ததால் சபையில் இருந்த மகாண சபை உறுப்பினர்கள் சிலர் மேசைக்கு கீழ் குனிந்தும், சிலர் மாற்று வழிகளால் ஓடித்தப்ப முனைந்தமையும் இடம் பெற்றதால் சிறிது நேரம் அமளிதுமளி ஏற்பட்டது. சபை அமர்வு நடைபெற்றுக்கொண்டு இருந்த வேளை திடீரென அபாயமணி ஒலித்தது. அந்தவேளை சபைத்தலைவர் தடுமாற்றம் அடைந்தார். இதைக் கண்ட ஏனைய உறுப்பினர்கள் ஓடித்தப்ப முயன்றனர்.சிலர் மேசைக்குக் கீழ் ஒளித்துக் கொண்டனர். பலருடைய முகத்தில் வியர்வை வழிந்தோடியது.சிலர் அவசரக் கதவால் வெளியேற முயன்றபோது அந்தக் கதவுகள் பூட்டப்பட்டு காணப்பட்டதால் கூச்சலும் ஏற்பட்டது. சபையின் கூச்சல் குழப்பத்தை கண்ட அவைத்தலைவர் இது தொடர்பாக ஆராயும்படி பாதுகாப்பு அலுவலர்களைப் பணித்தார்.அவர்களும் ஓடிச் சென்று விசாரித்துத் தவறுதலாக யாரோ ஒருவர் அபாயமணியை அழுத்தி விட்டதாகத் தெரிவித்தனர். இதன்பின் அமைதியடைந்த சபை மீண்டும் கூடிய வேளை பல உறுப்பினர்கள் தங்கள் மேசை மீதிருந்த தண்ணீர் போத்தலை வாயில் வைத்தபடி இருந்தததைக் காணக்கூடியதாக இருந்தது.

திருமுறிகண்டி கோயில் குறித்த வழக்கு ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

உயர்நீதிமன்றின் தமிழ்பேசும் நீதிபதிகளினால் விசாரிக்கப்பட வேண்டுமென கட்டளையிடப்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலய பிரச்சினை பற்றிய மனித உரிமைகள் மனு ஜனவரி 23இல் கவனத்தில் எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது. ஆலயத்தின் பரம்பரை தர்மகர்த்தாவான ஜி.மணிவண்ணன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஷிரானி திலகவர்த்தன, எஸ்.ஐ.இமாம், பியசத் தெப் ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாமின் முன் வந்தது. திருமுறிகண்டி பக்தர்கள் மன்றத்தின் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் வி.நாகராசா ஆகியோர் தலையிட்டு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். ஆலய பக்தர்களின் பிரதிநிதிகளாலான ஒரு சுயாதீனமான முகாமைத்துவ சபை இக்கோயிலை முகாமைத்துவம் செய்ய நியமிக்கப்பட வேண்டுமென இந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

07 ஆகஸ்ட் 2012

கனடாவில் வாகன விபத்து: இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் ஸ்தலத்திலே பலி!

கனடாவின் டொரன்டோ நகரில் QEW தேசிய நெடுஞ்சாலை 427ல் நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்நத தந்தையும் மகளும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தபோதுஇஎதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இறந்த பெண்ணின் தாயார் என கருதப்படும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சன்னிபுரூக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்திற்கு காரணமான எதிரே வந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்காவும் , பான் கீ மூனும் வற்புறுத்தினார்கள் - என்ற செய்திக்கு நவநீதம்பிள்ளை மறுப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு அமெரிக்கா கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும், அமெரிக்காவும் நவநீதம்பிள்ளையை பதவி விலகுமாறு கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும், இதனை நவநீதம்பிள்ளை மறுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இவ்வாறு பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

நாகரீக உடை அணிந்த சகோதரிகளை கடைக்கு கூட்டிச் சென்றவர் மீது தாக்குதல்!


நவநாகரீக உடை அணிந்து சென்ற தனது சகோதரிகளை கூட்டிக்கொண்டு கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற சகோதரர், தனது முன்னிலையில் சகோதரிகளை கீழ்த்தரமான வார்த்தைகளால் பகிடிவதை செய்த இளைஞனிடம் நியாயம் கேட்டபோது அவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்குள் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் பரபரப்பாக நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சம்பவ தினமன்று தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் தனது சகோதரிகளை அழைத்துக் கொண்டு பொருட்கள் வாங்குவதற்காக யாழ்.நவீன சந்தைத் தொகுதிக்கு சென்றுள்ளார். குறித்த சகோதரிகள் நவநாகரிகமான ஆடைகளை அணிந்தே சென்றிருந்தனர். நவீன சந்தைப் பகுதிக்குள் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வியாபார நிலையத்தின் உரிமையாளர் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களால் குறித்த சகோதரிகளை பகிடிவதை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர்களின் சகோதரன் குறித்த நபரிடம் நியாயம் கேட்டு அவரையும் திட்டித் தீர்த்தார். இதன்பின்னர் அங்கிருந்து சகோதரியைச் கூட்டிக் கொண்டு கட்டடத் தொகுதியை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கையில் இடைமறித்த குறித்த நபர் இவரை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் இருந்து தப்பித்து யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள தற்காலிக பொலிஸ் பாதுகாப்பு நிலையத்தில் இவர் தஞ்சமடைந்தார். மீண்டும் அங்கு வந்தவர்கள் இவரை பொலிஸார் முன்னிலையில் தலைக்கவசத்தினாலும் வீதியில் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைக் கம்பியினாலும் தாக்கினர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் ஒன்றுபடவே மூவரையும் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளனர்.

06 ஆகஸ்ட் 2012

கொழும்பு ஆட்டிறைச்சிக் கடைகளில் நாய் இறைச்சி விற்பனை!!!

கொழும்பில் அதிகளவான தெருநாய்கள் மர்மமான முறையில் காணாமற்போயுள்ள நிலையில் கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை கொழும்பின் பலவேறு பகுதிகளில் நாய்கள் காணாமல் போயுள்ளதை பொலிஸ் மற்றும் விலங்குகள் நல அமைப்புக்கள் உறுதிசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசர் நாய்கடி சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதற்கு காரணம் கொழும்பில் தெரு நாய்கள் அதிகரித்தமையே என கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் கொழும்பு விகாரமாதேவி பூங்கா மற்றும் அதனை அண்டிய பகுதியில் காணப்பட்ட 10 வரையிலான தெருநாய்கள் திடீரெனக் காணாமற் போயுள்ளன. இந்தநிலையில் கொழும்பிலுள்ள இறைச்சிக் கடைக்காரர் ஒருவர் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்கப்படுவதை உறுதி செய்துள்ளார். விலங்கு நலம் மற்றும் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஜயதிலகே தெரு நாய்கள் காணாமல் போவதாக உறுதி செய்துள்ளதுடன் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகணவும் தெருநாய்கள் காணாமற் போனது தொடர்பாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்தவாரம் கொலன்னாவையை நோக்கிச் சென்ற வாகனத்தில் தெருநாய்களைப் பிடித்து ஏற்றிச் சென்றதை சிலர் பார்த்துள்ளதாகத் தெரிவித்தனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார் என் அவ் ஆங்கில வார இதழ் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக முகாம்களில் தொடர்கதையாகிவிட்ட மரணங்கள்!

தமிழ்நாடு,திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வறண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த கலைச்செல்வி(வயது-35),அவரது மகன்மாரான வினோத்(வயது-12), கௌதம் (வயது-7)ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தீயில் கருகிய நிலையில் சடலங்கள் கானப்படுவதால் மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற சந்தேகத்தில் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

05 ஆகஸ்ட் 2012

பச்சிளம் குழந்தைகளைக்கூட படுகொலை செய்த கருணா,பிள்ளையான் கும்பலுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்!

கிழக்கில் பச்சிளம் குழந்தைகள், மனித நேய செயற்பாட்டார்கள், உபவேந்தர், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், என வகைதொகை இன்றி படுகொலைகளை புரிந்த பிள்ளையான் கருணா குழுக்களுக்கு கிழக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிள்ளையான் மற்றும் கருணா குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் ஈவிரக்கமின்றி செய்த படுகொலைகளின் விபரங்களை சுட்டிக்காட்டியுள்ள மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் இந்த கொலைகாரர்களுக்கு எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என கிழக்கிலங்கை தமிழ் மக்களிடம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிள்ளையான் குழு செய்த படுகொலை
பிள்ளையான்குழுவினர் திருகோணமலையில் 2009 மார்ச் 11ஆம் திகதி 6வயது மாணவியான வர்ஜா யூட்றெஜி என்ற சிறுமியை கடத்திச்சென்று படுகொலை செய்தனர். இச்சிறுமியின் சடலம் பின்னர் மூன்று தினங்களில் சாக்கு ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பிள்ளையான் குழுவைச்சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இக்கொலையை தாங்களே செய்ததாக ஒப்புக்கொண்டனர். இக்கொலையை கிழக்கு முதலமைச்சராக இருந்த பிள்ளையானின் உத்தரவின் பேரிலேயே செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
பிள்ளையான் போன்ற மகிந்த ராசபக்சவுக்கு நெருக்கமானவர்கள் இக்கொலையின் பின்னணியில் இருந்த விடயம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இக்கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையினரால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன் அக்கொலை வழக்கு விசாரணை மூடப்பட்டு விட்டது.
மட்டக்களப்பில் பச்சிளம் சிறுமி படுகொலை
இதேபோன்று மட்டக்களப்பில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 31ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான 8வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் என்ற மாணவி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். கடத்தி சென்றவர்கள் இவரின் தாயிடம் 30இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியிருந்தனர்.
இம்மாணவின் தந்தையை(சதீஸ்குமார் சந்திரராசா) இதற்கு முன் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கருணாகுழுவினர் கடத்திச்சென்று படுகொலை செய்திருந்தனர்.
தினுசிகாவின் படுகொலையில் கருணாகுழு பிள்ளையான்குழு இரண்டும் இணைந்தே ஈடுபட்டதாக தெரியவந்தது. இந்த படுகொலையாளிகளுக்கு தலைமை தாங்கியவர் புளொட் மோகன்குழுவைச்சேர்ந்த ரதீஸ்குமார் என்பவர் என்றும் இவர் பின்னர் கருணாகுழுவுடன் சேர்ந்து இயங்கி வந்தார். இவர் மட்டக்களப்பு இராணுவ புனலாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த லெப்.கேணல் நிஜாம் முத்தலிப் என்ற இராணுவ அதிகாரிக்கு கீழ் இயங்கி வந்தனர்.  இந்த மாணவியின் கடத்தல் மற்றும் படுகொலைகளில் கருணா பிள்ளையான் குழுக்கள் மட்டுமன்றி சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சிறுமியின் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக கந்தசாமி ரதீஸ்குமார் என்பவர் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலையின் பின்னணியில் இருந்தவர்களின் விபரங்கள் அம்பலத்திற்கு வராமல் இருப்பதற்காக இந்த நான்கு பேரும் பின்னர் ஊறணியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த சிறுமியின் படுகொலையில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு இருந்தது.
தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் கடத்தி படுகொலை
2006ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவுக்கு கணக்கியல் பயிற்சி ஒன்றிற்காக சென்ற மட்டக்களப்பு தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்களை வெலிக்கந்தையில் வைத்து பிள்ளையான் கருணா குழு ( அப்போது இருதரப்பும் ஒன்றாகவே இருந்தனர்) வெள்ளைவானில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு தமிழர் புனர்வாழ்வு கழக தலைமை கணக்காளர் தனுஷ்கோடி, பிறேமினி, சண்முகநாதன் சுவேந்திரன், தம்பிராசா வசந்தராசா, கலையாப்பிள்ளை ரவீந்திரன், உட்பட 10பேர் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். கடத்தி செல்லப்பட்ட பெண் பணியாளர்கள் பிள்ளையான் உட்பட காடையர் குழுவால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை
இலங்கையில் விவசாய துறையில் மிகப்பெரிய அறிஞராக திகழ்ந்த கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை 2006.12.15 அன்று கொழும்பில் பௌத்தலோக மாவத்தையில் வைத்து நண்பகல் வேளையில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இக்கடத்தலையும் கொலையையும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நேரடி தொடர்பு இருந்தது. இவர்கள் இருவரும் பிரிந்த பின்னர் இக்கடத்தல் குற்றச்சாட்டை இருவரும் ஒருவரை ஒருவர் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கடத்தலுக்கு முதல் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பால சுகுமாரை கடத்தி சென்ற கருணா தலைமையிலான பிள்ளையான் ரவீந்திரநாத் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையும் விடுவித்திருந்தனர்.
இது தவிர கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன், உட்பட பெருந்தொகையான புத்திஜீவிகளையும் கொலைகார ஈனப்பிறவிகளான பிள்ளையானும் கருணாவும் கொலை செய்தனர்.  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தை தேவாலயத்திற்குள் வைத்தே தொழுகையின் போதே படுகொலை செய்ய படுபாதகத்தை செய்தவர்கள் கருணா குழுவினராவார்.
கிழக்கில் பள்ளிவாசல்கள் மீது படுகொலை நடத்திய கருணா
1990ஆம் ஆண்டில் கிழக்கில் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த அப்பாவி முஸ்லீம்கள் மீது கருணாவின் நேரடி உத்தரவின் பேரில் படுகொலை நடத்தப்பட்டது. பள்ளிவாசல்கள் மீது படுகொலைகளை மேற்கொள்வது என்ற முடிவை எடுத்தது கருணாவே அன்றி விடுதலைப்புலிகளின் தலைமை அல்ல. பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவது என்ற முடிவை விடுதலைப்புலிகளின் எடுக்கவில்லை என்பதற்கு வடபகுதியில் உள்ள எந்த ஒரு முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதும் முஸ்லீம்கள் கொல்லப்படவில்லை என்பதும் சான்றாகும்.
எனவே பச்சிளம் குழந்தைகளை அப்பாவி பொதுமக்களை, புத்திஜீவிகளை படுகொலை செய்த ஈனப்பிறவிகளான கருணா பிள்ளையான் குழுக்களை கிழக்கு மாகாணத்திலிருந்து துரத்துவதற்கு கிழக்கு மாகாணசபை தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் இவர்களை தோற்கடிப்பதன் மூலம் கொலைகார ஈனப்பிறவிகளான கருணா பிள்ளையான் ஆகியோருக்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க முடியும் என மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயணிகள் ஊர்தியில் சென்ற இளைஞரை தள்ளிக்கொன்ற நடத்துனர்!

வவுனியா பஸ்ஸில் பயணிக்க டிக்கெட் கேட்ட தமிழ் இளைஞர்கள் பெருமபான்மையின நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் தள்ளி வீழ்த்தப்பட்டதால் படுகாயமடைந்த சம்பவமொன்று இன்றிரவு யாழ்.நகரில் நடந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தை பஸ்தியான் சந்திப்பகுதியில் வழி மறித்த இளைஞர்கள் மூவர் வவுனியா செல்ல பணத்தை செலுத்த முற்பட்டுள்ளனர். வழமையாக யாழ்ப்பாணம் – வவுனியா கட்டணமாக ரூபா 180 மட்டுமே அறவிடப்பட்டுவருகின்றது. எனினும் குறித்த பேருந்தின் நடத்துனரோ ரூபா 250 இனை கட்டணமாக செலுத்த பணித்துள்ளார். அதையடுத்து அவருடன் முரண்பட்ட இளைஞர்கள் பற்றுச்சீட்டினை சமர்ப்பித்தால் குறித்த கட்டணத்தை செலுத்த சம்மதித்தனர். அவ்வேளையில் நடத்துனர் மற்றும் சாரதியுள்ளிட்டவர்கள் இளைஞர்களை தாக்க தொடங்கியுள்ளனர். அத்துடன் இவர்களை வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு பேருந்தினை இயக்க முற்பட்டுள்ளனர். அவ்வேளையில் சில்லினுள் அகப்பட்டு இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்டவர்களை தாக்க தொடங்கினர். அத்துடன் அவர்களை பொலிஸாரிடம் கையளித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் கொழும்பிற்கான பாதையனுமதி தமிழ்த் தரப்புக்களுக்கு மறுதலிக்கப்பட்டு பெருமளவில் அரசியல் செல்வாக்கில் தெற்கை சேர்ந்தவர்களுக்கும், மற்றும் ஈபிடிபிக்கு பெருமளவில் இலஞ்சம் வழங்கி அனுமதி பெற்ற தமிழ் பஸ் உரிமையாளர்களால் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி நள்ளிரவு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி ஜெயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 25) என தெரிவிக்கப்பட்டது.

04 ஆகஸ்ட் 2012

யாழ்,வேலணை சாட்டி உட்பட மூன்று இடங்களில் புதிய கடற்படை தளங்கள்!

வேலணை சாட்டி
சிறிலங்கா கடற்படை வடக்கில் மேலும் மூன்று கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ளது. இந்த கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் நாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும், சுண்டிக்குளத்திலும் இந்தப் புதிய தளங்கள் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. மற்றையது யாழ் வேலணை சாட்டிப்பகுதியிலும் அமைக்கப்பட்டு வருகிறது. சாட்டியில் நிரந்தர முகாங்கள் அமைக்கப்படுவதற்காக பெருமளவிளான தளபாடங்கள் இறக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக யாழ் செய்தியாளர் தெரிவித்தார். அதேவேளை மாதகல் சம்பில்துறையில் சிறிலங்கா கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள தம்பகொலபட்டுன விகாரைக்கும் சிறிலங்கா கடற்படைத் தளபதி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சிறிலங்கா கடற்படையினரால் தென்பகுதியில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு நிலையத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

அரசியல் புகலிடம் கோருவோரை நாடு கடத்துமாறு அரசு வேண்டுகோள்!

கெஹலிய 
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதனால், வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக சென்று அங்கு அரசியல் புகலிடம் கோருபவர்கள் அனைவரையும் இலங்கைக்கு நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் இலங்கையரின் எண்ணிக்கையின் காரணமாக அந்நாடுகளுக்கு சமாளிக்க முடியாத ஒரு பெரும் சவால் ஏற்பட்டிருப்பதனால் அப்பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண வேண்டுமாயின், அந்த அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட இலங்கையரை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டுமென்று எமது அரசாங்கம் கேட்டிருப்பதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இவ்வாண்டில் அவுஸ்திரேலி யாவுக்கு சட்டவிரோதமாக சென்று அரசியல் அடைக்கலம் கோரும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதென்றும் தெரிவித்தார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆதரவான சில அரசியல் சக்திகள் எங்கள் நாட்டில் உள்ள அரசியல் குழுக்களுடன் இருக்கும் தங்களின் நெருக்கமான தொடர்பை அடிப்படையாக வைத்து, இந்த ஆட் கடத்தல்களை மேற்கொண்டு வருவதை இலங்கை அரசாங்கம் இனங்கண்டுள்ள தென்றும் கூறினார். இவ்விதம் இலங்கையில் இருந்து ஆட்கடத்தலை மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்கிறார்கள். இவர்கள் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு நூற்றுக்கணக்கான தமிழர்களை கடத்தி செல்ல எத்தனித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள நல்ல, பலம் வாய்ந்த எல்.ரி.ரி.ஈயை ஆதரிக்கும் சக்திகளின் நிதி உதவியுடனேயே இவர்கள் இந்த ஆட்கடத்தல் நாடகத்தை மேடையேற்றி, தமிழர்கள் இலங்கையில் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற போலிப் பிரசாரத்தை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறினார்.

03 ஆகஸ்ட் 2012

திருமணமாகி இரண்டே வாரங்களில் பரிதாபம்!


திருமணமாகி இரண்டு வாரங்களேயான நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிகாயங்களுக்கு ஆளாகிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி சாவடைந்தார். சாவகச்சேரி சிவன் கோயிலடியைச் சேர்ந்த அஜந்தன் சுதர்சினி (வயது 20) என்பவருக்கு கடந்த 15ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டுக் கதவுகளைப் பூட்டித் தடுப்புப் பலகையைப் போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்ற இவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ மூட்டிக் கொண்டுள்ளார். இதனால் வேதனை தாங்க முடியாமல் சத்தமிட்டபோது முன் வீட்டில் கதைத்துக் கொண்டிருந்த இவரது கணவரும் உறவினர்களும் ஓடிவந்து கதவுகளைத் திறக்க முடியாத நிலையில் அதனை உடைப்பதற்கு ஆயத்தங்கள் செய்தபோது சுதர்சினி பின் கதவைத்திறந்து வெளியே எரிந்த நிலையில் ஓடிவந்துள்ளார். அங்கு நின்றவர்கள் தீயை அணைத்து உடனடியாக வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.சாவகச்சேரி வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார்.இந்த மரணம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து நீதிவான் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

தமது படையினரைத் தண்டிக்கத் தவறியுள்ளது சிறிலங்கா.

மூதூரில் பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதும், இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகளை தண்டிக்க சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. நியுயோர்க்கைத் தலைமையகமாக கொண்டியங்கும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இதுதொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ”மூதூரில் 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் நாள் 17 பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் இந்தப் படுகொலைகளுக்குக் காரணமானவர்களை பொறுப்புக் கூறவைக்க சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது. கொடூரங்களைப் புரிந்த சிறிலங்காப் படையினர் மற்றும் காவல்துறையினரை நீதியின் முன் நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் ஈடுபாடு காட்டவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்தப் படுகொலைகளில் சிறிலங்கா அரசபடையினர் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இருந்த போதும் எவரும் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படவோ, நீதியின் முன் நிறுத்தப்படவோ இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முனையவேயில்லை.” என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.