பக்கங்கள்

25 மார்ச் 2017

இலங்கைப் பயணம் இரத்து:ரஜனிகாந்த்

Rajinikanth's plan to find a solution for Tamil fishermen issuesஅரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று என்னுடைய பயணத்தை ரத்து செய்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது,விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.இதனை ஏற்று தனது பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்வதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று நான் இந்த பயணத்தை ரத்து செய்கிறேன்.எனினும் அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையது அல்ல. அதை நான் முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் அரசியல்வாதி அல்ல, கலைஞர். நண்பர் திருமாவளவன் கூறியதை போல கலைஞர்களுக்கு எல்லை இல்லை.வருங்காலத்தில் இலங்கை செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை அரசியலாக்கி தடுத்து விட வேண்டாம். புனித போர் நிகழ்ந்த பூமியை காண ஆவலுடன் உள்ளேன். தமிழக மீனவர்கள் ஒரு ஜான் வயிற்றுக்காக கடலில் செல்லும் மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று இலங்கை அதிபர் சீறிசேனாவிடம் கோரிக்கை விடுக்க நேரம் கேட்டுள்ளேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்தார்.

10 மார்ச் 2017

சர்மிளா மரணத்தால் சோகத்தில் மூழ்கியது கூடலூர்!


புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டவரும் தற்பொழுது கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் தனது தாயாரின் சுகயீனம் காரணமாக தனது இரு பிள்ளைகளுடன் புளியங்கூடல் சென்றிருந்தார்.நேற்றைய தினம் தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து புளியங்கூடல் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில் விஜயரூபனின் தந்தை திரு வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களும் காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

07 மார்ச் 2017

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்வதாக அமெரிக்கா அறிக்கை!

இலங்கையில் மோசமான மனித உரிமை சம்பவங்களிலும், சித்திரவதையில் ஈடுபட்ட படையினர் தண்டனையிலிருந்து விலக்குப்பெறும் கலாச்சாரம் தொடர்ந்தும் நிலவுவதனால் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் இடம்பெற்று வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனர்வாழ்வுக்குள்ளான முன்னாள் போராளிகள் பலர் படையினரதும், பொலிசாரினதும் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஈனத்தனமான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. புனர்வாழ்வுக்கு முகம்கொடுத்து விடுதலையான பல முன்னாள் போராளிகள் குறித்து சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு ஸ்ரீலங்காவில் உண்மைக்கும், நீதிக்குமான அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்கள் நம்பிக்கைத்தன்மைமிக்க ஆதாரங்கள் பலவற்றினை வழங்கியிருப்பதனையும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாகப் போர்க்காலத்திலும், அதன்பின்னரும் இடம்பெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பிலும் தண்டனையிலிருந்து விலக்குப் பெறும் கலாச்சாரம் இன்னமும் தொடருவதாகத் தெரித்திருக்கும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம், மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்ட அரச படையினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமன்றி, எதேச்சையான கைதுகள், நீண்டகாலம் தடுத்துவைத்தல், புலனாய்வு நடவடிக்கைகள், சிவில் அமைப்பு ஆர்வலர்கள் மீதும், ஊடகவியலாளர் மீதும், சிறுபான்மைச் சமயத்தவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படுவோர் மீதான அச்சுறுத்தல்கள் போன்றன மிகவும் கரிசனைக்குறிய மனித உரிமைப் பிரச்சனைகளாக இருப்பதாகவும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. எதேச்சையாகக் கைது செய்யப்படுவதும், அதன் பின்னர் தடுத்துவைக்கப்படுவதும் சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டிற்குப் பின்னர் குறைந்திருக்கின்றபோதும், அவை இன்னமும் தொடரப்படுவதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமன்றி, இராணுவம் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ளதனைச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இராணுவம் அங்கே இராணுவச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.