பக்கங்கள்

31 ஜனவரி 2013

பொன்.காந்தன் கைதின் பின்னணியில் முக்கிய தரப்பினர்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தனிப்பட்ட செயலாளர் பொன்னம்பலம் இலட்சுமி காந்தன் சிக்கவைக்கப்பட்டதன் பின்னணியில் சில முக்கிய தரப்பினர் இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளிற்கும் லட்சுமிகாந்தனின் கைதில் தொடர்பிருக்கலாம் என்ற தகவல்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்துள்ளன. கடந்த 16ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகமான இல165 கொழும்பு -8 இலுள்ள கின்சி வீதி அலுவலகத்தினில் தனக்குள்ள உயிராபத்து பற்றி புகார் செய்துவிட்டு வெளியேற முற்பட்ட வேளையிலேயே காத்திருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் என நம்பப்படுபவர்களால் கடத்தப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது. தான் எந்நேரமும் பழிவாங்கும் வகையில் கடத்தப்படலாமென பொன்.காந்தன் தனது முறைப்பாட்டை செய்து விட்டு சித்திரவதைகளுக்கு அஞ்சி இந்தியாவிற்கு தப்பி செல்ல முற்பட்டுள்ளார். இந்நிலையில் பொன்காந்தன் மனித உரிமைகள் அலுவலகத்தில் தங்கியிருந்த விடயம் முள்ளிவாய்க்காலின் பின்னர் ஞானஸ்தானம் பெற்று அரச பங்காளிகளுடன் கூட்டு சேர்ந்துள்ள நபரொருவர் ஊடாகவே புலனாய்வுத் தரப்புகளுக்கு பரிமாறப்பட்டதாகவும் அதனையடுத்தே பொன்காந்தன் அள்ளி செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. அவர் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றியதகவல்கள் ஏதும் வெளிவராத போதும் மூத்த சட்டத்தரணியொருவர் எதிர்பாராத விதமாக 4ம் மாடியினில் பொன்காந்தனை கண்டுள்ளார். தற்போது வேழனெனப்படும் வேழமாலிகிதனும் அதே 4ம் மாடிக்கு மேலதிக விசாரணைக்கென வவுனியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனிடையே பொன் காந்தன் மற்றும் வேழனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஏதுவாக அவர்களது கடந்த கால போராட்ட பங்களிப்புக்கள் பற்றி இப்போதே படையினர் வீடு வீடாக தேடிவருவதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மரதன் ஓடிய மாணவி திடீர் மரணம்!

மரதன் ஓடிய உ/த மாணவி திடீரென கீழே விழுந்து மரணம்சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவி ஒருவர்  விளையாட்டு போட்டியில் மரதன் ஓடிக் கொண்டிந்த வேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (31) காலை இடம்பெற்றுள்ளது. சிலாபம் - இலுப்பதெனிய - கனுகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கௌசல்யா பவித்ராணி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இல்ல விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓடிக் கொண்டிருந்தபோது  கீழே விழுந்த மாணவியை ஆசிரியர்கள், மாணவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும்  அவரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.

30 ஜனவரி 2013

தேசிய கீதத்தில் தமிழீழத்தை பற்றி பாடவில்லை: மனோ

தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக இருக்கிறது. 'ஸ்ரீ லங்கா தாயே' என தொடங்கும் தேசிய கீதத்தில் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது 'ஸ்ரீ லங்கா' என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இன்று இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிங்கள, தமிழ் சொற்கள் அடங்கிய ஒரே தேசிய கீதம் என்ற புதிய யோசனையை எனக்கு தெரிய தமிழர்கள் முன்வைக்கவில்லை. அதை முன் வைத்திருப்பது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. அதை இந்த ஜெனீவா மார்ச் மாத காலப்பகுதியில் முன்வைத்து, அமைச்சர் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார். அரசாங்கத்தில் உள்ள தீவிரவாத கட்சிகளும், பொதுபல சேனையும் அவரை திட்டுகின்றன. இது அரசாங்க உள்வீட்டு பிரச்சினை. இன்று நிலவும் ஜெனீவா காய்ச்சல் காரணமாக மூளை கலங்கி போய் கண்டதையும் திட்டித்தீர்க்கும் இவர்களது இந்த வேலைப்பற்றி நாம் ஒன்றும்செய்ய முடியாது என இந்நாட்டில் இன்று பாடப்படும் சிங்கள மொழி தேசிய கீதத்தை ஆனந்த சமரகோன் உருவாக்கினார். அதை பின்பற்றி தமிழ் மொழியில் அதே அர்த்தங்களுடன் பண்டிதர் மு. நல்லதம்பி உருவாக்கினார். இது 1950 இல் நடைபெற்றது. இந்த இரண்டு தேசிய கீதங்களும் ஒரே தாள மெட்டிலும் அமைந்துள்ளன. இன்று பிரிந்து நிற்கும் தமிழ், சிங்களம் பேசும் சமூகங்களை ஐக்கியப்படுத்தும் அற்புதமான கருவி இதுவாகும். இதை புரிந்துகொண்டு செயற்படுவது நாட்டை நேசிப்பவர்களின் கடமையாகும். கனடாவில், 'ஓ, கனடா' என ஆரம்பிக்கும் இரண்டு தேசிய கீதங்கள் ஆங்கில, பிரான்சிய மொழிகளில் உள்ளன. பிரான்சிய மொழியில் முதலில் எழுதப்பட்ட இந்த கீதம் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இது ஒரே நாட்டில், ஒரே அர்த்தத்தில், இரு மொழிகளில் தேசிய கீதங்கள் இருப்பதற்கான உதாரணமாகும். தென்னாபிரிக்காவில் தேசிய கீதத்தில் ஆங்கிலம், ஆபிரிக்கான் உட்பட மொத்தம் ஐந்து மொழிகளின் வார்த்தைகள் உள்ளன. இதன்மூலம் அந்த நாட்டின் ஐக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இலங்கையில் ஒரே அர்த்தத்தில், இரு மொழிகளில் தேசிய கீதங்கள் உள்ளன. இதை வேண்டாம் என சொல்லி பிரச்சினையை இவர்கள் முதலில் கிளப்பினார்கள். இவர்கள் கிளப்பிய பிரச்சினைக்கு தீர்வாக இன்று ஒரே கீதத்தில் இரண்டு மொழி வார்த்தைகள் என இவர்களே சொல்கிறார்கள். தமிழ் பேசும் மக்களுக்கு இன்று தேசிய கீதத்தை விட பெரும் பிரச்சினைகள் உள்ளன. தமிழருக்கு இலங்கை தேசிய உணர்வே மறந்து விட்டது. முஸ்லிம்களும் இன்று இந்த கொடுமையை அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள். இருந்தாலும் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ லங்கா தாயே என தொடங்கும் இந்த பாடல் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது இலங்கை என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும். ஜெனீவா காய்ச்சல்: கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையை காட்டித்தான் அரசு, ஐ.நா.வில் பிணை வாங்கி வந்தது. நமது ஐநா தூதுக்குழு, கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல் செய்கிறோம் என்றும், உண்மையில் 50 வீதம் அமுல் செய்து விட்டோம் என்றும் ஐ.நா.வில் சொன்னார்கள். அப்படியானால் சரி, மிகுதி 50 வீதத்தையும் அமுல் செய்துவிட்டு அடுத்த மார்ச் மாதம் வாருங்கள் என சொல்லி உலகம் நம்மவர்களை வழியனுப்பி வைத்தது. அன்று சொன்ன அந்த 'அடுத்த மார்ச்' வந்துவிட்டது. இவர்கள் இந்த ஒரு வருடத்தில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகள் எதையும் அமுல் செய்யவில்லை. அது நமக்கு தெரியும். எனவே இந்த முறை அங்கு சென்று எந்த பொய்யை,எப்படி சொல்வது என இந்த அரசாங்கம் முழித்துக்கொண்டு இருக்கிறது. இதுவும் இன்று நமக்கு தெரியும். இந்த ஆணைக்குழு அறிக்கை ஐ.நா ஆணைக்குழு அறிக்கை இல்லை. இது இந்த நாட்டு அரசாங்கம் தயாரித்து உலகத்துக்கு அளித்த அறிக்கையாகும். இதுவே இன்று அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு மறந்துவிட்டது. கடந்தமுறை இன்றைய பிரதம நீதியரசர் மொஹான் பிரிஸ் அரச தூதுக்குழுவில் ஜெனீவா போனார். இந்தமுறை அவருக்கு பதில் சரத் சில்வா போக இருப்பதாக கதை அடிப்படுகிறது. சரத் சில்வா அங்கும், இங்கும் என்று எல்லா இடத்திலும் இருந்தவர். ஆகவே அவர் ஜெனீவாவும் போகட்டும். யார் போனாலும், உண்மை பேச வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் காத்திருக்கிறது. ஏனென்றால் உலகத்துக்கு இன்று உண்மை தெரியும் என்றார்.

யாழ்,செம்மணி பகுதியில் வைத்து சிறுமி கடத்தப்பட்டுள்ளார்!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமி இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே குறித்த சிறுமியை செவ்வாய்க்கிழமை மாலை கடத்தியுள்ளனர். செம்மணி பகுதியில் வைத்தே குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளார். அருள்நேசன் ஆருனியா என்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

29 ஜனவரி 2013

வெவ்வேறு இடங்களில் இருவரது சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி,வீட்டுக் கிணற்றிலிருந்து அடிகாயங்களுடன் இளம் தாயின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் மீட்டுள்ளனர். ஒரு பிள்ளையின் தாயாரான கமலதீபன் கஜந்தினி (வயது 23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகத்தில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். தொண்டைமானாறு வல்லை வீதியோரமாகவுள்ள ஒற்றைப்பனையடி வயல் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28) இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொத்தியகாடு கெருடாவில் தெற்கு தொண்டைமானாற்றைச் சேர்ந்த கிட்டினன் தவராசா (வயது - 50) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் கடந்த சனிக்கிழமை பி.ப. 6 மணியிலிருந்து காணாமல் போனதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதன் பின்னரும் தொடர்ந்து தேடிய நிலையில் வயல் கிணற்றிலிருந்து தொலைதூரத்தில் சைக்கிள் ஒன்று நிற்பதை அடுத்து உறவினர்கள் வயல் கிணறுகளில் தேடிப்பார்த்தபோதே குறித்த வயல் கிணற்றில் மேற்படி குடும்பஸ்தர் இறந்த நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து உறவினர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் வல்வெட்டித்துறை மரண விசாரணை அதிகாரி சுசீந்திரசிங்கம் ஆகியோர் விசாரணையை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனையை டாக்டர் மயிலேறும்பெருமாள் மேற்கொண்டார். இதன் பின்னர் மரண விசாரணையின் போது குறித்த நபர் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும் அத்துடன் இவருக்கு ஏற்கனவே நோயுள்ளதாகவும் இவர் கிணற்றில் விழுந்து மூச்சுத் திணறியே இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் – அமெரிக்கா அறிவிப்பு

போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர், கொழும்பில் சற்று முன்னர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்காப் படைகளை விசாரிப்பதற்கான வாக்குறுதியை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே, ஜெனிவாவில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. “கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னர், சிறிலங்கா சிறியளவிலான முன்னேற்றத்தையே காண்பித்துள்ளது. ஆனால், இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று வொசிங்டன் நம்புகிறது. தமது சொந்த மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் அமெரிக்காவும், ஏனைய 23 நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. மார்ச் மாதம் கொண்டு வரப்படும் புதிய தீர்மானம், சிறிலங்கா மக்கள் மீதுள்ள அமெரிக்காவின் பொறுப்பின் வெளிப்பாடு. சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும். பொறுப்புக்கூறலை கொழும்பு உறுதி செய்தாக வேண்டும்” என்றும் அவர் மேலும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் விக்ரம் சிங், சிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப் பதவி நீக்கியதும், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார். “ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம், சிறிலங்கா விவகாரத்தை அமெரிக்கா புதுப்பித்துக் கொள்ளவுள்ளது. தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் இரண்டு நீதிமன்றங்களால், தீர்ப்பளிக்கப்பட்ட நிலையிலும், அவருக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும், புதிய தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா முடிவு எடுப்பதில் பங்களிப்புச் செய்தது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மூன்று பிரதி உதவி இராஜாங்கச் செயலர்களும் கொழும்பில் இன்று மாலை பங்கேற்ற ஊடக சந்திப்பின் போது, பிரதி உதவி இராஜாங்கச் செயலர் ஜேம்ஸ் ஆர். மூர் ஆற்றிய உரை- முன்னரே தயாரிக்கப்பட்ட ஆரம்ப உரை இது- “சிறிலங்காவுக்கு மீளவருகை தந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிறிலங்காவை நெருக்கமாக அவதானிக்கின்ற வொசிங்டனிலுள்ள எனது இரு சகாக்களுடன் இங்கு வருகை தந்துள்ளேன். இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்தமைக்காக தூதுவர் சிசன் மற்றும் எமது சிறிலங்கா நண்பர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். சிறிலங்காவுடன், அது சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இருந்து நீண்ட உறவை அமெரிக்கா கொண்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை கொண்ட உறவை நாம் மதிப்பதுடன் அதே உணர்வுடனேயே நாம் இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளோம். சிறிலங்காவுக்கு ஜனவரி 26ம் நாள் வருகை தந்த நாம், சிறிலங்கா அரசாங்கம், சிறிலங்கா இராணுவம், அரசியல் கட்சிகள் மற்றும் குடியியல் சமூகத்தவர்களுடன் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஆக்கபூர்வமானதும் வெளிப்படையானதுமான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தோம். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இராணுவ தளபதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்ட நாம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சிறிலங்கா அதிபரின் செயலர்; லலித் வீரதுங்க மற்றும் ஏனைய அதிகாரிகளைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளோம். சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவானது பரந்ததும் ஆழமானதுமாகும். கண்ணிவெடி அகற்றல், கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், கடற்பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவிகள், குடியியல் சமூகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கான உதவிகள் என சிறிலங்காவுடன் பரந்துபட்ட ரீதியில் நாம் கைகோர்;த்து செயற்படுகின்றோம் . எமது அனைத்து சந்திப்புக்களின் போதும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தேசிய செயற்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்காவின் முயற்சிகள் தொடர்பாக நாம் கலந்துரையாடியிருந்தோம். அத்துடன், நீடித்து நிலைக்கும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைவதற்கான முயற்சிகளில் துரித முன்னேற்றம் காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தச் சந்திப்புகளின் போது கலந்துரையாடியிருந்தோம். இதற்கு வெளிப்படையான ஆட்சிமுறை முக்கியம். அத்துடன் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உட்பட, போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முறையாக முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகும். வினைத்திறன் மிக்க குடியியல் சமூகம், சுதந்திரமான நீதித்துறை, ஊடக சுதந்திர மற்றும் மனிதஉரிமைகளுக்கான முழு மதிப்பளிப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் நாம் கலந்துரையாடியிருந்தோம். வட மாகாணசபைத் தேர்தலை சிறிலங்கா அரசாங்கம் வரும் செப்ரெம்பரில் நடத்த எண்ணியிருப்பதை நாம் வரவேற்கின்றோம். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாம் ஊக்குவிக்கின்றோம். சிறிலங்காவில் வாழும் அனைத்து சமூகத்தவர்களும் சமமான உரிமைகள்; மற்றும் கௌரவத்தை அனுபவிக்கக் கூடிய வகையிலும்- பாதுகாப்பு மற்றும் சுபீட்சகரமான எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ளக் கூடியதுமாக இருக்க வேண்டும் என்று சிறிலங்காவின் நீண்டகால நண்பர்கள் என்ற வகையில் நாம் நம்புகின்றோம்.” என்று குறிப்பிட்டார்.

28 ஜனவரி 2013

யாழில் தூதரகம் அமைக்குமாறு ஆயர் வேண்டுகோள்.

இந்தியாவைப் போலவே அமெரிக்காவும், யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரத்தை அமைக்க வேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர்கள், நேற்று யாழ். ஆயரைச் சந்தித்த போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். “யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகம் செயற்பட்டு வருகிறது. அதுபோலவே, அமெரிக்காவும் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் அமைத்து, இங்குள்ள நிலைமைகளை நேரடியாக கண்காணிக்கக் கூடிய நிலைமையை உருவாக்க வேண்டும். இதன்மூலம், யாழ். குடியியல் சமூகத்துடனான தொடர்புகளை பேணி வரமுடியும்” என்று தாம் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். தமது கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர்கள் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மாடியிலிருந்து விழுந்து இளம்பெண் மரணம்!

டுபாயில் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம்! டுபாயில் நான்காம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த தனது சகோதரியின் மரணம் தொடர்பில் அவரது தங்கை சந்தேகம் வெளியிட்டுள்ளார். புத்தளம் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான அனுபமா என்ற பெண்ணே மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக  தெரியவந்துள்ளது. இவர் தனது சிறிய வயதிலேயே தாய், தந்தையை இழந்துள்ளதாகவும் பின்னர் திருமணம் செய்து கொண்ட போதும் சிறிது காலத்தின் பின்னர் விவாகரத்து பெற்று விட்டதாகவும் அவரது தங்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் டுபாயில் ஆறு வருடங்கள் வேலை பார்த்து வந்துள்ளார். நான்காம் மாடியில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயிரிழந்த பெண் சுத்திகரிப்பு வேலை செய்துவந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி டுபாயிலிருந்து நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பெடுத்து உங்கள் அக்கா தற்கொலை செய்து கொண்டார் என தன்னிடம் தெரிவித்ததாக உயிரிழந்தவரின் தங்கை தெரிவித்தார். எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை எற்றுக் கொள்ள முடியாது எனவும், தற்கொலை செய்து கொள்வதற்கு அவருக்கு எந்தவொரு காரணமும் இல்லை எனவும் உயிரிழந்தவரின் தங்கை தெரிவித்துள்ளார்.

27 ஜனவரி 2013

எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி மரணம்!

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி துளசிகா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் துளசிக்கா (வயது 22) என்ற மாணவி காதல் தோல்வியால் தீயில் எரிந்து தற்கொலை செய்ய முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.கடுமையான எரிகாயங்களுடன் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துளசிகா என்ற அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று காலை அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அறிவுக் கண் திறக்க வேண்டியவர்களின் காம லீலை!

கிழக்கு மாகாண பள்ளிக்கூடங்களில் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் தொடர்பாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பேரில் இதுவரை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என 25 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பள்ளிக்கூடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவிகள் மீதான பாலியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறும் அவர், முறைப்பாடு பதிவு செய்யப்படாத சம்பவங்களும் இருப்பதால் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் அவர் கூறினார்.தமிழ், முஸ்லிம் சமூகங்களிடமிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் வெளிவருவதில்லை. சிங்கள சமூகத்திடமிருந்துதான் பெரும்பாலான முறைப்பாடுகள் வந்துள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார். விசாரணைகளின் முடிவில் சிலர் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதேவேளை இன்னும் சிலர் வேறு பள்ளிக்கூடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒருசிலர் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். ஆனால் சாட்சியங்கள் இல்லாத நிலையில் சிலர் நிரபராதி என விடுதலையான சம்பவங்களும் உள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டுகிறார். முறைப்பாட்டாளர்களும் சாட்சிகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வராமையால் பள்ளிக்கூட மாணவிகளுக்கு எதிரான பாலியல் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தடைகள் காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் கட்டளைகளுக்கு அமைவாக மாணவர்கள் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றமையே இவ்வறான துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். சில நாடுகளை பின்பற்றி இலங்கையிலும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக முன்பள்ளிகள் தொடக்கம் விழிப்புணர்ச்சி விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று விழுது அமைப்பின் தலைவி சாந்தி சச்சிதானந்தம் கூறினார்.

26 ஜனவரி 2013

மஹிந்த இந்திய மண்ணில் கால் வைத்தால் மன்மோகன் வீடு முற்றுகை!

நாகை மாவட்டம் மயிலாடு துறையில் ம.தி.மு.க. சார்பில் மொழிபோர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மொழிபோர் தியாகிகளின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது- மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. கொலை குற்றவாளியான இலங்கை ஜனாதிபதியை குற்றம் சாட்டுவது போல் மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசும் நாடகமாடி வருகிறது. தமிழர்களின் கொலைக் குற்றத்திற்கு காரணமான ராஜபக்ஷவையும், அவருக்கு துணை நிற்பர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும். இனிமேல் ராஜபக்ஷ இந்தியாவிற்கு வந்தால் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. இதில் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானவை. அதன் விளைவாக இன்றும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை. இவ்வாறு வைகோ பேசினார்.

எரியுண்ட நிலையில் யாழ்.பல்கலைக்கழக மாணவி!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்விப்பயிலும் துளசிக்கா (வயது 22 ) என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியில் எரியுண்ட நிலையிலிருந்த குறித்தமாணவியை மீட்டெடுத்த பிரதேசவாசிகள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரின் நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

25 ஜனவரி 2013

மட்டக்களப்பில் பாம்பு மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். காத்தான்குடி 6ஆம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இப்பாம்பு மழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலும் ஜன்னத் மாவத்தையிலுள்ள வீட்டு வளாகமொன்றிலுமே இப்பாம்பு மழை பெய்துள்ளது. தான் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மழையுடன் சேர்ந்து இரண்டு பாம்புகள் வந்து விழுந்ததாகவும் அதில் ஒரு பாம்பு தனது தோள் மீது விழுந்து ஓடியதாகவும் ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் கூறினார். இப்பாம்புகள் எந்த இனத்தை சேர்ந்த பாம்புகளென்பது பற்றி தங்களுக்கு தெரியாதெனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

சிறிய தந்தையால் கர்ப்பமான சிறுமி!

கிளிநொச்சி - வட்டக்கட்சி பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமி சிறிய தந்தையால் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் உள்ளதாக யாழ். பிராந்தியப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இச்சம்பவம் தொடர்பாக அவர் கூறியதாவது, 40 வயதுடைய சிறிய தந்தை 15 வயது நிரம்பிய சிறுமியை  தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த நிலையில் சிறுமியின் வயிற்றில் கரு உருவாகியுள்ளது. இந்தக் கருவினைக் கலைப்பதற்காக வைத்தியரை நாடிய போது சிறிய தந்தை கையும் களவுமாக கிளிநொச்சி பொலிஸாரிடம் மாட்டியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய சிறிய தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

24 ஜனவரி 2013

பிரான்சில் தமிழர் குத்திகொலை!

பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதியொன்றில் பணியாற்றி வந்த இந்தக் குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை தனது தொழில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலேயே வழியில் காத்துநின்ற அல்ஜீரிய நாட்டுப் பெண் இவரைக் குத்திக் கொலை செய்துள்ளார். இவர் தொழில் செய்யும் விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே இந்தப் பெண் மேற்படிக் குடும்பஸ்தரை குத்திக் கொலை செய்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரான்ஸ் நாட்டுக் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரின் படுகொலையைத் தொடர்ந்து தாயகத்திலுள்ள இவரின் உறவினர்கள் உயிரிழந்தவரின் சகோதரர் வீட்டில் துயர் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழர் பகுதிகளில் சிங்கள திணிப்புக்கு இரகசிய திட்டம்!

ஈழத்தை முற்றிலும் சிங்கள மயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு இரகசியமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளது. இதற்காக 89 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளது சிங்கள அரசு. ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தை சிங்களவர்கள் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அங்கு குவிக்கப்பட்ட இராணுவத்தினர் இன்னும் போகவில்லை. தமிழர்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். அடுத்தவர் கையை ஏந்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒன்றுமில்லாமல் போய் விட்ட தமிழர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில், தமிழ் நகரங்களின் பெயர்களையெல்லாம் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 89 நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளனராம். இது தொடர்பில் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு இரகசிய சுற்றறிக்கையை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டையை பட்டகொட்ட என்றும், பருத்தித்துறையை பேதுருதொடுவ என்றும், நயினாதீவை நாகதீப என்றும், கிளிநொச்சியை கரணிக என்றும், முல்லைத்தீவை மோலடோவா என்றும் மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் மகிந்தவின் ஆட்சிக்கு சோரம் போயுள்ளனர்!

newsமக்கள் ஆணையைப் பெற்ற ஒருசிலர் மகிந்தவின் ஆட்சிக்கு சோரம் போயுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேஜர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களுக்கு நிம்மதியாக வாழமுடியாத சூழல் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசு அராஜகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் இதர கட்சிக்காரர்களுக்கு பணத்தைக் கொடுத்து அவர்களை அரசின் பக்கம் உள்வாங்கிக்கொண்டு அவர்களை பெட்டிப்பாம்பாக வைத்துக்கொண்டு ஜனாதிபதியின் ஆட்சி தொடர்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதி நியாயம் தெரியாத ஒருவரிடம் இன்று நீதியமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு நாட்டின் நிலைமை இன்று படுபாதாளத்துக்குச் சென்றுள்ளது ஷரிஆ சட்டத்தை சிலர் விமர்சிக்கிறார்கள். அதனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. இன்று இலங்கையில் அந்த சட்டம் அமுலில் இருந்திருந்தால் பலர் கையை இழந்திருப்பார்கள். ஏனெனில் அந்தளவுக்கு இலங்கையில் களவுகள் இடம்பெறுகின்றன. இலங்கையில் பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம் மக்களுக்கெதிராக பல்வேறு ஈனச்செயல்களை முன்னெடுத்து வருகிறது.சிங்கள - முஸ்லிம்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்குமாறு பௌத்தமத பெரியார்களிடம் கோரிக்கை விடுத்திருந்தும் அதுகுறித்து அவர்கள் எவரும் முன்வரவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்தபோது அவர் இதனைப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவைவில்லை என்றார். நாடு இன்று படுபாதாளத்திற்குள் சென்றுகொண்டிருக்கிறது. சட்டத்தரணிகள் தமது வீடுகளில் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அநீதிகள் ஏற்படும்போது நீதி கோருவதற்காகவிருந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே இலங்கையில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமாக இருந்தால் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

20 ஜனவரி 2013

எரிந்த நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், ஆவரங்கால், சர்வோதய வீதியினைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் விசுவமடு பன்னிரண்டாம் கட்டைப் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பவித்ரா வயது (21) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (20) காலை குறித்த பிரதேசத்தில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று அயலவர்களினால் கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக பிரதேச பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

18 ஜனவரி 2013

சிறீலங்கா பெண்ணை மணம் செய்ய 16லட்சம் ரூபா!

இலங்கை பெண்ணை காதலிக்கும் இந்திய இராணுவ மேஜரை, 16 லட்சம் இந்திய ரூபாய் பயிற்சி செலவை செலுத்தி விட்டு வெளியேறுமாறு, இராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் சிக்னல் பிரிவில் பணியாற்றிய, மேஜர் விகாஸ் குமார், இலங்கையை சேர்ந்த, எம்.பில்., மாணவி, அர்னிலா ரங்கமலி குணரத்னே என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை மணக்க அனுமதிக்குமாறு கேட்டபோது, இராணுவம் அனுமதி தரவில்லை. இதனால், தன்னை பணியிலிருந்து விலக அனுமதிக்குமாறு, விகாஸ் குமார் கோரினார். எனினும், அவரின் கோரிக்கை கவனிக்கப்படவே இல்லை. கர்நாடக மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இராணுவத்திற்கும், விகாஸ் குமாருக்கும் இடையே நடந்த நீதிமன்ற மோதல், இரண்டு ஆண்டுகள் நீடித்தது. இறுதியில், நீதிமன்ற உத்தரவின் படி, விகாஸ் குமாரின் பணி ஓய்வு, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், இராணுவ வீரர்களுக்கான பலன்கள் பெற வேண்டுமானால், இந்திய இராணுவ கல்வி நிறுவனத்தில், விகாஸ் குமாருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிக்கான தொகை, 16 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என, இராணுவம் நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து, விகாஸ் குமார், நீதிமன்றத்தை நாடினார். அதில், தான் ஏற்கனவே, ஐந்து ஆண்டுகள், இராணுவத்தில் பணி செய்துள்ளதால், பணப் பலன்கள் கிடைக்க தகுதி உடையவர் எனவும், தன்னிடம் பயிற்சி கட்டணத்தை வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்திருந்தார். எனினும், இராணுவம் தரப்பில், பயிற்சி கட்டணம், 16 லட்சம் ரூபாய் மற்றும் திருமண பத்திரமும் கொடுத்தால் தான், பணி ஓய்வு பலன்கள் கிடைக்கும் என, உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை காதலிக்காக, பணத்தை திரட்டும் பணியில், மேஜர் விகாஸ் குமார் ஈடுபட்டுள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ். நபரை ஏமாற்றி வாங்கிய வாகனத்தை போலி ஆவணங்களில் விற்க முயன்ற இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரை ஏமாற்றி பெற்ற வாகனம் ஒன்றை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்குரனை பகுதியில் கைது செய்யப்பட்ட நபர்கள் அக்கரைப்பற்று மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

17 ஜனவரி 2013

நீண்ட போராட்டத்தின் பின் சட்டத்தரணிகள் கடமைக்குத் திரும்பினர்!

நீண்ட போராட்டத்தின் பின் சட்டத்தரணிகள் கடமைக்குத் திரும்பினர்இலங்கையின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக பிரச்சினையில் இதுவரை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த இலங்கை வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் புதன்கிழமை மீண்டும் வேலைக்குத் திரும்பினர். இலங்கை உச்ச நீதிமன்றத்திலும், மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் தங்களது பணிகளுக்கு திரும்பியதைப் பார்க்க முடிந்தது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை நீதிபதி மோஹான் பீரிஸ் தனது பணிகளை நேற்று தொடங்கினார். அவரை சந்தித்து வாழ்த்துச் சொல்லவும், வழக்கறிஞர்கள் வந்ததைப் பார்க்க முடிந்தது. இது தவிர, மோஹான் பீரிஸின் நியமனத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை என்று அந்த வழக்குத் தொடுத்தவரின் வழக்கறிஞர் விரான் கொரயா தெரிவித்தார். வழக்கறிஞர்கள் ஒன்றியத்தின் மூத்த வழக்கறிஞர் லால் விஜயநாயக்க பேசுகையில், இந்தப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக சிலர் கூறுகிறார்கள். அது சரியல்ல. இந்தப் போராட்டத்தை மக்கள் ஆதரவுடன் பரந்து பட்ட அளவில் எடுத்துச் செல்ல, தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாகத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் ஹெக் செய்யப்பட்டுள்ளது!

இலங்கை அரசின் முக்கிய பரப்புரை இணையங்களில் ஒன்றான, தேசிய பாதுகாப்புக்காக ஊடகத் தகவல் மையத்தின் இணையத்தளம், 'கேம்ஓவர்' என்று அறியப்பட்ட ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாகச் செயலிழந்துள்ளது. இந்த இணையத்துக்குள் ஊடுருவியவர், அதைச் சீர்குலைத்ததுடன், அதில் தனது செய்திகளை உள்ளிட்டதுடன், அதன் சேவை வழங்கி ஊடாக இன்னொரு தளத்தினுள் நுழையவும், ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த இணையத்தளத்தின் பயனாளர்கள் பற்றிய நூற்றுக்கணக்கான புகுபதிவுத் தகவல்களும் அவரால் திருடப்பட்டுள்ளன. தற்போது, ஊடுருவல் பக்கம் நீக்கப்பட்டுள்ளதுடன், தளத்தில் மேம்பாட்டு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், 100 வீதம் முன்னைய நிலைக்குத் திரும்பும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் செயற்பட்டு வந்ததுடன், இதன் ஊடாக இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, லக்ஸ்மன் ஹுலுகல்ல போன்றோர் பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர். முன்னதாக, பங்களாதேஸ் சேர்ந்த இணைய முடக்கிகளால், இலங்கை அரசின் வடமத்திய மாகாணசபையின் 22 துணை இணையத்தளங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

16 ஜனவரி 2013

சிறிலங்காவில் இன்னொரு போராளிக்குழு உருவாகும்-சந்திரிகா

சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமேயானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார். அடிப்படைவாத போகோ ஹராம் குழுவின் தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் இருந்து வெளியாகும், AYO OKULAJA இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவரது செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு “தமிழ்ப் புலிகளுக்கு எதிரான மகிந்த ராஜபக்சவின் தாக்குதல் இப்போது அனைத்துலக சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதை இன்னமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும், வேறொரு போரில் ஒரு நீண்டகால கடிவாளமாக இருக்கக் கூடும் என்றே நான் இன்னமும் நம்புகிறேன். தமிழ்மக்கள் நீண்டகாலமாகவே பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் தமது உரிமைகளைக் கோரினார்கள். அவர்களின் உரிமைகளை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது அரசாங்கம் முதன்முதலாக இணங்கியது. முழு உரிமைகளையும் கொண்ட ஒரு சமஸ்டி ஆட்சியை நிறுவ இணங்கப்பட்டது. ஆனால், ராஜபக்ச சிறுபான்மையினரின் உரிமைகளில் நம்பிக்கை கொண்டவரல்ல. அவர் ஒருவரே எனது அமைச்சரவையில் பேச்சுக்களுக்கு எதிராக இருந்தார். அவரது தேவை அவர்களை கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. இப்போது ஒட்டுமொத்த உலகமுமே, இராணுவத் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் மீளஇணைகிறார்கள். தாக்குதல்களைக் கண்டிக்கிறார்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும். இறுதித் தாக்குதலின் போது பொதுமக்களின் மனிதஉரிமைகள் அவர்களால் மீறப்பட்ட சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றன. ஏனென்றால், புலிகள் தம்மைச் சுற்றி பொதுமக்களை வைத்திருந்தார்கள். பொதுமக்களை சுட்டுவிழுத்த சிறிலங்கா அரசாங்கம் ஜெட் போர் விமானங்களையும் பயன்படுத்தியது. சிறிலங்கா அரசாங்கம் அதிகளவு மனிதாபிமான அணுகுமுறையில் செயற்பட்டிருந்தால், இந்தக் கொலைகளைத் தவிர்த்திருக்கலாம். பொதுமக்களைக் கொல்லவேண்டிய தேவை இருக்கவில்லை. இதனால் என்ன நடந்திருக்கிறது, எல்லோரும் கோபமுற்றிருக்கிறார்கள். தனியே தமிழ்ப்புலிகளை மட்டும் அழித்திருந்தால், யாரும் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கொடூரமானவர்களாக இருந்தனர். அல்கெய்தாவுக்கு முன்னர், உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் தற்கொலைக் குண்டுதாரிகளை அவர்களே உருவாக்கினார்கள். மக்கள் வன்முறைகளை விரும்பமாட்டார்கள். வன்முறைகளுக்கு மிகஆழமான காரணங்கள் இருக்கின்றன. எனவே முரண்பாடுகளுக்கான அந்தக் காரணங்களைக் கண்டறிய வேண்டும். அந்தக் காரணங்களை தீர்க்க வேண்டும். அடிப்படைக் காரணங்களை கண்டுபிடிக்கும் வரை நிறுத்தக் கூடாது. போகோ ஹராம் ஏழைகளை ஆட்சேர்ப்புச் செய்கிறது. அவர்கள் பாரபட்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முதலில் நீங்கள் தீர்க்க வேண்டிய பிரச்சினை வறுமை. அவர்களை உள்ளடக்கிய ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். வம்ச அரசியல் முறையை நான் ஏற்கவில்லை. எனது பிள்ளைகளை நான் அரசியலுக்குக் கொண்டு வரவில்லை. எனது தந்தையும், தாயும் அரசியலில் இருந்தனர். எனது தந்தை படுகொலை செய்யப்பட்ட பின்னர், அரசியலுக்கு வர எனது தாயார் மறுத்து விட்டார். ஆனால் கட்சி அவரை வருமாறு கேட்டது. இதனால் நாம் ஆட்சியில் இருக்க வேண்டியதாகி விட்டது. பின்னர் எனது தாய் மிகவும் புகழ் பெற்றார். அவர் தனது பணியை சரியாகச் செய்தார் என்று நான் நினைக்கிறேன். அவருக்குப் பின்னர் கட்சிக்கு இன்னொரு தலைவர் தேவைப்பட்டார். எனக்கு அரசியல் தேவையில்லை என்று நான் கூறினேன். நான் மறுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அதற்குள் நான் இழுத்து வரப்பட்டேன். அப்போதே என்னுடன் இந்த வம்சஆட்சி முடிவுறும் என்று கூறினேன். எனக்குப் பிள்ளைகள் இருக்கின்ற போதிலும், அவர்களை அரசியலுக்கு கொண்டு வர விரும்பவில்லை. வம்ச அரசியல் நல்லதல்ல என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் தமக்காக அபகரிக்க ஒரு குடும்பத்துக்கு அது இடமளிக்கிறது. அந்த முறையில் ஊழல்கள் மோசமாக உள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மிகப் பெரிய ஊழல்களை செய்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் அரசாங்கப் பதவிகளில் உள்ளனர். நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இந்தமுறையில் உள்ள நன்மைகளை விட தீமைகளே அதிகம். தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது ஒரு அதிசயம். நான் எனது ஒரு கண்ணை இழந்தேன். எனக்கு இடது கண்ணில் பார்வை இல்லை. எனது மூளையில் இப்போதும் ஒரு இரும்புத்துண்டு உள்ளது. அந்தத் தாக்குதலில் எனது சாரதி உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார்!

யாழில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றுக்குள் வீசப்பட்டுள்ளதாக பிரேரத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பெரிய கோயில் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த சனிக்கிழமை பெண் ஒருவர் சடலமாக யாழ்.சிறுகுற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தார். குறித்த சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஈச்சமோட்டையைச் சேர்ந்த புஸ்பம் ( வயது 78) என அவரது பிள்ளைகளினால் அடையாளம் காணப்பட்டிருந்தார். மரண விசாரணையினை அடுத்து இவர் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்களும் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செயதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சட்ட ஆட்சியின் எதிர்காலம் கவலைக்குள்!

மொஹான் பீரிஸ் நியமனத்தால் இலங்கை சட்ட ஆட்சியின் எதிர்காலம் கவலைக்குள்: ICJ கண்டனம்புதிய பிரதம நீதியரசர் நியமனம் இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்பாட்சி என்பவற்றின் எதிர்காலத்தை கவலைக்குள் தள்ளியுள்ளதென சர்வதேச ஜூரிகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்டு பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டு புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமை இலங்கையின் நீதித்துறை மீது ஏற்படுத்தப்பட்ட அவமானம் என சர்வதேச ஜூரிகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமைக்கு சர்வதேச ஜூரிகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் நீதியரசராக நியமிக்குமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச ஜூரிகள் சபை அழுத்தம் கொடுத்துள்ளதோடு, ஷிராணியின் நடவடிக்கையில் பிழையிருந்தால் முறையாக அவரை பதவி விலக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

15 ஜனவரி 2013

பிரதம நீதியரசரை பதவி நீக்கியமைக்கு கனடா விசனம்!

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் பற்றி கனடா இன்று விசனம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட நடவடிக்கைக் குழு ஆகியவற்றில் எடுக்கவுள்ளதாவும் கனடா கூறியுள்ளது. பெருமளவில் அரசியல் மயமாக்கப்பட்டதாகவும் வெளிப்படைத் தன்மை இல்லாததாகவும் நீதியான விசாரணைக்கான உத்தரவாதம் அளிக்கப்படாததாகவும் காணப்பட்ட குற்றப்பிரேரணை செயன்முறையால் பிரதம நீதியரசரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியிறக்கியதையிட்டு கனடா பெரிதும் விசனமுற்றிருப்பதாக கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியலமைப்பையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் மதிக்க வேண்டும் எனவும் உடனடியாக அரசாங்கம் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நாம் அரசாங்கத்தை கேட்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசனங்களை நேரடியாக இலங்கையுடனும் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் ஆகிய அரங்கங்களில் தீர்மானங்கள் வழியாகவும் நாம் தொடர்ந்து கிளப்பி வருவோம் என கனேடிய பிரதமர் கூறியுள்ளார். பொதுநலவயத்தின் அமைச்சர் மட்ட நடவடிக்கை குழுவில் மிகவும் கவலை தரும் இந்த புதிய நிலைமை பற்றி நாம் பிரஸ்தாபிக்கவுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு: - முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்

News Serviceயாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றுத் திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர், சட்டத் தரணி க.சுகாஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில் நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: இன்று போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. ஆண்கள் பலர் இறந்துவிட்டார்கள். சிலர் வெளி நாடுகளுக்குத் தப்பி ஓடிப் போய்விட்டார்கள். ஆனால் அவர்களின் தாய்மார்கள், அக்கா, தங்கைமார்கள், மனைவிமார்கள், குழந்தைகள் யாவரும் பலவிதமான இக்கட்டுகளுக்கு, இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வன்முறையாளர்களின் கொடுமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர். அதுமட்டுமல்ல, இன்று யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. இங்கிருந்து பெண்கள் தெற்குக்கு அழைத்துச் செல்லப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். அதேநேரம் இங்கு விபசாரம், பாலியல் வன்புணர்வுகள், களவுகள், கடத்தல்கள், ஒப்பந்தக் கொலைகள் என்பன முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகின்றன. இந்த 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நான் இங்கு வந்தபோது பெண்பிள்ளைகள் இரவு 12 மணிக்குக்கூட நகைகள் அணிந்தவாறு எந்தவிதப் பயமோ, பதற்றமோ இன்றிப் பாதுகாப்பாகச் செல்லக்கூடியதாக இருக்கின்றது என்று இங்குள்ளவர்கள் கூறினார்கள். இன்று வீட்டுக்குள் இருக்கும் போதே என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற பயம். இந்தப் பயமும் பீதியும், வெளியில் இருந்து வந்தவர்களால் மட்டுமே ஏற்படுத்தப்படுகின்றது என்று கூறுவதிலும் பார்க்க வெட்கம், சூடு, சொரணை இன்றிப் பெரும்பாலும் யாழ். மண்ணின் மைந்தர்களால் இயற்றப்படுகின்றன என்று கூறுவதுதான் சரி. சீரழிந்த வாழ்க்கைக்கு இழுக்கப்படும் இளைஞர் எங்கள் அருமந்த இளைஞர்களும் யுவதிகளும் வடமாகாணத்தில் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுவதாக நான் உணர்கின்றேன். சினிமாக் கலைஞர்களின் படங்களுக்குப் பாலாபிஷேகம் செய்து கற்பூரம் காட்டும் அளவுக்கு எங்கள் இளைய சமுதாயம் சென்றுவிட்டது என்றால் படிப்பிலும், பண்பிலும், பாங்கிலும், பராக்கிரமத்திலும் சிறந்துவிளங்கிய எங்கள் இளைய சமுதாயத்தினருக்கு என்ன நடந்தது? இன்று எங்கள் ஆண்களோ, பெண்களோ தமது சுயநலத்துக்காக எதனையுஞ் செய்யக் காத்திருக்கின்றார்கள். தாங்கள், திட்டமிடுவோரின் கைப்பொம்மைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியாமல் அவர்கள் வலையில் வீழ்ந்துள்ளார்கள். மதுபோதையில் சிகரட்டுடன் சட்டத்துக்கு முரணான விதத்தில் பஸ்களில் பிரயாணஞ் செய்து பிரயாணிகளை இம்சைப்படுத்துகிறார்கள். வன்செயல்களைத் தூண்டிவிடுகின்றார்கள். வன்செயல்களில் ஈடுபடுகின்றார்கள். களவு, கொள்ளைகளில் வெளியார் தொடர்புகளோடு கூட ஈடுபடுகின்றார்கள் உடல், உளரீதியாகப் பெண்கள் முக்கியமாகப் பாதிக்கப்படும் வண்ணம் நடந்து கொள்கின்றார்கள். இன்று மிகமோசமான இளைஞர்கள் உருவாகி வருகின்றார்கள். சுயநலமும் மூர்க்கத் தனமும் அரக்கர்கள் பற்றிக் கதைகளில் வாசித்துள்ளோம். இன்று அரக்கர் குணம் எங்கள் சூழலில் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. சுயநலமும் மூர்க்கத்தனமும் கொண்ட இவர்களால் எமது வருங்காலம் பறிபோகப் போகின்றது. நடைபெறும் நடவடிக்கைகளுள் ஒரு முக்கியமான விடயம் பொதிந்து கிடக்கின்றது. அதுதான் எங்கள் ஒற்றுமை. வெளியார் இழைக்கும் பல பிழைகளுக்கும் பின்னணியில் எம்மவரில் ஒருவர் காரண கர்த்தாவாக மறைந்திருந்து செயல்பட்டுள்ளார், செயல்படுகின்றார் என்பது நீங்கள் ஊன்றி ஆராய்ந்தீர்களானால் புலப்படும். நாங்கள் சுயநலத்துடன் செய்யுங் காரியங்கள் எமக்கு வினைப் பயனை ஒரு நாள் ஏற்படுத்தும் என்ற அறிவு இன்றி இப்பேர்ப்பட்ட இழிசெயல்களில் எம்மவர் ஈடுபடுகின்றார்கள். நான் முன்னர் குறிப்பிட்ட அபலைப் பெண் வாழ்க்கையிலும் ஒரு தமிழரின் பங்களிப்பு இருந்ததாகக் கூறப்படுகின்றது. எங்களை நாங்களே காட்டிக்கொடுப்பது, பலியெடுத்தல், பணத்துக்காகச் சிறுமையில் ஈடுபடல் போன்றவை உயர்ந்த நோக்கங்களை முன்வைத்த பண்டைத் தமிழ் இனத்துக்கும் பல நூற்றாண்டு கால இந்து மதத்துக்கும் இழிவையே தரவல்லன. வெளியில் இருந்து வந்தவர்களுக்கு வேலைக்காரர் ஆகாதீர்கள் எம்மவர் இவ்வாறான மாமா வேலைகளில் ஈடுபடாது இருக்க, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு வேலைக்கார வேலை செய்யாது இருப்பதற்கு உங்களுள் நீங்கள் ஒற்றுமையை வளர்க்கப் பாடுபடவேண்டும். ""ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை இன்றேல் சகலர்க்குந் தாழ்வே'' என்பதை நாங்கள் மறவாது இருப்போம். உங்களைப் போன்ற இளைஞர், யுவதிகள் மற்றைய இளவயதினர்களுக்கு அறிவுரை வழங்கலாம் என்று நினைக்கின்றேன். முக்கியமாக நாங்கள் திட்டமிட்ட செயல்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றோம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எமது பெற்றோர்களும் தமது இளம் சமுதாயம் மீது அக்கறை காட்டவேண்டும். பிள்ளைகள் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைத்து அவர்கள் மீது கோபத்தையும் வெறுப்பையும் காட்டாது அவர்களுடன் சிநேகத்துடன் பழகிப் பெற்றோர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நாங்கள் யாவரும் ஒன்றுபட்டால் பிறழ்ந்து வாழத்தலைப்படும் எம்மக்களை நாங்கள் ஈடேற்ற முடியும். அவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். உதாரணத்துக்குப் போதைவஸ்துக்கள் விற்பவன் என்ன செய்கின்றான் என்று பாருங்கள். எங்கள் கல்லூரிகளுக்கு வெளியில் வைத்து முதலில் இனிப்பான பண்டங்கள் விற்று, பின்னர் போதை சேர்த்த தின்பண்டங்களை விற்றுக் கடைசியில் போதைப் பொருள்களையே விற்கின்றான். நாளடைவில் மாணவ, மாணவியர் போதைக்கு அடிமையாகின்றார்கள். அதேபோல் விபசாரம், பாலியல் வல்லுறவுகள், புகைப்பிடித்தல், ஆபாசப் படங்கள் காட்டுதல், இரவு வெகுநேரம் வரையில் களியாட்டங்களை ஒழுங்கு செய்தல் போன்றவையாவும் தமிழ் இளைஞர், யுவதிகளின் வாழ்க்கை முறையை மாற்றி இனிமேல் எந்தக்காலத்திலும் தமக்கென அவர்கள் உரிமைகளை நாடாது இருக்க வேண்டும் என்பதாலேயே என்ற கருத்தை மாணவர் மனதில் பதியவைக்க வேண்டும். திட்டமிட்ட செயல்களுக்கு நாங்கள் அடிமைகள் ஆக்கப்படுகின்றோம் என்ற எண்ணம் எங்கள் இளைய சமுதாயத்தினரிடையே பதியப்பட்டுவிட்டால் அவர்கள் உசாராகிவிடுவார்கள். அதனை நீங்கள்தான் செய்ய வேண்டும். உங்கள் பெற்றோர் செய்ய வேண்டும். உங்கள் ஆசிரியர்கள் செய்ய வேண்டும். பாரம்பரியத்தை காப்பாற்றுவோம் எங்கள் பாரம்பரியம் பழைமையானது, சிறப்பு மிக்கது, எங்கள் ஒருவரின் இரகசிய துர்ச்செயல் எங்கள் பாரம்பரியத்தை இழிவுபடுத்தவல்லது என்பதை நாங்கள் மறவாது இருப்போமாக! இன்றைய காலகட்டத்தில் எமது இளைஞர்கள், யுவதிகள் "நாங்கள் அல்லது எங்கள் முன்னோர் எங்கள் வாழ்க்கையில் எங்கே பிழை செய்துவிட்டோம், அந்தப் பிழைகளைத் திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்'' என்ற ஆராய்ச்சிகளில் நுழைவது நன்மையையே அளிக்கும். அதேநேரத்தில் எமது சமுதாயத்தில் எங்கள் பிழைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் எம்மவர்களுக்கு நாம் எவ்வாறு நிவாரணங்களையும் மனச்சாந்தியையும் உண்டுபண்ண முடியும் என்பது பற்றியும் சிந்தித்து உரிய நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அவ்வாறு இறங்கினால் எங்கள் சங்கம் நாடு முழுவதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை என்றார்.

14 ஜனவரி 2013

"புதிய பிரதம நீதியரசர் நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்"

"புதிய பிரதம நீதியரசர் நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்"இலங்கையின் தலைமை நீதிபதி பொறுப்பில் வேறு ஒருவரை ஜனாதிபதி நியமித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது. எனவே இலங்கையின் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்காவை நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை அப்பதவியில் நியமிக்கும் முயற்சிகளை நாட்டின் ஜனாதிபதி கைவிட வேண்டும் என்று அந்த சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ண, புதிய தலைமை நீதிபதி ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு சட்டரீதியான அதிகாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டார். ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கண்டன பதவிநீக்க நடைமுறை சட்டவிரோதமானது என்று நாட்டின் அதியுயர் நீதிமன்றம் முடிவுதெரிவித்துள்ள நிலையில், அத்தீர்ப்பை மதிக்காது புதிய தலைமை நீதிபதி ஒருவரை ஜனாதிபதி நியமித்தால், அது சட்டப்படி செல்லாது என்பது சட்டத்தரணிகள் சங்கத்தாரின் வாதம். ஜனாதிபதி செய்யக்கூடிய நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். அரசியல் யாப்பின் கீழ் ஜனாதிபதிக்கு எதிராகத்தான் வழக்கு தாக்கல் செய்ய முடியாதே ஒழிய ஜனாதிபதி செய்கின்ற சட்டவிரோதமான நியமனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ண விளக்கம் அளித்துள்ளார்.

மது அருந்தி பொங்கலை வரவேற்றவரை எமன் அழைத்துச் சென்றார்!

மது அருந்தி பொங்கலை வரவேற்றவரை எமன் அழைத்துச் சென்றார் கிளிநொச்சி பரந்தன் சந்திக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று (14) காலை நடைபெற்ற விபத்தொன்றில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ 9 வீதி, கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பரந்தன் நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த இருவரை பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பொலிஸ் வாகனம் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்துதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த விபத்து நடைபெறுவதற்கு முன்னர் பரந்தன் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் எதிரே வந்து தரிப்பிடத்தில் நின்ற பேரூந்துடன் மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியதுடன் மற்றயவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார். அதனையடுத்து படுகாயமடைந்தவர் முச்சக்கர வண்டியின் மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனையடுத்து அங்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மதுபோதையிலேயே வந்திருந்தமை தெரியவந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

13 ஜனவரி 2013

பொங்கலுக்கு முன்னர் மாணவர்கள் விடுவிக்கப்படும் சாத்தியம் இல்லை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படும் சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்னர் இவர்கள் விடுவிக்கப்படுவர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரி வித்திருந்தபோதும், அவர்கள் அவ்வாறு விடுதலை செய்யப் படும் சாத்தியம் இல்லை என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் உதயனுக்குத் தெரிவித்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல் கலைக்கழக வளாகத்துக்குள் சுடர் ஏற்றப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தொடர்ச்சியாகப் பல பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆயினும் நான்கு மாணவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயன், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் எஸ்.சொலமன் ஆகியோரே வெலிகந்தை முகாமில் புனர்வாழ்வு என்ற பெயரில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்கக் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த 3ஆம் திகதி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும், யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்காவிட்டால் ஒரு வருடத்துக்கு யாழ்.பல்கலைக்கழகம் மூடப்படும் என்று தெரிவித்திருந்தார் உயர்கல்வி அமைச்சர். இதன்பின்னர் யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றதை அடுத்துக் கடந்தவாரம் பல்கலைக்கழகம் மீள ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 6ஆம் திகதி பி.பி.சி. செய்திச் சேவைக்கு நேர்காணல் வழங்கிய உயர்கல்வி அமைச்சர், கைது செய்யப்பட்ட 4 யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளது எனத் தெரிவித்தார். இதன்பின்னர் கடந்த 8 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகம் மீள இயங்க ஆரம்பித்திருந்தது. இந்தநிலையில் பொங்கலுக்கு முன்னர் மாணவர்கள் விடுவிக்கப்படும் சாத்தியம் உள்ளதா என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமாரிடம் கேட்டபோது இதுவரை எமக்கு எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை. நாம் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே புனர்வாழ்வு பெற்றவர்களை விடுவிக்கின்றோம். பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிப்புத் தொடர்பாக இதுவரை எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என்றார்.

பதவியிலிருந்து சிராணி நீக்கம்!உத்தரவுக் கடிதம் கையளிப்பு

சிறிலங்காவின் தலைமை நீதியரசர் பதவியில் இருந்து சிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 11ம் நாள் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணைக்கு அமைவாக, தலைமை நீதியரசரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவில் இன்று காலை சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்டார். அரசியலமைப்பின் 107 (2வது) பிரிவின் கீழ் சிறிலங்கா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக் கடிதம் உடனடியாகவே சிராணி பண்டாரநாயக்கவின் இல்லத்தில், அதிபர் செயலக மூத்த உதவிச்செயலர் மற்றும் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஆகியோரால் ஒப்படைக்கப்பட்டதாக சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பதவிநீக்கம் தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவு சிராணி பண்டாரநாயக்கவுக்கு, கிடைத்துள்ளதை உறுதி செய்துள்ள அவரது சட்டவாளர்கள், அடுத்த நடவடிக்கை பற்றி கருத்து வெளியிட மறுத்து விட்டனர்.

செஞ்சோலை சிறுவர் இல்லத்தை மீண்டும் கே.பி.திறக்கிறாராம்!


மீண்டும் செஞ்சோலை சிறுவர் இல்லம் திறக்கப்படவுள்ளது. செஞ்சோலை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க உருவாக்கப்பட்ட சிறுவர் இல்லம். தேசியத் தலைவரின் நேரடி வழிப்படுத்தலுடன் இந்த இல்லம் இயங்கிவந்தது. அத்துடன் செஞ்சோலை சிறார்களுடன் தேசியத் தலைவர் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.செஞ்சோலையில் தலைவர் புலிக்குழந்தைகளை வளர்க்கிறார் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலை வளாகம் மீது இலங்கை அரச விமானப்படை குண்டு வீசித்தாக்கியதில் 53 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டிருந்தனர். கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருத்த இடத்தில் தற்பொழுது அதே பெயருடனும் அதே பெயர்ப்பலகையுடனும் செஞ்சோலை சிறார் இல்லம் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த இல்லத்தை கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் திறக்கின்றார். செங்சோலை சிறார் இல்லத்துடன் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மேலும் இரண்டு இல்லங்களுக்கு பொறுப்பாக கே.பியை அரசாங்கம் அமர்த்தியுள்ளது. புலிகளின் அடையாங்கள் - தொன்மங்கள் யாவற்றையும் இலங்கை அரசு மிக வேகமாக அழித்து வருகிறது. இந்நிலையில் செஞ்சோலை சிறார் இல்லம் மீண்டும் அதே பெயரில் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

12 ஜனவரி 2013

சிறீதரனின் அலுவலகத்தில் சி 4 வெடிமருந்தாம்!சிங்களத்தின் பித்தலாட்டம்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து 4 சீ வெடிமருந்துகள், ஆபாச இறுவட்டுகள், ஆணுறைகள் மீட்கப்பட்டதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர். இன்று சிறீதரனின் பத்திரிகை அலுவலகத்தில் தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலின் போது எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையின் கிளிநொச்சி பெண் செய்தியாளரும் முள்ளிவாய்க்காலின் பின் ஞானஸ்தானம் பெற்று ஊடகவியல் தெரிந்த ஒரே பிரபல ஊடக ஜாம்பவான் தானே என தனக்கு பட்டம் சூட்டியவருமான ஒருவருமே தேடுதலின் போது படைப் புலனாய்வாளர்களால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரபல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே சிறீதரனின் அலுவலகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் யுத்த வரலாற்றில் வடகிழக்கில் நடத்தப்பட்ட புலனாய்வாளர்களின் தேடுதலின் போது தமிழ்ப் பத்திரிகையாளர்களையும் அனுமதித்து அவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் என்றால் சிறீதரனின் அலுவலகத் தேடுதலாகவே இருக்க முடியும் என கொழும்பின் ஊடகவியலாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இதே வேளை யாழ்ப்பாணத்திலேயே இருந்து தனது கடமைகளை ஆற்றும் இந்தப் பிரபல பத்திரிகையாளருக்கு இப்படி ஒரு தேடுதல் நடக்கப் போவதாக முன்னமே தகவல் தெரிந்திருக்க வேண்டும் எனக் கூறும் உள்ளகத் தகவல் ஒன்று அவர் ஏற்கனவே கிளிநொச்சிக்கு சென்று காத்திருந்ததாகவும் தெரிவிக்கிறது.

குற்றப் பிரேரணை வெற்றியை சகோதரர் மகிந்தவிற்கு தெரிவித்தார் சமல்!

சபையில் கிடைத்த அமோக வெற்றியை ஜனாதிபதிக்கு அறிவித்தார் சபாநாயகர்பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேறியதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி உறுதி செய்துள்ளார். ´நீங்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள்´ என ஜனாதிபதி பிரதம நீதியரசருக்கு அறிவிக்கவிருப்பதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.

கருப்பு நிறத்தில் பெய்தது மழை!

மஞ்சள், சிவப்பு, பச்சை நிற மழை வரிசையில் கருப்பு மழை!மாயன் நாட்காட்டி முடிவுற்று 2012-12-21ம் திகதி உலகம் அழியும் என்ற வதந்தி கிளம்பியதை அடுத்து இலங்கையில் மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களிலும் மீன், இறால், முதலை போன்ற விலங்குகள் வடிவிலும் மழை பெய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த ஆச்சர்யத்தின் மற்றுமொரு அங்கமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று (11) கருப்பு மழை பெய்துள்ளது. உடுதும்பர, கோவில்மடு, ஹப்புகஸ்கும்புர மற்றும் லுணுகலை ஆகிய பகுதிகளில் கருப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதனால் வெயிலில் உலர வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஆடைகளில் கருப்பு கறை  காணப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மழை நீரை பொதுமக்கள் சேமித்து வைத்துள்ளனர்.

11 ஜனவரி 2013

குர்திஸ் மூத்த போராளிகள் மூவர் பிரான்சில் சுட்டுக்கொலை!


கேணல் பரிதி அவர்களின், இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட குர்திஸ் இனப் பெண்கள் 3 வர் நேற்று பிரான்சில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். குர்திஸ் இனத்தைச் சேர்ந்த பெண் விடுதலைப் போராளிகளான இவர்கள், பாரிசில் தமிழர்களோடு நல்லுறவை வளர்த்து வந்துள்ளார்கள். ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் இவர்கள், தமிழர்களோடு இணைந்து செயல்பட்டுள்ளார்கள். PKK என்று அழைக்கப்படும் விடுதலை அமைப்பின், உயர் நிலை அங்கத்தவர்களாக இருந்த இம் மூவரும் நேற்று அதிகாலை சுடப்பட்டுள்ளார்கள். PKK அலுவலகத்தில் வைத்தே இவர்கள் சுடப்பட்டுள்ளார்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பிரெஞ்சுப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். இவர்களது உடல்களை நேற்று அதிகாலை 2.00 மணியளவில் பொலிசார் கண்டுபிடித்ததாகவும் மேலும் அறியப்படுகிறது. பிரான்சில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பரிதி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து PKK அமைபின் அங்கத்தவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு விடுதலை போராட்ட அமைப்பில் உள்ளவர்களை, பிரான்சில் சுட்டால், அது ஒரு பெரிய விடையமாக உருவெடுக்காது என்று குற்றம் புரிபவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்களா? குறைந்த பட்சம் பரிதி கொலை வழக்கிலாவது, பிரெஞ்சுப் பொலிசார் தீவிர நாட்டம் காட்டியிருந்தால், இவ்வாறான பிறகொலைகளை தடுத்திருக்க முடியும் என, பிரான்ஸ் வாழ் தமிழ் ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார். பிரான்ஸ் மண்ணில் குற்றச்செயல்களைப் புரிந்துவிட்டு இலகுவாக தப்பிக்க முடியும் என, குற்றவாளிகள் எண்ணும் அளவுக்கு பிரெஞ்சுப் பொலிசாரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளமை பெரும் வேதனைக்குரிய விடையமாகும்.

பாராளுமன்றின் பக்கமே செல்ல வேண்டாம்!

பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதால் அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் பொல்துவ சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. இதனால் கொழும்பில் இருந்து கடுவல, மாலபே செல்லும் வாகனங்கள் மாற்று வீதியாக புத்கமுவ வீதியை பயன்படுத்துமாறு தலவத்துகொட, ஹோமாகம, கொட்டாவ வீதியை பயன்படுத்துவோர் நாவல சந்தியின் பாகொட வீதி மற்றும் எத்துல்கோட்டே வீதியை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளார்.

10 ஜனவரி 2013

உதயன் பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது தாக்குதல்!

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் விசமிகளால் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கொண்டு சென்ற 1500 பத்திரிகை பிரதிகளும் அவரது புதிய மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து தீயிட்டு எரிக்கப்பட்டன மோட்டார் சைக்கிளும் பத்திரிகை பிரதிகளும் முற்றாக எரிந்து நாசமாகின இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இன்று காலை உதயன் அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்ற வேளை மாலுசந்திப்பகுதியில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த விசமிகள் நால்வரால் இவர் அடித்து விழுத்தப்பட்டு பொல்லுகளால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் இவரின் தலைப்பகுதியில் தாக்க முற்பட்ட வேளை அவர் கையால் தடுத்துள்ளார். எனினும் அவர்களது தாக்குதல் கைப்பகுதியில் பலமாய் விழுந்ததினால் அவரது கையும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவரை அருகில் உள்ள கானுக்குள் தூக்கி வீசியதுடன் மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகளை எரித்து விட்டு நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நாகேஸ்வரன் பிரதீபன் (30வயது)  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இன்று காலை மற்றுமொரு உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மாலுசந்தியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்கள் சிலரினால் துரத்தப்பட்டுள்ளார். ஆயினும் அவர் தன்னைப்பாதுகாத்துக் கொண்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு மாவட்டங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை!

நான்கு மாவட்டங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை!நிலவும் சீரற்ற காலநிலையால் நான்கு மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களுக்கு 24 மணிநேர அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, மாத்தளை, கண்டி மற்றும் பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில பகுதிகளுக்கே இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பகுதிகளுக்கும் கண்டியில் மெதும்பர, பாதஹேவாகெட்ட, கங்கவடகொறள ஆகிய பகுதிகளுக்கும் 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளையில் மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து செயலகப் பிரிவுகளுக்கும் 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளையில் இரத்தோட்டை, உக்குவெல, மாத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 24 மணிநேர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

09 ஜனவரி 2013

விஸ்வரூபம் பட போஸ்டரில் தலைவரின் படம்!

நடிகர் கமலகாசன் நடித்து,இயக்கிவரும் திரைப்படம் விஸ்வரூபம். வழமைக்கு மாறாக பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப் படம், தீவிர முஸ்லீம்கள் குறித்து சித்தரிக்கும் படம் ஆகும். ஆனால் நேற்றைய தினம் திருச்சி போன்ற நகரங்களில், தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களோடு, நடிகர் கமலகாசன் கைகோர்த்து நிற்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்ததாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 300 கோடி செலவில், எடுக்கப்பட்ட இப் படம் எதிர்பார்த்த வசூலைத் தருமா என்ற பெரும் சந்தேகம் இருக்கும் நிலையில், புலம்பெயர் நாடுகளில் இத்திரைப்படத்தை ஈழத் தமிழர்கள் அதிகம் பார்க்கவேண்டும் என்ற நோக்கத்துக்காகத் தான் இவ்வாறு, போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. நடிகர் கமலகாசன் அவர்களின் ரசிகர் மன்றத்தினர் அவர் மேல் கொண்டுள்ள பற்றுதலால் இப்படிச் செய்திருக்கலாம்.... ஆனால் எமது தேசிய தலைவர் என்ன விளம்பரப் பொருளா ? என்று ஈழத் தமிழர்கள் மனம் வருந்துகின்றனர் என்பதையும், மறக்கலாகாது ! ஈழப் போராட்டத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத விஸ்வரூபம் படத்துக்கு இவ்வாறு ஒரு விளம்பரத்தை ஏன் கொடுக்கவேண்டும் என்று தமிழர்கள் நினைத்தால் அதன் விடை அனைவருக்கும் புரிந்துவிடும். பழம்பெரும் நடிகரான கமலகாசன் அவர்களை ஈழத் தமிழர்கள் எவரும் இங்கே விமர்சிக்கவில்லை. ஆனால் எமது தலைவரை தயவுசெய்து ஒரு விளம்பரப் பொருளாக மாற்றவேண்டாம் என்று தான் நாம் கேட்டுக்கொள்கிறோம். ஈழத்து உணர்வாளர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்தும், எவரும் இதுவரை இதுகுறித்து வாய் திறக்கவே இல்லை என்பதும் பெரும் மனவருத்தம் தரும் விடையமாக உள்ளது.

அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல்  இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப் பட்டுள்ளதுஅநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல், இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள பள்ளிவாசல் மீது ஏறிய இனந்தெரியாத குழுவினர் அதன் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் பள்ளிவாசல் சேதப்படுத்தப்படும் சத்தம் கேட்டு அயலவர்கள் வந்து பார்க்கையில் அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

08 ஜனவரி 2013

புலிகளுக்கு பிராணவாயு கொடுக்கிறது கனடா – ஜி.எல்.பீரிஸ்

நந்திக்கடலில் போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, கனடா பிராண வாயு கொடுத்து உயிர்ப்பிக்க முனைவதாக, முறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா அரசு மீது கனேடிய அமைச்சர் ஜாசன் கென்னி நேற்று சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், “நந்திக்கடல் கரையோரத்தில் 2009 மே மாதம் தமது போரிடும் திறனை இழந்து போன விடுதலைப் புலிகளுக்கு, அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி புதுவாழ்வு கொடுத்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், தனிஈழத் திட்டத்தின் மீது இன்னமும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு பிராணவாயுவை வழங்கியுள்ளது. உறுதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய நல்லிணக்க முயற்சிகளைச் சீர்குலைக்கும் வகையிலேயே வெளியகத் தலையீடுகள் அமைந்துள்ளன. இராணுவ பலம் இல்லாவிட்டாலும் அனைத்துலக அமைப்புகளில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க முடியும் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தனது இனத்திற்காக மீண்டும் குரல் கொடுத்தார் மாயா!

நேற்று முந்தினம் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்ற உலகப் புகழ் பாப் பாடகி மாதங்கி அருட்பிரகாசம்(மாயா) ஈழத் தமிழர் தொடர்பாக தனது கருத்தைப் மீண்டும் பதிவுசெய்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க விழா ஒன்றில் பாடல் பாட கோல் கோஸ்ட் என்னும் இடத்துக்குச் சென்ற மாயவை அங்குள்ள ஊடகங்கள் பேட்டிகண்டது. இந் நாடு மிகவும் பெரியது எனவே சிறுபாண்மை இனத்தவர்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பது நல்லதல்ல, அவர்களையும் இந்த நாட்டுக்குள் உள்வாங்கவேண்டும் என்று கூறியுள்ளார் மாயா. ஈழத் தமிழ் அகதிகள் பலர் அவுஸ்திரேலியா சென்றவேளை அவர்கள் அருகில் உள்ள பல தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களை விடுவித்து அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதனையே இவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். மாயா என்று அழைக்கப்படும் மாதங்கி அருட்பிரகாசம், ஒரு ஈழத் தமிழர் ஆவர். யாழில் வசித்துவந்த அவரது குடும்பம் பின்னர் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தது.இவரது பல பாடல்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

07 ஜனவரி 2013

தமிழர்களுக்கு தெரிவுக்குழுவில் நம்பிக்கையில்லை – குமரகுருபரன்!

kuruபிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக்குழு அதன் செயற்பாடுகளை பார்க்கும்போது. இனப்பிரச்சினைக்கு தீரவுகாண்பதற்கான தெரிவுக்குத்தொடர்பில் தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை. அந்த தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் செல்லமாட்டார்கள். என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான குமரகுருபரன் தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் ‘எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு’ எனும் தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பிரதம நீதியரசருக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து அரசாங்கம் கேளிக்கூத்தாடி தனது சுயரூபத்தை முழு நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே காண்பித்துவிட்டது. இந்த தெரிவுக்குழுவானது விசாரணைகள் இன்றியே தீர்ப்பளித்துள்ளது. இவ்வாறான நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நியமிக்கப்படவுள்ள தெரிவுக்குழுவை எவ்வாறு நம்புவது. அந்த தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள். வடக்கு கிழக்கில் புதுப்புது பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டில் புரையோடிபோயுள்ள பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது என்பது மட்டுமே உண்மையாகும் என்றார்.

அகதிகள் முகாமில் இலங்கை தமிழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை!

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் 42 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் தங்களை திறந்த வெளிமுகாமிற்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன், போலீஸ் எஸ்.பி. ரூபேஷ் குமார் மீனா, கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்பிரமணியம், செங்கல்பட்டு டி.எஸ்.பி. மூவேந்தன், தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் 14 பேர் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று சிறப்பு முகாமிற்கு திரும்பினர். 9 பேர் வைத்தியசாலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அரசு வைத்தியசாலையில் அவர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அகதிகள் முகாமில் உள்ள 2 லட்சம் பேர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறுகிறார்கள். ராமேஸ்வரம் முகாமில் எனக்கு தெரிந்த தங்கை ஒருவர் என்னை பாலியல் தொந்தரவிற்கு ஒரு அதகாரி அழைக்கிறார். அப்படி இல்லையென்றால் உனது அப்பா, அண்ணனை சிறப்பு முகாமில் அடைத்துவிடுவேன் என்று அச்சுறுத்துகிறார் என்று கூறி கதறி அழுதாள். இதுபோல வெளிநாட்டவர் தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். 14 நாட்களாக பட்டினி போராட்டம் நடத்துபவர்கள் உடல்நிலை பலவீனம் ஆன பிறகு அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 9 பேர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 5 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். சிறப்பு முகாம் நிரந்தரமாக தேவையில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்காது. 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். அதற்குள் கட்சியை பலப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். 2021 சட்டமன்ற தேர்தல் எங்கள் இலக்காக அமையும். இவ்வாறு சீமான் கூறினார்.

06 ஜனவரி 2013

பாரிய மக்கள் போராட்டமொன்று நடாத்தப்படும் – ஜே.வி.பி!

பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிராக செயற்பட்டால் சபாநாயகர், அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமை நாட்டின் பொது மக்களுக்கு காணப்படுவதாகக் ஜே.வி.வி. சுட்டிக்காட்டியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தினர், புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். சட்ட விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றிற்கு காணப்படுவதாக அரசியல் சாசனத்தின் 125ம் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நீதிமன்றம் ஏற்கனவே சட்ட விளக்கத்தை அளித்துள்ளது. இந்த சட்ட விளக்கத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றின் சட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சபாநாயகர், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாகவும், இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றி;ற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் தரப்பினருக்கு தண்டனை விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றத் தீர்ப்பினை விமர்சனம் செய்த குற்றத்திற்காக தற்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்ததாகவும், இதே நடைமுறை ஏனையவர்கள் விடயத்திலும் பின்பற்றப்பட வேண்டுமெனவும் கே.டி. லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையை பற்றிப் பிடித்தபடி கிணற்றிலிருந்து தாயின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி,குஞ்சுப்பரந்தன் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து தாய் மற்றும் பிள்ளை ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 29 வயதான சுகுமார் நிசாந்தினி மற்றும் 4 வயதான சுகுமார் கிருத்திகன் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் நேற்று (05) மாலையிலிருந்து காணாமற்போயிருந்த நிலையில் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கிணற்றில் மிதந்து கொண்டிருந்த தாயின் சடலம் பிள்ளையை பற்றிக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள கிணறொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், கணவன் - மனைவிக்கிடையில் அண்மைக்காலமாக சச்சரவு இருந்து வந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறியதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

03 ஜனவரி 2013

வன்னியில் சிங்களம் கற்பிக்க இராணுவம் நியமனம்!

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் கற்பிப்பதற்கு கல்வி வலயங்களுக்கு ஊடாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்களத்தைத் திணிக்கும் இந்த முயற்சி வடபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளும் இந்தப் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது எனத் தெரியாமல் திண்டாடுவதாகத் தெரிகின்றது. 2013 ஆம் ஆண்டு 1 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்திலுள்ள பாடசாலைக்கும் படையினர் சீருடைகளுடன் கற்பித்தலுக்காகச் சென்றிருக்கின்றனர். மேலும் இந்தப் பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிப்பதற்கு கல்வி வலயத்தின் ஊடாக தமக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், பாடசாலை அதிபர்களுக்கு படையினர் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் மாலினி வெஸ்ரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, தமது வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் மொழி சிங்களம் கற்பிப்பதற்கு படையினர் முன்னர் உத்தியோகப்பற்றற்ற அனுமதியினை கோரியிருந்தனர். தற்போது உத்தியோக பூர்வமாக தமக்கு அனுமதி வழங்குமாறு கோரியிருக்கின்றனர். இந்நிலையில் விடயம் தொடர்பில் எமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவுள்ளோம். அவர்களே இவ்விடயம் குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறினார். இதேவேளை விடயம் குறித்து தகவலறிவதற்காக கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டபோது, தான் கூட்டமொன்றுக்குச் சென்றுகொண்டிருப்பதாகக்கூறினார். எனினும் கிளிநொச்சி கல்வி வலயத்திற்குச் சென்ற இராணுவத்தினர் ஏனைய வலயங்களில் படையினர் சிங்களம் கற்பிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தைக் காண்பித்து தமக்கு அனுமதி வழங்குமாறு கேட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர். எனினும் இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மண்டைதீவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி பேரணி

யாழ். மண்டைதீவில் கடந்த 27ம் திகதி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட நான்கு வயதுச் சிறுமிக்கு நீதி வேண்டி மண்டைதீவு மக்கள் அமைதி பேரணி ஒன்றை இன்று (03) காலை 10 மணியளவில் நடத்தியிருந்தார்கள். மண்டைதீவு பேரருலானவர் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி மண்டைதீவில் உள்ள வேலணை உப பிரதேசசபை காரியாலயத்துக்கு சென்று, அங்கு இருந்து மண்டைதீவு வீதிகளை சுற்றி வந்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் நிலையமான மண்டைதீவு பொலிஸ் நிலையத்தை சென்றடைந்தது. பொலிஸ் நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்திகஸ்தர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி, மண்டைதீவு பங்குத்தந்தை விஜெந்திரதாஸ், வேலணை தவிசாளர் சி.சிவராசா ஆகியோரிடம் உயிரிழந்த மாணவியுடன் கல்வி கற்ற மாணவிகளால் இந்த கொலை சம்பவம் தொடர்பான துரித விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்த வேண்டி மகஜர் ஒன்றினை கையளித்தார்கள். மகஜரை பெற்று கொண்டு யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்திகஸ்தர் எம்.சி.எம்.மொஹமட் ஜெவ்ரி உரையாற்றுகையில், நாம் இந்த குற்றம் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். கூடிய விரைவில் குற்றவாளியை பிடித்து நீதிக்கு முன் நிறுத்தி தகுந்த தண்டனையை பெற்று கொடுப்போம். அதற்கு விசாரணைகளின் போது எமக்கு பிரதேச மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். அதேவேளை வேலணை பிரதேச சபை தவிசாளர் உரையாற்றுகையில், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் குற்றவாளியை கைது செய்து நீதிக்கு முன் நிறுத்தி குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தார்.