பக்கங்கள்

30 ஏப்ரல் 2019

யாழில் போராளிகளிடம் உதவி கோரியது படைத்தரப்பு

இலங்கைதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைத் தலைமையகத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிறகு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட போராளிகள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைபிரிவின் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மிலிந்த, "இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன். நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் சந்திக்கவேண்டியுள்ளது. குறிப்பாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வமத பிரதிநிதிகள்,வர்த்தக சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். அதன் பின்னர் உங்களை அழைத்துள்ளேன். தற்போது நாட்டில் உள்ள நிலைமை யாழ்ப்பாணத்திலும் இடம்பெறாமல் இருக்க வேண்டுமென்பதே எனது நோக்கம். எனவே யாழ்ப்பாண மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது" என்று தெரிவித்தார். "வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவோர் தொடர்பில் அவதானமாக இருந்தால் கொழும்பில் நடந்த தாக்குதல் போல் யாழ்ப்பாணத்தில் இடம் பெறாமல் தடுக்க முடியும். எனவே வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச் செயல்களையும் இல்லாதொழிக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்தார். இதன் போது கருத்துத் தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் "நாங்களும் மக்களுக்காகத்தான் போராடினோம் எச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை" எனவும் தெரிவித்திருந்தனர். இதேவேளை இச் சந்திப்பு தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் முன்னாள் போராளிகளை இணைத்துகொள்வது, அது தொடர்பில் துப்புகளை வழங்குவதற்கு போராளிகள் நாங்கள் தாயாரில்லை. ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்பது இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளோடு சம்பந்தப்பட்ட விடயம். எங்களை குற்றவாளிகளாக நினைத்து நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் நாங்கள் தற்பொழுது சமூகமயப்படுதப்பட்டுள்ளோம். நாங்கள் தற்பொழுது சாதாரண வாழ்கையையே வாழ்ந்து வருகின்றோம்.தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டினை பாதுகாத்து கொள்ளும் பொறுப்பு இலங்கை அரசாங்கம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு படையிடமே உள்ளது. இதனை அவர்கள் முன்னாள் போராளிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இலங்கை இராணுவம் நாட்டினை பாதுகாக்கின்ற வேலையை செய்தால் நல்லது. அரசியல் செய்கின்ற வேலையை நிறுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.

நன்றி:பிபிசி தமிழ்

27 ஏப்ரல் 2019

சாய்ந்தமருதில் 15 உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது!

வீடுஇலங்கை சாய்ந்தமருதுவில் நேற்று இரவு நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 15 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஆறு சடலங்கள் தற்கொலை குண்டுதாரிகளின் உடல்களாக இருக்கலாம் என்று போலிஸார் சந்தேகிக்கின்றனர். தெமடகொடவில் நடந்தது போல, பாதுகாப்பு பிரிவினர் இவர்களது இடத்தினுள் நுழைய முயன்றபோது, குண்டை வெடிக்க வைத்து தங்கள் குடும்பத்தினரோடு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நேற்று, சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினரால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவலக்கடை பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு நிலைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சோதனைகளில் மேலும் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருது மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தற்போது பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், வெடி சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்துக்கு அருகே வசித்து வந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அந்த மருத்துவமனை தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் பிரார்த்தனைகள், மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது. கொழும்புவின் பேராயர் மால்கோம் ரஞ்சித் கூறுகையில், மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று எச்சரிக்கும் சில கசியவிடப்பட்ட ஆவணங்களை பார்த்ததாக தெரிவித்தார். தாக்குதல்கள் குறித்து முன்னரே எச்சரிக்காத அரசாங்கம், தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், சுலோகங்களுடனான கொடிகளும் மீட்கப்பட்டுள்ளன. சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறை போலீஸார் தெரிவித்தனர். சோதனை நடவடிக்கைகளின்போது ஐஎஸ் சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் கறுப்பு உடை உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வீட்டை வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும் போலீஸார் கூறினர். ஐ.எஸ் அமைப்பினரின் கொடியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:பிபிசி தமிழ்

21 ஏப்ரல் 2019

கொழும்பு உட்பட பல இடங்களில் குண்டுகள் வெடிப்பு பலர் பலி!

இலங்கையில் தேவாலயத்தில் குண்டுவெடிப்புஇலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக கொழும்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது தற்போதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலரும் காயமடைந்துள்ளனர். இதுவரை குறைந்தது 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்தார் என்று ஏஎப்பி செய்தி முகமை கூறுகிறது. காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.இந்த குண்டு வெடிப்பில் தேவாலயத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்துள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்

18 ஏப்ரல் 2019

விக்கினேஸ்வரன் பொய்யுரைக்கிறார்-கஜேந்திரன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சீனத் தூதுவரை நள்ளிரவில் சந்தித்தனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனத் தரப்பினரை இரகசியமாகச் சந்தித்தது என உண்மைக்குப் புறம்பான பொய்க் கருத்தொன்றைக் கூறியிருக்கின்றார் விக்கி.அது தொடர்பாக எங்களது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம். விக்னேஸ்வரன் ஐயா வயதில் மூத்த ஒருவர். 40 ஆண்டு காலத்துக்கு மேலாக நீதித்துறையில் இருந்திருக்கின்றார். அதனைவிட அவர் ஒரு ஆன்மீகவாதி. அவருடைய முகத்தில் திருநீறும் பொட்டும் எப்போதும் இருக்கும். ஆகையால் அப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் மனச்சாட்சிக்கு மாறாக பொய் சொல்ல மாட்டார்கள் என்பது தான் மக்களுடைய நம்பிக்கை.அப்படியிருக்கின்ற போது நாங்கள் சீனத் தூதுவரை இரவில் ஒளித்துச் சந்தித்திருக்கிறோம் என்ற சாரப்பட ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அப்படிச் சொல்லியிருப்பது ஒரு அப்பட்டமான பொய். ஏனெனில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை. விக்னேஸ்வரன் தான் கொண்டு செல்கின்ற பிழையான அரசியலை மக்கள் மட்டத்திலே நியாயப்படுத்துவதற்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லிச் சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்ற நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று நான் மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன். இந்தியாவின் எடுபிடிகளாக இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனையும் அவரைப் போன்ற சிலரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற பாதைக்குள் கொண்டு செல்ல முற்படுகின்றாரா என்ற கேள்வியொன்று வலுவாக எழுந்து கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட இடத்தில் தனது அந்தப் போக்கை நியாயப்படுத்தவதற்கு தனக்குப் பக்கத்திலே சரியாகச் செயற்படுகின்ற தரப்பு இருந்தால் அது தனக்கு இடைஞ்சல் என்பதால், எங்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி சேறு பூச முற்படுவதாகத் தான் நாங்கள் கருதுகின்றோம். இந்த பொய்யான பரப்புரைச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அவர் தன்னுடைய அரசியலுக்காக அந்தப் பொய்களைச் சொல்லப் போகின்றார் என்று சொன்னால் தயவு செய்து பொட்டு வைப்பதையும் திருநீறு பூசுவதையும் தவிர்த்து விட்டுச் சாக்கடை அரசியலில் தாராளமாகப் பொய்களைக் கூறிக்கொண்டு அரசியலைச் செய்யட்டும். எங்களைப் பொறுத்தவரை எந்தவொரு இராஜதந்திரியும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டால் நாங்கள் அவர்களைச் சந்திப்போம்.எங்களுக்கு யாரைச் சந்திப்பதிலும் எந்தவிதமான தயக்கமும் இல்லை. பயமும் இல்லை. யாரைச் சந்தித்தாலும் அதனை வெளிப்படுத்துவதிலும் எங்களுக்கு எந்தவிதமான தயக்கங்களும் இல்லை. இதுவரை இந்தியத் தூதரகங்களையும் ஐரோப்பியத் தூதரகங்களையும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். ஆனால், இதுவரை சீனத் தூதுவர்களைச் சந்திக்கவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் அவர்களும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பிச் சந்திக்கக் கேட்டால் நிச்சயமாக நாங்கள் சந்திப்போம். ஆனால், சந்தித்துவிட்டு நாங்கள் அதனை ஒளித்து மறைக்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அதனை விக்னேஸ்வரன் ஐயா தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். இதுவரை அவரோடு நெருங்கிப் பழகிய அரசியல்வாதிகள் ஐந்து சதத்துக்கும் நேர்மையில்லாத அடிப்படைத் தார்மீக அறமற்றவர்களாக இருக்கலாம்.அவர்களை வைத்துக் கொண்டு நாங்களும் அப்படித்தான் என்ற எண்ணத்தோடு கருத்துக்களைக் கூறுவதை விக்னேஸ்வரன் ஐயா தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

16 ஏப்ரல் 2019

குப்பிளானில் மூவரை பலி எடுத்த மின்னல்!

யாழ்ப்பாணம்- குப்பிளானில இன்று பிற்பகல், மின்னல் தாக்கி தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று மதியத்துக்குப் பின்னர், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதன்போதே சுன்னாகம் குப்பிளான்,மயிலங்காடு பகுதியில் மின்னல் தாக்கிய இந்தச் சம்பவம் இடம்பெற்றது. புகையிலைத் தோட்டத்தில் நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோர் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது, இதனால், அவர்கள் அருகில் இருந்த தென்னை மரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர். இதன் போது இடி மின்னல் அந்தத் தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்தமை தெரியவந்துள்ளது. சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (வயது- 48), கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

15 ஏப்ரல் 2019

வேலணையில் தங்கியிருந்த கனடா பிரஜை விபத்தில் மரணம்!

பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடாவில் இருந்து வந்த ஒருவர், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். கனடா பிரஜாவுரிமை பெற்றவரான செல்லப்பா சுந்தரேஸ்வரன் (வயது 66) என்பவரே உயிரிழந்தவராவார்.குறித்த நபர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் இலங்கை வந்து, வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 28 ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பும் வழியில் பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் குறித்த நபர் காயமடைந்தார்.குறித்த விபத்தில் படுகாயமடைந்தவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

14 ஏப்ரல் 2019

வவுனியாவில் இன்றும் தொடர்ந்தது உறவுகளின் போராட்டம்!

புதுவருட தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ், சிங்கள புத்தாண்டை தமிழ், சிங்கள தலைவர்கள், அரசியல்வாதிகள் கொண்டாடி வருவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எமது பிள்ளைகள் எம்மிடம் வராமையால் நாம் வீதியோரத்தில் எமது பிள்ளைகளுக்காக கண்ணீருடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தலையிட்டே எமது பிள்ளைகளை மீட்டுத் தர முடியும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

02 ஏப்ரல் 2019

கலப்பு பொறிமுறை பற்றி பேசினால் விக்னேஸ்வரனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!

சுமந்திரனுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை என்றும், கலப்பு விசாரணைப் பொறிமுறையை சி.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால், அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், எச்சரித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஸ்ரீலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது. கலப்பு பொறிமுறை என்றால் கூட அதில், இலங்கை அரசு தொடர்புபடும் என்பதனால் அந்த விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது. அதனால் நாம் 2015 ஆம் ஆண்டிலிருந்தே சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளோம். இந்நிலையில் நீதியரசர் சிவி.விக்னேஸ்வரன் கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சை ஆரம்பித்துள்ளார். மேலும் அதனை அமைக்கலாமா? இல்லையா? என்ற விவாதத்தினுள் பொறுப்புக்கூறல் விவகாரத்தினை கொண்டுவர முயல்கின்றார். ஸ்ரீலங்கா அரசு சம்பந்தப்படும் கலப்பு பொறிமுறையை அவர் தொடர்ந்து வலியுறுத்துவாராக இருப்பின் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றார்.