பக்கங்கள்

31 ஜனவரி 2012

யாழ்,முத்திரைச்சந்தி பூங்காவை மூடவேண்டாம் என கோரிக்கை.

யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தைப் பூங்காவை மூடிவிட்டு அக்காணியை வேறு தனி நிறுவனங்களுக்கோ அரச நிறுவனங்களுக்கோ வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை நிறுத்தி யாழ் மாநகரசபை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சி துணைச் செயலாளர் சி. வி. கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்குறிப்பிட்டுள்ள பூங்காவை மூடிவிட்டு அந்த நிலத்தை வேறு சில அரச நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாம் அறிவித்துள்ளோம்.
தாங்கள் அறிவித்திருக்கக்கூடிய வகையில் இந்தப் பூங்கா வரலாற்று பெருமை மிக்க நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் அதன் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் பேண நாம் ஆவலாக உள்ளோம்.
இந்த வளவை ஊடறுத்து சென்ற செம்மணி வீதியின் ஒரு பகுதியை தெற்குப் புறத்துக்கு மாற்றியே யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தின் ஒரேயொரு இரண்டாவது பூங்காவாக இது ஸ்தாபிக்கப்பட்டது. இந்த இடம் பொதுமக்களதும், குறிப்பாக சிறுவர்களதும் பொழுபோக்கு மற்றும் ஓய்விடமாகவும் இருந்து வந்துள்ளது.
இந்த பூங்கா யாழ்ப்பாண மாநகரசபையால் பராமரிக்கப்பட்டு வந்தபோதும் யுத்த சூழ்நிலையில் அவ்வாறு பராமரிக்க முடியவில்லை. இப்பொழுது யுத்தம் முடிவுற்ற நிலையில் நல்லூர் பகுதி மக்களின் நலனுக்காக இந்தப் பூங்காவினை யாழ்ப்பான மாநகரசபை தொடர்ந்து பராமரிக்க அனுமதிப்பதே நியாயமானதாகும்.
தாங்கள் இந்த விடயத்தில் தலையிட்டு இக்காணியை வேறு தனி நிறுவனங்களுக்கோ அரச நிறுவனங்களுக்கோ வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுதவும்படி வேண்டுகிறோம். பிரதிகள் யாழ் மாட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் மாநகரசபை ஆணையாளர் சரவணபவன் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அராலியில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை!

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, அராலி வடக்கு, செட்டியார் மடப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான முத்துலிங்கம் இரத்தினகுமார் என்ற குடும்பஸ்தர் தனது வீட்டின் வெளிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் அண்மையிலேயே டுபாய் நாட்டில் இருந்து திரும்பியதாகவும் நீர் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியதாகவும் தெரியவருகிறது.
இருப்பினும் இதுவரையில் மூன்று தடவைகள் தற்கொலைக்காக முயற்சி செய்ததாகவும் நேற்று மாலை தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் கூறியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

30 ஜனவரி 2012

வடக்கில் கடும் குளிர்!

வடக்கில் தற்போது கடுங்குளிர் காலநிலை நிலவி வருகிறது. இந்தியாவில் நிலவி வரும் கடும் காற்றுடன் கூடிய குளிர் காலநிலை வடக்கில் நேரடியாக தாக்கம் செலுத்தி வருவதாக வானிலை அவதானத்தின் அதிகாரி யொருவர் தெரிவித்தார்.
கடந்த 16 ஆம் திகதி முதல் வடக்கில் வெப்பநிலை மாறுபட்டளவில் குறைவடைந்து வருவதாகவும் இதனால் அப்ப குதியெங்கிலும் பனிமூட்டம் ஏற் பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.இதேவேளை வடக்கின் பிரதிபலிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வெப்ப நிலை ஓரளவு வீழ்ச்சியடைந்திருப்பதன் விளைவாக குளிர் காலநிலை நிலவி வருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
கிழக்கில் அதிகரித்த பனி காரணமாக மக்கள் நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.திடீர் காலநிலை மாற்றத்தையடுத்து காய்ச்சல், இருமல், தடிமல் நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. உதடு மற்றும் குதிகால் வெடிப்பு நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். குறித்த காலநிலையே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இரவிலும், பகலிலும் பனி தொடருவதனால் சிறுவர்களும் முதியவர்களும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். குளிர்கரணமாக பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டள்ளனர். குளிர் காலநிலையையடுத்து, வேளாண்மையும் நோய்த் தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதிகமான பிரதேச நெற்கானிகள் இலைசுருட்டி நோயின் தாக்கத்திற்குள்ளாகி வருவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பிள்ளையானுக்கு எச்சரிக்கை விடுத்தார் கருணா.

மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்ற கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் கோரிக்கை அவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சிறிலங்காவின் பிரதி அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரித்துள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று காணி, காவல்துறை அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மாகாணங்களுக்கு வழங்காது.
அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் எதற்குத் தேவைப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வாக்குகளைக் குறிவைத்தே இவ்வாறு கோரிக்கைகளை விடுகின்றனர்.
கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கூட காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று கோரியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்துக் கொண்டே அதனுடன் முரண்பட்டால், அது சந்திரகாந்தனுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்“ என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

29 ஜனவரி 2012

சிங்களச்சிப்பாய்க்கும் தமிழ் பெண்ணுக்கும் திருமணம்!தமிழின அழிப்பை வலுப்படுத்துகிறது சிங்களம்.

கிளிநொச்சியில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இலங்கை இராணுவச் சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவ பிரதேசத்தில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு தமிழின அழிப்பை வலுப்படுத்துகிறது சிங்களம்.இப்படியான செயற்பாடுகளை சிங்கள அரசு தொடர்ந்து செயற்படுத்ததான் எத்தனிக்கும் ஆகவே இச்செயற்பாடுகள் மேலும் தொடரா வண்ணம் தமிழர் பிரதிநிதிகள் விரைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

திருமலையில் தமிழர்கள் மீது சிங்களக் காடையர் தாக்குதல்!செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் சிங்களவர்களால் தமிழர்கள் தாக்கப்பட்ட விடயத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஆலயத்திற்கு நிதி சேகரிக்கச் சென்ற தமிழ் இளைஞர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளமை கவலையளிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் மாறாக இன முரண்பாடே வலுப்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்விடயம் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடின் பிரச்சினைகள் மேலும் தொடரக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமலை நகரின் விநாயகபுரம் பகுதியில் தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலால் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றையதினம் (28) இரவு 7 மணியளவில் 30 ற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் ஒன்று திரண்டு வீதிகளில் பயணித்தவர்கள் வீடுகளுள் தங்கியிருந்தவர்களென பலரையும் தாக்கியுள்ளனர்.
இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்களை தடுக்க முற்பட்டவேளை மகன் மற்றும் தந்தை இருவரையும், தாக்குதலில் ஈடுபட்டிருந்த அனைவரும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகரின் மத்திய பேருந்து நிலையப்பகுதியில் குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளே இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் அக்குழுவினரை விரட்டியடித்துள்ளனர். எனினும் எவரும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 ஜனவரி 2012

பெற்ற பிள்ளையை வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்த தாய் தூக்கில் தொங்கினார்!

பெற்ற குழந்தையை கொன்று வீட்டின் பின்புறமாக புதைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட தாய் துக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மிட்கப்பட்டுள்ளார். இந்தசம்பவத்தில் கிளிநொச்சி கண்ணகை புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் தவமணி (வயது 41) என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மிட்கப்பட்டவராவார்.
நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்ததாக குறப்படும் இந்த குடும்பபெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் தூக்கில் தொங்கியதாக தெரிவிக்கபடுகிறது.குறித்த குடும்ப பெண்ணின் பிள்ளைகள் பாடசாலையில் இருந்து விட்டிற்கு வந்த போது வீட்டின் அறைக்குள் தாயார் தூக்கில் தொங்கியதை கண்டதும் அருகில் இருந்த தமது அயலவர்களிடம் குறி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சடலம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியிருக்கின்றார். அதன் பின்னர் பொலிஸார் மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி பொது மருத்துமனையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த பெண் தான் பெற்ற குழந்தையை கொன்று வீட்டின் பின்புறமாக புதைத்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி பொலிஸாரால் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் வெடிபொருட்கள்!

யாழ்ப்பாணம் கொழும்பு பஸ்ஸில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பஸ்ஸில் 38 பயணிகள் பயணம் செய்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இருக்கைக்கு அடியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும், வெடிபொருட்களை கொண்டு சென்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
300 கிராம் வெடிபொருட்கள், இலத்திரனியல் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.ஓமந்தையில் பஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஐ.நா.தலைமையகத்திலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு!

நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் பிரிவிலிருந்து கொக்கைன் எனப்படும் ஒரு தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறிக்கப்பட்ட பை ஒன்றிலிருந்து 16கிலோகிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தப் பையில் பெயர் விபரங்கள் பொறிக்கப்படாதபோதிலும் மெக்சிக்கோவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இந்தப் பை தவறுதாலாக ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

27 ஜனவரி 2012

பிள்ளையானை சந்தித்தால் அதுவே கூட்டமைப்பின் அஸ்தமன ஆரம்ப நாளாகும்!கிழக்கு பல்கலை பழைய மாணவர்கள் எச்சரிக்கை.

தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு மாகாண முதலமைச்சரை கூட்டமைப்பு சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாளாக துக்கதினம் அனுஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,
இன்னல்கள் இடையுறுகள் மத்தியில் இணைந்த வட- கிழக்கில் அதி உச்ச ஆணையை பல அச்சுறுத்தல் ஆபத்து நிறைந்த சூழலிலும் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் வழங்கியிருந்தனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மண்ணில் தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்ததற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைமையும் செய்த சூழ்ச்சிகளை யாரும் எளிதில் மறக்க முடியாது.
இவ்வாறான நிலையில் இடம்பெற உள்ள சந்திப்பு நாளை கிழக்கு மாகாணத்தில் துக்க தினமாக அனுஸ்ரிக்குமாறு கிழக்குப் பல்களைக் கழக பழைய மாணவர்கள் அவசர வேண்டுகேள் விடுத்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்கள் வழங்கிய ஆணையை மதித்து நடக்க வேண்டும் மாறாக மிதித்து நடக்கும் செயற்பாடு வாக்களித்த மக்களை இனிவரும் நாட்களில் இழப்பதற்கே வழி வகுக்கும்.
எவ்வளவு இக்கட்டான சூழலில் வட- கிழக்கில் தேர்தலை எமது மக்கள் சந்தித்து கூட்டமைப்பை வெற்றி பெற செய்தனர் என்பது உளகறிந்த உண்மை. அன்றைய தேர்தல் காலத்தில் சிங்களத்துடன் மட்டும் எம் சமூகம் போராட வில்லை அதனுடன் இன்று உங்களுக்கு மடல் எழுதிய சிங்களத்தின் கூலிப்படைகளுடனும் போராடியே வெற்றி வாகை சூடினோம் மறந்து விடாதீர்கள்.
நாம் உங்களிடம் எதிர்பாத்தது எல்லாம் உரிமை வெல்லும் ராஜ தந்திர நகர்வுகளை முன்னெடுப்பதனை அதற்கு இன்று இலங்கை அரசுடனும் சர்வதேச அரசுகளுடன் பேசுசிறீர்கள் நல்லது அதை விடுத்து விதண்டாவாத அரசியல் செய்து சளைத்து எம் இனத்தையே பலவீனப்படுத்தியவர்களிடம் பேசுவதனால் என்ன பலனை நாம் அனுபவிக்கப் பேகிறோம்?
இதயமும் உதிரமும் போன்ற வட- கிழக்கு இணைப்புத் தவிந்த மற்றைய அனைத்து விடயங்களிலும் பேசத் தயார் என தெளிவாக கூறுபவர்களிடம் இன்னமும் எதனைப் பற்றி பேசப் பேகிறீர்கள். ஒரு விடயம் மறைமுகமாக புலனாகிறது கடிதம் எழுதுபவர்களையும் அதற்கு பதில் அனுப்பும் உங்கள் கட்சியையும் இயக்குவது ஒரு சாரார் என எண்ண வாய்ப்புள்ளது.
எமது தீர்வு எம்மை நாடி வந்த நிலையில் எல்லாம் அதனை மழுங்கடிக்க எதிரியும் நாம் நண்பன் என நினைத்தவனும் எமக்கு இழைத்த வரலாற்று சதிகளை எல்லோரும் நன்கறிவர் அதற்கு நீங்களும் விதிவிலக்கல்லர்.
இவ்வாறாக இவ்வளவு எதிர் வினை தெரிந்தும் சந்திப்பு இடம் பெறுமாக இருந்தால் அன்றய நாள் கிழக்கில் கூட்டமைப்பின் அஸ்தமனத்தின் ஆரம்ப நாள் என்பதை கூட்டமைப்பு தலைமைகள் கிழக்கின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மனதில் இருத்துவது இன்றய காலத்தின் கருத்தாகும்.
மக்கள் கூட்டம் மாணவர் சமூகத்தின் முன்னால் கட்சிகள் எல்லாம் இரண்டாம் நிலை என்பதை சகலரும் நன்கறிவர்.

பழைய மாணவர்கள் கிழக்குப் பல்கலைக் கழகம்.

26 ஜனவரி 2012

களவெடுக்க பதுங்கிய சிப்பாயை மடக்கிப் பிடித்தனர் பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் வைமன் வீதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தார் இராணுவச் சிப்பாய் ஒருவர். அவரை மடக்கி பிடித்தனர் பொதுமக்கள். பின்னர் அவர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.
தகவல் அறிந்து பொலிஸ் நிலையத்துக்கு விரைந்தனர் விசேட பாதுகாப்பு படையினர். அவரைத் தாங்கள் விசாரிப்பதாக கூறி அழைத்துச் சென்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மாலை 6 மணியளவில் குறித்த நபர் சிவில் உடையில் வைமன் வீதியிலுள்ள வீட்டில் புகுந்து பதுங்கிக் கொண்டார்.பின்னர் அந்த வீட்டின் கதவினூடாக அடிக்கடி வீட்டினுள்ளே எட்டிப் பார்த்தபடி இருந்துள்ளார்.நேரம் செல்ல வீட்டின் கதவு மூடப்பட்டு விட்டது. வீட்டுக்காரர் இரவாகி விட்டதால் வெளியே வரவில்லை.
இந்த நபரின் நடவடிக்கையை அவதானித்த அயல் வீட்டுக்காரர் அவரைத் தொடர்ந்து நோட்டமிட்டார். அவர் திருட்டு முயற்சிக்காக காத்திருக்கிறார் என்பது தெரியவரவே அவரை மடக்க அண்மித்த போது அந்த நபர் வீதி வழியே தலை தெறிக்க ஓடினார். இது குறித்து அப்பகுதி இளைஞர்களுக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டிருந்தது. அதை அடுத்து அவர்கள் வீதிகளைச் சுற்றி வளைத்தனர்.சிக்கிக் கொண்டார் அந்த நபர். அப்போது அந்த நபர் தான் இராணுவச் சிப்பாய் என்று கூறி மன்றாடிக் கொண்டார்.
இதுபற்றி யாழ் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சிவில் உடையில் நின்ற சிப்பாயை கைது செய்த கூட்டிச்சென்றனர். இதுபற்றி அறிந்த விசேட பாதுகாப்பு படையினர் அவரைத் தாம் விசாரிப்பதாக கூறி அழைத்துச் சென்றனர்.

தனங்கிளப்பு பகுதியில் காணாமல்போன யுவதி எலும்புக்கூடாக மீட்பு!

தென்மராட்சியின் மறவன்புலோ- தனங்களப்பு பகுதியில் கடந்த நவம்பர் மாதமளவில் காணாமல் போயிருந்த யுவதியொருவர் இரண்டு மாதங்களின் பின்னர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். 28 வயதுடைய சுபபிரமணியம் அற்புதமலர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் நவம்பர் 13ம் திகதியளவில் இவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற வேளை காணாமல் போயிருந்ததாக குடும்பத்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக்காணாமல் போதல் தொடர்பில் அவர்கள் பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட அறுகுவெளி - கேரதீவு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் கைவிடப்பட்ட இராணுவ மண் அணை ஒன்றினை அண்மித்த பகுதியில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு கூட்டுத்தொகுதிகளை இன்று காலை கண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சாவகச்சேரி நீதிவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவ்வேளையிலேயே காணாமல் போயிருந்த யுவதி கடைசியாக அணிந்திருந்த ஆடைகளை வைத்து குடும்பத்தவர்கள் சடலத்தை அடையாளங்காட்டியுள்ளனர்.
மீடக்கப்பட்ட சடலம் நீதிபதியின் உத்தரவு பிரகாரம் யாழ்.போதனாவைத்தயசாலையின் பிரேத அறையில் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதி மிக அண்மைக்காலப்பகுதியிலேயே அமைச்சர்களான பஸில் ராஜபக்ஸ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் பொதுமக்களது பாவனைக்கென சுமார் 16 வருடங்களின் பின்னர் திறந்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்த பகுதியாகவே அப்பகுதிகள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

25 ஜனவரி 2012

பெற்ற பிள்ளையை வீட்டின் பின்புறம் குழிதோண்டிப் புதைத்த தாய்!

பெற்ற குழந்தையை வீட்டின் பின்புறமாக புதைத்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி கண்ணகை புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் அதிகாலை குறித்த பெண் தான் பெற்றெடுத்த பெண் குழந்தையை கொலை செய்து வீட்டின் பின்புறமாக குழி தோண்டிப் புதைத்துள்ளார். சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் கிராம சேவகருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் கண்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதை அடுத்து சிசுவின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் குறித்த பெண்ணையும் கைது செய்ய உத்தரவிட்டார். சம்பவ இடத்து விசாரணைகளின் போது தனக்கு 41 வயது எனவும் நான்கு பிள்ளைகளுடன் இருப்பதாகவும் கணவருக்கு 61 வயது எனவும் குறிப்பிட்டார். தனக்கு போருக்கு முன்னரும் இறந்த நிலையில் குழந்தை பிறந்தபோது வீட்டின் பின் புறத்திலே அடக்கம் செய்ததாகவும் தெரிவித்தார்.

பிள்ளையானை சந்திக்கப் போகிறாராம் சம்பந்தர்!

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், பிள்ளையானுக்கும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இன்னும் சில தினங்களில் இடம்பெற உள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் முதல்வர் சி. சந்திரகாந்தன் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுக்கு எழுதிய கடிதத்தினை அடுத்தே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கமைய சந்திப்புக்கான திகதி உட்பட சில முக்கிய விடயங்கள் உள்ளடங்கிய பதில் கடிதம் ஒன்றை சம்பந்தன், முதல்வர் சந்திர காந்தனுக்கு அனுப்பி வைப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக முதல்வர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதன் காரணமாகவே அவர் விடுத்த அழைப்பை கூட்டமைப்பின் தலைமைப் பீடம் சாதகமாக பரிசீலித்துள்ளது எனத் தெரிய வருகிறது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதல்வர் எழுதிய கடிதத்தில் 'மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பாக நானும் எனது தலைமையிலான கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனையே உள்ளோம்.
வடக்கு கிழக்கு இணைப்பின் சாத்தியப்பாடு குறித்தும் அதில் கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகள் பற்றியும் தங்களுடன் விரிவாக கலந்துரையாட நாம் தயாரக உள்ளோம். எனவே இந்த விடயங்கள் உட்பட முக்கிய சில விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு இக் கடிதம் கிடைக்கப்பெற்று 15 நாட்களுக்குள் தங்களிடமிருந்து ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்த்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிள்ளையானை கூட்டமைப்பு சந்திக்கக் கூடாதென கிழக்கு மாகாணத்தில் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.அதையும் மீறி கூட்டமைப்பினர் பிள்ளையானை சந்தித்தால் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை எதிர்நோக்க நேரிடலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

24 ஜனவரி 2012

அப்துல் கலாமை வரவேற்றது யாழ்ப்பாணம்.

யாழ்,பல்கலை மாணவர்களின் அமோக வரேவேற்புடன் கைலாசபதி கலையரங்கிற்கு அழைத்து வரப்பட்டார் கலாம். இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான அப்துல் கலாம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்ததுடன் “புயலைத் தாண்டினால் தென்றல்” என்ற தலைப்பில் விசேட உரையினையும் நிகழ்த்தினார்.
கலாம் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் யாழ். பல்கலைக்கழகம் சார்பில் துணைவேந்தரால் நினைவுச் சின்னமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரெட்ணம், இந்திய உயர்ஸ்தானிகர் அசோகா கே.காந்தா, யாழ். இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம், அமைச்சர் திஸ்ஸ விதாரன, ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 21ம் நூற்றாண்டின் அறிவியலின் வருகை என அப்துல் கலாமின் வருகை எடுத்துக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

23 ஜனவரி 2012

ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பில் ஜெனீவாவில் ஆலோசனை.

அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கும் வகையிலான இராஜதந்திர நகர்வுகள் ஜெனிவாவில் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக, கடந்தவாரம் ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதில் பங்கேற்ற, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர் அனைத்துலக விசாரணையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் மற்று்ம் அனைத்துலக மன்னிப்புச்சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு வழங்குவோர் மத்தியில் இவர் உரையாற்றியுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மற்றும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரை அனைத்துலக சமூகத்தின் ஒருபகுதி அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
வரப்போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்களில் சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது குறித்தே இந்த வட்டமேசைக் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் சம்பெர்லெய்ன், கனேடிய நிரந்தரப் பிரதிநிதி எலிசா கொல்பேர்க், பிரித்தானிய நிரந்தரப் பிரதிநிதி பீற்றர் கொடஹாம், நோர்வேஜிய நிரந்தரப் பிரதிநிதி ஸ்டீபன் கொங்ஸ்ராட், பிரான்ஸ் நிரந்தரப் பிரதிநிதி ஜீன்-பப்ஸ்ரி மத்தி, ஜேர்மனின் நிரந்தரப் பிரதிநிதி ஹான்ஸ் சூமேச்சர், அவுஸ்ரேலிய நிரந்தரப் பிரதிநிதி பீற்றர் வூல்கொட், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தரப் பிரதிநிதி மேரிஅஞ்சலா சப்பியா, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் செயலகப் பிரதிநிதி றொரி மொங்ரோவன், அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதி பீற்றர் ஸ்பிலின்ரர், ஆசிய அமைப்பின் பிரதிநிதி பூஜா பட்டேல், மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி பிலிப்பி டாம், அனைத்துலக நீதியாளர் ஆணைக்குழுவின் பிரதிநிதி அலெக்ஸ் கொன்டே, அனைத்துலக வேல்ட் விசன் பிரதிநிதி பெரிஸ் கைன் ஆகியோர் இந்த வட்டமேசைக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்துக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

22 ஜனவரி 2012

கூட்டமைப்புடனான சந்திப்பை தடுக்க கிருஷ்ணாவை மாட்டுப்பொங்கலுக்கு அழைத்தார் மகிந்தா!

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை முதலில் சந்திப்பதைத் தடுக்கவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகைப் பொங்கல் விழா நிகழ்ச்சி நிரலுக்குள் அவரைச் ‘சிக்க‘ வைத்ததாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 16ம் நாள் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவே திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவர் அலரி மாளிகையில் நடைபெற்ற பொங்கல்விழாவில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதால், அதன்பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திக்க முடிந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முதலில் சந்திப்பதை தடுக்கவே அலரி மாளிகைப் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காகவே, தைப்பொங்கலை இம்முறை அலரி மாளிகையில் ஒரு நாள் பிந்தி -16ம் நாள் கொண்டாடுவதற்கு தெரிவு செய்திருந்தார் சிறிலங்கா அதிபர்.
தைப்பொங்கல் கடந்த 15ம் நாள் கொண்டாடப்பட்ட போதும், மறுநாள் தான் அலரி மாளிகையில் கொண்டாடப்பட்டது.
உலகெங்கும் உள்ள தமிழர்கள் அன்றைய நாளை மாட்டுப் பொங்கலாகவே கொண்டாடுவர். அதுவும் மாலையிலேயே மாடுகளுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா 16ம் நாள்- மாட்டுப்பொங்கல் நாளன்று- பிற்பகலில் கொழும்பு வருவதாலேயே அன்று அலரி மாளிகையில் பொங்கல் விழாவைக் கொண்டாட முடிவு செய்திருந்தார் மகிந்த ராஜபக்ச.
ஆனால் அதுபற்றி எஸ்.எம்.கிருஸ்ணா அறிந்திருக்கவில்லை. அவர் முதலாவது சந்திப்பை தாஜ் சமுத்ரா விடுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மேற்கொள்ளவே திட்டமிட்டிருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் தான் அலரி மாளிகைப் பொங்கல் விழா ஏற்பாடு குறித்து கிருஸ்ணாவிடம் தகவல் தெரிவித்த சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் பீரிஸ் அதில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இந்திய விமானப்படை ஜெட் விமானத்தில் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய எஸ்.எம்.கிருஸ்ணா உடனடியாக சிறிலங்கா விமானப்படை உலஞங்குவானூர்தியில் தாஜ் சமுத்ரா விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா அவரை அலரி மாளிகைப் பொங்கல் விழாவுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எவரையும் காணவில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்கள் தான் அதிகம் இருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறிலங்கா அதிபரின் பொங்கல் விழா அழைப்புக் கூட அனுப்பப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவின் கண்களில் முதலில் பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, சிறிலங்கா அதிபர் அலரி மாளிகையில் மாட்டுப்பொங்கல் நடத்தியதாக கொழும்பு ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன.

ஊர்காவற்றுறையில் போராளிகளை பயன்படுத்தி நண்டு வளர்ப்பு!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும், இராணுவத்தினரும் இணைந்து யாழ். தீவகப் பகுதியில் நண்டு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் முன்மொழிவின்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியின் உத்தரவின்படி 3 மாதங்களுக்கு முன்னர் ஊர்காவற்றுறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் நன்னீர் நண்டு வளர்ப்புக்கான சிறிய குளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் 1.6 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ், ஒவ்வொன்றும் தலா 50, 40 அடி அளவுள்ள 16 நண்டு வளர்ப்புத் தடாகங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.
இராணுவத்தினரின் 17வது பட்டாலியன் தளபதி லெப்ரினன்ட் கேணல் பிறேமவன்சவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. எதிர்காலத்தில் இதனோடு தொடர்புடைய நண்டு பதனிடல், சந்தைப்படுத்தல் தொழில்வாய்ப்புக்களும் கிடைக்கும் என்று இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 ஜனவரி 2012

சென்னையிலிருந்து கொழும்பு வரவிருந்த பெண் காணாமல் போயுள்ளார்!

சென்னையிலிருந்து விமானத்தில் கொழும்பு நோக்கி வரவிருந்த பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதான தானுஷா என்ற பெண்ணே இவ்வாறு விமான நிலையத்தில் காணாமல் போயுள்ளார்.
இவர் சுங்க, குடியுரிமை பிரிவுகளின் சோதனைகளை நிறைவு செய்துகொண்டு விமானத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தார்...
ஆனால் விமானம் புறப்பட இருந்த நேரத்தில் அவர் காணாமல் யோயுள்ளார். இதனால் 15 நிமிட தாமதத்திற்கு பின் குறித்த விமானம் புறப்பட்டுள்ளது.
விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, விமானம் புறப்பட்டு செல்லும் முன் ஒரு பெண் தனது போர்டிங் பாஸ் மற்றும் அனுமதி சீட்டுகளை தந்துவிட்டு வெளியே சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.
போர்டிங் பாஸ் பெற்றபின் ஒரு பயணி வெளியே செல்ல அனுமதி கிடையாது என்பதனால் இவரை வெளியே செல்ல அனுமதித்த மத்திய தொழிற்படையினரிடம் அதிகாரிகள் விசாரித்துள்ளனர்..
அத்துடன், அந்த பெண் கொண்டு வந்த பயணப்பையில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகம் நிலவியது, இதையடுத்து வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வந்து பயணப்பையை சோதனையிட்டபோது அதில் எதுவும் இல்லை என தெரியவந்தது.
இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலையம் வந்த தானுஷா கடத்தப்பட்டாரா? இல்லை யாருடனாவது சென்றுவிட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடபகுதி மாணவர்கள் கடின முயற்சி உடையவர்கள் என்பது இவருக்கு இப்போதுதான் புரிந்ததோ?

தென்பகுதி மாணவர்களை விட வடபகுதி மாணவர்கள் கடினமான முயற்சி உடையவர்கள். காலை வேளைகளிலேயே தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படித்து முன்னேறும் மாணவர்களை நான் வடபகுதியில் தான் பார்க்கின்றேன். இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட மட்டத்தில் க.பொ.த. உயர்தரத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்ட நான்கு துறைகளைச் சேர்ந்த மாணவர்களைப் பாராட்டும் வைபவம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் நேற்று மாலை இடம் பெற்றது. இதன் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கல்விதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. அதுதான் சமுதாயத்தை வடிவமைக்கிறது. வடபகுதி மாணவர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர நிலையில் வைத்தே கல்வி போதிக்கப்படுவதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம், தேசிய ரீதியில் யாழ்.மாவட்ட மாணவன் முதலிடம் பெற்றதன் மூலம் முறியடிக்கப்பட் டுள்ளது.
இந்த மாணவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் அவர்கள் செய்த தியாகங்கள் என்பன பாராட்டப்பட வேண்டும். தென்பகுதி மாணவர்களை விட வடபகுதி மாணவர்கள் கடின முயற்சி உடையவர்கள்.
காலை வேளையில் தனியார் கல்வி நிலையங்களுக்கு மாணவர்கள் செல்வதை இங்குதான் பார்க்கின்றேன். இனி வருகின்ற மாணவர் சமுதாயத்துக்கு தேசிய மட்ட சாதனை புரிந்த இந்த மாணவர்களின் செயற்பாடுகள் முன் மாதிரியனவையாக இருக்கும்.
கல்வி நீண்ட பயணம். நீங்கள் பல்கலைக்கழகத்திலும் சரியான திசையில் பயணிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

20 ஜனவரி 2012

வீரராஜ்,குகன் ஆகியோரை கடத்தியது கத்துரு சிங்கதான் என சரத்பொன்சேகா தெரிவிப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான மற்றுமொரு ஹைகோப் வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 28 ஆம் திகதி வழங்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு முன்னர் முப்பது மாத சிறை தண்டனை விதித்துள்ளதால் ஹைகோப் வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சட்ட அதிகாரம் இல்லை என சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில் குறிப்பிட்ட, வழக்கை நடத்திச் செல்வதா என ஜனவரி 20ம் திகதி (இன்று) தீர்மானிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ் முன்பு அறிவித்திருந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு மீண்டும் அடுத்த மாதம் 28 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பயங்கராவாத இயக்கம் ஒன்றின் தலைவரிடமிருந்து ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாவை பெற்று வந்தார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் வீரராஜ், குகன் ஆகியோரைக் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்தியவரும் மஹிந்த ஹத்துருசிங்கவே எனவும் அவர் கூறியுள்ளார்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?மனோ கேள்வி.

ஜனாதிபதி பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் போவார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா சொல்லிவிட்டு போய் விட்டார். ஆனால் அவர் நாட்டில் இருந்த அன்றே அரசு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்தாமல் புறக்கணித்தது.இதைவிட பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் என்றால் செனட் சபை என்பதுதான் அர்த்தம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல புதிய கதை சொல்கிறார்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து கண்ணன் வந்து கதை சொன்னான் என தமிழ் மகா ஜனங்கள் பேச தொடங்கிவிட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் செல்ல அரசாங்கம் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சரின் சொல்லிய செய்தி தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மார்ச் மாதம் மனித உரிமை ஆணைய கூட்டத்திற்கு முன்னர் பாராளுமன்ற தேர்வு குழுவிற்குள் கூட்டமைப்பை கொண்டு நிறுத்துவதற்கு முஸ்தீபு நடைபெறுகிறது. பதின்மூன்றாம் திருத்ததிற்கு அப்பால் மற்றும் செனட் சபை ஆகிய கதைகள் எல்லாம் இதை நோக்கியே நகர்கின்றன. இது தமிழ் மக்களுக்கு நன்கு புரிகிறது. மக்களுடன் வாழும் எங்களுக்கும் மக்களின் நாடித்துடிப்பு புரிகிறது.
பதின்மூன்றாம் திருத்தததையே அமுல் செய்ய முடியாதவர்கள் அதற்கு அப்பால் எப்படி போக முடியும் என யாராவது இந்திய வெளிவிவகார அமைச்சரை கேட்டார்களா என தெரியவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவான் என்பதாக இந்தியாவின் கருத்து அமைந்துள்ளது.
பதின்மூன்றாம் திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. ஆனால் அதையோ அல்லது அப்பாலோ அரசாங்கம் செல்லும் என்றால் அதை யாரும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. ஆனால் நம்ப முடியாத வாக்குறுதிகளை கேட்டுவைப்பதில் எந்த ஒரு நன்மையையும் கிடைக்க போவதில்லை.
அரசாங்கம் பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் செல்லும் என்ற செய்தியை கூட்டமைப்பை சார்ந்த ஒரு எம்பி வரவேற்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். இது அக்கட்சியின் அதிகார பூர்வமான நிலைப்பாடா என எமக்கு விளங்கவில்லை.
எது எப்படி இருந்தாலும் இத்தகைய நம்ப முடியாத அறிவிப்புகளை நம்பி அவசர அவசரமாக விழுந்தடித்துகொண்டு மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாட்டம் நடத்த நாம் தயார் இல்லை.

19 ஜனவரி 2012

இணையங்களுக்கான விதிமுறை எனும் பெயரில் ஸ்ரீலங்கா பிறப்பித்திருக்கும் தடையுத்தரவு!

சிறிலங்கா அரசின் உத்தரவுக்கமைய பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் தகவல் ஊடகத்துறை அமைச்சு 27 இணையத்தளங்களுக்கு மாத்திரமே செயற்படுவதற்கான அனுமதிப்பத்திரத்தை இதுவரையில் வழங்கியுள்ளது.
செய்திகளை வெளியிடும் இந்த இணையத்தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து நேற்று அறிவித்துள்ள தகவல் ஊடகத்துறை அமைச்சு, இதற்கமைய இணையதளங்கள் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இணையத்தளங்களுக்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் முக்கியமானவை சில.
* இணையத்தளங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களும், ஊடகவியலாளர்களும் தாங்கள் வெளியிடும் செய்தி தகவல்கள் நூற்றுக்கு நுறு வீதம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ளும் படம் மாற்றி வடிவமைக்கப்படலாகாது.
* இணையத்தளத்தின் ஆசிரியர் ஒரு தவறான செய்தியை வெளியிட்டோம் என்று தெரிந்து கொண்டால் அதை திருத்தி மீண்டும் செய்தியில் சேர்த்துக் கொண்டு இதனால் பாதிக்கப்பட்டவ ரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.
* ஒரு செய்தி செய்தி தொடர்பாக இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இணையத்தளத் திற்கு தெரிவிப்பதற்கு நியாயபூர்வமான சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும். ஒருவரின் மதிப்பிற்கும், உணர்விற்கும், இரகசியத்தன்மைக்கும் ஏற்புடைய வகையில் இணையத்தளங்கள் நடந்து கொள்ள வேண்டும்.
* சமூகப் பிரச்சினைகளை பொறுத்தவரை வன்முறைகள், கலவரங்கள், போதைப்பொருள் பாவனை, சித்திரவதை, மற்றவர்களை வேதனைப்படுத்தி இன்பம் காணுதல், பாலியல் ரீதியிலான தரக்குறைவான படங்களையும் தகவல்களை வெளியிடாமல் இணையத்தளங்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.
* குற்றச்செயல்கள், பாலியல் ரீதியிலான குற்றச்செயல்கள், சிறுவயதினர் மீதான குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் சுமத்தப்படும் வழக்குகள் ஆகியவற்றை பொறுத்தவரை சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை- குறிப்பாக 16 வயதிற்குட்பட்டவர்களின் பெயர்களை தவிர்க்க வேண்டும்.
* ஒருவரின் இன,சாதி, மத, பால்நிலை அல்லது அவரின் வலதுகுறைவு தன்மை, மனோநிலை பாதிப்பு போன்றவற்றை இணையத்தளத்தில் அறிவிப்பதும் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
* தற்கொலை சம்பவங்கள் பற்றி அறிவிக்கும் போது ஒருவர் எவ்விதம் தற்கொலை செய்து கொண்டார் போன்ற சம்பவங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், அவரது இல்லம், அவரது உடல்நிலை பற்றிய செய்திகளை வெளியிடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* சிறுவயதினர் தங்கள் பாடசாலை காலத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கு அநாவசியமான இடையூறுகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தடை செய்த இணையத்தளங்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட இணையத்தளங்கள், தரங்குறைந்த பாலியல் உணர்வைத்தூண்டும் படங்களை பிரசுரிக்கும் இணையத்தளங்களுடன் எவ்வித தொடர்பும் இருக்கலாகாது.

பாராளுமன்றில் "கொலைவெறி"பாடினார் அஸ்வர்.

தமிழகத்திலிருந்து வெளிவந்துள்ள "வைதிஸ் கொலைவெறி" பாடலுக்குப் பதிலளிக்கும் வகையில் யாழ் இளைஞன் ஒருவர் கொலைவெறி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், மு. கருணாநிதிக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என ஏ. எச். எம். அஸ்வர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொலைவெறி" கொலைவெறி"- கொலைவெறி என ஆரம்பித்த அஸ்வர் எம்.பி. எமது நாட்டில் "நோ. கொலைவெறி" "நோ- கொலைவெறி" எனக் கூறினார். ஊழியர் சேமலாபநிதியச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஜே.வி.பி.யினர் கொலை வெறி, கொலைவெறி. கொலை வெறி என அப்பாவி இளைஞர்களையும் இணைத்துக்கொண்டு கொன்று குவித்தார்கள். இன்று மீண்டும் முன்னாள் புலி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு கொலைவெறியை ஆரம்பிக்க முற்படுவதாகத் தெரிகிறது. உண்மையில் அவர்கள் தான் கொலைவெறி - கொலைவெறி - கொலைவெறி உடையவர்கள் என்றார் அஸ்வர் . எமது நாட்டில் கொலைவெறி கிடையாது. "நோ கொலைவெறி" "நோ - கொலைவெறி" என்றார். எதிர்த்தரப்பில் ஜே.வி.பி. சுனில் ஹந்துன்நெத்தியும் கொலைவெறி, கொலைவெறி, கொலைவெறி என கோஷமிட்டார்.

18 ஜனவரி 2012

வீடுகளில் உடனடியாக குடியேறுமாறு வேலணை பிரதேச செயலர் கோரிக்கை.

வசதியும் உழைப்பும் மிக்க மக்களைக் கொண்ட கிராமமாக இப்பகுதியைக் கட்டியெழுப்ப நீங்கள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும் என வேலணை பிரதேச செயலர் மு.நந்தகோபாலன் தெரிவித்தார்.
மண்டைதீவு கடற்படையினர் தாம் தங்கியிருந்த வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் மண்டைதீவு பேதுருவானவர் தேவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்து பேசியபோதே நந்தகோபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்,
“கடந்த இருபத்தொரு வருடங்களின் பின் நீங்கள் உங்களது சொந்த வீட்டில் குடியிருக்கப் போகின்றீர்கள். இந்த வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும்போது வீட்டின் சொந்தக்காரர்களிடம் அதனைக் கையளிக்கவேண்டும்.
நீங்கள் உடனடியாகவே குடியேறினால் உங்களது வீடுகளில் உள்ள பொருள்கள் கதவு, ஜன்னல் போன்றவற்றைப் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். அடிப்படை வசதிகள் உடன் நிறைவேற்றப்படவேண்டும் என்ற உங்களது கோரிக்கைகளை வடமாகாண ஆளுநரும் நிறைவேற்றித் தருவதாகக் கூறியுள்ளார். நீங்கள் உங்கள் வீடுகளில் குடியமர்வதன் மூலம் இப்பகுதி துரித வளர்ச்சி அடையும்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு படைகள் வெளியேற வேண்டும்!

கீரிமலை சேந்தாங்குளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீதும், பிரதேச சபைத் தலைவர் மீதும் சிறீலங்கா கடற்படையினர் நடாத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கடந்த இரு தசாப்தங்களாக அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தமிழர் தயாகத்தின் தொன்மைக்குரிய பகுதிகளில் ஒன்றான சேந்தான்குளம் பகுதியில், அந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் அண்மையில் மீள குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு மீளகுடியமர்ந்த மக்கள் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, கடற்படையினரின் முன் அனுமதிபெற்று சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்குவந்த கடற்படையினர் எந்தவித கேள்விகளும் இன்றி பொதுமக்கள் மீது மிகக்கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, இந்த சம்பவத்தை கேள்வியுற்று சம்பவ இடத்துக்கு விரைந்த வலிவடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தான் ஒரு பிரதேச சபைத் தவிசாளர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை காண்பித்த பிறகும் அவர்மீதான தாக்குதலை கடற்படையினர் தொடர்ந்துள்ளனர். அத்துடன், சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு உந்துருளிகளை சேதப்படுத்திய கடற்படையினர் தம்வசம் எடுத்துச் சென்றுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம், மிலேச்சத்தனமான இத் தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வரை, தமிழர்கள் நிம்மதியாகவோ, இயல்பு நிலையுடனோ வாழ முடியாது என்பதையே இந்தச் சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றன.
எனவே தமிழ் மக்களின் இயல்பு வாழ்கைக்கு குந்தகமான முறையில் நிலைகொண்டுள்ள ஆயதப்படையினர் வெளியேற வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றோம்.

நன்றி
செ.கஜேந்திரன்
பொது செயலாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

17 ஜனவரி 2012

வறுமை காரணமாக இளம் தம்பதி தற்கொலை!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கணுக்கேணி, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களான கணவனும் மனைவியும் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்ட பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு வேளையில் இவ்விருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய சண்முகன் நிறஞ்சன் மற்றும் அவருடைய மனைவியான நிறஞ்சன் சங்கீதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குடும்ப வறுமை நிலை காரணமாக இவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளை தீய வழியில் இட்டுச்செல்ல முயற்சி என்கிறார் கோத்தபாய.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்குப் பயங்கரவாதத்தைப் போதித்து மீண்டும் நாட்டில் அசாதாரண சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிக்குழு முயற்சிப்பதாக பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கள இணைய தளமொன்றுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கருத்து வெளியிடுகையில் :
கிளிநொச்சியை வதிவிடமாகக் கொண்ட முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குள் பலவந்தமாகச் சென்று அவர்களுக்கு உபதேசம் வழங்க மக்கள் விடுதலை முன்னணியின் மாற்றுக்குழு முயற்சித்துள்ளது.
புலனாய்வுப் பிரிவினரின் தலையீட்டுடன் இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது. யுத்தம் காரணமாக நாட்டு மக்கள் 30 வருடங்களாகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர்.
எனவே, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு ஒரு போதும் தாம் இடமளிக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு தாம் தயாராகவே உள்ளதாகவும், இவ்வாறானதொரு குழு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு நாட்டில் அசாதாரண நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிப்பது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாகக் கவனம்செலுத்தி வருகின்றனர் என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

16 ஜனவரி 2012

ஈரான் மீதான தடை ஸ்ரீலங்காவிற்கும் அமெரிக்கா எச்சரிக்கை!

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பாக சிறிலங்கா அரசுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரானுடன் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் சிறிலங்காவுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
ஈரான் மீதான தடைகளை மீறி சிறிலங்கா செயற்படக் கூடாது என்று எச்சரிக்கை செய்யும் வகையிலேயே இந்தக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாளொன்றுக்கு 40 ஆயிரம் பீப்பாய் மசகு எண்ணெயை ஈரானில் இருந்து இறக்குமதி செய்து சிறிலங்கா சுத்திகரித்து வருகிறது.
அத்துடன் ஈரானுடன் நெருக்கமான இராஜதந்திர மற்றும் வர்த்தகத் தொடர்புகளையும் சிறிலங்கா அரசாங்கம் பேணிவருகிறது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அமெரிக்காவிடம் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அண்மையில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது என்பதை சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு ஆறு மாதங்கள் தேவைப்படும் என்று அமெரிக்காவுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, சிறிலங்காவுக்கு தனியான குறிப்பு ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரான் மீதன அமெரிக்காவின் தடைகளை அடுத்து. நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம் மசகு எண்ணெயை கட்டார் ,ஓமான் போன்ற நாடுகளிடம் இருந்த பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இது குறித்துப் பேச, ஓமானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் இந்தமாத இறுதியில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை த.தே.கூட்டமைப்பு நிராகரித்தது.

சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பாக அணைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் நேற்று 100 பக்கங்களில் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் முன்னுரையில்,
" இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீது, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்கள் மீது திட்டமிட்ட ரீதியிலே மேற்கொள்ளப்பட்டு வந்த சரீரக, அமைப்பு சார்ந்த மற்றும் உளவியல் வன்முறைகளை மீளவும் ஞாபகத்துக் கொண்டு வந்துள்ளது.
இந்த நாட்டின் அங்கங்களான மக்கள் மீது தண்டனை எதுவுமே வழங்கப்படாமல் தாராளமாயும் குறிப்பானதாயும் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளையும், இத்தகைய வன்முறைகளை நெறிப்படுத்தி, அனுசரணை வழங்கி அல்லது அதை திட்டமிட்டு மேற்கொள்வதில் இலங்கை அரசுக்கு உள்ள பங்கினையும் பற்றி ஆற்றொணாத் துயருற்றுள்ளோம்.
சுய ஆட்சி, மாண்பு மற்றும் முழுமையும் சமத்துவ மகிழ்வும் கொண்ட குடியுரிமை போன்ற தமிழர்களின் மறுக்க இயலாத உரிமைகள் பற்றிய கோரிக்கையானது இப்படியாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த தீர்வுகளற்ற வன்முறைகளால் வலிவூட்டம் பெற்றுள்ளது.
பல தசாப்த காலமாகத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்வற்று நெரித்து வந்த வன்முறைகளால்  கதிகலங்கிப் போன தமிழ் வாலிபர்கள் அரசுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறை எழுச்சிகள் இறுதியிலே பல்வேறு காரணங்களுக்காகக் குடியியல் யுத்தமாக முடிவுற்றமையை மனதிலே வரிந்து கொண்டுள்ளது.
இந்த நாட்டைப் பீடித்துள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நிலைநிற்கத்தக்கதும் நியாயமுமான தீர்வானது தமிழ் பேசும் மக்களின்,  குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் மீள் செப்பனிடப்பட்ட திட நம்பிக்கை மீது கட்டப்பெற்றதாய்,  இலங்கை அரசுடனான அந்த மக்களின் உறவினை மீள் சீர்பொருந்துவதாக அமைய வேண்டும்.
இந்த நாட்டின் கூறுகளாக அமையப்பெற்ற அனைத்து மக்களும் சமத்துவ அந்தஸ்தையும், அரசாட்சிக்கான அடைவு வழியையும், சந்தர்ப்பத்தையும், நீதிக்கும் மாண்புக்குமான அடைவு வழியையும் பெற்றடைவதைத் தரிசனமாகக் கொண்ட ஒரு எதிர்காலத்தை நோக்கியவர்களாய் உள்ளோம்.
2009 இன் இறுதி யுத்தக் கட்டங்களிலே இடம்பெற்ற அரச இராணுவத்தினர், விடுதலைப் புலிகள் மற்றும் குறிப்பாக தமிழ் குடிமக்கள் ஆகியோரின் வாழ்வுகளில் ஏற்பட்ட பெரும் இழப்பையிட்டுப் பெரும் துயருற்றவர்களாய் உள்ளோம்.
குடியியல் யுத்தக் காலத்திலே பிரசன்னமாகியிருந்த பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளால், இந்த நாட்டிற்குள்ளும் அதற்கு வெளியேயும் இருந்த இலங்கையின் குடிமக்களுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் ஏற்பட்ட துன்பங்கள் மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஆகியவைகள் பற்றிய கண்டனத்தையும் வெளியிட்டுள்ளோம்.
இலங்கை அரசின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது வன்னித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் குழுவானது இலங்கையின் கணக்கொப்புவிப்பு பற்றி வெளியிட்ட கண்டுபிடிப்புகளை மீள்வலியுறுத்தி நிரந்தரமான அரசியற்தீர்வை முன்வைக்கும் அரசின் மீது தமிழ்மக்களின் நம்பிக்கையினை மீள்சீரமைப்பதற்கு, படுமோசமான அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான கணக்கொப்புவிப்பானது நேர்மையான நல்லிணக்கத்துக்கான செயன்முறைக்கு அவசியமான ஒரு முன்நிபந்தனையாகும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, உண்மையை வலியுறுத்துவதை நோக்காக் கொண்டு நெறிப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நடப்பித்து,  அவர்களுக்குப் போதுமான இழப்பீட்டை வழங்குவது நேர்மையான நல்லிணக்கத்துக்கான நடைமுறையாகும்.
யுத்த குற்றங்களையும் இதர மனித உரிமைகள் மீறல்களையும் கொல்லப்படுமளவுக்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றிய சகல கணக்கொப்பு விடயங்களையும் பற்றி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது கவனத்திற்கொள்ளும் என இலங்கை அரசானது உலகுக்கு வழங்கி வந்த உறுதியை மீளவும் ஞாபகத்துக் கொண்டு வந்துள்ளது.
மோசமான சர்வதேச குற்றங்கள் தொடர்பாக அரசுகள் கருத்திற்கொள்ள இயலாதிருக்கும் பட்சத்திலே பிரயோகிக்கப்படக் கூடிய குறைநிரப்புக் கொள்கை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவான தீர்வுகள் ஆகியவைகள் பற்றி அறிந்துள்ளோம்.
யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போது இடம்பெற்ற துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் திட நம்பிக்கையை மீளவும் பெற்றிருக்கக் கூடியதான போதியதும் நம்பகத்தன்மை கொண்டதுமான நல்லிணக்கத்தைக் கண்டடைவையும் அமைப்பியக்கம் ஒன்றை நிறுவுவதற்கு இலங்கை அரசு தவறிவிட்டுள்ளமை பற்றி மனக்கசப்படைந்தவர்களாய் உள்ளோம்.
கணக்கொப்புவிப்பு தொடர்பானதாக எதுவுமே இல்லாவிட்டாலுங் கூட,  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சில நேரிய பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை அங்கீகரித்து, அதன் பரிந்துரைகள் அனைத்தையும் திரட்டினாலுங் கூட, இலங்கையின் கணக்கொப்புவிப்பினை முன்னெடுப்பதிலே அவை குறைவுபட்டவை என்பதைக் குறிப்பிட்டு கூறுகின்றோம்.
அதன் பரிந்துரைகளை அமுல்படுத்தும் உளச்சுத்தியான முன்னெடுப்புகள் அனைத்துக்குமே எவ்வித பாரபட்சமுமின்றி ஆதரவு வழங்குவதாகத் தெரிவிக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது குறிப்பிட்ட காரணங்களின் நிமித்தமாகக் கொண்டுள்ள முடிவு யாதெனில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையானது பொறுப்புக்கூறும் முக்கிய விடயங்களைக் கவனத்திற் கொள்ளவில்லை.
அத்துடன் மோசமான யுத்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அதனுடன் தொடர்புபட்ட ஆயுதப் படையினர் மற்றும் குடியியற் பணியாளர் ஆகியோரை வேலியடைத்து பாதுகாக்கவே குறித்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறும்  விடயம் தொடர்பாக கருத்திற் கொள்வதற்கோ அல்லது அதனை அங்கீகரிப்பதற்கோ இலங்கை அரசு விரும்பில்லை என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக பகுப்பாய்வு செய்த பின்னர் டிசெம்பர் 16 தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் வெளியிட்ட ஆரம்பப் பதிலீட்டை மீள்வலியுறுத்தியே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது“ என்று கூறப்பட்டுள்ளது.

15 ஜனவரி 2012

இந்தியா கொடுத்த சைக்கிள்களை சுருட்ட முனைந்த ஈ.பி.டி.பி.

வன்னியில் நடந்த இறுதிப் போரால் பாதிக்கப்பட்ட பின்னர் குடாநாட்டில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட இருந்த சைக்கிள்களை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி தமது ஆதரவாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க எடுத்த முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது.யாழ். மாவட்டத்துக்கு 1,500 சைக்கிள்களை இந்தியா வழங்க இருந் தது. சைக்கிள்களைப் பெறும் பயனாளிகளின் பெயர்ப் பட்டியல்கள் பிரதேச செயலகங்கள் ஊடாகத் தயாரிக்கப்பட்டன. அவற்றை விநியோகிக்கும் பொறுப்பு அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்திடம் வழங்கப்பட்டிருந்தது.
பயனாளிகளின் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் அதனை மீளாய்வு செய்தது. பட்டியலில் இருந்த பெரும் பாலானவர்கள் பயனாளிகளுக்குரிய தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதை அது கண்டறிந்தது.
அது குறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அந்தப் பெயர்ப்பட்டியல் உடனடியாக நிறுத்தப்பட்டது. புதிய, திருத்திய, சரியான பட்டியலைத் தயாரிக்குமாறு பிரதேச செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இது குறித்து விசாரித்ததில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் பிரதேசக் கிளைகளால் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலே சமூக சேவைகள் அலுவலர்கள் மூலமாக முன்னர் பிரதேச செயலர்களுக்குத் தரப்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரியவந்தது.
இருப்பினும், பட்டியலில் ஏற்பட்ட தவறு குறித்து யாழ். செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதேச செயலர்கள் எதுவும் கூறவில்லை. சமூக சேவைகள் அலுவலர்கள் தந்த பட்டியலையே தாம் வழங்கினர் என்று குறிப்பிட்டனர். இந்தப் பதிலுக்காக அரச அதிபர் அவர்களைக் கடிந்து கொண்டார்.
அமைச்சர் டக்ளஸின் கட்சியினரால் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர்களில் பெரும்பாலானவை அவர்களது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் உறவினர்களுடையவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தமது உதவிகள் அமைச்சர் டக்ளஸ் சார்ந்தவர்களால் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற விடயம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கும் தெரிந்திருந்திருக்கிறது.
இதேவேளை, திருத்திய புதிய பட்டியலின் அடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சைக்கிள்களைப் பயனாளிகளிடம் கையளிப்பார். யாழ். மாவட்டத்துக்கு இந்தியா 2,000 சைக்கிள்களை ஒதுக்கி இருந்தபோதும் அவற்றில் 500 சைக்கிள்கள் ஏற்கனவே மணலாறு பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவதற்காக ஆளுநரால் ஒதுக்கப்பட்டுவிட்டது.

14 ஜனவரி 2012

ஆனந்தராஜாவை கைது செய்ய இன்டர்போலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொருளாதார செயற்பாட்டாளராக செயற்பட்டு வந்த குமரன் பத்மநாதனுக்கு நிதி வழங்கிய பிரதான நபர்களில் ஒருவரான ஆனந்தராஜா என்பவரை கைது செய்வதற்கு சர்வதேச காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு நேற்று இடம்பெற்ற போது அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, பிரதிவாதி இல்லாத பட்சத்தில் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதா என்பது தொடர்பில் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது...
விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவைச் சேர்ந்த குமரன் பத்மநாதன் அமெரிக்கா, கனடா, நோர்வே, மலேசியா உட்பட பல நாடுகளில் இயக்கத்திற்காக நிதி சேகரித்தார் என குற்றஞ்சாஞ்டப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திசாநாயக்கவின் உரையை கூச்சலிட்டு குழப்பிய யாழ்,பல்கலை மாணவர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் யாழ் பல்கலைக்கழத்தில் உள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறியபோது, முதல் வருட மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்தாக பல்கலைக்கழக மாணவர் உரிமை செயற்பாட்டாளரான உதுல் பிரேமரட்ன கூறினார்.
அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் என முத்திரைக்குத்த முற்படுவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் நாம் இலங்கையர் அமைப்பை நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான உதுல் பிரேமரட்ன கூறினார். ‘ஒருவரை எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர் என முத்திரைகுத்திவிட்டால் அவரின் உரிமைகளை அரசாங்கம் நசுக்குவது சுலபமாகும். அரசாங்கம் எம்மை பயங்கரவாதிகள் எனவும் விமர்சிக்கிறது’ என அவர் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் உதவியின்றி சிங்களத்தில் உரையாற்ற ஆரம்பித்தபோதும் மாணவர்கள் கூச்சலிட்டதாகவும் அதன்பின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அழைக்கப்பட்டதாகவும் உதுல் பிரேமரட்ன கூறினார்.

13 ஜனவரி 2012

நயினாதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை தாக்கினர் தென்னிலங்கை மீனவர்கள்!

நயினாதீவுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை அங்கு கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதன்னிலங்கை மீனவர்கள் தாக்குதல் நடாத்தி இரு இந்திய மீனவர்களை கைது செய்து கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ் தீவகம் நயினாதீவு கடல் எல்லைப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டடிருந்த ஒரு படகில் 4 பேர் அடங்கிய இந்திய மீனவர்களை, பிறி தொரு பகுதயில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டடிருந்த தென்இலங்கையை சேர்ந்த மீனவர்கள், இந்திய மீனவர்களை கடுமையாக தாக்கி விட்டு இரண்டு மீனவர்களை கைது செய்து நயினாதீவு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். இதன் போது ஒப்படைப்பதற்காக வந்த தென்இலங்கை மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களும் இரண்டு தென்இலங்கை மீனவர்களும் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் பொலிசாரால் முற்படுத்தப்படவுள்ளனர்.

சுழிபுரம்,தீவகப் பகுதிகளிலும் காணிகளை கோரும் படையினர்!

சுழிபுரம், திருவடிநிலை கடற்கரைப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலுள்ள தனியார் காணிகளைக் கடற்படைக்குத் தருமாறு கோரி வடபிராந்திய கடற்படைத் தலைமையகத்தால் சங்கானைப் பிரதேச செயலர் பிரிவுக்கு கடந்த மாதம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இருப்பினும் இதற்கான பதில் கடற்படையினருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை.
மேலும் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்குட்பட்ட பகுதியிலுள்ள மெலிஞ்சிமுனை பிரதேசத்தில் 5 ஏக்கர் அரச காணி படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் அந்தக் காணி நில அளவை செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவில், குடியிருப்பு பகுதியிலுள்ள கடற்படை முகாமை வேறிடத்துக்கு மாற்றம் செய்வதற்காக கடற்படையினர் மக்களின் தோட்டக்காணிகளை வழங்குமாறு கோரியுள்ளனர். காணி சுவீகரிப்பு செய்வதனால் அதற்குரிய வழிமுறையூடாக கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்று வேலணை பிரதேச செயலகத்தால் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.கிளர்ச்சிக்குழுவில் விடுதலையான தமிழ்ப் போராளிகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துசெயற்படுவதாக ஜே.வி.பி. கிளர்;ச்சிக்குழு ஒப்புக் கொண்டுள்ளது. வட மாகாணத்தில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில்முன்னாள் போராளிகள் இணைந்து கொண்டுள்ளதாக கிளர்ச்சிக்குழு உறுப்பினர் உந்துல் பிரேமரட்னதெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் சுமார் 900 அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 500 கைதிகளுடன் தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் புலிப் போராளிகள் தம்முடன் இணைந்து கொண்டுள்ளதனை மறுக்கவேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பிரிவினைவாத அமைப்புடனும் இணைந்து தாம் அரசியல்நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் தமிழர்கள் என்ற காரணத்தினால் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வகுப்புவாதம் தொடர்பான பிரச்சினைகளும் முக்கிய இடத்தை வகிப்பதாகத்தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டபோதிலும் வேறும் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலி உறுப்பினர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

12 ஜனவரி 2012

சவேந்திர சில்வாவை மன்னிப்புக் கோருமாறு உத்தரவாம்!

சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக உடனடியாக மன்னிப்புக் கோரும் படி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும் ஊடகத்துறை அமைச்சர் ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது விசாரிக்க சிறிலங்கா அதிபர் செயலகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகளைளுக்கு மகிந்த ராஜபக்ச நேற்று உத்தரவிட்டிருந்தார்.
எனினும், சந்துலவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஏற்கனவே மன்னிப்புக் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை இந்த விவகாரத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தமது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கூறியுள்ளதாகவும் ‘லங்கா நியூஸ்வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.

தேடப்படுவோர் பட்டியலில் இருந்த தமிழர் கனடாவில் கைது!

மிக அதிகமாக தேடப்பட்டு வருவோரில் 15ஆவது இடத்தை வகிப்பவரும் இலங்கையருமான தர்மபாஸ்கரன் செல்லத்தம்பி என்பவர், கனடா, ரொறன்ரோ நகர பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகள், நிறுவனமயப்பட்ட குற்றச்செயல்கள் ஆகியவற்றில் ஈடுபடுவோரைக் கொண்ட புதிய பட்டியலை கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் தோவ்ஸ் வெளியிடுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முனனரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபட்ட 15 பேர், அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு வழங்குவதாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவ்ஸ் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு கனடாவில் ஒளித்து வாழும் 42 சந்தேகநபர்களின் பெயர்களை அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி வெளியிட்டுள்ளார். இந்த 42பேரும் கனடா எல்லை சேவை முகவராண்மையால் தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

11 ஜனவரி 2012

யாழ்,பண்ணைப்பகுதி காணியையும் அபகரிக்க திட்டம்!

யாழ்.நகரின் பண்ணைப் பகுதியில் சுகாதாரத்திணைக்களத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பை பாதுகாப்பு அமைச்சுக்குப் பாரப்படுத்துமாறு காணி அமைச்சினால் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
யாழ்.நகரின் கரையோரப் பிரதேசமான பண்ணையில் சுகாதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியைப் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்குமாறு கோரி யாழ். பிரதேச செயலகத்துக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதற்குப் பிரதேச செயலகம் பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் அந்தக் காணி சுகாரதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தினால் குறித்த காணி அளவீடு செய்யப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சினால் காணி அமைச்சுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து காணி ஆணையாளர் நாயகம் யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்கு மேலும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
சுகாதாரத் திணைக்களத்துக்குச் சொந்தமான அந்த 2 ஏக்கர் காணியைப் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன அழிப்பு குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ!

இலங்கை அரசாங்கத்தின் மீதான இன அழிப்பு குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை எனவும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மரணங்கள், காயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை முகம்கொடுக்கும் தேசிய பாதுகாப்பு சவால்கள் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘எந்தவொரு சிவில் யுத்தத்திலும் பொதுமக்கள் இழப்புகள் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பொதுமக்களின் பூச்சிய இழப்புக் கொள்கையில் அரசாங்கம் தெளிவாக இருந்தது’ என அவர் கூறினார்.
‘இக்கொள்கையின் காரணமாக, யுத்தத்தின்போது பொதுமக்கள் இழப்பு குறைவாக இருந்தது. எந்த யுத்தத்திலும், குறிப்பாக மனிதக் கேடயங்களாக பொதுமக்கள் பயன்படுத்தப்படும்போது இழப்புகள் ஏற்படும். பொதுமக்கள் இழப்பை குறைப்பதும் மனித உயிர்களை பாதுகாப்பதும் யுத்தத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பிரதான நோக்கமாக இருந்தது’ என கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
பொதுமக்கள் உயிரிழப்புகள் தொடர்பாக பல்வேறு குழுக்களினால் தெரிவிக்கப்படும் எண்ணிக்கைகள் ஆதாரமற்றவை என அவர் கூறினார். சந்தேகம் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் இழப்பு தொடர்பாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு நாம் பிரிவொன்றை நியமித்தோம். அக்கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. அவர்கள் இறுதி அறிக்கையை தயாரிக்கிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும்’ என அவர் தெரிவித்தார்.
எனினும் இக்கணக்கெடுப்பில் இயற்கையாக இறந்தோர், தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டோர், எல்.ரி.ரி.ஈ.யினால் பலவந்தமாக படையில் சேர்க்கப்பட்டு கொல்லப்பட்டோர், புலிகளின் அங்கத்தவர்கள், விபத்துகளினால் இறந்தவர்கள், நாட்டைவிட்டு சட்டவிரோதமாக தப்பியோடியவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை. ஏனைய எண்ணிக்கைக்கு மாத்திரமே இராணுவம் பொறுப்பேற்க முடியும் என அவர் தெரிவித்தார்.

10 ஜனவரி 2012

புளியங்கூடலை சேர்ந்த ஒருவர் உட்பட 10 தியாகிகள் இன்று நினைவு கூரப்பட்டனர்!

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. யாழ். நகரில் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலையிட்டு அவர்களை நினைவு கூர்ந்ததுடன் அவர்களது ஆத்ம சாந்திக்காகவும் அஞ்சலி செலுத்தினர்.
1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சிறிலங்கா பொலிஸாரின் அராஜகத்தினால் படுகொலையாகிய புளியங்கூடலை சேர்ந்த தில்லைநாதன் உட்பட்ட 10 பேரையும் மனதில் நிறுத்தி இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிறீதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்,புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், யாழ். மவட்ட பிரதேச சபை தலைவர்கள் மற்றும் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
படுகொலை செய்யப்பட்டு 38வருடங்கள் கடந்தும் இன்றுவரை தமிழ் மக்களால் நினைவு கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த தியாகிகளுக்கு புளியங்கூடல்.கொம் தனது வீரவணக்கத்தை செலுத்திக்கொள்கிறது.

மேலும் 10,000 முத்திரைகள் பிரான்சில் வெளியிடப்பட்டுள்ளது!

தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் மற்றும் புலிகள் அமைப்பின் இலட்சினைகள் கொண்ட மேலும் 10,000 முத்திரைகளை பிரன்ஸின் "லா போஸ்ட்" வெளியிட்டுள்ளது. தலைவர் பிரபாகரனின் உருவம் மற்றும் தமிழீழ இலட்சினைகள் கொண்ட 11 வகையான முத்திரைகளை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளமை தெரிந்ததே.
முதல் கட்டமாக 360 முத்திரைகளையும் இரண்டாம் கட்டமாக 3,000 முத்திரைகளையும் தற்போது 10,000 முத்திரைகளையும் பிரன்ஸ் லா போஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விரும்பிய பெறுமதியில் விரும்பிய முத்திரைகளைத் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளும் வகையிலேயே அதிகளவில் முத்திரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் மேலும் முத்திரைகளை அச்சிடவும் இந்நிறுவனத் தயாராகவுள்ளது.

09 ஜனவரி 2012

நெடுந்தீவிலிருந்து வெளியிடங்களுக்கு செல்வோர் பொலிசில் பதியவேண்டுமாம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் நெடுந்தீவில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்பவர்கள் பொலிஸில் பதிவுகளை மேற்கொண்ட பின்னரே படகில் தங்கள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியும். சில காலமாக இல்லாமல் இருந்த இந்தப் பதிவு நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்திருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
பதிவு நடவடிக்கைகளால் பெரும் நேரவிரயம் ஏற்படுவதால் , நேற்று நெடுந்தீவில் இருந்து படகு தாமதமாகவே புறப்பட்டுள்ளது.இதனால் பலரும் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பஸ்ஸைத் தவற விட்டு பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மக்களை இடையூறுகளுக்குள் தள்ளும் இந்தப் பதிவு நடைமுறையைப் பொலிஸார் கைவிடவேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர்.

தமிழீழ முத்திரைகளை ஸ்ரீலங்கா ஏற்காதாம்.

தமிழீழம் தொடர்பான படங்கள், சின்னங்கள் கொண்ட கடிதங்கள் மற்றும் பொதிகளை கையாளும் போது, சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணித்துச் செயற்படுவதற்கு இலங்கை தபால் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் படங்கள், சின்னங்கள் கொண்ட முத்திரைகள் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளால் வெளியிட செய்யப்பட்டுள்ளன. சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதாவது, அங்கத்துவ நாடொன்றின் தபால் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்பப்படலாம்.
எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என பிரெஞ்சு தபால்துறைக்கு தான் கூறியுள்ளதாக இலங்கை தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்தார். இவ்வாறான சூழ்நிலையில் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகள் எப்படியிருந்த போதிலும், உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படி நாம் செயற்படுவோம்" என அவர் கூறினார்.
இம்முத்திரை வெளியீடு தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஏற்கெனவே பிரெஞ்சு தூதரகத்திடம் இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

08 ஜனவரி 2012

கிளிநொச்சியில் பரவிவரும் காச்சலால் இதுவரை ஏழு பேர் மரணம்!

ஒருவிதமான காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிப் பகுதியில் இதுவரைக்கும் 7 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அரைகுறை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அப் பகுதி மக்களுக்கு இக் காய்ச்சல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தில் மிக வேகமாக பரவி வரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை ஏழு பேர் மரணமாகியுள்ளனர். இப்புதுவித காய்ச்சல் நோய்க்காளாகிய பலர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் அரச ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இறுதியாக உதயநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சத்தியசீலன் (வயது45) என்பவர் இக்காய்ச்சல் காரணமாக மரணமானார்.
இதேவேளை, வேகமாக பரவிவரும் காச்சல் நோயினை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் இருந்து வைத்ச்திய நிபுணர்குழு வன்னிக்கு விரைந்துள்ளது.கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணமானவர்களுக்கு அஞ்சலி!

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மரணித்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு நாளை மறுதினம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். நகரில் நினைவுத் தூபி அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகிய 10 பேரையும் மனதில் நிறுத்தி இந்த நிகழ்வு நடைபெறுகிறது.இந்த நிகழ்வில் தமிழின ஆர்வலர்களைக் கலந்துகொண்டு மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

07 ஜனவரி 2012

கே.பியை இன்டர்போலுக்கு காட்டிக்கொடுப்பேன் என்கிறார் ஜெயலத்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதம ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் (கே.பி.) இலங்கை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருப்பதை இன்டர்போலுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்போவதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார்.
இன்டர்போலினால் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் கே.பியும் உள்ளதாகவும் எனவே அவருக்கு இலங்கை புகலிடம் அளிக்க முடியாது எனவும் ஜயலத் ஜயவர்தன நேற்று கூறினார்.
‘ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் கே.பி. தேடப்படுகிறார். அண்மையில் நான் சென்னை பொலிஸ் ஆணையாளரை சந்தித்து, இலங்கையில் கே.பி. இருப்பதை தெரிவித்தேன். இது தொடர்பான ஆவணங்களையும் நான் கையளித்தேன்’ என ஜயலத் ஜயவர்தன எம்.பி. தெரிவித்தார்.எனினும் இது தொடர்பாக சென்னையிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ராஜீவ் காந்தியை தாக்கிய சிங்கள படையினனுக்கு பிரேமதாசா பட்டமளித்து கெளரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிடம் இடிந்து வீழ்ந்து தெல்லிப்பளையில் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உடல் நசிந்து உயிரிழந்துள்ளார். கட்டுவன் மேற்கைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான நாகராசா தர்மராஜா என்ற 31 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை காவற்றுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீள்குடியேற்றம் முழுமையாக மேற்கொள்ளப்படாத பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்த ஜன்னல் கம்பிகளை அகற்றுவதற்காக கட்டிடத்தினை இடித்த போது கட்டிடம் இடிந்து விழுந்ததினாலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06 ஜனவரி 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வமத பேரவை வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று சர்வமத பேரவை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மதத் தலைவர்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
“இனப்பிரச்சினைக்கு அனைத்து மக்களும் உணரக் கூடிய மற்றும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் விரைவாக முன்வைக்க வேண்டும்.
நாட்டில் போர் முடிந்து விட்டாலும் போருக்கான காரணங்கள் இன்னும் உள்ளன. அவற்றை விரைவாகத் தீர்த்து வைக்க வேண்டும்.
அரசியலமைப்பின் 18 வது திருத்தச் சட்டத்தை நீக்கி 17 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர், ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை அற்றுப்போய் விட்டது“ என்று சர்வ மதப் பேரவையின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.