பக்கங்கள்

26 மார்ச் 2012

தனி ஈழம் பற்றி பேசுவது ஆபத்தென்கிறார் சுமந்திரன்!

உலகத்திற்கு தகவல் வழங்கும்போது தமிழ்நாடு அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சில சமயங்களில் சில கருத்துக்கள் சர்வதேசத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட “தனி ஈழம்தான் எனது கனவு” என்ற கருத்து குறித்து சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது,
“அரசியல்வாதிகள் நல்ல நோக்கத்தை உண்மையில் நிதானத்துடன் வெளியிட வேண்டும். இல்லையேல் தமிழர்கள் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும்” உலகத்திற்கு தகவல் வழங்கும்போது தமிழ்நாடு அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சில சமயங்களில் சில கருத்துக்கள் சர்வதேசத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். என பதிலளித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் தீர்மானம் இலங்கைக்கு முன்னோக்கி செல்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு மற்றும் பிடிவாதம் என்பவை சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளை கட்டாயமாக்கிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பொறுப்புக் கூறலில் இருந்து விலகிச் சென்ற போதும் சில விடயங்களில் சரியாகச் செயற்பட்டுள்ளதென சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுப்புக்கூறுவதில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விலகினாலும் மறுபுறம் மனித உரிமை கவுன்ஸில் பொறுப்புக்கூறல் குறித்து தனித்தனியே பேசுவதாக அவர் கூறியுள்ளார்.

25 மார்ச் 2012

தயவுசெய்து உரிமை கோராதீர்கள்!கூட்டமைப்புக்கு வலம்புரி சாட்டையடி.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்கு மாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும்.
உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எள்ளளவேனும் பங்கு கிடையாது. ஜெனிவாத் தீர்மானத்தை வரவேற்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நேர்மையும், நீதியும் இருக்குமாயின் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த ஜெனிவாத் தீர்மானம்- அந்தத் தீர்மானம் நிறைவேறுவதற்கு உதவியவர்களுக்கு பகிரங்கமாக நன்றி கூற வேண்டும். உண்மையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறுவதற்கும் ஈழத்தமிழர்கள் பட்ட துயரம் கண்டு உலகம் முழுவதும் கண்ணீர் விடவும் செய்த மகா புண்ணியம் சனல் 4ஐயே சாரும்.
‘இலங்கையின் கொலைக்களங்கள்- தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்’ என்ற ஆவணப்படத்தை சனல் 4 வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், வன்னியில் யுத்தம் நடந்ததா? என்று இந்த உலகம் கேட்டிருக்கும். எனவே சனல் 4 இற்கு ஈழத்தமிழ் இனம் தங்கள் சீவிய காலம்வரை நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பார்கள். இதற்கு மேலாக விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் இராஜதந்திர ரீதியில் உலக அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று, நாடுகடந்த தமிழீழத்தை உடனடியாகவே ஆரம்பித்தார்கள். அவர்கள் எடுத்த அந்த அதிரடியான நடவடிக்கையும் ஜெனிவாத் தீர்மானத்திற்கு மூல காரணமாயிற்று.
இதைவிட எங்கள் பாசத்திற்குரிய சகோதரன் சீமானின் அர்ப்பணிப்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுக்கமான முடிபு என்பனவும் இந்தியாவை, இலங்கைக்கு பகையாக்கியது. ஆகவே, ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறுவதில் பங்களித்தவர்களுக்கு தமிழ் இனம் நன்றியுடையதாக இருக்க வேண்டும். இதைவிடுத்து ஜெனிவாவுக்குப் போகப் பயந்தவர்கள், ஜெனிவாத் தீர்மானத்தில் தங்களுக்கு உரிமை இருக்கிறது எனக் கூறினால் அதற்கு தமிழ் மக்களிடம் இருந்து மொழிவழிப் பதில் அன்றி வேறுவிதமாகவே அதற்கான பதில் வழங்கப்படும்.

தமிழர்களின் வலிக்கு சிறு ஒத்தடம்!

உலகத் தமிழர்களின் உள்ளத்துக்கு சின்னதாய் ஆறுதல் அளிக்கும் செய்தி, ஜெனீவாவில் இருந்து கிடைத்துள்ளது. உலகம் காணாத கொடுமையைச் செய்த இலங்கை அரசாங்​கத்துக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் வெற்றி பெற்று இருப்பதுதான் இந்த ஆறுதலுக்குக் காரணம்.
இதைத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளக் காரணம் இந்தியா எடுத்த நிலைப்பாடு.
இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரணை ஆணையத்தின் முடிவின்படி நடவடிக்​கைகள் அமைய வேண்டும்” என்று சொல்கிறது அமெரிக்காவின் தீர்மானம்.
பல மாதங்களுக்கு முன்னால் ஐ.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதுதான் சரியான நிலைப்பாடாக இருக்கும். இருந்தாலும் இதையாவது அமெரிக்கா கொண்டு வருகிறதே என்பதுதான் பலருக்கும் ஆறுதல்.
இந்த அமெரிக்கத் தீர்மானம் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களது பிரார்த்தனையாக இருந்தது.
ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரின் முடிவுக்கு ஒருநாள் முன்னதாக, மார்ச் 22 அன்று இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தன. எதிராக 15 நாடுகள் வாக்களித்தன. எட்டு நாடுகள் நடுநிலை வகித்தன.
மாற்றத்தை வேண்டிய இந்தியா!
தமிழக மக்களின் போராட்டத்தாலும், அனைத்து தமிழகக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கொடுத்த அழுத்தத்தாலும், ‘எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது’ என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொண்டது.
ஆனால், இந்தத் தீர்மானத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர இந்தியா முயற்சித்தது. ‘இலங்கை விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதைக் கண்காணிக்க குழு ஏதாவது அமைக்கப்படும் என்றால், அது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டும்’ என்பதே இந்தி​யாவின் திருத்தமாக இருந்தது.
இந்தத் திருத்தம் குறித்து ஜெனீவாவில் உள்ள தமிழர் மனித உரிமை மையத்தைச் சேர்ந்த கிருபாகரனிடம் கேட்டபோது, ”ஆவணங்களைப் பார்த்தால்தான் திருத்​தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறித்துத் தெரியும்.
இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவதைவிட, இந்தியாவின் ஆதரவைத்தான் பெரிதாகப் பார்க்​கிறோம். இதன்மூலம் இலங்கை மீது அதிகாரப்பூர்வமாக ஐ.நா. அழுத்தம் செலுத்த முடியும்.
இதற்கு முன்பு வரை இலங்கை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. இப்போது அது வாய்த்திருக்கிறது” என்று பெருமிதப்பட்டார்.
ஆதரவும் எதிர்ப்பும்.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிக்கா, செக் குடியரசு, கவுதமால, ஹங்கேரி, இத்தாலி, லிபியா, மொரீசியஸ், மெக்சிகோ, நைஜீரியா, நார்வே, பெரு, போலந்து, மால்டோவ குடியரசு, ரோமானியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, உருகுவே ஆகிய 24 நாடுகள் வாக்களித்துள்ளன.
இலங்கையின் ரத்தக் கரங்களுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, கியூபா, பங்களாதேஷ், காங்கோ, ஈக்குவெடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவு, மாரிடானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா ஆகிய 15 நாடுகள் வாக்களித்தன.
பின்வாங்கிய மலேசியா!
இந்தத் தீர்மானம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க இயலவில்லை என எட்டு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. வாக்கெடுப்புக்கு முன்தினம் வரையிலும் இலங்கைக்கு ஆதரவு தருவதாகச் சொல்லியது மலேசியா. ஆனால், மலேசியத் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக தங்கள் நாட்டை நடுநிலைமைக்கு மாற்றிக் கொண்டது.
கெஞ்சிய இலங்கை!
இந்தியாவின் மௌனத்தை பயன்படுத்திக் கொண்ட இலங்கை அரசு, ‘இந்தத் தீர்மானம் ஆசிய நாடுகளை அமெரிக்க காலனி நாடுகளாக மாற்றும் அமெரிக்காவின் முயற்சி.
இது நிறைவேறினால் இலங்கை, அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விடும்’ என்று தங்கள் படுகொலைகளை மறைக்கப் பார்த்தது.
அடிமை, காலனிநாடு என்ற வார்த்தைகளைச் சொல்லி போர்க் குற்றத்தை மறக்கடிக்க துடித்தது.
ஆனால், தமிழர்களின் உணர்வு​களுக்கு மதிப்பளித்து இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் வாக்களிக்கத் தயார் என்று இந்தியா சொன்னதும், இலங்கை அரசு அமெரிக்காவிடம் மீண்டும் கொஞ்ச நாட்கள் கேட்டு கெஞ்சி உள்ளது.
போர் முடிந்த மூன்று ஆண்டுகள் கடந்தும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தத் தவறி விட்டீர்கள். இனியும் அவகாசம் கேட்பதை நம்ப முடியாது” என்று அமெரிக்கா, நிராகரித்துவிட்டது.
இந்த வாக்கெடுப்பின் போது, தொண்டு நிறுவனங்கள் சார்பில் பங்கேற்ற கனடிய தமிழ்ப் பேரவையின் வழக்கறிஞர் கரே ஆனந்தசங்கரியிடம் பேசிபோது,
முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின் தமிழர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி. இது, தமிழர்களின் ஒன்றுகூடலுக்குக் கிடைத்த பலன். இந்தத் தீர்மானம் நிறைவேறியது, இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்குதல்களைத் தராவிட்டாலும், நடந்த போர்க்குற்றங்களுக்கு ஒரு சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள ஒரு முன்னெடுப்பாக இருக்கும்” என்று சொன்னார்.
இந்தத் தீர்மானத்தின் மீது இலங்கை என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை 2013 மார்ச் மாதம் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கை விளக்கம் தரவேண்டும்.
இலங்கைத் தமிழர்களது அரசியல் உரிமையை நிரந்தரமாகப் பெறுவதற்கான முதற்படியாக இதைக் கொள்ள வேண்டும்!

24 மார்ச் 2012

விமல் வீரவன்சவின் புகைச்சல்!

அமெரிக்க பிரேரணைகளை அமுல்படுத்த இலங்கை மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கையில் செயற்படும் வொய்ஸ் ஒப் அமெரிக்காவை வெளியேற்ற வேண்டும்.
வொய்ஸ் ஒப் அமெரிக்கா உடாக அந்த நாடு இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களை மட்டுமின்றி இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயங்களை ஒட்டுக்  கேட்கிறது. உலகிற்கே பயங்கரவாதத்தை கொண்டு சென்ற விடுதலை புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் ஒரு நடவடிக்கையையே இன்று அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
அன்று ஒரு பிரபாகரனை உருவாக்கியது போல் அடுத்து ஒரு உருத்திரகுமாரனை உருவாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலாகவே இதனைக் கொள்ள முடிகிறது. இவ்வாறு விமல் வீரவன்ச புகைந்து தள்ளியுள்ளார்.

தமிழினத் தலைவர்கள் கைது!

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருந்து வரும் உதயகுமார் உள்ளிட்டோரை நேரில் சந்திக்க பேரணியாக செல்ல முயன்றதாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பாளையங்கோட்டையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் வைகோ, கொளத்தூர் மணி உள்ளிட்டோர் பேரணியாக இடிந்தகரை நோக்கிச் செல்ல முயற்சித்தனர். ஆனால் பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பாளையங்கோட்டை, கூடங்குளம் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்!

யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்கு வீதி 90ம் இலக்க வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டின் குளியலறையில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த வீட்டில் வசிக்கும் சிதம்பரபிள்ளை  சண்முகநாதன் என தெரியவந்துள்ளது.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

23 மார்ச் 2012

தமிழீழம் உருவாகும்வரை போராட்டமும் இருக்கும் என்கிறார் கருணாநிதி.

‘தமிழீழம்’ என்பது தனது நனவாகாத கனவு எனவும் தமிழீழம் உருவாகும்வரை அதற்கான தனது போராட்டமும் இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் குறித்து அவர் கூறுகையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் நாடுகள் வாக்களித்திருக்கின்றன. இது தொடர்பான கருத்தை மனிதாபிமானத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் ‘போர்க்குற்றங்கள்’ என்ற வார்த்தைகள் இருந்ததாகவும் பின்னர் அது எடுக்கப்பட்டுவிட்டதாகவும் யாரும் இதுவரை சொல்லவில்லை. அது உண்மையாக இருந்தால் அது தொடர்பான திருத்தங்கள் வருவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வோம்’ என்றார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு: இப்போது கொடுத்த அழுத்தத்தைப் போலவே 3 ஆண்டுகளுக்கு முன்பும் மத்திய அரசுக்குக் கொடுத்தோம். ஆனால் அந்தக் கருத்துகள் யார் யாரால் பாழ்படுத்தப்பட்டன என்பது நாடறிந்த உண்மை எனவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் தமழீழம் உருவாகுவதற்கான சாத்தியமுள்ளதா?என செய்தியாளர்கள் கேட்டபோது. தன்னைப்பொறுத்தவரை அதுதான் இலக்கு என்றார். கடந்த காலத்திலும் தனது நிறைவேறாத கனவு குறித்து கேட்டபோதேல்லாம் தமிழீழம் என பதிலளித்தாக கருணாநிதி கூறினார்.
சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து.
பிரபாகரன் போராட்டம்: ‘புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம் என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு கருணாநிதி ‘பிரபாகரன் போராட்டத்தைக் குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி மட்டுமே கூறவில்லை.
ஆனால் பிரபாகரனும் முகுந்தனும் பத்நாபாவும் ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு அதில் ரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன். இப்போதும் அந்த நிலை வரக்கூடாது என்று வேண்டுகிறேன்’ என்றார் கருணாநிதி.

தீர்மானம் தொடர்பில் கிலாரி அறிக்கை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
27 வருட கால உள்நாட்டு யுத்தத்தைத் தொடர்ந்து நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் இலங்கை அரசு தொடர்ந்து முன்னேற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இன்றைய நடவடிக்கை ஊக்குவிக்கும். இலங்கை மட்டுமே உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதல்கள் ஊடாக நீடித்த அமைதியை அடைய முடியும் என்கிற தெளிவான, உறுதியான சமிக்ஞையை சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து அமெரிக்கா வெளிப்படுத்துகிறது.
நீடித்த அமைதியை இலங்கை அடைவதற்கு உதவவும் சர்வதேச சமூகம் தயாராக இருக்கிறது. அடுத்த நடவடிக்கைகள் தெளிவானவை. நல்லிணக்க ஆணைக்குழுவின் காத்திரமான பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துகிறதா என்பதையும் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதையும் நாம் கவனிப்போம்.
இந்த இலக்கை இலங்கை அரசு அடைவதற்கு அதனுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தன்னை அர்ப்பணிக்கும். அத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடனான கலந்துரையாடல்களை நாம் எதிர்பார்த்திருக் கின்றோம்.
விழுமியங்கள், மதிப்பு மற்றும் காத்திரமான உரையாடல்கள் என்பவற்றின் அடிப்படை இலங்கை அரசுடன் நாம் கொண்டு இருக்கும் உறவுகளை மேலும் பயனுள்ள வகையில் தொடர்வோம். அனைத்திலும் முக்கியமாக இலங்கை மக்கள் அனைவருடனானதுமான உறவுகளை பலப்படுத்தவும் வேண்டிநிற்கின்றோம் என்றுள்ளது.

22 மார்ச் 2012

கையெழுத்து பெறும் முயற்சி தோல்வி.

“இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம்” எனத் தலைப்பிடப்பட்டுக் குடாநாட்டு அரச அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கையெழுத்து இடுமாறுகோரி அனுப்பப்பட்ட மகஜர் அவர்கள் கையெழுத்திடாத நிலையில் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.ஜெனிவாவில் இலங்கை அரசு மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்துப் பெறும் மகஜரே அது எனத் தெரிந்துகொண்ட அரச அலுவலர்கள் பலரும் அதில் கையெழுத்து இடுவதைத் தவிர்த்தனர். இதனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
முக்கிய அரச அதிகாரிகள் எவரும் இந்த மகஜரில் கையெழுத்திடவில்லை. ஆயினும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அதில் கையொப்பமிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே மேற்படி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் அரச அலுவலர்களுக்குத் தகவல் கசிந்தது. ஆயினும் அந்த மகஜரில் “இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம்” என்னும் தலைப்பே இடப்பட்டிருந்தது.
இந்து பௌத்த பேரவையைச் சேர்ந்த சுவிஸ் நாட்டிலிருந்து வந்துள்ளதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரே இந்த முயற்சிகளை மேற்கொண்டார்.
கடந்த இரண்டு தினங்களாக சகல அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளுக்குப் பயணம் செய்த கையெழுத்துப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சில அரச திணைக்களங்களுக்கு அவர் சென்ற வேளை அங்கிருந்த அரச அதிகாரிகள் நாளை வருமாறு அவரிடம் கூறினர். ஆயினும் அவர் இன்று (நேற்று) மாலை 4 மணிக்கு முன்னர் கையொப்பம் பெற்று இதனை அனுப்ப வேண்டும் என்றார். எங்கு அனுப்ப வேண்டும் என்று அரச அதிகாரிகள் அவரிடம் கேட்டபோதே உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு இதனைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு ஆதரவாக கையொப்பம் இடுமாறும், இதில் வடமாகாண ஆளுநர் கையொப்பம் இட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் அதில் கையொப்பமிடுவதைத் தவிர்த்தனர். இதனால் அவரின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரியவருகிறது.

பெரும்பான்மை ஆதரவுடன் வாக்கெடுப்பு களத்தில் அமெரிக்கா.

 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்று விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானம், சிறிலங்கா நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மையான 24 நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்றுக் கொண்டுள்ளது. அதேவேளை, நேற்றுமாலை 9 நாடுகளின் ஆதரவை மட்டுமே கொண்டிருந்த சிறிலங்கா இன்று காலை 17 நாடுகளின் ஆதரவைப் பெற்ற நிலையில் இருப்பதாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனா மேற்கொண்ட பரப்புரைகளின் விளைவாகவே சிறிலங்காவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

21 மார்ச் 2012

யாழில் சேரன் படை எனும் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டிகள்!


எவராவது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்ற பட்சத்தில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மிரட்டுகின்ற துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் நேற்று ஒட்டப்பட்டு இருக்கின்றன.
சேரன் படை என்கிற குழுவே இத்துண்டுப் பிரசுர அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் கலாசார விழுமியங்களை பின்பற்றி நடக்க வேண்டும், பெண்கள் பாரம்பரிய உடைகளையே அணிய வேண்டும் என்பதோடு உடலை வெளியில் காட்டுகின்றபடியான உடுப்புக்களை அணிகின்றமை கூடாது, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் இத்துண்டுப் பிரசுரங்களில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இணுவில் பகுதியில் இளைஞர் குழுக்களிடையே முறுகல்!

இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலையிட்ட இராணுவத்தினர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இணுவில் பகுதியில் உள்ள இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக முறுகல் நிலைமை காணப்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர் குழுவில் ஒரு பகுதியினர் தமக்கு உதவியாக அரியாலையில் இருந்து ஒரு குழுவினரைக் கொண்டுவந்து மோதலுக்கு தயாராகி உள்ளனர்.
இதன் காரணமாக இரு இளைஞர் குழுக்களும் பொல்லுகள் இரும்புக்கம்பிகள் கொண்டு மோதலுக்கு தயாராகிய நிலையில் இதனை அவதானித்த அந்தப் பகுதி மக்கள் அயலில் உள்ள இராணுவ முகாமிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இராணுவத்தினர் மூன்று மோட்டார் சைக்கிள்களில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து இளைஞர்களிடையேயான மோதலைத் தவிர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இளைஞர்கள் அதனை ஏற்க மறுத்ததுடன குறிப்பிட்ட இராணுவத்தினரை தாக்க முற்பட்டுள்ளார்கள். இதனால் கோபமுற்ற இராணுவத்தினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனையடுத்து, இராணுவத்தினர் மூன்று இளைஞர்களைப் பிடித்து சுன்னாகம் காவற்றுறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடந்த பல வருட இடைவெளியின் பின்னர் துப்பாக்கிச் சத்தம் கேட்டமையால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரும் பதட்டமான நிலமைக்கு உள்ளாகினர்.

20 மார்ச் 2012

கொழும்பில் பிக்குகள் இருவர் படுகொலை!

கொழும்பு கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றைச் சேர்ந்த பிக்குகள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இன்று இரவு 9.45 மணியளவில் இச்சம்பவம் கொழும்பு கோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பிக்கப் ரக வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுதக் குழுவினரே பிக்குகள் இருவர் மீதும் தாக்குதல் நடத்திக் கொலைசெய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். படுகொலை செய்யப்பட்ட இருவரும் கூரிய ஆயுதமொன்றால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதுதொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

ஜெனீவா மாநாட்டில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு ஜெனீவா சென்றுள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மனித உரிமை பேரவை அமர்வுகளில் கலந்து கொண்டுள்ள உருகுவே நாட்டு பிரதிநிதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்கள பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய பிரதமரின் மழுப்பல் அறிவிப்பு!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்தியா உள்ளது என இந்தியப் பிரதமர் செய்துள்ள அறிவிப்பை விமர்சித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை, அவற்றுக்காக இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவும் இல்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரதமரின் அறிவிப்பு “மழுப்பலான, பயனில்லாத பதில்” என்று ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக கருணாநிதி அரங்கேற்றும் நாடகத்துக்கு துணைபோகும் வகையில் பிரதமர் இந்த தெளிவற்ற அறிவிப்பைச் செய்துள்ளார் என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

19 மார்ச் 2012

”மகிந்தவின் பலி பூசைக்காக”வாள் திருடப்பட்டிருக்கலாம்?

கொழும்பு தேசிய நூதனசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (16) கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் நூதனசாலையில் வைக்கப்பட்டிருந்த வரலாற்றுப் புகழ்மிக்க வாள் காணாமல் போயுள்ளது. இந்த வாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்காக நடத்தப்படவுள்ள பரிகார பலி பூசைக்காக திருடப்பட்டிருக்கலாம் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு – புறக்கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் தற்போது உத்தியோகபூர்வ பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை. இங்கே ஜனாதிபதிக்கான பரிகார பூசைகளும், மத வழிபாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு இந்திய பூசாரிகளும், சாமியார்களும் தொடர் பூஜைகளையும், யாகங்களையும் செய்து வருகின்றனர். இந்தப் பூசாரிகளில் ஒருவர் கடந்த 15ஆம் திகதி பிற்பகல், ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரியொருவருடன் தேசிய நூதனசாலையைப் பார்வையிடச் சென்றுள்ளார்.
அன்றைய தினம் தேசிய நூதனசாலையில் மூடப்பட்டிருந்த அனைத்து அறைகளின் கதவுகளும் திறக்கப்பட்டதாக நூதனசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக வார இறுதி நாட்களில் கூட நூதனசாலை திறந்துவைக்கப்பட்டிருக்கும். எனினும், கடந்த வெள்ளிக்கிழமை சம்பவ தினத்தன்று நூதன சாலை மூடப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தேசிய நூதனசாலைக்குப் பொறுப்பாக்க பணியாற்றும், தேசிய மரபுரிமைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஜகத் பாலசூரியவின் மனைவியான, தென் மாகாண சபையின் ஆளுநர் குமாரி பாலசூரிய ஜனாதிபதிக்கு நெருக்கமான உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு தற்போதுள்ள கண்டத்திற்குப் பரிகாரமாகவும், அவருக்கு நீண்ட ஆயுளை வேண்டியும் ‘மனித பலி’ பூஜையொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக எமது இணையத்தளம் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது நூதனசாலையில் இருந்த வாள் குறித்த பலி பூஜைக்காகத் தான் திருடப்பட்டுள்ளது என்ற சந்தேகம் வலுத்து வருகிறது என எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நன்றி:(செய்தி) சரிதம்

உதைபந்தாட்டப் போட்டியை நிறுத்தியது சிங்களப்படை!

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெறவிருந்த உதைபந்தாட்டப் போட்டி இராணுவத்தினரின் தலையீட்டால் நடைபெறவில்லை.
யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கில் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையேயான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி யாழ். மாநகரசபையின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வந்த இராணுவத்தினர் அங்கு விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், மோதும் அணிகள் மற்றும் பார்வையாளர்கள் வந்திருந்த நிலையில் மைதானத்திலிருந்த கோல் கம்பங்களை அகற்றியதுடன் தாங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் கண்காட்சிக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி அனைவரையும் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர் என்று யாழ். உதைபந்தாட்ட லீக்கின் முக்கிய பதவிகளில் உள்ள உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பல நாள்களாக நடைபெற்று வந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

18 மார்ச் 2012

சர்வதேச நாடுகளால் புறக்கணிக்கப்படுகிறது சிறிலங்கா!

.நா மனித உரிமைகள் சபையில் இலங்கையின் உப மாநாடுகளை, சர்வதேச நாடுகள் பலவும் புறக்கணித்து
வருவதாக ஜெனிவாச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப மாநாட்டில், 8 பேர் மட்டுமே பங்கேற்கும் அளவுக்கு, இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அமர்வு இடம்பெறும் சமவேளை, உப மாநாடுகள் இடம்பெறு வது வழமையான ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்கும் நோக்கில், இலங்கை அரச தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் உப மாநாடுகள் பலவும், தொடர்ச்சியாகப் பிசுபிசுத்து வருவதாக அறிய முடிகின்றது.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உப மாநாட்டில், 8 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளதாகத் தெரியவருகிறது. ஜெனீவாவில் முகாமிட்டுள்ள இலங்கை அரச தரப்புக் குழுவினரோடு இணைந்துள்ள, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேயசிங்கவினால் இந்த உப மாநாடு நடத்தப்பட்டிருந்தது. டென்மார்க், இந்தியா தவிர்ந்த பிற நாடுகள் பலவும் இந்த உப மாநாட்டைப் புறக்கணித்துள்ளதோடு, இராஜதந்திரிகளையோ அல்லது மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகளையோ இங்கு காணமுடியவில்லை.
போருக்கு உதவிய அமெரிக்கா போன்ற பல மேற்குலக நாடுகள் தற்போது ஏன் போர்க்குற்றச்சாட்டுக்களைத் தங்கள் மீது சுமத்துகின்றன என இலங்கையின் அரச தரப்பு பிரதிநிதி ரஜீவ விஜேயசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். அமெரிக்காவின் தீர்மானம், இலங்கையின் இறையாண்மைக்குள் தலையிடுகின்ற விடயமெனவும் ரஜீவ விஜேயசிங்க இங்கு கூறியுள்ளார்.

ரணிலை திக்குமுக்காட வைத்த யாழ் மக்கள்!

அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் யாழ்ப்பாண மக்கள் முன்வைத்த கேள்வியால் அவர் ஆடிப்போனார். இரண்டு இடங்களில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு ஒரு இடத்தில் பதிலளிக்காமல் தவிர்த்தார். மற்றொரு இடத்தில் மழுப்பலான பதிலை வழங்கினார்.
நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணம் வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்தது. மாதகலில் இடம் பெற்ற சந்திப்பில், ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு ரணில் வழங்கவுள்ள தீர்வு என்ன என்று மக்கள் கேள்வி எழுப்பினர். "நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானால் தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வை வழங்குவீர்கள்?" என்று அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்த ரணில் விக்கிரமசிங்க �இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைத் தருவோம்� என்றார். அராலி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்றலில் பொதுமக்களுடன் ரணில் நடத்திய சந்திப்பின்போதும் தமிழ் மக்கள் இதே கேள்வியை எழுப்பினர். பதிலளித்த ரணில், "2005ம் ஆண்டு நான் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தபோது பிரபாகரனும் அவருடன் இணைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் அதனை எதிர்த்தனர்" என்றார்.
இந்தப் பதிலில் திருப்தி கொள்ளாத மக்கள் "எதிர்காலத்தில் நீங்கள் என்ன தீர்வை முன்வைப்பீர்கள் என்பதைச் சொல்லுங்கள்" என்று அழுத்தம் கொடுத்தனர். நழுவ முடியாத நிலையில், மழுப்பலான பதிலை வழங்கினார் ரணில். "நான் கொள்கை அடிப்படையில் பணியாற்றுபவன். என் மீது நம்பிக்கை வையுங்கள்" என்றார் அவர்.
2005ம் ஆண்டு தான் முன்வைத்த தீர்வுத் திட்டத்தினை ஏற்றுக்கொண்டிருந்தால் அதன் பின்னர் இவ்வளவு பெரிய போர் ஒன்று ஏற்பட்டிருக்கமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் 2005ம் ஆண்டில் ஒஸ்லோ உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான சுயாட்சி வழங்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக எதனையும் சொல்லவில்லை என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"இலங்கையின் இரு பெரும் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களைத் தமது தேவைக்குப் பயன்படுத்தவே முனைகின்றன. தமிழ் மக்களுக்கு நீதியான நிரந்தரத் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான உளச்சுத்தியை அவை இதுவரை வெளிக்காட்டியதில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் தமிழர்கள் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு காய் நகர்த்துவதே ராஜதந்திரத் தேவையாகவும் உள்ளது" என்றார் அந்த அரசியல் விமர்சகர்.

17 மார்ச் 2012

கர்நாடகாவில் நடைபெறும் பொங்குதமிழில் ராதிகா.

கருநாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள "பொங்கு தமிழ்" மாநாட்டுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இது தமக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத் தமிழர்களை இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்துமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
"பொங்கு தமிழ்" நிகழ்வு நடைபெறும் திகதி பற்றிய விபரங்கள் விரைவில் அறித்தரப்படும் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கருநாடகா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்துகின்ற �பொங்கு தமிழ் 2012″ சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என கொளத்தூர் மணி (பெரியார் திராவிட கழகம்) அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகத்தமிழினத்தின் ஒற்றுமையை மனதில் கொண்டு, அந்த உயர்ந்த நோக்கத்திற்காக இந்தியாவின் எழில் நகராம் பெங்களூரில் அருமை நண்பன் கணேசன் அவர்களின் பெருமுயற்சியில் "பொங்குதமிழ் 2012″ நிகழ்வு நடைபெறுவது எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும் விடயம் என திருச்சி வேலுச்சாமி (மூத்த காங்கிரஸ் தலைவர்) அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போதைய காலத்தின் தேவையாக தமிழ் மக்களுக்கு இந்த "கருநாடகா பொங்கு தமிழ்" மாநாடு அமையும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் திரு. வேல்முருகன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கருநாடகத்தில் வாழும் 80 லட்சம் தமிழர்களின் சார்பாக கருநாடக தமிழர்களின் குரல் பொறுப்பாளர் கு.கணேசன் அவர்கள் "பொங்குதமிழ் 2012″ நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக எம்மை அழைத்தமையையிட்டு மிகவும் பெருமைப்படுகின்றேன். நிச்சயமாக இந்நிகழ்வில் நான் கலந்துகொள்வேன் என செல்வி ராதிகா சிற்சபை ஈசன் (கனடா நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

16 மார்ச் 2012

அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென பிரிட்டனின் தென் ஆசியவிற்கான அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
நிலையான சமாதானத்தையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி மனித உரிமை பேரவை அமர்வுகளில் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.செனல் 4 வின் இரண்டாவது காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் அலிஸ்டயர் பர்ட் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

11 மார்ச் 2012

சம்பந்தனுக்கு வந்த வெட்கம்!


புலம்பெயர் தமிழர்களை சிலர் இலங்கைக்கு எதிரானவர்கள் என குற்றம் சுமத்தினாலும் அவர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்கி, புலம்பெயர் தமிழர்களை வெற்றிக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் பல அரசியல் கட்சிகளை இரண்டாக உடைத்துள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகள் பௌத்த ஆலயங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெட்கமடைவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட போர் தொடர்பில் சனல்4 காணொளி.


பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் தொடர்பில் தயாரிக்கப்பட்ட பிறிதொரு காணொளியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதேவேளை இக் காணொளியில் இறந்த நிலையில் உள்ள 12 வயதுச் சிறுவன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் என குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த 12 வயதான பாலச்சந்திரனின் மார்புப் பகுதியை 5 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன. சிறுவனுக்கு அருகில் ஐவரின் சடலங்கள் கிடக்கின்றன.அந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சியில் எதிர்வரும் புதன்கிழமை இரவு இலங்கை நேரப்படி இரவு 10.55க்கு ஒளிபரப்படவுள்ளது.இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத குற்றங்கள் எனும் தலைப்பில் இந்த இரண்டாவது காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.தற்போது ஐக்கியநாடுகள் மனித உரிமை கூட்டத் தொடர் இடம்பெற்று வருகிறது. அதில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நிலையில் இக் காணொளி வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இப் பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும் அநேக நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த போதும் இந்தியா இதுவரை எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை.

04 மார்ச் 2012

மக்களுக்கும் ஈபிடிபிக்கும் இடையில் முறுகல்!

நெடுந்தீவில் 12வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர் என அடையாளம் காணப்பட்டு மக்களால் அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டிருக்கின்றார்.நேற்று முன்தினம் குறித்த மாணவி சந்தைக்குச் சென்றவேளை காணாமல் போய் பின்னர் மறு நாள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் ஈபிடிபியின் முக்கியஸ்தரான கிருபா என மக்களால் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.
இதனை அடுத்து மக்கள் குறித்த நபரை மடக்கிப்பிடித்த நிலையில் பொலிஸார் சென்று அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதேவேளை குறித்த சம்பத்தினை அடுத்து மக்கள் ஈபிடிபிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடல் போக்குவரத்துக்களை முற்றாக இடைநிறுத்தியிருக்கின்றனர். இதனால் நெடுந்தீவில் இருந்து ஏனைய தீவுகளுக்கான கடற்போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டிருக்கின்றதாகவும். கச்சதீவில் இருந்து நெடுந்தீவின் ஊடாகப் பயணம் செய்த பக்தர்கள் நெடுந்தீவில் இருந்து போக்குவரத்தினை மேற்கொள்ளமுடியாது நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.