பக்கங்கள்

28 பிப்ரவரி 2012

ஐரோப்பிய மக்களையும் ஒன்றிணைத்து போராடுங்கள்.

உங்கள் நாட்டின் விடுதலைக்காக உங்கள் இனத்தின் விடுதலைக்காக இந்த நாடுகளில் தனித்து நின்று போராடுவதால் எதையும் சாதித்து விடமுடியாது. இந்த நாட்டை சேர்ந்த மக்களையும் இணைத்துக்கொண்டு போராடுங்கள், அவர்களின் ஆதரவை பெறுவதன் மூலம் உங்கள் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் இந்த நாடுகள் ஏற்கவேண்டிய நிலைக்கு வருவார்கள் என சுவிட்சர்லாந்து நாட்டைச்சேர்ந்த சமூகவியலாளர் அனா அன்னா அனோஜ் இன்று மாலை ஜெனிவா அரங்கில் நடைபெற்ற நீதிக்காய் ஒன்றுபடுவோம் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த இந்த நீதிக்காய் ஒன்றுபடுவோம் பேரணியில் சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்தும் பெருந்தொகையானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா மீதான போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசியல் தலைவர்கள் மற்றும் சிறிலங்கா படை அதிகாரிகளை விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தி ஜெனிவாவில் ஐ.நா முன்றலில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
சமூகவியலாளர் அனா அன்னா அனோஸ் தொடர்ந்து உரையாற்றுகையில் இனப்படுகொலையிலிருந்து நீங்கள் தப்பி ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் இனத்துவ கொலைகளை உங்களால் தடுக்க முடியாது போய்விடுகிறது. உங்கள் இனத்துவத்தை காப்பாற்றும் மொழியை உங்களது அடுத்த சந்ததிகள் இழந்து வருகிறார்கள். இன்னும் இரண்டு மூன்று தலைமுறையின் பின்னர் உங்கள் நிறத்தை வைத்துக்கொண்டுதான் நீங்கள் தமிழர்கள் என்று அடையாளம் காணவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
உங்கள் மொழியையும் கலாசாரத்தையும் நீங்கள் இழந்தால் உங்கள் இனத்துவத்தை இழந்தவர்களாவீர்கள். நீங்கள் வாழும் நாடுகளில் அந்தந்த மொழிகளை கற்கும் அதேவேளை உங்கள் தாய் மொழியையும் கலாசாரத்தையும் அடுத்த சந்ததிக்கும் எடுத்து செல்லுங்கள். இல்லையேல் உங்கள் தாயகத்தில் இருக்கிற உறவினர்களுடன் அந்நியப்படும் நிலை ஏற்பட்டு விடும்.
நீங்கள் இங்கே தனித்து போராட்டம் நடத்துவதை விட இந்த நாட்டு மக்களையும் அழைத்து வந்து போராட்டம் நடத்தினால் அதனால் கிடைக்கும் வெற்றி அதிகமாக இருக்கும் என அனோ அன்னா தெரிவித்தார். இந்த பேரணியில் லண்டனிலிருந்து நடைப்பயணமாக வந்த ஜெயசங்கரும் உரையாற்றினார்.

இலங்கைக்கு எதிரான செயற்பாட்டில் அரசசார்பற்ற நிறுவனங்கள் முனைப்பு.

இலங்கைக்கு எதிராக அரச சார்பற்ற அமைப்புகள் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் உள்ளிட்ட 37 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜெனீவாவிற்கு சென்றுள்ளன.
இதற்கு மேலதிகமாக தென் ஆபிரிக்காவின் முன்னாள் பேராயர் டெஸ்மன் டுட்டு மற்றும் அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும் இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சட்டங்களை அமுல்படுத்துமாறு அரச சார்பற்ற அமைப்புகள், பேரவை அமர்வுகளில் கோரிக்கை விடுக்கவுள்ளன.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டாம் என இலங்கைப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளேக் உள்ளிட்ட தரப்பினர் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

27 பிப்ரவரி 2012

வன்னியிலும் யாழிலும் தோல்வியில் முடிந்த ஆர்ப்பாட்டம்.

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு அச்சுறுத்திய இராணுவத்தினர் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த வருமாறு முல்லைத்தீவு நகரிலும், புதுக்குடியிருப்பிலும் இராணுவத்தினர் வீடுவீடாக சென்று அழைப்பு விடுத்த போதிலும் புதுக்குடியிருப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
நேற்று முழுவதும் ஒலிபெருக்கி மூலம் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள், உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நிவாரணங்கள், சலுகைகள் வழங்கப்படும் என இராணுவத்தினர் கூறிய போதிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து புனர்வாழ்வு முகாம்களில் பயிற்சி பெற்று விடுதலையான 60 இளைஞர்களையும் வாகனங்களில் ஏற்றிச்சென்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இன்று ஈபிடிபியும் அங்கஜனும் இரு வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். யாழ் கோவில் வீதியிலிருந்து அங்கஜனால் ஆரம்மிக்கப்பட்ட பேரணியும் யாழ் முனியப்பர் கோவிலிலிருந்து ஈபிடிபியால் ஆரம்பிக்கப்பட்ட பேரணியிம் வேம்படிச் சந்தியில் சந்தித்து யாழ் பஸ்நிலையத்தை சென்றடைந்தது.
இதில் போர்க்குற்றவாளி சந்திரசிறியும் பங்குபற்றியிருந்தார். இதில் நூற்றிக்கும் குறைவான பொதுமக்களே பங்கு பற்றியிருந்தனர்.யாழ் கோவில் வீதியில் உள்ள ஐநா அலுவலகத்தில் அங்கஜன் குழு ஒரு மகஜரை கையளித்ததாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

26 பிப்ரவரி 2012

இனி கூட்டமைப்பு இருப்பதும் இல்லாமல் போவதும் ஒன்றே!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்கவும், தமிழர்களின் உரிமைக்கான நிலைப்பாட்டை தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவும் காலம் கொடுத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார்.
ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாகக் கேட்டபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது,தமிழ் மக்களுடைய சரித்திரத்தில் மிகவும் முக்கியமானதொரு காலகட்டம் இதுவாகும். சர்வதேசத்தின் பார்வை முழுமையாக இலங்கைத் தீவின் மீது இன்று விழுந்திருக்கின்றது. இந்த நிலையில் 60 வருட காலமாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கேட்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று கிடைத்திருக்கின்றது.
எனவே தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற கோணத்தில் எமது மக்கள் சர்வதேசத்திடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை சர்வதேச அரங்கில் பதிவு செய்ய வேண்டிய கடமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. ஆனால் இந்தக் கடமைப்பாட்டை நிறைவேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியிருக்கின்றது.
அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சோகமளிக்கக்கூடிய வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப் போவதாக அறிகின்றோம்.
எனவே இந்த ஜெனிவா மனிதவுரிமைகள் ஆணைக்குழு அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை அவர்களுடைய மனோநிலையை வெளிப்படுத்த முடியாத போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி இருப்பதும், இல்லாமல் போவதும் ஒன்றே. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு தமிழ் மக்களிடம் பெரும் ஏமாற்றத்தையே ஏறபடுத்தியிருக்கின்றது’ என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளப் போவதில்லை என அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை காண்பதில் எவ்வித தடைகளையும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழினத்தின் போராட்டத்தை முறியடிக்க போராடும் டக்ளஸ்!

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தா தனது இனத்தின் அழிப்பை சிங்கள அமைச்சர்களுடன் சேர்ந்து நியாயப்படுத்தும் நடவடிக்கையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி, சமாதானம், அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் டக்ளஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்தை முறியடிப்பதற்கு டக்ளஸ் படாதபாடு படுவதை படங்களில் காணலாம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகமிளைக்கிறது!

ஜெனிவா ஐ.நா.சபையில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாததன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு வரலாற்றுத் துரோகத்தைச் செய்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி காட்டமாத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது மக்களை அழித்து படுகொலை செய்த சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் இம்மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முக்கியமான தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு உலக நாடுகள் திடசங்கற்பம் பூண்டுள்ளன. அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானத்தில் உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கப்போகின்றன.
இந்த விடயமே தற்போது உலக நாடுகளில் முக்கிய செய்தியாக உள்ளது. ஆனால் இந்தியா இலங்கைக்கு சார்பாக ஐ.நா.வில் நடந்து கொள்ளும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நாவில் இடம் பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்துக் கூறுவதில்லை என அறிவித்துள்ளது. இத்தீர்மானம் ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு செய்துள்ள துரோகமாகவே அமைந்துள்ளது.
முள்ளிவாய்காலில் கண்முன்னே இடம் பெற்ற மனிதப் படுகொலைகளை ஐ.நாவில் எடுத்துக் கூறத்துணிவில்லாமல் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இந்தியா ஆகிய நாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் அந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு செயற்பட்டு வருகின்றன. இது தமிழ் மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகவே கருதப்படும்.
வடகிழக்கு மக்களால் இன்றைய நிலைமை பற்றியோ அல்லது தமது உரிமை பற்றியோ எதுவும் பேச முடியாத நிலையிலேயே அவர்கள் தமது பிரதிநிதிகாளக தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தெரிவு செய்துள்ளனர்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்போ தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அப்பால் தமது சுயநல அரசியலுக்காகவும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் சுயநலத்திற்காகவும் செயற்பட்டு வருகின்றனர். இது மிகமோசமான துரோகமாகவே அமைந்துள்ளது.
எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு உலகநாடுகள் அனுசரணையாக இருந்தன. தற்போது அதை உணர்ந்துள்ள சர்வதேச சமுகம் தமி;ழ் மக்களுக்கு உரிமை வழக்க வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன இந்த நிலையிலேய ஐ.நாவில் இடம் பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகின்றன.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் கலந்து கொள்ளாதது "வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்த கதையாகவே அமைந்துள்ளது. புலம் பெயர் தமிழ் மக்கள் இன்று ஒன்று பட்டு உரிமைக்காக போராடி வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது  எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

25 பிப்ரவரி 2012

இலங்கையர்களை நாடு கடத்துவதை நிறுத்தவும்.

இலங்கையின் மனித உரிமைகள் உரியவகையில் பாதுகாக்கப்படும் வரை பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர்களை நாடுகடத்தலை நிறுத்தவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது..
மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் விசாரணைகளின் அடிப்படையில் பிரித்தானியாவினால் நாடு கடத்தப்பட்ட பல இலங்கையர்கள், கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி மேலும் 100 இலங்கையர்களை பிரித்தானிய அரசாங்கம் நாடு கடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது..
எனவே தம்மால் நாடு கடத்தப்படுவோர் சித்திரவதை செய்யப்படாமல் இருப்பதற்கான சர்வதேச கடப்பாட்டை பிரித்தானிய அரசாங்கம் கொண்டிருப்பதாக கண்காணிப்பகத்தின் ஆசிய நிலைப்பணிப்பாளர் பிரட் அடெம்ஸ் தெரிவித்துள்ளார்..
இலங்கைக்கு பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்ட 8 தமிழர்கள்,இலங்கைப்படையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை கண்காணிப்பகம் தமது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்கு கைவிரல் நகம் பிடுங்கப்பட்டும் சிகரட்டினால் சுடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பிரட் அடெம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு அப்பால் கைதுசெய்யப்பட்ட நாடு கடத்தப்பட்ட சிலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் இலங்கை அதிகாரிகளுக்கு கப்பமாக பெருந்தொகை பணத்தை செலுத்திய பின்னரே விடுவிக்கப்பட்டுள்ளனர். பிறிதொரு இளைஞர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அதிகாரிகளால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் தம்மிடம் மருத்துவ சான்றிதழ்கள் இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய நிலைப்பணிப்பாளர் பிரட் அடெம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை நாடு கடத்தப்படும் இலங்கையர்கள் குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்றும் அடெம்ஸ் கோரியுள்ளார்..

இலங்கையை கை விடுமா இந்தியா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜ தந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.
ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில், அவசரமாகக் கொழும்பிலிருந்து புதுடில்லிக்குச் சென்ற உயர்மட்ட இராஜ தந்திரிகள் குழுவொன்று, அந்நாட்டின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் விடுத்த வேண்டுகோளை சாதகமான முறையில் பரிசீலிப்பதற்கு இந்தியா மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில தீர்மானத் துள்ளமையை அடுத்து தனக்கான ஆதரவைத் திரட்டிக்கொள்வதில் கொழும்பு தீவிரமாக உள்ளது.
இலங்கையிலிருந்து டில்லிக்கு விரைந்த உயர்மட்டக் குழு, ஜெனிவாவில் தமக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்க உதவுமாறும், இது விடயம் தொடர்பில் ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் பேசி, சாதகமான பதிலொன்றைத் தருமாறும் கோரியுள்ளது.
இதற்கு புதுடில்லி தரப்பிலிருந்து உறுதியான சாதகமான பதிலொன்று கொழும்புக் குழுவினருக்கு கிடைக்கப்பெறவில்லை. இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்று தாம் தீவிரமாகப் பரீசிலித்து வருகின்றனர் என்றும் இலங்கை விவகாரம் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் சமரசம் பேசமுடியாது என்றும் புதுடில்லி ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது.
இராஜதந்திர வழிமுறைகள் தோல்வியை நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், தாம் விடுத்த வேண்டு கோளை புதுடில்லியும் நிராகரித்துள்ளமையால் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தாம் ஆதரிக்கப்போவதாக வாஷிங்டன் பகிரங்கமாக அறிவித்துள்ளமையால் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் அங்கம்வகிக்கும் ஏனைய நாடுகளும் தத்தமது நிலைப்பாடுகளை ஆழமாக மதிநுட்பத்துடன் பரிசீலித்து வருகின்றன.
அதுமட்டுமின்றி,எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவா மாநாடு ஆரம்பமானாலும் இலங்கை விவகாரம் தொடர்பில் மார்ச் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்திலேயே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறும் எனவும் அறியக்கூடியதாகவுள்ளது.

24 பிப்ரவரி 2012

சவேந்திர சில்வா மீதான தடை சரியானதே.

ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்புக்கான பான் கீ மூனின் ஆலோசனைக்குழுவில் இருந்து இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஷவேந்திர சில்வா தடைசெய்யப்பட்டமை சரியான தீர்மானம் என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் எனினும் ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர், Herve Ladsous இது தொடர்பில் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை ஆலோசனைக்குழுவின் தீர்மானம் மற்றும் சவேந்திர சில்வாவின் நிலைப்பாடு ஆகியவை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர், ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
எனினும் அவர் அதற்கு பதில் எதனையும் வழங்கவில்லை. எனினும் ஷவேந்திர சில்வா ஆலோசனைக்குழுவில் இருந்து தடைசெய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் கவனம் செலுத்தியுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சவேந்திர சில்வாவின் விடயம் இன்னும் உறுப்பு நாடுகளின் கைகளிலேயே தங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதேவேளை மாலை நேர செய்தியாளர் சந்திப்புக்காக வந்திருந்த ஐக்கிய நாடுகளின் பாலியல் வன்முறை தொடர்பான நிபுணர் மார்கட் லோஸ்ரோமிடம், ஷவேந்திர சில்வா நீக்கம் தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
இதன்போது, பதிலளித்த வோல்ஸ்ரோம், சவேந்திர சில்வா குறித்த ஆலோசனைக்குழுவில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.இது சரியான தீர்மானமாகவே இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடும் நடவடிக்கை!

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜெனிவாவில் மார்ச் 27ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை வலுப்படுத்த அமெரிக்காவுடன் மேலும் பல நாடுகள் இணைந்துள்ளன.
இலங்கை 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக ஐக்கியநாடுகள் சபை குற்றஞ்சுமத்தியிருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அறிக்கை சமர்ப்பித்தது.
எனினும் அதனை உலக நாடுகள் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. அவ் அறிக்கையில் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லை என இலங்கை மீது தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தான் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவர உள்ளதாக அமெரிக்கா அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

23 பிப்ரவரி 2012

மகிந்தவும் தடுக்கி விழுந்தார்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தடுக்கி விழுந்ததாக `லங்கா நியூஸ்வெப்` தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அவரது கால் ஒன்றில் வலி ஏற்பட்டதால், சிறப்பு மருத்துவ நிபணர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
எனினும் அவரது காலில் ஏற்பட்ட கடும் வலி தீரவில்லை. இதனால், நேற்று முன்தினம் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை சிறிலங்கா அதிபர் தவிர்த்துக் கொண்டுள்ளார்.
அதேவேளை, பாகிஸ்தானில் இருந்து திரும்பியதில் இருந்து சிறிலங்கா அதிபர் கோபமான மனோநிலையில் இருப்பதாகவும், அமைச்சர்கள் மீது எரிந்து விழுவதாகவும் சிறிலங்கா அதிபரின் ஊடகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வரும் ஓகஸ்ட் மாதம் வரை கிரகநிலை சரியில்லை என்று அவரது மூத்த சோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் சமய நிகழ்வுகளில் பங்கேற்குமாறும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளதுடன், முக்கியமான முடிவுகள் எதையும் இந்தக் காலப்பகுதிக்குள் எடுக்க வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

22 பிப்ரவரி 2012

மேலதிக பாதுகாப்பு கோருகிறது ஐ.நாவுக்கான இலங்கை தூதரகம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், தமக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்ஸர்லாந்து அதிகாரிகளிடம் ஜெனீவாவிலுள்ள தூதரக அதிகாரிகள் இந்த வேண்டுதலை விடுத்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தமிழர்கள் செல்லவுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள மற்றொரு குழு மார்ச் 7 ஆம் திகதி பெல்ஜியத்திலிருந்து ஜெனீவாவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். நிலமை மோசமடையலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இலங்கையின் நிரந்தர தூதரகம் கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமை மாநாடு நடக்கும் ஏக காலத்தில் அதற்கு முன்னர் பெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்த பல தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இருந்த போதும், தமக்கே ஐ.நாவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தமிழ் அமைப்பு ஏகபோக உரிமை கொண்டாடி, செய்திகளை வெளியிட்டுள்ளமை மிகவும் சிறுபிள்ளைத்தனமான இருப்பதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து இயங்கவேண்டிய இந்த தருணத்தில் குறிப்பிட்ட ஒரு அமைப்பின் அறிக்கையானது தமிழர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

21 பிப்ரவரி 2012

அது எந்த நாடு?குழப்பத்தில் சிறீலங்கா!

ஜெனிவாவில் வரும் 27ம் நாள் தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், இந்தத் தீர்மானத்தைச் சமர்ப்பிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ள நாடு எது என்று தீர்மானிக்க முடியாமல் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்தத் தீர்மானத்தை அமெரிக்காகவே சமர்ப்பிக்கலாம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நம்பியிருந்தது.
ஆனால், அமெரிக்கா இராஜதந்திரிகள் பிளேக்கும், மரியா ஒரேரோவும் கொழும்பில் வைத்து சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்கா இதனை சமர்ப்பிக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளது சிறிலங்கா. அதேவேளை அண்மையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்த மற்றொரு அறிக்கை, கனடா இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்று கூறியது.
கடந்த செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற அமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சியில் கனடா ஈடுபட்டிருந்தது. ஆனால், அதற்குப் போதிய ஆதரவு கிடைக்காததால் அந்த முடிவைக் கனடா கைவிட்டிருந்தது. எனவே இம்முறையும் கனடா இதற்குத் தலைமை தாங்கலாம் என்று அந்தத் தகவல் கூறியது.
இந்தநிலையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் வேறொரு நாடு இந்தத் தீர்மானத்தை முன்மொழியலாம் என்றும் கருதுகின்றனர். அமெரிக்கா அல்லது கனடா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால், அவற்றின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாடுகள் காரணமாக, சில உறுப்பு நாடுகள் குழப்பமடையலாம் என்பதாலேயே வேறொரு நாட்டின் மூலம் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று சிறிலங்கா அதிகாரிகள் நம்புகின்றனர்.
அது அணிசேரா அமைப்பிலுள்ள ஆபிரிக்க நாடாக இருப்பதற்கான வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது என்று சிறிலங்கா அதிகாரிகள் கருதுகின்றனர். இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கலாம் என்ற பரவலான கருத்தும் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பாராளுமன்ற அமர்விலும் ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு!

எரிபொருள் விலை உயர்வு குறித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக எதிர்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை - எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றில் இன்று பாதாகைகளை காண்பித்து எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று கூடும் மத்திய மாகாண சபை அமர்விலும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திட்டங்களை செயற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

20 பிப்ரவரி 2012

போர்க்குற்ற விசாரணைக்கு ஒருபோதும் மஹிந்த அரசு இணங்காது.

சர்வதேசத்தின் பிடிக்குள் இருந்து தப்பிப்பிழைப்பதற்கே ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் இராணுவ நீதிமன்றம் என்ற போலி நாடகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக அரங்கேற்றி வருகின்றது. மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தான்தோன்றித்தனமாக செயற்பட்ட ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு, போர்க்குற்ற விசாரணைக்கு ஒருபோதும் இணங்காது.

சிலவேளை சரத் பொன்சேகாவும், அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களும் குற்றவாளிகளாக இனங்காணப்படலாம். இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளைகல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். படுகொலை கலாசாரத்தை இலங்கைக்கு கற்பித்த அமெரிக்காவே படுகொலைகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோருவதை இலங்கை அரசு இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் இன்று ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கமுடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. வீதியில் இறங்கிப் போராடினால் சுட்டுப் படுகொலை செய்யும் ஜனநாயகமே நாட்டில் உள்ளது. தமிழ் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த அரசுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமான செயல். புலிகளை அழிக்கின்றோம் எனக் கூறி சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்களைப் படுகொலை செய்தது அரசு.
அன்று புலிகளில் ஆரம்பித்த கொலைவெறி, இன்று நாட்டு மக்களைச் சுட்டு வீழ்த்தும் நிலைக்கு வந்துவிட்டது. இவற்றைப்பற்றி நான் பேசுவதால் என்னையும் கடத்திச்சென்று படுகொலை செய்துவிடக்கூடும். ஏனெனில், அராஜகமான ஆட்சி முறையே நாட்டில் உள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். அதிகாரப்பரவலாக்கல் என்ற விடயம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத்தான் அரசு முதலில் செய்யவேண்டும்.
இதனை விடுத்து இராணுவ நீதிமன்றம் என்ற போலி நாடகத்தை ஆரம்பித்துள்ளது அரசு. போர்க்குற்ற விசாரணைக்கு மஹிந்த அரசு இணங்கும் என்ற நம்பிக்கை எமக்கு கடுகளவேனும் இல்லை. இவையெல்லாம் உலகை ஏமாற்றுவதற்கு அரங்கேற்றப்படும் போலி நாடகமாகும்.ஜெனிவா மாநாட்டை இலக்குவைத்தே அரசு இந்த அவசர மாற்றங்களைத் துரிதமாக முன்னெடுக்கின்றது என்றார்.

பீரிஸ் அமெரிக்கா செல்லமாட்டாராம்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தமாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் எழுதிய கடிதம் ஒன்றில், மார்ச் மாதம் வொசிங்டனுக்கு வந்து பொறுப்புக்கூறுதல், நல்லிணக்கம் மற்றும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் குறித்த சிறிலங்காவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டிருந்தார்.
ஆனால் ஹிலாரியின் அழைப்பையேற்று அடுத்தமாதம் அவர் அமெரிக்கா செல்லமாட்டார் என்று தெரிகிறது. அடுத்த மாதம் அவருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதே இதற்கான அதிகாரபூர்வ காரணம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இருந்தபோதிலும், ஏப்ரல் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பீரிஸ் ஆலோசிக்கலாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, அமெரிக்கப் பயணத்தின் முடிவில் உறுதிமொழிகள், கடமைகள் குறித்த கூட்டறிக்கை ஒன்றை வெளியிட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று அஞ்சியே பீரிஸ் அமெரிக்கா செல்லத் தயங்குவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் உலாவும் கதைகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
இன்னொரு புறத்தில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை பீரிஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பு வாரஇதழ் தெரிவித்துள்ளது.

19 பிப்ரவரி 2012

கூட்டமைப்பும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஜெனீவாவில் முறையிடப்படுமாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழு அமர்வுகளில் அறிவிக்கப்படவுள்ளதாக திவயின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைப் போன்று செயற்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழு அமர்வுகளில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் டோசி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து பேர், கூட்டமைப்பின் குற்றச் செயல்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் என்ன செய்ய வேண்டும் என்பதனை, புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனினால் பெயரிடப்பட்ட மூன்று பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தனர். விடுதலைப் புலிகளின் முள்ளிவாய்க்கால் பதுங்கு குழிகளிலிருந்து கிடைக்கப் பெற்ற ஆவணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்த தகவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதி வீட்டில் இருக்கின்றாரா என்ற உளவுத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கியதாக உயிரிழந்த அரசியல்வாதியின் மகன், அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா சென்று நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்துவேன் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, 37 அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஜெனீவா செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..

ஜெனீவாவை நோக்கி படையெடுக்கவுள்ள அரச பட்டாளம்!

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில்- பெரியதொரு அணியை சிறிலங்கா அரசு ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா எடுத்துள்ள அதிகாரபூர்வ முடிவை அடுத்து, ஜெனிவா கூட்டத் தொடருக்கான சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழு 52 பேர் கொண்டதாக விரிவாக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கிம், றிசாத் பதியுதீன், அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனிவிரத்ன, டிலான் பெரேரா, மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.
சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவுக்கு அமைச்சர்கள் ஜி.எல். பீரிஸ் மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர். மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 27ம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்தவாரம் இந்தக்குழு ஜெனிவா செல்லவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன, இதனை நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்ற வாதத்தையே இவர்கள் முன்வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.



18 பிப்ரவரி 2012

மறந்து போகுமோ ஊரின் நினைவுகள்?சுப்பர் சிங்கரில் பிஞ்சு உள்ளத்தின் கண்ணீர் பாடல்!

எப்படி மறக்கும் ஊர் நினைவுகள்?கனடாவில் இருந்து சென்று விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பிஞ்சு உள்ளத்தின் பாடல்,இல்லை இல்லை உள்ளக்குமுறல் என்றே சொல்லலாம் அந்த உள்ளக்குமுறல் கட்டாயம் கரையாத நெஞ்சங்களையும் கலங்கடிக்கும் என்பது உண்மை!புலம்பெயர் தேசங்களிலே வாழும் ஒவ்வொரு மனங்களும் நாம் எப்போது எம் மண்ணில் சுதந்திரமாக காலடி வைப்போம் என்ற ஏக்கத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறன.அடுத்தவனின் கெடுபிடியின்றி எம் நிலத்தில் நாம் வாழவேண்டும்.ஆயுத கலாச்சாரமற்ற ஓர் பூஞ்சோலையாக எம் ஊரை நாம் காணவேண்டும்.அதற்கு நாம் ஜனநாயக ரீதியில் போராடவேண்டும்.இந்த குழந்தை போல் எத்தனையோ குழந்தைகள் தமது ஏக்கத்தை மனதுள் புதைத்து வைத்திருப்பார்கள் என்பதை என்னும்போது நெஞ்சமே வெடித்துவிடும் போலுள்ளது.இதோ அந்தக் குழந்தையின் ஏக்கத்தை நீங்களும் காணுங்கள்,கேளுங்கள்.

17 பிப்ரவரி 2012

விலையேற்றத்தால் யாழ்,மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர்!

எரிபொருள்களின் விலைகளை அரசாங்கம் திடீரென பாரியளவில் அதிகரித்ததை அடுத்து யாழ்ப்பாண குடாநாடு உள்ளிட்ட வட மாகாணத்தில் பொருள்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படப் போகும் மாவட்டமாக யாழ்ப்பாணமே கருதப்படுகிறது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.. யாழ்ப்பாண மாவட்டம் தனது உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளுக்காக தெற்கையே நம்பி இருப்பதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அனைத்துப் பொருள்களும் தெற்கிலிருந்து தரை அல்லது கடல் மார்க்கமாகவே அங்கு எடுத்து செல்லப்படுகின்றன. இதனால் போக்குவரத்துச் செலவு அதிகமாக இருக்கிறது. எரிபொருள் விலையேற்றம் போக்குவரத்துச் செலவை மேலும் அதிகரிக்கும் நிலையில் பொருள்களின் விலை கட்டுப்பாடின்றி அதிகரிப்பதை தடுக்க முடியாது என்று மத்திய வங்கியின் பொருளாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுகள் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய அனைத்திற்கும் வடபகுதி, தென்னிலங்கையிலேயே தங்கியிருப்பதால் அவற்றின் விலையில் உடனடித் தாக்கம் இருக்கும் என்வும் அவர் கூறினார். ஒரு மனிதனின் ஒரு மாதத்துக்குரிய ஆகக் குறைந்த வாழ்க்கைச் செலவு சுட்டெண் நாட்டின் ஏனைய இடங்களைவிட யாழ்ப்பாணத்திலேயே அதிகமாகவுள்ளது.
இலங்கையின் சராசரி வாழ்க்கைச் செலவு 3,307 ரூபாவாக இருக்கையில் யாழ்ப்பாணத்தில் அது 3,555 ரூபாவாகக் காணப்படுகின்றது. உணவு மற்றும் உணவல்லாப் பொருள்களின் நுகர்வு விலையைக் கொண்டே வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் கணிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களிலும் கூட இந்த நிலையே காணப்படும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஜீவ் காந்தி கொலைக்கு அமெரிக்காவே காரணமாக இருக்கலாம் என்கிறார் விமல்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்துடன் அமெரிக்காவிற்கு தொடர்பு இருப்பதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏவின் திட்டத்தின் பிரகாரம் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். பிராபகரன், ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் இயக்கத்திற்கு ஏற்படக் கூடிய பாரிய பாதக நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே தமது நம்பிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஆளுமை செலுத்த முடியாது என்பதனை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததாக விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி தமிழகத்தின் சிறிபெரம்பத்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி,தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

16 பிப்ரவரி 2012

மரியாதை போச்சே"பீரிசுக்கு வந்த ஞானம்.

சிறிலங்கா அதிபரால் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளால் அனைத்துலக சமூகத்தில் தான் மரியாதையை இழந்து விட்டதாக புலம்பியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நடந்த இராப்போசன விருந்தில் தனது நெருக்கமான நண்பர்களிடமே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விருந்தில், சிறிலங்காவின் தற்போதைய நிலவரம் தொடர்பாக நீண்டநேரம் பேசிய பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுடனான தனது சந்திப்பில் என்ன நடக்கக் கூடும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தவறியது ஏன் என்ற ஹிலாரியின் கேள்விக்கு பதிலளிப்பதில் தான் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த முறை அமெரிக்கா சென்று ஹிலாரியை சந்தித்தபோது, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்று உறுதியளித்திருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் வழிகாட்டலை நம்பி அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதாக தாம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குறைபட்டுள்ளார். தனது அமைச்சின் விவகாரங்களில் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, பசில் ராஜபக்ச ஆகியோர் தலையிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இப்போது உணவகம் போலாகி விட்டதாகவும் புலம்பியுள்ளார்.

15 பிப்ரவரி 2012

கிளிநொச்சியில் வீடுகளுக்குள் நுழையும் நிர்வாண மனிதன்!

கிளிநொச்சி சாந்தபுரக் கிராமத்தில் நிர்வாணமான நிலையில் மர்ம மனிதன் நடமாடுவதாகவும், இரவு வேளைகளில் விடுகளுக்குள் நிர்வாணமான நிலையில் நுழைவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் இரவு வேளைகளில் விடுகளுக்குள் நுழைதல் , நிர்வாணமாக நடமாடுவது அப்பகுதி மக்களால் அவதானிக்கப்பட்டு அவனை துரத்திச் செல்லும்போது இராணுவத்தினரின் முகாம்களை நோக்கி ஓடி மறைவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் மர்ம மனிதனின் நடமாட்டம் தொடர்பாக அப்பகுதி இராணுவத்தினரிடம் தெரிவித்தால் தமக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என தெரிவித்ததாகவும் அவ்வாறானவர்களை பிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
சாந்தபுரம் கிராமத்தில் கடந்த சில வராங்களாக இந்த மர்மமனிதன் நடமாட்டம் இடம்பெற்று வருகின்றது. அதிகாலை வேளையில் நிர்வாணமாகவும் சிலசமயம் காற்சட்டையுடனும், இந்த மர்மமனிதன் வீடுகளிற்குள் நுழைகின்றான். மக்கள் துரத்திச் செல்கின்றபோது, இராணுவத்தினரின் காவலரண்களை நோக்கி ஒடிவிடுகிறான். இதேவேளை கிராமத்திற்குள் செல்லுகின்ற சகல வீதிகளிலும் படையினர் காவலில் உள்ள நிலையில் வெளி நபர்கள் எவரும் நுழைய முடியாதது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழினிக்கு தொடரும் விளக்கமறியல் உத்தரவு.

சட்டமா அதிபரின் ஆலோசனைக் கிடைக்காததால் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் மகளிர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுப்ரமணியம் சிவகாமி என அழைக்கப்படும் தமிழினி நேற்றையதினம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.
தமிழினி தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் முழு ஆவணமும் சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டனர். எனினும் சந்தேகநபர் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட மா அதிபர் இன்னும் ஆலோசனை வழங்கவில்லை என இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி தமிழினியை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

14 பிப்ரவரி 2012

தாய்லாந்தில் தீக்குளிக்க முயன்ற தமிழீழ தமிழரை ஐ.நா.அதிகாரிகள் காப்பாற்றினார்!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று மதியம் தனது துணைவியார், மூன்று பிள்ளைகள் சகிதம் பாங்கொக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் செயலகத்திற்கு சென்ற கை.தேவகுமார் (37) என்ற குடும்பத்தவர், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்குமாறு கோரி தனது உடலில் எரிபொருளை ஊற்றித் தீமூட்டிக் கொள்ள முற்பட்டுள்ளார்.
மிகவும் பதற்றமான நிலையில் காணப்பட்ட இவரை அணுகிய ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், இவரை சாந்தப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றதோடு, பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இறுதி யுத்தத்தில் தமிழீழத்திலிருந்து தனது குடும்பத்துடன் தாய்லாந்திற்குப் புலம்பெயர்ந்த இவர், பாங்கொக்கில் தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வசித்து வருகின்றார்.
எனினும் வரும் நவம்பர் மாதம் இவரது வதிவிட அனுமதி காலவதியாகும் நிலையில் கொழும்புக்கு தான் நாடுகடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இவர் தீக்குளிக்க முற்பட்டதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிங்கள மாணவனின் பொய் முறைப்பாட்டால் தமிழ் மாணவன் இடைநிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்கள் திங்கட்கிழமை முதல் விரிவுரைகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்திய செயலைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் குதித்துள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது:-
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு இம் முறை சிங்கள மாணவர்களும் தெரிவாகியிருந்தனர். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சிங்கள மாணவர்களில் ஒருவர், ‘மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தனக்கு பகிடிவதை செய்து துன்புறுத்தினார்’ என்று பல்கலைக் கழக நிர்வாகத்திடம் முறைப்பாடு ஒன்றைக் கொடுத்தார்.
இந்த முறைப்பாட்டைச் சாட்டாக வைத்து அவர் தற்போது தென்னிலங்கையிலுள்ள பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்று கற்கையைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் சிங்கள மாணவனின் முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து குறித்த விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவரை பல்கலைக்கழக நிர்வாகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தும் முடிவை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்த அறிவிப்பு பக்கச் சார்பானது எனத் தெரிவித்து, இடைநிறுத்தப்பட்டுள்ள மாணவனை மீண்டும் கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரி நேற்று திங்கட்கிழமை முதல் விரிவுரைகளைப் புறக்கணித்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“குறித்த சிங்கள மாணவர் யாழ்.பல்கலையில் கற்பதை ஆரம்பம் முதலே விரும்பவில்லை. பகிடிவதை முறைப்பாடு ஒன்றைக் கொடுத்துவிட்டு, அதனை காரணங்காட்டி தான் நினைத்தபடி வேறொரு பல்கலைக்கழகத்துக்குச் சென்றுவிட்டார். குறித்த சிங்கள மாணவர் கொடுத்த முறைப்பாடு தவறானதென்றும், மாணவர் விடுதியில் அவ்வாறான பகிடிவதை எதுவும் நடக்கவில்லை என்றும் அங்குள்ள சிங்கள மாணவர் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் துணைவேந்தருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.
அதனைக் கணக்கில் எடுக்காது, முறைப்பாடு கொடுத்த சிங்கள மாணவர் சமூகமளிக்காத நிலையிலும் கூட, எமது சக மாணவன் மீது நியாயமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாடு கொடுத்த சிங்கள மாணவன் பாரிய அரசியல் பின்புலம் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். அதனாலேயே இவ்வாறான பக்கச்சார்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இதனைக் கண்டித்து விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் சாதகமான முடிவு கிடைக்காத பட்சத்தில் சகல பீடங்களையும் இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொள்வது பற்றி ஆராயவுள்ளோம்”.-
என்று விஞ்ஞானபீட மாணவர்கள் தெரிவித்தார்கள்.

13 பிப்ரவரி 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை"அமெரிக்கா உறுதி.

இலங்கை அரசு என்ன உறுதி மொழிகளை வழங்கினாலும் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றங்களையும் செய்யப்போவதில்லை என்று அமெரிக்கா நேற்று அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஓட்டேரோ மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமெரிக்கத்தூதுவ ரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரும் கலந்து கொண்டார்.தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பின்போது அரசியல் தீர்வு, அரசு கூட்டமைப்புக்கும் இடை யிலான பேச்சின் தற்போதைய நிலைமைதமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் நடைமுறைப்பிரச்சினைகள், போர்க்குற்ற விசாரணை விவகாரம் என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
தமிழ்க் கூட்டமைப்பு சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசுடன் பேசுவதாக இதன்போது உறுதியளித்துள்ள அமெரிக்க இராஜதந்திரிகள், பொறுப்புக் கூறும் கடப்பாட்டிலிருந்து அரசு விலகி விடமுடியாது என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளின் அமுலாக்கம் என்பன பற்றி இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டிருக்கிறது.
ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை அமுலாக்குவதில் அரசு அக்கறை இல்லாமல் இருப்பதால் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு வலியுறுத்தும் தீர்மானமொன்றை எதிர்வரும் ஜெனிவா மாநாட்டில் நிறைவேற்ற அமெரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு குறிப்பிட்டுள்ள அமெரிக்க இராஜதந்திரிகள், இப்போது அரசு வழங்கும் உறுதிமொழிகளை ஏற்று அந்தத் தீர்மானத்தை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் அமெரிக்கா அக்கறையுடன் இருப்பதாகவும் அமெரிக்க இராஜதந்திரிகள் இந்தச் சந்திப்பில் உறுதியாகத் தெரிவித்துள்ளனர் என அறிய முடிந்தது.

12 பிப்ரவரி 2012

நட்பாக ஆயுதத்தை கொடுத்தோம் இலங்கை தப்பாக பயன்படுத்தியது"பாகிஸ்தான் தூதுவர் சொல்கிறார்!

நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன், ஒரு நட்பு நாடு என்ற முறையில் நாம் அவர்களுக்கு ஆயுதத்தைக் கொடுத்தோம். எனினும் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றமை உண்மைதான்.
இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.
நோர்வே பாராளுமன்றத்தில் தமிழ் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் முன்னாள் இலங்கைக்கான பிரதி பாகிஸ்தான் தூதுவராக இருந்து தற்போது நோர்வேக்கு தூதுவராக பதவி உயர்த்தப்பட்டுள்ள பாகிஸ்தான் தூதுவர்.
இவர் பாகிஸ்தான் தூதுவராக இருந்த காலத்தில் பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை பணிப்பாளர் இலங்கையில் நிலை கொண்டிருந்தமையும் கொழும்பில் நடந்த தற்கொலை தாக்குதலில் குறித்த தூதுவர் உயிர் தப்பியும் இருந்தார்.
அல்கொய்தா இயக்க பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லபட முதலே பாகிஸ்தான் நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு தென்கிழக்கு ஆசியாவில் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டது.
இன்று அமெரிக்காவால் கைவிடப்பட்ட நிலையில் சீனாவின் சலுகைகளுக்கு மட்டும் கை ஏந்தும் நிலையில் இருக்கும் பாகிஸ்தான் தூதுவராக இருக்கும் நீங்கள் காஷ்மீரில் இந்திய படைகள் செய்யும் அவலத்திற்கு இங்கு 300 பேர் மத்தியில் உரையாற்றுகிறீர்கள்.
காஷ்மீரில் அழிக்கபட்ட இனத்தில் இருந்து வந்ததாக கூறும் நீங்கள் தூதுவராக இருக்கும்போதுதான் தமிழர்கள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உங்கள் ராஜதந்திர அறிவுப்படி இலங்கையில் கொல்லப்பட்டார்கள்.
இது தமிழருக்கு மட்டும் அல்ல நோர்வேயின் சமாதான முகத்திரைக்கு நீங்கள் வைத்த தீயே. இவ்வாறு இருக்கும்போது நோர்வேயின் உதவியை காஷ்மீருக்கு எந்த நிலையில் கேட்கிறீர்கள் என கேட்டபோது?
இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
ஆனால் நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு.
இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன்.
பாகிஸ்தான் எந்தவித முன்னணிச் செயற்பாடுகளிலும் இலங்கை யுத்த விடயத்தில் ஈடுபடவில்லை. இராணுவ போர் குற்றம் மனிதஉரிமை விடயங்களை கவனித்தால் நான் அதைப்பற்றி விரிவாக போகவிரும்பவில்லை.
நான் இலங்கையில் அண்ணளவாக ஒரு வருடமும் 6 மாதங்களும் தங்கி இருந்தேன். எனக்கு தெரியும் இரண்டு பக்கமும் முறைப்பாடுகள் உள்ளது.
இலங்கை வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் எனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். (கதிர்காமரும் பாகிஸ்தான் உளவுத்துறையும் வாழ்ந்தவீடுகள் அருகில்) ஒரு அமைதியான நல்ல முதியவர். அவர் கொல்லபட்ட விதம் அவ்வாறு நடந்திருக்க கூடாது.
எனது நண்பரே! யுத்தம் மிகவும் வலியானது. இலங்கைக்குப் பாகிஸ்தான் ஒரு நட்பு நாடு என்ற முறையில் தனது உதவியை செய்தது. இலங்கை அரசு ஜனநாயகப்படி தெரிவு செய்யபட்ட ஒரு அரசு என்பதால் பாகிஸ்தானின் உதவியை நாடியது. ஆயுதங்களை தருமாறு கோரியது.
ஐ.நா. சட்டப்படி நாம் அவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்தோம். எனக்கு தெரியும் புலிகள் சில விடயங்களுடன் முரண்பட்டனர். அவை மிகவும் சிறியவை.
பின்னர் சுனாமி வந்தது. சுனாமியே புலிகளை பலவீனபடுத்தியது. ஆனால் பாகிஸ்தான் அரசு புலிகளை பலவீனபடுத்தவில்லை. நான் இலங்கையில் தங்கி இருந்தபோது சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் தங்கள் உயிர்களை சுனாமியில் பரிதாபமாக பறிகொடுத்தனர்.
பின்னர் நான் வெளியேறும்போது இலங்கை இராணுவம் யுத்தத்தை ஆரம்பித்தது. நான் வெளிக்கிட்ட பின்னரே யுத்தம் ஆரம்பமானது. நான் நேரடியாக சம்மந்தபடவில்லை.
யுத்தில் மேலும் இலங்கை இராணுவம் எங்களிடம் அனுமதியோ ஆலோசனையோ கேட்கவில்லை. அவர்கள் அனுபவம் வாய்ந்த படைகள். அவர்களின் அனுபவத்தில் செய்தனர். நான் ஏற்றுக்கொள்கிறேன். நானும் உணர்கிறேன். அங்கு சில மனித உரிமை மீறல்கள் கொலைகள் நடந்துள்ளது.
எனது நண்பரே! யுத்தம் என்பது மிகவும் கொடிய ஒரு பாதை. எவர் எந்த பக்கத்தால் வருபவர் என்று தெரியாது. நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் அவர்களுக்கு இலங்கையில் நடந்தவற்றிக்கு. இரண்டு பக்கமும் இந்த கொடிய இன மோதலில் துன்பப்பட்டுள்ளார்கள்.
தற்போது நான் நினைக்கிறேன் அந்த நிலமை மாறிவிட்டது. புதிய ஒரு அத்தியாயம் இலங்கையில் உருவாகி உள்ளது. அங்கு எல்லோரும் நிம்மதியாக வாழலாம் என்று நான் உணருகிறேன்.

கொழும்பில் தமிழ் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்!

கொழும்பின் பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் நேற்றுப் பிற்பகலில் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப் பட்டார். வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாகப் பட்டப் பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் கொழும்பில் பரபரப்பு ஏற்பட்டது. 7 பேர் கொண்ட கும்பல் ஒன்றே இந்தக் கடத் தலில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.
மின் உபகரண வர்த்தகரான இராமசாமி பிரபாகரன் (வயது 37) என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பெனிக்குயிக் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பாக நின்றிருந்த போது அவர் கடத்தப்பட்டார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
பதுளையைச் சேர்ந்தவரான பிரபாகரன் கொழும்பை மையமாகக் கொண்டு வணி கம் செய்து வந்தார். அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தால் யாரும் பதிலளிக்காமல் இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
பிரபாகரன் ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டு 28 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி விடுவிக்கப்பட்டிருந்தார்.
தன்னைத் தேவையற்றுத் தடுத்து வைத்திருந்தமைக்காக 10 கோடி ரூபா இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையிலேயே அவர் கடத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைக் கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் விசாரணையின் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் சுமத்தப்படவில்லை. இந்தச் சதி முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனக் கூறப்பட்டுக் கைது செய்யப்பட்டவரும் பிரபாகரனின் நண்பருமான இராணுவ அதிகாரி ஒருவர் இன்னமும் தடுப்புக் காவலில் உள்ளார்.
பிரபாகரனின் கடத்தலுக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

11 பிப்ரவரி 2012

கோபப்படும் சவேந்திர சில்வா.

இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்தின் செய்தியாளர் மத்யூ ரசல் லீயிடம், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்ன தெரிவித்துள்ளார். எப்போதும் ஜெனரல் சவீந்திர சில்வாவை போர்க்குற்றவாளி என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டுவதாலேயே அவர் கோபத்தில் இருப்பதாகவும் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் உள்ள மிலேனியம் விடுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இரவு விருந்திலேயே இன்னர்சிற்றி பிரசின் செய்தியாளரிடம் பாலித கோகன்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஈரான் தேசியநாளை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட இந்த இரவு விருந்தில் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டிருந்தார்.
அவருடன் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ உரையாடிய போது - நீங்கள் எப்போதும் எனக்கு எதிராகவே எழுதுகிறீர்கள் - என்று கடிந்து கடும் கோபத்தில் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனக்கு எதிராக தனிப்படக் போர்க்குற்றம் சாட்டப்படவில்லை என்றும் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

10 பிப்ரவரி 2012

யாழ் பத்திரிகைகளை மிரட்டுகிறார் டக்ளஸ்.

எனது பையன்களை கவனிக்கச் சொன்னால் அக்கறையற்று பேசாமல் இருக்கிறார்கள். இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் போல என திருவாக்கு மலர்ந்துள்ளார் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. நேற்று மாலை தனது சிறீதர் திரையரங்கில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளில் சிலரை சந்தித்து உரையாடினார். அவ்வேளை அங்கு சமூகமளித்திருந்த வடக்கு மாகாண ஆளுநரது செயலாளரான எல்.இளங்கோவன் எனும் அதிகாரி பத்திரிகையில் வெளிவந்த செய்திகளது நறுக்குகள் சிலவற்றை அமைச்சரிடம் காண்பித்தார்.
கட்டப்பட்டிருந்த நீச்சல் தடாகம் தொடர்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது. வன்னியில் நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் வகுப்பறைக்கட்டிடங்கள்; எதுவுமே இல்லையெனவும் மரங்களின் கீழேயே மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி கற்று வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தன நாளிதழ் செய்திகள். இந்நிலையில் அப்பாடசாலைகளில் சிறு திருத்தங்களை மேற்கொள்ளவென ஒதுக்கப்பட்ட ஜந்து மில்லியனை நீச்சல் தடாக அலங்கரிப்பிற்கென ஒதுக்கியது நியாயமாவென கேள்வி எழுப்பியிருந்தன.
இது தொடர்பாக பத்திரிகையில் வெளிவந்த செய்திகளது நறுக்குகள் சிலவற்றையே வடக்கு மாகாண ஆளுநரது செயலாளரான எல்.இளங்கோவன் எனும் அதிகாரி அமைச்சரிடம் காண்பித்துள்ளார்.இதனால் சீற்றமடைந்த அமைச்சர் அங்கு பிரசன்னமாகியிருந்த வேலையற்ற பட்டதாரிகளிடையே உரையாற்றிய அமைச்சர் எனது பையன்களை நேரில் போய் அவர்களை கவனிக்க சொன்னால் அக்கறையற்று பேசாமல் இருக்கிறார்கள்.இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் போல என கூறினார்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் மீது 2006ம் ஆண்டில் இடம்பெற்ற தாக்குதல் ஈபிடிபியாலும் அவர்களோடு இணைந்த கடற்படையினராலும் நடத்தப்பட்டதாக பஸில் ராஜபக்ஸவை மேற்கோள் காட்டி அமெரிக்க தூதரகம் அனுப்பிய குறிப்பு மூலம் அண்மையில் விக்கிலீக்ஸினால் அம்பலப்படுத்தப்பட்டு இருந்தது.இத்தகைய சூழலிலேயே அமைச்சர் இவ்வாறு திருவாய் மலர்ந்துள்ளார்.

09 பிப்ரவரி 2012

தமிழர் வீட்டில் கொள்ளையிட சென்ற தமிழன் பொலிசில் சரண்!

இத்தாலி நாபோலியில் உள்ள நடராஜா வசந்தகுமார் என்பவருடைய
வீட்டில் கொள்ளையிடச் சென்ற திருடன் பொலிசில் சரணடைந்தான்.
இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது.
கடந்த முதலாம் திகதி காலை 9.30மணி அளவில் வசந்தகுமார் குடும்பத்திற்கு
நன்கு பரிச்சயமான(தமிழர்)ஒருவர் அவர்கள் வீட்டிற்கு சென்று,கதைவை
திறக்குமாறும் அவர்களுக்கு கொடுக்க சீடி ஒன்று கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து திருமதி வசந்தகுமார் கதவை திறந்துள்ளார்.
கதவை திறந்ததும் உள்ளே நுழைந்த நபர் திடீரென கத்தியை எடுத்து
நகைகளை கழட்டுமாறு மிரட்டியுள்ளார்.இதையடுத்து நடந்த இழுபறியில்
கத்தி முறிந்ததுடன் பெண்ணின் கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது,அப்பெண்ணின்
தலையை பிடித்து சுவரில் அடித்ததால் தலையிலும் காயம் ஏற்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.இனியும் நின்றால் ஆபத்தென உணர்ந்த அந்நபர் இந்த விஷயத்தை
வெளியே சொன்னால் எல்லோரையும் கொன்று விடுவேன் என எச்சரித்து விட்டு தப்பித்திருக்கிறார்.
அதன் பின்னர் இவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
விரைந்து வந்த பொலிசார் அவரை தமது வாகனத்திலேயே ஏற்றி சென்று
மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.இதை அறிந்து கொண்ட அப்பகுதி
தமிழ் மக்கள் அந்தக் கொள்ளையனை தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
தான் தேடப்படுவதை அறிந்து கொண்ட அக்கொள்ளையன் தானாகவே
சென்று சரணடைந்துள்ளதாகவும்,பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நபர் பிரபல இசைக்கலைஞர் எனவும்,வேலையற்று இருக்கும்
இவர் இப்படியான சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கனடா வாழ் தமிழர்.

அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பொருள் உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒன்ராரியோவை வசிப்பிடமாகக் கொண்ட ரமணன் மயில்வாகனம் என்பவர், 2006ம் ஆண்டில், விடுதலைப் புலிகளுக்கு நீர்மூழ்கி வடிவமைப்பு தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.
இவர் நேற்று நியுயோர்க் புறூக்லின் மாவட்ட நீதியாளர் முன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து ஆகக்கூடியது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
கனேடிய குடியுரிமை பெற்றவரான 35 வயதான மயில்வாகனம் ரமணன் முன்னர் அமெரிக்காவில் வசித்து வந்தவராவார்.
2009ம் ஆண்டில் கனேடிய அதிகாரிகளால் ரொரன்ரோவில் கைது செய்யப்பட்ட அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
22,000 டொலர் பெறுமதியான நீர்மூழ்கி வடிவமைப்பு மென்பொருளை இவர் பிரித்தானிய நிறுவனம் ஒன்றிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்காக கொள்வனவு செய்ய முயன்றதாகவும், கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் உள்ள நிறுவனம் ஒன்றிடம் இரந்து புலிகளுக்காக இரவுப்பார்வைக் கருவிகளை வாங்க முற்பட்டதாகவும் ரமணன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு கணினி கருவிகள், இலத்திரனியல் பொருட்கள், தொடர்பாடல் கருவிகள் போன்றவற்றை வாங்க உதவியதாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

08 பிப்ரவரி 2012

மாடியிலிருந்து விழுந்த ரம்புக்வெலவுக்கு சத்திரசிகிச்சை!

அவுஸ்ரேலியாவில் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த சிறிலங்காவின் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெலவுக்கு நாளை மீண்டும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தத் தகவலை அவரது ஊடகச்செயலர் சரத் தம்பவின்ன நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.
மெல்பேர்னில் உள்ள விடுதியின் மூன்றாவது மாடியின் ‘பல்கனி‘யில் இருந்து நேற்று முன்தினம் தவறி விழுந்த சிறிலங்கா அமைச்சர் கெகலிய ரம்புக்வெலவின் இரு கால்களும் முறிந்து போனதுடன் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
மாடியில் இருந்து தவறி வீழ்ந்தபோது கெகலிய ரம்புக்வெல மதுபோதையில் இருந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு ஏற்கனவே இரண்டு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்ட நிலையிலேயே நாளை மீண்டும் மற்றொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தநிலையில் ரம்புக்வெலவின் மனைவி நேற்று அவசரமாக அவுஸ்ரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
றோயல் கல்லூரி துடுப்பாட்ட அணித் தலைவரான மகன் ரமித் முழங்காலில் காயமடைந்ததை அடுத்தே அவரைப் பார்க்க ரம்புக்வெல அவுஸ்ரேலியா சென்றிருந்தார்.

அஞ்சல்தலை வெளியீடு,நோர்வே மீது பாய்கிறது ஸ்ரீலங்கா!

நோர்வேயில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல்தலை வெளியான விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்துடன் தொடர்பு கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகள் இந்த அஞ்சல்தலைகளை தடைசெய்வது தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சுடனும் அந்த நாட்டின் அஞ்சல், தொலைத்தொடர்புத் துறையுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்ட போது, சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், நோர்வே இதற்கு அனுமதி வழங்கியது குறித்து சிறிலங்கா அரசு தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி சந்தைக்கான புதிய கட்டிடத்தை சேனாதிராஜாவும் தேவானந்தாவும் திறந்து வைத்தனர்!

திருநெல்வேலி சந்தைக்கான புதிய கட்டிடத் தொகுதியை வடக்கின் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் மாவை சேனாதிராஜாவும் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் குதூகலமாகத் திறந்து வைத்தனர்.
திருநெல்வேலி சந்தைப் பகுதியில் 80 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களான மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மிக நெருக்கமாக சிரித்து கதைத்துக் கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்களிற்கு பெரிதும் ஆச்சரியத்தைக் கொடுத்ததாக அதில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளரிடம் தெரிவித்ததோடு - சம்பந்தன் சந்திரகாந்தன் சேர்ந்தால் கிழக்கில் குற்றம்!-மாவை டக்ளஸ் சோந்தால் வடக்கில் சுத்தம்! இது என்ன அரசியலப்பா என அலுத்துக்கொண்டாராம்.
எது என்னவோ இந்த ஒற்றுமையை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கூட்டமைப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பரஸ்பரம் தொடர்ந்து கடைப்பிடித்தால் தமிழருக்கு யாரு பகைவர்! நிம்மதி பிறக்கும்.
இந்த ஒற்றுமை தமிழர் நலன் சார்ந்ததாக இருந்தால் அதை நிச்சயம் தமிழ் மக்கள் வரவேற்பார்கள்.

07 பிப்ரவரி 2012

விமல் வீரவன்சவின் மனைவியை காட்டுக்குள் இருந்து மீட்டது பொலிஸ்!

அடர்ந்த காட்டுக்குள் தொலைந்து போன சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி - 24 மணிநெரம் கழித்து கடும் தேடுதலின் பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யால தேசிய வனவிலங்குகள் சரணாலயத்தின் மிகவும் ஆழமான பகுதியில் அமைந்துள்ள கெபிலித்த ஆலயத்துக்கு சசி வீரவன்ச ஒரு குழுவினருடன் சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் மூன்று வாகனங்களில் சென்ற அவர்கள் நடுக்காட்டுக்குள் சகதிக்குள் சிக்கிக் கொண்டன.
இதனால் சசி வீரவன்ச உள்ளிட்டோரால் காட்டுக்குள் இருந்து வெளியேற வழி தெரியாமல் திணறினர்.
ஒரு நாள் முழுவதும் அவர்கள் காட்டுக்குள் தவித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்றுக்காலை மூன்று காவல்துறைக் குழுக்கள் தேடுதலில் இறக்கி விடப்பட்டன.
இதையடுத்து அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்டு வரப்பட்டதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

டோகோவில் இருந்து 28 பேர் நாடு திரும்பினர்!

டோகோ முகாமில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 28 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக எமது கட்டுநாயக்க வானுர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்..
இதில், 3 பெண்களும் 25 ஆண்களும் அடங்குவதாக அவர் கூறினார்..
இவர்களில் இரண்டு தமிழர்களும் ஒரு இஸ்லாமியரும் அடங்குகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியினில் 200 பேர் இலங்கையில் இருந்து கனடா நோக்கி பயணித்தனர்.
இதன்போது அவர்கள் டோகோவில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் 28 பேரே இவ்வாறு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

06 பிப்ரவரி 2012

சிங்கள சுதந்திர நாளில் பாரிசில் உள்ள தூதரகத்தில் சிங்கக்கொடி பறக்கவில்லையாம்!

சிறிலங்காவின் 64 வது சுதந்திர நாளன்று பாரிசில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் சிறிலங்காவின் சுதந்திர நாளை முன்னிட்டு சிறிலங்காவிலும், வெளிநாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களிலும் சிறிலங்காவின தேசியக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஆனால் பாரிசில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் சிறிலங்காவின் தேசியக்கொடி பறக்கவில்லை.
மாறாக சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிரான போராட்டம் ஒன்றே நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்கள், சிறிலங்காவில் தமிழர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியிருத்துடன் முழக்கங்களையும் எழுப்பினர்.
பாரிசில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் சுதந்திர நாளில் சிறிலங்காவின் தேசியக்கொடி பறக்க விடப்படாததற்கு பௌத்த பிக்குகளும் சிங்கள அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா தூதரக அதிகாரி ஒருவர், வேலை நாட்களில், செயலக பணிநேரத்தின் போது மட்டும் தான் சிறிலங்காவின் தேசியக்கொடி பறக்க விடப்படும் என்றும், பணிநேரம் முடிந்த்தும் அது இறக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்,வரும் மகிந்தவின் பாதுகாப்பு பணியிலிருந்து தமிழ் பொலிசார் நீக்கம்.

யாழ்ப்பாணம் வரும் மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் இருந்து தமிழ்ப் பொலிஸார் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டு விட்டனர் என்று தெரிய வருகின்றது.
ஜனாதிபதியின் பாதுகாப்பு விடயம் தொடர்பாக நேற்று யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொலிஸா ருக்கான கூட்டம் ஒன்றில் இது குறித்து அறிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தரும் ஜனாதிபதி, சாவகச்சேரி, யாழ்.மத்திய கல்லூரி, மாவட்ட செயலகம், நகுலேஸ்வரம் ஆகிய இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி கலந்து கொள்ளும் இந்த நிகழ்வுகள் எவற்றிலும் தமிழ்ப் பொலிஸார் பாதுகாப்புப் பணிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரே இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று யாழ்.பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரால் தமிழ்ப் பொலிஸாருக்குக் கூறப்பட்டுள்ளது.தமிழ்ப் பொலிஸார் வீதி ஒழுங்குகள் மற்றும் வீதியில் ஜனாதிபதியின் போக்குவரத்துக்கான ஒழுங்குகள் போன்றவற்றைக் கவனிக்கும் படி பணிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பாதுகாப்பு விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்துவிட்டுத் தமிழ்ப் பொலிஸாரை, ஜனாதிபதி பிரவேசிக்கும் இடங்களுக்குச் செல்ல முடியாது என்ற அறிவிப்பது அவர்களை அவமதிப்பது போன்றது மட்டுமன்றி தமிழ்ப் பொலிஸாரை அதிருப்தியடையவும் செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

05 பிப்ரவரி 2012

திருமலையில் சிங்களவர்களின் தாக்குதலுக்கு உள்ளானோரை கஜேந்திரன் சந்தித்தார்.

திருமலையில் சிங்களவர்களின் தாக்குதலில் காயமடைந்தோரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினா் நேரில் சந்த்திதுள்ளனா். கடந்த 28-1-2012 அன்று திருகோணமலை நகரசபை எல்லைக்குட்பட்ட மட்டக்களி என்னுமிடத்தில் உள்ள விநாயகபுரம் என்ற கிராமத்தினுள் புகுந்த சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட இனவெறித் தாக்குதலை நடாத்தியிருந்தனா்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினா் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனா். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளரும், உபதலைவா்களில் ஒருவருமான ஹரிகரன், மற்றும் பொது செயலாளா் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று காடையா்களால் தாக்கப்பட்ட பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன், சேதமாக்கப்பட்ட வீடுகளின் வாயில் கதவுகளையும் பார்வையிட்டுள்ளனா்.
தாக்குதல் நடாத்திய சிங்களவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடாத்தும் போது “இது எங்கட இடம் இங்க இருக்கிற தமிழா்கள் அனைவரும் நாளை காலை விடிவதற்குள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்” என்று கத்தியவாறு தாக்குதல் நடாத்தியதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனா். மேலும் சிங்களவா்கள் வந்திருக்கின்றோம் யாரும் வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்றும் கூக்குரலிட்டு எச்சரித்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனா்.
தாக்குதல் நடத்தியவா்கள் வாள்கள், மற்றும் கற்கள் கொண்டு தாக்கியதாகவும், கொட்டன்கள் மற்றும் கைகளாலும் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனா். இத் தாக்குதலை நடாத்தியவா்கள் நன்கு திட்டமிட்டு இப்பகுதியில் குடியிருக்கும் தமிழ் மக்களை அங்கிருந்து விரட்டியடிக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமையை நன்கு உணரக்கூடியதாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடம் தெரிவித்துள்ளனா்.

ஜெர்மனியிலும் தேசியத்தலைவரின் படம் பொறிக்கப்பட்ட தபால் தலைகள்.

ஜெர்மனியில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் இலங்கைத் தூதரகத்தினர் மீண்டும் ஓடி அலைகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கனடா மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் போல் ஜெர்மனியிலும் கடந்த வாரம் கேணல் கிட்டு மற்றும் தியாகி முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது.
தமிழர்கள் தமது தேசிய முத்திரைகளை வெளியிடுகிறார்கள் என்பதால் ஜெர்மனியில் மணிக்கற்கள் வியாபார நிறுவனம் ( Carl Faller Institute ) ஒன்று சிறிலங்காவின் மணிக்கற்கள் படங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளை வெளியிட்டு இலங்கை தபால் அமைச்சரிடம் அன்பளித்தது.
இதை கண்ட இலங்கை தபால் அமைச்சர் (Jeevan Kumaratunga) ஜீவன் குமாரதுங்க , இலங்கையின் இறைமையை பாதிக்கும் வண்ணம் ஏனைய ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது ஜெர்மன் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளை வெளியிட அனுமதி வழங்காமல் தமக்கு பெருமையை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு Carl Faller Institute நிறுவனத்தின் இயக்குனர் யேர்மனியில் சிறிலங்காவின் இறைமையை பாதிக்கும் வண்ணம் முத்திரைகள் வெளியீடு செய்வதற்கு எவ்வித இடமும் கிடையாது என்றும் உறுதியளித்திருந்தார்.
இச்சம்பவங்களையடுத்து, ஜெர்மன் ஈழத்தமிழர்கள் தமது தேசியம் சார்ந்த முத்திரைகளை ஜெர்மன் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளியிட்டு வைத்துள்ளனர்.

04 பிப்ரவரி 2012

ஸ்ரீலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் இலக்குகளை எட்டுவதற்கான கருவியாக பயன்படும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரான டேவிட் கென்னடி நெதர்லாந்து வானொலிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது சிறிலங்காவில் எல்லாச் சமூகங்களையும் நல்லிணக்கத்தை நோக்கி நகர ஊக்குவிக்கும்.
இது முக்கியமானதொரு மனிதஉரிமைகள் பிரச்சினை. இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகம்!

கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் 2,588 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2011 ம் ஆண்டில் 1,503 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், 1,085 ஏனைய வன்முறைகளும் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் முன்னைய ஆண்டுகளைக் காட்டிலும் 2011ம் ஆண்டிலேயே அதிகளவிலான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவானதாகவும், இவ்வாறான சம்பவங்களில் 22 சிறுவர்கள் பலியாகியள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த வருடத்தில் ஓரின இரத்த உறவுடையோரால் அல்லது உறவினர்களால் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக 9 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கடந்த ஆண்டில் சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக 54 சம்பவங்களும், சிறுவர் படுகொலை செய்யப்பட்ட 10 சம்பவங்களும், சிறுவர்கள் மீதான 247 கொடூர தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.