பக்கங்கள்

02 ஏப்ரல் 2011

கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரிப்பு.

வடபகுதியில் உள்ள சகல அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் நீக்கி,வட மாகாணத்திற்கு காவற்துறை அதிகாரங்களை வழங்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார் என திவயின கூறியுள்ளது.தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, இந்த யோசனைகளை முன்வைக்க இருந்தது. வடபகுதிக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அரசாங்கத்தின் எந்த ஒரு அரசியல்வாதிக்கும், பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பானத்திற்கு செல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என பாதுகாப்பு அதிகாரிகள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகளுக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்ல, அந்த மாநில காவற்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் திவயின கூறியுள்ளது. திவயின போன்ற சிங்கள பத்திரிகைகள், சிங்கள மக்களை தவறாக வழிநடத்தி வருவதாக நடு நிலையான அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மாநிலங்களுக்கு சட்டங்களை இயற்றும் அதிகாரமும் உள்ளது. இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகளுக்கு விமான நிலையத்தில் இருந்து மாநிலத்திற்குள் செல்ல அனுமதியளிக்கப்படவில்லை என திவயின கூறியுள்ளது. பாரதீய ஜனதா கட்சி காஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற போவதாக கூறி, போராட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. இதனடிப்படையில், அந்த கட்சியின் தலைவர்கள் அங்கு சென்று தேசிய கொடியை ஏற்ற முயற்சித்தனர். இவர்களின் இந்த நடவடிக்கையால் மாநிலத்தில் மேலும் பதற்றம் அதிகரிக்கலாம் என்ற காரணத்தில் இந்திய அரசாங்கம், பாரதீய ஜனதா கட்சியை மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்பதே உண்மையான காரணம் என்பதை மேற்படி செய்தியை எழுதியுள்ள, திவயினவின் பாதுகாப்புச் செய்தியாளர் கீர்த்தி வர்ணகுலசூரிய சுட்டிக்காட்டவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.