பக்கங்கள்

22 பிப்ரவரி 2015

நாரந்தனையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் உடலம்!

ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது- 19) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டார். நேற்று காலை யாழ். நகரிலுள்ள கல்வி நிலையத்திற்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட யுவதி, மாலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர் தேடுதல் நடத்தியதுடன், பொலிஸ் நிலையத்திலும் தெரியப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து 700 மீற்றர் தூரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டவேளை, அது காணாமற்போயிருந்த யுவதியுடையது என்று தெரியவந்தது. சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

18 பிப்ரவரி 2015

'போரும் சமாதானமும்' நூல் அனுமதியின்றி மறுபிரசுரம்! - அடேல் பாலசிங்கம் அறிக்கை

அன்ரன் பாலசிங்கம் அவர்களினால் 2005ம் ஆண்டு பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட போரும் சமாதானமும் என்ற நூல் தற்பொழுது தமிழ்நாட்டில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அவரது மனைவியார் அடேல் பாலசிங்கம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ளார். திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு- எனது கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டு, அவர் உயிருடன் இருந்த பொழுது 2005ஆம் ஆண்டு பிரித்தானியாவில் பெயர்மக்ஸ் பதிப்பகத்தின் (Fairmax Publishing Ltd) வெளியீடாகப் பிரசுரிக்கப்பட்ட ‘போரும் சமாதானமும்’ என்ற தமிழ் நூல் தற்பொழுது இந்தியாவில் ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்றழைக்கப்படும் நிறுவனத்தால் மீள்பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோடு, எனது கணவரின் எழுத்தாக்கங்கள் அனைத்திற்குமான காப்புரிமையைக் கொண்டவராக விளங்கும் எனது அனுமதியின்றியே இந்நூலை சம்பந்தப்பட்ட நிறுவனம் மீள்பிரசுரம் செய்துள்ளது என்பதையும் அனைவரின் கவனத்திற்கும் நான் கொண்டு வர விரும்புகின்றேன். எனது கணவரால் எழுதப்பட்ட ‘போரும் சமாதானமும்’ தமிழ் நூல் 2005ஆம் ஆண்டு முதற்தடவையாகப் பிரித்தானியாவில் வெளியிடப்பட்ட பின்னர் அவ்வாண்டின் இறுதியில் கிளிநொச்சியில் அவரது அனுமதியுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அந்நூல் மீள்பதிப்புச் செய்யப்படவில்லை. அவ்வாறான மீள்பதிப்பை மேற்கொள்வதற்கான அனுமதி எனது கணவர் உயிருடன் இருந்த பொழுது அவராலோ, அன்றி அவரது மறைவுக்குப் பின்னர் அவரது எழுத்தாக்கங்கள் அனைத்திற்குமான காப்புரிமையைக் கொண்டவராக விளங்கும் என்னாலோ எந்தச் சந்தர்ப்பத்திலும் எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் எனது அனுமதியின்றி, காப்புரிமை விதிகளுக்கும், புலமைச்சொத்து அறநெறிகளுக்கும், எழுத்துரிமச் சட்டங்களுக்கும் முரணாகத் தன்னிச்சையாக இந்நூலை ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற நிறுவனம் மீள்பிரசுரம் செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. எனது அனுமதியோ அன்றி மேற்பார்வையோ இன்றி இப்பிரசுரத்தை ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற நிறுவனம் மேற்கொண்டிருப்பதால் இதில் தகவல் திரிபுகளும், குழறுபடிகளும் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எனவே ‘தமிழர் தாயகம் வெளியீடு’ என்ற நிறுவனத்தின் இப்பிரசுரத்தை எனது கணவரின் அதிகாரபூர்வ எழுத்தாக்கமாகக் கருத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். அத்தோடு, இந்நூலை விற்பனை செய்வதற்கான உரிமம் என்னால் எந்தவொரு தனிநபருக்குமோ அன்றி நிறுவனத்திற்குமோ வழங்கப்படவில்லை என்பதோடு, அவ்வாறான உரிமை கோரலை எவராவது மேற்கொண்டால் அது உண்மைக்குப் புறம்பானது என்பதையும் அனைவரின் கவனத்திற்கும் நான் கொண்டு வர விரும்புகின்றேன். எனது கணவரால் எழுதப்பட்ட போரும் சமாதானமும், விடுதலை ஆகிய நூல்களும், என்னால் எழுதப்பட்ட சுதந்திர வேட்கை என்ற நூலும் தற்பொழுது பதிப்பில் இல்லை. எதிர்காலத்தில் இந்நூல்களை மீள்பிரசுரம் செய்வதற்கு நான் தீர்மானிக்கும் பட்சத்தில் அவற்றை என்னால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பதிப்பகம் ஊடாகவும், உரிய முறைப்படியும், வெளியீட்டு விழா ஒன்றின் மூலமாகவுமே வெளியிடுவேன் என்பதை அறியத் தருகின்றேன்.

இவ்வண்ணம்,
திருமதி அடேல் பாலசிங்கம்

16 பிப்ரவரி 2015

புலிகளின் சொத்துக்கள் எவையும் என்னிடம் இல்லை-கே.பி.

புலிகளின் நிதியோ,கப்பல்களோ அல்லது வேறு சொத்துக்களோ கைது செய்யப்பட்டபோது என்னிடம் இருக்கவில்லை. 2002 ஆம் ஆண்டில் இருந்து புலிகள் அமைப்புடனான தொடர்புகளுடன் இருந்து நான் ஒதுங்கியே வாழ்ந்து வந்தேன் என கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 40 பேரின் கடும் கண்காணிப்பின் கீழ் புனர்வாழ்வுக்கு ஒப்பான நிலையிலேயே கிளிநொச்சியில் தான் தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் கே.பியைக் கைது செய்து புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அவரிடம் இருக்கும் புலிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கிளிநொச்சி செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தில் இருக்கும் கே.பியை தமிழ் பத்திரிகை ஒன்று தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மலேசியாவில் வைத்து நான் கைது செய்யப்பட்டு 24 மணிநேர விசாரணைகளின் பின்னர் எயார் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் என்னை ஒப்படைத்தார்கள். அன்று முதல் பாதுகாப்புத் தரப்பினரின் தீவிர கண்காணிப்பின் கீழேயே வைக்கப்பட்டுள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார். உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான கப்பல்கள் அரசு வசமானதாகக் கூறப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்கள் எனக் கேட்டபோது, நான் வழங்கிய தகவல்களின் பிரகாரம் எனது பொறுப்பில் இருந்த கப்பல்கள் இலங்கையால் கைப்பற்றப்பட்டதகாக் கூறப்படும் தகவல்களிலும் உண்மை இல்லை. அது பொறுப்பில்லாமல் சந்தேகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தகவல்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்;. கைதான அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் புனர்வாழ்வுக்ககு உட்படுத்தப்பட்டபோதும், நீங்கள் அவ்வாறான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது இந்தக் கேள்வியை முன்னைய அரசிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என கே.பி.தெரிவித்தார். நான் தற்போதும் கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டே வருகின்றேன். எனது குடும்ப உறுப்பினர்களைக் கூட சுதந்திரமாக சந்தித்துப் பேச முடியாத நிலையே உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்கள். உங்களிடம் பல பெயர்களில் பல நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் இருந்ததகாவும் கூறப்படுகிறதே அவை இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா? எனக் கேட்டபோது, எனக்கு கடவுச்சீட்டே இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.

12 பிப்ரவரி 2015

தீவகத்தில் மூடிய கிணறுகளில் உடல்கள்?

யாழ் தீவகப்பகுதியாகிய சுருவில் மண்டைதீவு போன்ற மீள்குடியேற்றப் பகுதிகளில் பல கிணறுகள் மூடிக்கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என உள்ளூர் மக்கள் தம்மிடம் தெரிவித்ததாக மகளிர் விவகாரத் துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அந்தக் கிணறுகளில் அப்பிரதேசங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் ஐயப்பாடுகள் உள்ளன என்று மக்கள் கருதுவதாகவும் அவர் கூறுகிறார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவசரக் கடிதம் ஒன்றையும் தான் பொலிஸ் மாஅதிபருக்கு எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் அந்தக் கிணறுகளை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும், யாழ் தீவகப்பகுதிகளில் இன்னும் அச்சத்துடன் வாழ்கின்ற மக்களின் அச்சத்தைப் போக்கி இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கோரியிருக்கின்றார். அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருப்பதுடன், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்லவிருப்பதாகவும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

10 பிப்ரவரி 2015

முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் டொமினிக் காலமானார்!

1990களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த டொமினிக் (இந்திரன் சண்முகலிங்கன்) திருச்சியில் நேற்று முன்தினம் காலமானார். இவர் யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக இருந்த போதே, பிரேமதாஸா அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சமரசப் பேச்சு தோல்வியடைந்து, 1990 ஜூனில் இரண்டாம் ஈழயுத்தம் வெடித்தது. யுத்தம் வெடிப்பதைத் தடுக்கும் முயற்சியாக புலிகளுடன் சமரசம் பேச வந்த பிரேமதாஸா அரசின் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ்.ஹமீத் யாழ்ப்பாணம், நல்லூரில் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் பலாலி திரும்பினார். அவரை வழியனுப்பி வைக்க, புலிகளின் யாழ். மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில் டொமினிக்கும் அவருடன் கூடச் சென்றார். பலாலி முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் யுத்த சூனியப் பிரதேச எல்லையில் அமைச்சர் ஹமீத்துக்கு டொமினிக் விடைகொடுத்த சமயம் இரு தரப்புகளுக்கும் இடையில் அங்கு சமர் மூண்டது. இரு தரப்புகளிலிருந்தும் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எனினும் இரு தரப்புத் தலைவர்களும் விழுந்து எழும்பி, ஓடித் தப்பி தத்தமது பிரதேசத்துக்குள் எப்படியோ வந்து சேர்ந்தனர். இந்த விடயம் அச்சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. எனினும் பின்னர் இயக்கத் தலைமையோடு ஏற்பட்ட ஒரு சிறு முரண்பாட்டை அடுத்து டொமினிக் தனது துணைவியாருடன் இயக்கத்தை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினர். அண்மைக்காலமாக பல்வேறு நோய் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்த டொமினிக் திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். இந்திய அமைதிப்படை இலங்கையில் காலூன்றியிருந்த காலத்தில் தீரமான போராளியாக பல சமர்களில் டொமினிக் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

08 பிப்ரவரி 2015

தீவகத்தில் கால் வைத்தால் அழிப்போம்!விந்தனுக்கு மிரட்டல்.

வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் வீட்டின் மீது, வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் தீவகத்திற்குள் நுழைந்தால் குடும்பத்தோடு அழிப்போம் என அச்சுறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கருத்துத் தெரிவிக்கையில், நேற்றிரவு எனது வீட்டின் மீது சரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டது. இதன்போது வீசப்பட்ட கற்கள் வீட்டு கூரையின் மீதும், கதவுகள் ஜன்னல்கள் மீதும் வீழ்ந்தன. பின்னர் சிலர் வீட்டின் கதவினை காலால் உதைத்தார்கள். பின்னர் என்னுடைய பெயரை கூறி வெளியே வா என கடும்தொனியில் கத்தினார்கள்.இதனையடுத்து, நான் வெளிச்சத்தை போட்டுவிட்டு வெளியே வந்து மதிலால் எட்டிப் பார்த்தபோது வீட்டிலிருந்து 50 யார் தொலைவில் வெள்ளை நிற வாகனம் ஒன்று நின்றது. அதற்கருகில் சிலர் வாள் மற்றும் கம்பிகளுடன் நின்றிருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்து தீவகத்திற்குள் இனிமேல் நுழைந்தால் குடும்பத்தோடு அழிக்கப்படுவாய் என திட்டினார்கள்.பின்னர் அவர்கள் சென்று விட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் நான் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு பதிவு செய்திருக்கிறேன் என்றார்.

05 பிப்ரவரி 2015

அனந்திக்கு விசாரணையென்றால் சம்பந்தருக்கு என்ன?குருபரன்

1972 ஆம் ஆண்டு ‘சிலோன்’ குடியரசாகி ‘சிறீலங்கா’வாக மாற்றப்பட்ட அரசியலமைப்புச் செயன்முறையில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தமிழரசுக் கட்சியும், அது அங்கமாகவிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன புறக்கணித்துள்ளன. சிறீலங்காவின் அரச கட்டமைப்பு தமிழர்களை உள்ளடக்கவில்லை என்ற காரணத்தினாலேயே இந்த முடிவு 40 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்தது. இது விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்த முடிவல்ல. தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே செல்வநாயகம் எடுத்த முடிவு. இம்முடிவு ஒரு நாட்டிற்குள் தீர்வு காண்பதற்காண நிலைப்பாட்டுக்கு முரணானதென்று கொள்ளப்படுவதற்கும் இல்லை. எனின் இவ் 40 வருட கால கால முடிவை இன்று மாற்றுவதற்கு திருவாளர். சம்பந்தன் சொல்லும் நியாயம் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன். நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்தித்த போது தமிழர் தொடபான விடயங்களில் அரசாங்கம் மந்த கதியில் செயற்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சாட்டியதாக ஏஎவ்பி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது ஒரு சில அரசியல் கைதிகளின் விடுதலையையாவது எதிர்பார்ப்பதாக தெரிவித்ததாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. இது கூட நடைபெறாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் எக்காரணத்துக்காக இவ்வளவு பெரிய தடம் மாறும் முடிவை மேற்கொண்டார்? தமிழரசுக் கட்சியின் சனாதிபதி தேர்தல் தொடர்பிலான முடிவொன்றை மீறியமைக்காக அனந்தி சசிதரனுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுகின்றது. 40 வருட முடிவை மீறியோருக்கெதிராக யார் நடவடிக்கை எடுப்பதெனவும் அவர் கேள்வியை முன்வைத்துள்ளார்.