பக்கங்கள்

13 ஏப்ரல் 2011

புலிகளை காட்டித்தருமாறு சிங்களப்படைகள் மிரட்டல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி பிரதேச தமிழ் வர்த்தகர்கள் மீது சிறீலங்கா இராணுவமும், துணைஇராணுவக்குழுவினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: வடமுனை, பெண்டுகள்சேனை, ஊற்றுச்சேனை, போத்தனை, தரவை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழ் வர்த்தகர்கள் பால் கொள்வனவுக்காக படுவான்கரையில் உள்ள பால் பண்ணைக்கு சென்ற சமயம், அவர்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரும், துணைஇராணுவக்குழுவினரும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்களின் பகுதிகளில் மறைந்திருக்கும் விடுதலைப்புலிகளை காட்டித்தரும்படி கேட்டே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இடைமறித்து சோதனைகளையும் மேற்கொண்டுவருகின்றனர். மட்டக்களப்பு – பதுளை (ஏ-5) வீதியில் வீதித்தடைகளும் கடந்தவாரம் போடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு – கொழும்பு (ஏ-4) மற்றும் திருமலை – மட்டக்களப்பு (ஏ-15) ஆகிய நெடுஞ்சாலைகளிலும் வீதித்தடைகளும், சோதனை நிலையங்களும் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வீடு வீடாகவும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை, முதலிக்குடா, மகிழடித்தீவு, கரடியனாறு, வடமுனை, ஊற்றுச்சேனை, புனானை, வாகரை, வெருகல் மற்றும் படுவாங்கரை ஆகிய பகுதிகளில் புதிய காவலரன்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.