பக்கங்கள்

30 செப்டம்பர் 2014

மட்டக்களப்பு சிறைக்குள் மோதல்!

மட்டக்களப்பு மத்திய சிறைச்சாலைக்குள் நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்து போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் கே.புஸ்பராஜா (வயது 23), ஏ.எம்.ஜமீல் (வயது 22), எஸ்.எல்.ஏ.ரினோல்ஸ் (வயது 22) ஆகியோரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர். சிறைக் கைதிகளின் இரு பிரிவினருக்கு இடையே தொடங்கிய வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியது எனவும் இதன்போதே இந்த மூவரும் காயமடைந்தனர் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் மோதலில் ஈடுபட்டவர்கள் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதாகி தண்டனை பெற்று வருபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

29 செப்டம்பர் 2014

முன்னாள் முதல்வர் வீட்டுக்கு சென்றார் இந்நாள் முதல்வர்!

ஜெயலலிதா இல்லாத போயஸ் கார்டனுக்குப் போய் விட்டு தலைமைச் செயலகம் வந்த ஓ.பன்னீர் செல்வம்!இந்தக் காட்சி நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கிறது. அதாவது முன்னாள் முதல்வர் ஜெயராம் ஜெயலலிதா பெங்களூர் சிறைச்சாலையில் இருக்கிறார். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், நேற்று தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், இன்று முதல்வராகப் பதவியேற்ற பின்னரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் விட்டு பின்னர்தான் அடுத்த வேலையைப் பார்த்துள்ளார்.நேற்று மாலையில் கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் அடுத்த தலைவராக ஓ.பன்னீர் செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.இதையடுத்து நேராக போயஸ் கார்டன் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார் ஓ. பன்னீர் செல்வம். அங்கு வீட்டுக்குள் போய் விட்டு திரும்பி வந்தார். அதன் பின்னர்தான் அவர் தனது சகாக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார். அதேபோல இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு வந்த அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் நேராக மீண்டும் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போனார். அங்கு போய் விட்டு அதன் பிறகே தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றார். சென்டிமென்ட்டாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு பன்னீர் செல்வம் போயிருக்கலாம் என்று தெரிகிறது.