பக்கங்கள்

18 மே 2020

சிறிலங்கா இணையங்கள் மீது சைபர் தாக்குதல்!

ஒப்பிரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் மூன்றாம் தடவையாக 300க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சற்று முன்னர் சைபர் தாக்குதலை தமிழீழம் சைபர் போர்ஸ் மேற்கொண்டுள்ளது. மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்காவின் அமைச்சரவை அலுவலக குடியரசு இணையம் , துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை நாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ஆம் ஆண்டு, 2018ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கோத்தபாயவின் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் சைபர் வழித்தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படை ஒன்றையும் அமைத்த நிலையில் இன்று அவர்களுக்கு தண்ணிகாட்டி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

நன்றி:பதிவு 

17 மே 2020

முள்ளிவாய்க்காலில் கெடுபிடியை தொடங்கியது அரசபடை!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அருகே, புதிதாக பொலிஸ்,படையினரின் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் வீதியின் ஆரம்பத்தில்,பொலிஸ் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடியில் கடந்த மூன்று நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களில்லாத வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு வருபவர்களை இவர்கள் கண்காணிப்பதுடன், ஒளிப்படம் எடுத்து, அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். அத்துடன், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் தொடக்கமான, இரட்டைவாய்க்கால் பகுதியிலும், படையினரின் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடியில் உள்ள படையினர், வீதியால் செல்பவர்களை பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வட்டுவாகல் பாலத்துக்கு முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர் நிறுத்தப்பட்டு சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை, முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையை நினைவு கூரும், நினைவேந்தல் நிகழ்வு கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில்,படைகள் மற்றும் பொலிஸ் கெடுபிடிகள் அப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

11 மே 2020

சுமந்திரனின் செவ்வி தொடர்பில் கஜேந்திரகுமார் ஊடக சந்திப்பு!(காணொளி)

விடுதலைப் போராட்டத்தை ஒருபோதும் நான் ஏற்றுக்கொண்டதில்லை எனவும், சிறீலங்காவின் சிங்கக் கொடியையும், சிறீலங்கா தேசிய கீதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார். இதுகுறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையில்:- நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய காலம் முதல் நாங்கள் ஒன்றை வலியுறுத்தி வருகிறோம். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் கொள்கையைக் கைவிட்டு தனியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலிருந்து அவர்கள் விட்டுச் செல்கிறார்கள் என்ற கருத்தை 11 வருடங்களாக கூறிவருகிறோம். அதற்கு பல ஆதாரங்களையும் நாங்கள் சுட்டிக் காட்டி வந்திருக்கின்றோம். 2010 ஆண்டு பேராசிரியர் சிவநாதன் தலைமையில் ஏற்பாடு செய்த ஒரு விவாதத்தில் சுமந்திரன் விடுதலைப் போராட்டம் ஒரு அதர்மம் என்றும் தர்மமே எப்போதும் வெல்லும் என்று இந்த ஆயுதப் போராட்டத்தை அதர்மம் என்று கூறி தனது ஆழமான கருத்தை வலியுறுத்தினார்.

ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்கிறார் சார்ள்ஸ்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பொறுப்பில் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்று கோரி   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியுள்ளார்.
 தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பொறுப்பில் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்று கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுச்ச தியாகங்களை செய்த, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 08.05.2020 அன்று ஒரு சிங்கள ஊடகத்திற்கு இதேபோன்று கருத்து கூறியிருக்கின்றார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும், அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். நானும் அவருடைய கருத்தை எதிர்க்கின்றேன். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும். அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவி அவரிடத்திலிருந்து வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக முடிவெடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை கூட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளதாம்.