பக்கங்கள்

31 டிசம்பர் 2012

சிறுமியை வன்புணர்வு செய்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்; வேலணை பிரதேச சபை கண்டனம்

மண்டைதீவில் நான்கு வயது சிறுமி வன்புணர்வின் பின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து அதிகப்படியான தண்டனையை நீதித்துறை வழங்க வேண்டும். இவ்வாறான குற்றவாளிகளை பிடிப்பதற்கு பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் துரித தேடுதலை மேற்கொள்ள வேண்டும். வேலணை பிரதேச சபை தலைவர் சி.சிவராசா குறித்த சம்பவத்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாகத் தலைவர் சி.சிவராசா மேலும் தெரிவித்ததாவது: மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தில் நான்கு வயது சிறுமியின் மீது வன்புணர்வின் பின்னரான கொலை என்ற செய்தியை பார்த்ததும் அதிர்ந்து போய் உள்ளோம். இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை கண்டு பிடிக்க நேற்று முழுவதும் மண்டைதீவின் பல்வேறு இடங்களிலும் பல விசாரணைகளை மேற்கொண்டோம். எனினும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்தச் சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டிகளை கைது செய்து மிக கடுமையான தண்டனையை நீதித்துறை வழங்க வேண்டும். எமது நிர்வாக பிரிவுக்கு உட்பட்ட மக்கள் இந்தச் சோக சம்பவத்தினால் உறைந்து போயுள்ளனர். எனவே, இக் குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து மக்களும் கைகொடுத்து உதவ வேண்டும் என்று வேலணை பிரதேச சபைத் தலைவர் மேலும் கூறினார்.

புதுடில்லி பெண் தொடர்பில் பேச இலங்கைக்கு தகுதியில்லை!-எஸ்.பாஸ்கரா

புது டில்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயமடைந்து மரணமான இந்திய பெண் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என முன்னணியின் ஊடக செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ். பாஸ்கரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, புதுடில்லி பெண்ணின் பாலியல் வல்லுறவு கொலை தொடர்பாக, ஐதேகவின் மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாநகரசபை ஐதேக உறுப்பினர்களின் பிரதான பங்குபற்றலில் ஒரு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெறப்பட்ட கையெழுத்து மனு இலங்கையிலுள்ள இந்திய தூதுவரிடம் கையளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. மாநகரசபை முன்றலில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் கட்சி தலைவர் மனோ கணேசன் அவர்களது அறிவுறுத்தலின் பேரில் நமது கட்சி உறுப்பினர்கள் எவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. புதுடில்லி பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் தொடர்பாக நாம் அக்கறை கொண்டுள்ளோம் அதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஆனால், புதுடில்லி பெண் தொடர்பில் இந்திய தூதுவரிடம் மனு கையளிக்கும் நிலைமையும், தகைமையும் நமது நாட்டில் நிலவுவதாக நாம் நம்பவில்லை. இந்த நாட்டில் இன்று தமிழ் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம், புதுடில்லி பெண்களின் நிலைமையைவிட பல மடங்கு பாரதூரமானதாகும் என்பது எமது நிலைப்பாடாகும். குறிப்பாக இன்று வன்னியிலே நிர்க்கதியாயுள்ள தமிழ் பெண்கள் பெரும் உடல், உள துன்பங்களை சந்திக்கின்றனர். நடந்து முடிந்த போரின் போதும், போர் முடிந்து அகதிமுகாம்களில் அடைப்பட்டிருந்தபோதும் நமது பெண்கள் மிகபெரும் அவலங்களை சந்தித்தனர்,இந்த அவலங்கள் இன்றும் தொடர்கின்றன. எனவே நமது பெண்கள் அவல நிலையில் வாழும் பொழுது, அதை அறியாதது போல் புதுடில்லி பெண் தொடர்பாக நாம் செயல்பட முடியாது. நம் நாட்டு தமிழ் பெண்களின் அவல நிலையை ஐ.தே.க.பெண்கள் சங்கத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்த ஐ.தே.க.வினருக்கு நாம் எடுத்து கூறியுள்ளோம்.

குச்சவெளி கடலில் மரங்களுடன் மிதந்து வந்த மனித உடல்

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் மனித உடற்பாகம் மீட்கப்பட்டுள்ளது. 25 அடி நீளமான மரங்கள் கடற்பரப்பில் மிதந்ததைத் தொடர்ந்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸ் மற்றும் கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடற்பரப்லில் படகு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

30 டிசம்பர் 2012

மானிப்பாயில் வீட்டு மதிலை இடித்து தள்ளிய வாகனம்!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டு மதிலை இடித்துத் தள்ளியது. இதனால் வாகனத்தின் ஒரு பகுதி சிதைந்ததுடன், ஒரு சில்லும் கழன்று ஓடியது. இந்த வாகன விபத்து யாழ். மானிப்பாய் வீதி, ஐந்து சந்திப்பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தவறான பக்கத்துக்குச் சென்று கிராம அலுவலர் ஒருவரின் வீட்டு மதிலை இடித்து வீழ்த்தி உள்ளே நின்ற வாழை மரங்களையும் துவம்சம் செய்தது. வாகனத்தின் ஒரு பகுதி முற்றாகச் சிதைந்ததுடன், ஒரு சில்லும் உடைந்தது. இரண்டு பக்க ஒளிச்சமிக்ஞைகளையும் ஒளிரவிட்ட வண்ணம் சாரதி போதை தலைக்கேறிய நிலையில் வாகனத்தைச் செலுத்திச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் வாகனத்தை விட்டுவிட்டுச் சாரதி உட்பட அதில் பயணித்த மூன்று பேரும் தப்பியோடி விட்டனர். மூவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய சாரதி யாழ். மனோகராச் சந்தியை அண்மித்து ஓர் இடத்தில் மறைந்து படுத்துவிட்டார். அவரை இனம்கண்டவர்கள் அவரை ஓட்டோவில் அழைத்துச் சென்று சம்பவ இடத்தில் நின்றிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் சாரதியை யாழ். போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காகச் சேர்த்தனர். பரிசோதனையின்போது அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிசெய்யப்பட்டது. ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த ஒருவரே சாரதியாவார். விபத்துக்குள்ளான வாகனம் பாரம்தூக்கி மூலமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டது.

இராணுவத்தில் மீள இணைய மறுத்த தமிழ் யுவதி! வைத்திய அதிகாரியை பிடித்தது இராணுவம்!

அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை முகாமில் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் வலியுறுத்தினர். எனினும் குறித்த பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து மருத்துவர் சிவசங்கரின் உதவியுடன் அவர்கள் நேற்றுப் பிற்பகல் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர். எனினும் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வேண்டும் எனில் ஒரு மாதகால அவகாசம் தேவை என இராணுவத்தினர் தெரிவித்ததால் பெற்றோருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை குறித்த பெண்ணையும் பெற்றோரையும் வீடு செல்ல அனுமதித்த இராணுவத்தினர் மருத்துவர் சிவசங்கரைத் தடுத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை குறித்த குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இதேவேளை, கைதான மருத்துவர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகக் கிடைத்த செய்தியை அடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் விவகாரத்தில் கோத்தா விடாப்பிடி!

கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது. இவ்வாறு அடித்துக் கூறியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ் வாறு கூறியிருக்கிறார். புனர்வாழ்வு வழங்காமல் மாணவர்களை விடுவிக்க முடியாது என்ற விடயத்தை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பல்கலைச் சமூகத்துக்கு தான் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கோத்தபாய இந்தச் செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அந்தச் செவ்வியில் மேலும் தெரிவித்தாவது: கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பல்கலைக்கழக மாணவர்களையும் புனர்வாழ்வு வழங்கிய பின்னரே விடுவிக்க முடியும். அதற்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு சாத்தியமே இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் ஏன் போகவேண்டும்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? பல்கலைக்கழகத்துக்குள் சென்று இவர்கள் பயங்கரவாதத்தைத் தூண்டு விடுகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவரின் பின்னணியிலேயே கடந்த காலச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றை நாங்கள் ஆதாரத்துடன் நிரூபிப்போம். மாணவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கிய பின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற விடயம் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட பல்கலைக்கழக சமூகத்திடம் நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கின்றோம். என்றார்.

29 டிசம்பர் 2012

கள்ளத் தொடர்பில் குழந்தையை பெற்று நிலத்தில் புதைத்த கல்நெஞ்சத் தாய் கைது!

அக்கரைப்பற்று - ஆலிம்நகர் பிரதேசத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்து நிலத்தில் புதைத்த இளம் தாய் ஒருவரை இன்று சனிக்கிழமை காலையில் கைது செய்ததுடன் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலமும் மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று காலையில் ஆலிம் நகர் குப்பைமடு வீதியில் உள்ள குறித்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது குழந்தை பெற்று புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கள்ளக்காதல் மூலம் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் கடந்த 24 ம் திகதி வீட்டில் குழந்தை இறந்து பிறந்துள்ளதாகவும் இறந்த குழந்தையை பொலித்தீன் பையினால் சுற்றி வீட்டின் நிலத்தில் புதைத்து உள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி இராமக்கமலன் சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மண்டைதீவில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை!

நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் நேற்றுத் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: மண்டைதீவு 2ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டக் கிணறு ஒன்றை இறைப்பதற்காக சென்றவர்கள் அந்தக் கிணற்றுக்குள் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் இது குறித்து ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.எஸ்.எம்.மகேந்திரராசாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற நீதிவான் சடலத்தைப் பார்வையிட்ட பின்னர் சந்தேகம் நிலவியதை அடுத்து பரிசோதனைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் அங்கு சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் முதற்கட்ட உடற்கூற்றுப் பரிசோதனையையும் மேற்கொண்டார். இதன்போது சிறுமி வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். குறித்த சிறுமி நேற்று முன்தினம் ஒரு மணிக்குப் பின்னர் வீட்டில் இருந்து காணாமற் போனதாகவும் பெற்றோர் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அவரது வீட்டுக்கு 200 மீற்றர் தூரத்தில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

28 டிசம்பர் 2012

அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்ட தமிழர்களின் பிணை மனு ஜனவரியில் பரிசீலனை!

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்க முயன்றதாக குற்றம்சாட்டி கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இரு இலங்கை தமிழ்ர்கள் தொடர்பான வழக்கு மீதான முதல் விசாரணை அமெரிக்க நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. பிரதீபன் நடராஜா (36), சுரேஸ் சிறீஸ்கந்தராஜா (32) ஆகிய இருவரும் தம்மை அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கோரி கனேடிய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக 2004ம் ஆண்டுக்கும் 2006ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியது, 1 மில்லியன் டொலர் பெறுமதியான, 20 எஸ்.ஏ-18 விமான எதிர்ப்பு ஏவுகணைகள், 10 ஏவுகணை செலுத்திகள், 500 ஏகே-47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி இலங்கைக்கு அனுப்ப முயன்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை அமெரிக்காவின் புரூக்லின் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பிரதீபன் நடராஜாவுக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆகக் கூடியது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். சுரேஸ் சிறிஸ்கந்தராஜாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடும். முதல் கட்ட வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில் இவர்களின் பிணை மனு கோரிக்கை எதிர்வரும் 2013ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளது. தனது கட்சிக்காரரான நடராஜா, கனடாவில் ஒரு கெளரவமான உழைப்பாளி குடும்பத்தை சேர்ந்த மனிதன் எனவும் நீதிமன்றத்தில் தனது பொறுப்பை அவர் நிரூபணம் செய்துள்ளதாகவும் வழக்கறிஞர் சாம் ஏ ஸ்மித் தெரிவித்துள்ளார். மற்றுமொரு சந்தேகநபரான சிறிஸ்கந்தராஜா தனது தாயை சந்திக்க வேண்டும் என நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில், கனடாவில் இருந்து வந்த தாயை நீதிமன்ற அறையில் வைத்து சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த சந்திப்பு தாயின் கண்ணீருடன் சிறிது நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமாருக்கும் அழைப்பாணை!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களது விடுதலைக்காக போராடி வரும் அமைப்பினது முக்கிய செயற்பாட்டாளரும் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பபட்டுள்ளார். எதிர்வரும் 29ம் திகதி காலை 11 மணியளவினிவில் நேரில் சமூகமளிக்குமாறு இவ்வழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் அவர் தற்போது நாட்டினில் இல்லையென அவரது கட்சி தரப்புக்கள் தெரிவித்தன. ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதன் செயலாளருமான கஜேந்திரன் ஆகியோரின் பின்னணியிருப்பதாக கூறும் அநாமதேய சுவரொட்டிகள் தெற்கு பல்கலைக்கழகங்களில் முளைத்திருந்த நிலையில் இவ்விசாரணை அழைப்பு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

27 டிசம்பர் 2012

இரத்தோட்டையில் தமிழர் அடித்துக் கொலை!

இரத்தோட்டை - பாத்தாளவத்தை மத்திய பிரிவு பண்வில பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த மோதல் சம்பவம் நேற்று 26ம் திகதி மாலை இடம்பெற்றதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 36 வயதுடைய கோபால் என்பவரே உயிரிழந்துள்ளார். இரத்தோட்டையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்று கொண்டிருந்த போது இரு குழுக்கள் இவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த நபர் இரத்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அநுராதபுரத்தில் இன்று மஞ்சள் மழை!

அநுராதபுரம் - திரிப்பனே - லபுன்னெருவ பகுதியில் இன்று (27) வியாழனன்று காலை 9.30 மணியளவில் மஞ்சள் மழை பெய்துள்ளது. சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த மஞ்சள் மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் தம்புள்ளை, மெதிரிகிரிய, பதுளை ஆகிய பகுதிகளில் மஞ்சள் மழையும் பொலன்னறுவை, மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் சிவப்பு மழையும் றுஹுணு பல்கலைக்கழகத்தில் மீன் மழையும் திஸ்ஸமகாராமவில் இறால் மழையும் மாத்தறையில் முதலை மழையும் பெய்தமை குறிப்பிடத்தக்கது.

அகதிகள் முகாமில் தீ!

இலங்கை அகதிகள் முகாமில் தீ புதுக்கோட்டை ஆலங்குடி சாலை தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த முகாமில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றர். முகாமில் இன்று (27) அதிகாலை ஒரு வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்தது. அதை முகாமில் உள்ள மக்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீ அந்த வீட்டிலும் அருகில் உள்ள வீட்டிலும் பற்றிக் கொண்டது. சிறிது நேரத்தின் பின்னர் மக்களது விடா முயற்சியின் காரணமாக தீ அணைக்கப்பட்டது. இத்தீ விபத்தின் போது எவருக்கும் உயிர்ச் சேதமோ, காயமோ ஏற்படவில்லை எனவும் வீடுகளில் இருந்த பொருட்கள் சில எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

26 டிசம்பர் 2012

தமது குற்றங்களை மறைக்க இனவாதத்தை பயன்படுத்துகின்றனர்!

இனவாதத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் குற்றத்தை மூடி மறைக்க முயற்சிஆட்சியாளர்கள் இனவாதத்தை பயன்படுத்துவது தமது குற்றச் செயல்களை மூடி மறைக்க​வே எனவும் அது ஒரு அரசியல் திட்டம் எனவும் முன்னிலை சோஷலிச கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னணியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் தனியார் ஊழியர்கள் தோட்ட தொழிலாளர்கள் போன்ற பல தரப்பினர் சம்பள உயர்வை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் எவ்வாறு அரசியலை கொண்டு செல்வது? இனவாதம், அச்சுறுத்தல்,அரசியல் மோசடி மற்றும் ஏமாற்றல்  என்பவற்றை இதற்கு பயன்படுத்துகின்றனர். இனவாதத்தை பிரதானமாக கொண்டுள்ளனர். 2009 யுத்தம் முடிவதற்கு முன் மக்களிடம் இருந்த மனநிலையை தொடர்ந்தும் கொண்டு செல்லல், பகைமையை உண்டாக்குதல் போன்றவற்றை அரசு செயற்படுத்தி வருகிறது. 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் நாட்டில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் அனைத்தையும் அரசு ஏற்படுத்தவில்லை. யாழ் மாணவர்களை அரசு கைது செய்து புனர்வாழ்விற்கு அனுப்பியுள்ளது. நாளை களனி, ஜயவர்தனபுர மாணவர்களை கைது செய்தும் புனர்வாழ்விற்கு அனுப்பும். தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதம் உள்ள நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் இனவாதம் தூண்டி விடப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டியவில் இரு முஸ்லிம்கள் தாக்கப்பட்டு மறுநாள் பொதுபல சேனா என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என அரசு கூறியுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் உள்ளூராட்சி அரசியல்வாதிகள் உள்ளனர் என்றார் அவர்.

முல்லைத்தீவில் இன்று புலிக்கொடி பறந்தது!

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்த மக்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காக சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூசை ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டடிருந்தன. இந்த நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள பொதுநோக்கு மண்டபத்தின் தண்ணீர் தாங்கியின் மேல் இன்று காலை 6 மணியளவில் இந்த புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து காலை 7 மணிக்கு சம்பவம் இடத்திற்கு வந்த இராணுவத்தினர், புலிக்கொடியை அங்கிருந்து அகற்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஈழத்தமிழர்களின் உண்ணாவிரதம் 4வது நாளாக தொடர்கிறது!

சமாதான பேச்சுக்கு மறுப்பு: ஈழத்தமிழர்களின் உண்ணாவிரதம் 4வது நாளாக தொடர்கிறதுசெங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தவதீபன்,காண்டீபன்,ஜான்சன், சவுந்தர்ராஜன் உட்பட 7 பேர் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி கடந்த 23ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களிடம் தாசில்தார் இளங்கோவன்,வருவாய் ஆய்வாளர் பிரபாகரன்,கிராமநிர்வாக அலுவலர் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சு நடத்தினர். தங்களை உடனடியாக திறந்த வெளி முகாமுக்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என கூறி அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர். இந்த நிலையில் அகதிகளின் உண்ணாவிரதம் இன்று 4-வது நாளாக நீடித்தது.

25 டிசம்பர் 2012

ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் போராட்டத்தில் குதிப்பதை தவிர வேறு வழியில்லை - சீமான்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நெடுங்காலமாக சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல் துறையின் க்யூ பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 7 பேர், தங்களை விடுவித்து ஈழத் தமிழ் ஏதிலிகள் வாழ்ந்துவரும் சாதாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீண்டும் சாகும்வரை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐயத்தின் போரிலும், ஈழத்திற்கு மண்ணெண்ணை, இரத்தம் கடத்தினார்கள் என்ற பெயரிலும் பல ஈழத் தமிழ் சொந்தங்கள் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் பிணைய விடுதலை பெற்ற நிலையிலும் விடுவிக்கப்படாமல் இருக்கும் இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி பல போராட்டங்களை நடத்திவிட்டது. அவர்களும் பல முறை இப்படி சாகும்வரை பட்டிணிப் போராட்டம் நடத்தி, அதனால் உடல் நிலை, மன நிலை பாதிக்கப்பட்டு அடைபட்டுக்கிடக்கின்றனர். அவ்வப்போது சிலரை விடுவித்தது தவிர, பெரும்பாலோர் இன்னமும் தனிமை சிறையில் தடுத்தே வைக்கப்பட்டுள்ளனர். அதன் எதிரொலியே இப்போது மீண்டும் பட்டிணிப் போராட்டம் நடந்து வருகிறது. இந்திய அரசு கையெழுத்திட்டு ஏற்ற உலகளாவிய மனித உரிமை பிரகடனத்திற்கும், மனிதாபிமானத்திற்கு எதிரான வகையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால் தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல், நமது ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு எதிரான தனது அராஜகமாக, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில், காவல் நிலையத்தில் பதிவு செய்துவிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக வெளியில் வாழ்ந்துவந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது க்யூ பிரிவு. இலங்கையின் உளவுத் துறையுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் இந்திய உளவு அமைப்பின் (ஐ.பி) ஆலோசனையின் பேரிலேயே இவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. இவை யாவும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளாகும். இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடையும் நமது சொந்தங்களை, சிங்களத்திற்கு இணையாக சித்தரவதைக்கு உள்ளாக்குகிறது க்யூ பிரிவு. அவர்களிடமிருந்து பணத்தை பறிப்பது, நகைகளை பறிப்பது, பாலியல் உறவுக்கு அழைப்பது, இணங்க மறுத்தால் சிறப்பு முகாமில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டுவது என்று அதன் அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலமுறை வேண்டுகோள் விடுத்துவிட்டது. தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் தமிழக முதல்வர், மற்றொரு பக்கத்தில் க்யூ பிரிவால் அவர்கள் வதைக்கப்படுவதை தடுத்த நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதற்குப் பிறகாவது க்யூ பிரிவின் நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுகிறது. நமது வேண்டுகோள் செவிசாய்க்கபடவில்லையெனில் மீண்டும் போராட்டத்தில் குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

24 டிசம்பர் 2012

முற்றுகையை உடைத்து தளபதிகளுடன் வெளியேறிய தலைவர்! – கொழும்பு ஊடகம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் சவேந்திர சில்வாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பொன்சேகா முற்பட்டதாகத் தெரிவித்து குறித்த ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,2009 மே 17ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில், முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்துக் கொண்டு நந்திக்கடல் வழியாகத் தப்பிச்செல்வதற்கு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை 58வது டிவிசன் தளபதி பதவியில் இருந்து நீக்க சரத் பொன்சேகா முடிவு செய்திருந்தார். அந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர். மே17ஆம் திகதி நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் சீனப் பயணத்தை முடித்து திரும்பிய அப்போதைய சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பின்னடைவுக்கு பொறுப்பானவர்களை கண்டித்ததுடன் சூடாகவே நடந்து கொண்டார். களநிலவரங்களை மீளாய்வு செய்த சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் தாக்குதல் நெருக்கடியை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மூலம் கையாள விரும்பினார். அதேவேளை, அவர் வகித்து வந்த 58வது டிவிசன் கட்டளைத் தளபதி பதவியை, அப்போது 59 வது டிவிசனின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் ஒப்படைத்து விடும்படியும் அவர் பரிந்துரைத்தார். 2009 மே 18ஆம் திகதி அதிகாலை விடுதலைப் புலிகளின் இரண்டாவது முறியடிப்பு முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஒப்புக் கொள்ளவில்லை. தன்னால் இரண்டு பொறுப்புகளையும் கையாள முடியும் என்று அவர் சரத் பொன்சேகாவுக்கு வாக்குறுதி அளித்தார். அப்போது வன்னிப்ப டைகளின் கட்டளைத் தளபதியாக இருந்த தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும், சவேந்திர சில்வாவின் சார்பாக சரத் பொன்சேகாவிடம் பரிந்து பேசியிருந்தார் என்றும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

சோதனை சாவடிக்குள் லொறி புகுந்து சிப்பாயை கொன்றது!

வவுனியா, கனகராயன் குளத்திலிருந்து 215 மீற்றர் தொலைவில் உள்ள வீதியோர சோதனைச்சாவடியுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை மற்றுமொரு சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். இன்று (24) அதிகாலை 4.15 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியின் சாரதி நித்திரை மயக்கத்தில் வாகனத்தை செலுத்தியமையே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். குருநாகலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஓடு ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

23 டிசம்பர் 2012

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சி.ஐ.டி.யினரால் விசாரணை! தொடரும் கெடுபிடி!!

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அமிர்தலிங்கம் இராசகுமாரனை இன்று வவுனியாவுக்கு அழைத்த சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸார் 3 மணிநேர விசாரணையின் பின்னர் அவரை விடுவித்துள்ளனர். இது குறித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அமிர்தலிங்கம் இராசகுமாரன் தெரிவித்தவை வருமாறு: 'யாழ்.பல்கலைக்கழக நிலவரம் தொடர்பாக அறிக்கை ஒன்று தேவைப்படுவதால் அது தொடர்பாகக் கதைப்பதற்கு வவுனியாவுக்கு என்னை வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸார் தொலைபேசி மூலமாக நேற்று மாலை அறிவித்திருந்தனர். இது தொடர்பில் நான் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்திவிட்டு பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸாரின் வவுனியா அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு மூன்று மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை என்னைத் தீவிரமாக பயங்கரவாதத் தடுப்புப் புலானாய்வுப் பிரிவுப் பொலிஸார் விசாரணை செய்தனர். இவ்விசாரணையின் பின்னர் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு அவர்கள் கூறியதை அடுத்து, நான் அங்கிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அரச படைகளினால் தாக்கப்பட்டமை மற்றும் கைது செய்யப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்தும், தடுப்பில் உள்ள மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இராசகுமாரன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்களப்பகுதிகளில் சிகப்பு,மஞ்சள் மழை இன்றும் பெய்துள்ளது!

நாட்டின் சில பாகங்களில் மஞ்சள், சிவப்பு, மீன் மழை!நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (23) மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்களில் மழை பெய்துள்ளது. தம்புள்ள, பணம்பிட்டிய, விகேன, களுந்தாவ, அதாபெதிவெவ ஆகிய பிரதேசங்களில் மஞ்சள் மழை பெய்துள்ளது. நாவுல, கோபல்ல ஆகிய பிரதேசங்களில் சிவப்பு மழையும் பெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொலன்நறுவை, மெதிரிகிரிய உல்பத்அலகம பிரதேசங்களில் நேற்று (22) மஞ்சள் நிற மழை பெய்துள்ளது. இந்த மழை நான்கு நிமிடங்கள் வரை தொடர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதேவேளை நாவுல, கிதுல பிரதேசங்களில் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்த இளைஞர் புலி அமைப்பு திட்டம்: திவயின

இளைஞர் புலி அமைப்பு என்ற ஓர் பயங்கரவாத இயக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இனவாத பத்திரிக்கையான திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. புதிய இளைஞர் புலி அமைப்பின் தலைவராகக் கருதப்படும் சுரேஸ் குமார் என்பவர் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஸ் குமார், தமிழீழ விடுதலைப் புலிகளின் குண்டுத் தயாரிப்புப் பிரிவில் கடயைமாற்றியுள்ளார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சிகளை வழங்கி அவர்களை இலங்கைக்கு அனுப்பி நாச வேலைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் வாழும் புலி ஆதரவாளர்களை அழைத்து அவர்களுக்கு வெடிபொருட்கள் தொடர்பில் தமிழகத்தில் வைத்து பயிற்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

22 டிசம்பர் 2012

தமிழனுக்கு அடிபட்டால் தட்டிக்கேட்க யாருமில்லை;தமிழன் திருப்பியடித்தால் பயங்கரவாதம்? சீமான் ஆவேசம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நம் இனத்தின் விடுதலைகாக நடந்த போரில் தம் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செய்த மாணவர்கள் மீது சிங்கள் இராணுவமும்,பொலிஸாரும் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை இந்திய மத்திய அரசு ஏனென்றும் கேட்கவில்லை. தமிழனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டுகொள்ளாத ஊடகங்கள். டெல்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதற்கு இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் எதிர்த்து குரல் கொடுக்கின்றன. இவ்வாறு தெரிவித்தார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பது,யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்,பல மணி நேர மின்வெட்டு என்பவற்றைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்ப்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு செந்தமிழன் சீமான் பேசினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நம் இனத்தின் விடுதலைகாக நடந்த போரில் தம் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செய்ததிய மாணவர்கள் மீது சிங்கள் இராணுவமும், பொலிஸாரும் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை இந்திய மத்திய அரசு ஏனென்றும் கேட்கவில்லை. தமிழனுக்கு என்ன நேர்ந்தாலும் கண்டுகொள்ளாத ஊடகங்கள் டெல்லியில் ஒரு பெண் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டபோது இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் எதிர்த்து குரல் கொடுக்கின்றன. ஆனால் தமிழீழத்தில் நமது பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டத்தை இந்திய நாட்டின் ஒரு ஊடகம் கூட கண்டிக்கவில்லையே ஏன்? தமிழன் அடிபட்டால் அதனை தட்டிக்கேட்க ஒருவரும் இல்லை. ஆனால் தமிழன் திருப்பி அடித்தால் அதனை பயங்கரவாதம் என்று சர்வதேசம் கூறுகிறது, இது நியாயம்தானா? தமிழ் இனமும், தமிழ்நாடும் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு தீர்வு காண எந்த அரசும் வரவில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். நம் பிரச்சனைகளை கையெடுக்க மறுக்கும் அரசுகளை நாம் கைபற்ற வேண்டும். அது மட்டுமே தமிழினம் சந்தித்துவரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வைத் தரும். என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கலைக்கோட்டுதயம், கா. அய்யநாதன், அன்புத் தென்னரசன், வெற்றிக்குமரன், அமுதா நம்பி, மருத்துவர் இளவஞ்சி, குமுதவல்லி, பெரியார் அன்பன், காஞ்சி எழிலரசன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று திறப்பு!

இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று திறப்புகிளிநொச்சி - இரணைமடு குளத்தின் ஆறு வான்கதவுகள் இன்று (22) பகல் திறக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குளத்தின் நீர்மட்டம் 30 அடி அளிவில் உயர்ந்துள்ளதால் பகல் ஒரு மணிக்கு ஆறு வான்கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளார். எனவே இரணைமடு குளத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் ஊரியான், மருதநகர், முரசுமோட்டை, சிவபுரம், நாகேந்திரபுரம், பரந்தன், உடுப்பாற்று கண்டல், ஐயன் கோயிலடி, தட்டுவன்கொட்டி, புதுக்குளம், பன்னங்கண்டி கோரக்கன் கட்டு ஆகிய ஊர் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 டிசம்பர் 2012

மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அதுமூடியே இருக்கட்டும்-சிங்களத் தளபதி ஹத்துருசிங்க

பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இன்று காலை வடக்கின் யாழ் பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை அறுதியிட்டு கூறியுள்ளார மஹிந்த ஹத்துருசிங்க. பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரியரத்னத்துடன் கூட்டத்தில் சமூகமளித்திருந்த ஒரு சில பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மற்றும் 4 மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர் பிரபாகரன் வருவார் மீண்டும் ஈழவிடுதலைப் போராட்டத்தை நடத்துவார் என்ற கனவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களான சொலமன் தர்ஸானந் ஆகியோர் மாணவர்களை வழிநடத்திய பிரிகேடியர்கள் எனவும், இவர்களை நெடியவன் - விநாயகம் - ருத்ரகுமாரன் ஆகியோரின் கும்பல்கள் பின்னிருந்து இயக்குவதாகவும் கடுமையான தொனியில் தெரிவித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர். இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் மஹிந்த ஹத்துருசிங்கவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு 1983ன் பின்னான இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த குறுக்கு வெட்டு முகத்தை தெளிவுபடுத்திய போதும் அவற்றை கணக்கில் எடுக்காத அவர் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்ட 4 மாணவரின் பெற்றோர்களையும் வெளியேற்றி புனர்வாழ்வுக்கு முன்னர் மாணவரின் விடுதலை என்ற பேச்சிற்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் நேரடியான அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாக இராணுவத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய உதவியாலேயே போரை வென்றோம் – மஹிந்த

சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முழுமையான கடப்பாடு இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்துக்கும் இருப்பதாக இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை மஹிந்த ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காப் படைகளின் பரந்துபட்ட மூலோபாய அறிவு, அனுபவம், ஒழுக்கம் மற்றும் திறமை ஆகியவற்றை பாராட்டிய இந்திய இராணுவத் தளபதி, இவை இருநாட்டுப் படைகளுக்கும் கற்றுக் கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவின் உதவி இல்லாவிட்டால் இந்த நடவடிக்கையில் தாம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் இந்திய இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ராஜீவ் திவாரி, கொழும்ப்புகான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் சுமித் கபூர்,ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

20 டிசம்பர் 2012

சிறுமி கர்ப்பம் குடும்பஸ்தர் ஒருவர் கைது!

வடமராட்சி கிழக்குப் பிர தேசத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்த, 14 வயதுச் சிறுமி கர்ப்பமடைந்தமை தொடர்பில் 42 வயதான குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இந்தச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அச்சத்தின் காரணமாக அதனை அவர் யாரிடமும் சொல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. சிறுமியின் உடல் நிலையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர்கள் அவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகின்றது. பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை - இந்திய சிறப்புப் படைகளின் போர்ப்பயிற்சி அம்பலம்

இலங்கை - இந்திய சிறப்புப் படைகளின் இமாச்சலப் பிரதேச போர்ப்பயிற்சி அம்பலம்இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைகளுடன் இணைந்து இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினர், இரகசிய கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நஹான் சிறப்புப்படை பயிற்சி நிலையத்திலேயே இந்தப் போர்ப்பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. உணர்வுபூர்வமான விடயம் என்பதால், இதுபற்றிய தகவல்களை இரகசியமாகப் பேணிக் கொள்வதென இருநாட்டு அரசாங்கங்களும் முடிவு செய்திருந்ததாக, இந்தியாவின் உயர்மட்டப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 3ம் திகதி ஆரம்பமான இந்த 21 நாள் போர்ப்பயிற்சி, எதிர்வரும் 24ம் திகதி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு பத்தாண்டு காலத்தில், கிளர்ச்சி முறியடிப்பில் தமது அனுபவங்களை இருநாட்டு சிறப்புப் படையினரும் பகிர்ந்து கொள்கின்றனர். முன்னதாக, இந்தப் போர்ப்பயிற்சி இந்தியாவின் தென்பகுதியிலேயே நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்புகளை அடுத்து, இமாசல பிரதேசத்துக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இந்தியாவில் கடந்த ஆண்டு 820 இலங்கை படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டில் 870 படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 டிசம்பர் 2012

நாட்டிலுள்ள ஒரே பயங்கரவாதம் அரச பயங்கரவாதம்-மனோ கணேசன்

மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜேவிபியும், விடுதலை புலிகளும் இந்நாட்டின் சட்டபூர்வ அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தூக்கினார்கள். தமிழ் புலிகள் வட கிழக்கில் தனி ஒரு நாட்டை உருவாக்க முனைந்தார்கள். சிங்கள ஜேவிபியினர் முழுநாட்டையும் கைப்பற்ற முனைந்தார்கள். இரு சாராருமே ஆயுதம் தூக்கியவர்கள்தான். இருசாராருமே ஆட்சியை முழுதாகவோ, பகுதியாகவோ பிடிக்க ஆயுதம் தூக்கி போராடியவர்கள்தான். புலிகள் வட கிழக்கில் குறிப்பிட்ட பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டு ஆட்சியில் வைத்திருந்தைபோல், ஜேவிபியினரும் தமது போராட்டத்தின் போது தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் பிடித்து வைத்து அங்கு ஆட்சி நடத்தியவர்கள்தான். எனவே இறந்துபோன ஜேவிபி போராளிகளை தெற்கில் நினைவுகூறும்போது, புலி போராளிகளையும் வடக்கில் நினைவுகூறுவது தவறாக முடியாது. அந்த அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சிறை பிடித்து, புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பியது ஏற்றுகொள்ள முடியாதது. இந்த நாட்டில் இரண்டு சட்டம் இருக்க முடியாது. இதனாலேயே யாழ் பல்கலைக்கழக மாணவர் வகுப்புகளை பகிஸ்கரித்து வருகிறார்கள். இதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும். மாணவர்கள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ´அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்´ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நமது கட்சி ஒரு ஜனாநாயக கட்சி. நாம் நாட்டு பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிகார பிரிவினையைதான் வலியுறுத்துகிறோம். அதேபோல் சட்டபூர்வ தேர்தல் மூலம் பதவிக்கு வரும் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் தூக்குவதையும் நாம் ஆதரிக்கவில்லை. தேர்தல் ஒழுங்காக நடக்கிறதா, தேர்தல் முடிவுகள் ஒழுங்காக வெளியிடப்படுகின்றனவா என்பவை தொடர்பில் இந்த அரசாங்கத்தை நாம் நம்பவில்லை. ஆனால் ஆயுத போராட்டத்தை நாம் ஆதரிக்க முடியாது. ஆனால், ஆயுதம் தூக்கினர்கள் என்பதற்காக வடக்குக்கு ஒரு நியாயமும், தெற்குக்கு ஒரு நியாயமும் வழங்கப்படுவதை நாம் ஏற்க முடியாது. குறிப்பாக, மாண்டுபோனவர்களை நினைவு கூறுவதை தடுக்க முனைவதை நாம் ஏற்க முடியாது. இதை நாகரீக உலகமும் ஏற்காது. தெற்கு போராட்டங்களில் போது அன்றைய தெற்கு போராளிகள் தாம் பிடித்து வைத்திருந்த பகுதிகளில் அந்நாட்களில் காட்டு நீதிமன்றங்களை நடத்தினார்கள். மாடு திருடியவருக்கும், கோழி திருடியவருக்கும் அந்நாட்களில் அவர்கள் வழங்கிய தீர்ப்புகள் பிரசித்தமானவை. அந்த போராட்டங்களில் காட்டு துப்பாக்கிகளை தூக்கி சுட்டு விளையாடியவர்கள் இன்று அரசாங்கத்துக்குள் இருக்கிறார்கள். அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு இது நன்கு தெரியும். இந்த காட்டுதுப்பாக்கி வரலாற்றை விமல் வீரவன்சவால் மறுக்க முடியுமா? தனி நாட்டை புலிகள் கோரினார்கள் என்றால், இவர்கள் அதைவிட ஒருபடி மேலே போய் முழு நாட்டையுமே கோரினார்களே. இன்று இந்த தென்னிலங்கை போராளிகள்தான் இங்கே நினைவு கோரப்படுகிறார்கள். அதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால், வடக்கில் இல்லை. இதன் பின்னால் உள்ள காரணம், ஒன்றே ஒன்றுதான். இவர்கள் சிங்களவர்கள். அவர்கள் தமிழர்கள். ஒரே காரியத்தை செய்யும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் வெவ்வேறு தண்டணைகள். இதனால்தான் யாழ் பல்கலைக்கழகத்து மாணவர்களை நள்ளிரவில் வீடு புகுந்து, திருடர்களை, மிருகங்களை பிடிப்பதை போல் பிடித்து இழுத்து சென்றுள்ளார்கள். இதை உலகம் ஒருபோதும் ஏற்காது. இன்று சிறைகளில் ஆயிரம் தமிழ் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கு பொது மன்னிப்பு அல்லது பிணை வழங்குங்கள் என்று சொன்னோம். முடியாவிட்டால், ஐந்து முதல் பதினைந்து வருடங்கள் சிறை வாழ்க்கை வாழும் இவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி புனர்வாழ்வு பயிற்சி அளித்து பின்னர் அவர்களது குடும்பங்களுடன் அவர்களை சேர்த்துவிடுங்கள் என்று சொன்னோம். இதை செய்யாத இந்த அரசாங்கம், இன்று நாட்டிலே குடும்பங்களுடன் வாழ்ந்து வந்த மாணவர்களை பிடித்து வந்து புனர்வாழ்வு முகாம்களில் அடைத்து வைத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு காரணம் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகும். இந்த பாதுகாப்பு செயலாளர் நாளுக்கு நாள் புதுபுது அவதாரங்கள் எடுக்கிறார். நகர அபிவிருத்தி என்று சொல்லி இன்று இவர்தான் கொழும்பில் மாநகர ஆணையாளர். தற்போது இவர் புனர்வாழ்வு ஆணையாளராகவும் மாறியுள்ளார். எதிர்காலத்தில் இவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் அவதாரம் எடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. புலி பயங்கரவாதத்திற்கு எதிராகவே இந்த மாணவர்களை பிடித்து வந்துள்ளோம் என இவர் சொல்கிறார். இந்த நாட்டில் இன்று புலியும் இல்லை. பயங்கரவாதமும் இல்லை. தெற்கில் ஜேவிபி இருக்கிறது. பயங்கரவாதம் இல்லை. இருக்கும் ஒரே பயங்கரவாதம் அரச பயங்கரவாதம்தான். இது இன்று அரசியல் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும், மாணவர்களையும், நீதிமன்றத்தையும் தாக்குகிறது. இந்த அரச பயங்கரவாதம்தான் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வடக்கிலோ, தெற்கிலோ அரசு அல்லாத பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்க போகிறது. பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யாவிட்டால், அது தீ போல பரவி அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஆக்கிரமிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

29ம் திகதி இலங்கையில் சிறு பூமியதிர்வு ஏற்படும்-இலங்கை விஞ்ஞானி

உலகத்தின் அழிவு நாட்களாக 2012 ஆம் டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தினங்கள் வர்ணிக்கப்பட்ட போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது. ஆனால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அதாவது இவ்வருடத்தின் இறுதி சனிக்கிழமையன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும். இதன்தாக்கம் இந்தியாவிலும்  காணப்படும் என்று விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்தன தெரிவித்தார். 2019ஆம் ஆண்டில் பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி என்பவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும். 2004ஆம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் 2013 ஆம் ஆண்டில் விண்கற்கள் விழும் என்ற எச்சரிக்கை என்பவை தொடர்பில் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் ஊடகங்களில் தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியதாவும் அவர் சுட்டிக்காட்டினார். 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என்பது முற்றிலும் போலியான பிரசாரமாகும். ஆனால், எதிர்வரும் 29 ஆம் திகதி பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படவுள்ளது. இதன் தாக்கம் பாரியளவிலான பாதிப்புகள் ஏற்படாது. பூமியின் மீது 2013 இல் விண்கற்கள் விழும் என்று நான் 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் எதிர்வு கூறினேன். அதன்பின்னர் இதுகுறித்து ஆராய்ந்து நாசா உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் அக்கற்களை சிறு துண்டுகளாக உடைத்தெறியும் நடவடிக்கையில் இறங்கினர். அதேபோன்று, 2004 ஆம் ஆண்டு கடல்சார் பாரிய அழிவு இலங்கையில் இடம்பெறும் என்று 2002 ஆம் ஆண்டிலேயே கூறினேன். அதற்கு அமைவாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமி தாக்கின. இவ்வாறு எதிர்வு கூறிய அனைத்தும் எனது ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்ட வகையிலேயே இடம்பெற்று முடிந்து விட்டன. எனவே 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது. 29 ஆம் திகதி இலங்கையில் பூமியதிர்வு ஏற்படும். இதன் தாக்கம் இந்தியாவுக்கும் ஏற்படும். 2019 ஆம் அமெரிக்கா, ஆரேபிய நாடுகள் பாரிய இயற்கை அழிவுகளை சந்திக்கும் எனக் கூறினார்.

18 டிசம்பர் 2012

பிறையன் செனிவிரத்னவை திருப்பி அனுப்பியது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் விளக்கம்!

News Serviceஅவுஸ்ரேலியாவில் வதியும் மனிதஉரிமை செயற்பாட்டாளரான மருத்துவர் பிறையன் செனவிரத்னவை திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளனர். மலேசியாவில் தமிழ் அமைப்புகளின் கூட்டத்தில் சிறிலங்கா அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுவதற்காக சிங்கப்பூர் வழியாகச் செல்லவிருந்த 81 வயதான மருத்துவர் பிறையன் செனிவிரத்னவை, சிங்கப்பூர் அதிகாரிகள் சிறியதொரு அறைக்குள் 5 மணிநேரம் அடைத்து வைத்திருந்ததுடன், அவருக்கு உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளைக் கூட வழங்க மறுத்திருந்தனர். இதுகுறித்த தகவல் அவுஸ்ரேலிய ஊடகமொன்றுக்கு சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை அதிகாரசபை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. “பெரும்பாலான நாடுகளைப் போலவே, சிங்கப்பூரிலும் ஒரு விருந்தினர் தன்னியக்க முறையில் உள்நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு நுழைவுச் சந்தர்ப்பத்திலும் அவரது தகுதியை நிரூபிக்கவேண்டும். அவர்கள் நுழைவதற்கு முன்னர் உள்நுழைவதற்கான எமது தேவைப்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும். தகுதியற்றவர்களுக்கு நுழைவு அனுமதி மறுக்கப்படும். மருத்துவர் பிறையன் செனிவிரத்ன தொடர்பான விவகாரம் குறித்து குடிவரவு மற்றும் சோதனை அதிகாரசபை விசாரணை நடத்திய போது, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில் உண்மையில்லை என்று கண்டறியப்பட்டது. மருத்துவர் பிறையன் செனிவிரத்ன கடந்த 14ம் நாள் காலையில் சிங்கப்பூர் வந்தார். அவர் எமது குடிவரவுச் சாவடியில் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி கோரினார். அவர் நுழைவு அனுமதி பெறத்தகுதியற்றவராக இருந்தார். இந்த முடிவு கடமையில் இருந்த குடிவரவு அதிகாரியால் அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இரண்டரை மணி நேரத்துக்குள் அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவருக்கு உணவு. குடிநீர், கழிப்பிட வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு நேரம் இல்லை. அவர் அவற்றைக் கோரியிருந்தாலும் அது நிராகரிக்கப்பட்டிருக்கும்.” என்று சிங்கப்பூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, அவுஸ்ரேலிய வெளிவிவகாரத் திணைக்களமும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சிங்கப்பூரில் இருந்து அவுஸ்ரேலிய குடிமகன் ஒருவர் திருப்பி அனுப்பட்ட தகவல்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம். அவர் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னதாக அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை உதவிக்கு அணுகவில்லை.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் புலிகள் இன்னாள் EPDPயானாலும் கோத்தபாயவின் புனர்வாழ்வு வலையத்துள்!

விடுதலைப் புலிகளது முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இவர்களுள் அரசின் பங்காளிக்கட்சியான ஈபிடிபியில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் சுதந்திரக்கட்சியின் அமைப்புக்கனில் இணைந்தவர்களென பலரும் அடங்கியுள்ளமை அவ் உறுப்பினர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. யாழ்.குடநாட்டின் பல பகுதிகளிலும் இத்தகைய போராளிகள் கடந்த சில தினங்களாக முகாம்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களது தற்போதைய வாழ்க்கை பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் விரல் அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் பின்னராக விடுதலைப் புலிகளது ஆதரவாளர்கள் மற்றும் போராளிகளில் ஒரு சிலர் இவ்வாறு அரசின் பங்காளிக்கட்சியான ஈபிடிபியிலும் மற்றும் சுதந்திரக்கட்சியின் அமைப்புக்களிலும் இணைந்தும் பணியாற்றிவருகின்றனர். அவ்வாறானவர்களே தற்போது புதிய விசாரணை வளையத்தினுள் வந்துள்ளனர். எங்களைப்போன்றே அவர்களுக்கும் கவனிப்புக்கள் இருந்தன என்கின்றனர் போராளிகளில் ஒரு பிரிவினர். இதனிடையே குடாநாட்டின் பல இடங்களிலும் இவ்வாறு முன்னாள் போராளிகள் விசாரணைக்கென அழைக்கப்படுவது தொடரும் அதே வேளை சிலர் கடத்தப்பட்டு வருவது தொடர்பாகவும தகவல்கள் வெளிவந்தவண்ணமேயுள்ளன. எனினும் கடத்தப்பட்டவர்கள் எவ்வளவு பேரென்பது பற்றியோ அவர்களுள் எவ்வளவு பேர் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் என்பது பற்றியோ தகவல்கள் இது வரை வெளியாகியிருக்கவில்லை.

17 டிசம்பர் 2012

கோத்தபாயவிற்கு முதலில் புனர்வாழ்வு அளிக்கவேண்டும்-விக்கிரமபாகு கருணாரட்ன

தனது பதவி என்ன என்பதை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாது செயற்படும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத்தான் முதலில் புனர்வாழ்வளிக்கப்படவேண்டும். அவர்தான் அதிகார மமதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.அரச அதிகாரியான கோட்டாபய எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாணவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை நடத்தினாலும்,புனர்வாழ்வுக்கு உத்தரவிடும் அதிகாரம் அவருக்கில்லை. கோத்தபாயவின் இந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன், மாணவர்கள் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம். அன்று கல்வியில் பாகுபாடு காட்டியதால்தான் நாட்டில் போர் ஏற்பட்டது. எனவே, அரசு மாணவர் சமூகத்துடன் விளையாட முற்படக்கூடாது என தெரிவித்துள்ளார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

16 டிசம்பர் 2012

ஐ.நாவின் துரோகத்தினை அம்பலப்படுத்த ஒன்று கூடுவோம்- மே பதினேழு இயக்கம்.

தமிழினப் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு துணை செய்து கொலைகளத்தில் மறைமுக பங்கேற்ற ஐ. நா அதிகாரிகளையும், அதன் பின்னிருந்த இந்திய அரசின் செயல்பாட்டினையும் கண்டித்தும்.. ஐ. நாஇலங்கைக்கு ஆதரவாக நின்று தமிழர்களுக்கு மறுத்த சர்வதேச சுதந்திர விசாரணை, ஐ. நாவின் பொது வாக்கெடுப்பினை நடத்தக் கோரியும்.. நடைபெறும் டிசம்பர் 16ம் தேதி மாலையில் நடக்கும் எதிர்ப்பு ஒன்று கூடலில் கலந்து கொள்ள அழைக்கிறோம். சர்வதேச்ச் சமூகமாய் விரிந்து நிற்கிற தமிழர்கள் ஐ. நாவின் உயர் அதிகாரிகள் தமிழினப்படுகொலையில் மெளனமாகவும், நேரடியாகவும் பங்கெடுத்த நிகழ்வுகளுக்கான நீதியை பெரும் வரை தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் இந்த சர்வதேச அரங்கம் இலங்கை அரசுடன் கூட்டிணைந்து தமிழர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய "இலங்கை மீதான சர்வதேச விசாரணை� மற்றும் � சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு" என்கிற நிகழ்ச்சி நிரலை உடைத்து இருகிறார்கள். ஐ. நா நேர்மையற்று நடந்து கொண்டதை சர்வதேச மக்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டிய அவசியமும், வரலாற்று கடமையும் நமக்கு இருக்கிறது. இதன் மூலமே நமக்கு நிகழ்ந்த அநீதியின் முழு பரிமாணத்தினை உணர்த்த இயலும். இதுவே நமக்கு இதுகாரும் மறுக்கப்பட்டு வந்துள்ள சர்வதேச அங்கீகரம் மீளப்பெருவதற்கான வாதத்தினை தமிழ்ச் சமூகம் முன்வைக்க இயலும். இதன் துவக்கமாய் மே பதினேழு இயக்கம் 16 டிசம்பர்2012 அன்று ஐ. நா அதிகாரிகளுக்கு எதிரான போராட்டமாய் , அந்த அதிகாரிகளை விசாரிக்கவும், அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையும் திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. இதில் தமிழர்கள் சாதி,மதம், கட்சி கடந்து இணைந்து நிற்பதன் மூலம் ஐ. நாவிற்கு ஒரு நெருக்கடியை அளிக்க முடியும். இது துவக்க நிகழ்வாய் அமையும் அதே நேரம் சர்வதேச தமிழ்ச் சமூகத்திற்கு மே பதினேழு இயக்கம் ஐ,. நாவிற்கு எதிரான போராட்ட்த்தினை உலகெங்கும் நடத்த வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கிறது. இதன் தொடர்ச்சியாக வருகின்ற முருகதாசன் நினைவு நாள் அன்று உலகெங்கும் உள்ள ஐ. நா அலுவலகங்கள் முற்றுகை இடப்படவேண்டும் என்கிற வேலை திட்டத்தினை சர்வதேச தமிழ்ச் சமூகத்திடம் முன்வைக்கிறோம். இதன் மூலம் உலகெங்கும் உள்ள மக்கள் இனப்படுகொலையில் ஐ. நாவின் பங்கேற்பினை அறிந்து கொள்வதும், ஐ. நா திட்டமிட்டு போர்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்கிற பழியை தமிழர்கள் மீது சுமத்தியதை அம்பலப்படுத்த முடிவதுடன், ஐ.நா தடுத்து வைத்த இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை, தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு ஆகிய நீதிகளை பெற்றிட முடியும். சர்வதேசத்தின் அயோக்கியத்தனத்தினை உடைத்தெறிவதே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு என நாங்கள் மிக உறுதியாக நம்புகிறோம். இந்த சனநாயக போராட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் தமிழகத் தமிழர்களாகிய நாம் தமிழீழ விடுதலை போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம். காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த துரோகத்திற்கு பதில் கிடைக்காமல் விடமாட்டோம் என்ற உறுதி இருக்கிறது ! நமக்கு ஆதரவான சக்திகள் என எவரும்இல்லை. .வேறு ஒருவர் வந்து நமக்கான போராட்டத்தை நடத்தபோவதும் இல்லை. .ஐ.நா.வின் கொடூர முகத்தை தோலுரிப்பதே ஈழ விடுதலையின் அடுத்தகட்ட போராட்ட நகர்வு ! சாதி மிருகம் பிரிக்க நினைத்தாலும் இனத்தின் விடுதலையை விட்டுகொடுக்க தமிழர்கள் ஒரு போதும் தயாராக இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துவோம் ! 2009ல் மவுனித்தோம். இன்னுமா மவுனிப்போம்.? மாவீரன்.முத்துகுமாரின் நெருப்பு நம்மை ஒன்றிணைக்கட்டும். நாம் வெல்வோம். அனைவரும் கூடுவோம். மக்கள் திரள் ஒன்று கூடல்: டிசம்பர் 16, ஞாயிறு மாலை 4 மணி, வள்ளுவர் கோட்டம்.

மே பதினேழு இயக்கம்-

15 டிசம்பர் 2012

இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பில்லை

மாயன் வம்சத்தினர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்கள். அவர்கள் மண்ணியல், விண்ணியல், சிற்பம், ஓவியம், காலக்கணிதம், வடிவ இயல், மாந்திரீகம், கணிதம், அறிவியல் என பல கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். உயர்ந்த அறிவு படைத்த அவர்கள் ஒரு காலண்டரை உருவாக்கியிருந்தனர். அந்த காலண்டரில் குறிப்பிட்டுள்ளபடியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. அந்தக் காலண்டர் டிசம்பர் 21, 2012 உடன் முடிந்து போகிறது. அதன் பின் ஒன்றுமில்லை. இதனால் உலகம் அழிந்து விடுமோ என்ற பரபரப்பு உருவாகியுள்ளது. இல்லாவிட்டால் அவ்வளவு அறிவு படைத்த மாயன் சந்ததிகள் அந்த காலண்டரின் தொடர்ச்சியாக வேறு காலண்டரை உருவாக்கியிருக்க மாட்டார்களா? அதுசரி, இந்த மாயன்கள் யார்? அவர்களுக்கு எப்படி உலக அழிவை கணித்துக் கூறும் ஆற்றலும்,திறனும் வந்தது? கிறிஸ்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 2000, 3000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்ற இனம் தென்அமெரிக்காவில் இருந்தது. அவர்கள் வானியல் சாஸ்திரம் முதல் புவியியல், விஞ்ஞானம்,சிற்பக்கலை, கட்டடக்கலை என பல கலைகளில் ஆற்றல் மிகுந்தவராக வாழ்ந்தனர். இவர்கள் உருவாக்கிய காலண்டர் கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர்21-ம் திகதி முடிவுக்கு வருகிறது. அவர்களது நாள் காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது. அது சுழன்று 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது தற்போதுள்ள நம் நவீன நாள்காட்டியின்படி,கி.மு. 3114-ஐக் குறிக்கிறது. மாயன் காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நவீன நாள்காட்டியின்படி கி.பி. 2012டிசம்பர் மாதம் 21-ம் திகதி 11:11:11 மணிக்கு முடிவடைகிறது. மிகச் சிறந்த வானியல் அறிவு பெற்றிருந்த மாயன் இன மக்கள் 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் திகதியுடன் தங்கள் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? அன்றுதான் உலகத்தின் இறுதிநாள். அதனால்தான் அவர்கள் காலண்டரில் அதன் பிறகு திகதிகள் இல்லை. அதன் பிறகு இந்த உலகம் இருக்காது இதுதான் மாயன் காலண்டரை நம்புவோரின் நம்பிக்கையாக இருக்கிறது. இது உண்மைதானா?உலகம் அழிந்து விடுமா? நாசா விஞ்ஞானிகள், அதற்கு வாய்ப்பே இல்லை. இதெல்லாம் வீண் புரளி என்கிறார்கள். ஆனால் நம்பிக்கையாளர்கள் பலர், உலகம் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படக் கூடும். ஏதேனும் புதிய கிரகங்கள் அல்லது விண்கற்கள் சூரியனுடனோ அல்லது பூமியுடனோ மோதலாம். இதைப்பற்றி மாயன்கள் தங்கள் சிலம்பலம் நூலில் மிகத் தெளிவாகக் குறித்துள்ளனர். அதன் காரணமாக பூமி சுழற்சியில் அல்லது சூரியனின் பாதையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். ஆபத்துக்கள் நேரலாம் என நம்புகின்றனர். இது பற்றி சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் டாக்டர் பி.எம்.அய்யம்பெருமாள் கூறியதாவது:- வருகிற 2012-ம் வருடத்தில் உலகம் அழியும் என்று, சமீபகாலமாக உலகம் எங்கும் தகவல் பரவி வருகிறது. இது வதந்தியா? இல்லது உண்மையா? என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது. விஞ்ஞானிகளின் அதி நுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவது போல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்றார்.

சிறுபான்மை இனம் கொழும்பில் பெரும்பான்மையாக மாறுவதற்கு புலிகளே காரணமாம்!

விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொண்ட பாரிய திட்டம் காரணமாகவே கொழும்பு நகரில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம் என தெரியவந்துள்ளதாக அரசசார்பு சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது. கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள புலிகளின் 17 சொத்து விற்பனை நிறுவனங்கள் கொழும்பு நகரில் வசித்த சிங்கள குடும்பங்கள் வசித்த வீடுகளை கொள்வனவு செய்து, தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்தன. இந்த வீடுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தமிழர்களும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். இலங்கை முதலீட்டுச் சபையில் பணியாற்றிய புலிகளுக்கு ஆதரவான உயர் அதிகாரி ஒருவரின் உதவியுடன், புலிகளின் நிறுவனங்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன. வன்னி இராணுவ நடவடிக்கைக்கு பின்னர், குறித்த அதிகாரி நாட்டில் இருந்து வெளியேறியதுடன், புலிகளின் நிறுவனங்களும் காணாமல் போயுள்ளன. விடுதலைப்புலிகளின் நிறுவனங்கள் இலங்கையில் உள்ள 40 பாரிய நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளதுடன் அமெரிக்காவில் உள்ள வர்த்தகரான ராஜ் ராஜரட்னம் அவற்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் கொழும்பு நகரில், 40 வீத முஸ்லிம்களும், 33 வீத தமிழர்களும், 24 வீத சிங்களவர்களும் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

14 டிசம்பர் 2012

இறுதி யுத்தத்தில் 1 லட்சத்து 06 ஆயிரம் பேரை காணவில்லை - பீபீசி ஊடகவியலாளர் அதிர்ச்சி தகவல்

இறுதி யுத்தத்தில் 1 லட்சத்து 06 ஆயிரம் பேரை காணவில்லை - பீபீசி ஊடகவியலாளர் அதிர்ச்சி தகவல்இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் ஒரு லட்சத்து 06 ஆயிரம் பொது மக்களை காணவில்லை என இலங்கைக்கான பீபீசியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை தவிர்த்து ஒரு லட்சத்து 06 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக அவர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசு விளக்கமளித்தே ஆக வேண்டும் என பிரான்சிஸ் ஹெரிசன் வலியுறுத்தியுள்ளார். 2000 தொடக்கம் 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் பீபீசி செய்தித் தொடர்பாளராக தான் பணியாற்றியதாகவும் மத்திய வங்கியின் சனத்தொகை தகவலை அடிப்படையாகக் கொண்டு யுத்தத்தின் பின் ஒரு லட்சத்து 06 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக கண்டறிந்ததாகவும் தமிழ்நாட்டில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். மத்திய வங்கியின் சனத்தொகை தகவலில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் மக்கள் சனத்தொகை குறித்த தகவல் உள்ளடக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். ´இன்னும் தொடரும் மரணங்கள்´ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில் இது குறித்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தகம் விரைவில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவுள்ளதாக பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் அப்பிரதேசங்களில் வசித்த தாதி, ஆசிரியர், அருட்சகோதரி மற்றும் முன்னாள் போராளிகளின் அனுபவம் மற்றும் அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களும் குறித்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தகாத செயற்பாடுகள் குறித்தும் புத்தகத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக பிரான்சிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழரின் திட்டுக்கு பயந்து சம்பந்தன் பேச்சுக்கு வரவில்லை போலும்-சொல்கிறார் மகிந்த

தமிழ்க் கூட்டமைப்பு முன்வந்தால் தீர்வுப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அண்மையில் கூட சம்பந்தன் வருவேன் என்று கூறியிருந்தார். காலையுணவு கூடத் தயார் செய்யப்பட்டு அவர் வருவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லையே?'' என்றும் குறிப்பிட்டார். பத்திரிகை மற்றும் மின்னியல் ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்றுக்காலை அலரிமாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது ஜனாதிபதியிடம் அரசு கூட்டமைப்பு பேச்சு பற்றியும் கேட்கப்பட்டது. அப்போதே மேற்கண்ட பதிலை வழங்கிய ஜனாதிபதி, தமிழ்க் கூட்டமைப்பினர் பேச்சுக்கு வரவேண்டு மென்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார். "சம்பந்தன் என்னுடன் பேச வருவதாக சொல்லியிருந்தார். அவர் வருவாரெனக் காலையுணவும் தயார்செய்யப்பட்டிருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் அவர் வரவில்லை. புலம்பெயர் தமிழர்கள் திட்டுவார்கள் என்று பயந்துவிட்டார் போலும்'' என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி.

சவேந்திர சில்வாவை தடுக்கும் அதிகாரம் இல்லை என்கிறார் பான் கீ மூன்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாவின்  அமைதி காக்கும் பணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் அதிகாரம் தனக்கு கியைடாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். உறுப்பு நாடுகளே இதனைத் தீர்மானிக்க வேண்டுமெனவும், தாம் தனித்து இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சவேந்திர சில்வா தற்போது லெபனானில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை கண்காணிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு நடுப்பகுதியளவில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வு அறிக்கை தயாராகி விடுமெனவும் பான் கீ மூன்  குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது பணிகளை உரிய முறையில் ஆற்றத் தவறியதாக பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட  பெட்ரி குழு அண்மையில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

13 டிசம்பர் 2012

மாணவிகளையும் விசாரணைக்கு அழைக்கிறது சிங்களப் புலனாய்வுத்துறை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் மூவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை, இவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்துக்கு வருமாறு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும் பேராசிரியருமான புஷ்பரட்ணம் தெரிவித்தார். இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக மாணவிகள் விடுதியின் சங்கத் தலைவி என்றும் ஏனைய இருவரும் மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், இவர்களில் இருவரை மாத்திரமே நாளைய தினம் விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிவித்ததாக பேராசிரியர் புஷ்பரட்ணம் மேலும் தெரிவித்தார்.

கருணாநிதியை போட்டுத்தாக்கும் நாஞ்சில் சம்பத்-(காணொளி)

மன்னார் ஆயருக்கு பக்கபலமாக இருக்குமாறு ஜயலத் ஜயவர்த்தன வேண்டுகோள்!

மன்னார் ஆயர் 
தமிழ் மக்களுக்காக இரவு, பகல் பாராது அளப்பரிய சேவையாற்றி வரும் மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் ஆயர் தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் குறித்து ஜயலத் ஜயவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக  மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மௌனமாக கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிந்த தமிழ் மக்களுக்காக அகிம்சை வழியில்  முன்நின்றவராவார். 
கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமன்றி கஷ்டங்களை எதிர்கொண்டுவரும் இந்து மக்களுக்கும் அவர் அளப்பரிய சேவையாற்றியுள்ளார், ஆற்றி வருகிறார். 
யுத்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு அவர் அடைக்கலமாக  இருந்தார். விசேடமாக அவரது ஆளுகையின் கீழுள்ள வன்னி மருதமடு தேவாலயத்தில் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிட வசதிகளை அவர் வழங்கினார். 
இன்றைய காலகட்டத்திலிருந்த அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்க் கைதிகளின் நலன்களுக்காக மன்னார் ஆயர் இரவு, பகல் பாராது செயற்பட்டார். என்னுடன் ஆயர் பல சந்தர்ப்பங்கில் இக்கைதிகளைச் சந்திக்க சிறைச்சாலைகளுக்குச் வந்துள்ளார்  
மன்னார் ஆயர் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதியுடன் பலமுறை சந்தித்து பேசியுள்ளதுடன், மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது பாதுகாப்பு உயரதிகாரிகளைச் சந்தித்தும் பேச்சு நடத்தினார். 
யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையிலும் ஆயர் தமது அதிக பங்களிப்பை நல்கினார். இவ்வாறு பல சேவைகளை செய்ததினால் ஆயர் பரிகாசங்கள், சவால்கள், பல தடைகளை சந்திக்க வேண்டியிருந்தது. 
மன்னார் ஆயரிடம் பல முறை விசாரணைகள் நடத்தப்பட்டன என்பதை தனிப்பட்டமுறையில் நான் நன்கறிவேன். என்னுடன் தமிழ்க் கைதிகளை சந்திக்கச் சென்றவேளை ஆயருக்கு பல தடைகள் வந்தன. உண்மையான மனிதநேய செயற்பாட்டாளரான மன்னார் ஆயர் செய்கின்ற இந்த அளப்பரிய சேவைகளுக்காக நாம் அனைவரும் அவருக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது எனது உணர்வு, கருத்தாகும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தன் வெளிநாடுகளுக்கு வரக்கூடாதென புலம்பெயர் தமிழர் தடை-திவயின

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுதலைப்புலிகள் குறித்து பேச கூடாது  என அறிவுறுத்தி புலம் பெயர் தமிழர்கள் அவருக்கு புலிகள் பற்றி பேச தடைவிதித்துள்ளதாக திவயின கூறியுள்ளது. விடுதலைப்புலிகள் தம்மை தாமே அழித்து கொண்டனர் என சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையே இதற்கான காரணமாகும். அதேவேளை சம்பந்தனின் இந்த கருத்து தொடர்பில், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரது பேச்சு காரணமாக அவர், வெளிநாடுகளுக்கு வர இடமளிக்க போவதில்லை என புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் தெரிவித்துள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.

12 டிசம்பர் 2012

மங்களவின் லண்டன் பயணத்தால் அச்சமடைந்துள்ள மகிந்த அரசு!

அவசரமாக இன்று லண்டன் நோக்கி பயணமான முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் பயணம் குறித்து உடனடியாக ஆராய்நது விரிவான அறிக்கையை வழங்குமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து அரச புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மங்கள சமரவீர அண்மையில், பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக செய்த முறைப்பாட்டை அடுத்து, மங்கள சமரவீர மீண்டும் அவசரமாக லண்டன் சென்றிருப்பது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரின் கூடிய கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் திடீரென லண்டன் பயணமாகியிருப்பது அரசாங்கத்தை மேலும் உஷாரடைய செய்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் லண்டன் உட்பட ஐரோப்பாவின் சகல அரச நிறுவனங்களும் நத்தார் விடுடுறைக்காக மூடப்பட உள்ள நிலையில், மங்கள சமரவீர லண்டன் சென்றிருப்பது குறித்து அரசாங்கம் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது. அதேவேளை நேற்றிரவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர். இதுவே அவரது பயணம் குறித்து அரசாங்கம் அதிக கவனத்தை செலுத்த காரணமாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும் தனது நத்தார் விடுமுறையை ஸ்கொட்லாந்தில் கழிப்பதற்காகவே மங்கள சமரவீர இங்கிலாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பில் க.பொ.த சாதார தரப்பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பியிருந்த மாணவி நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 16 வயதுடைய ரி.வினோதினி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை பரீட்சைக்குச் சென்று திரும்பிய வினோதினி வீட்டில் படித்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டார் வெளியில் சென்று திரும்பி வந்து பார்க்கையிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை களவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

11 டிசம்பர் 2012

கோப்பாய் பகுதியில் துப்பாக்கி சூட்டுச்சத்தங்கள்!

இலங்கை நேரம் இன்று 12.12.2012 அதிகாலை 12.15 மணிமுதல் 10 நிமிடங்களிற்குமேல் தொடற்சியாக துப்பாக்கிச்சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. கோப்பாய்ப் பக்கத்திலிருந்து கேட்கிறது சரியாக கணிக்க முடியவில்லை. இடையிடையே குண்டுச்சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து.. எதிர்பாருங்கள் ... என எமது யாழ் வாசகர் ஒருவர் தகவல் அனுப்பி உள்ளார். எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த தகவலைத் தந்தவர் முன்பும் உண்மையான பல தகவல்களை அங்கிருந்து உடனுக்குடன் பரிமாறியவர். அந்த வகையில் வாசகர்களுக்கு இந்த தகவலை மக்களின் தகவல் பரிமாற்றம் என்ற வகையில் தருகிறோம். மேலதிக தகவல் உறுதிப்படுத்தப்பட்டு வந்தால் உடன் தருகிறோம்.
நன்றி:குளோபல் தமிழ் 

நெடுந்தீவு துறைமுகத்தில் பொருள்கள் ஏற்றி இறக்குவதில் நெருக்கடி!

நெடுந்தீவுப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான கல், மண், சிமெந்து உட்பட அனைத்துப் பொருள்களும் வெளி இடங்களில் இருந்து படகுகள் மூலமே கொண்டு வரப்படுகின்றன என்று கூறப்பட்டது. உள்ளூரில் கல், மண் போன்ற பொருள்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. படகுகள் மூலம் எடுத்து வரப்படும் இந்தப் பொருள்களைத் தற்போது அமைக்கப்பட்டுள்ள துறைமுகப் பாலத்தில் இறக்கி ஏற்றுவது சிரமமாக உள்ளது. பழைய துறைமுகப் பாலத்தில் இவற்றை இறக்கக் கூடியதாக உள்ள நிலையில், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் ஏற்றுவதற்கும் வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கைகளுக்காக எடுத்து வரும் பொருள்களையும் பழைய துறைமுகத்தில் இறக்கக்கூடியதாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என படகு ஊழியர்கள் கேட்கின்றனர். அதிக அளவிலான பொருள்களை எடுத்துவருவோர் உட்பட கட்டட ஒப்பந்ததாரர்களும் இந்த விடயம் குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.

வடக்கில் போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களை பிடித்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த பின்நிற்க போவதில்லை-கோத்தபாய

விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் சில இளையோர் அமைப்புகள் மற்றும் புதிய இளைஞர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களை பிடித்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த பின்நிற்க போவதில்லை. தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் ரகசியமான முறையில் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்;துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் உஷாராக இருக்குமாறு வடக்கில் உள்ள பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார். திட்டமிட்ட சிலர் இராணுவம் மற்றும் காவற்துறையினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் ரகசியமான முனைப்புகளை மேற்கொள்ள முயற்சித்து வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 டிசம்பர் 2012

பல்கலை மாணவர்களை உடனே விடுதலை செய்! கிளிநொச்சியில் திரண்ட மக்கள்

கிளிநொச்சியில் இன்று ஏட்டிக்குப்போட்டியாக இரண்டு ஆர்ப்பாட்டங்கள்யாழ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களை விடுதலை செய்யக் கோரி இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுது. கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய், இராணுவமே வெளியேறு, போன்ற கோசங்கள், பாதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,புதிய மாக்சிஸ் லெனின் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தை தமிழ்த் தேசியக மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஆறு கட்சிகள் கூட்டாக இணைந்து இப்போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இப் போராட்டத்திற்கு எதிராக ஒரு குழுவினர் ஓர் ஆப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.

09 டிசம்பர் 2012

யாழில் வாய்க்காலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ். நகரப் பகுதியிலுள்ள கழிவு நீர் வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (9) காலை மீட்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலுக்குள் இருந்தே இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க ஆணினுடையது என தெரிவிக்கப்படுகிறது. இந்நபர் மது போதையில் தவறி வாய்க்காலுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் .போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

08 டிசம்பர் 2012

'புலி' அலரிமாளிகையிலேயே இருகின்றது: தம்மிக

புலிகள் மீண்டும் தலைத்தூக்கக்கூடும் என்றும் யுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறிக்கொண்டு புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடுகின்றனர். ஆனால்,புனர்வாழ்வளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர். என்று ஜனநாய சோசலிச கட்சியின் உறுப்பினர் தம்மிக சில்வா தெரிவித்தார். யாழ்.பல்கலைகழக மாணவர்களை விடுதலை செய்! மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்' எனும் தொனிப்பொருளில் நிப்போன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜே.வி.பியினர் மலேரியா,டெங்கினால் பாதிக்கப்பட்டு மரணிக்கவில்லை அவர்களும் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியையே மேற்கொண்டதன் காரணமாகவே மரணித்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியுமாயின் தமது உறவுகளை நினைவுகூர்ந்து ஏன்? தமிழர்கள் அஞ்சலி செலுத்தமுடியாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பலரும் தற்போது கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். புலிகளை யாழ்ப்பாணத்தில் தேடவேண்டிய தேவையில்லை. கருணா,கே.பி மற்றும் பிள்ளையான் போன்ற புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகள் அலரிமாளிகையிலேயே இருக்கின்றனர்.

நீதியரசருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர குற்றச்சாட்டுகள் போதாது; பதவி விலகுமாறு மஹிந்த இறைஞ்சல்!

ஐந்தில் மூன்று நிரூபிப்பு!ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றிரவு பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணிகளில் ஒருவரான கந்தையா நீலகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதம நீதியரசரை, பதவியில் இருந்து விலகுமாறு அறிவிக்க வேண்டும் என தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. தற்போதே தாம் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான குற்றச்சாட்டுக்களை வாசித்ததாகவும் இந்த குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் அளவுக்கு போதுமானது அல்ல எனவும் ஜனாதிபதி நீலகண்டனிடம் கூறியுள்ளார். எனினும் அந்த குற்றச்சாட்டுக்களை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பின்வாங்க முடியாது எனவும் இதனால், பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு கூறுங்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவர் பதவி விலகினால், அவருக்கும், அவரது கணவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற முடியும் எனவும் ஜனாதிபதி கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.