பக்கங்கள்

14 அக்டோபர் 2020

விஜய்சேதுபதிக்கு எதிராக திரண்ட கர்நாடக தமிழ் அமைப்புக்கள்!

சிங்கள தேசிய கொடியை மார்பில் குத்திக்கொண்டு தமிழ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படங்களை இனிமேல் கர்நாடகாவில் ஓட விடமாட்டோம் என்று கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உலக அளவில் மிகப்பெரிய சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார். தமிழரான அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர் ஆகும். முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஸ்ரீபதி என்பவர் பயோகிராபி படமாக இயக்குகிறார். இந்த படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் தமிழ் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.இந்த படம் தொடர்பான மோஷன் போஸ்டர் நேற்று, வெளியாகியது. அதில் முத்தையா முரளிதரனின் பழைய தோற்றத்தைப் போலவே விஜய் சேதுபதியின் முகம் மற்றும் முடி வெட்டு உள்ளிட்டவை பக்காவாக பொருந்தி இருந்தது. இந்த நிலையில்தான், விஜய் சேதுபதிக்கு தமிழ்தேசியவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட இனப் போரின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் முத்தையா முரளிதரன் என்று பரவலாக குற்றச்சாட்டு உண்டு. தமிழர்களுக்கு ஆதரவாக அவர் குரல் ஒலித்து இருந்தால், உலக அளவில் அதற்கு தனி கவனம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் சிங்கள அரசுக்கு தோள் கொடுத்தார் என்பது தமிழ் தேசியவாதிகள் குற்றச்சாட்டு.இந்த நிலையில்தான், "விஜய் சேதுபதியால் வெட்கம்" என்று பொருள்படும் வகையில், டுவிட்டரில் விஜய் சேதுபதிக்கு எதிராக, தேசிய அளவில், ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் அமைப்பு, ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது: தமிழ் பட நடிகர் விஜய் சேதுபதி, பீட்சா, ரம்மி, 96 போன்ற படங்களில் நடித்து புகழ் அடைந்தவர். தமிழ்படங்களால் வளர்ந்தவர். ஆனால் முத்தையா முரளிதரன் என்ற, இலங்கை கிரிக்கெட் வீரர் ஈழப்படுகொலையை மகிழ்ச்சியான நாள் என பேசியவர்.இனப்படுகொலையாளன் ராஜபக்சவை போற்றிப் புகழ்ந்தவர். அப்பேர்பட்ட தமிழினத் துரோகியின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வேலையை காட்டுகிறது. பணத்திற்காக எதையும் செய்ய துணிந்துள்ள, இதுபோன்ற சுயநலவாதிகள், தமிழினத்துக்கு எதிரானவர்களை நாம் கண்டிக்க தவறினால், நாளை எல்லோரும் தமிழர்களுக்கு எதிராக பேசத் தொடங்குவார்கள்.விஜய் சேதுபதி, "800" என்ற படத்திலிருந்து விலக வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எந்த வேகத்தில் வளர்ந்தாரோ, அதே வேகத்தில் சரிவார். விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் இழிவுபடுத்தி யார் பேசினாலும் கர்நாடக தமிழர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். விஜய்சேதுபதியின் படங்களை கர்நாடகாவில் ஓட விடமாட்டோம். இவ்வாறு கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் கோபி ஏகாம்பரம், 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்திடம் வழங்கிய பிரத்யேக பேட்டியின்போது கூறியதாவது: கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் மட்டுமின்றி, கர்நாடகாவிலுள்ள பிற தமிழ் இயக்கங்களையும் இந்த விஷயத்தில் ஒன்றிணைத்து வருகிறோம். கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், கர்நாடக தமிழர் பேரவை உள்ளிட்ட அனைவருமே ஒத்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்."முரளிதரன் சாதனை தமிழர் என்பதால் அவர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறேன், என்று விஜய் சேதுபதி கூறுகிறாரே, இலங்கை அரசுக்கு ஆதரவாக, விஜய் சேதுபதி நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன?" என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த கோபி ஏகாம்பரம், "முத்தையா முரளிதரன் ஈழப் படுகொலையை கொண்டாடியவர். அந்த இனப் படுகொலையை யாராலும் ஜீரணிக்க முடியாது. அப்படியிருக்கும்போது தமிழருக்கு எதிரான படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அவர் வன்மத்தைக் காட்டுகிறது. ஈழப் பிரச்சினையில், மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆழம் பார்க்க இந்த படம் எடுக்கப்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். தமிழகத்திலுள்ள கட்சிகள் எப்படி ஒன்றிணைகிறார்களோ தெரியாது. ஆனால், கர்நாடகாவிலுள்ள தமிழ் அமைப்புகள், ஒன்றிணைந்து எதிர்ப்போம், என்றார் அழுத்தம் திருத்தமாக.

09 அக்டோபர் 2020

தமிழர் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்றவேண்டும்!

13வது திருத்தம் அரசியல் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியல்ல என்றும், தமிழர் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்துள்ளார். “தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இந்திய - இலங்கை உடன்படிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது.தமிழ் மக்களை, ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளப்படாதது இந்த உடன்படிக்கையின் மாபெரும் குறைபாடாகும். தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்கப்பட்டதால், தமிழ் மக்களின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் கடப்பாடு உள்ளது. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ஓர் ஆரம்பப்புள்ளியாகக் கூட அமையவில்லை என்பதால், நாம் 13வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கிறோம். இந்திய - இலங்கை உடன்படிக்கையும் 13ஆவது திருத்தச் சட்டமும் முற்றிலும் வேறுவேறானவை. 13வது திருத்தச் சட்டத்தை நாங்கள் நிராகரிக்கிறோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை. இந்த உடன்படிக்கையின் சரத்துக்களின்படி தமிழர் தேசத்தை அங்கீகரித்து அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி, அதனடிப்படையில் இந்தத் தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு, இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகிறோம்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

04 அக்டோபர் 2020

பிரான்சில் நடந்த கொடூரப் படுகொலை!

பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு அருகிலுள்ள Noisy-le-Sec நகரில் நேற்றுக் காலை இலங்கைத் தமிழர்கள் ஐவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தை ஒன்று, நான்கு வயதுக் குழந்தை ஒன்று, 14 வயதுடைய இருவர், பெண் ஒருவர் என 5 பேர் உள்ளடங்கியுள்ளனர். உடல்கள் இப்பொழுது வரை அந்த வீட்டிலேயே உள்ளன. சடலங்களை எடுத்துச்செல்லும் வாகனம் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறது. பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில், இரண்டு குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையிலேயே இந்தக் கொலைகள் நடந்துள்ளன. கொலை நடைபெற்ற இடத்திலிருந்து படுகாயமடைந்த நிலையில் தப்பிவந்த சிறுவன் ஒருவன் வீதியில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்கு வந்து உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளான். “எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்” என குறித்த சிறுவன் மதுச்சாலையின் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளான். சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். வீடு முழுவதும் இரத்தம் தெறித்து, இரத்த வெள்ளத்தில் ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளனர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினார்கள். “சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் ‘கோமா’ நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. தேசிய மற்றும் நகரப் பொலீஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாட்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப் பட்டுள்ளன.

03 அக்டோபர் 2020

புங்குடுதீவில் பூசகர் கொலை சைவ மகாசபை கண்டனம்!

புங்குடுதீவு பாணாவிடை சிவன் கோவில் (ஈழத்து இராமேசுவரம் ) குரு ரூபன் சர்மா ஐயாவினுடைய கொலையை சைவ மகா சபை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. கொலையாளிகள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பின்புலம் முழுமையாக ஆராயப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும். மனிதத்தற்கும் ஜிவகாருண்யத்திற்கும் போராடி உயிர்துறந்த தாய் மதத்தில் அளவு கடந்த பற்றுறுதி உடைய வணக்கத்துக்கும் போற்றத்துக்குரிய குருவிற்கு ஆத்மார்த்த அஞ்சலிகள் . இறை சிவனின் பாதார விந்தங்களில் ஆத்ம சாந்தி பெறுங்கள். நிச்சயம் உங்கள் நல்ல எண்ணங்கள் இவ்வுலகில் நிலைத்து நிற்கும் ஐயா.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் பரா.நந்தகுமார் 

01 அக்டோபர் 2020

இலங்கை சிங்களப் பெரும்பான்மைக்கு மட்டும் சொந்தமானதில்லை-கஜேந்திரகுமார்!

இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார். இலங்கை பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இலங்கையின் அரசியலமைப்புக்கள் எதுவும் தமிழர்களுக்கு ஒரு போதும் நேர்மையாக இருந்திருக்கவில்லை. இந்த நாட்டில் நிறைவேறிய, பெரும்பான்மைத்துவ வாதத்தை மையப்படுத்திய மூன்று ஒற்றையாட்சி அரசியலமைப்புகளுமே அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஜனநாயக மீறலாகவேதான் அமைந்திருந்தன. இந்த அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படுத்தப்பட்ட 17ஆம் 19ஆம் திருத்தச் சட்டங்கள் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என கூறப்பட்ட போதிலும் உண்மையான நடைமுறையில் தமிழர்களுக்கு எதுவித நீதியும் ஜனநாயகப் பாதுகாப்பும் அதன் மூலம் கிடைத்திருக்கவில்லை என்பது தான் யதார்த்தம். கடந்த 72 வருடமாக எண்ணிக்கையில் சிறிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ச்சியாக பறித்து பழக்கப்பட்டு வந்த சிங்கள அரசுகள், தற்போது இந்த 20ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் எதுவித கூச்சமும் இன்றி தனது சொந்த மக்களின் ஜனநாயக உரிமைகளிலேயே கை வைக்க தொடங்கியிருக்கிறது. தற்போது உங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றபோது அதற்கு எதிராக நாமும் உங்களுடன் இணைந்து குரல்கொடுக்க முன்வந்துள்ளோம். மேலும் 20ஆம் திருத்தத்துக்கு எதிரான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதுடன், அதற்கான எமது பூரண ஆதரவையும் இத்தால் வெளிப்படுத்துகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.