பக்கங்கள்

29 மே 2021

தோல்வி கண்டு துவளாத சீமான்,களத்தில் நாம் தமிழர்!

சீமான் குரலை கேட்டதுமே, வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, களப்பணியில் இறங்கி வருகின்றனர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்..! சீமானை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, இதுவரை தனி நபராகவே தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.. இதற்கு மிகுந்த மனவலிமை தேவை.. துணிச்சல் தேவை.. இந்த முறையும் அப்படித்தான் இறங்கினார்..!இந்த முறை தேர்தலில் அவரது 2 வியூகங்கள் பாராட்டத்தக்கது.. ஒன்று ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை சீமான் களம் இறக்கியது வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்பட்டது.மற்றொன்று, ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, சசிகலாவை சீமான் சந்தித்து பேசியது மிக நுட்பமான அரசியலை வெளிப்படுத்தியது.. நேரடியாகவே சசிகலாவை சீமான் சந்தித்து பேசியதால், நாம் தமிழர் கட்சிக்கு முக்குலத்தோர் வாக்குகள் ஓரளவு கிடைக்கும் என்று அப்போதே கணிக்கப்பட்டது.. அதுதான் இறுதியிலும் நடந்தது.தினகரனை ஓரங்கட்டும் அளவுக்கு முன்னேறி உள்ளார் சீமான்.. அனைத்து இடங்களிலும் தோல்வி என்று பொதுப்படையாக சொன்னாலும், சீமானுக்கான அரசியல் கட்டமைப்பு உயர்ந்து வருகிறது.. எனினும், தற்போதைய காலகட்டத்தில் தொற்று தலைதூக்கி வரும்நிலையில், சீமான் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற ஆர்வம் பரவலாக ஏற்பட்டு வருகிறது.ஏன் நாம் தோத்து போனோம்? என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? யார் சொதப்பியது? என்பது குறித்தெல்லாம் ஆலோசனையே நடத்தவில்லை... 234 தொகுதிகளிலும் தோல்வி என்றபோதும், அதை பற்றியும் கவலையே படவில்லை சீமான்.. ரிசல்ட் வந்த மறுநாளே கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆன்லைன் வழியாக ஆலோசனையில் இறங்கி விட்டாராம்..இதையடுத்து, அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட 117 ஆண் வேட்பாளர்கள், மற்றும் 117 பெண் வேட்பாளர்களுடன் தனித்தனியாகவும் ஆலோசனை கூட்டங்களை நடத்தினாராம். இப்படியே முழு நேரமும் கட்சி பணியில் தன்னை ஈடுபத்தி கொண்டுள்ளார். அவ்வப்போது, முக்கிய பிரச்சனைகள் குறித்து, தமிழக அரசுக்கு அறிக்கைகளையும் விடுத்து வருகிறார்.தந்தையின் இறப்பு ஏற்பட்டுவிடவும், 2 நாள் மட்டும் சொந்த ஊரில் தங்கியிருதார்.. மற்படி, கட்சியின் கட்டமைப்பு பணிகளிலேயே பிஸியாக இருக்கிறார்... இதற்கு நடுவில், கொரோனா நலத்திட்ட உதவிகளையும், கட்சியினரிடம் சொல்லி முடக்கிவிட்டுள்ளார்.. இதற்காகவே ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக போன் பண்ணி பேசி கொண்டிருக்கிறாராம்.. சீமான் குரலை கேட்டதுமே, நிர்வாகிகள் வேட்டியை மடித்து களத்தில் குதித்துள்ளனர்.. வழக்கம்போலவே, மக்களிடம் நெருங்கியே இருக்கும் முயற்சிகளிலும் சீமானின் தம்பிகள் இறங்கிவிட்டனர்..!

நன்றி:one india

12 மே 2021

தமிழ் சகோதர சகோதரிகளின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம்!

ஸ்ரீ லங்கா அரசாங்கம் தமிழ் மக்களைத் துன்புறுத்திய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த ஒடுக்குமுறை ஸ்ரீலங்காவில் தொடர்கின்றது. எனவே எங்கள் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் என கனடா, ஒன்ராரியோ மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் குராடான் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் கனடா நாடாளுமன்றில் உரையாற்றிய இவர் “வணக்கம்” கூறி தமது உரையை ஆரம்பித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “தமிழ் இனப்படுகொலை வாரத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மரியாதையாக எண்ணுகின்றேன். இந்த வாரம் தமிழர்களுக்கு ஒரு இடத்தை வழங்கும், தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு கடுமையான அநீதியைப் பற்றி குழுவில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள இது ஏதுவாக அமையும். இனப்படுகொலையின் வரலாறு மற்றும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள். ஸ்ரீ லங்கன் அரசாங்கம் தமிழ் மக்களைத் துன்புறுத்திய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பல தசாப்தங்களாக, ஸ்ரீ லங்கா ஆளுகை தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைப்பு, நேரடி மற்றும் கலாச்சார வன்முறை மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. 1983 ஆம் ஆண்டில் கறுப்பு ஜூலையின் ஒழுங்கமைக்கப்பட்ட இனப்படுகொலை எங்களுக்கு நினைவிருக்கிறது. அங்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வாக்காளர்களின் பட்டியல்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளையும் வழங்கியது. இதனால் ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பல் தமிழ் குடும்பங்களை அடையாளம் காண முடிந்தது. இந்த கும்பல்கள் தமிழர்களைத் தாக்கி ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல சதி செய்தது. யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததை நினைவில் கொள்கிறோம். விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தமிழ் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டன. செஞ்சோலையில் அனாதை இல்லத்தின் மீது குண்டுவெடித்தது செம்மனியின் கல்லறைகளை நாங்கள் நினைவில் கொள்கிறோம். வெள்ளை வேன்களில் தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு காணாமல் போன ஆண்டுகளை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம். அங்கு அவர்களது குடும்பங்கள், இன்று வரை ஸ்ரீ லங்கன் அரசாங்கத்தால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே என்று கேட்கிறார்கள். சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாக தமிழர்கள் விலக்களிக்கப்பட்டுள்ளனர்; தமிழ் மக்கள், அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை அகற்றும் முயற்சியில் அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அல்லது முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது மிகவும் அழிவுகரமான தாக்குதல்களில் ஒன்றாகும். அங்கு ஸ்ரீ லங்கா அரசாங்கம் ஒரு தாக்குதலை நடத்தியது, இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காணாமலாக்கப்பட்டனர். இதையடுத்து ஏராளமான தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கனடாவிலுள்ள தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த கட்டடத்திற்கு வெளியிலும் போராட்டம் நடந்ததை நான் நினைவுகூருகின்றேன். இரவு பகல் பாராது மழை, வெயில் பாராது மக்கள் இங்கு போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை நான் கவலையுடன் தெரிவிக்கின்றேன். உலகத்தலைவர்களும் இதற்கு பதில் வழங்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் தமிழ் மக்கள் பாரியளவு உயிரிழப்புக்களையும், சேதங்களுக்கும் முகங்கொடுத்தனர். அவர்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை. அவர்களுடைய தேவைகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவுமில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையும் வன்முறைகளும் இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதை அண்மைய காலங்களிலும் நாம் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை அரசாங்கம் இடித்தழித்ததை குறிப்பிடலாம். இதன்மூலம் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை மீண்டும் ஆரம்பிப்பதாக தோன்றுகின்றது. தமிழ் இனப்படுகொலை வாரம் வருவதை நாம் இப்போது காண்கிறோம், இந்த ஏற்பாட்டின் முடிவுகளை, பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் சமூகத்திற்கு எதிரான அநீதிகள், பேரணிகள் மற்றும் ஏற்பாடு மற்றும் இளைஞர் கூட்டங்களை நடத்துகின்றனர். பல மிரட்டல்களுக்கு மத்தியில் இது முன்னெடுக்கப்படுகின்றது. இப்போது, தமிழ் இனப்படுகொலை வாரம் வருவதால், தமிழ் சமூகங்களுக்கு தமிழ் இனப்படுகொலை பற்றி அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கும் அவர்களின் தற்போதைய தலைமுறையினருக்கும் கல்வி கற்பிப்பதற்கான வாய்ப்பை மட்டும் கொடுக்கப்போவதில்லை. முன்னோக்கிச் செல்வது நீதி மற்றும் பொறுப்புக்கூரல் இருப்பதை உறுதிசெய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே எங்கள் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், நீதிக்காக தொடர்ந்து போராடுவோம், உடனடியாக தமிழ் இனப்படுகொலை வாரத்தை கடந்து அதை செய்து காட்டுவோம்” என்று கூறி தனது உரையை முடித்தார்.

05 மே 2021

தமிழகத் தேர்தலில் அதிரடி காட்டிய சீமான்!

"அட ஆச்சரியமா இருக்கே.. சீமான் எப்படி 3வது இடத்துக்கு வந்தார்? நம்பவே முடியலையே" என்ற வியப்பு கேள்விகள் இந்த 4 நாட்களாகவே அரசியல் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.. மாயம் இல்லை.. மந்திரம் இல்லை.. நாம் தமிழர் எப்படி 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது என்பதற்கான வாக்கு வங்கி சதவீதம் தொகுதி வாரியாக வெளிவந்துள்ளது. இந்த தேர்தலிலாவது சீமான் கூட்டணி வைப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.. கமலுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது.. ஆனால் சீமான்தான் மறுத்து விட்டார்.. வழக்கம்போலவே சிங்கம் சிங்கிளாகவே களம் இறங்கும் என்று அறிவித்தார். இதுவரை வந்த கருத்து கணிப்புகளில் அனைவருமே சொல்லி வைத்தது போல ஒரே கருத்தை சொன்னார்கள்.. இந்த முறை நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய ஓட்டுக்களை பிரிக்கும் என்றார்கள்.. அதன்படியே எல்லா தொகுதிகளிலும், கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளது... அதாவது மொத்தம், 30 லட்சத்து, 43 ஆயிரத்து, 657 ஓட்டுகளை பெற்றுள்ளது.. இந்த தமிழ்நாடு என்ற மாநிலத்தின் 3வது பெரிய கட்சியாகவும் உருவெடுத்து உள்ளது.கடந்த எம்பி தேர்தலைவிட 13.79 லட்சம் ஓட்டுகளை ஜாஸ்தி பெற்றுள்ளது இந்த கட்சி.. சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட, சீமான் 48 ஆயிரத்து, 597 ஓட்டுகளை பெற்றார்... அவரது கட்சியின் வேட்பாளர்கள், ஆவடி, சோழிங்கநல்லுார், துாத்துக்குடி தொகுதிகளில், 30 ஆயிரம் ஓட்டுக்கு மேல் பெற்றுள்ளனர்.செங்கல்பட்டு, மாதவரம், பூந்தமல்லி, திருவாரூர் தொகுதிகளில், 25 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.,. 14 தொகுதிகளில், 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு அதிகமாகவும், 36 தொகுதிகளில், 15 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேலாகவும், 106 தொகுதிகளில், 10 ஆயிரம் ஓட்டுக்கு கூடுதலாகவும் பெற்றுள்ளனர்... இதுதான் சீமான் கட்சி 3வது இடத்துக்கு வர காரணம்.. இந்த ஓட்டுகள் தான் அதிமுகவின் வெற்றியை பாதிக்கவும் பிரதான காரணம்.இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், முறையான கட்டமைப்பை ஏற்படுத்தினால், எந்த கட்சியாக இருந்தாலும் டாப் கியர் போட்டு மேலே வரும் என்பதற்கு உதாரணம்தான் நாம் தமிழர் கட்சி.. இது இந்த தேர்தலில் மட்டுமல்ல, கடந்த தேர்தலிலும் சீமான் இதை செய்திருந்தார்.. ஆனால், அதை சரியாக பலரும் உற்றுப்பார்க்க தவறிவிட்டனர்.. மேலும் சீமானின் பேச்சுக்களே சோஷியல் மீடியாவில் நம்பர் 1 இடத்தில் இருந்ததாலும், டிடிவி தினகரன் 3வது இடத்துக்கு வந்துவிட்டதாலும், நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் அவ்வளவாக பேசப்படவில்லை.இந்த முறைகூட பல அரசியல் நுணுக்கங்களை புகுத்தி உள்ளார் சீமான்.. சசிகலாவை சென்று சந்தித்ததன் விளைவு, முக்குலத்தோர் வாக்குகளை தெற்கில் பிரதானமாக கொக்கி போட்டு இழுத்துள்ளார்.. தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு பல இடங்களில் குடைச்சலையும் தந்துள்ளார்.. அதேபோல, நாங்குநேரி ராதாபுரம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்திய புதுமையையும் இந்த முறை சீமான் கையாண்டுள்ளதால், கமலை இந்த விஷயத்தில் ஓவர்டேக் செய்துவிட்டதாகவே பார்க்கப்பட்டு வருகிறது...ஆனால் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் நிற்காமல், கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்டிருந்தால், கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.. அதாவது ஸ்டாலின் Vs சீமான் என்ற ரேஞ்சுக்கு களம் மாறுபட்டிருக்கும்.. அது நாம் தமிழருக்கு கூடுதல் வலிமையை பெற்று தந்திருக்கும்..அதேசமயம், அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக தனித்து நின்று மொத்த தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் துணிச்சல் சீமானுக்கு மட்டுமே பொருந்தும்.. முக்கியமான தொகுதிகளில், யாருமே எதிர்பாராத வகையில் ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை களம் இறக்கியது போன்ற வித்தியாசமான, முயற்சியையும் மேற்கொள்ள சீமானுக்கு மட்டுமே தைரியம் வரும்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களுடன் என்றுமே இணைந்து தோள் கொடுக்கும் சீமானின் தம்பிகளின் பங்கு அபரிமிதமானது..!எனினும் ஒரு விஷயத்தை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. ஓட்டுக்கு காசு என்ற பழைய மக்கிப்போன விஷயத்தை தூக்கி குப்பையில் எறிந்துள்ளார் சீமான்.. இனி காசு வாங்காமல் ஓட்டுப்போடும் நிலை தமிழகத்தில் உருவானால், அதற்கான சத்தான விதையை ஆழமாக விதைத்த பெருமை சாட்சாத் நம் சீமானையே போய் சேரும்..!