பக்கங்கள்

29 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா அரசு மனிதாபிமான உதவிகளை தடுத்தது உறுதியாகியுள்ளது.

இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டத்தில் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளதை ஐ.நா.நிபுணர் குழு உறுதி செய்துள்ள நிலையில், அதன் பரிந்துரையின்படி பன்னாட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்துமாறு ஐ.நா.பொதுச் செயலருக்கு சர்வதேச பொது மன்னிப்புச் சபை (அம்னெஸ்டி) கோரிக்கை விடுத்துள்ளது.
சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தி அறிக்கை விடுத்துள்ள சர்வதேச பொது மன்னிப்பு சபையின் ஆசியா - பசிபிக் இயக்குனர் சாம் ஜாரிஃபி, "போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதை தடுத்து வந்த சிறிலங்க அரசின் மறைக்கும் முயற்சிகளை முறியடிக்கும் வண்ணம், அந்த போரின் உண்மை நிலையை ஐ.நா.நிபுணர் குழு வெளிப்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
"இலங்கை போரில் இரு தரப்பினரும் செய்த குற்றங்களை வெளிக்கொணர, யாருக்கு எதிராக யார் தீங்கு செய்தனர், அதற்கு யார் பொறுப்பு என்பதை உறுதி செய்ய சுதந்திரமான விசாரணை ஆணையத்தை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைக்க வேண்டும்" என்று கோரியுள்ள ஜாரிஃபி, போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை திட்டமிட்டே சிறிலங்க அரசு குறைத்துக் காட்டியது என்பதும், அவர்களுக்கு உரிய மனிதாபிமான உதவிகளை சிறிலங்க அரசு தடுத்துள்ளது என்பதும் ஐ.நா.நிபுணர் குழு ஆய்வில் உறுதியாகிவுள்ளது என்று கூறியுள்ளார்.
"போரின் இறுதி கட்டத்தில் சிக்கியிருந்த மக்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை பார்த்த சாட்சிகளின் வார்த்தைகள் கலங்கடிக்கிறது. அவர்கள் மரண பயத்தில் இருந்திருக்கிறார்கள், மரணமும், காயமும் அவர்களை பாதித்துள்ளது, உண்ண உணவு, குடிக்க நீர், மருத்துவ வசதி என்று எதுவும் அவர்களுக்கு கிட்டவில்லை. போர் நடந்த பகுதியில் இருந்த தப்பி வந்தவர்களை இராணுவம் சிறைபிடித்து மோசமான நிலையில் வைத்திருந்தது. விசாரணை ஏதுமின்றி பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு நியாயம் கிடைப்பது தடுப்பது நியாயமாகுமா?" என்று ஜாரிஃபி கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.