பக்கங்கள்

30 நவம்பர் 2012

சிவாஜிலிங்கம் வீட்டின் மீது குண்டு வைக்க மறுத்து கனடா தப்பிய படையதிகாரி!

தேசிய தலைவரின் தாயாருடன் சிவாஜிலிங்கம் 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைக்க இராணுவம் தமக்கு உத்தரவிட்டதாக, இராணுவத்தில் இருந்து கனடாவுக்கு தப்பிச் சென்ற இளம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தில் பணியாற்றிய ரவீந்திர பிரசன்ன வடுதுரு பண்டானகே என்ற 38 வயதான அதிகாரி, அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவுக்கு அகதியாக தப்பிச் சென்றுள்ளார். அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றமை குறித்தும், இடைத்தங்கல் முகாம்களில் அகதிகளின் உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பிலும் தகவல்களை வழங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அவரிடம் கனடாவின் எல்லைப் பாதுகாப்பு தரப்பினர் விசாரணையை மேற்கொண்டனர். இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே. சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டு வைக்குமாறு இராணுவத்தலைமையில் இருந்து தமக்கு உத்தரவு வழங்கப்பட்டதாகவும், எனினும் தாம் அதனை ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் தாம் கொழும்புக்கு மாற்றப்பட்ட நிலையில், 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவுக்கு தப்பி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தகவலை கனடாவின் த நசனல் போஸ்ட் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தினர் இறுதி யுத்தக் காலப்பகுதியிலும், அதற்கு பின்னரும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டிருக்கலாம் என்ற கருத்து வலுவடைந்திருப்பதாக த நசனல் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

29 நவம்பர் 2012

யாழ்,பல்கலை மாணவர்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் அராஜகம்!

யாழ். பல்கலைக்கழகச் சூழலில் நேற்றுக் காலை படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களை கலைத்துக் கலைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கி அட்டகாசம் புரிந்தனர். இந்த அராஜகத்தால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் உட்பட 4 மாணவர்கள் புலனாய்வாளர்களின் உதவியுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனமும் அடித்து நொருக் கப்பட்டது. நேற்றுமுன்தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் நடைபெற்ற மாவீரர் நினைவு நிகழ்வுகளை குழப்புவதற்கு படையினர் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக பிரதான வாயில் கதவைப் பூட்டி உள்ளே பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். * இராணுவமே பெண்கள் விடுதியின் உள்ளே நுழைந்தது நியாயமா? * இராணுவமே பல்கலைக்கழகத்தினுள் உனக்கு என்ன வேலை? * பல்கலைக்கழக நிர்வாகமே பல்கலைக்கழக மாணவர்களுக்கு யார் பொறுப்பு? * இராணுவமே பல்கலைக்கழக விடுதியினுள் உன்னை அனுமதித்தது யார்? * இராணுவ அராஜகத்தை அனுமதித்த நிர்வாகத்தைக் கண்டிக்கிறோம். * ஆயுத முனையில் எம்மை அடக்கினாலும் எமது மன உணர்வுகளை உன்னால் அடக்க முடியாது! * நல்லிணக்கம் என்பது உணர்வுகளை நசிப்பதா? * ஜனநாயக நாட்டில் எமது உரிமைகளை வெளிப்படுத்த எமக்கு உரிமை இல்லையா? ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி, கறுப்புத் துணியால் வாயைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தரே இங்கு எதற்காக இருக்கிறீர்? படையினர் மாணவர்களை அச்சுறுத்துகின்றனர். அப்படியானால் இந்த நிர்வாகம் எதற்கு? இந்த அநியாயங்களைத் தட்டிக்கேட்க யாழ்ப்பாணத்தில் எவரும் இல்லையா என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து பிரதான வாயின் ஊடாக மாணவர்கள் புறப்பட்டு போக்குவரத்துத் தடை ஏற்படாத வகையில் அருகில் உள்ள மற்றொரு வாயில் ஊடாகப் பேரணியாகச் சென்றனர். இதன்போதே யாழ். பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி "போகவேண்டாம். திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறினர். மாணவர்கள் காரணம் கேட்க முற்பட்ட போது வாகனங்களில் இருந்து குதித்த பொலிஸார் மாணவர்களை கண்டபடி கலைத்துக் கலைத்து தாக்கத் தொடங்கினர். பொலிஸாருடன் படையினரும் இணைந்து மாணவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் தமது குறிப்புப் புத்தகங்கள், பாதணிகளைக் கழற்றிவிட்டு தப்பி ஓடினர். சில மாணவர்களை பொலிஸார் தரையில் விழுத்தி அடித்தனர். தரதரவென இழுத்துச் சென்றனர். இராணுவத்தினர் துப்பாக்கியால் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் அடித்துத் துரத்தப்பட்டமையால் அவர்களுடைய குறிப்புப் புத்தகங்கள், பாதணிகள் வீதியில் சிதறுண்டு கிடந்தன. இதன்போது ஊடக மாணவர்கள் உட்பட நான்கு பேரைப் பொலிஸார் கைது செய்தனர். அந்த இடத்துக்குச் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் ஓடிச்சென்று புகுந்த பின்னர் பொலிஸார் மீதும் படையினர் மீதும் சரமாரியாக கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலை உருவாகியது. பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து பொலிஸாருடன் கலந்துரையாடினர். எனினும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே புறப்படாத வகையில் படையினர் குவிக்கப்பட்டிருந்ததால் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான பஸ்ஸில் மாணவர்கள் ஏற்றப்பட்டு பஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று விடப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து மாணவர்கள் அறிவித்ததை அடுத்து அங்கு சென்ற யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் பொலிஸார், படையினர் முன்னிலையில் சிவில் உடையில் இருந்த சிலரால் அடித்து நொருக்கப்பட்டது. மாணவர்கள் தாக்கப்பட்டமை, நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊடகத்துறை மாணவர் உட்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் முதலில் மூன்று மாணவர்களைப் பொலிஸார் விடுவித்தனர். ஊடக மாணவரை அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தனர். அவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊடகத்துறை மாணவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் எடுத்துக் கூறியும் அவரைப் பொலிஸார் விடுவிக்கவில்லை. பின்னர் பல்கலைக்கழக உரிய பீடத்துடன் தொடர்புகொண்டு பதிவுகளை உறுதிப்படுத்தியதையடுத்து அந்த மாணவரும் பொலிஸாரால்விடுவிக்கப்பட்டார்.

பிரபல தமிழ் சட்டத்தரணிக்கு பல்லினப் பத்திரிகையாளர் விருது!

ரொறன்ரோவின் பிரபல தமிழ் வழக்கறிஞரும் சமூக சேவையாளருமான திருமதி மெலானி டேவிட் கனடா பல்லினப் பத்திரிகையாளர் சங்கத்தினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். ஒன்ராறியோவின் ஆளுனர் டேவிட் ஓன்லி அவர்களினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மெலானி டேவிட் அவர்கள் வழக்கறிஞர் என்பதைவிடவும்,வளர்ந்து வரும் ஒரு தொழிலதிபர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வருட நடுப்பகுதியில் கனடாவில் தலைசிறந்த 25 குடிவரவாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட மெலானி டேவிட் தான் சிறீலங்காவில் ஒரு சட்டத்தரணியாக வருவதற்கான படிப்புக்களைத் தொடர்ந்து கொண்டிருந்த போது இறுதிப் பரீட்சை நெருங்கிய போது தங்களது கேள்வித்தாள்கள் எரிக்கபட்டு இறுதிப் பரீட்சையில் தோற்ற முடியவில்லை என்ற வேதனை தனக்கிருந்தாலும், கனடாவில் தான் அதனைச் சாதித்ததாகவும்,கனடாவில் முயற்சியுடையவர்களிற்கு வானமே எல்லையென்று தெரிவித்ததுடன்,தான் தனது குடும்பத்துடன் கனடா வந்த புதிதில் தனது இரண்டு சிறு மகள்களிற்கும் தேவையானவற்றையும் செய்து கொண்டு எவ்வாறு அர்ப்பணிப்புக்களுடன் கல்வியை தொடர்ந்தார் என்பதையும் விளக்கியதோடு, இன்று 35 பேருக்கு வேலை வழங்கும் ஒரு நிறுவனமாக தனது நிறுவனம் வளர்ந்து நிற்பதையிட்டு மிகவும் பெருமை கொள்வதாகவும்,கனடாவிற்கு தான் வர எடுத்த முடிவு ஒரு சிறந்த முடிவென்பதையும் தெரிவித்தார்.

28 நவம்பர் 2012

உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் ஆங்காங்கும், தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பரவலாகவும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன. நேற்று மாலை 6.05 மணியளவில் வீடுகள், ஆலயங்கள் என்பவற்றில் தீபங்கள் ஏற்றியும், மணி ஓசை எழுப்பியும் தமிழ் மக்கள், தமது விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்தனர். இதன் போது பல இடங்களில் படையினர் கெடுபிடிகள், இடையூறுகள் என்பவற்றை மேற்கொண்டனர். இருந்த போதும் அவற்றுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள ஆலயங்களில் நேற்று மாவீரர்களுக்காக விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்தில்... யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் வீடுகள், ஆலயங்களில் மாவீரர் நினைவாக தீபங்கள் ஏற்றப்பட்டன.பல்வேறு இடங்களில் மாவீரர் தின சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு நேற்று மாலை 6.05 மணிக்கு மாணவர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இராணுவத்தினரும் படைப் புலனாய்வாளர்களும் இரு தினங்களுக்கு முன்னரே பல்கலைக்கழக வளாகத்தைச் சூழ்ந்துகொண்ட நிலையிலும் போரில் இறந்துபோன தமது உறவுகளுக்காக பல்கலை மாணவர்கள் இந்த உணர்வுபூர்வமான நிகழ்வை அனுஷ்டித்தனர். இதேவேளை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளிலும் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நேற்று மாலை பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இராணுவத்தினர் சூழ்ந்துகொண்ட சமயம் பல்கலை வளாகத்தில் அமைந்திருந்த மாவீரர் நினைவிடத்தில் மாணவர்கள் தமது வணக்கத்தைச் செலுத்திக்கொண்டனர். மாணவியர் விடுதிக்குள் புகுந்த இராணுவம் யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் நேற்று மாலை அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் விடுதி அறைகளின் கதவுகளை உடைத்து அங்கு ஏற்றப்பட்டிருந்த தீபங்களை அணைத்ததுடன் 2 மாணவிகளுக்கு துப்பாக்கியை வைத்து மிரட்டியுமுள்ளனர். நேற்று பகல் பல்கலைக்கழக சூழலை சுற்றிவளைத்திருந்த இராணுவத்தினர் மாலை 6 மணியானதும் பல்கலைக்கழக ஆண்கள், பெண்கள் விடுதிகளைச் சூழ்ந்துகொண்டனர். ஆண்கள் விடுதியில் மாலையில் பரபரப்பு ஏற்பட்டபோது அங்கு பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பத்தொடங்கினர். இவ்வாறு ஆண்கள் விடுதியில் மாணவர்களும் இராணுவத்தினரும் முரண்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், பெண்கள் விடுதியில் ஒளிரத்தொடங்கின மாவீரர் நினைவுத் தீபங்கள். இதனை அவதானித்த இராணுவத்தினர் பெண்கள் விடுதிக்குள் நுழைய முற்பட்டனர். வாசல் கதவு பூட்டப்பட்டிருந்ததால், தண்ணீர்த்தாங்கி வழியாகக் கட்டடத்துக்குள் நுழைந்தனர் இராணுவத்தினர். இதன்போது விடுதியின் அறைக் கதவுகளையும் அவர்கள் பலவந்தமாக உடைத்தனர். ஆயுதங்களுடன் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததால் மாணவிகள் பீதி அடைந்தனர். இரண்டு மாணவிகளது தலையில் துப்பாக்கியை வைத்த படையினர் "உங்களைச் சுட்டுவிடுவோம்" என்றும் மிரட்டியுள்ளனர். விடுதிகளில் ஏற்றப்பட்டிருந்த தீபங்களை அணைத்த பின்னரே அங்கிருந்து படையினர் வெளியேறினர். எனினும் இராணுவத்தினர் பல்கலைக்கழக வெளிப்புறத்தில் நேற்று இரவு முழுதும் சூழ்ந்து நின்றதை அவதானிக்க முடிந்தது. இதேவேளை சிவில் உடையில் வந்த படைப் புலனாய்வாளர்கள், மருத்துவபீட மாணவர்கள் ஐவரின் அடையாள அட்டைகளை போட்டோப்பிரதி எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் குறித்த மாணவர்களையும் அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நகரில் எரிந்த தீபங்களை பலவந்தமாக அணைத்த படையினர் யாழ். நகரில் பிறவுண் றோட்டில் நேற்று மாலை வீடொன்றின் முன்பகுதியிலும் மதிலிலும் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தன. அங்கு திடீரென ஜீப்பில் வந்த இராணுவத்தினர் குறித்த இடத்தில் இறங்கி வந்து "ஏன் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது?" என்று கேட்டுள்ளனர். "கார்த்திகைத் திருநாளை முன்னிட்டு விளக்கேற்றியுள்ளோம்" என்று வீட்டார் கூறியுள்ளனர். அதற்கு இராணுவத்தினர் "இன்று மாவீரர் நாள் தானே" எனக் கூறிவிட்டு, வாசலில் வாழைமரத் துண்டம் நடப்பட்டு ஏற்றப்பட்டிருந்த தீபத்தை தட்டி கீழே விழுத்திவிட்டு ஏனைய சுட்டிகளையும் அணைத்துவிடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர். வந்தவர்களில் ஒருவர் அதிகாரி தரத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவருகிறது. இதேவேளை, பாஷையூர், குருநகர் பகுதிகளிலும் வீடுகளின் முன்பாக ஏற்றப்பட்டிருந்த தீபங்கள் படையினரால் அடித்து அணைக்கப்பட்டதுடன் அப்பகுதியில் மக்களும் எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குருநகர் வீடு ஒன்றில் ஒளிர விடப்பட்டிருந்த "சார்ஜர்' லைற்றைக் கூட அணைக்குமாறு படையினர் உத்தரவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று காரைநகர் பகுதியிலும் சுமார் 10 இடங்களில் ஏற்றப்பட்டிருந்த மாவீரர் தீபங்களைப் படையினர் உடனடியாக அணைத்துள்ளனர். அத்துடன் அங்குள்ள ஆலயங்களுக்கும் நேற்றுப் பிற்பகல் முதல் இராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் ஆலயங்களுக்கு வழிபடச் சென்ற மக்கள் பயத்துடன் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. வாகனங்களுக்கும் கெடுகாலம் மாவீரர் தினமான நேற்று யாழ். நகருக்குள் பிரவேசித்த வாகனங்கள் அனைத்தும் பொலிஸாரினால் கடுமையாகச் சோதனை செய்யப்பட்டன. அத்துடன் யாழ். நகரில் பல பிரதேசங்களிலும் படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன. யாழ். நகருக்குள் பிரவேசித்த சகல வாகனங்களும் தட்டாதெருச் சந்தி, ஓட்டுமடம், அராலிவெளி என்பவற்றில் வைத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டன. அத்துடன் குடாநாட்டின் சகல பிரதேசங்களிலும் படையினர் தமது ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். "பிக்கப்பிலும்' கால் நடையாகவும் படையினர் சகல வீதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. வன்னியில்... வன்னிப் பகுதியிலும் நேற்று மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது. வீடுகள், பொதுஇடங்கள், ஆலயங்கள், துயிலும் இல்லங்கள் என்பவற்றில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இராணுவத்தினரின் கெடுபிடிகள், அடாவடிகள் என்பவற்றுக்கு மத்தியிலும் மக்கள் மாவீரர் தினத்தைக் கொண்டாடினர். கிளிநொச்சி மத்திய கல்லூரி வாயில், பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, புதுமுறிப்பு சந்தி, செல்வா நகர், அக்கராயன், துணுக்காய், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக, வவுனியா நகர்ப் பகுதி, பண்டாரவன்னியன் சிலை அமைந்துள்ள இடம் போன்ற பல்வேறு இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. இதேவேளை கிளிநொச்சி கனகபுரம் வீதியில் தவஅரசன் பல்பொருள் வாணிபத்துக்கு முன்பாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருந்தபோது அங்கு வந்த இராணுவத்தினர் அவற்றை காலால் உதைத்து சேதப்படுத்தி கடைக்காரரையும் எச்சரித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கடைக்காரர் கிளிநொச்சி வர்த்தக சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி ஏ9 வீதியில் நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குச் சென்ற இராணுவத்தினர் அங்கு ஏற்றப்பட்டிருந்த தீபங்களையும் காலால் உதைத்துச் சேதப்படுத்தி மிரட்டியுமுள்ளனர். "இன்று கார்த்திகைத் திருநாள். விளக்கேற்றுவதற்குத் தடை இல்லையென பொலிஸார் அறிவித்திருக்கின்றனர். பின்னர் ஏன் நீங்கள் தடை செய்கிறீர்கள்?" என்று அந்த கடை உரிமையாளர் இராணுவத்தினரிடம் கேட்டுள்ளார். அதற்கு "மேலிடத்து உத்தரவு'' என சொல்லிவிட்டு படையினர் சென்றனர் என்று குறித்த கடை உரிமையாளர் "உதயனு'க்குத் தெரிவித்தார். அந்தியேட்டியும் தப்பவில்லை. இதேவேளை பரந்தன் பகுதியில் வீடொன்றில் நடைபெற்ற அந்தியேட்டி நிகழ்வொன்றுக்குச் சென்ற இராணுவத்தினர் அந்த நிகழ்வையும் குழப்பியுள்ளனர். அத்துடன் பரந்தன் சந்திக்கு அருகில் வீடொன்றுக்குள் நுழைந்து அங்கு ஏற்றப்பட்டிருந்த சிட்டி விளக்குகளையும் உடைத்தெறிந்துள்ளனர். அத்துடன் பரந்தன் சந்தியில் நின்ற இளைஞர்களையும் இராணுவத்தினர் கொட்டன் கொண்டுமிரட்டி வீடுகளுக்குச் செல்லுமாறு துரத்தியுள்ளனர். இதுபோன்ற பல சம்பவங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் பரவலாக இடம்பெற்றுள்ளன. புலம்பெயர் நாடுகளில்.. பிரிட்டன், கனடா, நோர்வே, சுவிஸ், பிரான்ஸ் போன்ற புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரர்களை தீபமேற்றி நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்தில்... தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதுதவிர ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் மாவீரர் நாள் கூட்டங்களையும் ஒழுங்கு செய்திருந்தன. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழங்களிலும் மாணவர்கள் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்றதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 நவம்பர் 2012

யாழ்,பல்கலையில் மாணவர்கள் ஈகச்சுடர் ஏற்றினர்!

இன்று தேசிய மாவீரர் நாளாகும்,இதனை அனுஷ்டிக்கும் முகமாக படைத்தரப்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ்,பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.இதையறிந்து கொண்ட படைத்தரப்பு அத்துமீறி பல்கலை வளாகத்தினுள் நுழைந்து சில மாணவர்களை கடத்தி சென்றதாகவும்,எச்சரிக்கையின் பின் தற்சமயம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

பூந்தமல்லி அகதி முகாமில் 2 பேர் உண்ணாவிரதம்!

பூந்தமல்லி அகதி முகாமில் 2 பேர் உண்ணாவிரதம்பூந்தமல்லி கரையான்சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பரமேஸ்வரன் (32), தர்ஷன் (30) உட்பட 8 பேர் உள்ளனர். ஏற்கனவே செந்தூரன் (32) என்பவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததாலும், தற்கொலைக்கு முயன்றதாலும், கடந்த 15 தினங்களுக்கு முன் சிவகங்கை திறந்தவெளி முகாமுக்கு மாற்றப்பட்டார். பரமேஸ்வரன், தன்னையும் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற கோரி கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தர்ஷனும் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற கோரி நேற்று முதல் உண்ணாவிரதம் தொடங்கினார். சிறப்பு முகாமில் மீண்டும் இரு அகதிகள் உண்ணாவிரதம் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்களப்படையின் கோரத்தாண்டவம் ஆங்கில இணையத்தில் வெளியாகியுள்ளது!

சமீபத்தில் வெலிகடைச் சிறையில், கைதிகள் தப்பிக்கிறார்கள் என்ற போர்வையில் பலர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப் புகைப்படங்கள் பல வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை இலங்கை புலனாய்வுத்துறையினர், சுட்டுவிட்டு பின்னர் கால்களால் உதைவது போன்ற படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட தமிழ் இளைஞரை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் சுட்ட பின்னர், உயிர் உள்ளதா இல்லையா என்று பார்க்க, காலில் உதைவது போன்று இப் படத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட இப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று சொல்லப்படும் அதேவேளை, இப் புகைப்படமானது இராணுவத்தினர் வன்னி நோக்கி முன்னேறிச் செல்லும்போது எடுக்கப்பட்டது என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இப் புகைப்படத்தை ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ளமை, பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இலங்கையில் உள்ள சில கடும்போக்குள்ள சிங்கள இணையங்கள், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அத்தோடு வெலிகடைச் சம்பவங்களோடு, முள்ளிவாய்க்கால் சம்பவங்களை ஒப்பிட்டு, இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவே இவ்வாறாக புகைப்படங்கள் சில ஊடகங்களில் தொடர்ந்து வெளிவருவதாக, சில சிங்கள இணையங்கள் குற்றஞ்சுமத்தியும் உள்ளன.

26 நவம்பர் 2012

தீர்வு இன்றேல் சாகும்வரை உண்ணாவிரதம்!

தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கிலுள்ள தமிழர்களின் சுதந்திரத்துக்காக தன் உயிரைத் தியாகம் செய்ய தயங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு மக்கள் பலவிதமான போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று தெரிவித்த அடைக்கலநாதன் எம்.பி, வடக்கில் நடடைபெற்ற யுத்தத்தின்போது தான் மயிரிழையில் உயிர்த்தப்பியதாகவும் சிவசக்தி ஆனந்தன் மற்றும் முருகேசு சந்திரகுமார் எம்.பி.க்களும் இதேபோன்ற அனுபவத்தினைப் பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு மதிய உணவு!

தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் பயிலும் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு ம.தி.மு.க நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. 15 வேலம்பாளையம் நகர செயலாளர் திரு .நாகராஜ்,வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சந்தரமூர்த்தி ,மாநகர பொருளாளர் திரு.புலி மணி,பஞ்சாலை தொழில் சங்க செயலாளர் திரு.சம்பத்,பனியன் சங்கம் திரு.மனோகர்,சிவக்குமார் மற்றும் இணையத்தள நண்பர் கௌதமன் பழனியப்பன் ஆகியோர் கலந்து உணவு பரிமாறினர்.

25 நவம்பர் 2012

படையினர் அச்சுறுத்துவதாக அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் உள்ள தமது ஆதரவாளர்களை படைப் புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்திவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் உள்ள எனது ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று படைப் புலனாய்வுத்துறையினர் எனக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் இளைஞர்களை மிரட்டியுள்ளனர். மாவீரர் தினத்தையிட்டு நிகழ்வுகளை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தயாராகிவருவதாகவும் அதற்கு உதவினால் உங்களை கைதுசெய்து நான்காம் மாடிக்கு அனுப்புவோம் என்று மிரட்டி வருகின்றனர். மாவீரர் தினத்தில் துண்டுப் பிரசுரம் மற்றும் நிகழ்வுகளை அவர் செய்ய இருப்பது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அதனால் இது தொடர்பில் நீங்கள்தான் மாட்டுவீர்கள் எனவும் அவர்களை மிரட்டியுள்ளனர். படைப் புலனாய்வுத்துறையினரின் இவ்வாறான செயற்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்களை மிரட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினராகிய எனக்கு அச்சுறுத்தல் விடுவதாகவே கருதவேண்டியுள்ளது. இவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன். மக்கள் மறந்துவரும் விடயங்களை படையினர் ஞாபகமூட்டி மக்களை உணர்ச்சிவயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(மாவீரர் தினம் மக்கள் மறக்கக்கூடிய தினமா அறியநேந்திரா?)

துன்புறுத்தல் தாங்க முடியாமல் இராணுவத்திலிருந்து 6 தமிழ் பெண்கள் விலகினர்!

இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து தமிழ் பெண்கள் தப்பி ஓடியதாக முன்னர் வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். அதேவேளை, அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், அடைத்து வைக்கப்பட்டதாகவும் வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார். முன்னதாக, இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி, அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருந்தார். அலுவலகப் பணிகளுக்காக, கணினி பயிற்சிகளுக்காக என்று பொய்யாக கூறி சேர்க்கப்பட்ட தாம் இராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்று தெரிய வந்ததுடன் இராணுவத்தில் இருந்து விலக அந்தப் பெண்கள் கோரியதாகவும், ஆயினும் ஒரு நாள் வரை தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிறிதரன் எம்பி கூறியுள்ளார். முற்றிலும் இராணுவத்தினாலும், அதன் உளவுப் பிரிவினாலும் சூழப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மன்னார், துணுக்காய் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தப்பி ஓடியதாக வெளிவந்த செய்திகள் தவறு என்றும் சிறிதரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தான் உரிய இடங்களில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் சிறிதரன் தெரிவித்தார்.

24 நவம்பர் 2012

தீவகம் பெற்றெடுத்த தளபதி றீகன் அண்ணா!

தீவகம் கரம்பொன்னை சொந்த இடமாக கொண்டவர் தளபதி றீகன் அண்ணா.
அவர் தீவகத்தின் படையணித் தளபதியாக இருந்த காலம் என்பது என் கண் முன் இன்றும் காட்சிகளாக பரினமித்துக்கொண்டிருக்கிறது.சொல்லும் செயலும் ஒருங்கே அமையப் பெற்ற றீகன் அண்ணா,மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர்.சின்ன ஒரு பிரச்சனை என்றால் கூட பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உதவும் அவரது அந்த பண்பான செயற்பாடுகளை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.தங்கள் மகனுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக அவரது தாய்,தந்தையர் விளங்கினர்.ஒவ்வொரு போராளிகளையும் தங்கள் மகனை விடவும் மேலாக நேசித்தார்கள்.போராளிகளுக்கு சிறு காச்சல் என்றால் கூட ஓடிச்சென்று பார்த்து,தனது கைப்பக்குவத்தில் சமையல் செய்து கொடுத்து அவர்களை மிகுந்த அக்கறையுடன் கவனிக்கும் அந்த தாயாரின் அன்பு என்பது என்றும் மறக்க முடியாதது.போராளிகளுடன் றீகன் அண்ணா வீட்டில் உணவருந்திய பெரும் பாக்கியத்தை நானும் பெற்றிருக்கிறேன் என்பது என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று.றீகன் அண்ணா அமைதியான சுபாவம் கொண்டவர்,செயலில் மிகவும் வேகம் கொண்டவர்.ஒழுக்கம்,நேர்மை,வேகம்,விவேகம் என்பவற்றை எப்பவும் றீகன் அண்ணாவிடம் காணலாம்.எங்கள் றீகன் அண்ணா பாசிஷ வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி நெஞ்சில் இடியாய் விழுந்தது!றீகன் அண்ணா காலத்தின் வரலாறு அந்த மாவீரனின் வித்துடல் விதைக்கப்படும் இந்நாளிலே அவருக்கு எமது வீரவணக்கத்தை செலுத்தி அவரது பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

ராஜீவ் கொலை தண்டனைக்கைதிகள் மனுத்தாக்கல்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்காக தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் உயர் நிதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ராஜீவ் கொலை குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இலங்கைப் பிரஜைகளும் இவ்வாறு ஹெபியாஸ் கொர்ப்ஸ் மனுக்களை தனித்தனியாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய சிறைகளில் குறித்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பி.ரொபர்ட் பாயஸ் மற்றும் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் இவ்வாறு தனித்தனியாக சென்னை நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்திய அரசியல் சாசனத்தின் 21ம் சரத்திற்கு புறம்பான வகையில் இருபது ஆண்டுகளுக்கு மேல் தம்மை தடுத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குறித்த இரண்டு இலங்கையர்களும் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கான தண்டனைக் காலம் 1983ம் ஆண்டு 236, 341 சட்டங்களின் அடிப்படையில் கணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வழமையாக 20 ஆண்டுகள் சிறையில் கழித்தால் அது ஆயுள் தண்டனையாக கருதப்படும் எனவும்,அந்தக் காலத்தை தாம் பூர்த்தி செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1998ம் ஆண்டில் பயஸ் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.அதன் பின்னர் 1999ம் ஆண்டு மே மாதத்தில் இந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

23 நவம்பர் 2012

யாழில் புதிய ஆதீனம்!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவும் வகையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆதீனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆதீன பொறுப்பாளராக பாலசுப்ரமணியம் ஜெயரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவையில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் யாழ்ப்பாணம் ஆதீன பொறுப்பாளராக பாலசுப்ரமணியம் ஜெயரத்னம் நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனத்தின் இளைய ஆதீனமாக இருக்கும் மருதாசல அடிகளார் பங்கேற்றார். மேலும் இந்திய ரூ.250 கோடி நிதி திரட்டவும் அந்த நிதியை கொண்டு யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் 4 ஆலயம், விதவைகளின் மறுவாழ்வு, பள்ளி குழந்தைகளின் கல்வி ஆகியோருக்கு உதவும் வழிவகை செய்யப்பட்டது.

தமிழ் யுவதிகள் விரும்பி படையில் சேர்ந்ததாக மிரட்டி கையொப்பம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள், அவர்களின் சொந்த விருப்பத்திலேயே இணைத்துக் கொள்ளப்பட்டதாக பாரதிபுரம் மக்களிடம் படையினர் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது. நேற்றைய தினம் இவ்வாறு படையினர் கையெழுத்து வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்திற்கு தமிழ் இளைஞர், யுவதிகள் படையில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மக்களாகவே படையில் இணைகின்றார்கள் என்று சர்வதேசத்திற்கு காட்டும் நோக்கில் இந்த கையொப்ப வேட்டையை படைத்தரப்பு ஆரம்பித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டுவருவது குறிப்படத்தக்கது.

13 நவம்பர் 2012

சிறிலங்காவின் கொலைக்களங்களை முதல்முறையாகப் பார்க்கும் ஐவரின் உணர்வுகள்!

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை அடிப்படையாக வைத்து, இத்தாலிய ஆவணப்படத் தயாரிப்பாளர் எடுத்துள்ள மூன்று நிமிடக் குறும்படம் Eyes On The Ground என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை முதல் முறையாகப் பார்க்கும் ஐந்து பேரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை அடிப்படையாக வைத்து ஒரு ஆவணப்படத்தை தயாரிக்கும்படி பட்டதாரி மாணவர்களிடம் ஐரிஎன் தயாரிப்பு நிறுவனம் கேட்டிருந்தது. அந்த தயாரிப்பு அணியில் இருந்த 30 வயதுடைய, லண்டனைத் தளமாக கொண்ட திரைப்பட தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கிறிஸ்ரினா பிச்சி புதுமையான வகையில் ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளார். “அதிர்ச்சி தரக்கூடிய படங்களை உள்ளடக்கியது என்ற எச்சரிக்கையுடன் சிறிலங்காவின் கொலைக்களங்கள் தொடங்குகிறது, அது உண்மை. ஆவணப்படத்தை வைத்து ஒரு காணொளியை திருத்துமாறு கேட்டபோது, அது மிகையானதாக நான் உணர்ந்தேன். எல்லாமே அதில் முக்கியமானதாக இருந்தது. எனவே நான் வித்தியாசமான அணுகுமுறையை கையாள முடிவெடுத்தேன். Eyes On The Ground சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை முதல்முறையாகப் பார்க்கும் ஐந்து பேர் பற்றிய ஒரு சாதாரணமான ஆவணக் காணொளிப் படம். இது மனித உணர்வுகளையும், அதை ஏற்றுக்கொள்ளும் – குழப்ப நிலையை வெளிப்படுத்தும் வகையில், சாதாரணமாக எல்லோராலும் பார்க்கத்தக்க வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது நீதி கிடைக்கச் செய்வதற்கான ஒரு சிறிய அடி” என்று கிறிஸ்ரினா பிச்சி தெரிவித்துள்ளார். இவரது குறும்படம் லண்டன் அனைத்துலக ஆவணப்பட விழா, லண்டன் தேசிய ஓவியக் கண்காட்சி உள்ளிட்ட திரைப்பட விழாக்களிலும் கண்காட்சிகளிலும் திரையிடப்பட்டுள்ளன. கிறிஸ்ரினா பிச்சி, பிசா பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய இலக்கியங்களில் முதுகலைப்பட்டம் பெற்றதுடன், கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகத்தில் திரை ஆவணப்படுத்தலில் முதுமாணி பட்டம் பெற்றவர். “சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை மையமாக வைத்து பட்டதாரி மாணவர்கள் தயாரித்த ஆறு ஆவணப்படங்களை தயாரித்துள்ளனர். இவையெல்லாமே மிகச்சிறந்தவை.” என்று சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை தயாரித்த ஐரிஎன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ் சோ தெரிவித்துள்ளார். Eyes On The Ground குறும்படத்தை இந்த முகவரியில் http://www.channel4.com/news/sri-lankas-killing-fields-eyes-on-the-ground பார்க்க முடியும்.

10 வருடங்களுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்ட பலாலி வழக்கு!

இலங்கையின் வடக்கே பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அரசதரப்பு முன்வைத்த ஆட்சேபணையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் விவசாயிகள் சிலர் இந்த வழக்குகளை 2003-ம் ஆண்டில் தாக்கல் செய்திருந்தனர். பலாலி பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களில் 40 சதவீதமானோர் அங்கு மீள்குடியேற்றப்பட்டுவிட்டதாகவும், அங்கு தொடர்ந்தும் மீள்குடியேற்றம் நடந்துவருவதால் இந்த மனுக்களை தொடர்ந்தும் விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசதரப்பு சட்டத்தரணி வாதிட்டார். இதனை எதிர்த்து வாதிட்ட மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணி, பலாலி பிரதேசத்தை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அரசு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கவில்லை என்றும், அதனால் அந்தப் பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாக கருதி அங்கு இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயம் காரணமாக சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ´இதனால் 60 வீதத்துக்கும் அதிகமான விவசாயிகளும் 30 வீதத்துக்கும் அதிகமான மீனவர்களும் தமது தொழில்களை இழந்துள்ளனர். அரசு கூறுகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன´ என்று சுட்டிக்காட்டினார் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி. எனவே மக்கள் தமது சொந்த வதிவிடங்களுக்குச் சென்று வாழ்வதற்கு அனுமதி வழங்கும் தீர்ப்பை வழங்குமாறு மனுதாரர்கள் தரப்பு கேட்டுக்கொண்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதியரசர்கள், வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கினர். இதன்படி வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் 11-ம் திகதி வரை ஒத்திவைத்த நீதிமன்றம், அந்த தினத்துக்குள் அரசதரப்பு ஆட்சேபணைகளை முன்வைக்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

முள்ளிவாய்க்காலில் இளைஞர் மீது படையினர் கடும் தாக்குதல்!

முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு காயங்களுடன் சிகிச்சைக்காக கைவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. படையினரால் தான் தாக்கப்பட்டார் என்று அந்த இளைஞர் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் வலைஞர்மடத்தைச் சேர்ந்த 29 வயதான சிவராசா பிரபாகரன் என்ற இளம் குடும்பஸ்தரே காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். நேற்றுமுன்தினம் தனது வீட்டுக்கு வந்த அம்பலவன் பொக்கணையில் பணியாற்றும் படையினரே் மூவரே, தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதிக்குப் பொறுப்பாகவுள்ள இராணுவ அதிகாரி கேணல் அசோக பீரிஸுக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் எனக் கருதப்படும் நபர்கள் அடையாளங் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர் எனவும், தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் முள்ளிவாய்க்கால் கிராமசேவகர் ஊடாக கரைதுறைப்பற்று பிரதேச செயலரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

12 நவம்பர் 2012

ஹம் அம்மன் கோவில் பூசகரின் வீட்டில் கொள்ளை!

ஜேர்மனி ஹம் அம்மன் கோவில் குருக்களின் வீட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யமான இந்து ஆலயமான ஹம் அம்மன் கோவில் பூசகர் சிவசிறி பாஸ்கரகுருக்களின் வீட்டில் ஐந்து பேர் கொண்ட குழு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பொருள்களையும் சேதப்படுத்தி பணம் நகை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 11மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது ஆலய விடுதியில் புகுந்த இந்நபர்கள் மிளகாய் தூளை அங்கிருந்தவர்களின் முகத்தில் வீசி தாக்குதல் நடத்தி பணம் மற்றும் நகைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற போது குருக்களின் விடுதியில் 9பேர் தங்கியிருந்துள்ளனர். ஒரு இலட்சம் ஈரோ பெறுமதியான நகைள், பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டு ஹம் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் தனியான காணியில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. ஐரோப்பாவில் மிகப்பெரிய இந்து கோவிலாக இது விளங்குகிறது.

இலங்கை தமிழர்கள் தந்த பணத்தை அவர்களுக்கே கொடுத்து விட்டேன்!

News Serviceஈழத் தமிழர்களுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய உண்ணாநிலை போராட்ட மேடையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்கவில்லை. அந்த மேடையில் அனைவரையும் அதிக அளவில் புருவம் உயர வைத்தவர் நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ்தான். இலங்கைத் தமிழர்களுக்காக தான் சேகரித்த ரூபாய் பத்து லட்சத்துடன், தன் பங்கிற்கு இரண்டு லட்சத்தையும் சேர்த்து, பன்னிரண்டு லட்ச ரூபாய் நிதி வழங்கி அனைவரையும் ஒருகணம் ஆச்சரியப்பட வைத்தார். அவர் ஒட்டுமொத்தமாக வழங்கிய தொகை சூப்பர் ஸ்டார் ரஜினி வழங்கிய தொகையான பத்து லட்சத்தைவிட அதிகம். அதுமட்டுமல்ல, "விஜய், அஜித் போன்றவர்கள் நினைத்தால் தங்கள் ரசிகர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்ட முடியும்" என்று அந்த மேடையிலேயே லாரன்ஸ் அறிவித்தது, அவர் வழங்கிய நிவாரண நிதியை விட பரபரப்பை அதிகரிக்க வைத்தது. ரஜினிக்கு அடுத்தபடி வர்த்தக ரீதியாக முன்னணியில் இருப்பவர் இளைய தளபதி விஜய். ஆனால் அவர் சார்பில் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஈழத் தமிழர்களுக்காகத் தந்தது வெறும் ஒரு லட்ச ரூபாய்தான். இவரால் இவ்வளவுதான் தர முடிந்ததா? என்று, பார்வையாளர்கள் கொஞ்சம் அதிருப்தியில் நெளிந்ததைப் பலரால் அவதானிக்க முடிந்தது. இதுபற்றி லாரன்ஸ் என்ன நினைக்கிறார்? இந்தக் கேள்வியுடன் அசோக் நகரில் லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கான இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். உண்ணாநிலைப் போராட்ட மேடையில் இலங்கைத் தமிழர்களுக்காக நீங்கள் தந்த பன்னிரண்டு லட்சம்தான் அங்கு வழங்கப்பட்ட அதிகபட்சத் தொகை, இல்லையா...? "வெளிநாடு வாழ் தமிழர்கள் தரும் நிதியில் இருந்துதான் ஊனமுற்றோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை என்னால் நடத்த முடிகிறது. அப்படி நிதி தருபவர்களில் பெரும்பாலானோர் இலங்கைத் தமிழர்கள். அவர்கள் தந்த பணம் ரூபாய் பத்து லட்சத்தில் என் குழந்தைகளுக்காக (ஆதரவற்றோருக்காக) நிலம் வாங்கி, கட்டடம் கட்டலாம் என்றிருந்தேன். அப்போதுதான் இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பசியில் வாடுவதைக் கேள்விப்பட்டேன். ஆகவே, அந்த பத்து லட்ச ரூபாயுடன் என் பங்கிற்கு இரண்டு லட்சத்தைச் சேர்த்து இலங்கைத் தமிழர்களுக்கே கொடுத்து விட்டேன். ஷூட்டிங்கிற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, சிரித்த முகத்துடன் எங்களை உபசரிப்பது, இலங்கைத் தமிழர்களின் வழக்கம். எத்தனை நாட்கள் நாங்கள் தங்கியிருந்தாலும், சொந்த ஊரை விட்டு வந்து விட்டோமே என்ற கவலையே தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். அந்த `அன்பு' இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிறது என்றால், அதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? நம்முடைய ஹீரோக்களின் சம்பளம் உயர்வதற்குக் காரணமே தமிழ்ப் படங்களுக்கு இருக்கும் `ஓவர்சீஸ் லைசென்ஸ்' எனப்படும் வெளிநாட்டு உரிமமும், அந்தப் படங்களுக்கு வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்கள் கொடுக்கும் வரவேற்பும்தான். நன்கொடை வழங்கி, டி.வி.யில் நான் பேசியதைப் பார்த்த நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளிலிருந்து என்னிடம் பேசி நன்றி சொன்னார்கள். அந்த உற்சாகத்தால் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வீடு, வீடாகச் சென்று இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரண நிதி திரட்ட முடிவெடுத்திருக்கிறேன்." உச்சத்தில் இருக்கும் ஹீரோக்களாலேயே கொடுக்க முடியாததை நீங்கள் கொடுத்திருக்கிறீர்களே? "என்னுடைய `ரேஞ்சு'க்கு பலரிடம் நன்கொடை வாங்கி பத்து லட்சம் கொடுக்க முடிந்திருக்கிறது என்றால், விஜய், அஜித் இருக்கும் 'ரேஞ்சு'க்கு தங்கள் ரசிகர்களிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே? நிதி குவிந்துவிடுமே!" ஆனால், நீங்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு விஜய், அஜித் போன்றவர்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லையே? "ஆமாம். என் மனதில் பட்டதை நான் வெளிப்படையாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் பேசும்போது என் வேண்டுகோள் பற்றி ஒன்றும் குறிப்பிடவே இல்லை என்பது எனக்கும் வருத்தம் தான். மற்ற ஹீரோக்களும், என் வேண்டுகோளுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லையே? இங்கே ஹீரோவின் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். அந்தப் பாலை அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுக்கலாமே? ரசிகர்களிடம் 'இப்படி வீண் செலவு செய்யாதே' என்று நீ (!) சொன்னால்தானே அவர்கள் நிறுத்துவார்கள்? பட ரிலீஸின் போது, பால் அபிஷேகம் செய்வது, பந்தல் போட்டு `ஸ்டார்ஸ்' தொங்கவிடுவது போன்ற தவறுகளைச் செய்ய, என் ரசிகர்களை நான் அனுமதிப்பதில்லை. `என் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர் ஆக வேண்டுமென்றால், முதலில் என்னுடைய டிரஸ்ட்டில் மெம்பர் ஆகுங்கள்!' என்று என்னைத் தேடி வரும் ரசிகர்களிடம் சொல்லி விடுகிறேன்.'' நேடியாகவே கேட்டுவிடுகிறோம். `தனது சொந்தப் பணம் ரூபாய் இரண்டு லட்சத்தை லாரன்ஸ் நன்கொடையாகக் கொடுக்கும்போது, இளம் நடிகர்களிலேயே உச்சத்தில் இருக்கும் விஜயால் இலங்கைத் தமிழர்களுக்காக வெறும் ஒரு லட்சம்தான் கொடுக்க முடிந்ததா? என்ற விமர்சனம் எழுந்துள்ளதே? "விஜய் சார் படங்களில் நான் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றியிருக்கிறேன். அவர் எனக்கு நல்ல நண்பரும் கூட. `போக்கிரி' படத்தின் வெற்றி விழாவில், என் டிரஸ்ட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடந்திருக்கிறது. எவ்வளவு நன்கொடை கொடுக்க வேண்டும் என்பது விஜயின் சொந்த விவகாரம். அதை விமர்சனம் செய்ய விரும்பவில்லை'' என்றவர், சற்று யோசனைக்குப் பின், "அரசியல்வாதிகளுக்குக் கூட அவனது தொண்டன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஓட்டுப் போடுகிறான். ஆனால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை உனக்கு ஓட்டுப் போடுகிறவன், ரசிகன். உன்னுடைய மோசமான படங்கள் கூட ரசிகன் கொடுக்கும் 'ஓபனிங்'கால் தப்பித்து விடுகின்றன. உன் கண்ணெதிரில் தெரியும் தெய்வங்கள், ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகனுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்?'' என்ற கேள்வியுடன் முடித்துக் கொண்டார்.

11 நவம்பர் 2012

வெலிக்கடையில் கொல்லப்பட்ட தமிழர் புலிகள் இயக்க சந்தேகநபர் இல்லை!

148136_3757866395777_1452702903_n-600x373வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலவரத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாகவும், ஆனால் அவர் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் அல்ல என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். “சிறைக்கலவரத்தில் கொல்லப்பட்ட 27 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிறையில் இருந்து தப்பிச்சென்றவர்கள் மற்றும் காணாமற்போன ஆயுதங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கொல்லப்பட்டவர்களில் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் எவரும் இல்லை. அவர்கள் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும், மகசீன் விளக்கமறியல் சிறைச்சாலையிலும் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெலிக்கடையில் இல்லை. தமிழர் ஒருவரும் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளதாக நம்புகிறேன். ஆனால், அவர் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் அல்ல. இந்தக் கலவரம் இடம்பெற்ற போது 3598 கைதிகள் வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இது சிறைச்சாலையின் கொள்ளளவை விட மிகவும் அதிகமாகும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறைக்கலவரத்தல் கொல்லப்பட்ட 27 பேரில், 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்தவர்கள் என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் கோட்டே ரஜமகா விகாரையில் இரு பௌத்த பிக்குகளை கொலை செய்தவரும் வெலிக்கடைச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

பயணிகள் பேரூந்து மோதியதில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி!

சைக்கிளில் வீதியைக் கடக்க முயன்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் இ.போ.ச. பஸ் மோதியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை பளை தர்மக்கேணி தென்னை அபிவிருத்திச் சபை அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. தென்னை அபிவிருத்திச் சபை பணியாளரான ரவீந்திரன் நகுலேஸ்வரி (வயது36) கடமைக்குச் சென்ற வேளையிலேயே விபத்து இடம்பெற்றது. பளை, தம்பகாமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்னின் கணவருக்கு ஒரு கை இல்லை என்று தெரிவிக்கப் படுகிறது. பளைப் பொலிஸார் பஸ் சாரதியைக் கைது செய்துள்ளனர்.சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பொலிஸ் - மக்கள் மோதலில் 11 பேர் காயம்!

ஹொரணை, மொரககேன்ன பிரதேசத்தில் போலீசாருக்கும் மக்களுக்குமிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் 3 பொலிஸாரும் 8 பிரதேசவாசிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக சென்ற பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக இவர்கள் காயமடைந்துள்ளனர்.இதே வேளை இச்சம்பவம் தொடர்பில் நடந்த விசாரணைகளை அடுத்து மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

10 நவம்பர் 2012

பிள்ளைகளை பராமரிக்க தவறிய தந்தைக்கு காவலூர் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்தது!

சிறுவர்களைப் பராமரிக்கத் தவறியமை மற்றும் அவர்களை அடித்துத் துன்புறுத்தியமை ஆகிய குற்றங்களுக்காக தந்தை ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. இதே குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்த இரண்டு வழக்குகளும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தண்டனை வழங்கப்பட்டது. புங்குடுதீவைச் சேர்ந்த சுமார் 40 வயதுடைய தந்தையே தனது பிள்ளைகளை சிறுவர்களை பராமரிக்கத் தவறியுள்ளார் என்றும் சிறுவர்களை அடித்துத் துன்புறுத்துகிறார் என்றும் தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் ஊர்காவற்றுறை பிரதேச செயலக நன்னடத்தை அதிகாரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதுதொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு நீதிவான் மகேந்திரராஜாவின் நடவடிக்கையால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வந்தது. விசாரணையின் போது சந்தேக நபரான தந்தை தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 5 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் ஏனைய 7 மாதங்களும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தவிர ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைச் செலுத்தத் தவறின் மேலும் ஒரு மாத காலச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிவான் உத்தரவிட்டார். இதே குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறை கரம்பொன்னைச் சேர்ந்த தந்தை ஒருவருக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 11 பிள்ளைகளின் தந்தையான அவர் மீதும் தனது பிள்ளைகளை பராமரிக்காமை மற்றும் அடித்துத் துன்புறுத்துகின்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.வழக்கு நீதிவான் மகேந்திரராஜாவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆரம்ப விசாரணையின் பின்னர் சந்தேகநபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வேலூர் சிறையில் முருகனிடமிருந்து பல பொருட்களை கண்டு பிடித்ததாம் பொலிஸ்!

வேலூர் மத்திய சிறையில், ராஜிவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்  முருகனிடமிருந்து, கையடக்கத்தொலைபேசி, சிம் கார்ட், இறுவெட்டு ஆகியவற்றை விஜிலன்ஸ் பொலிஸார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் நடக்கும் முறைகேடுகளை விசாரிக்க சிறைத்துறை டி.ஜ.ஜி.,கோவிந்தராஜ் தலைமையில் சிறைத்துறையினர், நேற்று, 9 மணி நேரம் சோதனை நடத்தினர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலை குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முருகனிடமிருந்து கையடக்கத்தொலைபேசி, சிம் கார்ட், இறுவெட்டு ஆகியவற்றை விஜிலன்ஸ் பொலிஸார் கைப்பற்றினர். கைப்பற்றிய இறுவெட்டை போட்டுப் பார்த்த போது, அதில் உலக வரைப்படம், இலங்கை வரைப்படம் முதல் இரண்டாம் உலகப் போர், இலங்கையில் நடந்த படுகொலைகள், விடுதலைப் புலிகள் பிரபாகரன் குறித்த தகவல் இருந்ததாகவும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
(அடேங்கப்பா..!முருகன் மறைத்து வைத்திருந்த அணு குண்டை கண்டு பிடிச்சிருக்கிறாங்களே...)

இராணுவத்தை பயன்படுத்தி மனித உயிர்களுடன் விளையாடுகிறது அரசு.

இந்த நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் இராணுவத்தினர் அல்லது விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தும் மனநிலை தற்போதைய அரசாங்க அதிகாரிகளுக்கு உள்ளதென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அதன் ஒரு திட்டம் நேற்று வெலிக்கடை சிறையில் இடம்பெற்றதென மக்கள் விடுததலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். வெலிக்கடை சிறை மோதலில் 30 பேர்வரை பலியானதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். சிறைக்குள் தொலைபேசி, போதை பொருள் இருப்பது உண்மை. அவை சிறைக்குள் செல்லும் வழியை கண்டுபிடித்து தடுக்க வேண்டும். அதைவிடுத்து இராணுவத்தை விடுத்து சோதனை செய்தால் நேற்றுபோல்தான் பலன் கிடைக்கும். மனித உயிர்களுடன் விளையாடும் அரசின் இத்திட்டங்களை கண்டிக்கிறோம். மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்ள வேண்டும். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 நவம்பர் 2012

பிரான்சில் வீரச்சாவடைந்த பரிதிக்கு நெடுமாறன் ஐயா விடுத்த வீரவணக்க அறிக்கை!

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை .விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
-பழ. நெடுமாறன்-
தலைவர்

கனடியத் தமிழர் தேசிய அவையின் வீரவணக்கம்.

தமிழ்த் தேசியப் பற்றாளரும் நீண்ட காலமாகப் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாக அயராது தமிழ் மண்ணின் விடுதலைக்காகச் செயற்பட்டுவந்த 'பருதி' என்று பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட திரு நடராஜா மதீந்திரன் அவர்கள் நவம்பர் 8ம் நாள் 2012 வியாழக்கிழமையன்று சிறிலங்காவின் நயவஞ்சகர்களால்; சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். திரு.பருதி அவர்களின் இழப்பு ஈழத் தமிழருக்குப் பேரிழப்பாகும்.அவரின் இழப்பினால் துயருறும் அவரின் குடும்பத்தாருடனும் உலகத் தமிழருடனும் கனடியத் தமிழர் தேசிய அவை தமது துயரைப் பகிர்ந்து கொள்வதுடன் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. சிறிலங்காவானது ஈழத்தில் நம் தாயக உறவுகளைப் படுகொலை செய்தும் ஆயுத முனையில் அடக்கி இராணுவக் கட்டுப்பாட்டிலும் புலனாய்வாளர்களின் பிடியிலும் வைத்திருப்பதுபோல் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களையும் அடக்கியாழும் நோக்கிலேயே திரு. பருதி அவர்களின் இப்படுகொலை நடந்தேறியுள்ளது. இன்று சர்வதேச மட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டின் காரணமாகச் சீற்றம் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசானது சர்வதேச மட்டத்தில் பல அழுத்தங்களைச் சந்தித்து வரும் இவ்வேளையில் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகளின் வீச்சைக் குறைக்கும் நோக்குடனும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நோக்குடனுமே இப்படுகொலையைச் செய்துள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களாகிய நாம் எந்த அச்சுறுத்தலையும் தாண்டி எமது செயற்பாடுகளை இன்னமும் வீச்சுடனும் ஓர்மத்துடனும் செய்து தமிழர் மீது நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையைச் சர்வதேச மட்டத்தில் எடுத்துச்சென்று மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் இலட்சியத்தை அடையும்வரை அயராது செயற்படுவோமென உறுதி எடுத்துக்கொள்வதுடன் சிறிலங்கா அரசின் எல்லை மீறிய இப்படியான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்தோடு இப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை பிரான்ஸ் காவல்துறை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமெனப் பிரான்ஸ் காவல்துறையைக் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டிநிற்கிறது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். கனடியத் தமிழர் தேசிய அவை.

யாழ்ப்பாணத்தில் குடிகாரர்களின் தொகை அதிகரிப்பு!

யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் அதிகளவான மதுபானம் நுகரப்படுவதாக பிராந்தியத்திற்குப் பொறுப்பான சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வருடாந்தம் 15000 முதல் 20000 வரையிலானவர்கள் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் ஆகியவற்றை பருகுவதனால் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். ஏ9 வீதி திறக்கப்பட்டதனைத் தொடர்ந்து மதுபான வகைகளின் பயன்பாடு உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மதுபான விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். மதுபான பயன்பாட்டினால் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உறக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்கள மாணவன்!அவுஸ்திரேலியாவில் சம்பவம்.

அவுஸ்திரேலியாவின் பேர்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை மாணவர் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பேர்த்தில் பகுதி நேர வாகன செலுத்துனராக பணியாற்றிய 28 வயதுடைய இலங்கை மாணவர் சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே என்வர் இன்று (09) பேர்த் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மது அருந்திய பின் உறக்த்தில் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் இலங்கை மாணவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. சுமுது ரங்கன பமுனு ஆராச்சிகே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் 18 மாத சிறை தண்டனையின் பின் 2014ம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு விசா ரத்து செய்யப்பட்டு பின் நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.(எங்க போனாலும் இவங்கிட குணம் மாறப்போறதேயில்லை)

08 நவம்பர் 2012

மேலும் 30பேரை திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா!

அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியா சென்ற 30 இலங்கை இளைஞர்கள் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் படகு மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த நபர்களின் நிலை குறித்து விளக்கப்பட்டு அவுஸ்திரேலியாவின் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைய அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார். செல்லுபடியற்ற விசா, அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களாலும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஒகஸ்ட் 13ம் திகதிக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து 156 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஸ்கார்பரோ வீட்டில் தீ!தமிழர் குடும்பம் படுகாயம்!

கிழக்கு ரொறாண்ரோவில் ஒரு வீட்டில் செவ்வாய் நள்ளிரவு திடிரென்று தீ பிடித்தது. இந்தத் தீயில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இருவர் நிலைமை மோசமாக இருக்கிறது. பிர்ச்மவுண்ட் சாலை, லாரன்ஸ் தெரு பகுதியில் இருக்கும் ஒரு தனி வீட்டில் இலங்கைத் தமிழர் குடும்பம் வசித்து வந்தது. இந்த வீட்டில் மூன்று தலைமுறையினர் குடியிருக்கின்றனர். அப்பா, அம்மா அவர்களின் இரண்டு மகன்கள்,மகள், மருமகன் மற்றும் 22 மாதப் பேரக் குழந்தை என கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். இரவு ஒரு மணி சுமாருக்கு தீ எச்சரிக்கை மணி ஒலித்ததும் குடும்பத் தலைவி சந்திரலீலா சிவபாதம் விழித்து மற்ற குடும்பத்தினரை எழுப்பியிருக்கிறார். ஆனால் அதற்குள் தீ வேகமாய் பரவியிருக்கிறது. ’இப்படியொரு தீயை நான் பார்த்ததேயில்லை. கண் முன் வீடு எரிந்தது மிகவும் பரிதாபகரமான சங்கதி’ என்கிறார் அருகில் வசிக்கும் கிருஷ்ணலீலை வேலுபிள்ளை. ‘குழந்தைக்குப் பரவாயில்லை. அதன் கர்ப்பினி தாய்க்கும் அதிகமில்லை’ என்கிறார் அவர். தீ எச்சரிக்கை மணி ஒலித்த சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வண்டிகள் வந்து போராடி தீயை அணைத்திருக்கின்றன. வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் முதலில் தீ பிடித்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து வீட்டுக்கு தீ பரவியிருக்கிறது. அந்த வாகனம் முற்றிலும் எரிந்து விட்டது. மொத்த சேதாராம் 300,000 டாலர்கள் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பன்னிரெண்டு தீயணைப்பு வண்டிகளும் 40 தீயணைப்பு வீரர்களூம் சேர்ந்து தீயை அணைத்திருக்கிறார்கள்

07 நவம்பர் 2012

அதிகார பகிர்வு பெற மீண்டும் புலிகளை அழைக்கிறார் விமல் - மனோ

புலிகளுக்கு பயந்தே அதிகாரப்பகிர்வு கொள்கையும், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் கொண்டு வரப்பட்டது: இன்று புலிகள் இல்லை; ஆகவே மாகாணசபையும், பதிமூன்றும் தேவை இல்லை என இன்று காலை வேறொரு இடத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச சொல்லியிருப்பதாக அறிந்தேன். இது நல்ல வேடிக்கை. இன்று தமிழ் தலைமைகள் நாம், ஐக்கிய இலங்கைக்குள்ளே தீர்வை கோருகிறோம். நேர்மையான அதிகாரப்பகிர்வு என்ற நிபந்தனையுடன் ஒன்றுப்பட்ட இலங்கையை கோருகிறோம். நாட்டை பிரிக்க வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை. ஆயுத போராட்டம் நடத்தவில்லை. புலிகளுக்கு பயந்துதான் அதிகாரப்பகிர்வு வந்தது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அதிகாரப்பகிர்வு வேண்டும் என்றால் புலிகளை மீண்டும் கொண்டு வாருங்கள் என்றுதானே அர்த்தம். ஆகவே, விமல் வீரவன்ச அதிகாரப்பகிர்வை பெறுவதற்காக, ஆயுதப்போராட்டம் நடத்துங்கள் என்று எமக்கு சொல்கிறார். நாட்டை பிரியுங்கள் என்று சொல்கிறார். 1980களில் புலிகள் உருவானார்கள். 1987களில், மாகாணசபை முறைமையும், பதிமூன்றாம் திருத்தமும் உருவானது. ஆனால், அதிகாரப்பரலாக்கல் கொள்கை என்பது இந்த நாட்டில், புலிகளுக்கு முன்னமேயே உருவாகி இருந்ததை, தெரிந்தும் தெரியாததுபோல் சிறுபிள்ளைதனமாக விமல் வீரவன்ச பேசுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். "அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்" என்ற தலைப்பில் இரண்டாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. சுமந்திரன் எம்பி, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1958 ல் பண்டா-செல்வா ஒப்பந்தம், 1965 ல் டட்லி-செல்வா ஒப்பந்தம் என்பவை அதிகாரப்பரலாக்கல் கொள்கையின் அடையாளங்கள். அப்போது புலிகள் இல்லையே. அதுமட்டும் அல்ல, சுதந்திரத்துக்கு முன்னர், 1940 களில், கண்டி சிங்கள பிரதானிகள், யாழ்ப்பாணத்திற்கு சென்று இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறையே தேவை என்று கூறி அதற்கு தமிழர்களின் ஆதரவை கோரினார்கள். சோல்பரி கமிசனிடம் கண்டிய சிங்களவர்கள் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தார்கள். அன்றைய தமிழர்களுக்குத்தான் முன்யோசனை மூளை இல்லாமல் போய்விட்டது. ஆனால், சமஷ்டி கோரிக்கையை முன் வைத்த சிங்களவர்கள் புலிகளா? அதை வேண்டாம் என மறுத்த தமிழர்கள் புலிகளா? உண்மையில் அன்று புலியும் இருக்கவில்லை, பூனையும் இருக்கவில்லை. இந்த நாட்டின் சரித்திரம் எமக்கு தெரியாது என விமல் வீரவன்ச நினைப்பது மடத்தனம். நாங்கள் நேற்று முதல் நாள்தான் மீண்டும் பிறந்து வந்துள்ளோம் என அவர் நினைப்பதும் மடத்தனம். 1940, 1950, 1960 களில் இந்த நாட்டில் நடந்தவை எங்களுக்கு தெரியும். எமக்கு நீங்கள் சரித்திர பாடம் புகட்ட வேண்டாம். உமது இனவாத தேவைகளுக்காக, அதிகாரப்பரவல்லாக்கலை எதிர்க்கிறீர். அதற்காக பொய்களை அவிழ்த்து விடுகிறீர். புலிகளுக்கு பயந்துத்தான், அதிகாரப்பகிர்வு கொள்கை என்றால், இன்று அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்ள மீண்டும் புலிகள் வரவேண்டுமா? புலிகள் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று விமல் வீரவன்ச சொல்கிறாரா என நான் கேட்கிறேன். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது அதிகாரப்பகிர்வு. இதைதான் உலகம் திரும்ப, திரும்ப சொல்கிறது. ஆனால், மகிந்த அரசாங்கம் அதிகாரத்தை பகிர்ந்து தர தயார் இல்லை. பிரதம நீதியரசருக்கு எதிரான பிரேரணை மூலம் அரசாங்கம் உலகத்துக்கு வழங்கிய செய்தி இதுதான். இன்று திவி நெகும சட்டம், மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கிறது. அதை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையின் மூலம் சட்டமாக்க முடியாது என பிரதம நீதியரசர் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டார். ஆகவே வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம், பதின்மூன்றாம் திருத்தத்தில் கை வையுங்கள். சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள், உங்களுக்கு முடியுமானால் திருத்தத்தையே திருத்துங்கள் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பு சொல்லிவிட்டது. இதனால்தான் இவர்களுக்கு இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக மீது கடும் கோபம். ஏனென்றால், சத்தமில்லாமல் பதின்மூன்றின் மீது கைவைக்க நினைத்தவர்களுக்கு அதை பகிரங்கமாக செய்ய வேண்டிய நிலைமையை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக ஏற்படுத்திவிட்டார். உலகம் முழுக்க போய், பதிமூன்றிற்கு மேலே போட்டு தருகிறேன் என்று சொன்னவர்கள், இன்று இருப்பதையும் திருட முயல்கிறார்கள் என்பது பகிரங்கமாகிவிட்டது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று பதின்மூன்றில் கைவைத்தால், அது இந்த அரசாங்கத்துக்கு கேடுகாலம். உலகத்தின் முன் இனி இவர்களுக்கு எந்த ஒரு சமாதானத்தையும் இனிமேல் சொல்ல முடியாது. இந்த தர்மசங்கட நிலைமைக்கு அரசாங்கத்தை தனது தீர்ப்பின் மூலம் தள்ளியுள்ளவர், ஷிராணி பண்டாரநாயக்க. அந்த நிலைமைக்கு ஷிராணி பண்டாரநாயக்கவை கொண்டு வந்தவர்கள் நாங்கள். இங்கே அமர்ந்துள்ள, மனோ கணேசன், அசாத் சாலி, சுமந்திரன், விக்கிரமபாகு, சிறிதுங்க மற்றும் மாவை சேனாதிராசா ஆகிய நாங்கள்தான், திவி நெகுமவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். அதனால்தான் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே இன்று நாங்கள் இந்த தீர்ப்பின் காரணமாக தமிழ், முஸ்லிம் மற்றும் நல்லெண்ணம் கொண்ட சிங்கள மக்களுடன் சேர்ந்து மகிழ்சியை கொண்டாடுகிறோம். இன்று தீர்ப்பு வழங்கிய பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக மீது அரசாங்கம் கை வைக்கிறது, அதை எதிர்த்து நாம் போராடுவோம். இன்றைய சூழலில் அவருக்கு எங்கள் உறுதியான ஆதரவை நாம் தெரிவிக்கிறோம். தமிழ், முஸ்லிம் மக்களும் இதையே செய்ய வேண்டும். எஜமானுக்கு கேட்கவேண்டும், அவர் எதையாவது மேலே போட்டு தரவேண்டும் என்ற நப்பாசை காரணமாக, இன்று சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், ஷிராணி பண்டாரநாயகவுக்கு எதிராக பேரினவாதிகளைவிட அதிக சப்தம் போடுகிறார்கள். பிரதம நீதியரசருக்கு எதிராகவும், தொடர்ந்து திவிநேகும சட்டமூலத்திற்காக பதிமூன்றாம் திருத்தத்தின் மீதும் கை வைக்கும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும், தமிழ் பேசும் மக்களை காட்டிகொடுக்கின்றார்கள் என்பது உண்மை. இவர்களுக்கு விமோசனம் ஒருபோதும் இல்லை என்பதும் உண்மை. இதை தமிழ் பேசும் மக்கள் உரிய வேளையில் புரிய வைப்பார்கள்.

வருட ஆரம்பத்தில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்வாராம்!

எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை உறுதி மொழி வழங்கியுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க முக்கிய உறுப்பினர்களான ஸ்டாலின் மற்றும் பாலு ஆகியோர் அண்மையில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்து, நவனீதம்பிள்ளையை சந்தித்திருந்தனர். இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் குறித்து நவனீதம்பிள்ளையிடம் திமுக உறுப்பினர்கள் விளக்கியுள்ளனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணித்தியாலத்திற்கு மேல் நீடித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனை ஆராய்வதற்கு தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக நவனீதம்பிள்ளை தெரிவித்தார் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

06 நவம்பர் 2012

அகதியொருவர் தமிழக அகதி முகாமில் படுகொலை!

இலங்கையைச் சேர்ந்த அகதியொருவர் தமிழக அகதி முகாமில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கரூர் அருகே ராயனூர் என்னும் இடத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்த ஜெயபிரகாஷ் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த படுகொலைக்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையை தடுக்க முயன்ற ஜெயபிரகாஷின் தம்பியான கலைச்செல்வன் என்பவர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கரூர் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அகதி முகாமையை சேர்ந்த மற்றுமொருவரை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு தூதுவர்களாக இனவழிப்பு குற்றவாளிகள்!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய (இனவழிப்பு குற்றவாளிகள்!)இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த இது தொடர்பான திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தளபதியும், தற்போது இராணுவத் தலைமையகத்தில் பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுபவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், இஸ்ரேலுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, பிறேசிலுக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான போராளிகள் கடத்தப்படும் சம்பவம் அதிகரிப்பு!

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வன்னியி;ல் சுமார் ஏழு இளைஞர்கள் ஓரே சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியொன்றில் அவர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. அச்சங்காரணமாக அவர்கள் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக குடும்பத்தவர்கள் புகார் எதனையும் தெரிவித்திருக்கவில்லை. எனினும் அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்களுள் ஒருவர் புனர்வாழ்வின் பின்னர் அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவ்வகையிலேயே இக்கடத்தல் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. ஏற்கனவே அரசு கூறிவரும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட போராளிகளினில் பலர் வன்னியிலும் அதே போன்று யாழ்.குடாநாட்டிலும் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த போதிலும் அவர்கள் பற்றி பின்னர் தகவல்கள் ஏதுமற்ற நிலையே காணப்பட்டு வருகின்றது. அவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்கள் பற்றி தகவல்களை வழங்க படைத்தரப்பு தொடர்ந்தும் மறுத்தே வருகின்றது. குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் விடுதலைப புலிகளது சொத்துக்களை பேணிவருபவர்களே இலக்கு வைக்கப்படுவதாக படைத்தரப்பு கூறிவருகின்றது.

05 நவம்பர் 2012

சந்திரிகா பைத்தியம் பிடித்து ஆடைகளின்றி வீதியில் ஓடுவார்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க,ஆடைகளின்றி வீதியில் ஒடும் காலம் கிட்டியுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மிகப்பெரிய கட்சியாகும். இந்த கட்சியின் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விசர்பிடித்து ஆடியதால்,அந்த பதவியையும்,கட்சியையும் விட்டுச் செல்ல நேர்ந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். கண்டி உடநுவர பிரதேசத்தில் நடைபெற்ற திவிநெகும சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி பைத்தியம் பிடித்து ஆடைகளின்றி வீதியில் ஓடுவார் என்று நான் முன்னர் கூறியது தற்போது நடந்து வருகிறது. தற்போது உண்மையில் சந்திரிகாவுக்கு விசர்பிடித்துள்ளது. அவர் தலைவிரி கோலமாக ஆடைகளின்றி வீதியில் ஓடும் நாள் மிக விரைவில் வரும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.

சிகிச்சையில் குளறுபடியா?ஆஸ்பத்திரியில் இறந்த பெண்!!!

newsமட்டக்களப்பு, பழுகாமத்தில் இருந்து கை உடைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது: பழுகாமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவனேசன் சிவகலா (வயது30) மிகவும் வறுமை நிலையில் உள்ளவர். இந்தப் பெண் கடந்த புதன்கிழமை வீட்டில் வழுக்கி விழுந்ததால் அவரது கை மணிக்கட்டுப் பகுதியில் உடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், மறுநாள் வியாழக்கிழமை அவருக்கு கை மணிக்கட்டுப் பகுதியில் சத்திரசிகிச்சை செய்யவென அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சத்திரசிகிச்சையின் போது குறித்த பெண் உயிரிழந் துள்ளார். சத்திரசிகிச்சையின் போது இடம்பெற்ற சில பிழையான சிகிச்சை காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று குடும்பத்தினரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நீதிபதி மரண விசாரணையை மேற்கொண்டதுடன், உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதால் கொழும்பில் இருந்து பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியர்களை வரவழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் உள்ள போதும், ஒரு சிலரின் கவனயீனங்களால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

கோத்தபாய மற்றும் கருணா குழுவினர் தென்னாபிரிக்காவுக்கு இரகசிய விஜயம்!

இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் உட்பட்ட அமைச்சர்கள் பட்டாளமொன்று தென்னாபிரிக்காவுக்கு இரகசியப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக இணையதள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் பயணத்தின் போது கோத்தபாய ராஜபக்ச தென்னாபிரிக்க அரசின் மூத்த அதிகாரிகளையும், இராணுவ அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தப் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது மற்றும் அதன் நோக்கம் குறித்து இந்தியாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தபாய ராஜபக்சவின் இந்தப் பயணத்தை அடுத்து, இலங்கை அரசின் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, நியோமல் பெரேரா, விநாயகமூர்த்தி முரளிதரன், பைசர் முஸ்தபா, ஜனக பண்டார ஆகியோரைக் கொண்ட குழு கடந்த ஒக்ரோபார் 27ம் நாள் ஒரு வாரகாலப் பயணமாக தென்னாபிரிக்கா சென்றுள்ளதாகவும் அவ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

04 நவம்பர் 2012

சுழிபுரத்தில் பொதுமக்கள் மீது கடற்படை தாக்குதல்!

இன்று மாலை சுழிபுரம் கிழக்கு காட்டுப்புலம் திருவடிநிலை பகுதி பொதுமக்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருவடிநிலையில் கடற்பகுதியின் ஒருபகுதியை கடற்படையினர் தடைசெய்து வைத்துள்ளதால் இரண்டு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில் திடீரென மோட்டார் சைக்களில் வருகைதந்த கடற்படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குல் மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து ஒன்று திரண்ட பொதுமக்கள் கடற்படையினரின் தண்ணீர் பௌசரை வழிமறித்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சி செய்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆயினும் மேலதிகமாக குறித்த பகுதிக்கு கடற்படையினர் அனுப்பட்டு பொதுமக்களை கலைக்க கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஊடகங்கள் ஊடாக புலிகளின் தாக்குதல் தொடர்கிறது என்கிறார் மகிந்த.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடகங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை தொடர்ந்து வருவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஊடகங்களைப் பயன்படுத்தி தமது போராட்டத்தை புலிகள் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ஷ, கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்துக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக பாரிய அளவில் நிதியை செலவிட்டனர் எனவும்  அதேபோன்று போராட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெற்றோரை பராமறிப்பதற்காகவும் அவர்கள் பாரிய தொகையை செலவழித்தாகவும்  தெரிவித்தார். எனினும் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஊடகப் பிரச்சாரங்களுக்காக  இந்த நிதியைப் பயன்படுத்தி வருவதாகவும்  உலக ஊடகங்களின் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய அளவிற்கு புலிகளிடம் பணம் இருப்பதாகவும் குறிப்பிட்ட  மகிந்த ராஜபக்ஷ  இந்தப் பணத்தைக் கொண்டு இலங்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு  வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

03 நவம்பர் 2012

போர்க்குற்றம் புரிந்தவர்களை இலங்கையால் இனியும் காப்பாற்ற முடியாது.

டாவூர், கம்போடியா, ருவாண்டா, பொஸ்னியா போன்று இலங்கையிலும் போர்குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்று, அவுஸ்திரேலியாவின் முன்நாள் வெளியுறவு அமைச்சர் கரத் இவான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சென்ரர் பாக்(மைதானம்) அளவுதான் முழு முள்ளிவாய்க்காலுமே இருக்கும். ஒருபக்கம் கடல், மறுபக்கம் இலங்கை இராணுவம். இரண்டுக்கும் நடுவே 3லட்சம் தமிழ் மக்கள் மாட்டிக்கொண்டார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். மிகவும் குறைந்த அளவாகச் சொல்லப்போனால் 10,000 முதல் 40,000 ஆயிரம் பொதுமக்கள் அங்கே 2009ம் ஆண்டு கொல்லப்பட்டார்கள். ஆனால் உலகம் அதனை வேடிக்கை பார்த்தது. இன்று சிரியாவில் 1 வர் இறந்தால் கூடப் பெரிதுபடுத்திக் காட்டும் ஊடகங்கள் அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும்போது மெளனமாக இருந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமை மாநாட்டில், இலங்கை தொடர்பான மேலதிக விவாதங்கள் நடைபெறவுள்ளது. இதனூடாக இலங்கை அரசுக்கு எதிராக மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக இவான்ஸ் மேலும் தெரிவித்தார். இதனூடாக இலங்கையில் போர்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனி தப்பிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடா ஸ்காபரோவில் வசிக்கும் 16 வயதுடைய தமிழ் மாணவியைக் காணவில்லை!

கனடா, ஸ்காபரோ நகரில் நீல்சன் வீதி மற்றும் எஸ்மயர் வீதி சந்திப்புக்கருகில் வசிக்கும் 16 வயதுடைய தமிழ் மாணவி ஒருவரைக் காணவில்லையென அறிவித்துள்ள ரொறன்ரோப் பொலிஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவி கோரியுள்ளது. காயத்திரி வைத்திலிங்கம் என்ற 16 வயது மாணவியே காணாமல் போனாரென்றும் இவர் 5 அடி 5 அங்குலம் உயரமும் 150 இறாத்தல் எடையும் கொண்டவருமெனத் பொலிசார் தெரிவித்தனர். மண்ணிறக் கண்களும் கறுப்பு நிற அடர்த்தியான தலைமயிருமுடைய இந்த மாணவியின் பாதுகாப்புத் தொடர்பாக தாங்கள் கரிசனை கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தோர் 416.222.8477 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது www.222tips.com இணையத்திலோ தகவல்களைத் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
http://www.torontopolice.on.ca/newsreleases/24911

02 நவம்பர் 2012

ராதிகா சிற்சபையீசன் சிறந்த உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவம்!

ராதிகா சிற்சபைஈசன் 2012ன் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தெரியப்பட்டார். ஸ்காபரோ  புதிய ஜனநாயகக்கட்சி பா. உ. ராதிகா சிற்சபைஈசன் (ஸ்காபரோ - ரூஜ் ரிவர்) 'நௌ' (NOW) சஞ்சிகையால் இன்று 2012ன் 'சிறந்த உள்ஊர்பாராளுமன்ற உறுப்பினர்' விருது வழங்கி மதிப்பளிக்கப்பெற்றார். 'இந்த விருது பெறுவதையிட்டு நான் மிகுந்த பெருமையடைவதோடு ஆழ்ந்த நன்றியையும் தெரிவிக்கிறேன்" என தெரிவித்த ராதிகா சிற்சபைஈசன், "அதற்கு முக்கிய காரணம் இந்த விருதுக்காக எனக்கு வாக்களித்தவர்கள் ஸ்காபரோ மற்றும் ரொரன்ரோ பெரும்பாக மக்களே" என கூறினார். ரொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் 'நௌ' சஞ்சிகை, 'ரொரன்ரோவில் சிறந்தது' (Best of Toronto) என்ற பட்டியலை வருடாந்தம் வெளியிடுகிறது. அதிலே ரொரன்ரோ பெரும்பாகம் வாழ் மக்கள் பல்வேறு பிரிவுகளிலே தங்கள் தெரிவுக்கு வாக்களிக்கிறார்கள். கடந்த காலத்தில் 'சிறந்த உள்ஊர் பாராளுமன்ற உறுப்பினர்' விருது பெற்றவர்களிலே புதிய ஜனநாயகக்கட்சியை சேர்ந்த ஜக் லேய்ற்றன், ஒலிவியா சௌ ஆகியோரும் அடங்குகின்றனர். 'நான் தொடர்ந்தும் ஸ்காபரோவாழ் மக்களுக்காக குரல்கொடுப்பேன். தரமான சுகநல பாதுகாப்பு, ஓய்வுகால காப்புறுதி, சமத்துவமும், பசுமையும், செல்வச்செழிப்பும் மிக்க தேசம் போன்ற கனேடிய மக்களிற்கு முக்கியமான விடயங்களுக்காக போராடுவேன்" என ராதிகா சிற்சபைஈசன் மேலும் கூறினார். இன்று ரொரன்ரோ நகர மத்தியில் இடம்பெற்ற காலை விருந்து நிகழ்வொன்றில் தனது விருதை ஏற்றுக்கொண்ட ராதிகா சிற்சபைஈசன் 'நௌ' சஞ்சிகைக்கும், வாக்களிப்பில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சர்ச்சையைக் கிளப்பியுள்ள பெண் புலியின் வாக்குமூலம்!

 Woman Tiger S Confession Creates Controversies வித்யாராணி என்ற பெண்விடுதலைப் புலி ஒருவர் அளித்ததாக விகடன் வார இதழில் வெளியான நேர்காணல் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. அந்தப் பேட்டியில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், ஈழப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாகவும் வித்யாராணி கூறியுள்ளதை, திட்டமிட்ட இன விரோத செயல் என பல்வேறு ஈழ அமைப்புகளும் விமர்சித்துள்ளன. தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டத்தை குலைக்கும் உளவியல் போர் இது என்று வர்ணித்துள்ளனர். ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை:
வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்' என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி'யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி. உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை... 'இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!' என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார். எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம். ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி 'புக்காரா' விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், 'அவர்கள் தமிழர்கள்' எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர். என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது. சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன். நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்? தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன். பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது? 1985
ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார். ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடுதலைக்காகவும் போராடியவர். ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது! அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது? இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!
இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?
ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!
என்ன நடந்தது?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர். அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன். எமது போராட்டத்தில் தோற்றுப் போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்று விட்டோம். எமது போராட்டம் தோற்றுப் போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோது, இராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியாவில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் இராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன். அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். சோதியா படையணியில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர். காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. 'தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்' என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது. கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கைகொட்டி ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்த வண்ணம் இருந்தேன்! விசாரணை சித்திரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்? சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத்தீவுக் காடுகளுக்குள் கொண்டு போய் விட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது. பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்! நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?
பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன. முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர். நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது. பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு 'பால்... பால்' என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை! ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா? எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர். பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார். அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!
யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?
பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்திரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா? அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர். இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர்களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா? (
அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது) இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை. 'ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்' என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் 'இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்' என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப் போடுகின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு விட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, 'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?' என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன். (சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.) இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள். எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும். ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்! உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை 'விபசாரி' என விமர்சித்...' (கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) 'நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!
(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)
படம், பேட்டி: விகடன்