பக்கங்கள்

29 ஜனவரி 2017

கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது!

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வாகனமொன்றில் ஆடு வாங்குவதற்காக அந்த பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்ற போது யாழ்ப்பாண நகரப்பகுதியில் இருந்ததாக விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் கடை ஒன்றை நடத்துவதுடன் மற்றயவர் புத்தளத்தில் இருந்து இவருடன் செயற்ப ட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 ஜனவரி 2017

ஊர்காவற்றுறையில் மனிதச்சங்கிலி போராட்டம்!

ஊர்காவற்றுறை பகுதியில் 7 மாத கர்ப்பிணிப்பெண் நாகேந்திரன் கம்சிகா அடித்து கொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித சங்கிலி போராட்டத்தின் நிறைவில் அப்பகுதி மக்களினால் ஊர்காவற்றுறை உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த 24 ஆம் திகதி 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்த இருவரினால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று பொது மக்கள், வர்த்தகர்கள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், மதகுருமார், இணைந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வர்த்தகர்கள் கடைகளை மூடி மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர். உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரியும், பொலிஸார் தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மனித சங்கிலி போராட்டம் இடம்பெற்றுள்ளது.போராட்டத்தின் இறுதியில், மதகுருமார்களினால் ஊர்காவற்றுறை உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

26 ஜனவரி 2017

வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் நிலை மோசமடைகிறது!

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள காலவரையறையற்ற உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 பேரில் நால்வரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை காணாமல் போனோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஏனைய காணாமல் போனோரின் உறவுகள், வவுனியா இளைஞர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து உணவுத் தவிர்ப்பு போராட்டம் இடம்பெறும் பகுதி வரை இளைஞர்கள் பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் தமது சங்கத்தில் இருந்து நகரத்தின் ஊடாக போராட்டம் இடம்பெறும் பகுதி வரை பேரணியாக செல்லவுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்திப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்றைய தினம் வவுனியாவிற்கு செல்லவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

24 ஜனவரி 2017

சுருவிலில் இளம்தாய் வெட்டிக்கொலை!

ஊர்காவற்துறை பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த 27 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர் இன்று பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டமையினால் ஊர்காவல்துறை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.சுருவில் பகுதியிலுள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவத்திற்காக பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர். இதன்போது, வீட்டில் தனிமையில் இருந்த ஒரு பிள்ளையின் தாயும் 7 மாதக் கர்ப்பிணியுமான 27 வயதுடைய நாகேந்திரன் கம்சிகா என்ற பெண்ணை தடியால் அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் தப்பியோட முற்பட்ட போது, பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்றுறை  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொலை சம்பவம் இடம்பெற்ற வீட்டினை ஊர்காவற்றுறை நீதிவான் வை.எம்.எம்.ரியால் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். குறித்த பெண்ணை வீட்டு அறையினுள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளதுடன் வீட்டிலிருந்த கத்தியை பயன்படுத்தி வெட்டியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த இரத்த கறைகளையும் சந்தேக நபர்கள் கழுவிய நிலையில் பெண்ணை வீட்டு முற்றத்திற்குள் இழுத்து வந்து தடியினால் தாக்கியுள்ளனர். இந்நிலையில் கொலைச் சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்த பெண்ணையும் முச்சக்கர வண்டி சாரதியையும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

23 ஜனவரி 2017

தமிழகத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் வன்முறை!

A lady injured heavily in police lahti charge in Alanganallur Maduraiஅலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஊர்த்தலைவர்கள் அறிவித்தனர். ஆனாலும் ஒரு பிரிவினர் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதனை ஏற்காமல் மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி விரட்டினர். கல்வீச்சும் நடைபெற்றது. இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட நடு தெருவில் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்றவர்களையும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

21 ஜனவரி 2017

மருத்துவமனையில் இருந்து போராட்ட களத்திற்கு திரும்பிய லோரன்ஸ் ஆக்ரோஷம்!

மருத்துவமனையில் இருந்து போராட்ட களத்திற்கு திரும்பிய லோரன்ஸ் உணர்ச்சிமிக்க பேச்சு.

20 ஜனவரி 2017

தொடர் போராட்டத்தால் லோரன்ஸ் உடல் நலம் பாதிப்பு!

Bildergebnis für lawrence tamil actorஜல்லிக்கட்டு போராட்டக் களமான மெரீனாவில் தொடர்ந்து நான்கு நாட்களாக இரவு பகலாக லாரன்ஸ் இருந்ததால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜுரம் மற்றும் கழுத்து வலி காரனமாக 100 அடி சாலையில் உள்ள பல்லவா மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.முன்னதாக போராட்டக் களத்தில் இருந்த அவர், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என அறிவித்தார். கையிலிருந்த ஒரு லட்ச ரூபாயைக் காண்பித்து, "பேங்க்ல இவ்வளவுதான் என்னால இன்னைக்கி பணம் எடுக்க முடுஞ்சுது. நான் உங்க கூடவேதான் இருப்பேன். என்ன வேன்னாலும் கேளுங்க உங்க அண்ணன் என்கிற முறையில கூச்சப்படாம கேளுங்க நான் செய்றேன். உங்களுக்குக்காக நான் தினமும் பேங்க் படி ஏற தயாராக இருக்கிறேன். நீங்க எனக்கு குடுத்த வாழ்க்கை தான் இந்த ஆடம்பரம். இதெல்லாம் உங்க காசுதான். நீங்க என்னை வாழ்த்தி அன்பளிப்பாக குடுத்த காசு," என்றார் லாரன்ஸ்.

18 ஜனவரி 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் போராட்டம்!

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்றுவரும்
ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்.நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மரபினைக் காக்க போராடும் தமிழக உறவுகளுக்காக யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் கவனயீர்ப்பு என்ற தொனிப்பொருளில் இப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. “ தமிழக நண்பர்களும் விடாமல் போராடுங்கள் ”, “ எரியும் தமிழகத்திற்கு ஈழத் தமிழர்களின் தீ ”, “ தடை அதை உடை"தமிழர்களின் மரபுரிமைக்காக குரல் கொடுப்புாம்” , “கொம்புக்கு கிட்ட வைத்துக்கொள்ளாத வம்பு ”, “ அடங்க மறு அத்து மீறு ” , “ ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம் ”, “ நாங்கள் ஒன்றுபட்டுத்தான் இருக்கிறோம் நமக்குள் எல்லைகள் கிடையாது”, அடையாளம் எங்கள் முகம் தமிழ் எங்கள் உயிர் ” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 ஜனவரி 2017

தீவகத்தின் கல்வியை காப்பாற்றுமாறு கோரிக்கை!

தீவக பாடசாலைகள் சிலவற்றுக்கு அதிபர்கள் இல்லாததால் அப்பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் வடமாகாண சபையின் முதலமைச்சரின் கண்டிப்பான உத்தரவுக்கு அமைவாக இவ்வருடம் 02/01/2017 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில்208 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் தீவக கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கும் புதிய அதிபர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவ் நியமனம் செய்யப்பட்ட அதிபர்களில் 5பாடசாலைகளை நேற்றைய(09/01 /2017) தினம் வரைக்கும் எந்த அதிபரும் பொறுப்பு எடுக்கவில்லை. அதாவது நெடுந்தீவில் இரண்டு பள்ளிக்கூடங்கள் அனலைதீவில் ஒரு பள்ளிக்கூடம்,எழுவதீவில் ஒரு பள்ளிக்கூடம்,நயினாதீவில் ஓரு பள்ளிக்கூடம். இப்பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றவர்கள் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பித்தவர்களாம். மேலும் தீவகத்துக்கு வந்து சேவையாற்ற பின்னடிப்பதுடன் சிலர் அரசியல் செல்வாக்கைப் பயன் படுத்தி தமக்கு விருப்பமான இடத்திலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்காக முயற்சிப்பதாக அறியப்படுகின்றது. சம்மந்தப்பட்ட வர்களே இவ்விடையத்தை கவனத்திலெடுத்து தீவகத்தின் கல்வியை காப்பாற்ற முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

09 ஜனவரி 2017

தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபி துப்பரவுப்பணி!

யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள பொலிஸாரின் இனவாதத்திற்குப் பலியான தமிழர்களின் நினைவுத் தூபி பகுதியினை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுடைய நினைவு தினம் நாளை செவ்வாக்கிழமை அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையிலே அவ் நினைவு தூபியினை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத் தூபியினை துப்பரவு செய்யும் பணிகளை வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தலமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

06 ஜனவரி 2017

கனடாவில் கடும் குளிரில் இருந்து காப்பாற்றப்பட்ட தமிழ்ப் பாட்டி!

கனடா - ஒன்ராறியோ, மார்கம் பகுதியில் நேற்றுக்காலை 7.30 மணியளவில் தனிமையில் அலைந்து திரிந்த தமிழ் மூதாட்டி ஒருவரை கனடியப் பொலிஸார் மீட்டுள்ளனர். 80 வயது மதிக்கத்தக்க இவர் மீட்கப்பட்ட போது, வீட்டில் அணியும் பிறவுண் நிற கோர்ட் அணிந்திருந்தார். காலில் காலுறையோ பாதணியோ இருக்கவில்லை. அப்போது, வெப்பநிலை மைனஸ் 10 டிகிரியாக இருந்தது. அவரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு அந்நாட்டு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கோவான் வீதி டவுன்லி அவனியு மற்றும் ஹைகிளென் அவனியு பகுதியில் இருந்து குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் தரையில் வீழ்ந்து காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் பொலிஸார், அவரின் பெயர் புவனேஸ்வரி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

04 ஜனவரி 2017

சரணடைந்த புலிகள் இயக்க தளபதிகளின் விபரத்தை வெளியிட்டார் எரிக்!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!!
1.ஆதவன்
2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
3.அம்பி ( செயற்பாடு தெரியாது)
4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி), 5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்), 7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ), 8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி) 10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்கள ை பராமரித்தவர்)
16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர்,
கிளிநொச்சியில் பிறந்தவர் )
18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி) 27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
34.இசைபிரியா ( ஊடக பிரிவு)
35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்) 41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
44.குயிலன் ( இராணுவ புலனாய்வு)
45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

நன்றி:ஈழமலர்.கொம்

02 ஜனவரி 2017

ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்த போராளி சடலமாக மீட்பு!

முன்னாள் போராளி ஒருவர் சாவகச்சேரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜனநாயக போராளிகள்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரான இனியவன் என அழைக்கப்படும் தர்மசேன ரிசிகரன் (வயது-34) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள ஜன நாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. போராளியாக இருந்து, புனர்வாழ்வின் பின் சாவகச்சேரி டச்சு வீதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த ரிசிகரன் சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியில் வீடு ஒன்றில் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கான அலுவலகம் ஒன்றினை உருவாக்கி வந்துள்ளார். நேற்று இரவு குறித்த அலுவலகத்தின் காவலாளி இரவுக்கடமைக்காக சென்ற போது ரிசிகரன் அலுவலகம் அமைந்திருந்த வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். உடனடியாக சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதேவேளை தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் மனைவி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் க.கணபதிப்பிள்ளையிடம் தெரிவித்ததை தொடர்ந்து விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குற்றத்தடயவியல் நிபுணர்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர் என தெரிவிக்கப்படுகிறது.