பக்கங்கள்

29 டிசம்பர் 2017

மாணவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி!

உயர்தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமையினால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த மாணவரே விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன் தனது சக மாணவர்களை விடவும் குறைந்தளவு மதிப்பெண்களை பெற்றதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.மாலை வேளையில் மாணவனது அறையில் அழுகுரல் கேட்டதாகவும்,ஓடிச்சென்று பார்த்தபோது மாணவன் வாந்தி எடுப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகவும்,மாணவனது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

27 டிசம்பர் 2017

வெற்றி பெற்றால் ஊதியமின்றி பணி-மணிவண்ணன்.


உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகரசபையின் துணை முதல்வர் வேட்பாளராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆரோக்கியநாதன் தீபன்திலீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்சித் தலைவர் கஜேந்திரகுமாார் பொன்னம்பலத்தினால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் “எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவை வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம்வகிக்கின்ற பல பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து போட்டியிடுகின்றன. இவற்றுடன் 10 பொது அமைப்புக்களின் கூட்டான தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் நம்பிகள் நல்வாழ்வுக் கழகம் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியன இணைந்து போட்டியிடுகின்றன. இவற்றைவிட வேறு பல அமைப்புக்களும் எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. அவ் அமைப்புக்களின் யாப்பின் அடிப்படையில் பகிரங்க அரசியல் ஆதரவு வழங்க முடியாது என்பதால் அவற்றின் விபரங்களை உத்தியோகபூர்வ விபரங்களை வெளியிட முடியாதுள்ளோம். இந்தத் தேர்தலிலே நாங்கள் தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம். தூய கரங்கள் என்கின்ற பொழுது நாங்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டு யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றுவோமாக இருந்தால் எந்தவிதமான கறையும் படியாத இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத இலஞ்ச ஊழலை முற்றாக ஒழிக்கின்ற ஒரு சபையை நாங்கள் உருவாக்கி நிர்வகிப்போம். தூய நகரம் என்கின்ற பொழுது தூய்மையான காற்று தூய்மையான நீர் தூய்மையான நிலம் என்கின்ற விடயங்களை யாழ் மாநகருக்குள் அமுல்படுத்துவோம். இலங்கையின் முன்மாதிரியான நகரமாக யாழ். நகரம் மாற்றியமைக்கப்படும். இத்திட்டங்களை ஏனைய பிரதேச சபைகளுக்கும் அமுல்ப்படுத்துவோம். எமது ஆட்சியில் இன, மத, சாதி பாகுபாடுகள் இன்றிய ஒரு சமத்துவ நிலை பேணப்படும். நாங்கள் சபைகளைக் கைப்பற்றினால் எங்களுக்கு வாக்களிக்காத பிரதேச மக்களது பிரதேசங்களினது அபிவிருத்திக்கும் முன்னுரிமையளிப்போம்சகல பிரதேசங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும். நாங்கள் சபைகளைக் கைப்பற்றும் பட்சத்தில் சபைக்குத் தெரிவு செய்யப்படும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து திட்டங்களை வகுத்து பணியாற்றுவோம். அவர்கள் மாற்றுக்கட்சிக்காரர்கள் என்ற ஒதுக்கல் நிலைப்பாடு நீக்கப்படும். நான் மாநகரசபையின் முதல்வராக தேர்ந்தொடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாது பணியாற்றுவேன். மாநகரசபையினூடாக எனக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும். அதிலிருந்து ஒரு சதம் கூட எனக்கென எடுக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகின்றேன்.முன்னைய சபைகளை ஆட்சிசெய்தவர்கள் போல எங்களுக்குள்ளே அடிபட்டுக்கொண்டு நீதிமன்றம் செல்லாத மிகக் கட்டமைக்கப்பட்ட நேர்த்தியான சபையை உருவாக்கி வழிநடத்திச் செல்வோம். கடந்த ஆட்சியில் தமது கட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டதே அதிகம் காணப்பட்டது. மற்றைய கட்சிகளில் ஆசனப் பங்கீடு தொடங்கும்போது அடிபாடு தொடங்கிவிட்டது. அவர்கள் ஆட்சியமைத்தால் இந்த அடிபாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். உடனடியாக சாத்தியமில்லாதபோதிலும் அதனை இலக்காக வைத்து யாழ் நகரைக் கட்டியெழுப்புவோம். அதற்கென அந்நாடுகளின் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்படும். நிதிக் கையாளுகைகளுக்காக பொருத்தமான நிபுணர்களிடமிருந்த ஆலோசனைகள் பெறப்பட்டு குழுக்கள் நியமிக்கப்படும்.யாழ். நகரை சர்வதேச நகரம் ஒன்றுடன் இணைத்து.. இங்குள்ள கட்டமைப்புக்களைப் பலப்படுத்துவோம். நாங்கள் என்னென்ன விடையங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம் என்கின்ற விபரங்களை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின்போது நாங்கள் மக்களுக்கு சமர்ப்பிப்போம்” என கூறியுள்ளார்.

26 டிசம்பர் 2017

தமிழரசுக் கட்சியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறார் வடக்கு முதல்வர்!

நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். 'என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று திருகோணமலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த போது 8 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக் குழுவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஐந்து கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன். நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்தது.சேர்ந்த போது தான் பலதும் வெளிவந்தன. ஆனால் முன்னர் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன். கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன். நடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு தேர்தல் விஞ்ஞாபன சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் 10.02.2015இல் ஏக மனதாக ஏற்கப்பட்ட போது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன். அது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையும் கண்டு கொண்டேன். பின்னர் தான் அறிந்து கொண்டேன் சிலருக்கு வரவிருந்த சுயநல வரவுகள் சில அந்தப் பிரேரணையால் பறிபோனதென்று.நாங்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் போது எமது கொள்கைகளை முன் வைத்தே கேட்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்டியோ நாங்கள் அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும். ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் அவ்வாறான முரண்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட வேண்டும். ஏன் என்றால் நாங்கள் மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். அவர்கள் நலம் சார்ந்தே நாங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக சுயலாபம் கருதி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.ஆனால் அவ்வாறு தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று வெளியேற வேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்து கொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும்.மக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்த போது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒட்டு மொத்த கொள்கைகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றிலிருந்து ஒரு கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும் போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தனிப்பதே எமது கடமை என்று உணர்ந்தேன். கட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைகளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவி தான் கட்சி ஒழுக்கம் என்ற பிரம்பு. “நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது” என்பார்கள் அல்லது “நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்த முறை உங்களுக்குத் துண்டு நிச்சயம்” என்பார்கள். நான் என் கட்சியை அடையாளப்படுத்துங்கள் என்று ஏற்கனவே உங்களிடம் கேட்டுள்ளேன். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும் போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூற முடியும்? என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். அதையே செய்தும் வருகின்றேன். தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது. தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலுக்கு எந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குக் கேட்கின்றது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்பொழுது தான் கட்சித் தலைமைத்துவத்திடம் சில கேள்விகளை மக்கள் கேட்கலாம். அதாவது எமக்கு ஒன்றைக் கூறி அதற்கு மாறாக அரசாங்கத்துடன் நீங்கள் நடந்து கொள்ளும் நடவடிக்கையின் பின்னணி என்ன? நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள்? என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்க வேண்டும்.அதை விட்டு விட்டு “நாம் தான் தலைமை! நாம் முடிவெடுத்து விட்டோம். அது வழி நடவுங்கள் அல்லது சீட்டுமில்லை சிறப்புமில்லை” என்று கூறுவது ஜனநாயகம் ஆகாது. அவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலஞ் சாராது.ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில் பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா? ஏன்? பிறழ்வான கொள்கைகளுக்கு என்னைப் பணியச் செய்வதில் உங்களுக்கென்ன இலாபம்? உங்கள் கொள்கைகளைப் பழையபடி உறுதியாக எடுத்தியம்பி நிலையான தமிழரசுக் கட்சிக் கொள்கைகளுக்கு நீங்கள் இன்னமும் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள் என்று பகிரங்கமாக அறிவியுங்கள். இடைக்கால அறிக்கையின் போதாமை பற்றிப் பிரஸ்தாபியுங்கள். எவற்றை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெறவேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். அவை கட்சியின் 2013ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்புடையதாக இருந்தால் நான் கட்சி கூறுவதற்குக் கட்டுப்படுவேன். அடுத்து மீண்டும் வன்முறை வெடிக்கும் சாத்தியம் பற்றியது... உண்மையைக் கூறினால் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதின் அர்த்தம் ஒருவர் மிரட்டினால் அடங்கிப் போங்கள் என்பது தான். நாம் கூறி வருவது எமக்குத் தெரிந்த உண்மை. உண்மையைக் கூறப் பின் நின்றால் பொய்மைக்கு நாம் இடமளிக்க வேண்டி வரும். சரித்திர ரீதியாக சிங்கள மொழி 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே பிறந்தது என்றேன். எனவே அதற்கு முன்னைய மக்களைச் சிங்கள மக்கள் என்று நாம் எவ்வாறு அழைக்க முடியும் என்று கேள்வி கேட்டேன். சிங்கள மொழி பேசுவதால் தான் ஒரு குழு மக்கள் சிங்கள மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். அந்த மொழியே ஒரு காலத்தில் இல்லாதிருந்த போது அம் மக்கள் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்? இது தான் யதார்த்தம். இது தான் உண்மை.நாங்கள் இது வரை இதைக் கூறவில்லை. இப்பொழுது இதை நான் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப் பொறுக்க மாட்டாதவர்கள் தான் என்னைப் பைத்தியம் என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். பகைவனாகப் பார்க்கின்றார்கள்.அடுத்து நான் சமஷ்டியைக் கோருவதால் வன்முறை வெடித்துவிடும் என்று பயமுறுத்துகின்றார்கள். இப்பொழுது சிங்கள மக்களிடையே படிப்பறிவுடையவர்கள் சமஷ்டியைச் சரியென ஏற்றுக்கொண்டு வருகின்றார்கள்.பின் எதற்கு இந்தப் பயம்? ஒரு விடயம் புரியாமல் இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு நாங்கள் அதை இதைக் கூறிவிடுகின்றோம். ஆனால் புரிந்துணர்வு ஏற்படும் போது அமைதியாக சிந்திக்க தொடங்குகின்றோம். சமஷ்டி ஒரு பூச்சாண்டி அல்ல. அது பிரிவினை அல்ல. மாறாக மக்களைச் சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எங்களுள் சிங்களம் தெரிந்தவர்கள் இதைச் சிங்களப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.சிவாஜிலிங்கமும் நானும் இதைச் செய்கின்றோம். அதே போல் சம்பந்தனும், சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவைகளையும் அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக் கூற முன் வர வேண்டும். எம்மவருள் சிலர் “அது எப்படி சமஷ்டியைக் கேட்பது சிங்களவர்கள் அதற்கெதிரே” என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்து கொண்டு சிங்கள மக்கள் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.இவர்கள் ஒன்றைப் புரிந்த கொள்ள வேண்டும். நாங்கள் வடகிழக்கு இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சமஷ்டியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்று விடலாம். எலும்புத் துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக் கூடும். ஆனால் நாளடைவில் நடக்கப் போவதென்ன? எமது தனித்துவம் அழிந்து விடும். மீண்டும் மீண்டும் எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள். இப்பொழுது எமது வடமாகாண சபையில் இருவர் இருக்கும் இடத்தில் சபையின் பாதி அவர்களின் மக்கள் என்ற நிலை 20 வருடங்களுக்குள்ளேயே ஏற்பட்டு விடும்.இன்று பறங்கியர் பற்றி பேசும் போது நாம் கடந்த காலத்தைச் சுட்டியே பேசுகின்றோம். ஐம்பது வருடங்களின் பின்னர் எம்மைப் பற்றியும் கடந்த காலத்தில் தான் வைத்துப் பேசுவார்கள். இந்த நிலை வர ஒரு சில எலும்புகளைப் பெற்று கொள்கைகளை விட்டுக் கொடுப்பது தான் சரி என்று இந்தத் தெற்கத்தியத் தமிழர்கள் நினைக்கின்றார்களா? இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா? அப்படியானால் அது இனப்படுகொலை என்ற கருத்தினுள் அடங்கும் என்பதை அவர்கள் அறிவார்களா?வன்முறை வெடிக்கும் என்பது சம்பந்தமான எனது பதில் 'வன்முறை வரும்' என்பது எம்மைப் பயமுறுத்தும் ஒரு செயல்.போர் வெடித்ததால் எமது நாடு எவ்வாறான உயர் கடன்களைப் பெறவேண்டியிருந்தது என்பதைத் தெற்கு அறியும். அவர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். ஆகவே எமது சிங்கள அரசியல்வாதிகள் வன்முறை வெடிக்க விடமாட்டார்கள். இன்னுமொரு 1983 வந்தால் இலங்கையின் பெயர் உலக அரங்கில் நாறும். அதையும் மீறி அவ்வாறு வெடித்தால் வெடிக்கட்டுமே. நாம் இதுகாறும் கூறி வந்த உண்மையை உலகம் அறிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும். எமது மக்கள் இதுவரை பட்ட பாட்டிற்கு மேலதிகமாக நாங்கள் எதைச் சந்திக்கப் போகின்றோம்? வன்முறை வெடிக்கும் என்பது சுயநலவாதிகளின் பயமே ஒளிய அதில் உண்மை இல்லை.இந்தக் கூற்று தெற்கில் இருந்து வருவதில் இருந்து அதன் சுயநலப் போக்கைப் புரிந்து கொள்ளலாம். தெற்கில் கொழும்பில் சொகுசாக வாழ்பவர்கள் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். ஆகவே எமது கட்சித் தலைமைகள் தங்கள் நிலையை எமது மக்கள் சார்பாக அவர்களுடன் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

25 டிசம்பர் 2017

தமிழரசுக் கட்சி போட்டியிடும் இடங்களில் புளொட் பிரச்சாரம் செய்யாது!

Ähnliches Fotoஆச­னப் பங்­கீட்­டின் போது, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் வாய்ப்பு மறுக்­கப்­பட்ட இடங்­க­ளில் தேர்­தல் பிரசாரங்களில் இருந்து ஒதுங்­கி­யி­ருக்க புளொட் அமைப்பு தீர்மா­ னித்­துள்­ளதாக கூறப்படுகிறது. தமது கட்­சி­யின் வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கும் வட்­டா­ரங்­க­ளில் மட்­டும் பரப்­பு­ரை­களைத் தீவி­ர­மாக மேற்­கொள்ள அந்­தக் கட்சி திட்­ட­மிட்டு வரு­கின்­றது என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது. எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பாக, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட பங்­கா­ளிக் கட்­சி­க­ளான ரெலோ மற்­றும் புளொட் என்­பன இணங்­கின.ஆச­னப் பங்­கீட்­டில் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு இடை­யில் ஆரம்­பத்­தில் இணக்­கப்­பாடு காணப்­பட்­டி­ருந்­தா­லும் பின்­னர் அது குழம்­பி­யது. ரெலோ அமைப்பு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யிட முடி­யாது என்று அறி­வித்­தது. பின்­னர் கட்­சி­க­ளுக்கு இடையே கொழும்­பில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது. கொழும்­பில் எட்­டப்­பட்ட இணக்­கப்­பாட்­டுக்கு அமை­வாக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி ஆச­னங்­களை வழங்­க­வில்லை என்று பங்­கா­ளிக் கட்­சி­கள் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தன. கிளி­நொச்சி, மன்­னார், அம்­பாறை மாவட்­டங்­க­ளில் புளொட் அமைப்­புக்கு எந்­த­வொரு ஆச­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது. ஏனைய மாவட்­டங்­க­ளி­லும் ஒதுக்­கப்­பட்ட வட்­டா­ரங்­களை விடக் குறை­வான வட்­டா­ரங்­களே அந்த அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

24 டிசம்பர் 2017

நாம் தமிழர் தினகரன் கூட்டணி சாத்தியமாகுமா?

 தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு வாய்ப்பு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனின் கை ஓங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இவை தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான அவரது ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார்களால் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு பிறகு நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைப்பு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, ரெய்டு நடவடிக்கைகள், 2ஜி வழக்கு தீர்ப்பு என்று தமிழக அரசியல் களத்தில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.இருப்பினும், தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் களமிறங்கிய டி.டி.வி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். மாநிலத்தில் ஆட்சி கையில் இருந்தும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டும் அதிமுக தினகரனுக்கு அடுத்த இடத்திலேயே இருக்கிறது. இதனை மாநிலம் முழுவதிலும் உள்ள டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமீபகாலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் ஆளும்கட்சி தோற்றதில்லை என்பதையும், பல ஆண்டுகளுக்கு பிறகு சுயேச்சை ஒருவர் வெற்றி பெற போகிறார் என்பதும் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல, கடந்த கால மனக்கசப்புகளை எல்லாம் மறந்துவிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து இருக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகளின் ஆதரவோடு களமிறங்கியும் திமுக மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இவர்களுக்கு அடுத்ததாக களத்தில் இருக்கும் முக்கிய கட்சியான பா.ஜ.க தற்போது உ.பி.,குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களில் பெருவாரியான வெற்றிகளை பெற்று இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.தமிழகத்தில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களுக்கான அச்சாரமே ஆர்.கே நகர் தேர்தல் தான் என்று அனைவரும் சொல்லிவந்த நிலையில் அந்த தேர்தல் தினகரனுக்கு ஆதரவானதாக மாறி இருப்பது அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மீண்டும் அதிமுக தொண்டர்கள் டி.டி.வி தினகரன் அணிக்கு திரும்ப யோசித்து வருகின்றனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. வரலாறு காணாத பணப்பட்டுவாடா, தேர்தல் விதி மீறல்கள் என புகார்கள் அணிவகுக்கும் வேளையில் இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் தினகரனுக்கு வாக்களித்து இருப்பது தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்கட்சி, மத்தியில் ஆளும் பாஜக ஆகியவற்றின் மீது மக்கள் கோபமாக இருப்பதையே காட்டுகிறது.இந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வாங்கி இருக்கும் வாக்குகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில் கணிசமான வாக்குகள் பெற்று டி.டி.தினகரன், மதுசூதனன், மருது கணேஷ் ஆகிய வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் அணி மற்றும் அதிமுக சார்பில் கோடி கோடியாக பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படும் நிலையில், தி.மு.க போல எதிர்கட்சி அந்தஸ்தோ, மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க போலவோ எந்த வித பின்புலமும் இல்லாமல் நாம் தமிழர் வாங்கி உள்ள ஓட்டுகள் அரசியல் களத்தில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் பெரும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இளைஞர்கள் பெருமளவில் அந்த கட்சிக்கு ஆதரவளிப்பதை சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரத்திலும், தனிப்பட்ட பேட்டிகளிலும் கூட திமுக, அதிமுக கட்சிகளையும், ஆட்சிகளையும் விமர்சித்தவர் தினகரன் அணியை பெரிதாக விமர்சிக்கவில்லை என்பதும், அதுபோல தினகரனும் நாம் தமிழரை பெரிதாக சீண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.இதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் தினகரன் தலைமையிலான அணியும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

22 டிசம்பர் 2017

பிக்குவின் உடலை கோட்டைப்பகுதியில் தகனம் செய்ய எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் எரியூட்டப்படப் போகும் பிக்குவின் உடலம்!யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ். நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும் என தமிழ்த்தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ் நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயானங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தகனம் செய்வதில்லை. யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இந்துக்களின் புனித தலமான கோட்டை முனீஸ்வரன் கோயில் உள்ளது அதற்கு அருகில் வைத்து விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தும் செயலாகும். குறிப்பாக தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்திற்கு அருகில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும். நாகவிகாரை விகாராதிபதி உடலை இவ் இடத்தில் தகனம் செய்ய முற்படுவதானது எதிர்காலத்தில் அவரது பெயரால் இவ் இடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதை உள்நோக்காக கொண்டே திட்டமிடப் படுகின்றது. இது எதிர்காலத்தில் இன முறுகலை ஏற்படுத்தும். எனவே யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடலை கோட்டைப் பகுதியில் தகனம் செய்யாது பொருத்தமான மாயனத்தில் தகனம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் ஆவன செய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 டிசம்பர் 2017

சர்வதேசத்திடம் தீர்வைக்கோரி வவுனியாவில் போராட்டம்!

காணாமல் போனோரின் உறவுகளின் கவனயீா்ப்பு பேரணி இன்று வவுனியாவில் இடம்பெற்றது. அரசாங்கத்தை நம்பி ஏமாந்து போயுள்ளதாக தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் மேற்கொள்ளப்படும் போராட்டம் தீர்வுகள் இன்றிய நிலையில் 300 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவினர்கள் 300 நாட்களையும் கடந்து கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன்பின்னர் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தின் மருதங்கேணி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அவர்களின் உறவினர்கள் போராட்டங்களை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர். தமது பிரச்சினைகளுக்கு தீர்வை கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், மூன்று தடவைகள் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதிலும் உரிய தீர்வை வழங்க அவர் தவறியிருந்ததாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

15 டிசம்பர் 2017

கனடாவில் தமிழ் பெண் கொலை!கணவன் கைது!

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார். பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்,எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என அறிய வருகின்றது.

11 டிசம்பர் 2017

தீயில் இருந்து முயலை காத்த உயிர்நேயவாதி!

Ähnliches Fotoஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் அண்மையில் பயங்கர காட்டுத்தீ எற்பட்டது. காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஆஸ்கர் கோன்ஸால்ஸ் என்பவர் வேலை முடிந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முயல் ஒன்று தீ எரிந்துகொண்டிருக்கும் பகுதிக்குள் செல்வதை ஆஸ்கர் கோன்ஸால்ஸ் பார்த்தார். பதறிய அவர் உடனே காரில் இருந்து வெளியே இறங்கி, முயலை மீட்கும் வகையில் கூக்குரல் எழுப்புகிறார். அவரது சத்தத்தைக் கேட்ட முயல் வெளியே வருகிறது. உடனே அதை நெஞ்சோடி வாரி அணைத்தபடி அவர் அந்த இடம்விட்டு நகர்கிறார். அவருடைய இந்தச் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. அன்பு மனிதர்களுக்கானது மட்டுமல்ல; சக உயிரினங்கள் அனைத்துக்குமானது என்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக வீடியோவைப் பார்ப்பவர்கள் புகழ்கிறார்கள். அவர் முயலை மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. முயலை மீட்டது பற்றி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள ஆஸ்கர், தான் மனிதர்களைப் போலவே மிருகங்களையும் நேசிப்பதாகக் கூறியுள்ளார்.

10 டிசம்பர் 2017

கனடிய காவல்துறை அதிகாரி நல்லரட்ணம் அரசியலில்!

கனேடிய தமிழர்கள் மத்தியில் டோரன்றோ காவல்த்துறை அதிகாரியாக கடந்த 10 வருடங்களாக கடமையாற்றி வந்த - பல்லின மக்களாலும் நன்கு அறியப்பட்ட ரொஷான் நல்லரட்ணம் கனேடிய கன்சர்வேர்டிவ் கடைசியில் மார்கம் தோரன்கில் தொகுதியில் 2018 ல் வரவுள்ள தேர்தலில் களமிறங்கியுள்ளார். நேரடி நேர்காணல் ஒன்றில் தோன்றிய அவர் கூறும் கருத்துக்கள் மற்றும் சமுதாயம் நோக்கியத அவரது பார்வை - மிகவும் வித்தியாசமான ஒர் பார்வையாகவே மக்களை ஈர்த்துள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அவர் - கனேடியத்தமிழர்களது வாழ்க்கை முறைகளை - கடின உழைப்புகளை தானும் பாட்டுணர்ந்து கடந்து வந்ததாகவும் 13 விதமான தொழில் தளங்களில் அடிப்படை தொழிலாளியாக இருந்து சாதாரண மக்களது இன்ப துன்பங்களையும் அனுபவமாக பெற்றதையும் நினைவுகூர்கிறார். கனேடிய தமிழர்கள் மத்தியில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உற்று நோக்கப் படும் காணொளி நேர்காணலாக இக்காணொளி உள்ளது. இலங்கை - வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட ரொஷான் நல்லரட்ணம் தனது 2 வது வயதில் 1985 ல் புலம்பெயர்ந்து தமிழகத்தில் பெற்றோருடன் தனது ஆரம்பகால கல்வியை ஆரம்பித்தார். சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தனது உயர் கல்விகளை முடித்த அவர் - துடுப்பாட்ட விளையாட்டுகளில் தமிழக இளைஞர்களிடம் பிரபலமாக அறியப்பட்டவர் 2005 காலப்பகுதியில் கனடாவுக்கு பெற்றோருடன் புலம்பெயர்ந்தார் - கனடா டொராண்டோவில் சட்டம் ஒழுங்கு துறைகளில் ஆர்வம்கொண்டு தனது கல்விகளைத் தொடர்ந்த அவர் கடும் முயற்சிகளின் பயனாக நகர காவலத்துறை அதிகாரியாகி சுமார் 10 வருடங்கள் கடமையாற்றினார். கனேடிய அரசியல் கட்சிகளில் ஒன்றான கன்சர்வேர்டிவ் கட்சியின் உறுப்பினராக தொண்டனாக நீண்டகாலம் இருந்துவந்த அவர் எதிர்வரும் 2019 மார்க்கம் தொரன்கில் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கியுள்ளார் - ஏன் எதற்கு எப்படி என்ன நோக்கம் யார் பின்னணி என்கின்ற பல கேள்விகளுக்கு அவரளித்துள்ள பதில்களால் - கனேடிய தமிழர்கள் வியந்துபோயுள்ளனர் - அரசியல்வாதிகள் பலவிதம் அதிலும் ரொஷான் நல்லரட்ணம் ஒருவிதம். நீங்களே இந்த நேர்காணலை பாருங்க புரியும்.