பக்கங்கள்

04 ஜூன் 2022

புளியங்கூடல் செருத்தனைப்பதி மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்!

 

புளியங்கூடல் செருத்தனைப்பதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருளாட்சி புரிந்து வரும் ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 10.06.2022 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பதினெட்டு தினங்கள் விழா சிறப்புற நடைபெறும்.25.06.2022 சனிக்கிழமை இரதோற்சவமும் 26.06.2022 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 27.06.2022 திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழாவுடன் வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவுறும்.

குறிப்பு:மேலதிக விபரங்களை ஆலய நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்ட மேலே உள்ள பிரசுரத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.  

18 மே 2022

இனப்படுகொலை குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும்!

இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். ”இன அழிப்புப் போரின்போது, மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இசைப்பிரியா போன்றவர்கள் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்டனர். பாலச்சந்திரன் போன்ற சிறார்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருந்து தட்டுப்பாடு என்பன இன அழிப்புப் போரில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. எனவே, இனப்படுகொலைக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கில் இடப்பட வேண்டும். திட்டமிட்ட அடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும். தமிழர்களிடமிருந்து தலைவர்களைத் தேடுங்கள், மாறாக முகவர்களைத் தேட வேண்டாம். எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி தீர்வை முன்வைக்கவும்” என்றார்.

27 பிப்ரவரி 2022

சிறீலங்காவிற்கு கொத்துக் குண்டுகளை கொடுத்ததா உக்ரெய்ன்?

சிங்களம் வீசிய கொத்துக்குண்டு 
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி மக்களை கொன்று வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது உக்ரைன் நாடு இலங்கை ராணுவத்திற்கு இதே வகை கிளஸ்டர் குண்டுகளை கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் எதிர்த்து நின்று களமாடி வருகின்றனர்.உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதால் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்த நிலையில் சில ராணுவ வீரர்கள், தற்கொலைப் படையாக மாறி ரஷ்யப் படைகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் ரஷ்யப் படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்துகின்றன. போர் காரணமாக மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் கிளஸ்டர் பாம் எனப்படும் கொத்துக் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெனீவா உடன்பாட்டின்படி தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள்.​ வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகள்,​​ நாபாம் குண்டுகள் ஆகியவற்றை ரஷ்யா பயன்படுத்தி வருதாகவும் புகார் எழுந்துள்ளது.இதேபோல கிளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை ராணுவம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை கிளஸ்டர் கொத்துக் குண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைப் போரின்போது சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் இதனை இலங்கை அரசு மறுத்த நிலையில் , இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நாளிதழான தி கார்டியன் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.இந்த நிலையில் இலங்கை இறுதிகட்ட போரின் போது அமெரிக்க கூட்டணியில் இருந்த உக்ரைன் ராணுவம் இலங்கை அரசுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கியதாக முகநூல் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் இலங்கை அரசுக்கு உதவியதன் மூலம் இன அழிப்பில் பங்கெடுத்ததாக உக்ரைன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாகவே தற்போது உக்ரைன் மீதும் அதே கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுவதாக பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இறுதிக்கட்ட போரின்போது இலங்கைக்கு நேரடியாக ராணுவ உதவி மற்றும் ஆயுத உதவியை உக்ரைன் வழங்கியதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

26 பிப்ரவரி 2022

"இறந்தாலும் ஒன்றாக இறப்போம்"உக்ரெய்னில் துப்பாக்கி ஏந்திய திருமண ஜோடி!

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவே ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது. இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டிய இந்த ஜோடி திருமணமான அடுத்த சில மணிநேரத்தில் நாட்டை பாதுகாக்க கைகளில் துப்பாக்கி ஏந்திய சம்பவம் நடந்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டுமழை பொழிந்து வருகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உலக நாடுகளிடம் உக்ரைன் உதவி கேட்டு வருகிறது. இந்நிலையில் தான் உறவினர்கள் சூழ, அச்சதை தூவி, வாழ்த்து மழையில் நனைந்தபடி இல்லற வாழ்க்கையில் இணைய வேண்டிய ஜோடி ஒன்று உக்ரைனில் வெடித்து சிதறும் வெடிகுண்டு சத்தங்களுக்கு நடுவே திருமணம் செய்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:உக்ரைன் கீவ் நகரை சேர்ந்தவர் யார்னா அரிவா (வயது 21). கீவ் நகர கவுன்சில் துணை தலைவர். சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்விடோஸ்லவ் புரிசின்(24). இவர்கள் 2 பேருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் மே மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ரஷ்யாவின் வால்டை மலையில் பிறந்து ஓடும் டினைபர் ஆற்றங்கரையோரம் உள்ள சொகுசு ரெஸ்டாரண்ட்டில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.இதற்கிடையே தான் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. நேற்று முன்தினம் போர் துவங்கியது. அன்று முதல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் முன்னேறி செல்கின்றன.இந்நிலையில் தான் யார்னா அரிவா. ஸ்விடோஸ்லவ் புரிசின் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. போரின் 2ம் நாளான நேற்று வெடிகுண்டுகள் சத்தங்களுக்கு நடுவே கீவ் நகரில் உள்ள தூய மைக்கேல் தேவாலயத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில் இருவரின் குடும்பத்தினர், சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இதுபற்றி யார்னா அரிவா இவர் கூறுகையில், ‛‛உக்ரைனில் நிலவும் சூழல் பயங்கரமானதாக உள்ளது. இது கடினமான காலக்கட்டம். நாங்கள் இறந்தாலும் இறக்கலாம். இதனால் அதற்கு முன்பு இருவரும் சேர வேண்டும் என திருமணம் செய்து கொண்டுள்ளோம். நாங்கள் எங்கள் மக்களையும், நாட்டையும் பாதுகாக்க விரும்புகிறோம் '' என உருக்கமாக கூறினார்,இதையடுத்து இருவரும் கீவ் நகரில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு மையத்துக்கு சென்றனர். நாட்டுக்காக ரஷ்ய படையை எதிர்த்து போரிட உள்ளதாக பெயர்களை பதிவு செய்தனர். அதன்பிறகு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை துவக்கினர். இதன்மூலம் திருமணம் முடிந்த கையோடு கையில் துப்பாக்கி ஏந்தி ரஷ்யாவை எதிர்த்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்தோடு, பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.மேலும், ‛‛ரஷ்யா போர் நடவடிக்கையை கைவிடும்போது நாடு இயல்பு நிலைக்கு வரும். ரஷ்ய வீரர்கள் இல்லாத உக்ரைன் நாட்டில் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை துவங்குவர். இது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது அனைவரையும் அழைத்து எங்கள் திருமண விழாவை கொண்டாடுவோம்'' என துப்பாக்கி ஏந்திய கையோடு யார்னா அரிவா-ஸ்விடோஸ்லவ் புரிசின் ஜோடி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



30 ஜனவரி 2022

கிட்டுபூங்கா பிரகடனம்!

13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான கிட்டுபூங்கா பிரகடனம் 'தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்' என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத் தொடர் போராட்டம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது. சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங்கத்தால் இலங்கைக்கான நான்காவது அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அதை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாக இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ளது. அது இறுக்கமான ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே அமையும் என்பதையும், அரசாங்கம் உறுதிப்படக் கூறியுள்ளது. இந்த அரசியலமைப்பை ஒரு தலைப்பட்டசமாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதே போன்றதொரு சிங்கள பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தது. அச்சந்தர்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்ததன் விளைவாகவே, தமிழர்களுக்கு இனப்பிரச்சினையொன்று உண்டு என்னும் விடயத்தைத் தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, சிங்கள அரசு தமிழருடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, இங்கு பயங்கரவாத பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வந்து 13 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்கின்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையேயாகும். இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க - இந்திய பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது. 1987 இல் இலங்கையானது, இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி, சிங்கள தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக் கெதிராக தமிழ்த் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்க்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலையில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது. இந்நிலையில் அப்போதிருந்த தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. 2005 இன் பின்னர், இந்திய சீனா பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் உருவாகியிருந்த பின்னணியிலேயே ஒரு இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசோடு பேரம்பேசி வருகின்றது. இலங்கை, சீனாவின் விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்;) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும்; தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர். இதன்மூலம், 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ள சரத்துக்கள் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையையே உருவாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்சினை இதனூடாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் உலகுக்கு பறைசாற்றுவதற்கு தயாராகிறார்கள். இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள்வதன் ஊடாகவே தடுத்து நிறுத்த முடியும் என்னும் யாதார்த்தத்தை விளங்கிக் கொண்டு, இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றை பிரகடனப்படுத்துகிறது : • தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள். • வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் - அதன் இறைமையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகிக்கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக - ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக (13 ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இருக்குமானால் அவ்வகையான செயல், தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக்கும் வகையிலேயே அமையும் என்ற விடயத்தை இப்போராட்டம் பிரகடனப்படுத்துகிறது. • தமிழ் மக்கள் - காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியை கைவிட வேண்டுமென இப்போராட்டமூடாக வலியுறுத்துகிறோம். • இந்திய அரசானது இலங்கையோடு நல்லுறவை பலப்படுத்திக்கொள்வதையோ அல்லது தனது பூகோள -அரசியல் நலன்களைப் பேணுவதையோ அல்லது தென் ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதையோ ஈழத்தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது நட்புசக்தியாகவே கருதுகின்றோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பேணுவதில் எமக்கு மிகுந்த விருப்பமும் அக்கறையும் ஈடுபாடும் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாக கருதும் இந்தியா, தனது பூகோள நலன்களைப் பூர்த்திசெய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோருகின்றோம். • தமிழ்மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் - அதனுடைய தனித்துவமான இறைமையையும் - சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய 'சமஸ்டி' அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்போராட்டம் கோருகின்றது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) 
தமிழ்த் தேசியப் பேரவை 
30.01.2022