பக்கங்கள்

27 நவம்பர் 2014

'வடிவம் மாறலாம் ஆனால் போராட்டம் முடியவில்லை' : தமிழ்கவி

இலங்கையில் தமிழர் போராட்டம் முடிவுறவில்லை என்று கூறும் எழுத்தாளர் தமிழ்கவி, அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம் என்கிறார். விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாகவும், போராளியின் தாயாகவும், ஊடகவியலாளராகவும் இறுதி யுத்தம் வரை, யுத்த மண்ணிலேயே இருந்த தமிழ்கவி அவர்கள், தனது போராட்ட அனுபவங்கள் குறித்து நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒரு உண்மையான போராளி என்று கூறும் அவர், அந்த அமைப்பின் உள்ளே நடந்த காட்டிக்கொடுப்புகளே, உள்முரண்பாடுகளே போரின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இறந்துவிட்டதாகக் கூறும் அவர், பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுபவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். அதேவேளை, தற்போதைய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வே முதன்மையானது என்று கூறும் அவர், அடிபட்டுப் போயிருக்கும் ஒருவனால், தற்போதைக்கு தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார். அரசாங்க புனர்வாழ்வுத்திட்டம் முன்னாள் போராளிகளுக்கு போதிய உதவிகளை செய்யவில்லை என்று கூறும் அவர் ஊரில் எஞ்சியுள்ள போராளிகளின் குடும்ப நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறுகிறார். இராணுவ பிரசன்னம், நில ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்தும் அவர் விமர்சிக்கிறார். அவர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

உங்களின் கனவுகள் நிஜமாகும்;யாழில் அநாமதேய கடிதங்கள்!

உங்களின் கனவுகள் நிஜமாகும்; யாழில் அநாமதேய கடிதங்கள் பாடைசாலைகளில் மாவீரர் தினத்தினை கொண்டாடுமாறு கோரி இனந்தெரியாதோரால் அநாமதேய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளுக்கே இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் உயிரை விதையாக்கி உதிரத்தை உரமாக்கி கனவு தேசத்தைக் கருவாக்கி ஓய்ந்த கரும்புலிகளே, மாவீரர்களே உங்களின் கனவுகள் நிஜமாகும் தமிழரின் நாடு உருவாகும் என்று எழுதப்பட்டுள்ளது.

26 நவம்பர் 2014

தலைவர் பிறந்தநாளில் யாழ்,பல்கலைக்கழகம் சுற்றிவளைப்பு!

யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மாவீரர்களை நினைவு கூரும் முகமாக யாழ்.பல்கலைக்கழகத்தில் சுடர் ஏற்றப்படலாம் என்ற அச்சநிலை காரணமாக இன்று காலை முதல் அதிகளவான இராணுவத்தினர் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை வீதிச்சோதனை மற்றும் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இருக்கும் உயரமான கட்டிடங்களில் ஏறி நின்று பல்கலைக்கழகத்தைப் படையினர் கண்காணித்து வருகின்றனர். இதேவேளை இன்று மதியம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 60 வது பிறந்த தினம் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் பல்கலைக்கழகத்திற்குள் உள்நுழைந்த இராணுவ மற்றும் பயங்கரவாத புலனாய்வு துறையினர் சல்லடை போட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

25 நவம்பர் 2014

புலிகள் இயக்க உறுப்பினரை நீதிமன்றில் ஆயராகுமாறு உத்தரவு!

அனுராதப்புரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் வழி தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றபத்திரிகை கையளிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் மற்றுமொரு உறுப்பினரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அனுராதப்புரம் விஷேட மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏவுகணை பிரிவின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த முன்னாள் உறுப்பினருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சம்பவம் தொடர்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினரை டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவி;டப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுராதப்புரம் வான்படை முகாம் மீது தரை மற்றும் வான் வழி மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் 10 வானுர்திகள் முற்றாகவும், 6 வானுர்திகள் பகுதியளவிலும் சேதமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது. இந்த தாக்குதலின் போது, 14 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.

23 நவம்பர் 2014

ஜனாதிபதி வேட்பாளர் சுந்தரன் மகேந்திரன்!

புதிய இடதுசாரிகள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் சுந்தரன் மகேந்திரன் நிறுத்தப்படவுள்ளார். அந்த கட்சியின் தலைவர் விக்ரமபாஹு கருணாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டிருந்தால் அவருக்கு ஆதரவளிக்க தமது கட்சி தயாராக இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவே பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது கட்சி சார்பாக தனி வேட்பாளர் ஒருவரை நிறுத்த தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐக்கிய சோசலிச கட்சியும் தமக்கான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து அதன் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற முற்போக்கு சோசலிச கட்சியும் தனி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த விருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

22 நவம்பர் 2014

சகோதரியுடன் சேட்டைவிட்ட சிப்பாயை பஸ்ஸை விட்டு இறக்கிய சகோதரர்கள்!

மினிபஸ்ஸில் மதுபோதையில் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்ட சிப்பாய் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறக்கி விடப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிப் புறப்பட்ட மினி பஸ்ஸில் இராணுவ சிப்பாய் ஒருவரும் ஏறியுள்ளார். இவர் பஸ்சில் இருந்த பெண்ணுடன் அங்கசேஷ்டை புரிந்த நிலையில் குறிப்பிட்ட பெண் தனது சகோதரர்களுக்கு தொலைபேசியில் சம்பவத்தை கூறியுள்ளார்.பெண்ணின் சகோதரர்கள் மானிப்பாய் பூட்சிற்றிக்கு அண்மையாக குறிப்பிட்ட மினிபஸ்ஸை மறித்து அந்தச் சிப்பாயை பஸ்ஸில் இருந்து இறக்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் கூடிய பொதுமக்களால் சிப்பாய் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

21 நவம்பர் 2014

எசன் மாநகரில் மாவீரர் நினைவுத்தூபி திரை நீக்கம்!

தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காக களமாடித் தம்முயிரீந்த மாவீரர்களதும்,அவ் இலட்சியப் போராட்டத்தின் கவசங்களாகவிருந்து குருதி சிந்தி சாவடைந்த மக்களதும் நினைவாக யேர்மனியின் எசன் நகரில் நிலை பெறுகின்றது ஓர் நினைவுத் தூபி. தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமையப் பெற்றிருந்த மாவீரர் துயிலுமில்லங்களின் பிரதிபலிப்பாகவும் தோற்றம் பெற்றுள்ள இத் தூபி,ஐரோப்பா நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் மக்களினதும் வழிபாட்டுக்குரிய உணர்வுபூர்வமான வரலாற்று மையமாகத் துலங்கும். எதிர்வரும் 29.11.2014 (சனிக்கிழமை ) நண்பகல் 12.00 மணிக்கு திரைநீக்கம் செய்யப்படவுள்ள நிகழ்வில் தாயக உறவுகள் அனைவரையும் உணர்வு பூர்வமாக கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

19 நவம்பர் 2014

மண்டைதீவு,குருநகர் மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்!

போதைப் பொருள் கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இன்று இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மண்டைதீவு மற்றும் குருநகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரியிருக்கின்றனர். இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும் இலங்கை மீனவர்கள் பற்றி தகவல் தெரிவிக்காதிருப்பது தங்களுக்குக் கவலையளிக்கின்றது என்று தண்டனை பெற்றவர்களில் ஒருவராகிய மண்டை தீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மனைவி மரியபுளோரன்ஸ பிபிசி தமிழோசையிடம் கூறினார். "எனது கணவருடன் குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய மூவரையுமே ஐந்து இந்திய மீனவர்களுடன் வழக்கில் தண்டனை வழங்கியிருந்தார்கள். இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யும்போது எங்கள் கணவன்மாரையும் விடுதலை செய்யாதது ஏன்? அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்களும் தூக்கில் தொங்குவதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை", என்று மரிய புளோரன்ஸ் தெரிவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும் மூன்று வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. "இவர்களை விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்த்துத்தான் நாங்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்குப் போயிருந்தோம். ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இப்போது அவர்களுடன் தண்டனை வழங்கப்பட்ட இந்திய மீனவர்களை பொதுமன்னிப்பு என்று விடுதலை செய்துவிட்டார்கள். ஆனால் எங்கள் உறவுகளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எனக்கு ஒரு மகன் இருக்கின்றார். எனது கணவரை நம்பித்தான் நாங்கள் வாழ்கின்றோம். அவர்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது", என்றும் மரிய புளோரன்ஸ் கூறினார்.

நன்றி:பிபிசி தமிழ்

18 நவம்பர் 2014

நெடுந்தீவிற்கான போக்கு வரத்து மழையால் பாதிப்பு!

கடும் மழை, கடல் கொந்தளிப்புக் காரணமாக நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் நெடுந்தீவு பயணசேவையில் ஈடுபடும் குமுதினிப் படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையில் ஈடுபடவில்லை. தனியார் படகுகளே சேவையில் ஈடுபட்டன. இந்நிலையில் இன்று கடும் மழையும் கடற்கொந்தளிப்பும் காணப்படுவதால் தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குமுதினி படகு இயந்திரக் கோளாறால் பயணசேவையில் ஈடுபட முடியாத நிலையில் தனியார் படகுகளும் மேல்கூரை இல்லாமையால் மழை பெய்யும்போது பயணத்தில் ஈடுபட முடியாத நிலையே காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

17 நவம்பர் 2014

மன்னார் கொலையின் சூத்திரதாரி ஆதாரம் அம்பலம்!

இராணுவப்புலனாய்வு பிரிவின் வழிநடத்தலில் நடந்த மன்னார் மாவட்ட முன்னாள் போராளி நகுலேஸ்வரன் படுகொலைக்கு ஐந்து இலட்சம் விலை பேசப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் இப்பணத்தினை கிராம அலுவலரான ஜெபநேசனிடம் வழங்கியதாகவும் அதில் 35 ஆயிரத்தினை முற்பணமாக வழங்கி வவுனியாவில் வசித்து வரும் தமிழ் என்பவரை கொண்டு இக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. கொலையின் பின்னர் மீதிப்பணம் வழங்கப்படுமென கிராம அலுவலரால் உறுதி அளிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி படைத்தரப்பிடமிருந்தே பெறப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இதனை அமைச்சர் றிசாத் பெற்று வழங்கியிருந்ததாக ஆரம்ப கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டால் தனது நிலை தொடர்பில் அச்சங்கொண்டுள்ள அமைச்சர் றிசாத் அவரை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதுடன் ஏனையவர்களினை மட்டும் சிக்கவைக்க முற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

16 நவம்பர் 2014

விக்னேஸ்வரன் ஐயாவுக்கு தெரிந்தவை இவைதான்-சீமான்

விக்னேஸ்வரன் ஜயாவுக்கு கோவில் வாசலும் ,நீதிமன்ற வாசலும் தான் தொியும் வேறொன்றும் தொியாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைவா் சீமான் தொிவித்தாா். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே சீமான் மேற்கண்டவாறு தொிவித்தாா். அவா் அந்த நோ்காணலில் மேலும் தொிவித்ததாவது. ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்? ஈழப் போராட்டம் எத்தனை காலமாக இடம்பெற்று வருகின்றது என ஐயா விக்னேஸ்வரனுக்குத் தெரியுமா? விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு வந்திருந்த போது இந்திய மக்கள் செய்யும் நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்கு நெருக்கடி வந்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் கருத்து வேதனை அளிக்கின்றது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 60 வருடங்களாகப் போராட்டம் நடந்து வருகின்றது. இதில் எதிலாவது இவருக்குப் பங்கு உண்டா? உதாரணமாக சொல்லப் போனால் அரசியல் போராட்டமாக இருக்கட்டும் , ஆயுதப் போராட்டமாக இருக்கட்டும். அப்போது எங்கே போய் இருந்தார் . இறுதிக் கட்டப் போரில் கூட எந்தவிதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு இவா் செய்யவில்லை. ஒரு கடிதம் கூட வெளிநாடுகளுக்கு இவர் எழுதவில்லை. இவருக்கு எப்படித் தெரியும் போராட்டம் என்றால் என்ன என்று?ஐயாவிற்குத் தெரிந்தது கோவில் வாசலும், நீதிமன்ற வாசலும்தான் வேறு ஒன்றும் இவருக்குத் தெரியாது. இதில் உண்மை என்னவென்றால் இலங்கையில் தனது மண்ணுக்காகப் போராடிய போராளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுத்தது, ஐயா மட்டும் தான் அது போன்று அதிகப் பேரை சிறையில் தள்ளியதும் ஐயா தான் என அவா் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் மூன்று நிபந்தனைகள்!

ஜனாதிபதித் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் சரியான விசாரணைகளின்றி பல ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றி அங்கு மக்கள் குடியமர்த்தப்படுவர் என வாக்குறுதியளிக்க வேண்டும், மேலும் தமிழ் மக்களுக்கு நிரந்ரமான அரசியல் தீர்வு வழங்குவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.இந்த மூன்று கோரிக்கையையும் ஏற்றுக் கொள்பவரை கூட்டமைப்பு ஆதரிக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் இது சம்பந்தமாக எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

15 நவம்பர் 2014

கனடா விமான விபத்தில் இரண்டு தமிழர்கள் பலி!

கனடாவில் செஸ்னா விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் செஸ்னா 150 என்ற சிறு விமானத்தில் பயணம் செய்த லோகேஷ் லக்ஷ்மிகாந்தன் (25) மற்றும் ரவீந்திரன் அருளானந்தம்(31) என்ற இரு தமிழர்களுமே, விபத்தில் சிக்கி மரணமாகினர். இவர்கள் இருவரும் நோர்த் யோர்க் நகரில் வசித்து வரும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் விமான ஓட்டுநர் லோகேஷ் விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்து அடர்ந்த காட்டில் உள்ள மரத்தில் விமானத்தை மோதியுள்ளார். இதனை அடுத்து விமானம் விபத்துக்குள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஹெலிகொப்டரின் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தை ஓட்டிய லோகேஷிற்கு ஏற்கனவே 200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளதாகவும், விபத்துக்குள்ளான விமானத்தை 30 மணி நேரம் முன்கூட்டியே ஓட்டியுள்ளார் என்றும், தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு தாம் ஆபத்தில் இருப்பதாக விமானி உதவிக்கு அழைத்த போதும் விமானப்படையினரால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனது. மறுநாள் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டபோது லோகேஸ் , மற்றும் ரவீந்திரன் ஆகியோரை சடலமாகவே மீட்க முடிந்தது என தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த லாகேஸ் இந்தியாவையும், ரவீந்திரன் இலங்கையையும் சேர்ந்த தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

12 நவம்பர் 2014

சரவணையில் மரநடுகை நிகழ்வு!

வடமாகாண விவசாய அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மரநடுகை மாதத்தை முன்னிட்டு, ஊர்காவற்றுறை, சரவணைப் பகுதியில் மரநடுகை விழாவும், மாணவர்களுக்கான மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வும் நேற்று பி.ப 5 மணியளவில், நடைபெற்றது. திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கியதுடன் மர நடுகையிலும் ஈடுபட்டார். இந்நிகழ்வில் ஜெயபாலன், ஆசிரியர்கள் ஜஸ்ரின், டிஹால், மாணவர்கள் ஊர்ப் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.இந்தநிகழ்வினை நிறைவு செய்துவிட்டு மாகாணசபை உறுப்பினர் திரும்பிய பின் அப்பகுதிக்கு சென்ற வேலணைப் பிரதேச சபையின் தலைவரான ஈ.பி.டி.பியைச் சேர்ந்த சிவராசா (போல்), பிரதேச மக்களுடன், தம்மை நிகழ்வுக்கு அழைக்கவில்லை எனவும், கூட்டமைப்பினரை அழைத்து நிகழ்வு நடத்தியமை குறித்து மக்களுடன் முரண்பட்டுள்ளார். அத்துடன் அவர்களை அச்சுறுத்தியதுடன், மிரட்டும் பாணியில் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

11 நவம்பர் 2014

ராஜீவ் கொலை முயற்சிகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை!

ராஜீவை கொல் வதற்கு 3 முயற்சிகள் நடந்தன. 3 முயற்சிகளும் விடுதலைப் புலிகளுக்கு தொடர்புடையவை அல்ல:ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தனக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று முன்னாள் சிபிஐ அதிகாரியான ரகோத்தமன் தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர் பாக மூத்த பத்திரிகையாளர் ஃபராஸ் அகமது எழுதிய ‘அசாசினேஷன் ஆஃப் ராஜீவ் காந்தி - அன் இன்சைடு ஜாப்?’ என்ற ஆங்கில புத்தகம், கடந்த ஆகஸ்டில் டெல்லியில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன் பங்கேற்றார். அவர் பேசியதாவது: ராஜீவ் காந்தி கொலையை சிவராசன் நடத்தியிருந்தாலும், அவர் யார் என்று சித்தரித்த விதம் யூகத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. ராஜீவை கொல் வதற்கு 3 முயற்சிகள் நடந்தன. அந்த 3 முயற்சிகளும் விடுதலைப் புலிகளுக்கு தொடர்புடையவை அல்ல. ஆனால், பெரும்புதூரில் நடந்த சம்பவம் புலிகளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த சுப்ரமணியன் சுவாமி, கொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று முதல் நபராக கூறினார். அவரைத் தான் நான் முதலில் விசாரித்திருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின் றனர். ஒரு விசாரணை அதிகாரி யாக, களத்திலிருந்துதான் விசார ணையை ஆரம்பிக்க வேண்டும். தனிப்பட்ட நபரை விசாரிக்க முடியாது.ராஜீவ் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஆர்.கே.ராகவன், குண்டு வெடிப்பு நடந்து 12 மணி நேரத்துக்கு பிறகும், ‘இது சம்பந்தமாக தனக்கு எதுவும் தெரியவில்லை’ என்றார். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த கேமராவில் இருந்த முக்கிய சாட்சியங்களை காவல்துறையைச் சேர்ந்த புகைப்படக்காரர் எடுத்துச் சென்றார். அதை நாங்கள் போராடியே பெற்றோம். இதுபோன்ற நிறைய சிக்கல்கள் விசாரணையின்போது ஏற்பட்டன. ராஜீவ் கொலை வழக்கு பற்றி நான் புத்தகம் எழுதியிருந்தேன். இப்போது ஃபராஸ் அகமதும் எழுதியுள்ளார். இதில் நிறைய கேள்விகள் எழுப்பட்டுள்ளன. இவ்வாறு ரகோத்தமன் பேசினார்.நூலாசிரியர் ஃபராஸ் அகமது பேசும்போது, ‘‘சிவராசன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இந்தக் கொலைக் காக அவரை இயக்கியதில் பிரபா கரனுக்கு எந்த தொடர்பும் இருந் திருக்க வாய்ப்பில்லை. இந்தக் கொலை, இலங்கை அரசுக்கும் இந்தியாவில் உள்ள சில அரசியல் வாதிகளுக்கும் நன்மை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத் தப்பட்டுள்ளது. எனது புத்தகம் கேள்விகள் மற்றும் ஆதாரங் களுடன் விளக்கும்’’ என்றார்.நிகழ்ச்சியில் திருச்சி வேலுச் சாமி, திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், மூத்த பத்திரிகை யாளர் பகவான் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

09 நவம்பர் 2014

சுவிசில் தமிழ் தம்பதியினர் காருடன் தீ மூட்டி எரிந்து மரணம்!

News Serviceசுவிற்சர்லாந்தின் லுகார்னோ மாகாணத்திலுள்ள ஸ்ராபியோ எனும் இடத்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழரான கணவன் மனைவி இருவரும் காருடன் எரியூட்ப்பட்டு சாவடைந்துள்ளனர். கணவரான அமலதாஸ் (வயது 68) ஏற்கனவே திருமணமானவர் அவருக்கு முதல் மனைவியுடன் 5 பிள்ளைகளும் இருந்த நிலையில் முதல் மனைவி இறந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சாந்தி(வயது 49) என்பரை இரண்டாவதாக திருமணம் முடித்தார். சாந்தி 2009ஆம் ஆண்டே சுவிஸ் வந்திருந்தார். எனினும் இவர்களுக்கிடையேயான உறவு திருப்திகரமற்றிருந்தாகவும் அடிக்கடி இவர்களுக்கிடையே சண்டை ஏற்படுவதாகவும் அமலதாஸ் சாந்தியை மிகவும் துன்புறுத்தியதாகவும் தெரியவருகிறது. இதனை சாந்தியே தனது தொழிற்சாலை முகாமையாளரான மரிசா புறுநோறோவிடம் தெரிவித்ததாக புறுநோறோ சொல்கிறார்.இந்நிலையில் சாந்தி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் நீதிமன்றில் இருக்கும் வேளை சாந்தி பெண்களைத் தங்க வைக்கும் விடுதியொன்றில் அரசால் தங்கவைக்கப்பட்டிருந்தார். மேலும் சாந்தி லுகார்னோவிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தமிழ்ச் சிறுவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. சம்பவதினம் சாந்தி வேலைக்குச் செல்வதற்காக பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த போது. அமலதாஸ் அங்கு வந்து சாந்தியை கத்தியால் குத்தியுள்ளார்.சாந்தி அவ்விடத்திலேயே இறந்து விட அவரது உடலை தனது காரிலேற்றிக் கொண்டு ஸ்ராபியோ என்னும் இடத்தில் வைத்து காருடன் தன்னையும் சாந்தியின் உடலையும் சேர்த்து எரியூட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தை விசாரணை செய்து வரும் சுவிஸ் பொலிஸார் தெரிவிக்கையில் தடயவியல் சோதனையின்படி இருவரின் எலும்புகளும் பற்களும் மட்டுமே எஞ்சியுள்ளதகவும் சாந்தி இறந்தது அமலதாசுக்கு முன்னர் எனவும் தெரிவித்தனர். மேற்படி சம்பவத்தால் சுவிஸிலுள்ள தமிழர் மத்தியில் சோகமும் அதிருப்தியும் காணப்படுவதாகவும் இவ்வாறான சம்பவங்களால் புலம் பெயர் தேசங்களிலுள்ள இளையோருக்கு பெரியவர்கள் எவ்வாறு வழிகாட்டமுடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

07 நவம்பர் 2014

தனங்கிளப்பில் குண்டுகளை மீட்டு அழித்தனராம் படையினர்!

சாவகச்சேரி தனங்கிளப்பு கடற்கரைப் பகுதியில் வெடிக்காத நிலையில் கிடந்த வெடிபொருட்கள் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டன. தனங்கிளப்புப் பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் கடற்றொழிலுக்குச் சென்றவர்கள் கரையோரமாக பற்றைக்குள் குண்டுகள் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியிலிருந்து 81எம்.எம். மோட்டார் குண்டுகள் - 4, கைக்குண்டுகள் - 4 என்பவற்றை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் படையினருக்கு அறிவிக்க அங்கு வந்த குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அவற்றை மாலை 6.30 மணியளவில் வெடிக்க செய்து அழித்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

06 நவம்பர் 2014

சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப்பிரிவில்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.தீடிர் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிற்கு நாளை வெள்ளிக்கிழமை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த சில நாட்களாக கடுமையான உடல் அவதிகளை சந்தித்திருந்த நிலையில் அவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவராகவும் சிவாஜிலிங்கம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூங்கிக் கொண்டிருந்த மாணவியுடன் சிப்பாய் கட்டாய உறவுக்கு முயற்சி!

இராணுவத்தின் தலைமைத்துவப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவியொருவரிடம் படைச்சிப்பாய் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றிருந்த போதும் இதுவரை காலமும் இராணுவத்தினரால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் கண்டி கண்ணொருவை இராணுவ முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவியொருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் ஜன்னல் ஊடாக செலுத்தப்பட்ட கையொன்று அவரை தப்பான முறையில் ஸ்பரிசிக்க முயன்றுள்ளது.மாணவி திடுக்கிட்டு எழுந்து கூக்குரலிட்டபோது குறித்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் முகாமிலுள்ள இராணுவப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த ஜன்னல் அருகே சேற்றுக் கால் தடங்கள் இருப்பதை கவனித்த இராணுவப் பொலிசார் அதனை வைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது கோப்ரல் தர படைச்சிப்பாய் ஒருவர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.எனினும் இந்தச்சம்பவம் இதுவரை காலமும் இராணுவம் மற்றும் உயர்கல்வி அமைச்சினால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி குறித்த தகவல்கள் பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவை இராணுவ ஊடக மையத்தின் பணிப்பாளர் ஜயநாத் ஜயசேனவை தொடர்பு கொண்ட போது இது ஒரு சாதாரண விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த படைச்சிப்பாய் தண்டனையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

04 நவம்பர் 2014

இலங்கையின் பாதுகாப்பில் ஐ.நா.தலையிடக்கூடாது என எச்சரிக்கை!

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தலையிடக்கூடாது என்று பதிலளித்திருக்கிறது இலங்கை அரசு. மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் போட்டியிடக் கூடிய வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்த 18 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் அண்மையில் அரசிடம் கோரியது. இந்தக் கோரிக்கையை மறுத்துள்ள இலங்கை அரசு, இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விடயங்களில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தலையிடக்கூடாது என்று பதிலளித்துள்ளது. இந்த தகவலை கொழும்பு சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு கிடையாது என அரசின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் - 18 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உள்நாட்டில் இயங்கி வரும் அரசு சார்பற்ற நிறுவனமொன்று ஐ.நா.மனித உரிமை கவுன்ஸிலுக்கு சமர்ப்பித்துள்ளமை தமக்கு தெரியவந்துள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02 நவம்பர் 2014

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் வீரவணக்க நாள் இன்று!

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார். 1986ல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும். தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். 1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார். 1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார். 1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார். அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன். படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள் 1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும் 1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும் முதன்மையானதாக இருந்தது. மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல் காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல் ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார். 1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார். ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார். பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார். “ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார். தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார். அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர். மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

01 நவம்பர் 2014

யாழில் ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய மாணவன்!

யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது. மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். இதே வேளை யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.