பக்கங்கள்

26 பிப்ரவரி 2016

புலிகளின் கட்டமைப்பு இருந்த காலத்தில் கேவலமான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?


http://www.netrigun.com/wp-content/uploads/2016/02/pothu-amippu.jpgசர்வதேச நாடுகளாலும் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு இயங்கிய காலத்தில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் எங்கேயாவது நிகழ்ந்ததுண்டா? அவர்களால் மட்டும் இக்கட்டமைப்புக்களை சரியாக செயற்படுத்த எப்படி முடிந்தது என்பதை நீங்கள் ஆராய வேண்டும்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலே அண்மைக்காலமாக ஜனநாயக அத்துமீறல்களும் தான்தோன்றித்தனமான தன்னதிகாரச் செயற்பாடுகள் வரன்முறைக்குட்பட்ட நிர்ணய நிலையியலுக்கு அப்பால் எல்லை மீறி தொல்லை கொடுக்கும் துயரச் சம்பவங்கள் தூபமிடுகின்றன.இவை சட்ட நிர்வாகக் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை ஆட்டம் காண வைக்கிறது. மனித உரிமைகள் விவகாரம் சர்வதேச ரீதியாக தங்களை அச்சுறுத்துகின்ற நிலை காணப்படும் சூழலில் இவ்விதமான சம்பவங்கள் மேலும் தங்களை கேள்விக்குட்படுத்துகின்றது. ஜனநாயகத்தின் முதல் படியே சட்ட ஆட்சி அது இலங்கையில் சரியாக நடை முறைப்படுத்தப்படுகிறதா எனும் விவகாரத்திற்குட்பட்ட கேள்வி பல தசாப்தத்தை தாண்டி எம்மத்தியில் உண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கடந்த வருடத்தில் நடைபெற்ற புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வன்கொடுமை மரணம் நிகழ்ந்தது ஒரு வருடம் அண்மித்த நிலையில் உங்கள் சட்ட ஆட்சி அல்லது நல்ல ஆட்சி சாதித்தது என்ன? உங்கள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனும் வாக்குறுதி கானல் நீராகி கரையேறி விட்டதா? எனவே உங்கள் வாக்குறுதிகளை எதிர்காலத்தில் நாம் எப்படி நம்புவது? சிறுவர் துஸ்பிரயோகமும் பாலியல் வன் கொடுமைகளும் நாளொன்றுக்கு பல நூறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. வெளிவருபவை ஒரு சிலதே. இதை தடுக்க வேண்டிய சட்டம் இருட்டறையில் நித்திரை கொள்கிறதா? வித்தியாவின் வழக்கிற்கே இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாத உங்களின் சட்டக் கட்டமைப்பு சேயாவின் படுகொலையிலும் இதுவே தொடர்கிறது.ஹரிஸ்ணவியின் கொலையாளியை இதுவரை கண்டுபிடிக்க முடியாத அளவில் மிகப் பலவீனமான முறையிலா தங்களின் புலனாய்வுக் கட்டமைப்பு இயங்குகின்றது. இவையெல்லாம் தமிழ்மக்களுக்கு புதிதும் அல்ல, வேடிக்கையும் அல்ல. எத்தனை வழக்குகளையும் விசாரணைகளையும் ஆணைக்குழுக்களையும் சந்தித்து அலுத்துப்போனவர்கள்.எனவே அவசரமாக நடைமுறையில் உள்ள குற்றவியல் தடுப்புச்சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து இவ்விதமான சிறுவர் வன்கொடுமைக் கொலைகளிற்கு விரைவாக தண்டனை கிடைப்பதற்கு வழிவகுப்பதுடன் அத்தண்டனை வினோதமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு வலுவேற்ற வேண்டும். ஆகவே அவ்விதமான அதி பயங்கரமான தண்டணை வழங்காவிட்டால் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே போய்விடும்.எனவே உங்களாலும் சில சர்வதேச நாடுகளாலும் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய விடுதலைப்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு இயங்கிய காலத்தில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் எங்கேயாவது நிகழ்ந்ததுண்டா? அவர்களால் மட்டும் இக்கட்டமைப்புக்களை சரியாக செயற்படுத்த எப்படி முடிந்தது என்பதை நீங்கள்; ஆராய வேண்டும். ஆகவே வழமைபோல் பாராமுகமாகவும் கேளாச் செவியாகவும் எமது நியாய பூர்வமான வேண்டுகோளை உதாசீனம் செய்பவர்களாக இருக்காதீகள். ராஜபக்ச ஆட்சிக்கும் உங்கள் ஆட்சிக்கும் பெரிய இடைவெளி இருப்பதாக எமக்கு தெரியவில்லை.எனவே எமது வேண்டுகோளை ஏற்றுணர்ந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவீர்கள் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லையெனில் எதிர்காலத்திலும் இன்னும் பல பெண்களிற்கு இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு மேலும் வழிவகுக்கப் போகின்றீர்கள் எனும் வாதத்தையும் முன்வைக்க விரும்புகின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

22 பிப்ரவரி 2016

கலப்புத்திருமணம் செய்துகொண்டால் கலப்பு நீதிமன்றம் தேவைப்படாது!

யாழில் ரெஜினோல்ட் கூரே
தமிழ் இனத்தை முற்றாக துடைத்தழிக்கும் திட்டத்துடன்தான் செயற்படுகிறது இன்று நல்லாட்சி அரசு எனக்கூறிக்கொள்ளும் சிங்கள பேரினவாத அரசு.முன்னைய மகிந்த அரசு கூறிய கலப்புத்திருமணக் கதையையே இப்போதைய மைத்திரி அரசும் ரெஜினோல்ட் கூரே மூலம் யாழில் சொல்ல வைத்திருக்கிறது.தமிழர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைக்குள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு வடக்கு கிழக்கு தொடங்கி மலையகம் வரை தமிழ் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் கொடூரங்களே போதுமானது.மர்ம மரணங்கள் இன்னும் தொடர்கிறது.புலனாய்வாளர்கள் தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாக காணாமல் போனோரின் உறவுகள் தெரிவிக்கிறார்கள்.கலப்பு நீதிமன்றத்தை எதிர்க்கும் சிங்கள இனவாதிகள் கலப்புத் திருமணம் பற்றிப்பேசி தமிழர் கலை கலாச்சாரங்கள் பண்பாட்டு விழுமியங்கள் யாவற்றையும் அழித்து விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.தந்திரச் செயற்பாடுகள் மூலம் உலக நாடுகளை ஏமாற்றி தாம் விரும்பும் திட்டங்களை நிறைவேற்றவே சிறீலங்கா அரசு முனைப்புக்காட்டி நிற்கிறது.மகிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றி விட்டோம் என்பதும் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்பதும் இந்த பேரினவாதிகளிடமும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.இவர்களுக்கு துணை நிற்கும் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் புரிந்து கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

11 பிப்ரவரி 2016

சிங்கள சிப்பாய் நயினாதீவில் உபதேசம்!

நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.“30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில் இறக்கிறார்கள். நீங்கள் அங்க இருந்து வந்து புத்த சிலைக்கு முன்னால் போய் இருந்து போட்டோ பிடிச்சு பேஸ்புக் ல போடுறீங்கள். நீங்கள் பூ வைக்கும்போதும், விளக்கு கொழுத்தும் போதும் போட்டோ பிடிச்சு பேஸ்புக்ல போடுறீங்கள். உங்களுக்கு கிடைத்த பெரிய சுதந்திரம் இதுதான் என நினைக்கிறீர்கள். நீங்கள் கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் போய் பாருங்கள். அங்கு ஒவ்வொரு சட்டங்கள், ஒழுங்குகள் இருக்கு. அதனை முக்கியமாக தமிழ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.உங்களின் மனட்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள். 30 வருடமாக நாங்கள் சண்டை பிடித்தோம். எத்தனை பேர் விகாரைகளில் இந்த சட்ட திட்டங்களை கடைப்பிக்கிறீர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை. நல்வழிப்படுத்தவே இதனைச் சொல்கிறேன். யாரையும் குத்திக் காட்டவில்லை. இலங்கையில் பெரிய கோயில்களில் ஒன்று நல்லூர் கோயில். அங்கு இப்பவும் அதே சட்டங்கள் கடைப்பிக்கப்படுகின்றன. இப்போது கொழும்பு விகாரைக்கு போனால் வெள்ளைச் சீலையும் வெள்ளைத் துண்டும் வைத்துள்ளார்கள். அது போல இந்து கோயில்களில் செய்கிறார்களா? வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள்.இங்கு இரண்டு நாள் வந்துவிட்டு போவீர்கள். நாங்கள் இங்கு தொடர்ந்து இருக்கின்றோம். கலாச்சாரத்தை பேண வேண்டும். நாகதீபவில் 162 தமிழ் குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பார்ப்பார்கள். உங்களுடைய கலாச்சாரத்தை என்னவென்று புகட்டபோகிறீர்கள். பிரபாகரனின் வீட்டை உடைக்க இதுவே காரணம். நீங்கள் அங்கேயும் வந்து இதைத்தான் செய்யப் போகிறீர்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது. அவர்களின் மனங்களில் இருந்து அதனை எடுத்துப் போட வேண்டும். நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் தெற்கு சிங்களவர்களுக்கு வடக்கு தமிழர்களுக்கு என்று. இது ஒரு நாடு. எந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.மாவீர்ர்களின் தூபிகளை அழித்தோம். ஏனென்றால் நீங்கள் கொழும்பிலிருந்து 10 பேர் வருவீர்கள். நாங்கள் அதே இடத்தில் எங்களுடைய வீரர்களின் தூபிகளை உருவாக்கி இருந்தால் நீங்கள் வணக்கம் செலுத்துவிர்களா? இல்லை. ஆனால் பிரபாகரன் உருவாக்கிய மாவீரர் இல்லங்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்தித் தான் போவார்கள். அப்படித் தான் இருந்தது. அதனால் நான் நாங்கள் அழித்தோம். இந்தவேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே சொல்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் வந்து சந்தோசமாக இருந்து போறீங்கள். எதனை கற்றுக் கொண்டு போகிறீர்கள். நாங்கள் இங்கு இருந்து இவர்களுடன் பழகுகின்றோம். நான் பயமில்லாமல் சொல்வேன்.சிங்களவர்களால் தான் அழிவு கூடுதலாக உள்ளது. எந்த தமிழனோ, முஸ்லிமோ தன்னுடைய தாயையோ தங்கையையோ கற்பழிக்கவும் இல்லை. கழுத்தை வெட்டவும் இல்லை.செய்யிற எல்லாம் சிங்களவன் தான். நானும் ஒரு சிங்களவன் தான். பயம் இல்லாமல் சொல்லுவன். நீங்கள் இங்கு பிள்ளைகளைக் கூட்டி வருகிறீர்கள். இங்கு உள்ள கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். வேறுபட்ட கலாச்சாரத்தை சொல்லிக் கொடுங்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

07 பிப்ரவரி 2016

வந்தார் பார்த்தார் நடக்கப்போவது என்ன?

பான் கீ மூன்
ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சைத் அல் ஹுசைன் இலங்கை வந்திருக்கிறார்.அவர் பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து பேசி வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்திருக்கிறார்.இவரின் வருகை ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கிறது.வன்னி பெரு நிலப்பரப்பின் மீது அரச படைகள் கடும் கொடூரத்தாக்குதலை
சைத் அல் ஹுசைன்
நடத்திக்கொண்டிருந்த வேளையில் அங்கிருந்து ஐ.நா.வெளியேறியது.பின்னர் பான் கீ மூன் அவர்கள் இலங்கை வந்து உலங்கு வானூர்தியில் இருந்துகொண்டு சிதைந்து போன தமிழர் பகுதிகளை பார்வையிட்டதுடன் வவுனியா மருத்துவமனைக்கும் சென்று காயப்பட்டவர்களையும் பார்வையிட்டுச் சென்றார்.ஆனாலும் தமிழ் மக்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.ஐ.நா.மனித உரிமை ஆணையாளராக நவநீதம்பிள்ளை அவர்கள் இருந்தபோது பெரும் நம்பிக்கையோடு தமிழ் மக்கள் இருந்தார்கள்.அவருக்குப்பின் மனித உரிமை ஆணையாளராக பொறுப்பேற்ற சைத் அல் ஹுசைன் அவர்களும் நவநீதம்பிள்ளை அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்வார் என்ற நம்பிக்கை மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் இருந்தது.ஆனாலும் ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கியது.மனித குலத்திற்கு எதிரான பாரிய கொடூரங்களை புரிந்து கொலைத்தாண்டவம் ஆடிய சிறீலங்கா அரசே "உள்ளகப் பொறிமுறை மூலம் விசாரணைகளை மேற்கொள்ளலாம்"என்ற அந்த தீர்மானம் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை செயலிழக்க வைத்தது.இப்போ இலங்கை வந்திருக்கும் ஆணையாளர் அவர்களால் என்ன மாற்றம்தான் நிகழ்ந்து விடப்போகிறது?அவர் ஏதாவது அழுத்தத்தை சிறீலங்கா அரசு மீது பிரயோகிப்பாரா?நீதி நிலை நாட்டப்படுமா?என்பதையெல்லாம் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

04 பிப்ரவரி 2016

கண்ணீர் விட்டாராம் சம்பந்தர்!!!

தமிழர்களை நெடுங்காலமாகவே ஏமாற்றி அரசியல் செய்து பழக்கப்பட்டு விட்ட சம்பந்தனுக்கு தனது இராஜதந்திரத்தை எண்ணி ஆனந்தக்கண்ணீர் வந்து விட்டதோ?!!!
செய்தி கீழே:
இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இன்றைய சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர நாள் நிகழ்வில் பங்கெடுத்த அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டியே ஆங்கில ஊடகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில், சுதந்திர நாள் நிகழ்வு ஒன்றில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது இது இரண்டாவது முறையாகும். முதல் தடவை 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த போது, முதலாவது சுதந்திர நாள் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தது.இன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

02 பிப்ரவரி 2016

தனித்தேசக் கொள்கையினை கைவிடப்போவதில்லை-கஜேந்திரகுமார்

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச பங்களிப்போ,ஒத்துழைப்போ,தலையீடோ இருக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர்களும் தெரிவித்து வருவதானது, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனைத்தும், அமெரிக்க, இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தங்களின் பூகோள அரசியல் நிலைமையை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அன்றி, தமிழ் மக்களின் அடிப்படை நலன்களுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயங்களை பெற்றுக் கொடுப்பதற்காவும் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தை போலல்லாது, நடக்கும் எல்லா விடயங்களையும் மக்கள் விமர்சன கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியது அவசியம். தமிழர்களுக்கு தனித்தேசம் என்ற கொள்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் கைதுவிடாது. தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடுவதானது தமிழ் மக்களின் இருப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாகும். இதன்காரணமாக நாம் ஒருபோதும் தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.