பக்கங்கள்

27 அக்டோபர் 2015

கருணையே இல்லாத சிங்களப் படைகளுக்கு கருணைச்சபை!

கருணையே இல்லாத தமது படைகளுக்கு கருணைச்சபை அமைக்கிறதாம் சிறீலங்கா அரசு.சிறீலங்கா மட்டுமல்ல ஆசிய நாடுகளுடன் கூட்டிணைந்து வல்லாதிக்க நாடுகளும் தமிழர்களுக்கு அநீதியே இளைத்து வருகின்றன.சாதாரண கல்வியறிவே அற்ற ஒருவனுக்கே நீதி என்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும்போது இந்த உலக அரசுகளுக்கு மட்டும் ஏன் புரியாமல் இருக்கிறது.உள்ளக பொறிமுறை மூலம் தாமே விசாரணையை மேற்கொள்வோம் என்று கூறும் சிறீலங்கா அரசு படையினரை பாதுகாப்போம் என்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ,கோத்தபாய ராஜபக்ஷ போன்றோரை காப்பாற்றி விட்டோம் என்றும் பகிரங்கமாகவே தம்பட்டம் அடிக்கிறது.அப்படியானால் இந்த விசாரணைப் பொறிமுறை எதற்காக?இது வெறும் ஏமாற்று வேலை என்பது தமிழ் மக்களுக்கு புரிகிறது.ஆனால் தமிழர் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு சிறீலங்காவின் நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்ந்திருப்போருக்கு பதவி மட்டுமே தெரிகிறது.இவர்களுக்கு எல்லாம் வாக்களித்து நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்த்தியது தமிழர்களின் சாபக்கேடு.தமிழர்கள் அனுபவித்த கொடூரங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிற துன்பங்கள் கண்டு எவனுக்குமே கருணை வரவில்லை,ஆனால் மாபாதகர்கள் மீது மட்டும் கருணை வருகிறது.
எங்கே செல்லும் இந்தப்பாதை இதை யார்தான் யார்தான் அறிவாரோ?

-இது நீதி வேண்டும் ஒரு தமிழனின் ஆதங்கம்-

24 அக்டோபர் 2015

16 படுகொலைகளுடன் கோத்தாவுக்கு நேரடிப் பொறுப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கொழும்பு ஆங்கில செய்தி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி- பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளார். முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்துக்காகவே அவர் இரண்டு செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை கொழும்பு கோட்டையில் இருந்து கடத்திச்சென்று கொலை செய்தார். பின்னர் சட்டவிரோதமான மனைவியுடன் குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி, அவுஸ்திரேலியாவுக்கு தப்பிவிட்டார். பொலிஸ் அதிகாரியின் சட்டவிரோத மனைவியும் சர்வதேச ரீதியில் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கோத்தபய மற்றும் கருணாவின் பெருந்தொகை பண உடன்பாட்டுக்காக முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியன் மேற்கொண்ட கொலைகளை ஆங்கில இணையம் வரிசைப்படுத்தியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், நிலம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரன், வீரகேசரியின் மட்டக்களப்பு செய்தியாளர் நடேசன், மட்டக்களப்பு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம், திருகோணமலை நகரசபையின் முன்னாள் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ் ஜெகநாதன், அம்பாறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களான சந்திரமோகன் மற்றும் சண்முகலிங்கம் உள்ளிட்டோரின் கொலைகளுக்கே கருணா மற்றும் கோத்தபய ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகளுக்காக பெற்ற பணத்தை கொண்டே முன்னாள் பொலிஸ் அதிகாரி பாபியனும் அவருடைய சட்டவிரோத மனைவியும் முதலீட்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்று விட்டனர் என்று ஆங்கில இணையம் தெரிவித்துள்ளது.

18 அக்டோபர் 2015

தமிழீழ அரசியற்றுறை மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினி மரணம்!

தமிழீழ தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழினி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி சிவசுப்பிரமணியம்) சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி, தனது கவனிக்கத்தக்க பங்களிப்புக்களின் ஊடாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளரானார்.2009 இறுதிப்போரின் பின்னர் முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழினி 2013ஆம் ஆண்டில் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவரது உடல் நிலை மோசமாகியதையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் கிளிநொச்சி பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல இன்னல்களை தாங்கி பற்பல எண்ணங்களுடன் காவியமாகி விட்ட அந்த வரலாற்று நாயகிக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது வீரவணக்கத்தை செலுத்தி நிற்கின்றது.

12 அக்டோபர் 2015

தீவகத்தின் காந்தி டேவிட் ஐயா காலமானார்!

காந்தீயம் அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயாவின் மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அஞ்சலி செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "டேவிட் ஐயா என கழக தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்கள் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தியுள்ளார். இவரின் இழப்பால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் (புளொட் அமைப்பினர்) மிகுந்த துயரத்துடன் உள்ளனர். யாழ். கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகக் கொண்டிருந்த டேவிட் ஐயா நீண்ட காலமாக தமிழகத்தில் வசித்ததன் பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்பட்டநிலையில் தனது உறவினருடன் இல, 33 மகாத்மா வீதி, ஆனந்தபுரம், கிளிநொச்சியில் வசித்து வந்தார். இலங்கையில் அதிகூடிய தகுதிவாய்ந்த கட்டிடக் கலைஞராக அந்தக் காலத்தில் திகழ்ந்த சொலமன் அருளானந்தம் டேவிட் ஐயா அவர்கள் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரின் சிரேஸ்ட கட்டிடக் கலைஞராகவும், பின்னர் கென்யாவின் மொம்பாசா நகரின் பிரதம கட்டிடக் கலைஞராகவும் பணியாற்றியவர். 1979களின் ஆரம்ப காலத்தில் டாக்டர் ராஜசுந்தரம், சந்ததியார், சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) மற்றும் யோதீஸ்வரன் (கண்ணன்) ஆகியோருடன் இணைந்து வன்முறையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதை பிரதான நோக்கமாகக் கொண்டு காந்தீயம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் தலைவராக இருந்தார். பின்னர் இலங்கையின் இன ஒடுக்குதல்களுக்கும், இன ரீதியான வன்முறைகளுக்கும் எதிராக காந்தீய வழியில் தீவிரமாக செயற்பட்டார். 1983 ஏப்ரல் மாதத்தில் டேவிட் ஐயா மற்றும் காந்தீயத்தின் செயலாளராக இருந்த டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் உமாமகேஸ்வரன் மற்றும் சந்ததியார் ஆகியோருடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாகி வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 1983 ஜூலையில் இடம்பெற்ற வெலிக்கடைப் படுகொலையின்போது டாக்டர் ராஜசுந்தரம் உட்பட 52பேர் சிறையில் இருந்த சிங்களக் காடையர்களால் கொலைசெய்யப்பட்டபோது மயிரிழையில் உயிர் தப்பியவர்களுள் டேவிட் ஐயாவும் ஒருவர். அதன் பின்னர் 1983 செப்டம்பர் மாதம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த மட்டக்களப்பு சிறையுடைப்பில் தப்பி தமிழகம் சென்றார். இக்காலப் பகுதியில் புளொட் அமைப்பின் உத்தியோகபூர்வ ஆங்கிலப் பத்திரிகைகளான PLOT-Bulletin மற்றும் மாத சஞ்சிகையான SPARK ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்காற்றி பல முக்கிய அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவந்தார். அதேபோல் புளொட் அமைப்பின் தமிழீழத்தின் குரல் (Voice of Tamil Eelam - VOTE) வானொலி சேவையின் ஆங்கிலப் பிரிவிலும் தனது முழுமையான பங்களிப்பை வழங்கினார். 1983இன் இறுதிப் பகுதியில் அன்றைய மொறீசியஸ் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு புளொட்டின் செயலதிபர் உமாமகேஸ்வரன் சென்றிருந்தபோது அவருடன் டேவிட் ஐயா மற்றும் சித்தார்த்தனும் உடனிருந்து அந்நாட்டின் செங்கம்பள வரவேற்பைப் பெற்றிருந்தனர். பின்னர் 1986இல் வறிய மற்றும் அகதி மக்களுக்கு தனி மனிதராக தன்னாலான சேவைகளை தமிழ் நாட்டிலிருந்து ஆற்றிவந்தார். பின்னர், 2015 ஜூலை மாதம் இலங்கை திரும்பி கிளிநொச்சியில் தனது உறவினர்களுடன் தங்கியிருந்தபோது சுகயீனமுற்று 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.