பக்கங்கள்

31 மார்ச் 2014

யுவதி படையில் இணைய மறுத்ததால் சகோதரனை கைது செய்தது படை!

இலங்கை இராணுவத்தின் கட்டாய ஆட்சேர்ப்;பில் இணைந்து கொள்ள மறுத்த யுவதி ஒருவரின் சகோதரனை இராணுவம் வலுக்கட்டாயமாகப் பிடித்து சென்ற நிகழ்வொன்று இன்று முல்லைதீவின் முள்ளியவளை பகுதியில் நடந்துள்ளது.ஐந்திற்கும் அதிகமான வாகனங்களில் சென்ற இராணுவப்புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களே முள்ளியவளை தண்ணீரூற்று கணுக்கேணி பகுதியினைச் சேர்ந்த 28 வயதுடைய பாலச்சந்திரன் விஜயரூபன்- என்பவரை பிடித்து சென்றுள்ளனர். குடும்பஸ்தரான இவர் கைது செய்யப்பட்ட வேளை அங்கு நின்றிருந்த மற்றொரு உறவினனான 25 வயதுடைய சதன் என்பவரும் பிடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. வன்னி இறுதி யுத்தத்தினில் தாய் தந்தை உள்ளிட்ட குடும்பத்தை இழந்த பாலச்சந்திரன் விஜயரூபனுடன் உயிர் தப்பிய சகோதரி ஒருவரும் வாழ்ந்து வந்திருந்தார். இந்நிலையில் குறித்த யுவதியினை இலங்கை இராணுவத்தின் ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் இராணுவத்தினில் இணையுமாறு அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம் பொறுப்பதிகாரி நிர்ப்பந்தித்து வந்துள்ளார். எனினும் இதற்கு குறித்த யுவதி மறுப்பு தெரிவித்து வந்ததுடன் கைதாகியுள்ள சகோதரனும் படை அதிகாரியுடன் முரண்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவரும் உறவினரான மற்றொரு இளைஞனும் கைதாகியுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக எந்தவொரு ஆவணத்தினையும் சமர்ப்பித்திராத படையினர் அவர்களை தடுத்து வைத்துள்ள இடம்பற்றிய தகவல்களையும் வழங்க மறுத்துள்ளனர். குறித்த கைது தொடர்பாக முல்லைதீவிலுள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினில் முறையிடச்சென்ற வேளை அவர்கள் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.

ஐ.நா.பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் அறிவித்துள்ளனர். குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோரை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச பொறிமுறைமையை உருவாக்க வேண்டுமென கோரியுள்ளனர். இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருவதாக புலம்பெயர் தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை, வட அமெரிக்க தமிழ்;ச்சங்கம், இலங்கை தமிழ் சங்கம், நாடு கடந்த தமிழீழ இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் தமி;ழ் அரசியல் செயற்பாட்டு பேரவை, உலகத் தமிழ் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இதனைத் தெரிவித்துள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்காமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும், யுத்தம் காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளன. வடக்கில் இராணுவ பிரசன்னம், காணி அபகரிப்பு, சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பில் தீர்மானத்தில் உரிய முனைப்பு காட்டப்படவில்லை என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

30 மார்ச் 2014

குளத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

வவுனியா மாமடு குளத்தில் இன்று காலை மூவர் மூழ்கி பலியாகியுள்ளனர் என மாமடு பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று காலை வவுனியா பிரதேசத்தில் இருந்து நான்கு யுவதிகளும் இரு இளைஞர்களும் மாமடு குளத்தினை பார்ப்பதற்காக சென்றிருந்தனர். இவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்தும் சிறிய வள்ளத்தில் ஏறி நீரில் செல்ல முற்பட்டபோது வெள்ளம் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கியுள்ளனர்.எனினும் இவர்களில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் உயிர் தப்பி கரை சேர்ந்த நிலையில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் விநாயகபுரத்தை சேர்ந்த என். சங்கீதா 26 வயது, கற்குழியை சேர்ந்த ஜோசப் ஜென்சி 26 வயது, திருநாவற்குளத்தை சேர்ந்த எஸ். உசாந் 20 வயது ஆகியோரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை உயிர் தப்பிய யுவதியொருவர் கருத்து தெரிவிக்கையில்,இன்று காலை வவுனியாவில் இருந்து நானும் மேலும் மூவருமாக நால்வர் பயிற்சி வகுப்பொன்றை நிறைவு செய்துவிட்டு சின்னப்புதுக்குளத்தில் உள்ள நண்பியொருவரை பார்வையிடுவதற்காக வந்திருந்தோம். அவ் வேளையில் குளத்தினை பார்வையிடுவதற்கு விருப்பமாக இருந்தமையினால் சின்னப்புதுக்குளத்தில் உள்ள நண்பியும் அவருடைய தம்பியையும் அழைத்துக்கொண்டு மாமடு குளத்திற்கு சென்ற சமயம் அங்கிருந்த வள்ளத்தில் ஏறி புகைப்படம் எடுத்துவிட்டு சிறிது தூரம் வள்ளதில் நகர முற்பட்டவேளை அது கவிழ்ந்தது.இவ் வேளையில் ஒருவாறாக நாம் மூவர் கரையை சேர்ந்துவிட்ட போதிலும் மற்றையவர்கள் நீரில் மூழ்கி விட்டனர் என கூறினார்.

29 மார்ச் 2014

ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்து விட்டது சிறிலங்கா!

மகிந்த ராஜபக்ஸ 
சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்து விட்டதாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. 5 ஆண்டுகளுக்குப் பின்னரும், சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்துள்ளதுடன், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கவும் மறுத்து வருகிறது. பொறுப்புக்கூறலையும் தாமதப்படுத்தி வருகிறது“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

28 மார்ச் 2014

மருந்தின்மையால் காயப்பட்டவரை சாகவிட்டோம்!

“இறுதிப் போரில் இடுப்புக் கீழே துண்டாடப்பட்ட நிலையில் எம்மிடம் வந்திருந்த 60 வயது முதியவருக்கு நாம் சிகிச்சையளிக்காமல் அவரை சாவதற்கு விட்டுவிட்டோம். எமக்கு மருத்துவ வசதிகள் இல்லை. நாம் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்கவில்லை.” இலங்கையில் நடந்த இறுதிப் போரின் கொடூரங்கள் குறித்து விளக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் மருத்துவர் வரதராஜா. இறுதிப் போர் நடைபெற்ற போது அந்தப் பகுதியில் மக்களுக்கு தன்னாலான மருத்துவ சேவைகளை வழங்கியவர் மருத்துவர் வரதராஜா. தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள அவர் இறுதிப்போர் இடம் பெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சனல் – 4 தொலைக் காட்சி ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்போது அங்கு இடம்பெற்ற கொடூரங்கள் குறித்து விளக்கினார். “இலங்கை அரசு மிக மோசமான முறையில் மருத்துவ மனைகள் மீது செ­ல் தாக்குதல்களை நடத்தியது. மனிதாபிமான உதவிகளை எல்லாம் நிறுத்தியிருந்தது. வைத்திய சாலைகளுக்கு மருந்துப் பொருள்களை அனுப்புவதையும் அரசு நிராகரித்தது. உணவுப் பொருள்களைக் கூட அனுப்பவில்லை. குருதி, மருந்து, நோயய திர்ப்பு மருந்துகள் இல்லாமையால் போரில் காயமடைந்த பல உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது. காயமடைந்தவர்களுக்கு அவர்களுடைய இரத்தமே திரும்பச் செலுத்தப்பட்டது. போதுமான இரத்தம் கையிருப்பில் இருக்க வில்லை. தினமும் குழந்தைகள், பெரியவர்கள் என்று இறப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. எனக்கு ஞாபகம் இருக்கின்றது. 60 வயதான முதியவர் அவரது இடுப்புக் கீழே துண்டாடப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார். அவரைக்காப்பாற்றுவதற்கு எம்மால் எதுவும் செய்ய முடியாதிருந்தது. சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதுவும் இல்லை. அவர் சிறிது நேரம் அதிலிருந்து கத்திக் கொண்டிருந்தார். பின்னர் அப்படியே அவருடைய குரல் அடங்கி விட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். போர் முடிந்த பின்னர் நாங்கள் இராணுவ புலனாய்வாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். அப்போது அவர்களாலேயே செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, எவ்வாறு கேள்விகள் எழுப்பப்படும், நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு பயிற்சி வழங்கினார்கள். கொழும்பில் அரசு ஒழுங்கு செய்து எம்மைக் கொண்டு நடத்துவித்த செய்தியாளர் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு நாடகம்தான். போர்க் களத்திலிருந்து, மக்கள் கொல்லப்படுகின்றமை தொடர்பில் நான் ஊடகங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தமையால் என் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ­வும் கோபமாக இருப்பதாக இராணுவப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் செயற்பட்டாலே எனது விடுதலை சாத்தியம் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்று தெரிவித்துள்ளார் மருத்துவர் வரதராஜா.

உடையார்கட்டில் முன்னாள் போராளி ஒருவர் கைது!

முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் வைத்து 35 வயதான சின்னத்துரை ஸ்ரீகாந்தன் (என்ற இளைஞன் நேற்று வியாழக்கிழமைஇரவு 11 மணியளவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்றிரவு இரவு கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கைச் சேர்ந்தவர் இவர் உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வருகின்றார். உடையார்கட்டுப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிய விசேட தேவையுடைய ஒருவரும் ரி.ஐ.டி யினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ரி.ஐ.டி யினாரால் சந்தேகத்தின்பேரில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

27 மார்ச் 2014

சனல்-4 மீண்டும் ஒரு அதிர்ச்சிக் காணொளியை வெளியிட்டது!

இறுதி யுத்தத்தில் வன்னியில் என்ன நடந்தது என சனல்-4 மீண்டும் ஒருமுறை தனது காணொளியை வெளியிட்டது. குறிப்பாக இறுதி நாட்களில் பாதுகாப்பு வலையங்கள் மீதான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அதிபர் மகிந்த கூறும் கருத்துக்களும் இறுதி யுத்தம் காலத்தில் அங்கு கடமையாற்றிய வைத்தியரின் வாக்குமூலங்களும் இக்காணொளியில் காண்பிக்கப்படுகின்றது. இலங்கை அதிபர் மகிந்தவின் விளக்கங்களும் வைத்திய அதிகாரி முன்னர் இராணுவ ஊடக மையத்தில் தெரிவித்த கருத்துக்களின் உண்மை தன்மைகள் தொடர்பிலும் விளக்கமாக விபரிக்கப்படுகின்றது. இலங்கை அரசால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு முன்னரே திட்டமிட்டு புலனாய்வுத்துறையாலும் இராணுவத்தினாலும் ஒவ்வொருநாளும் அம்மாநாட்டில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு தாம் தெரிவிக்கவேண்டிய பதில்களும் ஓர் நாடகம் போலவே தாம் தயார்படுத்தப்பட்டதாக சனல்-4 இடம் தெரிவித்தார். தான் மட்டுமல்ல அங்கு கடமையாற்றி எல்லா வைத்தியர்களுக்கும் உண்மை தெரியும் என்றும் இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல் மற்றும் பொருளாதாரத்தடை காரணமாக பெருமளவான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்ததாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

26 மார்ச் 2014

புதிய ஆதாரங்கள் சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன!

இலங்கையில் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றே தேவைப்படுகின்றது என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை சாத்தியமானது என்றும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். புதிதாக வந்துகொண்டிருக்கின்ற ஆதாரங்களும் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் முன்னால் சாட்சியமளிப்பதற்கு சாட்சியாளர்கள் முன்வருகின்றமையும் தமது இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் நவி பிள்ளை ஜெனீவாவில் இன்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கை மீதான விவாதத்தின்போது தெரிவித்தார்.ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற தீர்மான முன்-வரைவு உறுதியாகிவிட்டதாக நம்பப்படுகின்ற நிலையில், அடுத்த கட்டமாக வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக, இலங்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.விவாதத்தை தொடங்கி வைத்த ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை, எல்எல்ஆர்சி-யின் பரிந்துரைகளில் சில முன்னேற்றங்களை காட்டியிருப்பதாக இலங்கை கூறுகின்ற போதிலும், முக்கியமான பல விவகாரங்களில் இன்னும் முன்னேற்றம் எட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இம்முறை ஜெனீவா அமர்வு நடந்துகொண்டிருக்கும்போது கூட இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் வேலைகள் நடந்துவருவதாக நவி பிள்ளை சுட்டிக்காட்டினார். 'இந்த சந்தர்ப்பத்தில் புதிய ஆதாரங்கள் வெளியாகிவருகின்றன. சாட்சியாளர்களும் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு முன்னால் வாக்குமூலம் அளிப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படுகிறது என்பதை மட்டுமல்ல, அது சாத்தியமானதும் கூட என்பதையே இவை காட்டுகின்றன' என்றார் நவி பிள்ளை. ஆனால், ஒரு நாட்டில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்ககைள், அந்த நாட்டின் சம்மதத்துடனேயே எடுக்கப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால், நல்லிணக்க நடவடிக்கைளில் நுண்ணிய சமநிலை பாதிக்கப்படும் என்றும் இலங்கைப் பிரதிநிதி ஐநாவில் வாதிட்டார். நவி பிள்ளையின் அறிக்கையும் அவரது நிலைப்பாடும் தவறான தகவல்களை ஆதாரங்களாகக் கொண்டிருப்பதாக பேசிய ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, இலங்கையில் வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.'குறிப்பாக கிளிநொச்சியில் நடந்த அண்மைய சம்பவங்களும், பயங்கரவாதிகள் மீண்டும் ஒன்று கூடுவதாக கிடைத்துள்ள ஆதாரங்களும் முன்னாள் போராளி ஒருவர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் எங்களின் கவலைகளை மேலும் உறுதிப்படுத்துகின்றன' என்றார் ரவிநாத ஆரியசிங்க. வெளிநாட்டிலிருந்து இயங்கும் விடுதலைப்புலிகளின் விரிவான வலையமைப்பு ஒன்றின் மூலம் இந்த நடவடிக்கைகள் நடந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் நவி பிள்ளையின் சர்வதேச கோரிக்கையை வரவேற்றுப் பேசின. அண்மைக் காலங்களாக மதச் சிறுபான்மை சமூகங்கள் மீது நடந்துவரும் தாக்குதல்கள் பற்றியும் வடக்கில் இராணுவத்தினர் பொதுமக்களின் சிவில் வாழ்க்கையில் தலையீடு செய்கின்றமை பற்றியும் அமெரிக்கா சுட்டிக்காட்டியது.முன்னாள் யுத்த வலயங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்துவருகின்றமை தொடர்பில் நவி பிள்ளை எழுப்பிய கவலைகளை தாமும் எதிரொலிப்பதாகவும் கூறிய அமெரிக்கப் பிரதிநிதி கூறினார். ஆனால்,பாகிஸ்தான், கியூபா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை சார்பில் குரல் கொடுத்தன. 'இலங்கை அதன் தேசிய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு சீனா ஆதரவளிக்கிறது' என்றார் சீனப் பிரதிநிதி. இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அறிக்கை நேரடியாக தலையிடுவதாகவும், மனித உரிமைகள் விவகாரம் சில நாடுகளால் தங்களின் பூகோள அரசியல் தேவைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் ரஷ்யா உள்ளிட்ட அணியினர் தெரிவித்தனர். ஐநா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை அமர்வில் இலங்கை விவகாரம் தொடங்கிய நாள் முதலே இந்தியா எந்தவிதமான நிலைப்பாட்டையும் இதுவரை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. இன்றைய விவாதத்திலும் இந்திய பிரதிநிதி எதுவும் கூறாமல் மெளனம் காத்தார். மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணான்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோரின் கைது பற்றியும் பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் ஜெனீவாவில் விமர்சித்திருந்தன.

சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்-ஐ.நா.நிபுணர்குழு

இலங்கை தொடர்பா ஐ.நா விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனினால் நிறுவப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2010ம் ஆண்டு தருஸ்மான் தலைமையில் இந்த விசேட நிபுணர் குழு நிறுவப்பட்டு விசாரணை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் குழுவே யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரியுள்ளது. சர்வதேச சுயாதீன விசாரணைகள் உண்மை நிலைமைகளை வெளிப்படுத்தும் எனவும், 2009ம் ஆண்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு போதியளவு ஆளணி பலமும், நிதி ஒதுக்கீடும் தேவை எனவும் இந்தக் குழு தெரிவித்துள்ளது. மர்சூகீ தருஸ்மான், யாஸ்மீன் சூகா மற்றும் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் கனேடிய ஊடகம் ஒன்றில் எழுதியுள்ள பத்தியில், விசாரணைகளை நடாத்த தீர்மானம் நிறைவேற்றுவது மட்டும் போதுமானதல்ல எனவும் அதற்கான நிதி உதவியையும், ஆளணி வளத்தையும் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படாவிட்டால், அது வேறும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடுமெனவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் மனித உரிமை நிலைமைகள் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

25 மார்ச் 2014

விபூசிகா பற்றிய கேள்விக்கு பதிலளிக்காது நழுவினார் பாலித!

கிளி.தருமபுரத்தில் கைது செய்யப்பட்ட 13 வயதான விபூசிகாவையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சந்தேகநபராகவே தமது குற்றப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அவரை விடுவிப்பதற்காக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, 13 வயதான விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயகுமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரைத் துரத்திச் சென்ற போது, அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை மற்றும் அவர்களுடைய வீட்டிலிருந்து, நிலத்தின் கீழ் இருப்பவற்றைக் கண்டறியும் கருவி மீட்கப்பட்டமை ஆகியன தொடர்பிலேயே ஜெயக்குமாரி மற்றும் மகள் விபூசிகா இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இவர்களைக் கைது செய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் வவுனியாவில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு விட்டு, மறுநாள் 14ம் திகதி இரவு கிளிநொச்சி நீதிமன்ற பதில் நீதிவானின் வீட்டில் முற்படுத்தினர். அதனையடுத்து தாயார் ஜெயகுமாரியை 18 நாள் பூஸாவில் தடுத்து வைத்து விசாரிக்கவும், விபூசிகாவை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னர் இரு நாள் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா மீளவும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். இதன் போது அவரை கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. விபூசிகா இன்னமும் விடுவிக்கப்படாமையால் அவருக்காக கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சிலர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. விபூசிகாவின் கைது தொடர்பில் தகவல் தெரியாது என ஐ.நாவில் நழுவிய பாலித கோஹன்ன ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி டாக்டர் பாலித கோஹன்ன கடந்த வாரம் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவின் கைது தொடர்பில் லங்காசிறியின் செய்தியாளரிடம் கருத்துக் கூறாமல் நழுவியுள்ளார். இலங்கையின் இன்றைய நிலமை ஐ.நாவின் திட்ட வரைவு தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை கூறியதுடன் விபூசிகாவின் கைது தொடர்பில் கருத்துக்களை கூறாமல் நழுவியுள்ளார் பாலித கோஹன்ன.

புலிக்கதை கட்டுக்கதை-வாசுதேவ

தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் மீண்டும் உயிர் பெறுவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பொய் சொல்கிறது என அமைச்சரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் சிறிலங்காவில் புலிகள் மீண்டும் உயிர் பெறுவதாக இராணுவத்தினரும் பொலிஸாரும் கூறி வருகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறான தவறான பிரசாரங்கள் ஜெனீவாவில் எமக்கு எதிராகவே திரும்பும். தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் மீண்டும் உயிர் பெறுவதாகக் கூறி தேடுதல் நடத்தப்படுகிறது. இதனால் அந்தப் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

24 மார்ச் 2014

வடக்கில் படைகளின் அச்சுறுத்தல் அதிகரிப்பு!

வன்னிப் பகுதியில் இதுவரை இடம்பெற்று வந்த தேடுதல் வேட்டைகள் மற்றும் பதிவுகள் யாவும் யாழ்,குடாநாட்டுக்கு விரிவடைந்துள்ளன.இதன் ஒரு பகுதியாக தென்மராட்சி கொடிகாமம் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் தொடர்பான தகவல்களை விசேட அதிரடிப் படையினர் திரட்டி வருவதாக கொடிகாம பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் வர்த்தக நிலையத்தின் உரிமையாரின் பெயர்,அடையாள அட்டை இலக்கம், வியாபார நிலையத்தில் வேலை செய்யும் பணியாட்களின் பெயர், அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த இரு மாதங்களுக்கு முன்னரும் சிவில் உடையில் தங்களை புலனாய்வு துறையினர் என அடையாளப்படுத்தி பதிவுகளை மேற்கொண்டு சென்றுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர் தொடர்ந்தும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கின் நிலைமை கவலையளிக்கிறது!

வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக முதலமைச்சர், வடக்கு கட்டளைத் தளபதி உதய பெரேராவிடம் கோரியுள்ளார். வடக்கில் மீளவும் கடுமையாக இராணுவம் குவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகளவில் இராணுவத்தினரை குவிப்பதனாது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை. வடக்கின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைப்புக்கைள மேற்கொண்டு வருவதாகவும், இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் இராணுவ முகாம்கள் காவல் நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

23 மார்ச் 2014

உண்மையை ஏற்று வரலாறு படைத்தது சிங்கள படை!

பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் இராணுவச் சிப்பாய்களை துன்புறுத்திய இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சில இராணுவ அதிகாரிகளை கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் சிப்பாய்களை இராணுவ அதிகாரிகள் துன்புறுத்துவதாக வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்தக் காட்சியில் தோன்றிய பெண் சிப்பாய்களில் ஒருவரும் தமிழ் பெண்கள் அல்ல என இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது ஓர் பாரிய குற்றச் செயல் எனவும் முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளோ அல்லது பெண் சிப்பாய்களோ இதுவரையில் முறைப்பாடு செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுர முகாம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

22 மார்ச் 2014

வட்டுக்கோட்டை படைகளால் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதி சிங்களப்படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுவருகின்றது. இதனால் அப்பகுதியில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியிலுள்ள வட்டுக்கோட்டை, சங்கரத்தை, மாவடி, மூளாய், பொன்னாலை போன்ற பிரதேசங்களிலேயே சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சோதனை நடவடிக்கைக்காக மக்கள் எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லையென்றும் அவ்வாறு வெளியே செல்பவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. கிளிநொச்சி,தருமபுரத்தில் ஜெயக்குமாரியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் நேற்றிரவு தொடக்கம் சுற்றிவளைத்து தேடுதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தை கேள்வியுற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டைப் பகுதிக்கு சென்று நிலைமையை அவதானித்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

20 மார்ச் 2014

உண்மையை மூடி மறைக்க எம்மைக் கையாண்டது அரசாங்கம்!

இறுதிக்கட்டப் போர் நடந்த பகுதிகளில் பணியாற்றிய, வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா நேற்று ஜெனிவாவில், போர்க்கால மீறல்கள் குறித்து, விளக்களித்துள்ளார். சனல்4 இயக்குனர், கெலும் மக்ரேயுடன் இணைந்து, அவர் நேற்றைய கூட்டத்தில் பல்வேறு மீறல்கள் குறித்தும், தமது அனுபவங்கள் குறித்தும் விபரித்தார். “என்னால் வாகரை முதல் மாத்தளன் வரை நடந்தவற்றை குறிப்பிட முடியும். சுயாதீன வைத்தியத்துறையான எம்மால், மக்கள் பணியை முழுமையாக செய்ய அரசதரப்பு தடைகளை ஏற்படத்தியதுடன் அது மக்கள் பாரிய பின்னடைவைச் சந்திக்க காரணமாயிருந்தது. வாகரை பிரதேசத்தை இராணுவம் ஆக்கிரமித்த போது பலத்த உயிரிழப்புக்களும் மனித உயிர்கள் வதையும் இடம் பெற்றதை யாவரும் நன்கறிவர்.இதற்கு இன்று பல சாட்சியங்கள் உண்டு. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வந்த எனக்கு கருணா குழு, பிள்ளையான் குழு, மற்றும் ஈபிடிபியின் அச்சுறுத்தலும் மிரட்டலும் இருந்தது. இதுனால் மீண்டும் என்னை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றது. அங்கும் முன்னர் பட்ட கஷ்டங்களுக்கு ஈடான அதீத கஷ்டங்கள். இறுதி யுத்தத்தில் மக்கள் பட்ட பாடுகள், இழப்புக்கள், அவலங்களை கூறுவதற்கு வரிகளில்லை இதை யார் அறிவார். நான் மட்டும் மக்களுக்கு வைத்தியம் செய்யபட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. முழுமையான வைத்திய உபகரணம் இல்லை மக்களை பராமரிக்க வைத்திய வசதிகள் இல்லை. இவ்வாறாக பாரிய அழிவுகளைச் சந்தித்து மீண்டு வந்த எம்மை அரசு மிரட்டி அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களை மூடி மறைக்க எம்மை கையாண்டது. எமது பய பீதி அதற்கு அனுமதித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

19 மார்ச் 2014

முல்லையில் தாயும் பிள்ளையும் கடத்தப்பட்டுள்ளனர்!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வசித்து வந்தவரான இளம் தாயான ராதிகா நிஷாந்தன் (19) என்பவர் தனது மூன்று வயது குழந்தையான நிரோசனுக்கு வைத்திய சிகிச்சை பெறுவதற்காக நேற்று 18.03.2014 அன்று காலை 8 மணியளவில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு சென்ற வேளையில் காணமல் போயுள்ளனர். மதியமாகியும் வீடு திரும்பாத ராதிகவின் கைபேசிக்கு அவரது உறவினர் அழைப்பு எடுத்தபோது மறுமுனையில் யாரும் பேசாமல் அமைதியாக இருந்ததனால் பதற்றமடைந்த உறவினர்கள் வைத்தியசாலை சென்று விசாரித்த போது, வைத்தியசாலை பதிவேட்டில் ராதிகா வந்ததற்கான எந்தவிதமான பதிவுகளும் இல்லை! இதனால் பயந்து போன உறவினர்கள் திரும்பத் திரும்ப அழைப்பெடுத்தபோது பதிலேதும் இல்லாமல் பிற்பகல் 3 மணியளவில் கைபேசி அணைத்து வைக்கப்பட்டு விட்டது. அவருக்கும் குழந்தைக்கும் என்ன நடந்ததிருக்கும் என உறவினர்கள் கவலையடைந்திருக்கும் நிலையில்.. அங்குள்ள சிலரது கருத்துக்களின் படி யாராவது கடத்தியிருக்கலாம் என்றே கருதுகிறார்கள். தாயும், குழந்தையும் வைத்தியசாலை சென்று காணமல் போய் இன்று வரையும் எதுவுமே தெரியாமல் இருப்பதானது அந்தப் பகுதியில் மிகவும் பதற்றத்தினை உருவாக்கியுள்ளது.

மீண்டும் வந்து விட்டார்கள் புலிகள் என்கிறது அரசு!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளது. கே.பி. செல்வநாயகம் எனப்படும் கோபி என்பவரின் தலைமையில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைந்து வருவதாக அரசாங்கப் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நோக்கில் வேலையில்லாத இளைஞர்களை அணி திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீள எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். கோபியை கைது செய்யும் முனைப்பில் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இந்த தேடுதல் வேட்டைகளின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

18 மார்ச் 2014

தமிழ் பெண் சிப்பாய் கொடுமைகளை விபரித்திருக்கிறார்!

சிங்கள இராணுவத்தில் சேர்ந்த பின் 10ற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவப் படை அதிகாரிகளாலும் சாதாரன கோப்றல் தர ராணுவத்தாலும் தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் 23 வயதான இளம் தமிழ் இராணுவப் பெண். தான் இராணுவத்தில் சேர்ந்த பின் தன்னையும் தன்னைப் போன்ற மற்றைய தமிழ்ப் பெண்களையும் முறை வைத்து இரவில் உயரதிகாரிகளின் பாலியல் தேவைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தாங்கள் அதற்கு உடன்படாத சந்தர்ப்பங்களில் தாங்கள் தாக்கப்பட்டதாகவும் தங்களில் சிலர் கருத்தரித்து பின்னர் அது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு கலைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் அங்கு சிங்களப் பெண் இராணுவச் சிப்பாய்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன்­ ஒரு பெண் தமிழ்ச் சிப்பாய் இராணுவத்தில் இருந்து விலகி ஓடிய போது அவர் பின்னர் பிடிக்கப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட,கிழக்கு ஆயர்கள் பாப்பரசருடன் பேசவுள்ளனர்!

வடக்கு கிழக்கு ஆயர்கள் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களை நேரடியாகச் சந்திக்கின்றனர். போப் பிரான்சிஸ் அவர்களின் நிகழ்ச்சி நிரலின்படியே இந்த சந்திப்பும் நடக்கின்றது.பாப்பரசரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ள வடக்கு கிழக்கு மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து நேரில் விளக்கமளிப்பர். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் இலங்கையில் உள்ள கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்களை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 9 ஆம் திகதிவரை கத்தோலிக்கர்களின் தலைமைப்பீடமான இத்தாலியின் வத்திக்கான் நகரில் நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளும் இலங்கை ஆயர்கள் குழுவில் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மட்டக்களப்பு ஆயர்ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கையின் ஒவ்வொரு ஆயர்களையும் தனித் தனியே சந்தித்து அவர்களின் மறைமாவட்ட நிலைமைகள் தொடர்பில் நேரில் அறியவுள்ளார். இதன் போது வடக்கு கிழக்கு ஆயர்கள், நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினை, தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், மனித உரிமை மீறல்கள், அடக்கு முறைகள் என்பன குறித்து பாப்பரசருக்குத் தெளிவுபடுத்தவுள்ளனர் என்று தெரியவருகிறது.

17 மார்ச் 2014

பூநகரியில் வீடு வீடாக படையினர் தேடுதல்!

கிளிநொச்சி பூநகரிப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் இராணுவத்தினர் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் இன்றைய தினம் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இதனால் மக்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பூநகரிப் பிரதேசக் கிராமங்களான வலைப்பாடு, செம்பன்குன்று, பொன்னாவெளி, கிராஞ்சி போன்ற கிராமங்கள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு உடல் சோதனைகள் அடையாள அட்டைப் பரிசோதனைகள், சோதனைகள் என்பவற்றை வீதிகளால் போவோர் வருவோரிடமும் வீடுகளில் இருப்போரிடத்திலும் நடத்திவருகின்றார்கள். இதனால் இங்குள்ள மக்கள் மற்றும் வீதிகளால் போக்குவரத்துச் செய்யும் மக்கள் எனப்பலரும் அச்சத்துடனேயே காணப்படுகின்றார்கள். தருமபுரம், முசலாம்பிட்டியில் வயோதிபத் தாயாரான பா.ஜெயக்குமாரி (வயது-51), மகளான 13 வயதுச் சிறுமி பா.விபூசிகா ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களில் இராணுவச் சுற்றிவளைப்புக்கள் சோதனைகள் மக்களை அச்சமூட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

16 மார்ச் 2014

இரசாயன ஆயுதங்களை சிறிலங்கா படைகள் பயன்படுத்தின- (புதிய ஆதாரம் Video)

இலங்கையில் தமிழின அழிப்பில் சிறிலங்கா அரச படைகள் தமிழர்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கு ஆதாரமாக மேலும் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய செய்தியை இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் நியூஸ் எக்ஸ் லைவ் எனப்படும் செய்தி சேவை தெரிவித்துள்ளது. செய்தியில் தமிழ் இன அழிப்பில் சிறிங்கா அரச படைகளால் உலக போர் வரலாற்றில் பயன்படுத்த கூடாது என்று தடை செய்யப்பட்ட இராசய ஆயுதங்களை பயன்படுத்தியதாக இராணுவ அதிகாரி ஒருவரே ஒப்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் ஒரு கிலோ மிட்டர் சுற்றளவுக்கு தாக்கி மனித உயிர்களை கொல்ல கூடியன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான ஆதரங்களுடனான காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இரசாயன ஆயுதங்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றியும் இந்த காணொளியில் விபரிக்கப்பட்டுள்ளது.

15 மார்ச் 2014

சட்டவிரோத கைதுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சட்டவிரோத கைதுகளை கண்டித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்ஸின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்.ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தியும், சட்டவிரோத கைதுகளை கண்டித்தும், காணாமல் போனோர் தொடர்பில் சிறீலங்கா அரசை பதிலளிக்குமாறு கோரியும், வவுனியா நகரப்பகுதியில் (HDFC வங்கிக்கு) முன்பாக இன்று காலை 11.30 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்ஸினதும் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச்செயலர் பாஸ்கரா, மனித உரிமை செயல்பாட்டாளர் பிரிட்டோ, Right to Life பெண்கள் மனித உரிமை அமைப்பினர், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள், வைத்தியகலாநிதி சி.சிவமோகன், ரவிகரன், தியாகராசா, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் செபமாலை அடிகளார்,வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி.தேவராசா, வவுனியா மாவட்ட காணாமல் போன உறவுகளை தேடும் சங்கத்தலைவி பாலேஸ்வரி, மீளக்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பின் தலைவர் மகேந்திரம், காணாமல் போன தம் உறவுகளை தேடும் குடும்பங்கள், தம் பிள்ளைகளின் விடுதலைக்காக ஏங்கும் குடும்பங்கள், அரசின் ஜனநாயக மறுப்பு சம்பவங்களால், ஏதேச்சதிகாரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், சமுக ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான தமது எதிர்ப்பை பலமாக வெளிப்படுத்தினர்.

14 மார்ச் 2014

விபூசிகா பயங்கரவாதப்பிரிவினரால் விடுதலை?

வடக்கில் இடம்பெற்ற மனித உரிமைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட தாய் ஜெயக்குமாரியும் அவரது புதல்வி விபூசிகாவும் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் இருப்பதாக வவுனியாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறிதொரு தகவல் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்த அழுத்தங்களால் விபூசிகா விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்ற போதிலும் அவர்களின் கையடக்கத் தொலைபேசி செயற்பாட்டில் இல்லததனால் அதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. நேற்றைய தினம் இலங்கைப் படைப் புலனாய்வாரள்களால் அரங்கேற்றப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிப் பிரயோக நாடகமும் அதனைத் தொடர்ந்து தப்பியோடியதாக காட்டப்படும் இளைஞரும் அவரைத் தேடுவதாக நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளும், இவற்றோடு நீண்ட காலமாக இலக்கு வைக்கப்பட்ட மகனைத் தேடும் ஜெயக்குமாரி மற்றும் அண்ணனைத் தேடும் விபூசிகா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவர்களை தூக்கியமையும் இப்போ பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைப்பு, விசாரணை, சுற்றிவளைப்பு எனத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தொடர்ந்து 400ற்கு மேற்பட்ட படையினரால் சுற்றி வளைக்கப்ட்டுள்ள தர்மபுரம் பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதி ராஜா மற்றும் சரவணபவன் உள்ளிட்ட குழு சென்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனிவா சவால்களை எதிர்கொள்வதற்காக அண்மையில் தேடப்படுவதாக கூறப்பட்ட அப்பாவி இளைஞரான டிப்பர் சாரதி கஜீபன் செல்வநாயகம், மற்றும் அவருடன் 20 புலிகள் தர்மபுரத்தில் தொழிற்படுவதாகவும் புலிகள் தம்மை மீள் அமைத்து வருவதாகவும் சர்வதேசத்திற்கு காட்டும் முயற்சியே தர்மபுரம் நாடகம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்களை ஒன்றிணைத்து போராட்டம்!

வவுனியாவில் கற்பித்த ஆசிரியர் கடத்தப்பட்டு தற்போது எழும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை கண்டித்து வட மாகாண ஆசிரியர்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டமொன்றினை நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.வவுனியா மாங்குளம் பாடசாலையில் கற்பித்த கார்த்திகேசு நிரூபனின் எழும்புக்கூடே முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்து 3 வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு அவருடைய எழும்புக்கூடு கிடைத்திருப்பதை, இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் ஆசிரியர் கடத்தப்பட்டு எழும்புக்கூடு கிடைக்கும் வரையிலான நிலைமை காணப்படுகின்றது என்றால் அது வட மாகாணத்தில் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. ஆசிரியர் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக 2013 நவம்பர் மாதம் நாம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்திருந்ததோடு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டையும் பதிவு செய்திருந்தோம். அத்துடன் பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் எமக்கு மனித உரிமை ஆணைக்குழு உட்பட யாரும் பதில் கூட அனுப்பவில்லை. இவ்வாறான நிலையிலேயே எழும்புக்கூடு கிடைத்துள்ளது. எனவே வட மாகாணத்தில் சகல ஆசிரியர்களும் ஒன்றினைந்து இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதற்கும் இச் செயலை கண்டித்தும் பாரிய செயற்பாடொன்றினை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

13 மார்ச் 2014

கிளிநொச்சியில் பொலிஸ்காரர் காயமடைந்துள்ளாராம்!

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி பகுதியில் ஒரு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. கிளிநொச்சியில், தர்மபுரம் பகுதியில் ஒரு வீட்டை இராணுவத்தினர் சுற்றி வளைத்து, அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை அங்கு தடுத்து வைத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்திருந்தனர். அந்தப் பெண்களை தாம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை அறிய முற்பட்டபோது, அவர்களுடன் அங்கிருந்த யாரோ, தன்னை அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை என்றும், அவர்கள் தம்மை பொலிஸார் என்று கூறியதாகவும், அங்கு ஒரு விசாரணை நடப்பதாக அவர்கள் கூறியதாகவும், சட்டத்தரணி கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிபிசிக்கு கூறியிருந்தார். இந்த விடயம் குறித்து பொலிஸ்தரப்பு பேச்சாளர் அஜித் ரோகண அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது ஒரு குற்றவியல் சம்பவம் என்று அவர் கூறினார். அந்த வீட்டுக்கு ஒரு கிரிமினல் குற்றவாளியை தேடி பொலிஸார் சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் அப்போது ஒரு பொலிஸ்காரருக்கு காலில் காயம் ஏற்பட்டு விட்டது என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். காயமடைந்த பொலிஸ்காரர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதை தன்னால் உடனடியாக கூற முடியாது என்றும் அதனையடுத்து அங்கு பொலிஸார் விசாரணை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தச் சம்பவத்தில் இராணுவத்துக்கு சம்பந்தம் கிடையாது என்றும் அது ஒரு கிரிமினல் சம்பவம் மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி:பி.பி.சி.தமிழோசை 

12 மார்ச் 2014

அமெரிக்க தீர்மானத்தில் மாற்றம் வருமா?-திருமுருகன்

அமெரிக்க தீர்மானத்தில் மாற்றம் வருமா என பல தோழர்கள் கேட்கிறார்கள். வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அடிப்படை கேள்வியே , எவ்வகையான மாற்றங்களை அது கொண்டு வரப் போகிறது என்பது தான். ஐ.நாவின் விதிமுறைப்படி (வந்திருக்கவேண்டிய) வரவேண்டிய விசாரனை என்பதை தமிழருக்கான நீதி கிடைக்கும் வழிமுறையாக மாற்ற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அமெரிக்கா-இந்தியா முன்மொழியும் தீர்மானத்தில் சர்வதேச சுதந்திர விசாரனை இலங்கை -விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணையாக வரும் பொழுது, இனப்படுகொலை என்கிற நிலைப்பாடு மறுக்கபடும். தமிழ் இனம் என்கிற ஒன்றினை மறுக்கும் அமெரிக்கா எவ்வாறு தேசிய இனவிடுதலைக்கு அடித்தளமிடும் இனப்படுகொலை விசாரணையை கேட்கும்? … அமெரிக்க இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையும், ஐ.நா நிபுணர் குழுவில் முன்வைக்கப்பட்ட , “மக்கள் கருத்துப்பங்கேற்பினையும்” தமது தீர்மானத்தில் “ஆபரேடிவ்-செயலாக்க” பகுதியில் கொண்டு வரும் பட்சத்தில் மட்டுமே அமெரிக்காவின் நேர்மையை மெட்ச முடியும். பிரச்சனை என்னவென்றால், இங்கே அமெரிக்காவினை ஆதரிக்கிற அல்லது மென்மையாக கட்டுரையில் மட்டும் விமர்சிக்கிற நண்பர்கள் , இது நாள் வரையில் “போர்க்குற்றம், இருதரப்பு விசாரனை” என்கிற நிலைப்பாட்டினையே எடுத்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது ஒரு சிலர் போனால் போகிறது என்று ‘இனப்படுகொலை விசாரணை கேட்போம், ஆனால் போர்க்குற்ற விசாரனை வந்தால் அதை மறுக்க மாட்டோம்’ என்றும் அறிவிக்கப்படாத ‘ஆப்சனல்’ முறையை வைத்திருக்கிறார்கள். (காமன்வெல்த் இலங்கையில் நடக்கக்கூடாது , அப்படி நடந்தால் இந்தியா பங்கேற்க கூடாது என்று வைத்திருந்ததைப் போல. எதிர்ப்பில் பல ”ஆப்சன்” பட்டன்கள் கொடுக்கப்படுகின்றன. எது வசதியோ/கிடைக்கிறதோ அதை அழுத்திக் கொள்ளலாம்.) அமெரிக்காவும்-இங்கிலாந்தும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கொண்டுவருவார்கள். அப்படி நியாயவான்கள் கொண்டு வரக் கூடிய கடினமான எதிர்ப்பு தீர்மானத்தினை இந்தியா நீர்த்துப் போகச் செய்துவிடாமல் தடுப்பது நமது வேலை என்று எங்களுக்கு இலவசமாக பல அட்வைஸ்கள் கிடைத்தன. தம்மால் தான், தமது லாபியால் தான் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது என்றும், இந்தியாவிற்கு தெரியாமல் அமெரிக்கா தீர்மானத்தினை தயார் செய்கிறது என்றெல்லாம் நம்புகிறார்கள்.. ஆனால், இருதரப்பினரையும் (இலங்கை-புலிகள்) விசாரிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் நிலைப்பாட்டினை எப்பொழுதும் கேள்வி எழுப்ப மாட்டோம், என்பது தான் நெருடலாக இருக்கிறது. இதுவரை அதைப் பற்றி மெளனம் காக்கவே செய்கிறார்கள். புலிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து முடக்கவேண்டுமென தமது அரசு(அமெரிக்க அரசு) எடுக்கும் நிலைப்பாடு சரி என நினைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

11 மார்ச் 2014

"எமக்கு சேறடிக்கிறார்கள்"என டக்ளஸ் கவலை!

ஈபிடிபியின் தீவக அமைப்பாளரான கமலேந்திரனிடம் இருந்தது அவரது தனிப்பட்ட துப்பாக்கி. அதற்கும் கட்சிக்கும் எந்தவித தொடர்புமில்லை. இப்போது துப்பாக்கிகளை பெற்றுக்கொள்வது சாதாரண விடயம். ஆவா குழுவிடம் கூட கைக்குண்டுகள் இருந்திருக்கின்றன. கொழும்பில் துமிந்த சில்வாவிற்கும் பிரேமச்சந்திராவிற்குமிடையே துப்பாக்கி சூடு நடந்த வேளை ஒருவருமே ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் ஆயுதங்கள் உள்ளதாகவோ ஆயுத கலாச்சாரம் இருப்பதாகவோ பேசவில்லை. ஆனால் ஈபிடிபியின் ஒரு சிலநபர்களிடம் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதும் எமது கட்சிக்கு சேறடிக்கிறார்கள் என் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். இதனிடையே வடமாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவினால் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் அதில் கமலேந்திரனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக தேர்தல் திணைக்களத்துடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படுமென அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். இதனிடையே கமலேந்திரனால் படுகொலையான நெடுந்தீவு பிரதேச சபை தலைவரது சகோதரியும் முக்கிய சாட்சியுமான பெண்ணொருவரிற்கு ஈபிடிபியினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தமது கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்ட ஒருவரிற்காக கொலை மிரட்டல் விடுக்க வேண்டிய தேவையில்லையென தெரிவித்ததுடன் தமது கட்சி பெயரினில் எவராவது இவ்வாறாக செயற்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகளினை எடுக்க பொலிஸாருக்கு பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

10 மார்ச் 2014

புதிய இனவழிப்பு ஆதாரம்!(எச்சரிக்கை:காணொளி கொடூரமானது)

போர்க்குற்றங்கள் தொடர்பில் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக 'சனல்4' செய்தி நிறுவனம் நேற்று அறிவித்தது. அது தொடர்பான காணொலி நாடாவையும் வெளியிட்டிருக்கிறது. இறந்த பெண் போராளிகளின் சடலங்கள் மீது திரும்பத் திரும்ப பாலியல் ரீதியான கொடூரங்களை சிப்பாய்கள் புரிவது போன்ற காட்சிகளை அந்தக் காணொலி வெளிப்படுத்துகிறது. இது குறித்து 'சனல் 4' இன் சார்பில் கெலும் மக்ரே தெரிவித்துள்ளமை வருமாறு-இலங்கையின் உள்நாட்டுப் போரின் துயரமான இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான இந்தப் படங்களில் எந்த தவறுகளும் இல்லை. அந்த காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன் அவை மோசமான காட்சிகள். போரில் மரணங்கள் நிகழ்வது சிறிய சம்பவமாக இருக்கலாம். ஆனால் போரின் இறுதி சில மாதங்களில் அரசாங்கத்தின் ஷெல் தாக்குதல்களினால் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டமை ஒரு சிறிய விடயமல்ல. அந்த காட்சிகளில் இறந்த பெண் போராளிகளின் சடலங்கள் மீது திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை சிப்பாய்கள் செய்துள்ளனர்.இந்தக் காணொலி எப்போது எடுக்கப்பட்டது என்பது சரியாக எமக்கு தெரியாது. போரின் இறுதியான இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவை படமாக்கப்பட்டிருக்கலாம்.ஒரு சிப்பாய் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். அதில் மற்றுமொரு சிப்பாய் சிங்களத்தில் பேசுகிறார்.அந்த காணொலியில் இருக்கும் சிப்பாய் அதிரடிப் படையினராக இருக்கலாம். அவர்கள் இறந்த புலிகளின் பெண் போராளிகளின் உடலில் பாலியல் வன்கொடுமைகளை செய்து சிரித்து ஆரவாரம் செய்கின்றனர்.அந்தப் பெண்கள் யார் என்பதும் உண்மையில் என்ன நடந்தது என்பதும் எமக்கு தெரியாது. அவர்கள் சீருடைகளையும் அணிந்திருக்கவில்லை. ஆனால் போராளிகள் என்று தோன்றுகிறது. இந்த படங்களை முன்னணி தடய அறிவியல் நிபுணரான கலாநிதி ரிச்சர்ட் ஷெப்பர்ட் ஆய்வு செய்ததுடன் படங்களில் உள்ள காயங்கள் உண்மையானவை எனவும் காணொலிகள் போலியானவை அல்ல என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.சடலங்களில் காணப்படும் சில காயங்கள் போர்க் களத்தில் ஏற்பட்டவையாக நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அந்த காயங்கள் அப்படியானவையாக இருக்கவில்லை என அவர் ஆச்சரியம் தெரிவித்தார். இந்த காயங்கள், இவை ஒட்டுமொத்தப் படுகொலைகள்தான் என்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்துகின்றன என்றும் துப்பாக்கிகளினால் சுடப்பட்டதால் இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.பிரித்தானியா தமிழர் அமைப்பு எமக்கு வழங்கிய டிஜிட்டல் காணொலிகளை பிரித்தானிய நீதிமன்றத்தில் பணிப்புரியும் சுயாதீமான மரியாதைக்குரிய ஒருவர் ஆராய்ந்தார் அவரும் அது உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினார். இந்த காணொலிகள் தொடர்பில் பதிலளித்த இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தினரை போன்ற சீருடையணிந்து பெரும்பான்மை சிங்கள இராணுவத்தினரை போல் சிங்களத்தில் பேசியுள்ளனர் எனக் கூறியது. சிறுவர்களை படையில் இணைத்து, பொதுமக்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி, விடுதலைப் புலிகளும் பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசாங்கம் தனது சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த அதனை பயன்படுத்த முடியாது. விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் போரின் போது பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான காணொலிகளை நாங்கள் வெளியிட்டோம். ஆனால் அவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது எனவும் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.

09 மார்ச் 2014

சர்வதேச விசாரணையே கோருவோம்-பிரித்தானியா

இலங்கை மீது சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது.இலங்கை மீது சர்வதேச விசாரணையை ஜெனீவா பிரேரணை கோரவில்லை என்று தமிழ் தரப்புக்கள் குற்றம் சுமத்துகின்ற நிலையில் பிரித்தானியா தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது பிரித்தானிய அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் இலங்கையின் செய்;திதாள் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமது அரசாங்கம் இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோரும் என்று வலியுறுத்தியுள்ளார் போர்க்குற்றம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை கோரப்படவுள்ளதாக ஹியுகோ குறிப்பிட்டுள்ளார. இந்தநிலையில் இலங்கை மீதான விசாரணைக்காக பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

சிங்களத்தின் ஆதிக்கத்தில் யாழில் அரங்கேறும் வெறிநாய்களின் அராஜகங்கள்!

வடமராட்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்திருக்க குடும்பஸ்தர் ஒருவர், வீதியில் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவமும், கோயிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை கடத்திச்சென்ற மூவர் குழு கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் வடமராட்சி – மந்திகை சிலையடிக்கு அண்மையான பகுதியில் இருவர் குடும்பஸ்தர் ஒருவரை மீன் வெட்டும் கத்திகளுடன் விரட்டிச் சென்றனர். அவர் தன்னைக் காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பியபடி ஓடினார். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் இது குறித்து பருத்தித்துறைப் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.எனினும் நீண்ட நேரமாகியும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை. பொதுமக்கள் எவரும் அவரைக் காப்பாற்ற முன்வராத போதிலும், மேலும் அதிகளவிலான மக்கள் அந்த இடத்தில் கூடவே குடும்பஸ்தரை விரட்டிச் சென்றவர்கள் துரத்துவதை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து சிறு வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நபர் குறித்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றார். தாமதமாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், பொதுமக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுவிட்டு திரும்பிச் சென்றனர். அதேவேளை, கோயிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை கடத்திச் சென்ற மூவர் கொண்ட குழு கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது. இதை தடுக்க முயன்ற அவரின் காதலரையும் அவர்கள் கடுமையாகத் தாக்கினர். அதில் காயமடைந்த அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை வடமராட்சி - முள்ளிவெளியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவதாவது: வரணி இடைக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண் வல்லிபுரக் கோயிலுக்கு சென்றுள்ளார். இதன் பின்னர் தனது காதலரை சந்தித்து ஆள்நடமாட்டம் குறைந்த வீதியில் ஓரமாக நின்று இருவரும் கதைத்தவாறு நின்றனர். அந்த நேரம் ஓட்டோவில் வந்த மூன்று பேர் கொண்ட குழுவினர் அவர்களை தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகவா இங்கு நிற்கிறீர்கள் எனக் கேட்டு பெண்ணின் காதலனைத் தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் செல்ல முற்பட்டனர்.இதை பெண்ணின் காதலன் தடுக்க முற்பட்டபோது அவரை மோசமாகத் தாக்கிவிட்டு யுவதியை ஓட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்று பற்றை வளவு ஒன்றில் வைத்து கூட்டாக வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். காதலியைத் தேடிச் சென்ற காதலன் வளவின் வேலியோரமாக மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்ததுடன் நெல்லியடிப் பொலிஸிலும் முறைப்பாடு செய்தார். அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஓட்டோவின் இலக்கத்தையும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் சம்பந்தப்பட்ட ஓட்டோவைக் கைப்பற்றினர். இதையடுத்து சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பொலிஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி பல குற்றச்செயல்களுடன்தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

08 மார்ச் 2014

மகளிர் தினத்தை முன்னிட்டு அனந்தி எழிலன் விடுத்துள்ள அறிக்கை!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினையிட்டு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று அனுட்டிக்கப்படுகிறது. உலகம் அறிவியல் ரீதியில் உச்சங்களை தொட்டு வரும் நிலையில், பரந்த அளவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளும் , கீழ்த்தரமான அவமதிப்பு செயற்பாடுகளும் தீவிரமாகி வருவதை ஊடகங்கள் ஊடாக அறியும் போது நாம் உண்மையில் பகுத்தறிவுச் சிந்தனையை தொலைத்து வழுகின்றோமா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியாதுள்ளது. உலக இயக்கத்தின் அனைத்து வடிவங்களிலும் பெண்களின் ஆற்றலும், பங்கும், ஆண்களுக்கு நிகராக வளர்ச்சி கண்டு வரும் அதே சூழலில் அவர்களை ஒரு சமநிலைத் திறன் கொண்ட பிறவிகளாக அங்கீரித்து மதிப்பளிக்க மறுப்போரை மனித இனத்தவராக கணிக்க இயலாமல் இருப்பது வேதனை தரும் விடயமே. குறிப்பாக இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரான காலங்கள் பெண்கள் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்கள் என்று பீற்றிக்கொண்டாலும்கூட பெண்களுக்கான மனிதஉரிமை சமநிலை என்பது அதன் அர்த்த பூர்வ அந்தஸ்தை ஒரு போதும் எட்டியது இல்லை. குறிப்பாக சமாதானத்திற்கான யுத்தம், மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயர்கள் இலங்கை அரசு மேற்கொண்ட ஆயுதமுனையிலான நடவடிக்கைகளின் போது தமிழ் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லும் தரமன்று. இது உலகறிந்த விடயமேயாகும். இன்று இந்த நாட்டில் பெண்களுக்கான அங்கீகாரம், பாதுகாப்பு, மற்றும் சுதந்திர செயற்பாடு என்பதெல்லாம் மகளிர் தினநாளின் வெறும் கோஷங்களாகவே உள்ளமை வேதனையளிக்கின்றது. எனவே, எமது பெண்களின் மானுட விடுதலை என்பதை நோக்கிய போராட்டமானது ஒரு வலிமையான சக்தியாக உருபெWம் போதே மகளிர் தினத்தை கொண்டாடுவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

07 மார்ச் 2014

கருணாநிதியின் கொடும்பாவியை எரித்த சிறுத்தைகள்!

லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் உருவபொம்மைகளை எரித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசிக்க அவசர கூட்டத்தை நாளை திருமாவளவன் சென்னையில் கூட்டியுள்ளார்.லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். ஆனால் விழுப்புரம் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி தோல்வி அடைந்தது.இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிய நிலையில், விடுதலை சிறுத்தை மட்டுமே நிலைத்திருந்தது. ஆனால், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் புதிதாக இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.ஆனால், பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்ததில் திருமாவளவன் நேற்று கையெழுத்திட்டார்.விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதை கண்டித்து அண்ணா அறிவாவலயம் முன்பே நேற்றிரவு விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை திருமாவளவன் சமாதானப்படுத்தினார்.இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பல தேர்தல்களை சந்தித்து உள்ளோம். இந்த உறவின் அடிப்படையில் உரிமையோடு, 5 தொகுதிகளை கேட்டோம். தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதையடுத்து, வருத்தம் இருந்தாலும் இந்தியாவை காப்பாற்றவும், சமூக நீதி மற்றும் மதசார்பின்மையை காக்கவும் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்.ஆனால் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலூர், விழுப்புரத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உருவபொம்மைகளை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.மேலும் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.பரபரப்பான இந்த சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் சென்னை அசோக்நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. அப்போது, தி.மு.க கூட்டணியில் தொடருவதா? வெளியேறுவதா? என்பது குறித்து முடிவு செய்ய இருக்கிறார்கள்.

06 மார்ச் 2014

புதிய இனப்படுகொலை ஆதாரம்!

விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களான ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரும் கேணல் ரமேஸ் ஆகியோர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த வேளையில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான மேலும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவுஸ்திரேலியாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கடந்த மாதம் விடுத்திருந்த இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக் கொடிகளுடன் வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட தினத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் இதற்கான ஆதாரங்களை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவராவார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சரணடைய விருப்பதாக செய்மதி தொலைபேசியின் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் அதனை உறுதி செய்வதற்காக குறித்த பாதுகாப்பு அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன் போது அவர் கைது செய்யப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்துள்ளனர். இதன் போது அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு மற்றுமொரு சாட்சியாக அதே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவரும் ஆதாரங்களை வழங்கி இருக்கிறார். புலித்தேவன் ரமேஸ் மற்றும் ப.நடேசன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர் துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் அவர்களின் சடலங்களை குறித்த ஆசிரியர் நேரில் கண்டதாக தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் தம்மை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது தாம் இந்த காட்சிகளை கண்ணுற்றதாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார் என அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனம் வெளியிட்டுள்ள இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05 மார்ச் 2014

வீட்டுக்கு ஒரு தமிழ் பெண்ணை படையில் இணையுமாறு நிர்ப்பந்தம்!

தமிழ் பெண்களை மட்டும் இராணுவத்தில் இணையுமாறு கோரும், ஊக்கப்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, தண்ணீரூற்று, பூதன்வயல், குமுளமுனை, கூழாமுறிப்பு, கேப்பாப்புலவு, முத்துஐயன்கட்டு, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, மூங்கிலாறு, விசுவமடு, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதிகளில் பரவலாக காண முடிகின்றது.மக்கள் அதிகமாக ஒன்று கூடும் முக்கிய சந்திகள், சந்தைகள், கடைத்தொகுதிகள், கூட்டுறவுச்சங்கங்களிலும், மக்கள் அவசியம் தமது கரும காரியங்களையாற்ற போகும் பொதுசன நிலையங்கள், வைத்தியசாலைகள், கிராம அலுவலர் அலுவலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளிலும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணியில் இணைந்து கொள்ள ஓர் வாய்ப்பு!” என்று அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கும் குறித்த துண்டுப்பிரசுரங்களில், திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும் என்றும், வயதெல்லை 18 தொடக்கம் 24 வரை என்றும், சம்பள கொடுப்பனவு ரூபா 30,000 வழங்கப்படும் என்றும், இலவசமாக சீருடை, உணவுப்பணம், தங்குமிட வசதி, குடும்பத்தினர் அடங்கலாக மருத்துவவசதி, வாண்மைத்துவ விருத்தி பயிற்சி என்பன வழங்கப்படும் என்றும், 15 வருட கால இராணுவ சேவையின் பின்னர் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் இறுதி நாள் 2014.03.31 என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், மாவட்டத்தின் பல இடங்களிலும் கடந்த சில வாரங்களாக இராணுவத்தினர் வீடு வீடாகச்சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதையும், ஒலிபெருக்கி மூலம் பகிரங்க அறிவிப்பு விடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் நேற்று (04.03.2014) முத்துஐயன்கட்டு பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்குச்சென்ற இராணுவத்தினர் குடும்பப்பதிவு அட்டைகளை பலவந்தமாகப்பெற்று, “குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள்? அதில் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் உண்டா?” என்று பரிசீலித்துள்ளதோடு, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருந்தால் கட்டாயம் வீட்டுக்கு ஒருவரை இராணுவத்தில் இணைக்குமாறும் நிர்ப்பந்தம் கொடுத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் தெரிவிக்கின்றனர். இதேவேளை முள்ளியவளை பிரதேசத்தின் 59வது டிவிசன் பிரிகேடியர் தர பொறுப்பதிகாரி கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் அபிவிருத்திச்சங்கம் போன்ற சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரை சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ஐந்து பேர் வீதம் பெண் பிள்ளைகளை இராணுவத்துக்கு இணைத்துத்தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.

04 மார்ச் 2014

படையில் இணைவதை எதிர்த்த இளைஞர்கள் கைது!

தமிழ்ப் பெண்களை மிரட்டியும், மூளைச்சலவை செய்தும் ராணுவத்தில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஆங்காங்கே தொடர்கின்றன. இந்த நடவடிக்கைகளினால் ஏற்படப்போகும் கலாச்சார, சமூக சீர்கேடுகள் மற்றும் இவை எல்லாம் தமிழின அழிப்பின் ஓர் அலகுதான் என்றும் சமூக சிந்தனையுள்ள இனமானமுள்ளோர்கள் கருத்துரை செய்து வருகின்றார்கள், ராணுவ அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கவேண்டும். ஆனால் இவற்றை சிங்கள ராணுவம் தமக்கு எதிரான நடவடிக்கை என சம்பந்தப்பட்ட சமூக நோக்கர்களை மிரட்டியும் கைது செய்தும் வருகின்றது.இன்று புதுக்குடியிருப்பில் மேலும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு, உடையார்கட்டுப்பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ராணுவம் நான்கு பேரை கைது செய்துள்ளது. கைதான நால்வரில் ஒருவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. ஏனைய மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது- தேராவில், உடையார்கட்டைச் சேர்ந்த கே.மாடசாமி என்பவரின் இரு பெண்பிள்ளைகள் அண்மையில் இராணுவத்தில் இணைந்து கொண்டனர்.இதை அறிந்த அவ்வூர் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். இராணுவத்தில் தன் இரு பெண்களையும் இணைத்து தமிழினத்துக்கே பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று குறித்த குடும்பத்தவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் தன் பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்ததால் தன்னை 4 இளைஞர்கள் அச்சுறுத்தினார்கள் என்று மாடசாமி புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து அந்த 4 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். இதன்போது அவர்களில் ஒருவரைப் பிணையில் விடுவித்த நீதிமன்றம் ஏனைய மூவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இவ்வாறு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவலை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

03 மார்ச் 2014

கிளிநொச்சியில் இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

மன உழைச்சலுக்குள்ளான தாயொருவர் அங்கு அமைந்துள்ள பொது மருத்துவ மனையில் உளவழத்துறை தொடர்பான வைத்திய உதவிகளைப் பெற்று வந்துள்ளார். கடந்த 15.02.2014 அன்று வைத்திய உதவிக்காகச் சென்ற தாயிடம் - அவரது குடும்ப நிலவரங்களைக் கேட்டறிந்த உளவளத்துறைப் பணியாளர் திரு. கணேசமூர்த்தி அவர்கள் அந்தத் தாயின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்துக்காக அவருடைய மகளுக்கு (இளம்பெண்) வைத்தியசாலையில் ஒரு வேலை பெற்றுத் தருவதாகவும், அவருடைய கல்வித் தகமைகளுடன் நாளை 16.02.2014 அன்று மருத்துவ மனைக்குப் பக்கத்தில் உள்ள இசுலாமிய விடுதிக்குப் பக்கத்தில் தனது அலுவலகம் இருப்பதாகவும் அங்கு மகளை அனுப்பும் படியும் கூறியுள்ளார் இவற்றை நம்பி தனது வாழ்வின் துயரங்கள் தீரப் போகின்றதே என்ற மகிழ்வோடு அந்தத் தாய் தனது மகளை 16.02.2014 அன்று காலையில் அனுப்பிவைத்துள்ளார். 16.02.2014 அன்று அந்த இளம் பெண் வைத்திய அதிகாரி கணேசமூர்த்தியை சந்திக்கச் சென்றுள்ளார். தனது அலுவலகம் இதுதான் என்று கூறிய கணேசமூர்த்தி, தனது வீட்டுக்குள் அப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் உரையாடி விட்டு குளிர் பாணம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளார். அதனைக் குடித்த பின்னர் தனக்கு மயக்கம் வருவதை அப் பெண் உணர்ந்துள்ளார். இருப்பினும் அவரால் எழுந்து அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனைப் பயன்படுத்தி கணேசமூர்த்தி அப்பெண் மீது தனது காம இச்சையை தீர்த்துள்ளார். பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கியுள்ளார். வேலைக்குச் சென்ற தனது மகள் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை என்று பதறிய தாய், அப் பெண்ணின் காதலனை அழைத்து அவரை தேடும் படி கூறியுள்ளார். இன் நிலையில் மறு நாள் காலையே பாதிக்கப்பட்டபெண் வீடுதிரும்பியுள்ளார். நடந்த விபரீதத்தை கேட்டறிந்த தாயார், வைத்தியசாலை சென்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் எவருமே கணேசமூர்த்திக்கு எதிராக விசாரணை நடத்த தயார் இல்லை. தனது மகளுக்கு நடந்த கொடூரத்தை, தாயார் விபரமாக எழுதி, தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்கப்படவேண்டும் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை சகல தமிழ் ஊடங்களும் பிரசுரிக்க வேண்டும். காமுகன் கணேசமூர்த்தி மீது நிர்வாகம் மற்றும் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.

02 மார்ச் 2014

கோபிதாசின் இறுதிக்கிரியையில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு மகசீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற கோபிதாசின் மரணத்திற்கு நீதியான சாவதேச விசாரணையொன்றைக் கோரி பருத்தித்துறையில் ஞாயிறன்று அவருடைய இறுதிக்கிரியைகள் நடைபெற்றபோது, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டுமென இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ் அரசியல் சிறைக் கைதிகளின் கொலைகள் மற்றும் மர்மமான மரணங்கள் கைதிகள் மீதான சித்திரவதை என்பற்றை இந்த ஆர்ப்பாட்டம் கண்டித்திருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும், காணாமல் போனோரின் நலன்களுக்கான அமைப்புகள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பு போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர்.கோபிதாஸின் மரணத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்லாதே, தமிழ் அரசியல் கைதிகளைச் சித்திரவதை செய்யாதே, அரசியல் கைதிகள் பயங்கரவாதிகளல்ல, அவர்கள் எம் பிள்ளைகள் போன்ற கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்களினால் எழுப்பப்பட்டன. மாடு அறுக்கக் கூடாது என்று தெற்கில் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்படும்போது மகசின் சிறைச்சாலையில் உணவும் மருந்துமின்றி தமிழ் அரசியல் கைதிகள் உயிரிழக்கிறார்கள். இதனைக் கண்டிப்பதற்கு எவரும் முன்வருவதில்லை. கோபிதாஸின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பாஸ்கரா இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரியுள்ளார். "சிறைச்சாலையில் அடித்துக் கொல்லப்பட்ட நிமலரூபன் போன்றோரின் மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அதிகாரபூர்வமாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. அவர்களுக்கான மரணச் சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை. இதன் மூலம் தமிழர்கள் மீது இனரீதியான ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது." என இங்கு உரையாற்றிய காணாமல்போனோரைத் தேடிக் கண்டறியும் அமைப்பைச் சேர்ந்த சுந்தரம் மகேந்திரன் கூறியுள்ளார். "உள்ளக விசாரணையொன்றின் மூலம் இத்தகைய மரணங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெனிவா தீர்மானத்தின்போது, சர்வதேச விசாரணையை நாங்கள் உறுதிப்படுத்தியிருந்தால், கோபிதாஸ் போன்ற கைதிகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டாது." என இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். "தமிழ் அரசியல் கைதிகள், பயங்கரவாதிகளல்ல. அவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள். எனவே, அவர்கள் அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய் வேண்டும். அதற்காகக் கட்சி பேதங்களைக் கடந்து அனைவரும் போராட வேண்டும்." என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
நன்றி:பி.பி.சி தமிழோசை 

இந்தியாவுடன் பேச நிஷா பயணமாகிறாராம்!

நிஷா பிஸ்வால்
இலங்கை தொடர்பில் அமெரிக்காவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய மற்றும் தென் ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்யும் பிஸ்வால், இலங்கை நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்தில் பிஸ்வால் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முக்கிய பல ராஜதந்திரிகளை, பிஸ்வால் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

01 மார்ச் 2014

அனைத்துலக விசாரணைக்கு ஆதரவு திரட்டும் பணியில் நா.க.தமிழீழ அரசு!

தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக, புலம்பெயர் தேசங்களில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சமூக -அரசியற் பிரதிநிதிகளின் தோழமையினைத் திரட்டும் முன்னெடுப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்தி, பன்முகத்தளத்தில் தனது செயற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மனிதஉரிமைத்ததளத்தில் இந்த ஆதரவு திரட்டலை மேற்கொண்டு வருகின்றது. பிரென்சு நகராட்சி சபைகக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அக்களத்தில் வேட்பாளர்களாகவுள்ள பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்களினது கவனத்திற்கு தமிழினப்படுகொலை விவகாரத்தினை கொண்டு செல்லப்படுவதோடு, அனைத்துலக விசாரணைக்கான அவர்களது ஆதரவினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ் மக்கள் பிரதிநிதிகள் திரட்டி வருகின்றனர். இதேவேளை உயர்கல்வி மாணவர்களது சிந்தனைவட்டமாக பல்வேறு நாடுகளில் இயங்கும் CNRJஅமைப்பின் தலைவர் Frédéric Fappani அவர்கள், சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கான ஆதரவினை வழங்கியுள்ளார். இவ்வாறு புலம்பெயர் தேசங்களில் திரட்டப்படும் இந்த ஆதரவுக் கோவை, அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கும், ஐ.நா மனித உரிமைச்சபைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சினால் மொத்தமாகவும் சமர்பிக்கப்படவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், அரசியற்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் அனைத்துலக விசாரணையினை நோக்கிய செயல்முனைப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.