பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2011

செங்கொடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த ஞாயிறன்று தீக்குளித்து உயிர் துறந்த காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி உடல் இன்று( 31.8.2011) மாலை அடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் அருகே மங்கல்பாடியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
செங்கொடியின் நினைவை போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது.
வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சத்யராஜ், கொளத்தூர் மணி, சேரன்,ஜான்பாண்டியன், ஜி.கே, மணி, சீமான், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், நளினி தாயார் பத்மாவதியம்மா, உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

சுதுமலையில் மர்ம நபரை பின்தொடர்ந்த இளைஞர்கள் மீது படையினர் தாக்குதல்!

இரவு நேரம் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முன் பின் அறிமுகமில்லாத நபரைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் நாலாபுறமும் இருந்து வந்த சீருடையினரால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்டுக் கடுமையாகத் தாக்கப் பட்டதுடன் பாதுகாப்புக்காக அவர்கள் கொண்டு சென்ற கத்தி, பொல்லு, கோடரி போன்ற ஆயுதங்களும் அபகரிக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் சுதுமலை கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது. இது பற்றித் தெரியவருவதாவது, இரவு 9 மணியளவில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத வீதியால் வெளிச்சம் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் இறங்கி மெல்ல மெல்ல நடந்து சென்றுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், ஏனைய இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு அந்த நபரைப் பின் தொடர்ந்து சென்றனர்.
நடந்துசென்ற அந்த நபர் அந்தப் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணைக்கு அருகில் உள்ள பற்றை வளவில் மறைந்து விட்டார். இவரைக் கண்டு பிடிப்பதற்காக இளைஞர்கள் சுற்றிவளைத்துத் தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்தப் பகுதிக்குச் சைக்கிள்களில் விரைந்து வந்த சீருடையினர் இளைஞர்களைப் பிடித்துத் தாக்கியதுமல்லாமல் நீங்கள் தான் திருடர்கள் என்று கூறியதுடன், பாதுகாப்புக்காக இளைஞர்கள் கொண்டு சென்ற கத்தி, பொல்லு, கோடரி போன்ற வற்றையும் பறித்துச் சென்றுள்ளனர். சீருடையினர் அவர்களைக் கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படமும் எடுத்துள்ளனர்.

30 ஆகஸ்ட் 2011

மனிதாபிமானமே இல்லாத செயல்"நீதிமன்றில் ராம்ஜெத்மலானி ஆவேசம்!

ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை.
ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11 வருடங்கள் ஆகி விட்ட பின்னர், திடீரென கூப்பிட்டு உன்னை நாளை தூக்கில் போடப் போகிறோம் என்று சொல்வது எந்தவகையில் நியாயம். இது மனிதாபிமானமே இல்லாத ஒன்று.
இவ்வளவு தாமதம் ஏன் என்று கேட்டு நிச்சயம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. அடிப்படையிலேயே தவறு செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கு இதில் மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 வருடங்கள் சிறையில் அடைபட்டிருப்பதே ஒருவருக்கு பெரும் மன உளைச்சலைக் கொடுக்கும் விஷயமாகும். இந்த வழக்கில் மிகப் பெரிய உளைச்சலை சந்தித்த ஒருவரை தூக்கில் போடும் முடிவை அரை மணி நேரத்தில் எடுத்துள்ளனர். இதை சாதாரணமாகஎடுத்துக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டார் ராம்ஜேத்மலானி.
இதையடுத்து கருணை மனுவை நிராகரிக்க ஏன் இத்தனை தாமதம் என்று கேட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வைகோவுக்காக ஆஜரானேன்-நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: ஜேத்மலானி
நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக்குப் பி்ன்னர் வெளியே வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, நான் இங்கு நிற்க முதல் காரணம் வைகோதான். அவர் எனது நெருங்கிய நண்பர். அவருக்காகத்தான் வந்தேன். இன்று இங்கு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. நிச்சயம் நீதி சாகாது என்றார் ராம்ஜேத்மலானி.
ஜேத்மலானியால்தான் இது முடிந்தது-வைகோ:
வழக்கறிஞர் உடையில் வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், இந்த வெற்றிக்கு முழுக் காரணமும் ராம்ஜேத்மலானிதான். அவருடைய திறமையான வாதத்தால்தான் இன்று இந்த இடைக்கலாத் தடையை பெற முடிந்தது. நிச்சயம் வெல்வோம் என்றார்.

தமிழக முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, ’’தூக்கு என்பது தமிழக மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே 3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவர் ஏற்றால் 3 பேரின் தூக்குத்தண்டனை ரத்தாகலாம். மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தூக்கு ரத்து செய்யப்பட்ட முன் உதாரணம் உள்ளது’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், மரண தண்டனையை எதிர்த்து தொடர்ந்து போராடப்போவதாகவும் அறிவித்துள்ளார். தமக்கு ஏற்பட்ட வேதனை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

29 ஆகஸ்ட் 2011

மண்டைதீவு கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பலி!

யாழ்.மண்டைதீவுக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனர்வகள் இருவர் படகு கவிழ்ந்ததில் நீரில் அமிழ்ந்து வலையினுள் சிக்குண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் மூச்சுத்திணறலுக்கு உட்பட்டு யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு மீன்பிடிப்பதற்காக மண்டைதீவைச் சேர்ந்த யோசேப்பு நிக்சன் (வயது 21), அன்ரனி லியூட்( வயது 48) ஆகிய இருவரும் சென்றிருக்கின்றர்.
அவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளாகி கடலில் கவிழ்ந்திருக்கின்றது. இருவரும் நிலை தடுமாறி நீரினுள் விழுந்த போது இருவரும் தாம் கொண்டு சென்ற வலையினுள் சிக்குண்டிருக்கின்றனர்.
சிக்குண்டவர்களில் நிக்சன் வெளிவரமுடியாத அளவிற்கு வலையினுள் மாட்டிக்கொண்டமையினால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கின்றார்.
லியூட் மூச்சுத்திணறலுக்கு உட்பட்ட நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழந்த நிக்சனின் சடலமும் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்குளிக்க முயன்றவர்கள் கைது!

ராஜிவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, அவர்களின் பாலு, புவனா மற்றும் கோபி ஆகியோர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேர் உள்ளிட்ட 30 பேரை பொலிசார் கைது செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

28 ஆகஸ்ட் 2011

புளியங்கூடல் இந்தன் முத்துவினாயகர் ஆலய குருக்கள் காலமானார்!

புளியங்கூடல் இந்தன் முத்துவினாயகர் ஆலயத்தின் பிரதான குருவாக பல்லாண்டுகளாக ஆன்மீக பணியாற்றி வந்த சோமசுந்தரக்குருக்கள் சண்முகநாதக்குருக்கள் நேற்று (27.08.2011) காலமானார்.வரதர் ஐயா என அன்புடன் அழைக்கப்பட்டு வந்தவர்.பரம்பரை பரம்பரையாக தமது குடும்பத்தையே இந்தன் முத்து விநாயகர் ஆலய ஆன்மீக பணிக்காக அர்ப்பணித்து செயற்பட்டவர்கள் இவரது குடும்பத்தினர்.புளியங்கூடல் மக்களின் பேரன்புக்குரியவராக மட்டுமன்றி அயல் கிராம மக்களாலும் நேசிக்கப்பட்ட வரதர் ஐயாவினுடைய இழப்பு ஆன்மீக உலகிற்கு பேரிழப்பாகும்.கானவினோதன் வரதர் ஐயா அவர்களுக்கு புளியங்கூடல் மக்கள் சார்பிலும்,புளியங்கூடல்.கொம் சார்பிலும் இதய அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

மூவர் உயிரை காக்கக்கோரி இளம் பெண் தீக்குளித்து மரணம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார்.
காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.
இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன்
தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.
இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இவரது மரணம் மேலும் தமிழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தந்தையை காப்பாற்றுமாறு முருகனின் மகள் வேண்டுகோள்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை காப்பாற்ற சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர் புகழேந்தி, இந்த தண்டனைக்கு எதிரான தடைக் கோரிக்கை மனுவுடன் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்தும் திங்கட் கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த மூவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன் மற்றும் இந்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் தண்டனைக் குறைப்பினால் ஆயுட் தண்டனை பெற்ற நளினி தம்பதிகளுக்கு சிறையில் பிறந்த மகள் ஹரித்ரா முருகன், இந்த தண்டனையை குறைக்க வேண்டும் என்று மனுச் செய்துள்ளார்.
தனது தந்தையை விடுவிக்காவிட்டாலும் அவரின் தண்டனையை ஆயுட் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். தற்போது லண்டனில் மருத்துவப் படிப்புக்காக தயாராகிக் கொண்டிருக்கும் ஹரித்ரா முருகன், தனது பெற்றோருடன் கடிதம் மூலமாகவே தொடர்புகளை பல ஆண்டுகளாக பேணி வந்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது பெற்றோரை பார்க்கவில்லை என்றும் தற்போது இந்தியா செல்ல வீசா அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

27 ஆகஸ்ட் 2011

முன்னாள் நீதியரசருக்கு எதிராக நடவடிக்கை!

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வு பெற்ற நீதவான்கள் சிலர், சரத் என் சில்வாவிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
சரத் என் சில்வா, பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலப்பகுதியில் தாம் பழிவாங்கப்பட்டதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் நீதவான்கள் மகிந்தவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே, முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரத் என் சில்வா பதவி வகித்த காலத்தில், நியாயமற்ற முறையில் தமக்கு ஓய்வு வழங்கப்பட்டதாக ஓய்வு பெற்ற நீதவான்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தையும்,மஹிந்த ராஜபக்ஷவையும் அண்மைக்காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கு அதீதமான நிறைவேற்று அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி.யினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் இணைய தள ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக சரத் என் சில்வா கலந்துகொண்டார்.
சரத் என் சில்வாவின் அழுத்தம் காரணமாக 42 நீதவான்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டாய ஒய்வு வழங்கியதனால் ஏற்பட்ட மன உலைச்சலை தாங்கிக் கொள்ள முடியாது சில நீதவான்கள் தற்கொலை செய்து கொண்டதாக மகிந்தவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலர் தொடர்ந்தும் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1999 – 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நீதிமன்றத்துறை நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஓய்வு பெற்ற நீதவான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து சிங்கள ஊடகமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும், இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெடுந்தீவில் அத்திவாரம் வெட்டிய இடத்தில் மண்டையோடுகள் மீட்பு!

நெடுந்தீவு உதவி அரசஅதிபர் பணிமனைக்குப் பின்புறமாக எட்டு மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன. உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில தென்பட்டன.
எச்சங்கள் தென்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் அத்திபாரம் வெட்டும் பணிகள் உட னடியாக இடை நிறுத்தப்பட்டன. இது தொடர்பாகப் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதனையடுத்து நேற்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் ஆகியோர் முன்னிலையில் அந்த இடம் தோண்டப்பட்டது.
இதன்போது 8 மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூட்டு எச்சங்கள் என்பன அந்தக் குழியில் இருந்து மீட்கப்பட்டன. இவற்றுடன் உடைகளோ வேறு எந்தவிதமான தடயப் பொருள்களோ காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த எலும்புக் கூடுகள் 10 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

26 ஆகஸ்ட் 2011

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இரயில் மறிப்பு போராட்டம்.

ராஜீவ் கொலையாளிகலென குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று திடீர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டை ரெயில் நிலைய தண்டவாளத்தில் உட்கார்ந்து 100 மாணவர்கள் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனாலும் 1/2 மணி நேரம் கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதேபோல கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் நிலையத்தில் மற்றொரு பிரிவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியிலும் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

மத்திய,மாநில அரசுகளால் தூக்குத் தண்டனையை தடுத்து நிறுத்த முடியும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் எழுதிய நூலின் இந்தி பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அர்ப்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தாய் உள்ளத்தோடு இந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என்று கட்சியினரையெல்லாம் கடந்து அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். மாநில அரசை வேண்டியிருக்கிறோம். மத்திய அரசு இந்த கட்டத்தில் கூட தடுத்து நிறுத்த முடியும். மாநில அரசு இதனை தடுத்த நிறுத்த இயலும். அவர்களையும் எப்படியாவது இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறோம் என்றார்.

25 ஆகஸ்ட் 2011

காட்டுமிராண்டித்தனமாக சுழிபுரத்தில் சிறுமி கொல்லப்பட்டிருக்கிறார்!

சுழிபுரம் மத்தியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 8 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுப்புலம் மகாவித்தியாலயத்தில் கற்கும் கிருஷ்ண மூர்த்தி சாலினி என்ற எட்டு வயதுச் சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டவராவார்.
இந்தச் சிறுமி கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தமை தொடர்பில் வட்டுக்கோட் டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் சடலம் அவரின் வீட்டிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காணி ஒன்றில் பாழடைந்த கிணற் றிலிருந்து ஒரு வாரத்தின் பின்னர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.
உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட மேற்படி சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நேற்று இடம்பெற்றது. பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மண்டையோட்டின் முன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமைக்கான பெரியதொரு துவாரம் காணப்படுகின்றது. எனவே கொலை செய்யப்பட்ட பின்னரே சடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலம் உருக்குலைந்திருப்பதால் கடந்தப்பட்ட அன்றைய தினமே கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டுமென்றும் அத்துடன் இடுப்பு பகுதிக்கு கீழே எதுவித ஆடைகளும் இல்லாதிருப்பதால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா அறிவிப்பு!

அவசரகாலச் சட்டம் இனி நாட்டில் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் ஜனாதிபதி விடுத்த விசேட அறிவித்தலிலேயே இதனைத் தெரிவித்திருப்பதாக சற்று முன்னர் நாடாளுமன்றில் இருந்து வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆகஸ்ட் 2011

லெய்டன் அவர்களுக்கு தமிழ் மக்களின் இறுதி வணக்கம்.

இடம்: ரொரன்ரோ மாநகரசபைச் சதுக்கம் (Nathan Phillips Square, 100 Queen Street West, Toronto, Ontario) காலம்: வெள்ளிக்கிழமை August 26, பிற்பகல் 6 மணி தொடக்கம் 8 மணிவரை.
கனடாவின் ஒரு தலைசிறந்த குடிமகனாகவும், ஒரு தூய்மையான அரசியல்வாதியாகவும், கனடியத் தமிழரின் உற்ற தோழனாகவும் விளங்கிய புதிய சனநாயகக் கட்சியின் தலைவர் திரு யக் லெய்டன் அவர்களின் இழப்பு நம் அனைவரையும் ஆளாத் துயரத்தில் ஆழ்த்தியிருப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னால் சிறி லங்காவில் போர் மிக முனைப்போடு நடந்த காலகட்டத்திலே, கனடியத் தமிழர்; போர் நிறுத்தத்தை வேண்டி இலட்சக் கணக்கிலே திரண்ட காலப்பகுதியில் பல்வேறு தேசியத் தலைவர்கள் எமக்கு குரல் கொடுக்காமல் நழுவிச் சென்றபோது, அமரர் உயர்திரு யக் லெய்டன் அவர்கள் தமிழரின் துயர்களிலே தானும் ஒருவராகக் கலந்து கொண்டு போர் நிறுத்தத்துக்காகக் குரல் எழுப்பியதை எவரும் எளிதில் மறந்து விட முடியாது. அக் காலகட்டத்திலே கனடியப் பாரளுமான்றத்திலே ஈழத்தமிழர் குறித்த பிரச்சனைக்காக ஒரு விவாதத்தை முன்மொழிந்து நடத்திய பெருந்தகை அவர். அது மட்டுமல்ல, போர் முடிவுக்கு வந்த பின்னர் ஈழத் தமிழரின் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும், அவர்களுக்குசி சரியாதொரு அரசியற் தீர்வு வழங்கப்பட வேண்டும், சிறி லங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பின் கீழ் ஒரு சர்வதேச விசாரணைக்குழு மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என தனது இறுதி மூச்சு வரை குரல் கொடுத்தவர் அமரர் யக் லெய்டன் அவர்கள். தமிழர் சமூக நிகழ்வுகளில் பங்குகொள்வதை பெருமையுடனும், பெருமகிழ்வுடனும் ஏற்றுக் கொண்ட தமிழர்களின் உற்ற தோழன் அவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கனடியப் பாராளுமன்றத்திலே கனடியத் தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்று எம் சமூகத்திற்குத் தொடர்ச்சியாக வலியுத்தி இறுதியாக செல்வி. ராதிகா சிற்சபைஈசனின் பாராளுமன்றப் பிரவேசத்தின் மூலம் எம் சமூகத்திற்கு அவர் கூறிய அறிவுரைகளை நிதர்சனமாக்கிய பெருமையும் அமரர் ஐக் லெய்டனையே சாரும். தன் வார்தைகளே தன் செயல்கள் என்பதை இதன் மூலம் கனடியத் தமிழருக்கும் கனடாவுக்கும் புரிய வைத்தார். உயர்திரு. லெய்டனின் அறிவு, ஊக்குவிப்பு, பண்பான ஆலோசனைகளால் கனடிய தமிழர் சமூகம் அடைந்த பலன்கள் அளப்பெரியவை. இவ்வாறு கனடியத் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட அமரர் உயர்திரு யக் லெய்டன் அவர்களுக்கு மாபெரும் அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 6 மணிக்கு நேத்தன் பிலிப் சதுக்கத்திற்கு ஆயிரக் கணக்கில் திரளும்படி கனடியத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் கனடியத் தமிழர் சமூகம் அன்பான வேண்டுகோள் விடுக்கிறது. அவர் நமக்காற்றிய அளப்பரும் சேவைகளை நன்றியோடு நினைவு கூரவும் நம் ஒற்றுமையின் பலத்தை மீண்டுமொருமுறை வெளிக்காட்டவும் இந் நிகழ்வில் ஒன்று கூடுவோம். 'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.' என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய அமரர் உயர்திரு. யக் லெய்டனின் அஞ்சலி நிகழ்வில் ஆயிரக்கணக்கில் கூடிடுவோம். வடஅமெரிக்கக் கண்டத்தில் முத்தெனத் தோன்றிய அமரர் ஜக்லெய்டனைப் போற்றிடுவோம். தொடர்புகளுக்குகனடிய தமிழர் பேரவை.

கிறிஸ் பூதத்தை பிடிக்க முடியாத பொலிஸ் பத்திரிகையாளரை பிடிக்கிறது.

யாழ்ப்பாணம், நாவாந்துறையில் கிறீஸ் பூதத்தைப் பிடிக்க முடியாத பொலிஸார் பத்திரிகை புகைப்படப் பிடிப்பாளரைக் கைது செய்திருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை சபையில்தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிறீஸ் பூதங்களைப் பிடிக்க அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பி பேசும் போதே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கேள்வியை எழுப்பினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
“யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட கிறீஸ் பூதப் பதற்ற நிலைமையினால் அங்குள்ள மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பொலிஸ் வாகனமொன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அதை புகைப்படம் எடுக்கச் சென்ற உதயன் பத்திரிகை புகைப்படப்பிடிப்பாளரும் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறீஸ் பூதத்தைக் கைது செய்ய முடியாத பொலிஸார் புகைப்படப் பிடிப்பாளரைக் கைது செய்கின்றனர். கிறீஸ் பூதத்தைப் பிடிக்க அரசாங்கம் என்ன செய்யப்போகிறது’ என்றார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய இந்தக் கேள்விக்கு அரச தரப்பிலிருந்து எவரும் பதிலளிக்கவில்லை.

22 ஆகஸ்ட் 2011

நெடுங்கேணியில் மக்களிடமிருந்து மர்மமனிதர்களை மீட்டுச்சென்ற படைகள்.

வவுனியா நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் வன்முறையில் ஈடுபடச் சென்ற மர்ம மனிதர்களை இராணுவ வாகனம் கிராம இளைஞர்களிடம் இருந்து காப்பாற்றி ஏற்றிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணிப் பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் மர்ம மனிதர்களை யாரும் கண்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என்று இராணுவத்தினர் தொடர் அறிவிப்புக்களை ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்து வருகின்றனர். இந்த அறிவித்தலை அடுத்து அந்தப் பகுதி இளைஞர்கள் உசார் நிலையில் தமது கிராமத்தினைக் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த இரவு 8.30 மணியளவில் மர்ம மனிதர்கள் அறுவர் அந்தக் கிராமத்தில் ஊடுருவிய தகவல் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து கிராமத்தினைச் சுற்றிவளைத்திருக்கின்றனர்.
சுற்றிவளைப்பு இடம்பெற்றவுடன் இராணுவத்தினரின் வாகனம் அந்தக் கிராமத்திற்குச் சென்று மக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறும், அங்கு வந்திருப்பவர்கள் குடிபோதையில் இடம்மாறி அங்கு வந்திருப்பதாகவும், அவர்களைத் தாம் கவனிப்பதாகவும் தெரிவித்து மர்ம மனிதர்களை ஏற்றிச் சென்றதாக பட்டிக்குடியிருப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது பகுதியில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லாத நிலையில் மர்ம மனிதர்கள் தொடர்பில் இராணுவத்தினருக்க யார்? தகவல் வழங்கியிருக்க முடியும்? மர்ம மனிதர்களாக வந்தவர்களே இராணுவத்தினரை அழைத்திருக்கலாம் என்று அந்தக் கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.
போராலும், சிங்கள மக்களின் வன்முறைகளாலும் நெடுங்கேணியின் எல்லைக்கிராமமான பட்டிக்குடியிருப்பு கிராம மக்கள் பல தடவைகள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

21 ஆகஸ்ட் 2011

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்த அதி நவீன கருவி!

யுத்தத்தின் போது ரகசிய தகவல்களை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் பீ.ஆர்.டி 77 என்ற அதிசக்தி வாய்ந்த தொழிற்நுட்பத்துடன் கூடிய கருவி ஒன்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு, விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் இந்த கருவி முள்ளிவாய்க்கல் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த கருவியை சாதாரண மக்கள் எவரும் கொள்வனவு செய்ய முடியாது என திவயின தெரிவித்துள்ளது. இதனால் இந்த அதிநவீன தொடர்பாடல் கருவி எவ்வாறு புலிகளுக்கு கிடைத்தது என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்,வைத்தியசாலை தாதியை வைத்தியர் தாக்கியதால் போராட்டம் வெடித்தது!

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரினால் தாதியொருவர் தாக்கப்பட்டமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாதியை தாக்கிய வைத்தியரை உடனடியாக வைதியசாலையில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும்,அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தாதியரின் ஆர்ப்பாட்டம் காரணமாக அரை மணி நேரம் யாழ். வைத்தியசாலை வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதாகவும் யாழ்,செய்திகள் தெரிவிக்கின்றன.

20 ஆகஸ்ட் 2011

மாண்புமிகு முதல்வர் அவர்களே!தமிழர்களின் இன்னுயிரை காத்திடுங்கள்.

பேரறிவாளன், சாந்தன், முருகனை காப்பாற்றுங்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர் முழக்கங்களை எழுப்பினார்.
மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சென்னையில் 20.08.2011 அன்று தொடர் முழக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பனியனை அணிந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கும் பனியன்கள் வழங்கப்பட்டன அவர்களும் பனியன்களை அணிந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வைகோ முழங்க மற்ற அனைவரும் அதை திரும்ப கூறினர்.
மாண்புமிகு முதல்வர் அவர்களே மூன்று தமிழர்களின் இன்னுயிரை காத்திடுங்கள்
வேண்டுகிறோம் வேண்டுகிறோம் மூன்று தமிழர்களையும் காப்பாற்றும்படி வேண்டுகிறோம்
வேதனையோடு கேட்கிறோம், விம்மலோடு வேண்டுகிறோம், கருணையோடு காத்திடுங்கள்.
தடுத்திடுங்கள் தடுத்திடுங்கள் தடுத்திடுங்கள்
உலகம் முழுவதும் வாழ்கிற பலகோடி தமிழர்கள் வேண்டுகிறார்கள் தூக்கு தண்டனையை தடுத்திடுங்கள்.
ஜாதி, மத எல்லை கடந்து அனைவரும் கண்ணீர் மல்க கேட்கிறோம்.
உங்களை விட்டால் எங்களுக்கு திக்கில்லை. வழியில்லை.
மரண தண்டனையை ஒழித்து இந்தியாவுக்கே புரட்சி வழி காட்டுங்கள்
வரலாறு நன்றி சொல்லும்
வரலாறு உங்களுக்கு நன்றி சொல்லும்
தமிழ் சந்ததிகள் நன்றி சொல்வர்
நிரபராதி தமிழர்களை காப்பாற்றிடுங்கள்
உங்கள் பின்னால் நாங்கள் நிற்போம்
கட்சி, ஜாதி, மத எல்லைகளை கடந்து தமிழ் உலகம் உங்கள் பின்னால் நிற்கும்.
காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் மூன்று தமிழர்களை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு வைகோ தொடர் முழக்கங்களை எழுப்பினார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்வேறு கட்சி, இயக்கங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கொடி உள்ளிட்ட அடையாளங்களை எடுத்து வரவில்லை. மூன்று பேரை காப்பாற்ற முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்களை கைகளில் வைத்திருந்தனர்.

அடுத்த கட்ட முடிவுக்கு செல்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் முறிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்த முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட உள்ளன.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் கூடி ஆராய்ந்து அடுத்த அரசியல் நகர்வு குறித்து முடிவு செய்வர் என கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும், கூட்டமைப்பும் கடந்த 7 மாதங்களாகப் பத்து தடவைகளுக்கு மேல் சந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துப் பேச்சு நடத்தியபோதும் ஆக்கபூர்வமான எந்த முடிவும் எட்டப் படவில்லை. நடந்த பேச்சுகளில் அரச தரப்பு உறுதியளித்தபடி எந்த விடயங்களும் நடைபெறவில்லை என கூட் டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. 30 வருடப் பிரச்சினைக்கு ஒரு சில மாதங்களில் தீர்வு கண்டுவிட முடியாது என அரசாங்கம் கூறுகின்றது.
இதை அடுத்து தீர்வு குறித்த மூன்று முக்கிய கூறுகளைத் தெளிவுபடுத்தும்படி அரசுக்கு இருவார காலக்கெடுவை இந்த மாத ஆரம்பத்தில் கூட்டமைப்பு வழங்கி இருந்தது. அரசின் கட்டமைப்பு, மத்திய மற்றும் மாகாண அலகுகளுக்கு இடையிலான பகிர்வுகள் பங்கீடுகள், நிதி மற்றும் வரி அறவீடுகள் ஆகிய மூன்று விடயங்களையும் தெளிவுபடுத்துமாறே கூட்டமைப்புக் கேட்டிருந்தது.
இந்த மூன்று விடயங்களையும் தெளிவுபடுத்தினால் அடுத்த கட்டப்பேச்சுக்கு நாள்குறிக்கலாம் இல்லையேல் அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று கூட்டமைப்புத் தெரிவித்திருந்தது. ஆனால், அரசு இதற்கான பதிலைத் தரவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் கூட்டமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் அதன் அடுத்த கட்ட நகர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

நெடுமாறன் ஐயா தலைமையில் நாற்பது அமைப்புக்கள் கூடி பேச்சு.

சென்னை “தென்செய்தி’ அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் 18-08-11 வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலாளர் வி. சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த. லெனின், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா. செ. மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் செயலாளர் பெ. மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உட்பட 40க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.ராசீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதைக் கண்டு இக்கூட்டம் வருந்துகிறது. இம்மூவரின் உயிர்களை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களை இக்குழுவின் சார்பில் சந்தித்து வேண்டிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
2.மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சென்னையில் 22-8-11, திங்கள் கிழமை அன்று மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
3. மூன்று தமிழர்களின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் 26-8-11 வெள்ளிக் கிழமை அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனிதச் சங்கிலி இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
4.மூன்று தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பழ. நெடுமாறன் அவர்களைத் தேர்ந்தெடுப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்தது.
இப்படிக்கு
பழ. நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
3 தமிழர்கள் உயிர்காப்பு இயக்கம்.

19 ஆகஸ்ட் 2011

வவுனியாவில் மக்களிடம் சிக்கிய மர்ம மனிதர்கள்!

வவுனியா சூடுவெந்த பிலவில் பொதுமக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மூன்றுபேரும், இராணுவத்தினரே என்று ஊர் மக்களும், அவர்கள் உலுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்காவல் படையினர் என்று பொலிசாரும் தெரிவித்திருக்கின்றனர்.
பதட்டமான ஒரு சூழ்நிலையில் நேற்றிரவு பொதுமக்களின் பிடியில் இருந்து பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்ட இவர்கள் மூவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
நேற்றைய இந்தச் சம்பவத்தில் பொலிஸ் சார்ஜன்ற் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும், அவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடிப்பதற்காக இரவு வேளையில் சென்றதாகக் கூறப்படுகின்ற இந்த மூவரின் நடவடிக்கைகள் குறித்து ஊர்மக்கள் சந்தேகம் கொண்டதையடுத்தே அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் மூவரும் வேறு சிலரும் எட்டு மோட்டார் சைக்கிள்களில் (அவற்றில் ஒன்று இலக்கத்தகடு இல்லாதது) என்ன நோக்கத்திற்காக ஊருக்குள் இரவு வேளையில் வந்தார்கள் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.
இவர்கள் மீன்பிடிப்பதற்காகவே சென்றார்கள் என தெரிவிக்கப்பட்ட போதிலும், இவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டதையடுத்தே, ஊர் மக்கள் அவர்கள் மூவரையும் பொலிசாரிடம் நேற்றிரவு கையளித்துள்ளார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து எவரும் உடனடியாகக் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிசார் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.

ராஜபக்சவின் ஆயுளை நீடிக்க தமிழ் பெண்களின் மார்பகங்களை அறுத்து யாகம்!சீமான் கடும் சீற்றம்.

இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில், ’’இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர்.
இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர்.
பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார்.
தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது.
“இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை” என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம் தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

18 ஆகஸ்ட் 2011

தமிழர் பகுதிகளில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் இந்த மாவட்டங்களில் 30 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்புச் அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்கள் தெரிவித்தன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 9 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அதிகாரியொருவர் தெரிவித்தார்.
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் 12 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் ஒரு பாலியல் வல்லுறவு முயற்சியும் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மன்னார் மாவட்ட உளசமூக இணைப்பாளர் நிக்கலஸ் அன்ரனி லோறன்ஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.
15 வயதிற்குபட்ட 11 சிறுமிகளும் ஒரு சிறுவனும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரை 9 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பெரும்பாலான பாலியல் துஷ்பிரயோகங்கள் அவர்களது உறவினர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென்று தங்களுக்கு தெரியவந்துள்ளதாகவும் மேற்படி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
யுத்தம் காரணமாக அதிகளவான பெண்கள் தமது கணவர்மார்களை இழந்து விதவைகளாகியுள்ள நிலையிலும் பல பெண்களின் கணவமார்கள் தடுப்புக்காவலிலுள்ள நிலையிலும் குடும்ப சுமையை பெண்களே சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பெண்கள் தொழிலுக்காக வெளியில் செல்வதால் பிள்ளைகள் தவறான வழியில் செல்லும் சூழ்நிலை காணப்படுவதுடன், பிள்ளைகளுக்கும் பாதுகாப்பற்றதொரு சூழ்நிலையும் காணப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்கள் சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர, பொருளாதாரப் பற்றாக்குறை, பெற்றோர்களின் கவனயீனமின்மை, சிறுவர்களுக்கு போதியளவான அறிவின்மை, பாதுகாப்பற்ற குடியிருப்புக்கள் மற்றும் சனநெருக்கமற்ற குடியிருப்புக்கள் போன்றனவும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில், கிராமங்கள் தோறும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 ஆகஸ்ட் 2011

சர்வதேச மன்னிப்பு சபையும் மரணதண்டனை கைதிகள் சார்பாக குரல்.

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு இந்திய நீதிமன்றம் விதித்துள்ள மரண தண்டனைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த மூவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை இந்திய குடியரசுத் தலைவி பிரதீப பாட்டில் நிராகரித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 1998ம் ஆண்டு குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் 1999ம் ஆண்டு உறுதிப்படுத்தியது.
இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டில் பொதுமன்னிப்பு வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
உலகின் சகல மரண தண்டனை விதிப்புக்களுக்கும் எதிர்ப்பை வெளியிடுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.
பொதுமன்னிப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு 11 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், இது மனிதாபிமானமற்ற செயலாகும் எனவும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமன்னிப்பு மேன்முறையீட்டு மனுக் கோரிக்கை தொடர்பான விசாரணைகளில் ஏற்படும் கால தாமதம் காரணமாக இந்திய நீதிமன்றங்களில் மரண தண்டனை நிறைவேற்றுவதில் நேர விரயம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மர்ம மனிதர்களின் தாக்குதலில் பெண் காயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவன்கேணியில் பெண் ஒருவர் மீது மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். களுவன்கேணிக் கிராமத்திற்கு இரவு(15.08.2011) சென்ற மர்ம நபர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது கையில் வைத்திருந்த கூறிய ஆயுதத்தால் குத்தியுள்ளனர் இதனால் காயமடைந்து மயங்கி விழுந்த அந்தப் பெண்னை கிராம மக்கள் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ச்சியாக நான்கு நாட்களாக இக்கிராமத்தில் மர்ம மனிதர்களின் பதட்டம் நீடிப்பதால் மக்களின் இயல்வு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் வந்தாறுமூலையில் உள்ள வியாபார நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் மீதும் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வந்தாறுமூலையில் உள்ள தனது கடையில் இருந்து வெளியில் வந்த குறித்த நபர் மீது வீதியில் மறைந்திருந்த மர்ம மனிதர்கள் மூவர் அவரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு ஓடிச்சென்றுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த கடை உரிமையாளர் தற்போது மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

16 ஆகஸ்ட் 2011

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் நடத்திய போராட்டம்.

வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட ஜந்து ஊடக கூட்டமைப்புடன் இணைந்து வடக்கு ஊடகவியலாளர்கள் இவ்வார்ப்பாட்டத்தினில் பங்கெடுத்திருந்;தனர்..இன்று காலை செவ்வாய் கிழமை 11.00 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
தெற்கிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுடன் குடாநாட்டு நாளிதழ்களது ஊடகவியலாளர்களும் பங்கெடுத்திருந்தனர். வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் சுலோகங்களை எழுப்பிய ஊடகவியலாளர்கள் அரசுக்கு எதிராகவும் சுலோகங்களை எழுப்பினர்.
இதனிடையே ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக வாகன போக்குவரத்தை சீர் செய்து வழங்க பொலிசார் மறுத்ததையடுத்து இருதரப்புக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வீதிப்போக்குவரத்தை தடை செய்த ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து ஊர்வலமாகவும் புறப்பட்டனர். ஆஸ்பத்திரி வீதி வழியே சென்ற ஊர்வலம் பின்னர் திரும்பி பழைய இடத்தை வந்தடைந்திருந்தது.அங்கு கண்டன கூட்டமொன்றும் இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவான் ஆகியோர் கலந்து கொண்டிந்தனர். ஜ.தே.க நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் கஜேந்திரன் ஜே.வி.பியின் சந்திரசேகரன் உட்பட பலரும் இவ்வார்ப்பாட்டத்தினில் கலந்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே ஜந்து ஊடக கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பதாக அண்மையில் நடாத்தப்பட்டிருந்தது .முன்னதாக ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்த வேளை சுதந்திர ஊடக இயக்கம் ஆர்ப்பாட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் நடத்த முடிவு செய்திருந்தது.
எனினும் சுதந்திர ஊடக இயக்கத்துடன் தொடர்புபட்ட ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் வர அரசு அப்போது அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில் சுமார் பதினொரு வருட இடைவெளியின் பின்னர் அவ்வாறான ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

புங்குடுதீவில் சிங்களவர்களை குடியேற்றும் முயற்சி எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

புங்குடுதீவுப் பகுதியில் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை கடற்படையினரது ஏற்பாட்டினில் நூற்றுக்கணக்கான தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் புங்குடுதீவுப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.இவர்கள் சிலிண்டர் பொருத்தி கடலட்டைமற்றும் சங்கு பிடிக்கப்போவதாக கடற்படையினரால் உள்ளுர் மீனவர்களுக்கு தெரிரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இந்திய மீனவர்களால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உள்ளுர் மீனவர்கள் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை அனுமதித்தால் தமது நிiலைமை மேலும் மோசமடையுமென எச்சரித்தனர்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கடற்படையினர் வலுக்கட்டாயமாக தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த முற்பட்டனர். இதையடுத்து உள்ளுர் மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. நேற்றிரவு ஆரம்பமான இக்குழப்பகரமான நிலை இன்று காலை வரை நீடித்தது.
தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த கடற்படையினர் மேற்கொள்ளும் கெடுபிடிகள் பற்றி உள்ளுர் மீனவ அமைப்புக்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளென அனைவரதும் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தனர். இன்று காலை வரை இதே நிலையே நீடித்திருந்தது.
இதனிடையே அரசின் அகைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பினில் சுமுகமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாக தமக்கு உறுதி மொழி வழங்கியுள்ளதாக உள்ளுர் மீனவர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே வடமராட்சி கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்ந்து சிலிண்டர் பொருத்தி கடலட்டைமற்றும் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபடடுவருகின்றளர்.

15 ஆகஸ்ட் 2011

யாழ்,மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறைப்பிற்கு சரத் என் சில்வா எதிர்ப்பு.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் நடவடிக்கைக்கு முன்னாள் நிதியரசர் சரத் என் சில்வா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சாசனத்தின் 98(9) சரத்திற்கு அமைய இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற போதிலும் அதற்காக சில நிபந்தனைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் நிலுவையில் இருந்தால் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியம் இல்லாத நிலையில் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் திணைக்களத்தின் நடவடிக்கை பொருத்தமற்றது எனவும், அது நிலையான சமாதானத்தை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தீர்மானங்கள் இனப்பிரச்சினையை மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடம்பெயர் மக்கள் இன்னமும் சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை எனவும், யுத்தத்தில் இடம்பெயர்ந்த பலர் இன்னமும் நாடு திரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது அரசியல் சாசனத்திற்கு முரணானது என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு இது தடையாக அமையக் கூடும் என தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென சிவில் அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஜே.வி.பி உள்ளிட்ட பல கட்சிகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

14 ஆகஸ்ட் 2011

பாலியல் பைத்தியங்கள்தான் கிறிஸ்பூதங்கள் என்ற பெயரில் அடாவடி!

கிறீஸ் பூதங்கள் என்ற போர்வையில் பாலியல் பைத்தியங்கள் 47 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கிராமப் புறப் பெண்களைத் தாக்கி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 வாரங்களில் நாட்டில் பல மாவட்டங்களில் இந்த கிறீஸ் பூதங்கள் தொடர்பான 30 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கீழாடை மட்டுமே அணிந்து உடல் எங்கும் கிறீஸை பூசுவது அந்த கிறீஸ் பூதங்களின் வழக்கமாகும். பிடிபடாமல் வழுக்கிக் கொண்டு ஓடுவதற்காக கிறீஸ் பூசப்படுகிறது. ஆனால், இங்கு மர்ம மனிதர்களே நடமாடுவதாக கூறுப்படுகிறது. இது வரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடெங்கும் கிறீஸ் பூதங்கள், மர்ம மனிதர்கள் தொடர்பாக வதந்திகளும் வேகமாக பரவுகின்றன. குற்ற நடவடிக்கைளில் ஈடுபடுவோரே இந்தப் புரளியை கிளப்பி விட்டிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர். இந்த விடயம் கறித்து அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் மத்தியில் பீதியை இல்லாதொழிக்கமாறும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

13 ஆகஸ்ட் 2011

சிறுமி மீது பெளத்த துறவி பாலியல் முறைகேடு!

மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் பிரதம பிக்குவிற்கு எதிராக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 13 வயது சிறுமி ஒருவரை பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலியல் துஸ்பிரயோகம் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை காவல்துறையினர் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டை விசாரணை செய்த நீதவான் தர்ஷிகா விமலசிறி சந்தேக நபரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். குற்றம் சுமத்தப்பட்டுள்ள பௌத்த பிக்கு பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூச்சாண்டி காட்டுகிறது ஸ்ரீலங்கா அரசு!

வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்தைய நாடுகளின் இரகசியங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப உபகரணங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியமை தொடர்பான விபரங்களையே அம்பலப்படுத்த சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரெனக் கருதப்படும் கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் காணப்படும் இந்த விபரங்களை விரைவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில்; பகிரங்கப்படுத்த சிறிலங்கா அரசு தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமை பேரவையில் சிறிலங்கா அரசின்மீதான யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான அழுத்தங்கன் பிரயோகிக்கப்படுமானால் இந்த விடயங்களை அம்பலப்படுத்துவது என சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

12 ஆகஸ்ட் 2011

யாழ்,மாவட்டத்தில் திருமணமாகாமலே கருத்தரிக்கும் சிறுமிகளின் தொகை அதிகரிப்பு!

யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான 5 மாதங்களுக்குள் பதினெட்டு வயதுக்குட்பட்ட 75 பிள்ளைகள் திருமணமாகாமலே கர்ப்பம் தரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதாரத் திணைகள வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்களில் பாடசாலை மாணவிகளே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார்.
இவர்கள் இவ்வாறான தவறான வழிக்குச் செல்வதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம் எனவும், பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாகவோ, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவோ இவர்கள் போதிப்பதில்லை எனவும் அவர் கூறினார்.
இணையத்தளம், மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பாலியல் தொடர்பான தவறான தகவல்களைப் பெற்று அவற்றை நடைமுறையில் அணுக முற்படுவதனாலேயே இவ்வாறான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்தார்.
இளவயதுக் கர்ப்பங்களைத் தடுப்பதற்கான செயற்திட்டம் கடந்தவாரம் தம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வைத்தியர், முதற்கட்டமாக பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்குச் செயலமர்வை ஆரம்பிததுள்ளதாகவும், இதன்போது மாணவர்களுக்கு வாழ்க்கைத் தேர்ச்சிப் பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தனித்தனியாக இந்தப் பயற்சிகளை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

11 ஆகஸ்ட் 2011

கருக்கலைப்பால் கிளிநொச்சியில் இளம் பெண் மரணம்!

கிளிநொச்சியில் அண்மைக் காலத்தில் கருச்சிதைவுகள் காரணமாக இளம் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை பூநகரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இவ்வாறு மரணமாகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான லாக்சன் ரஜனிதேவி (வயது27) என்ற இளம் கர்ப்பிணி பெண்ணே மரணமானவராவார். இந்த இளம்பெண் 3 மாதக் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் சட்டத்துக்கு முரணான வகையில் வீட்டிலேயே கருக்கலைப்பை மேற்கொண்டுள்ளார். இதனால் அதிக அளவான இரத்தப்போக்கு ஏற்பட்டது எனவும் இவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆகஸ்ட் 2011

தொடர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதி!

ஐந்து நாட்கள் விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில் இளம் பெண் ஒருவர் தற்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணத்தில் உள்ள பாட்டாக் கடை ஒன்றில் பணிபுரியும் ஆணுக்கும் நாரந்தனை வடக்குப் பகுதியில் வசிக்கும் 19 வயது கொண்ட இளம் பெண்ணுக்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப் பெண்ணை கடந்த ஐந்து நாட்களுக்கு முன் விடுதி ஒன்றில் தங்க வைத்து மேற்படி காதலனால் தொடர் பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின் நேற்று வீடு திரும்பிய பெண் மயக்கமுற்று விழவே, அவரது தந்தை அப் பெண்ணை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இம் மயக்க நிலை தொடர்பில் அப் பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்ட வைத்தியசாலை வட்டாரங்கள் உண்மை நிலையை அறிந்து ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோதே, தான் காதலனால் ஐந்து நாட்கள் விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அப் பெண் தெரிவித்துள்ளார்.
தற்போது அப் பெண் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இப் பெண் கடந்த ஐந்து நாட்களாக வீடு திரும்பாத நிலையில் அவரின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்திலோ அல்லது மனித உரிமை ஆணைக்குழுவிலோ எதுவித முறைப்பாடும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் தொடரும் படுகொலைகள் இருவர் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

அடித்துக் கொல்லப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் யாழ். நல்லூர் இராசபாத வீதியில் தோட்டத்திலிருந்து இரண்டு சடலங்கள் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலங்கள் கோண்டாவில் செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த அ.தனபாலசிங்கம், எம்.இந்துஷா இருவரினதும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை வாகனச் சாரதியான மேற்படி தனபாலசிங்கம் ஏற்கனவே திருமணமாகி 4 பிள்ளைகளின் தந்தையாவார். அதேபோல் இந்துஷா 2 பிள்ளைகளின் தாயாவார்.
இந்நிலையில் நெஞ்சில் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று மாலையே வைத்தியசாலையில் இருந்து வந்துள்ளார்.
இதற்கான ஆதாரங்கள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் வாழைத்தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதில் துவிச்சக்கரவண்டி, கையடக்கத் தொலைபேசி, உடுப்புகள், கடிகாரம், போன்றன உள்ளடங்கியிருக்கின்றது.
அதிகாலை தோட்ட வேலைக்குச் சென்ற மக்கள் சடலங்களை கண்டு கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
மேலும் தூக்கிலிடப்பட்டுள்ள முறை தொடர்பாக உடனடியாக சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

09 ஆகஸ்ட் 2011

புதிய போர்க்குற்ற ஆவணப்படம் இந்திய தொலைக்காட்சியில்!

இந்தியத் தலைநகர் புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை இரவு 7.30 தெராடக்கம் 9.30 வரை இந்த ஆவணத்திரைப்படம் ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ´இலங்கையின் கொலைக்களங்கள்´ என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஹெட்லைன் ருடே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றிரவு I witnessed Genocide: Inside Lanka’s Killing Fields என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.

08 ஆகஸ்ட் 2011

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் தனித்துப் போட்டியிட மனோ கணேசன் முடிவு.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸ, மொரட்டுவ, நீர்கொழும்பு ஆகிய மாநகரசபைகளிலும், கொலன்னாவ மாநகரசபைக்காகவும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிக நீண்ட காலமாக ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலில் அநேகமாக தமது கட்சி தனித்து போட்டியிடும் என கட்சியின் பொதுச் செயலாளர் நல்லையா குமாரகுருபரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்ததுடன், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தது. நட்புறவான கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏணி சின்னத்தில் போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வடக்கில் நடைபெற்ற தேர்தல்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக, ஜனநாயக மக்கள் முன்னணி பிரச்சாரங்களை செய்திருந்தது.
கொழும்பு மாநகரசபையின் மேயர் பதவிக்காக கட்சியின் தலைவர் மனோ கணேசன் போட்டியிடக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி நான்கு ஆசனங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளிலிருந்து படைகளை வெளியேறக்கோரி மதிமுக போராட்டம்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,’’இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும்.
எனவே அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் முன்னெடுப்பதற்குமான கோரிக்கைகளை வலியுறுத்தவும்;
இதற்கு இந்தியாவில் கட்சி, மாநில எல்லைகளைக் கடந்த ஆதரவைத் திரட்டவும், ஆகஸ்ட் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தரில், என்னுடைய தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை மதிமுக நடத்த இருக்கின்றது.
ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பங்கு ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

07 ஆகஸ்ட் 2011

அமெரிக்கா வைக்கப்போகும் பொறி,கலக்கத்தில் ஸ்ரீலங்கா.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு அமெரிக்கா பொறி வைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18வது கூட்டத் தொடரில் விவாதிக்க விரும்புவதாக சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா தகவல் அனுப்பியிருந்தது.
ஆனால் சிறிலங்கா அரசு அதற்கு இன்னமும் எந்தப் பதிலையும் வழங்கவில்லை.
இந்த விவாதம் நடத்தப்பட்டால், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, சனல் 4 வெளியிட்டுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் உள்ளிட்ட மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து உறுப்புநாடுகள் கலந்துரையாடும் நிலை ஏற்படும்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முந்திய கூட்டத் தொடர்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரை பொறுத்திருக்குமாறு, சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் கூறிவந்தனர்.
இந்த அறிக்கை எதிர்வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது. இந்த அறிக்கையை ஜெனிவா கூட்டத்தொடரில் விவாதிப்பது பற்றி அமெரிக்கா எழுப்பியுள்ள கேள்விக்கு சிறிலங்கா அரசு இன்னமும் பதில் அனுப்பவில்லை.
செப்ரெம்பர் 20 நாள் மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வரை சிறலங்காவின் பதிலுக்காக அமெரிக்கா காத்திருக்கும்.
இன்னமும் ஆறு வாரங்களில் ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும்.
சிறிலங்கா அரசாங்கம் அதற்குள் பதிலளிக்காது போனால், அமெரிக்கா தலைமையிலான அணி அடுத்தமாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான வேறொரு தீர்மானத்தை கொண்டு வரவள்ளதாக ஜெனிவாவிலும், வொசிங்டனிலும் உள்ள சிறிலங்காவின் இராஜதந்திரிகள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு எச்சரித்துள்ளனர்.
அந்தத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடு என்ற வகையில் சிறிலங்காவுக்கு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த இராஜதந்திரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அந்தத் தீர்மானத்தின் வடிவம், உள்ளடக்கம் குறித்து தமக்குத் தெரியாது என்றும் அந்த இராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுவதாகவும், பொருளாதாரத்தடை மற்றும் பயணத் தடைகளை கொண்டு வருவதை உள்ளடக்கியதாகவும் அந்தத் தீர்மானம் அமையலாம் என்றும் சிறிலங்கா இராஜதந்திரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிப்பதில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதியாக இருப்பதாக அறியமுடிவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த விவகாரத்தை எதிர்கொண்டு முறியடிப்பதற்கான மூலோபாயம் இல்லாத நிலையில் சிறிலங்கா அச்சமடைந்துள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டதும் எமது முடிவை அறிவிப்போம்.

நாங்கள் எடுக்க வேண்டிய முடிவை எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம். அது குறித்து இப்போது பிரஸ்தாபிப்பதற்கு இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு காலக்கெடு வழங்கியுள்ளீர்களே. அரசு உங்கள் காலக்கெடுவை கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள் என்று இரா. சம்பந்தனிடம் வீரகேசரி வார வெளியீடு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை முறிவடையும் நிலையில் உள்ளதாக பிரஸ்தாபிக்கப்படுகின்றதே, இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்று வினவியபோது, ஆட்சி அதிகார முறைமை, மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் வரி, நிதி அதிகாரங்கள் ஆகியவை குறித்த மூன்று விடயங்களை முன்வைத்திருக்கின்றோம்.
இதற்கான அரசின் பதிலை தொடர்ந்தே நாம் எமது நிலைப்பாடு குறித்து முடிவெடுப்போம் என்றார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், நாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றோம். அதற்கு மேல் இப்போது ஏதும் தெரிவிப்பதற்கில்லை. அரசின் பதில் கிடைத்ததும் எமது நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம் என்றார்.

06 ஆகஸ்ட் 2011

பணிசுக்குள் பல்லி,அரியாலையில் சம்பவம்!

பணிஸ் சாப்பிட்டவர் அதற்குள் இருந்த பல்லியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.அரியாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தப் பணிசை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு யாழ். நீதிமன்றம் 3 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது.
குறித்த வியாபார நிலையத்தில் நான்கு பணிஸை வாங்கி அதில் ஒன்றை சாப்பிட்டு முடித்த பின்னர் மற்றைய பணிஸைச் சாப்பிடுவதற்குப் பிரித்துள்ளார் இதன் போது அதற்குள் இறந்த நிலையில் பல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை அவதானித்த அவர்,அந்தப் பணிஸை எடுத்துச்சென்று யாழ். மாநகரப் பொதுசுகாதாரப் பரிசோதகர்கரிடம் கொடுத்து சம்பவத்தை விளக்கியுள்ளார்,உடனே குறித்த கடைக்குச் சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அந்தக் கடையில் உள்ள சுகாதார நிலைமைகள் பற்றி ஆராய்ந்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.ஒன்றுக்கு மேற்பட்ட பேக்கரிகளின் உற்பத்திகளைத்தான் கொள்வனவு செய்து விற்பனை செய்வதாக வியாபாரி கூறியுள்ளார்.
யாழ்.நகரில் உள்ள பிரபல பேக்கரி உட்பட பிறிதொரு பேக்கரியிலிருந்தும் தான் பணிஸ்களைக் கொள்வனவு செய்வதாக வியாபாரி கூறியுள்ளார்.இதனையடுத்து யாழ்.நகரின் பிரதான வீதியில் சுகாதாரச் சீர்கேடான நிலையில் இயங்கிவந்த பேக்கரி ஒன்றையும் சுகாதாரப் பரிசோதகர்கள் இனங்கண்டனர்.

படை உளவாளி எனக்கருதப்படும் ஒருவர் தண்ணீர் ஊற்றில் கொலை!

இராணுவத்தினரின் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிவந்த குமிழமுனையைச் சேர்ந்த பிலிப் செல்வநாயகம் கொல்லப்பட்டுள்ளார் . இவருக்கு 48 வயது. அண்மையில் தனது வங்கி நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு குமிழமுனையைச் சேர்ந்த இவர் தண்ணீருற்று முறியடித்தேக்கம் காட்டின் ஊடாக சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார் . இவர் பல தமிழ் இளைஞர் யுவதிகளை சிங்கள இராணுவத்தினரிடம் காட்டி கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குமிழமுனைக்கு அருகில் உள்ள தேக்கம் காட்டுப் பகுதியில் தேக்கம் சாவடிக்கு அருகில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . எனினும் படை அதிகாரிகள் அச் சோதனைச் சாவடியில் படையினர் கடமையில் இல்லை எனவும் அவர்கள் லீவில் சொந்த இடங்களுக்குச் சென்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
சர்ச்சைக்குரிய வகையில் சந்தேகமான முறையில் இவரது மரணம் இடம்பெற்றுள்ள நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய வகையில் இவரது சடலத்தினை மீண்டும் அப்பகுதிக்கு கொண்டு வர 50 ஆயிரம் ரூபா வரை பணம் தேவைப்படுவதாக இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில் ஒரு பகுதியை மீனவ சங்கம் தரும் எனவும் ஏனையவற்றை முல்லைத்தீவில் பணியாற்றுகின்ற அரச பணியாளர்கள் பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தப்படுகின்றது. குறிப்பாக பாடசாலை ஆசிரியர்கள் இந்த வகையில் நிர்ப்பந்திக்கப்படுவது ஓரளவு சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

05 ஆகஸ்ட் 2011

மடிகணனியுடன் லாவகமாகத் தப்பிய திருடன்!

நேற்றைய தினம்(04.08.2011)பிற்பகல் இரண்டு மணியளவில் ஜெர்மனியின் எசன்
நகரினில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.அது தொடர்பாக எமக்கு கிடைத்த விபரம் வருமாறு:
எசன் கோல்ட்ஸ்மித் வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு அருகாமையில்
உள்ள தமிழர்களுக்கு சொந்தமான வீடொன்றினுள் பிற்பகல் இரண்டு மணியளவில் படுக்கையறை யன்னல் வழியாக திருடன் உட்புகுந்திருக்கிறான்.வீட்டின் முன் பகுதியில்
உரையாடிக்கொண்டிருந்த வீட்டார்,ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து எழுந்து பார்த்தபோது
ஒரு ஆபிரிக்கர் படுக்கையறையில் நின்று கொண்டிருப்பதைக்கண்டு,திருடன் என அலறிக்
கொண்டு வெளியே ஓடியிருக்கிறார்கள்.இதை லாவகமாகப்பயன்படுத்தி திருடனும்
தப்பிச்சென்றிருக்கிறான்.பின்னர் வீட்டார் உள்ளே சென்று பார்த்தபோது,மடிகணணியும்
கைத்தொலைபேசி ஒன்றும் திருடனால் எடுத்துச்செல்லப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
அண்மைக்காலமாக எசன் நகரில் உள்ள தமிழர் வீடுகளில் திருட்டுக்கள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.