பக்கங்கள்

31 ஜூலை 2011

வெள்ளை நிறத்தில் நாகம்!

ஐந்து அடி நீளம் கொண்ட அபூர்வமான வெள்ளை நிற நாகபாம்பு ஒன்று பருத்தித்துறையில் உள்ள ஒருவரின் வீட்டின் கோழிக் கூட்டில் பிடிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, வியாபாரிமூலை, இராவாலை பகுதியில் சி.இராதாகிருஸ்ணன் என்பவரின் வீட்டிலுள்ள கோழிக்கூட்டில் இந்த வெள்ளைநிற நாகம் பிடிபட்டது.
தற்போது இந்தப் பாம்பைப் பார்வையிடுவதற்காக பிரதேச மக்கள் ஆர்வத்துடன் அங்கு கூடிய வண்ணம் உள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா வனவிலங்குப் பிரிவுக்கு வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

30 ஜூலை 2011

தெரு விளக்கு போடுவதற்குக்கூட இந்த அரசுக்கு தகுதியில்லை.

தெருவுக்கு விளக்கு போடுவதற்கும் குழாய் நீர் வழங்கவுமே அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் காலத்தில் அமைச்சர்கள் வடக்கில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தெரு விளக்குகளைப் பொருத்தும் ஆணையே தமிழ் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ளனர் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கூறிய கூற்றுக்கு பதிலளிக்கும் விதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது. வடபகுதிக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த 35 அமைச்சர்களும் ஜனாதிபதி அவர்களும் தெரு விளக்கு போடவும் குழாய் நீர் வழங்கவுமே பாடுபட்டனர் என தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் இதற்கு கூட இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என தமிழ் மக்கள் நினைத்ததால்தான் அவர்களுக்கு வாக்களிக்காது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். எனவே இந்த அரசாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியும் அவர்களும் தாங்கள் தெருவுக்கு விளக்கு போடுவதாக கூறுவதைக்கூட தமிழ் மக்கள் நம்புவதாக இல்லை.
மேலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கூறுவதுபோன்று உற்று நோக்கினால் தமிழ் மக்கள் தெருக்களுக்கு விளக்கு போடுவதை எதிர்பார்க்கவில்லை அவர்களுக்கான உரிமையை வெல்ல வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள். தெருவிளக்கு தேவையென்றால் அரச கட்சிக்கே அவர்கள் வாக்களித்திருப்பார்கள். எனவே எந்த வகையில் உற்று நோக்கினாலும் பசில் ராஜபக்ச அவர்கள் கூறுவது சிறிதளவும் பொருத்தமில்லாத விடயமாகும்.
ஆகையால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களித்தார்கள் என்பதனை இந்த அமைச்சர்கள் நன்கு அறிந்திருந்தும் வேண்டுமென்றே ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக பிதற்றுகிறார்கள். நாவில் வருகின்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமென்றே தெரியாமல் பேசுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நுணாவிலில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு.

சாவகச்சேரி நுணாவில் மேற்குப் பகுதியில் பத்து தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதுச் சிறுமியை பொலிஸார் மீட்டதுடன் அவரைக் கடத்திச் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சிறுமி காணாமற்போனது தொடர்பாக அவரது பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் பயனாக பத்து தினங்களின் பின்னர் அவர் மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
நுணாவில் மேற்கைச் சேர்ந்த நபரையும் மீட்கப்பட்ட சிறுமியையும் பொலிஸார் நேற்றுமுன் தினம் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் மா. கணேசராஜா இந்த நபரை ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சிறுமியை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணித்தார்.

28 ஜூலை 2011

விபத்தில் சிக்கி காதலி பலி!காதலன் கைது.

தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் விபத்தில் சிக்குண்டு ஸ்தலத்திலேயே பலியாகிய சம்பவமொன்று பிபிலை, லுனுகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தை அடுத்து குறித்த காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பிபிலை, மெதகம பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.லக்மாளி (வயது 20) என்ற யுவதியே உயிரிழந்தவராவார். தனியார் வகுப்பொன்றுக்குச் சென்று தனது காதலனுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அல்வாயில் கோஷ்டி மோதல் தடுக்கப்பட்டது.

வடமராட்சி அல்வாய் பகுதியில் இளைஞர் கோஷ்டிகளுக்கு இடையே மூள இருந்த மோதலை தவிர்த்திருந்த பொலிஸார் அது தொடர்பாக மேலும் 13 பேரை நேற்றுமுன்தினம் கைது செய்திருந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்வாய் வைரவர் கோயிலுக்கருகில் இரு தரப்பு இளைஞரிடையே முறுகல் நிலை தோன்றியதை அடுத்து அங்கு விரைந்த நெல்லியடிப் பொலிஸார் வாள், கத்திகளுடன் 38 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களில் 36 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கோஷ்டிகளுடன் தொடர்புடைய வேறு சிலர் துன்னாலைப் பகுதியில் பதுங்கியிருப்பது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு துன்னாலைப் பகுதியில் குறிப்பிட்ட பகுதியை நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்தனர்.
அங்கு பதுங்கியிருந்த 14 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.இவர்கள் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் 13 பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

26 ஜூலை 2011

சிங்களப்பெயர்களுக்கு மாறுகிறது யாழ்,வீதிகள்!

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் தற்போது சிங்கள மயமாக வருவதை காணக்ககூடியதாக உள்ளது. அதில் தமிழர் பிரதேசங்களில் புத்த விகாரைகளை அமைத்தல் மற்றும் பிரதேசங்களின் பெயர்களை மாற்றுதல் போன்றன அசுர வேகத்தில் மாற்றம் அடைந்து வருகின்றன.
யுத்தம் நிறைவடைந்த நிலையில் இவ்வாறன மாற்றங்கள் தமிழ் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் சிங்கள பெயர்களில் மாற்றம் அடைந்து வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற பிரதேசங்கள் சிங்கள மயமாக மாறிவருகின்றது. தென் லங்கையில் வரும் சுற்றுலா பயணிகள் இலகுவில் அடையாளம் கண்டு கொள்வதற்காக அரசு இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் தமிழர் பாரம்பரியங்களாக பேணி வந்த அனைத்தும் தற்போது சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் சுட்டி காட்டவேண்டிய விடயம் தமிழர் பிரதேச வீதிப்பலகைகள் சிங்கள பெயரில் மாற்றப்பட்டு வருகின்றன...
உதாரணமாக யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு வீதி 'தம்பலகொடபடுவ' எனும் பெயரில் மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பல வீதிகள் பிரதேசங்கள் சிங்கள பெயர்களில் மாற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு பிரதிநிதிகள் கிளிநொச்சியில் பதவிப்பிரமாணம்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 193 பிரதிநிதிகள் அடுத்த வாரம் கிளிநொச்சியில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவிப்பிரமாண நிகழ்வை வடபகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் திருகோணமலையில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டமை குறிப்பிடதக்கது.

23 ஜூலை 2011

ஆளுங்கட்சி மக்கள் மீது அச்சுறுத்தல்!

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விநாயகபுரம் வாக்கு நிலையத்தின் முன் நின்று ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மக்களை அச்சுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், அது தொடர்பில் தான் பொலிஸாரிடம் முறையிட்ட போதும் பொலிஸார் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் குறித்து தமது கட்சி உறுப்பினர்குக்கு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 ஜூலை 2011

பசில் ராஜபக்சவை கொல்ல மகிந்தவின் மகன் முயன்றாரா?

மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ஷ மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஷவை சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்கா நீயூஸ் வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும் செய்தி கூறுகின்து. இதன் பொழுது வேகமாகச் செயற்பட்ட மகிந்தர் தனது மகனின் துப்பாக்கியை பறித்ததோடு பசிலை பத்திரமாக வேறு அறைக்கு அனுப்பி வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
அத்தோடு மகிந்தவின் பெயரை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாக்களை பெற்தையும் சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளார் மகிந்தவின் இரண்டாவது மகன். மகனோடு இணைந்து கொண்ட மகிந்த மற்றும் கோத்தபாயவும் உன்மேல் நாங்கள் சரியான அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என பேசியதாகவும் தெரியவருவதாக அவ்விணையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு மகிந்தரின் மனைவியும் பசிலை கடுமையாக பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் அலரிமாளிகையில் வைத்தே மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குடும்பமாகச் சேர்ந்து மதுபோதைக் களியாட்டத்தில் ஈடுபட்டவேளை, அளவுக்கதிகமாகக் குடித்திருந்த யோசித ராஜபக்ஷ பாதுகாப்புக்காக இருந்த துப்பாக்கி ஒன்றை பசில் மீது நீட்டியதாகவும் இவர்களுக்கு இடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்று இறுதியில் சுமூகமாக ஒரு தீர்மானம் எட்டப்பட்டதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவால் தேடப்படும் இலங்கையை சேர்ந்த இரு குற்றவாளிகள்.

கனடாவில் வாழும் யுத்தக் குற்றல் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பட்டியலில் இரண்டு இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜெரோம் பெர்னாண்டோ(Jerome Fernando) மற்றும் குலதுங்க இளந்தாரிதேவகே (Kulatunga Illandaridevage) ஆகிய இலங்கையர்கள் யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கனடாவில் வாழ சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அந்நாட்டு எல்லை முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்படும் வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
யுத்தக் குற்றவாளிகள் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 பேர் பற்றிய தகவல்களை கனடா வெளியிட்டுள்ளது.
இந்த நபர்களை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் பெயர் விபரங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட இணையதளமொன்றை கனேடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்களே அதிகளவில் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

யாழில் மூதாளர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்!

யாழ். கைலாசபிள்ளையார் கோவிலடியில் அடிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருதாவது,
யாழ். குருநகர் மவுண் காமம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தந்தையான சில்வஸ்ரர் ஜேசுதாஸன் என்ற முதியவர் நேற்று மாலை அண்மையில் உள்ள தவறணைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற இருவர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கைலாச பிள்ளையார் கோபில் பின்வீதியில் அவரது சடலம் அடிகாயங்களுடன் காணப்பட்டுள்ளது. சடலத்தில் அவர் அணிந்திருந்த மோதிரத்தினைக் காணவில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

21 ஜூலை 2011

நீதிபதியின் அனுமதி பெற்றே தமிழினியை விசாரித்தோம்.

சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியை விசாரணையொன்றுக்காக நீதவான் அனுமதியுடனேயே பயங்கரவாத விசாரணைப் பணியகத்திற்கு (ரி.ஐ.டி.) கொண்டு சென்றதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி.) நேற்று கொழும்பு பிரதம நீதவானிடம் தெரிவித்தனர்.
சுப்ரமணியம் சிவகாமி அல்லது தமிழினி எனும் சந்தேக நபரை சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இருதடவை ரி.ஐ.டிக்கு கொண்டுசென்று விசாரணை செய்ததாக அவரின் சட்டத்தரணி மஞ்சுள பதிராஜா நீதவானிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதுகுறித்து விசாரிக்குமாறு சி.ஐ.டியினருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நீதவான் உத்தரவின் பேரிலேயே ரி.ஐ.டிக்கு விசாரணைக்காக தமிழினி கொண்டு செல்லப்பட்டதாக சி.ஐ.டியினர் நீதவானிடம் தெரிவித்தனர்.
நீதவானின் உத்தரவின் பிரதியொன்றையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் சமர்ப்பித்தனர். இந்நிலையில் இவ்வழக்கை ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி ஒத்திவைத்தார்.

மண்டைதீவில் வாக்காளர் அட்டைகள் திருட்டு!

மண்டைதீவு அஞ்சல் அலுவலகத்திலிருந்து வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் இனந்தெரியாதவர்களால் திருடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
இந்த உள்ளூராட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று பாரிய மோசடி வேலைகளில் அரச தரப்பினர் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தமது வாக்காளர் அட்டைகளை பொதுமக்கள் பெறுவதற்கான மண்டைதீவு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்றபோது அவர்களிடம் கையொப்பம் வாங்கிய சிலர் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுச் சென்றதாக தபாலதிபர் கூறியுள்ளார்.
அவ்வாறு வாக்காளர் அட்டைகளைப் பெற்றுச் சென்றவர்கள் யார் என்பதைத் தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.
எனவே, தேர்தலின்போது தீவுப்பகுதியில் அரச தரப்பினர் பாரிய மோசடி வேலைகளில் ஈடுபடவுள்ளனரென்று தெரியவருகின்றது. மக்கள் விழிப்பாகவும் அச்சமின்றியும் தமது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குவதோடு மோசடிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

20 ஜூலை 2011

கடும் எதிர்ப்பினால் இசை நிகழ்ச்சியை கைவிட்ட மனோ குழுவினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ குழுவினர் உடனடியாக நிகழ்ச்சியை ரத்துச்செய்துவிட்டு, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினர்.
இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனை ஏற்று 20.07.2011 அன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.
இதுகுறித்து மனோ கூறியிருப்பதாவது,
என்னை வாழ வைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு, தமிழ் மக்களுக்கு உங்கள் மனோ, பாடகர் கிரிஷ், பாடகி சுசித்ரா சார்பில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களைக் கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு, நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விஷயம் தெரியவந்தது.
நாங்கள் கொழும்பில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம்.
உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம்.
கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் நன்றி. இவ்வாறு மனோ கூறியுள்ளார்.

19 ஜூலை 2011

தமிழ்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் மீது ஈ.பி.டி.பியினர் தாக்குதல்.

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசம் மணியங்குள விநாயகர் குடியிருப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை ஈ.பி.டி.பி. கட்சியினரே தாக்கினர் என காவற்துறை மற்றும் கபே அமைப்பு என்பவற்றிடம் முறையிடப்பட்டுள்ளது.
செல்லத்துரை தயாகரன் என்பவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தாக்குதலுக்குள்ளானார். சம்பவ தினத்தன்று இவர் தனது 12 வயதான மகனுடன் உறவினர் வீட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கியவர்கள் இவரது மகனையும் முள் வேலிக்குள் தூக்கிஎறிந்ததால் அவரும் காயமடைந்துள்ளார்.
ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த சுரேஸ் என்பவரும் அவரது சகாக்களும் தம்மை இடைமறித்து முகத்தில் தாக்கினர் எனவும் இதனால் கீழே விழுந்த தம்மை அவர்கள் கால்களால் பலமாகத் மிதித்தனர் எனவும் தயாகரன் தெரிவித்தார்.
அக்கராயன் மருத்துவமனையில் முதலில் சேர்க்கப்பட்ட தயாகரன் அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது அங்கு தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகிறார்.தயாகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேசசபை வேட்பாளரான நடராசா டெனிஸ் ராசாவை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். சுரேஸ் ஈ.பி.டி.பிக்கு ஆதரவானவர்.
சில நாள்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு வந்து சுரேஷ், தன்னைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் என மிரட்டினார் என்றும் மீறிப் பிரசாரம் செய்தால் நடப்பது வேறு என்று பய முறுத்தினார் எனவும் தயாகரனும் வேட்பாளருமான டெனிஸ்ராசாவும் கூறியுள்ளனர்.

உள்ளுராட்சி தேர்தலில் சில தமிழ் அதிகாரிகளின் துரோகத்தனம்!

நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி தேர்தல்களில் வடக்கு-கிழக்கில் உள்ள சில தமிழ் அரசாங்க அதிகாரிகள் தங்களது சுய நலனுக்காகவும், பதவியைக்காப்பாற்றிக் கொள்வதற்காகவும், பதவி உயர்விற்காகவும் தங்களது ஊழலை மறைப்பதற்காகவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் முகவர்களாகவே மாறி தொழிற்படுகின்றனர். இவர்கள் தங்களது நாளாந்த கடமைகளை மறந்து அரசாங்கக் கட்சியின் வெற்றிக்கு உழைப்பதிலேயே அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இந்த நாட்டின் அதிபர் தொடக்கம் அவர அமைச்சரவை சகாக்கள்வரை அனைவரும் சர்வதேச விசாரணைக்குப் பயந்து எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற்று தமிழ் மக்கள் எம்முடன் இருக்கிறார்கள் என்று காட்ட முற்படுகின்ற வேளையில், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களுக்கும் அநீதிகளுக்கும் நியாயம் பெற்றுத்தர வேண்டிய இந்த அதிகாரிகள் அரசாங்கக் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடுவதை என்னவென்று சொல்வது?
லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கும், பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கவீனமாவதற்கும், ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தாய், தந்தை உற்றார் உறவினரை இழந்து அனாதைகளாவதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போவதற்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதற்கும் ஏராளமான இளம் விதவைகள் உருவாவதற்கும் காரணமாக இருக்கும் இந்த ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துத்தான் தங்களது வயிறை வளர்க்க வேண்டுமா? தங்களது ஒரு குடும்பத்திற்காக ஆயிரக்கணக்கான குடும்பத்தினரை பலிகடாவாக்க வேண்டுமா? இதற்காகத்தான் இவர்கள் படித்து உயர்பதவிகளில் இருக்கின்றனரா? என்று பாதிக்கப்பட்ட மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
வன்னி உட்பட வடக்கு-கிழக்கில் ஒவ்வொரு குடும்பமும் சோகத்தைச் சுமந்து கொண்டிருக்கின்றது. இவர்களது உறவினர்களும்கூட இதற்குள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து அல்லது மண்டை விரைத்து மறத்துப்போன உணர்வுடன் எட்டப்பர்களாகவும் தமிழனத்தின் கோடாரிக் காம்புகளாகவும் மாறிவிட்ட இந்த அதிகாரிகள் இனியாவது திருந்த வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
வவுனியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் பிராந்திய உள்ளுராட்சி உதவியாணையாளராகக் கடமை புரியும் அச்சுதன் இதற்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றார். இவர் முன்பு புலிகள் இருக்கும் காலத்தில் எங்களது குடும்பம் மாவீரர் குடும்பம் என்றும் தங்களது உறவினர்கள் இயக்கத்தில் இருக்கின்றனர் என்றும் மார்தட்டிக் கொண்டவர். இன்று ஆளுனரின் செல்லப்பிள்ளையாக மாறி அரசாங்கக் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதில் தனது கடமையை மறந்து செயல்படுகின்றார். துணுக்காயில் முகாமிட்டு இவர்போடும் ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
நடைபெறுவது உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் இந்தத் தேர்தலில் அந்தத் திணைக்களத்தின் உயரதிகாரியாக இருக்கும் இவர் இப்படிச் செயல்படுவது சட்டத்திற்குப் புறம்பானது. உள்ளுராட்சி மன்றங்கள் சட்டப்படி நடக்கின்றனவா என்பதையும் அதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொடுத்து அதனைக் கண்காணிப்பதற்கும் பொறுப்பான இந்த அதிகாரியே சட்டத்தைமீறிச் செயற்படுகையில் இவர் நாளை எப்படி சபைகளின்மீது சட்ட நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வியும் மக்களுக்கு எழுகின்றது.
துணுக்காய் பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமைபுரியும் லோகசௌந்தரலிங்கம் பகீரதன் அடுத்ததாக இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்கவராவார். இவருடைய தந்தை லோக சௌந்தரலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 2010ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் மகனின் இந்த தேசிய விரோதச் செயல் அவரையும் பாதித்துள்ளது. பகீரதன் அவர்கள் இப்பொழுது அரசாங்கக் கட்சியை வெல்ல வைப்பதற்கு பகீரதப்பிரயத்தனம் செய்கிறார். தனது பதவியைப் பயன்படுத்தி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவிகளைக் கூட்டி அச்சுதன் மற்றும் சிறீரங்கா ஆகியோரிடம் கையளித்து அரசாங்கக் கட்சிக்கு வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏதோ உதவிகள் செய்யப்போவதாக அறிவித்து கிராமத் தலைவர்களை அழைத்துவிட்டு இப்படிச் செய்ததால் தலைவர்கள் மிகவும் கோபமுற்று இந்தத் தொழில் செய்வதைவிட உங்கள் அலுவலக வாசலில் துண்டுவிரித்து நீங்கள் பிச்சை எடுக்கலாம் என்று ஏசிச்சென்றுள்ளனர்.
மேற்குறிப்பிட்டவர்கள் ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் திருந்தவில்லையெனில், ஒவ்வொருவரின் அந்தரங்கமும் வெளியிட வேண்டிவரும். பட்டியல் தொடரும்.

முள்ளிவாய்க்காலில் பாதிப்புக்குள்ளான தமிழன்.

18 ஜூலை 2011

வேலணைக்கு சென்று தமிழை கொன்ற மகிந்த ராஜபக்ச.

உங்களுடைய உரிமை உங்களிடமே இருக்கின்றது. அதனை யாரும் எடுத்துவிட முடியாது. அதில் கவனமாக இருங்கள். நான் சொல்வதைத்தான் செய்வேன்! செய்வதைத்தான் சொல்வேன்! என்னை நம்புங்கள்! என யாழ்.வேலணையில் மகிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார்.இன்றைய தினம் யாழ்.வேலணைப் பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மகிந்த ராஜபக்ஷ மக்கள் மத்தியில் தமிழ் மொழியில் உரையாற்றினார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும் போது. கடந்த 30வருடங்கள் மக்கள் அனுபவித்து வந்த இன்னல்களும் துயரங்களும் இனி இல்லை. யாரையும் சந்தேகப்பட வேண்டாம் யாருக்கும் பயப்பட வேண்டாம்.
யுத்தம் முடிந்து 2 வருடங்களில் நாம் வடக்கின் அபிவிருத்திக்கு பெருமளவு செலவிட்டுள்ளோம் வடக்கின் அபிவிருத்தி துரிதகதியில் நடந்து கொண்டிருக்கின்றது.
சிலர் மக்களைத் தொடர்ந்தும் தவறான வழியில் கொண்டு செல்ல நினைக்கின்றார்கள். இவர்கள் தங்கள் சொந்தங்களையும் சொத்துக்களையும் சுகங்களையும் வெளிநாடுகளில் வைத்து விட்டு இங்கே வந்து மக்கள் பற்றிப் பேசுகிறார்கள்.
இது பற்றி மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் குறித்து விசாரணை நடத்த முடியாதாம்!

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியாது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என நீதிமன்றின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு புறம்பாக செயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் பிரகடனத்தில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் கைச்சாத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் பரிந்துரையின்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் விசாரணை நடத்தப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சில நாடுகள் பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

17 ஜூலை 2011

புலம்பெயர் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை என்கிறது திவயின.

புலம்பெயர்ந்துள்ள புலிகளுக்கு உரிய பதில் அளிப்பதற்காக சுமார் 20 வருடகாலமாக புலனாய்வு பிரிவினரிடம் உள்ள புலிகளின் முகவர்கள் தொடர்பான சுமார் ஆயிரம் ஆவணங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
பல கொலை சம்பங்களுடன் தொடர்புடைய புலிகளின் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. புலிகளுக்கு எதிரான இலங்கை தமிழர்களால் இந்த தகவல்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்கள் யார் என்பது பற்றியும் தெரியப்படுத்தியுள்ளனர்.
புலிகளின் உறுப்பினர்கள் தமது பெயர்களை மாற்றிக்கொண்டுள்ள போதிலும், அவர்களுக்கு எதிரான தமிழர்கள் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த நபர்களை பற்றி முன்னர் விசாரணை நடத்திய புலனாய்வு பிரிவினர், சந்தேக நபர்கள் இலங்கையில் இல்லை என தமது விசாரணை அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
தெரியவந்துள்ள தகவல்களுக்கு அமைய தமது பெயர்களை மாற்றிக்கொண்ட மேற்படி சந்தேகநபர்கள் வெளிநாட்டு கடவூச்சீட்டுகளை பயன்படுத்தி அவ்வப்போது இலங்கை வந்து சென்றுள்ளதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஜே.வி.பியும் தேர்தல் பிரச்சாரம்.

அரசின் அடக்கு முறைகளுக்குள்ளும், வன்முறைகளுக்குள்ளும் நீதியான நியாயமான தேர்தல் நடக்கும் என நாங்கள் நம்பவில்லை. இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். கிளிநெச்சியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற இருக்கின்ற தேர்தல் ஜனநாயாக வழியில் பரப்புரைகளை நடத்தவோ அல்லது கூட்டங்களை நடத்தவோ இலங்கையில் சகல இடங்களிலும் எங்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆளும் அரசாங்கமானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ, மாகாண சபைத் தேர்தலிலோ எதிலுமே நீதியான தேர்தலை நடத்தவில்லை. அந்த வகையில் தான் இந்தத் தேர்தலும் எங்களுக்கு நம்பிக்கையீனத்தை தருகின்றது.
சகல ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக மக்கள் சக்தியை கட்டியெழுப்புகின்ற வகையிலே தான் நாங்கள் இந்தத் தேர்தலிலே போட்டியிடுகின்றோம். அத்துடன் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு, மறைமுகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளின் பெயர் விபரங்களையும் வெளியிட வேண்டும். யுத்தத்தின் போது ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் இந்த அரசு உரிய நட்டஈடுகளை வழங்க வேண்டும்.
அதாவது சட்டம், நீதி ஆகிய அனைத்தும் அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டிருக்கின்றன. அதனைப் பயன்படுத்தி அரசு தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக் கின்றன. அந்த வகையிலேயே எமது கட்சி மீது பல வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.கிளிநொச்சி காவற்துறை நிலையத்தில் இதுவரை எமது கட்சிக்கு எதிரான 4 வன்முறைச் சம்பவங்களுக்கு காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். சில முறைப் பாடுகளை அவர்கள் ஏற் றுக்கொள்ள மறுத்திருக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜே.வி.பி. அலுவலகத்திலிருந்து ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மற்றும் கட்சி தொண்டர்கள் கிளிநொச்சி நகரை நோக்கி நடைபயணமாக பயணித்து தமது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டனர்.

16 ஜூலை 2011

நியூசிலாந்து பிரதமரின் தாயும் அகதியாக சென்றவர்தான்.

எல்ஸியா கப்பலில் வந்த தமிழ் அகதிகளின் வேண்டுகோளை நியூசிலாந்து பிரதமர் நிராகரித்துள்ளதமை குறித்து கிறீன் கட்சியைச் சேர்ந்த கீய்த் லொக்கி பாராளுமன்றத்தில் நடந்த விசேட விவாதத்தின் போது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்த வழியில் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். அகதிகளை இங்கு வரவேற்கவில்லை என்பது ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் அது அந்த அகதிகளின் உயிர் பிரச்சினை என்பதை ஏன் உணரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது நியூசிலாந்து மக்களின் மனிதாபிமான உணர்வுகளுக்கு எதிரானதாகும். பெரும் துன்பங்களை அனுபவித்து துயரிலிருந்து தப்புவதற்காக தப்பி ஓடிவருபவர்களைப் பார்த்து இவ்வாறு கூறுவது இதயமற்றவர்களின் செயலாகும் என அவர் விமர்சித்துள்ளார்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று கப்பலில் வந்துள்ளவர்கள் கியூ வரிசையிலிருந்து பாய்ந்து வந்தவர்கள் என்று ஜோன் கீ கூறியுள்ளார்.
ஜோன் கீ யின் தாய் 1939 ஆண்டு யுத்தத்தில் நாஸி ஜேர்மனியிலிருந்து அகதியாக தப்பி வந்து பிரித்தானியாவில் தஞ்சம் கோரியவர்.
யூத அகதிகளுக்கு அப்போது கியூ வரிசையில் சேர வேண்டியிருந்ததில்லை. அவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக எல்லை தாண்டி கடவுச்சீட்டு இன்றி பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் என்றும் கீய்த் லொக்கி தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட சபாநாயகர் தலைமை அமைச்சரின் தனிப்பட்ட குடும்ப விடயங்களை பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

படையினர் கோபமாக உள்ளனர்,எச்சரிக்கிறார் கத்துருசிங்க.

கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும் ஆதாரமற்றது எனவும் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, மாசார் பிரதேசங்களில் படையினர் வெற்றிலைச் சின்னத்துகு வாக்களிக்குமாறு பொது மக்களை வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹத்துருசிங்க இதனை குறிப்பிட்டுள்ளர்.
வடக்குத் தளபதி என்ற முறையில் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கின்றேன், படையினர் எவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை. படையினர் மக்களுக்குத் தேவையான சேவையை வழங்கி வருகின்றனர்.
மக்களுக்கு படையினர் செய்யும் சேவையைப் பொறுக்க முடியாத சிலரே அவர்களைக் களங்கப்படுத்தி குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறனர். சிறிதரனின் கருத்தால் படையினர் கோபமாக உள்ளனர் எனவும் விளைவுகள் மோசமடையலாம் எனவும் ஹத்துருசிங்க எச்சரித்துள்ளார்.

15 ஜூலை 2011

தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள முரளிதரனின் கருத்து!

தங்களது சுயநலத்துக்காக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் போய் தஞ்சமடைந்துள்ள சிலர், தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர். இவர்களது வலியுறுத்தலுக்குப் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தால் கடும் விளைவுகளை கிரிக்கெட் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
முன்பு தென் ஆப்பிரிக்காவின் இனவெறியைக் கண்டித்து சர்வதேச அளவில் அந்த நாட்டுடன் யாரும் கிரிக்கெட் உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது. இதனால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாமல் போனது தென் ஆப்பிரிக்கா.அதேபோல ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியையும், அதன் இனவெறிக்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புறக்கணித்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கும் அதேபோன்ற ஒரு நிலை நெருங்கி வரத் தொடங்கியுள்ளது. இலங்கை ராணுவத்தினர், ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடத்திய அகோர கொடூர கொலை வெறியாட்டக் காட்சிகள் அடங்கிய இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோவைப் பார்த்து உலக அளவில் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். இந்த கொடூர இனவெறி காட்சிகளால் இப்போது இலங்கையின் கி்ரிக்கெட் நிர்வாகத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு கிரிக்கெட் ஆடப் போகக் கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை அங்குள்ள தமிழர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கூட இலங்கைக்குச் செல்ல விருப்பமில்லை என்று கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுயள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்த யோசனைக்கு வர முக்கியக்காரணம், சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் கிராபிக் வடிவிலான டாக்குமென்டரியான போர் கார்னர்ஸ் ஒரு காரணம். இதில், இலங்கை இனப்போரின்போது ராணுவம் நடத்திய கொடூரங்களை அதில் சித்தரித்துள்ளனர். ஆஸ்திரேலியா முழுவதும் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2வது தி ஏஜ் பத்திரிக்கை நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பு. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்குப் போகலாமா என்று கேட்டு வெளியான அந்தக் கருத்துக் கணிப்பில், 81 சதவீதம் பேர் போகக் கூடாது என்று ஆணித்தரமாக தெரிவித்துள்ளனர். இதனால்தான் இலங்கைக்குப் போவதை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
ஆகஸ்ட்6ம் தேதி தொடங்கவுள்ள தொடரில் ஐந்து ஒரு நாள் போட்டி, 2 டுவென்டி 20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இங்கிலாந்தும், இலங்கையுடனான கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் மட்டுமல்லாமல் இலங்கை அரசும் கூட அச்சமடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் கிரிக்கெட்டைப் புறக்கணிக்க ஆரம்பித்தால் அது நாளை உலக அளவிலான பொருளாதாரத் தடைகளுக்குக் கொண்டு போய் விடக் கூடும் என்று இலங்கை அரசு அஞ்சுகிறது.
இந்த நிலையில், முரளிதரன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் புறக்கணிப்பு முடிவு குறித்து முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தலாம். அதேசமயம், ஒரு நாட்டுடனான கிரிக்கெட் உறவைத்
துண்டிப்பது, புறக்கணிப்பது என்பது தவறான முடிவாகவே இருக்கும்.அதனால் பல கடுமையான விளைவுகளை அந்த விளையாட்டு சந்திக்க நேரிடும்.
அரசியல் வேறு, விளையாட்டு வேறு. இன்று இலங்கை, நேற்று பாகிஸ்தான், ஜிம்பாப்வே என்று ஆஸ்திரேலியா அணி தனது புறக்கணிப்பை தொடருமானால், நாளை அது சில நாடுகளுடன் மட்டுமே கிரிக்கெட் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதனால் கிரிக்கெட் செத்துப் போகும். ஐபிஎல் போட்டிகள் தலை தூக்கி முன்னணி இடத்தைப் பிடிக்கும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த, ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வசித்து வரும், சில தமிழர்களே இந்த செயல்களுக்குப் பின்னணியில் உள்ளனர். தாயகத்திற்குத் திரும்ப முன்வராத அவர்கள் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சுயநலத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர்.
இலங்கை அணி இங்கிலாந்தில் விளையாடியபோது மைதானத்திற்குள்ளும் புகுந்து அவர்கள் பிரச்சினை ஏற்படுத்தினார்கள். மைதானத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இவர்கள் எல்லாம் தங்களது சுயநலத்திற்காக செயல்படக் கூடியவர்கள். இவர்களால் இலங்கைக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது என்றே நான் கருதுகிறேன். வேறு ஒரு நாட்டில் புகலிடம் பெற்று வாழ்ந்துவரும் இவர்கள் சொந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது என்றார் முரளிதரன்.
முரளிதரனின் இந்தப் பேச்சுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. முரளிதரனின் பேச்சு ஈழத் தமிழர்களை, குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் ஒவ்வொரு முறையும் சாதனை படைத்தபோது தலையில் வைத்து தூக்கிக் கொண்டாடிய தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழர் அமைப்புகளின் பேரவைத் தலைவர் விக்டர் ராஜகுலேந்திரன் கூறுகையில், முரளிதரின் நிலைப்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இலங்கையின் கொலைக்களம் வீடியோவை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்க்க வேண்டும். அதைப் பார்த்து விட்டு அவர்கள் முடிவெடுக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி.
சிலர் சொல்லலாம், அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்று.ஆனால் தென் ஆப்பிரிக்க விஷயத்திலும், ஜிம்பாப்வே விஷயத்திலும் இப்படி யாரும் பேசவில்லையே, இப்போது மட்டும் ஏன் பேச வேண்டும்?
இலங்கைக்குப் போகாதீர்கள் என்று ஆஸ்திரேலிய அரசு சொல்லப் போவதில்லை. அது வேறு விஷயம்.ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்கென்று முடிவெடுக்க உரிமை உள்ளது. அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து அதை அவர்கள் ஆஸ்திரேலிய அரசுக்குச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
முன்பு இலங்கை என்பது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டுமே இருந்தது. இப்போது அப்படி இல்லை. இன்று அது மனித உரிமைகள் பிரச்சினையாக மாறியுள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, இலங்கை பயணம் குறித்து ஆஸ்திரேலிய அரசிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தீவகத்தில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் மோசடி.

தபால்மூல வாக்களிப்புகள் 2 தினங்கள் யாழ்ப்பாணத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் தீவகப் பகுதிகளில் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அரச அதிகாரிகள் மட்டத்தில் இதனை மறைத்து விட முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீவகப் பகுதிகளின் கட்டுப்பாடு தொடர்ந்தும் ஈபிடிபியிடமும் கடற்படையிடமுமே இருக்கின்றது. இந்த நிலையில் யாழ்க் குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து கணிசமான ஆசிரியர்கள் தீவகப் பகுதிக்கு கல்வி கற்பிப்பதற்காக சென்று வருகின்றனர். அவ்வாறு சென்று வரும் ஆசிரியர்களுக்காக விசேட வாக்களிப்பு மையங்கள் இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்ற ஆசிரியர்களே விரட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே யாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதை யாழ் செயலக அதிகாரி; உறுதிப்படுத்தியுள்ள போதிலும் அது எங்கு இடம்பெற்றது என்ற தகவலை வெளியிட மறுத்து விட்டார். இதையடுத்து 2ம் நாளாக இடம்பெற்ற வாக்களிப்பின் போது மேற்பார்வை நடவடிக்கைகளை யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபரே முன்னின்று நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் கண்காணிப்புகளை தாங்கள் கூடிய அக்கறை செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றதா என்பது தொடர்பாக கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு ஏகோபித்த ஆதரவை வழங்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஓரணியில் திரண்டு தங்களின் இலட்சியத்தை, இலக்கை வெளிப்படுத்திய பின்னர் இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டன.
அந்த நிலைப்பாட்டை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு ஏகோபித்த ஆதரவை அளிப்பதன் மூலம் தமிழ் மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தவேண்டுமென்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேசசபைக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை மாலை நாவற்சோலை என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
அரியநேத்திரன் மேலும் பேசுகையில்;
2009 இல் இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவின் பின்னர் தமிழர்களுக்கு இனி என்ன பிரச்சினை இருக்கின்றது என்று அரசுத்தலைமை கேட்டது.தமிழருக்கு பிரச்சினைகள் உள்ளன.
அவை தீர்க்கப்பட்டாகவேண்டுமென்று வடக்கு, கிழக்கு தமிழ்மக்கள் 2010 பாராளுமன்றத் தேர்தலிலும் அதன் பின்னர் நடத்தப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலிலும் மீண்டும் தலைநிமிர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பின்னால் ஓரணியில் திரண்டு நின்று குரல் கொடுத்தனர்.
89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விதவைகளாகக்கப்பட்டனர். 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முடமாக்கப்பட்டனர், அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இவ்வாறான தியாகங்கள் எல்லாம் வீணாகப்போய்விடாது. தமிழ் மக்கள் மீண்டும் ஓரணியில் திரண்டு நின்றால் அத்தியாகங்களுக்கு சரியான விடிவு கிட்டும்.
எனவே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தவேண்டுமென்று தெரிவித்தார்.

14 ஜூலை 2011

தீவகத்திற்கு செல்ல முடியாத நிலை நிலவுகிறது.

தீவகப்பகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தமிழரசுக் கட்சி செல்ல முடியாதுள்ளது. இதேவேளை தீவகத்திலிருந்து தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் யாழ் நகரிற்கு வரமுடியாததாக இருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். முகமட் தலைமையில் யாழ் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதனைத் தெரிவித்தார். மேலும் தீவகத்திற்கு பிரச்சாரம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களோ, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் செல்வதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள வேட்பாளர்களுக்கும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் பிரச்சார நடவடிக்கையின்போது, வேட்பாளர்களுக்கு முழுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தேர்தல் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப் பட வேண்டும் எனவும் மாவை தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில், பொலிசாரால் பக்கச் சார்பற்ற நிலையில் செயலாற்ற முடியாது ஒரு பக்கமாகவே செயலாற்றுகிறார்கள். கடந்த தேர்தல் கலந்துரையாடலின் போது நல்லூர்ப் பகுதியில் அமைச்சரின் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது எனவும், இதனை அகற்றுமாறு தெரிவித்துள்ள போதும் இதுவரை அகற்றவில்லை. எனது வீட்டில் அதிகாலை வேளை கற்கள், கழிவுகளால் கொட்டப்பட்டுள்ள போதும் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. எனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில்தான் இராணுவம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் அமைந்துள்ளது.இவ்வாறான நிலையில் அதிகாலை வேளை வந்தவர்களை ஏன் விசாரணை செய்யவில்லை.
நெடுந்தீவிற்கு உள்ளுராட்சி சபைக்குப் பொறுப்பாக கிழக்கு மாகாண ஆளுநரை நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலை வேறெங்கிலும் இல்லை எனத் தெரிவித்தார்.

சரத்பொன்சேகாவிற்கு மன்னிப்பே கிடையாது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை திணைக்கள சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு பொதுமன்னிப்போ, தண்டனை சலுகைகளோ வழங்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய பிரிவுகளின் கீழ் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்றம் தண்டனை விதிப்பதற்கு முன்னர், சரத் பொன்சேகா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காலம், தண்டனைக் காலத்துடன் இணைக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 ஜூலை 2011

அகதிகளை திருப்பி அனுப்பவேண்டுமா?யாகூ நடத்தும் கருத்துக்கணிப்பு.

இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின் தற்போதைய நிலவரப்படி அனைத்துத் தமிழ் அகதிகளையும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டுமென்ற கருத்தே மேலோங்கிக் காணப்படுகிறது.
கருத்து கணிப்பு:
கேள்வி: நியூசிலாந்து 88 இலங்கை அகதிகள் தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயின் கருத்து எவ்வாறானதாக அமையும்.
1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country)
2. அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும். (Negotiate with Australia or Canada)
3. இலங்கைக்கு திருப்பி அனுப்பவும். (Send them home)
4. எனக்குத் தெரியாது. (I don't know)
இதுவரையான (இலங்கை நேரம் காலை 10.50)முடிவுகளின்படி
இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும் என 5231 பேரும், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கதைத்து அங்கு அனுப்பவும் என 3943 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பவும் என 14257 பேரும், எனக்கு தெரியாது என 663 பேரும் வாக்களித்துள்ளனர்.
http://nz.news.yahoo.com/polls/popup/-/poll_id/62206/
நீங்களும் இங்கே சென்று உங்கள் ஆதரவை தமிழ் புகலிடக்காரருக்கு செலுத்துங்கள்.

பள்ளிக்கூட மாணவி கர்ப்பம்,சந்தேக நபர் கைது.

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பமுற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
உருத்திரபுரம் பகுதியில் உள்ள 15 வயதேயான மாணவி ஒருவர் பாடசாலைக்குச் சென்றிருந்த போது வகுப்பில் மயக்கமடைந்துள்ளார். வகுப்பாசிரியரும் ஏனைய மாணவர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் இவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வைத்திய உதவிக்காகக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்கு அந்த மாணவியைப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் அந்த மாணவி எட்டுமாதக் கர்ப்பிணியாக இருக்கின்றார் என்பதைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பொலிசார், அந்த மாணவியுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவருடன் தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தமை தெரியவந்திருக்கின்றது.
இதனையடுத்து சந்தேக நபராகிய இளைஞனைக் கைது செய்து விசாரணை செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி அவரை சட்ட வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி வைத்திய அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி மீதான வைத்திய பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

12 ஜூலை 2011

யாத்திரை சென்ற பெண்ணை கடித்துக்குதறியது மனித உருவில் வந்த மிருகங்களே!

கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்ற போது காட்டு மிருகத்தின் தாக்குதலில் தமிழ் பெண் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்ட போதிலும் அப்பெண் இராணுவ சீருடை அணிந்த சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணின் உடலில் காணப்படும் காயம் மிருகங்களின் தாக்குதலில் ஏற்பட்ட காயம்போல் காணப்படவில்லையென அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கதிர்காமம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த பெண்ணின் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறும் உறவினர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த பெண்ணின் மரண ஓலம் கேட்டபோது அப்பகுதிக்கு பொதுமக்கள் சிலர் சென்றவேளையில் இராணுவ சீருடையில் இருந்த மூவர் அப்பகுதியில் இருந்து ஓடியதை தாம் கண்டதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரும் வன இலாகா அதிகாரிகளும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சம்பவ இடத்தில் வைத்து எரிக்க முற்பட்டதாகவும், உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்தே சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்பிலுவில் வீசி வீதியை சேர்ந்த 33வயதுடைய கிருஸ்ணபிள்ளை சந்திரகுமாரி என்ற இந்த பெண் திருக்கோவில் கல்வி வலயத்தில் எழுதுவிளைஞராக கடமையாற்றி வருகிறார்.
தமது உறவினர்களுடன் கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்ற போதே நேற்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

நயினை நாகபூஷணி அம்பாள் தேர்த்திருவிழா!

நயினாதீவு ஸ்ரீநாகபூஷணியம்மன் ஆலயத் தேர்த்திருவிழா எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இத்தேர்த்திருவிழா பௌர்ணமி தினமன்று நடைபெறவுள்ளதால் அதிகளவானோர் வருகைதருவரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனையொட்டி இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் பயண ஏற்பாடுகளும் விசேடமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை வட பிராந்திய போக்குவரத்துச் சபையும் தனியார் பயணிகள் பஸ்களும் யாழ்ப்பாண பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரையும் அதிகளவு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளன.
வேலணை பிரதேசசபை பக்தர்களுக்காக சுத்தமான நீரை வழங்கவும் நயினாதீவு அபிவிருத்திச்சபை தேநீர் வழங்கவும் அன்னதானம் வழங்க அமுதசுரபி அன்னதானசபையும் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
திருவிழாக் காலத்தில் பயணிகளுக்கு கடல் வழி போக்குவரத்துக்காக நூறு தனியார் போக்குவரத்துப் படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு கருதி உயர் பாதுகாப்பும் படகில் செல்லும் பயணிகள் அளவையும் கடற்படையினர் குறைத்துள்ளனர்.
அத்தோடு பாதுகாப்பிற்காக அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதோடு மருத்துவ சேவைகளை சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் வழங்கவுள்ளன.
திருவிழாக்காலங்களில் வருகைதரும் மக்கள் ஆபரணங்கள் அணிவதை குறைத்து கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு பணப்பற்றாக்குறை.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற குடாநாட்டு வேட்பாளர்களுக்கு தலா 1600 முதல் 2000 ரூபா வரை மட்டுமே கட்சியினால் வழங்கப்பட்டிருப்பதாக வேட்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் துண்டுபிரசுரங்கள், பரப்புரைக் கூட்டங்கள் உட்பட்ட தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி உதவி தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதனை அடுத்து ஒவ்வொரு சபைகளின் வேட்பாளர்களுக்கும் ஐம்பதனாயிரம் ரூபா மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவினால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சபைகளின் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய ஐம்பதாயிரம் ரூபாக்களும் பகிரப்பட்ட போது ஒவ்வொருவருக்கும் 1600 ரூபாவே கிடைக்கப் பெற்றதாகவும், வேட்பாளர்கள் குறைந்த சபைகளுக்கு 2000 ரூபா கிடைத்ததாகவும் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் துண்டுப்பிரசுரம் கூட அச்சிட முடியாத குறித்த பணத்தின் மூலம் அரச இயந்திரம் முழுமையாக ஈடுபட்டுள்ள தேர்தல் பரப்புரையினை எவ்வாறு முறியடிப்பது என்று வேட்பாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி, பொருளாதார அமைச்சர் உட்பட்ட அதியுயர் பீடத்தினர் யாழ்.குடாநாட்டில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

11 ஜூலை 2011

சிறுத்தை கடித்து மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் மரணம்!

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் தாயொருவர் புலியிடம் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யால காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் யால வள்ளியம்மன் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி என்ற 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கதிர்காமம் உற்சவத்தை அடுத்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றனர். விஷேடமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து இம்முறை பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரையினை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற இளம் தாயான கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி நேற்று அதிகாலை யால காட்டுப் பகுதியில் வள்ளியம்மன் ஆற்றுப் பகுதியில் காலைக் கடன் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறுத்தையொன்று இப்பெண்ணை கடித்து இழுத்துச் சென்றுள்ளது.
சிறுத்தையினால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட போது குறித்த பெண் கதறி அழுததுடன் சத்தமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏனைய யாத்திரிகர்கள் அந்த ஆற்றுப் பக்கமாக ஓடியுள்ளனர். அதனால் குறித்த பெண்ணை அவ்விடத்தில் சிறுத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளது.
பின்னர் யாத்திரிகர்கள் அவ்விடத்திற்குச் சென்று பார்த்த போது குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார். பெண்ணின் கழுத்தில் சிறுத்தை கடித்துள்ளமையினாலேயே குறித்த பெண் சம்பவ இடத்தில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரூந்து மோதி காதலர்கள் பரிதாப சாவு!

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் மோதிய 34 வயது பெண்ணும் அவரது காதலர் என சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நேற்று காலை 9.30 மணியளவில் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றது. ரயிலுடன் மோதிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த பெண் கொழும்பு 13ஐ சேர்ந்த முத்தாஸ் (34) என்பவராவார். அவரது காதலர் பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை. பொலிஸ் பேச்சாளர் பிரசன்ன ஜயகொடி இது பற்றி மேலும் தகவல் தருகையில், இச்சம்பவத்தை பார்த்த எவரது சாட்சியமும் இதுவரை கிடைக்கவில்லை என கூறியதுடன் கொல்லப்பட்டவர்கள் தொடர்பான மரண விசாரணைகள் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

ஆட்சியில் இருந்ததால் கருணாநிதிக்கு வருத்தம் தெரியவில்லை.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், தனியார் டி.வி.யில் நேயர்கள் இ மெயில் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நேயர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு விஜயகாந்த் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: ஊடகங்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிடலாம் என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளாரே?
பதில்: அப்படியானால் இவருடைய பேரன் டி.வி.யும், அவரது டி.வி.யும் எந்த அளவு என்னை இழிவு படுத்தினார்கள் என்பதை அவர் வாயாலே சொல்லுகிறார். அன்று ஆட்சியில் இருந்ததால் வருத்தம் தெரியவில்லை. இன்று வருத்தம் தெரிகிறது. இப்படித்தானே ஒவ்வொருத்தருக்கும் வருத்தம் இருக்கும். இந்த வருத்தத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

10 ஜூலை 2011

மலேசியாவில் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் கைதாம்.

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரிடம் மலேசிய காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் மலேசிய அரசாங்கம், தகவல்களை பரிமாறும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இந்த கைது தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் டொக்டர் டி.டி. ரணசிங்கவோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்லவோ எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இந்தோனேஷியாவிற்குள் நுழைய முற்பட்ட தமிழர்கள் கைது.

சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்துக்குள் நுழைய முயன்ற இலங்கைத் தமிழர்கள் 87 பேர் இந்தோனேசிய கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலிஸியா என்ற கப்பலில் சென்ற இவர்கள் நியூசிலாந்தை அண்மிக்கவிருந்த போதே கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய கடற்படையினரால் கைது செயப்பட்டுள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கின்றன.

09 ஜூலை 2011

நுகேகொடையில் இரு சிங்கள நடிகைகள் கைது.

விபச்சார வலையமைப்பொன்றுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் இலங்கைத் தொலைக்காட்சி நடிகைகள் இருவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் விபச்சாரத்திற்காக பயன்படுத்தும் தொலைபேசி இலக்கமொன்றை பெற்றுக்கொண்ட பொலிஸார், மேற்படி இலக்கத்துடன் இத்தாலியிலிருந்து வந்த வர்த்தகர் என்று கூறப்பட்ட ஒருவரை வாடிக்கையாளர் என்ற போர்வையில் தொடர்புகொள்ளச் செய்ததன் மூலம் இவர்களை கண்டுபிடித்தனர்.
பிரபல தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றில் நடித்த மேற்படி நடிகைகள் இருவரும், ஆண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களால் பயன்படுத்தப்படும் வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
நுகேகொடை தலவத்துகொட வீதியில் குறித்த போலி வாடிக்கையாளரை சந்திக்க வந்த போதே இந்நடிகைகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நடிகைகள் ஒவ்வொருவருக்குமான கட்டணமாக கோரப்பட்ட தலா 15,000 ரூபாவும் செலுத்தப்பட்டது. நுகேகொடை அவசர பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பாத்திய ஜயசிங்க தலைமையிலான குழுவினர் இம்முற்றுகையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நாளை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

08 ஜூலை 2011

அச்சுவேலியில் பெண் மரணம்!கொலையென சந்தேகம்.

அச்சுவேலியில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதான ரவீந்திரன் கிருஷ்ணகுமாரி என்பவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சடலப் பரிசோதனையில் கழுத்தில் காயங்களும் காதின் பின்புறம் நகக்கீறல்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இப்பெண் தூக்கிடுவதற்கான புறச்சூழல் காணப்படவில்லை எனறும் இரவு 9 மணியளவில் தமது தமக்கையாருடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார் எனறும் அந்த உரையாடலில் தற்கொலை செய்வதற்கான மனநிலையில் அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

விரிவுரையாளர்கள் போராட்டம்,பின்னணியில் பிளேக் என்கிறார் விமல்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்பள உயர்வுகோரி மேற்கொண்டு வரும் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றோபேட் ஒ பிளேக் செயற்பட்டு வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.
பொரளையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தால் வழங்கமுடியாத சம்பள விகிதத்தை உயர்த்தக் கோரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கின் அனுசரணையுடன் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களே செயற்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த போராட்டத்தை விரிவுரையாளர்கள் அல்லாத சிறுபான்மை குழுவே மேற்கொண்டு வருகின்றது. ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால் இவர்கள் கேட்கும் சம்பள உயர்வு விகிதம் சாத்தியமற்றது.நாட்டை சீர்குலைப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்கலைகழகங்களில் இருந்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

07 ஜூலை 2011

ஈழப்பெண்னொருவர் பாலியல் வல்லுறவின் பின் படுகொலை!

தமிழகத்தின் திருநெல்வேலியில் ஈழத்தமிழ் குடும்பப் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயகத்தில் நடைபெற்ற போர்ச் சூழல் காரணமாக நிம்மதி தேடி புலம் பெயர்ந்து தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாரதியார் நகரில் வாழ்ந்து வந்த மூர்த்தி தங்கம் என்ற 40 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு மீகவும் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து திருநெல்வேலி காவற்றுறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு ராமதாஸ் இரங்கல்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஈழத் தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி மாரடைப்பால் காலமான செய்து கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
வீரம் விளையும் இலங்கை வல்வெட்டித்துறையில் பிறந்த சிவத்தம்பி, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி வந்த சிவத்தம்பி, சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தில்லி சவர்லால்நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி தமிழ் வளர்த்தவர்.
இலங்கை தமிழ் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 70க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுக்காக தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்றவர். கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டவர்.
ஒட்டுமொத்தத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் முன்னோடியாகவும், மார்க்சிய சித்தாந்தவாதியாகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு உலகத் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழுக்கம் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

06 ஜூலை 2011

அவுஸ்திரேலிய அரசிடம் நீதி கோரி நிற்கும் தமிழ் மக்கள்.

ஈழத்தமிழினத்தை அழிக்கும் நோக்கோடு வரலாறு காணாத படுகொலைப்படலத்தை அரங்கேற்றிய - இனவாத - சிங்களக்கொடுங்கோலரசின் முகத்திரயை, அனைத்துலக அரங்கில் தோலுரித்துக் காண்பித்த "சனல் - 4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்ற பெட்டக நிகழ்ச்சியை, கடந்த 4 ஆம் திகதி மீள் ஒளிபரப்பு செய்தமைக்காக ஏ.பி.ஸி. தொலைக்காட்சிச்சேவைக்கு ஒஸ்ரேலியத்தமிழர்கள் சார்பில் எமது உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்து கொள்கின்றோம்.
மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப்பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து , சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் கூண்டில் குற்றவாளியாக நின்றுகொண்டிருக்கும் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை மூடி மறைக்கும் பொருட்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.
சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக்கேள்வி எழுப்பும் சர்வதேச தரப்புக்கள் அனைத்துமே சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்ற மாயையை,சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கி, தம்மைக்கேள்வி கேட்பவர்கள் அனைவருமே எதிரிகள் என்ற எழுதாத கோட்பாட்டினைச்சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைச் செய்துவருகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் ,போர்க்குற்ற அரசான மகிந்த ராஜபக்ச தரப்பினரின் உண்மையான முகத்தினை, சர்வதேச சமூகத்துக்குத் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும் ஆதாரமான "சனல் -4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" பெட்டக நிகழ்ச்சி, உலகின் அனைத்துப்பகுதிகளிலும் அதிர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அந்தப்பெட்டக நிகழ்ச்சியினை ஒஸ்ரேலியாவின் முக்கியமான முன்னணி ஊடகங்களில் ஒன்றான ஏ.பி.ஸி. தொலைக்காட்சி மீள் ஒளிபரப்புச் செய்ததன் மூலம் ,அது தனது துணிச்சலையும் உறுதித்தன்மையையும் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் பக்கச்சார்பற்ற தனது ஊடக தர்மத்தினையும் நிலைநாட்டியிருக்கிறது.
மீள் ஒளிபரப்புச் செய்த இந்த பெட்டக நிகழ்ச்சியில் எந்த ஒரு மாற்றத்தையோ அல்லது இடைச்செருகல்களையோ மேற்கொள்ளாமல் மூலக்காணொலியை அப்படியே ஒளிபரப்பியதன் மூலம் , ஊடகவியல் என்பது எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும் உட்பட்டதல்ல என்பதையும் ,சர்வதேச இராஜதந்திர அழுத்தங்களுக்கு கட்டுப்படாத ஒன்று என்பதையும் , இன மத பண்பாட்டு வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் வெளிப்படையாக நிரூபித்துள்ளது. ஊடக நன்நெறியின் மனச்சாட்சியை அரசியல் அழுத்தங்களால் அடிபணியவைக்கமுடியாது என்பதனையும் அது பதிவு செய்திருக்கிறது.
நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமுகத்தின் பங்களிப்பு இப்போது அத்தியாவசியமாக உள்ளது என்ற யதார்த்தத்தையும் வெளிக்கொண்டுவந்திருக்கிறது.
ஜனநாயக பண்புகளையும் ,மனிதநேய விழுமியங்களையும் உயர்நிலையில் பேணிப்பாதுகாக்கும் ஏ.பி.ஸி. போன்ற ஊடகங்களினால் , வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஈழத்தமிழர் பிரச்சினையின் உண்மைத்தன்மையினை ஆத்மார்த்தமாக அணுகி, தாயக தமிழ் மக்களின் உரிமைகளுக்கும் வேட்கைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ,சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக உறுதியான நிலைப்பாட்டினை ஒஸ்ரேலியா அரசு எடுக்கவேண்டும் எனவும் -
நீதியை நாடிநிற்கும் ஒஸ்ரேலிய ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ,சிறிலங்கா அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அரசியல் பொருளாதார அழுத்தங்களை ஒஸ்ரேலிய அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று ஒஸ்ரேலிய தமிழ் மக்கள் சார்பில் ஒஸ்ரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வேண்டிக்கொள்கிறது.
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா.

யாழ்,பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு.

யாழ்,பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நினைவுநாள் நிகழ்வுகள்(05-07-2011) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன.கரும்புலிகள் நாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இறுக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட போதிலும், குறித்த இடமொன்றில் கூடிய பல்கலைக்கழக கல்விச் சமூகத்தினர் தமக்காக தற்கொடை புரிந்த கரும்புலிகளை நெஞ்சில் நினைவேந்தி வணக்கம் செலுத்தினர்.
‘தரையிலும், கடலிலும், ஏன் வானிலும் கூட எதிரியை கலங்க வைத்து. எம் தேச விடுதலைக்கு தம் உயிரை ஆயுதமாக்கிய தற்கொடையாளர்களை இந்நாளில் அனைவரும் நினைவு கூறுவோம்’ என்ற வரிகள் எழுதப்பட்ட கரும்புலிகளைக் குறிக்கும் படங்களை வைத்து, மெழுகுதிரி கொழுத்தி மாணவர்கள் தமது இதய வணக்கத்தைக் காணிக்கை ஆக்கினர்.

05 ஜூலை 2011

வடபகுதி செல்ல கட்டுப்பாடுகள் தளர்வு என அறிவிப்பு.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளவர்கள் இலங்கையின் வடபகுதிக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று திங்கட்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கிற்கு பயணம் செய்பவர்கள், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்ற பயண அனுமதி ஆவணங்களை ஓமந்தை சோதனை சாவடியில் காட்ட வேண்டிய தேவை இனிமேல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இயல்புநிலை ஏற்பட்டுள்ளதைடுத்து, வெளிநாட்டு கடவுச்சீட்டுக் கொண்டவர்களுக்கான பயணக்கட்டுப்பாடு இனிமேல் தேவையில்லை எனக் கருதுகிறோம்’என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

04 ஜூலை 2011

பேஸ்புக் மூலம் பண மோசடி செய்த சாவகச்சேரிப்பெண்.

வெளிநாடுகளில் குறிப்பா மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி தாயகத்தைச் சேர்ந்த தமிழ் யுவதி ஒருவரால் பேஸ் புக் சமூக இணைப்பு இணையத் தளம் மூலமாக குறைந்தது ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய்வரை பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது அம்பலமாகியுள்ளது.
ஏமாற்றுப் பேர்வழியின் உண்மையான பெயர் கந்தையா தர்ஷனா. சொந்த இடம் யாழ். சாவகச்சேரியில் கல்வயல் கிராமம். 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிறந்தவர். தற்போது கொழும்பில் இருக்கின்றார். இவர் பல பெயர்களிலும் பேஸ் புக்கில் நடமாடுகின்றார். யது கார்த்தி என்கிற பெயரிலும் பேஸ் புக் கணக்கு வைத்து இருக்கின்றார்.
பேஸ் புக் பாவனையாளர்களான புலம்பெயர் தமிழர்களில் பல வயதுக்காரர்களையும் கைக்குள் போட்டுக் கொள்வார். இவர் அழகான தோற்றம் உடையவர். குழைந்து பேசுவார். அனுதாபத்தை பெறுதல், கவர்ச்சி காட்டுதல் ஆகிய உத்திகளைக் கையாண்டு பணம் பறிக்கின்றமை இவரின் வாடிக்கை.
பெற்றோர் இறந்து விட்டனர் என்பார், வெளிநாட்டில் படிக்க பெருந்தொகை நிதி தேவை என்பார், மன பாதிப்பு உடையவர் போல கைகளை சவர அலகால் அறுத்துக் காண்பிப்பார். - இவையெல்லாம் அனுதாபம் பெறுகின்றமைக்காக.காதலிக்கின்றமை போல் நடிப்பார், செக்ஸியான தோற்றத்தில் தோன்றுவார். கிளுகிளுப்பு ஊட்டுகின்ற வார்த்தைகள் பேசுவார். - இவையெல்லாம் கவர்ச்சி காட்டுதல் என்கிற உத்தியின் கீழ்.
ஸ்கைப், தொலைபேசி ஆகியவற்றின் மூலமாக தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொள்வார். பணம் கிடைத்தமையுடன் அனுப்பியவருடனான தொடர்பை அறுத்துக் கொள்வார். சாவகச்சேரியின் கொமர்ஷல் வங்கியில் உள்ள இவரின் கணக்கு ஒன்றுக்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது.
மகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு இருக்கின்ற பணத் தொகையை பார்த்தபோது வங்கியிலேயே தாய் மயங்கி விழுந்த சம்பவமும் இடம்பெற்று உள்ளது. யுவதியின் மோசடி நடவடிக்கைகளுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒருவர்தான் சூத்திரதாரி . இந்நபரின் பெயர் ஜெய்சன். யுவதியின் கணக்குக்கு வருகின்ற பணத்தை சொந்தக் கணக்குக்கு இவர் மாற்றிக் கொள்வார்.
தற்போது யுவதியின் கையடக்கத் தொலைபேசி இவரின் பாவனையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்பு விடுக்கின்றபோது இவர் படுகொலை அச்சுறுத்தல் விடுத்து வருகின்றார்.

இலங்கையால் இந்தியாவிற்கு ஆபத்து.

இலங்கை, இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய ஆபத்து காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானைப் போன்றே சீனாவும் பல வழிகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேபாளம் மற்றும் இலங்கையுடன் குறித்த இரண்டு நாடுகளும் இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்குமாறு மத்திய அரசாங்கத்தை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத் தடை விதித்தல் மற்றும் கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்ளல் ஆகிய தீர்மானங்கள் ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

03 ஜூலை 2011

சிங்களத்தின் பொய் பரப்புரையை முறியடிக்க அணி திரளும் பிரான்ஸ் தமிழர்கள்.

பிரான்ஸ் மண்ணில் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்ற பெரு நிகழ்வுகளில் ஒன்றாக அமைகின்ற தமிழர் விளையாட்டு விழாவில் வழமைபோல் இம்முறையும் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகள், கலையரங்குகள்,கண்காட்சிகள்,உணவகங்கள்,வர்தக நிலையங்கள்,சமூக அமைப்பு மையங்கள் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கோடைக் குதூகலமாக இந்நிகழ்வு அமைகின்றது.
50க்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகளுடன் இடம்பெறவுள்ள தமிழர் விளையாட்டு விழாவில் இம்முறை கலையரங்கை சிறப்பிக்க கனாடாவின் மேற்கத்திய இசைக் கலைஞர் சிக்காடி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.
இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையத்தில் தமிழீழ தேசிய அட்டைக்கான பதிவுகளோடு தமிழ் அகதிகளுக்கான மனிதாபிமான மையமும் நிறுவப்படுகின்றது. இந்நிகழ்வு குறித்து கருத்துரைத்த நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கள் பாலசந்திரன் அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் ஒன்றுபடுதலை � ஒற்றுமையை சிதைக்க சிங்களம் பல்வேறுபட்ட வகையிலும் நாசாகார வேலைகளைச் செய்கின்றது. இவற்றையெல்லாம் முறியடித்து எமது ஒற்றுமையுணர்வை வெளிப்படுத்த பெரு நிகழ்வாக தமிழர் விளையாட்டு விழாவைக் கருத்தில் கொள்வோம் என்றார்.