பக்கங்கள்

10 ஏப்ரல் 2011

தனது நலனுக்காக கூட்டணியை பயன்படுத்துகிறது ஸ்ரீலங்கா?

“அரசாங்கம் எங்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றது. அது தான் விரும்பி இப்பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக இது நடைபெறுகிறது. இப்படியான ஒரு பேச்சுவார்த்தையில் அரச தரப்பு எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கும். எவ்வளவு தூரம் பிரச்சினைகளைத் தீர்க்க ஆவல் கொள்ளும் என்பது கேள்விக்குரியதே.’ இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, இதுவரை நாங்கள் மூன்று முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். இந்தப் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பான பல விடயங்களை எடுத்துக் கூறியிருக்கின்றோம். பேச்சுவார்த்தை என்பது ஒரு குறுகிய நாட்களுக்குள் நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் மாதத்தில் இரண்டு தடவை பேச்சுவார்த்தை நடைபெறும் என ஒத்துக்கொள்ளப்பட்டது. அது சில சமயங்களில் ஒருமாதத்திற்கு மேலாக இழுபறி ஏற்பட்ட நிலைமைகளும் உண்டு. இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்த அளவில் அதுவொரு அபிவிருத்தி சம்பந்தமான பிரச்சினையாகப் பார்க்கின்ற ஒரு கண்ணோட்டமாகவே இருக்கின்றது. ஆகவே இந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை என்பது இழுபட்டுப் போகக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாங்கள் அரசியல் மாற்றங்கள் பற்றி எதுவுமே பேச முடியாத நிலையில் உள்ளோம். நாம் பேச முடியாத நிலையில் உள்ளபோது ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, “நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். அரசியல் மாற்றங்கள் தொடர்பாக பேசுகின்றோம்’ என்பது உள்ளிட்ட பல விடயங்களைக் கூறியிருக்கிறார். இந்நிலையில் பேச்சுவார்த்தை என்பது எம்மை தமது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளதா? எனச் சிந்திக்க வைக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.