பக்கங்கள்

26 செப்டம்பர் 2015

தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம்!

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை
ஆகுதியாக்கிய தியாக தீபம் லெப்டினண்ட் கேர்ணல் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழீழத் தாயக மண்ணிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லூரில் திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 12 நாள்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அவர் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.

24 செப்டம்பர் 2015

சரவணையில் வெறிச்செயலில் களிசறைகள்!

நண்பனை அடித்து மயக்கமடையச் செய்துவிட்டு அவரின் மனைவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சரவணையில் இடம்பெற்றுள்ளது என தெரியவருகிறது.இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,8 மாதங்களுக்கு முன்னரே சரவணையைச் சேர்ந்த குறித்த நபருக்கு திருமணம் இடம்பெற்றது. இவருடன் அதே இடத்தைச் சேர்ந்த நபரும் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரும் மேசன் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பரின் வீட்டுக்குள் நேற்று அதிகாலை புகுந்த இருவரும் அவரைக் கொட்டனால் பலமாகத் தலையில் தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழவே, அவரின் மனைவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. பின்னர் ஒருவாறாக அவர்களிடம் இருந்து தப்பி வந்த பெண் அயலாரை உதவிக்கு அழைத்து கணவனை அவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார். பின்னர் தனக்கு நேர்ந்த நிலை குறித்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளில் உடனடியாக இறங்கிய பொலிஸார் நேற்று மதியமளவில் சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர் எனக்கூறப்படுகிறது.

20 செப்டம்பர் 2015

கட்டளையிட்டவர்களை கண்டறிவதே நோக்கம் என்கிறார் மங்கள!

இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை தண்டிப்பதைவிட, அவர்களுக்கு கட்டளையிட்டவர்களை கண்டறிவதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஹைபிரிட் நீதிமன்ற கட்டமைப்பு போன்ற நீதிமன்றங்கள் இதற்கு முன்னரும் செயற்பட்டுள்ளன. 1970 களில் கதிர்காம அழகி பிரேமவதி மனம்பேரியின் மரணம் தொடர்பான விசேட நீதிமன்றம் அதற்கான எடுத்துக்காட்டாகும். இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை புறக்கணித்து, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கி வைத்திருக்க முடியாது. போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்துக்கே உள்ளது. எனினும் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை மட்டுமே அதற்கு நியமிக்க வேண்டும்.இதன்போது சர்வதேச மட்டத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த நீதிமன்றத்தின் நோக்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிப்பாய்களைக் கண்டறிந்து தண்டனை அளிப்பதல்ல. அவர்களுக்கு கட்டளையிட்டவர்களைக் கண்டறிவதே கலப்பு நீதிமன்றத்தின் நோக்கம். அவ்வாறானவர்களைத் தண்டிப்பதன் ஊடாக மட்டுமே இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

19 செப்டம்பர் 2015

கலப்பு நீதிமன்றம் மற்றுமொரு நாடக அரங்கேற்றம்!

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையர் விடுத்திருக்கும் பரிந்துரை தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு கண்துடைப்பு நாடகமாகவே நோக்கப்பட வேண்டியிருக்கிறது.சிறு சிறு குற்றச் செயல்களுக்கே நீதியை எதிர்பார்க்க முடியாத சிறிலங்காவில் மாபெரும் இன அழிப்பு ஒன்றுக்கு அந்த இன அழிப்பில் ஈடுபட்டவர்களும் இணைந்து நடத்தும் விசாரணை எப்படி தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.சர்வதேச நீதிபதிகளுடன் சிங்கள அரச சார்பிலும் நீதிபதிகள் நியமிக்கப்படும் பட்சத்தில் அது ஒரு குழப்பமான நீதிமன்றமாக இருக்குமே தவிர நீதிக்கான ஒரு மன்றமாக அமையப்போவதில்லை என்பதே வெளிப்படையான உண்மை.ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் வன்முறைகள் உலக நாடுகளோ ஐ.நா.மன்றமோ அறியாததல்ல.இன்று தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்பார்ப்பது இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொண்டு தமிழர் தேசத்தை அங்கீகரித்து அவர்களையும் உள்வாங்கி இணைந்து செயற்பட உலக நாடுகளும் ஐ.நா.மன்றமும் முன்வர வேண்டும்.சர்வதேசத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை உள் நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது பகற் கனவாகவே இருக்கும்.
இந்த கலப்பு நீதிமன்றம் ஒரு கண்துடைப்பு நாடகமே!

16 செப்டம்பர் 2015

மனித உரிமை விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குகிறது!

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, போர்க் குற்ற ஆவணப்படங்களை வெளியிட்ட இயக்குநர் கலம் மக்ரே குற்றம்சாட்டியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால் அமெரிக்கா பின்வாங்குகிறது. சீனாவுக்கு ராஜபக்ச ஆதரவளித்ததால் அவர் அரசுக்கு எதிராக செயல்பட்டது அமெரிக்கா.உள்நாட்டு விசாரணை என்ற நிலைப்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரோதமானது. தமிழர்கள் கொலைக்கு காரணமான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் உயர் பதவியில் உள்ளனர் என்றார்.மனித உரிமை விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குகிறது!

12 செப்டம்பர் 2015

எப்போ மனோ த.தே.கூட்டமைப்பில் இணைந்தார்?-சிவாஜிலிங்கம்

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரி வரும் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு கட்சி தடை விதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 10ம் திகதி கிளிநொச்சியில் போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியமானது என அழுத்தம் கொடுக்கும் வகையில் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடு கிடையாது எனவும் அது சிவாஜிலிங்கத்தின் தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து வெளியிட்டிருந்தார்.இது தொடர்பில் திவயின பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே சிவாஜிலிங்கம் தமது போராட்டங்களுக்கு கட்சி தடை விதிக்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் எப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்? அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக எப்போது மாறினார்? என்பதனையும் அறிந்து கொள்ள விரும்புவதாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

10 செப்டம்பர் 2015

நீதிக்கான தேடல்' - கல்லம் மக்ரேயின் புதிய ஆவணப்படம்!

இலங்கையின் போர்க்குற்றங்களை, சனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்திய 'போர் தவிர்ப்பு வலயம்' ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, ‘இலங்கை: நீதிக்கான தேடல்’ (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் மற்றொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த அரை மணிநேர ஆவணப்படம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் தயாரிக்கப்பட்டு அனைத்துலக சமூகத்துக்கு காண்பிக்கப்படுகிறது. இந்த ஆவணப்படம், தமிழ், சிங்களம், ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அடுத்த சில நாட்களில் இணையத்தில் வெளியிடப்படவுள்ளது. அவர்களைக் கேட்க வேண்டும் என்ற தொனிப்பொருளில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும், போர்க்குற்ற ஆதாரங்களையும் கொண்டதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிவியா, பரகுவே, ஆர்ஜென்ரீனா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய தென்அமெரிக்க நாடுகளில் கல்லம் மக்ரே இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை காண்பித்து வருகிறார். அவர், அமெரிக்கா சென்று, நியூயோர்க் மற்றும் வொசிங்டனில், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இந்த ஆவணப்படத்தை திரையிட்டுக் காண்பிக்கவுள்ளார். அதன் பின்னர், ஜெனிவாவிலும் ஐ.நா தலைமையக வளாகத்தில் இதனை காண்பிக்கவும் கல்லம் மக்ரே திட்டமிட்டுள்ளார்.

01 செப்டம்பர் 2015

சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாம்!சிங்கக்கொடி சம்பந்தர் சொல்கிறார்!

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஞாயிறன்று கொழும்பில் கூடிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் (டெலோ, ஈபிஆர்எல்எஃப், பிளாட்) நான்காவது பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தன. நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான ஆட்களை நியமிப்பதில் இந்த கட்சிகளுக்கு அதிருப்தி நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் பின்னணியில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கொழும்பில் இரண்டாவது முறையாக கூடி தமக்குள் விவாதித்திருந்தனர். செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணை அறிக்கையின் அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள விசாரணையும் சர்வதேச விசாரணையாக அமைய வேண்டியதன் அவசியம், அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவன ரீதியாகச் செயற்பட வேண்டியதன் தேவைகள், முக்கியத்துவம் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார். இந்த கூட்டம் குறித்தும், அதில் தமிழரசு கட்சிக்கு வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும் பிபிசி தமிழோசையின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர், இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணையையே தாமும் தமது கட்சியும் வலியுறுத்தி வந்ததாகவும், சென்ற ஆண்டு பங்குனி மாதம் சர்வதேச விசாரணை கோரி ஒரு ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சிலநாட்களில் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

நன்றி:பிபிசீ  தமிழோசை