பக்கங்கள்

16 ஜூன் 2020

சீமானுக்கு அவுஸ்திரேலிய பா.உ.ஹக் நெகிழ்ச்சிக் கடிதம்!

அவுஸ்திரேலியா வாழ் தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட, அவுஸ்திரேலியாவின் நியூ வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர், ஹக் மெக்டெர்மொட், இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை தான் உறுதிப்பட நம்புவதாகத் கூறியுள்ளதற்கு, சீமான் ஆதரவளித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடத்தப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், கடந்த மே-18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி அவுஸ்திரேலியா வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர். அப்போது இதில் கலந்து கொண்ட, அவுஸ்திரேலியாவின் நியூ வேல்ஸ் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மொட், இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை தான் உறுதிப்பட நம்புவதாகவும், இலங்கை அரசின் இந்த மனித உரிமை மீறல் செயலுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்று தரும் வரை, தொடர்ந்து தனது குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.மேலும், நினைவேந்தல் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், `இலங்கையில் தமிழ் மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இனப்படுகொலையில், நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அனைவருமே மொழி, கலாசாரம், மத நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் மரபுகள் அடிப்படையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இனப்படுகொலைக்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்க வேண்டும். இலங்கை அரசால் நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையை நாம் ஒருபோதும் மறக்காமல் இருக்க பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் நீதி வழங்க வழிவகை செய்ய வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் நீதியை வேண்டி நிற்கும் இலங்கைத் தமிழர்களுக்குத் தனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் அனைத்து விதமான போராட்டங்களிலும் உடன் இருப்பேன் என்று கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஹக் மெக்டெர்மொட்டின் இந்தக் கருத்துக்கு, அவுஸ்திரேலியா வாழ் சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்பட தெரிவித்து வருகின்றனர். மேலும், உலக நாடுகளில் வசிக்கும் சிங்களவர்களை ஒன்றிணைத்து, அவருக்கு எதிராக இணைய வழி கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகின்றனர். ஹக் மெக்டெர்மொட்டின் கருத்துகளை அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் ஏற்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.இந்த கையெழுத்து இயக்கத்தில் சுமார் 10,000 சிங்களவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஹக் மெக்டெர்மொட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, அவருக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார். அதில், இலங்கைத் தமிழர்களுக்கென உலக அரங்கில் ஆதரவு கரம் நீட்டவோ, குரலெழுப்பவோ யாரும் இல்லாத சூழலில், அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மொட் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகிறார். அண்மையில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில், உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் எனச் சொல்ல மறுத்து போர்க் குற்றம் எனக் குறிப்பிட்டுப் பேசும் சூழலில், ஹக் மெக்டெர்மொட் அங்கு நடத்தப்பட்டது இனப்படுகொலையே என உறுதிப்படக் கூறி வருகிறார். அவரின் பேச்சை ஏற்க இயலாத அவுஸ்திரேலியா வாழ் சிங்களவர்கள் அவரின் கருத்துக்கு எதிராகப் பேசியுள்ளதோடு, அவருக்கு எதிராகக் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை கொண்ட சிங்களவர்கள் நடத்திவரும் கையெழுத்து இயக்கத்தில் 10,000 பேர் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஹக் மெக்டெர்மொட்டுக்கு ஆதரவாக சுமார் 5,000 கையெழுத்துகளே போடப்பட்டிருக்கின்றன. தமிழர்களுக்காக ஒலிக்கும் ஹக் மெக்டெர்மொட்டின் கருத்துக்கு ஆதரவாக தமிழ் மக்களை கையெழுத்து இயக்கத்தில் பங்கு கொள்ள அழைப்பதாக கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், சீமானின் காணொலி வெளியானதற்குப் பிறகு, சுமார் 1,25,000 கையெழுத்துகளை இயக்கம் எட்டியுள்ளது. சீமானின் காணொலி வெளியானதற்குப் பிறகு, தனக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பெருகியதைத் தெரிந்துகொண்ட ஹக் மெக்டெர்மொட், சீமானுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் இனப்படுகொலை என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுவது கட்டாயமாகும்.இலங்கை அரசின் இனப்படுகொலை செயலைக் கண்டித்து உலக நாடுகளின் அரசாங்கங்கள் நீதி வழங்க முன்வர வேண்டும். எனக்கு எதிராக சிங்களவர்களால் நடத்தப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்டுவரும் தமிழ் மக்களின் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும், ஆதரவு வழங்குவதற்காக மின்னஞ்சல், தொலைபேசி எனப் பல நூறு அழைப்புகள் வந்துள்ளதை எண்ணி பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். சீமான் உள்ளிட்டோருடன் இணைந்து இலங்கையில் நடைபெற்ற அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் பெருமிதம் கொள்வதாகவும், இலங்கை அரசாங்கத்தால் எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் நான் தொடர்ந்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவேன் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:சுடர் செய்தி

15 ஜூன் 2020

கஜேந்திரகுமார் தலைமையில் தேர்தல் தொடர்பிலான கலந்தாய்வு!


யாழ்ப்பாண மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நல்லூர் இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதற்கான பரப்புரைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

13 ஜூன் 2020

நினைவேந்தல்களை எட்டியும் பார்த்திராதவர் சுமந்திரன்!

விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூருகின்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிராத சுமந்திரன், திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம் தேர்தல் நெருங்குகின்றது – தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் என்ற கருத்தையே சொல்லி நிற்கின்றது. தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்புக்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும்.”இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பது மற்றும் கோட்டாபய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவர்களுக்கு தமது கட்சியில் இடம் கொடுப்போம் என்றும், போராளிகள் தியாகங்கள் செய்தவர்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார். அவருடைய இந்தக் கருத்துகள் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லுகின்றது. தேர்தல் நெருங்கிவிட்டது. ஆகவே, நாங்கள் ஏமாற்றுவதற்காக வந்துவிட்டோம் என்பதாகும். முன்னாள் போராளிகள் தியாகிகள் என்று சுமந்திரன் கூறுவது வேடிக்கையான விடயம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையோ அல்லது அவர்களின் அரசியல் போராட்டத்தையோ தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் வேலையில்லாத காரணத்தினால் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள் என்று விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய அவர்தான், இன்று போராளிகளை அரசியலில் இணைத்துக் கொள்ளப் போகின்றேன் என்று கூறுகின்றார். இவ்வாறு பேசிய சுமந்திரன் இன்று போராளிகள் தொடர்பில் வெளியிடும் கருத்து தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான முனைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூறகின்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிராத சுமந்திரன், திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம் தேர்தல் நெருங்கிவிட்டது என்ற விடயம் மட்டும்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. சுமந்திரன் போன்ற ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இவர்களை அரசியல் அரங்கிலிருந்து மக்கள் அகற்ற வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசு ஏற்றுக் கொண்டால் தாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவோம் என்று சுமந்திரன் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்மைப்போடு, மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்திருந்த நிலையில், சர்வதேசம் மற்றும் நாடாளுமன்றத்தில் அந்த அரசுக்கு எதிராக எழுந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முழுமையான ஆதரவை வழங்கியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இருப்பினும், அரசியல் தீர்வையும், அடிப்படைப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் போன்ற எந்த ஒரு விடயத்தையும் அவர்களால் செய்து முடிக்க இயலவில்லை. இவ்வாறான நிலையில் மீண்டும் கோத்தாவின் அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, ஏற்கனவே கோட்டாபய அரசின் காலில் விழுந்து, இரகசிய உடன்படிக்கையை செய்துவிட்டார்கள் என்பதையெ தெளிவாகக் காட்டுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மண்ணுக்குள் புதைக்கும் நடவடிக்கைகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடாக இருக்கப் போகின்றது. எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டியது கட்டாயம். தமிழர்களின் அரசியலும், வாழ்வியலும் தொடர்ந்து நிலைக்க வேண்டுமாக இருந்தால், தமிழ் இனஅழிப்புக்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் இந்த வரைபடத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீக்கப்பட வேண்டும்” என்றார்.

02 ஜூன் 2020

ட்ரம்ப் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும்,பொலிஸ் அதிகாரியின் கோபம்!

 george floyd: please, keep your mouth shut if you cant be constructive, houston police chief to trump"இந்த போராளிகள் நாய்கள், திருடர்கள்" என்று அதிபர் ட்ரம்ப் சொல்லி உள்ளதற்கு அமெரிக்க போலீஸ் அதிகாரிகளே கடுப்பாகி உள்ளனர்.. "இந்த நேரத்தில், உங்களால் ஆக்கபூர்வமாக பேசமுடிந்தால் பேசுங்கள், இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்" என்று கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பிளாய்ட்.. வயசு 46 ஆகிறது.. கருப்பின இளைஞரான இவர் கடந்த 27-ம் தேதி 20 டாலருக்கு கள்ள நோட்டு பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டதுடன், காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் தங்களது காலையும் அழுத்தி வைத்து இறுக்கினர்.இதில் துடிதுடித்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார் ஜார்ஜ்.. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி இன்னமும் அதிர்ச்சி விலகாமல் உள்ளது. இந்த சம்பவம் உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது. போராட்டம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போல வளர்ந்த நாட்டில் இன்னமும் இப்படி நிறவெறியா என்று உலக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன.. போலீசார் லத்தியால் அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை சுட்டும், போராட்டக்காரர்களை துரதியடிக்கின்றனர்... ஜார்ஜ் மரணத்துக்கு நீதிகேட்டு போராடுபவர்களில் வெள்ளை இனத்தவர்களும் அதிகம் பங்கேற்றுள்ளனர்.. இதனால் அதிபர் ட்ரம்ப் "நேரத்தை வீணடிக்காதீர்கள்... போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள்" என்று போலீசாருக்கு அட்வைஸ் சொல்லி உள்ளது போராட்டக்காரர்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.. ஏற்கனவே "இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள்" என்று அதிபர் ட்ரம்ப் சொல்லி உள்ளது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசாருக்கு இவ்வாறு அட்வைஸ் தந்துள்ளார். ஆனால் அதிபரின் இந்த வெறியேற்றும் பேச்சு தேவையில்லாத ஒன்று என்று அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் சிலரே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். ஆர்ட் அகவதோ என்ற ஹவுஸ்டன் நகர போலீஸ் கமிஷனர் சிஎன்என் டிவிக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.அதில், "அமெரிக்காவின் அனைத்து காவல்துறை தலைவர்களின் சார்பாகவும், இதை அதிபர் டிரம்ப்புக்கு தெரிவிக்க விரும்புகிறேன்... இது மக்களை அடக்கி ஒடுக்கும் நேரம் கிடையாது.. மக்கள் மனங்களை வெல்ல வேண்டிய நேரம்.. அதனால் இந்த நேரத்தில், உங்களால் ஆக்கபூர்வமாக பேசமுடிந்தால் பேசுங்கள், இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்" என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை பேரிடம்தான் இப்படி அதிபர் வாங்கி கட்டிக் கொள்வாரா?!

01 ஜூன் 2020

அமெரிக்காவில் மக்கள் போராட்டம்,பதுங்கு குழியில் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு எப்போது வேண்டுமானாலும் சிவில் வார் தொடங்கும், உள்நாட்டு யுத்தம் பெரிதாகும் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவில் தற்போது நடக்கும் போராட்டங்கள் குறித்து பார்க்கும் முன், இந்த போராட்டத்திற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பல நூறு வருடங்களாக கறுப்பின மக்கள் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அங்கு போலீஸ் மூலமும், அரசு மூலம் தொடர்ந்து கருப்பின மக்கள் ஒடுக்கப்பட்டு வருகிறார்கள். போலீஸ் என்கவுண்டர் தொடங்கி தவறான குற்றச்சாட்டுக்கு சிறை தண்டனை வரை பல விஷயங்களை கருப்பின மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.தற்போது இந்த அழுத்தங்கள் எல்லாம் சேர்ந்து போராட்டமாக உருவெடுத்து உள்ளது. இந்த போராட்டங்களுக்கு பின் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின இளைஞர் ஒருவரின் கொலைதான் காரணம். கடந்த 27ம் தேதி அமெரிக்காவின் மின்னேபோலிஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது இளைஞர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையின் போதே இவர் கொலை செய்யப்பட்டார்.20 டாலருக்கு இவர் கள்ள நோட்டு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்த போது, இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் போலீசார் காலை வைத்து அழுத்தி இருக்கிறார். இதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. போலீசின் இந்த வெறிச்செயல் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.இந்த நிலையில் இந்த கொலை காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. அங்கு முதலில் மின்னேபோலிஸ் பகுதியில் வெடித்த போராட்டம் தற்போது நாடு முழுக்க பரவி உள்ளது. முக்கிய நகரங்களில் போராட்டம் வெடித்து இருக்கிறது. வாஷிங்டன் டிசி, நியூயார்க், கலிபோர்னியா, மின்னெசோட்டா ஆகிய பல மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பல லட்சக்கணக்கில் அங்கு கறுப்பின மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் தற்போது அங்கு வெள்ளை மாளிகை சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. நேற்று அமெரிக்காவின் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகம் நோக்கி மக்கள் திரளாக சென்றனர் . ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்டு மக்கள் எல்லோரும் அங்கு வெள்ளை மாளிகை நோக்கி சென்றனர். வெள்ளை மாளிகையை முற்றுகையிடும் வகையில் அங்கு மக்கள் குவிந்து போராட்டம் செய்தனர். இதனால் தேசிய பாதுகாப்பு படை குவிக்கப்பட்டது.வெள்ளை மாளிகை வெளியே பெரிய அளவில் போராட்டம் வெடித்து அது கலவரமாக மாறியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே அங்கு பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு படையும் அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதிபர் டிரம்ப் இருக்கும் வெள்ளை மாளிகைக்கு வெளியேதான் இத்தனை கலவரங்கள், சண்டை நடந்துள்ளது. வெள்ளை மாளிகையை மொத்தமாக சுற்றி வளைக்கும் வகையில் இந்த போராட்டம் நடந்தது.இந்த நிலையில் இந்த போராட்டம் காரணமாக தற்போது அதிபர் டிரம்ப் அங்கு வெள்ளை மாளிகை உள்ளே பதுங்கி உள்ளார். அங்கிருக்கும் பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார். அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்ட பங்கரில் அதிபர் டிரம்ப் பதுங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் இப்படி பங்கரில் பதுங்குவது சாதாரண விஷயம் இல்லை.இதனால் அமெரிக்கா மொத்தமாக நிலைகுலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு போராட்டம் கைமீறி போய் உள்ளது. இப்படியே போனால் மக்கள் அங்கு வெள்ளை மாளிகையை கைப்பற்ற கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், அங்கு ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக 5 போராட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள். 1:5 என்ற ரீதியில் போராட்டம் நடப்பதால் போலீசால் அங்கு போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.அமெரிக்காவில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அங்கு எப்போது வேண்டுமானாலும் சிவில் வார் தொடங்கும், உள்நாட்டு யுத்தம் பெரிதாகும் என்று கூறுகிறார்கள். அங்கு கடைசியாக 155 ஆண்டுகளுக்கு முன் 1865ல் உள்நாட்டு யுத்தம் நடை பெற்றது. ஆப்ரஹாம் லிங்கன் ஆட்சி காலத்தில் அங்கு உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா இடையில் இந்த உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது.தற்போது அங்கு மீண்டும் யுத்தம் நடைபெறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளையர்களுக்கு இடையிலான போராட்டமாக இது உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உள்நாட்டு போராக மாறலாம். அல்லது அமெரிக்காவில் புதிய புரட்சி வெடிக்க இது வாய்ப்பாக அமையும் என்று கூறுகிறார்கள். இனி வரும் நாட்கள் அமெரிக்காவில் இன்னும் நிலைமை மோசம் அடையும் என்கிறார்கள்.