பக்கங்கள்

27 ஜூன் 2017

புளியங்கூடல்-கனடா மக்கள் ஒன்றியம் விடுக்கும் அழைப்பு!

புளியங்கூடல்-கனடா மக்கள் ஒன்றியத்தின் இவ்விழா சிறப்புற புளியங்கூடல்.கொம் குழுமம் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றது.

புளியங்கூடல் அம்பாள் ஆலய மின் ஒளியால் பதற்றமான குடாநாடு!

பறக்கும் தட்டு பறப்பதாக நேற்றிரவு பரவிய வதந்தியால், யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வீதியில் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். புளியங்கூடல் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் நேற்றிரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பயன்படுத்திய பெரிய மின் விளக்குகள் வானை நோக்கி செலுத்திய ஒளி, திரண்ட முகில் கூட்டங்கள் மீது பட்டு அவை பாரிய ஒளிவட்டங்களாக தென்பட்டன. இதனைச் சிலர் பறக்கும் தட்டு என்று வதந்தியைக் கிளப்பி விட்டனர். இந்த செய்தி 3 மணித்தியாலங்களாக குடாநாடெங்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீதிக்கு வந்து மக்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனினும், அந்த ஒளிவட்டத்திற்கான காரணம் தெரியவர மக்கள் பதற்றம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தனர்.

21 ஜூன் 2017

மீளப்பெறப்பட்டது நம்பிக்கையில்லாப் பிரேரணை!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கடந்தவாரம் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று திரும்பப் பெறப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் ஆயுப் அஸ்மின் ஆகிய இருவரும் இணைந்து,வட மாகாண ஆளுநரிடமிருந்து அந்தப் பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.

18 ஜூன் 2017

தனித்துச் செயற்பட பங்காளிக் கட்சிகள் யோசனை!

முதலமைச்சருக்கு எதிரான தமிழரசுக் கட்சி மாகாணசபை
உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சி அரச கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையாக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எப், ரெலோ,புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கியுள்ளன. இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக் கட்சி உடனடியாக மீளப்பெறாவிட்டால்பாராளுமன்றத்திலும் இம் மூன்று பஙகாளிக் கட்சிகளும்,தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகவும் இது தொடர்பில்இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

15 ஜூன் 2017

முதல்வரை விலக்கினால் தமிழரசுக் கட்சியுடன் தொடர்பு துண்டிப்பு!

எதிர்க்கட்சியினருடன் இணைந்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை விலக்கினால் தமிழரசுக் கட்சியுடனான சகல தொடர்புகளையும் தமது கட்சி துண்டிக்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வடக்கு மாகாண முதலமைச்சரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக்கட்சி வகுத்திருக்கும் வியூகங்கள் குறித்து பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த விடயம் தொடர்பாக சுரேஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”வடக்கு மாகாண முதலமைச்சர் என்பவர் ஒட்டு மொத்த வடக்கு மக்களின் பிரதிநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி. அவரை கடந்த 2013இல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் இணைந்தே அதற்கான முன்மொழிவை வைத்தன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு இன்று முதலமைச்சராக உள்ள ஒருவரை, ஏனைய பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு தமிழரசுக்கட்சி மாத்திரம் முடிவெடுத்து மாற்ற முடியாது. மாற்றுவதற்கும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியதாக வடக்கு மாகாண சபையிலும் அதற்கு வெளியிலும் செயற்படுபவர். அவ்வாறானவர், ஊழல் மோசடிகளைச் செய்தவர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக்க முற்படும் போது, தமக்கு சார்பானவர்களைக் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சியின் துணை கொண்டு தமிழரசுக்கட்சி முதலமைச்சரையே விலக்க முற்படுவதானது, ஊழல் மோசடிக்காரர்களைப் பாதுகாப்பதாக அமைகிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிலேயே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்கு மாகாண சபையின் 2 சிங்கள உறுப்பினர்கள், 3 முஸ்லிம் உறுப்பினர்களின் துணைகொண்டு முதலமைச்சருக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதாக இருந்தால், அது தமிழரசுக்கட்சி மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவும் இணைந்தே அதனைக் கொண்டு வருவதாக அர்த்தம். மூச்சுக்கு 300 தடவை தந்தை செல்வாவின் பெயரைச் சொல்லும் தமிழரசுக்கட்சியா தமிழர் விரோத செயற்பாட்டைச் செய்கின்றது? தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை ஈ.பி.ஆர்.எல்.எப். கடுமையாக எதிர்க்கின்றது. முதலமைச்சரை வெளியேற்றும் தீர்மானத்தை அக்கட்சி கொண்டு வந்தால், கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியுடனான தொடர்புகளை ஈ.பி.ஆர்.எல்.எப். துண்டிக்கும். மக்களும் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை நிராகரிப்பார்கள். நீதி கேட்டு வீதிக்கு இறங்குவார்கள்’ என்றார்.

06 ஜூன் 2017

தம்பாட்டியில் ஐவர் கைது!

பாடசாலை மாணவர்கள் மூவரை தகாத உறவுக்குட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த 5 பேரை ஊர்காவற்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 ல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை 8 நபர்கள் அப்பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி தகாத உறவுக்குட்படுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து  பொலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது 3 நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஏனைய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

05 ஜூன் 2017

தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு நாள்!

தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு நாள் இன்றாகும்! இன்று தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 43ம் ஆண்டு நினைவு
தினமாகும்,26.08.1950ல் யாழ்,உரும்பிராயில் பிறந்த பொன்.சிவகுமாரன் அவர்கள் சிங்கள அரசின் கல்விதரப்படுத்தலுக்கு எதிராக போராட்டக்களத்தில் குதித்து வீரகாவியமான முதல் மாவீரன் என்ற பெருமைக்குரியவரானார்.தமிழ் துரோகி ஒருவனால் 05.06.1974ல் காட்டிக்கொடுக்கப்பட்டு சிங்களப்படைகள் சுற்றி வளைத்தவேளை நஞ்சருந்தி தன்னைத்தானே அழித்து முதற்களப்பலியானார்.இந்த மாவீரனது நினைவுகளை சுமந்தபடியே அவனது கனவுகளை நனவாக்க போராட்டக் களத்தில் நகர்ந்து செல்கிறது தமிழினம்.வரலாற்று ஏடுகளில் பொன் சிவகுமாரனின் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்.

(நன்றி:காவலூரான்)

04 ஜூன் 2017

லண்டன் தாக்குதலில் 7பேர் பலி,48பேர் காயம்!

லண்டன்லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார். அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன. இந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்தவுள்ளார். மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது. மார்ச் மாதத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது நுழைந்து மோதியது, பின்னர் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு பொலிசார் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:பிபிசி தமிழ் 

02 ஜூன் 2017

திருமுருகன் காந்திக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!

ஈழத்தமிழர் படுகொலையை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை அனுஷ்டித்தமைக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம். ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டு என்பதற்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் தமிழ் மக்கள் பேரவை, சிவில் அமைப்புக்கள் ,தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கமும், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் உலக வல்லரசுகளும் சேர்ந்து இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பை மூடி மறைக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஜேர்மன் பிறைமன் நகரில் நடைபெற்ற நிரந்தர தீர்ப்பாயமொன்றில் கலந்து கொண்டு மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் சேர்ந்து இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொண்டது என்பதை நிரூபிப்பதற்காகக் கடுமையாகப் பாடுபட்டவர். தன் சொந்த நாடான இந்தியா ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்து விட்டது என்பதை அந்த நாட்டிலிருந்தவாறு எந்தவித தயக்கமுமின்றி அம்பலப்படுத்தி வருபவர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்ற போது அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அமர்வுகளிலும் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் அழுத்தமான வகையில் குரல் கொடுத்து வருபவர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஜெனிவாவில் பக்க அறைகளில் அரசதரப்பினர் கலந்து கொண்டு பொய்ப் பிரச்சாரங்களை செய்கின்ற போது அதனை முற்றுமுழுதாக முறியடிக்கும் வகையில் திருமுருகன் காந்தி செயற்பட்டு வருகிறார். இவ்வாறு தமிழ்மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைத் தலைமை தாங்கி நடத்துவது மிகவும் பொருத்தமானது. தமிழக அரசு இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கின்ற போது அதனையும் மீறி நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் இவ்வாறான அடக்குமுறையான செயற்பாடு கண்டனத்துக்குரியது. தமிழக மக்களும் ஈழத்தமிழர்களும் இணைந்து இவ்வாறான அடக்கு முறையான செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.