பக்கங்கள்

28 ஜூன் 2018

சுழிபுரம் சிறுமி படுகொலை!நீதி கோரி மக்கள் போராட்டம்!


மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக பொலிஸார் விடுவித்ததைக் கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டும், இன்றும் நாளையும்  போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிக்கு புறம்பாக பொலிஸார் விடுவித்ததைக் கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டும், இன்றும் நாளையும் போராட்டங்கள் நடத்த சுழிபுரம் காட்டுப்புலம் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்பு நடத்தி மாணவியின் படுகொலைக்கு நீதிகோர வேண்டும் என காட்டுப்புலம் அபிவிருத்திச் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது - 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என ஒருவரை மட்டும் பிரதான சந்தேகநபராக குறிப்பிட்ட வட்டுக்கோட்டை பொலிஸார், ஏனைய ஐந்து பேரையும் பொலிஸ் பிணையில் விடுவித்தனர். சந்தேகநபர்கள் 6 பேரையும் தாங்களே பிடித்துக் கொடுத்ததாக குறிப்பிடும் காட்டுப்புலம் மக்கள், நீதிக்கு புறம்பாக 5 சந்தேகநபர்களை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தாமல் பொலிஸார் விடுவித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். பொலிஸாரின் இந்தச் செயற்பாடு தமக்கு அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்தும் மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டும் சுழிபுரம் சந்தியில் இன்று காலை 7 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் படுகொலைக்கு நீதிகேட்டு வடக்கு முழுவதும் நாளை வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க காட்டுப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கம் கேட்டுள்ளது. இதுதொடர்பில் அனைத்து தரப்புகளுடனும் இன்று பேச்சுக்கள் நடத்தப்படும் எனவும் அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடத்துவர்கள் பொலிஸாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப வேண்டாம் என சிலரிடம் தனிப்பட்ட முறையில் கோரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. வட்டுக்கோட்டை பொலிஸார் தொடர்பில் காட்டுப்புலம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு அறிக்கையிட்டுள்ளதையடுத்தே பொலிஸ் அதிகாரி ஒருவர் அரசியல் தரப்புகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

24 ஜூன் 2018

கனடாவில் அபிசா யோகரெத்தினம் பெற்றுள்ள கெளரவம்!


கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாக சபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் என்ற  பெற்று சாதனை படைத்துள்ளார்.
கனடா ரொரன்றோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய University Health Network எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டினையும் அதன் நிர்வாக சபை உறுப்பினர் பதவியையும் ஈழத்தைச் சேர்ந்த அபிசா யோகரத்தினம் பெற்று சாதனை படைத்துள்ளார். அபிசா யோகரத்தினம் தனது முதற்பட்டப்படிப்பில் முதன்மை தேர்ச்சி பெற்று அதனூடாக மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் பெற்று அதன் முதல் ஆண்டிலேயே மீண்டும் முதன்மை நிலையை எய்தி அதியுயர் விருதைப் பெற்றுள்ளார். அது மட்டுமல்ல தனது ஆராய்ச்சிகளினூடாக ரொரன்ரோவின் முன்னணி வைத்தியசாலைகளை உள்ளடக்கிய யூனிவசிற்றி கெல்த் நெற்வேக் எனப்படும் உலக முதன்மை மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அதியுயர் பாராட்டைப் பெற்று அதன் நிர்வாகசபை உறுப்பினர் பதவியையும் தனதாக்கியுள்ளார்.

14 ஜூன் 2018

புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்று தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றமே தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை எனத் தீர்பளித்தது. 


குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


 சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு.யோகேஸ், திரு.கவிதாஸ், திரு.சிவலோகநாதன், திரு.குமார் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பொறுப்புகளில் இருந்த மூவரான திரு.குலம், திரு.அப்துல்லா, திரு.மாம்பழம் ஆகியோர் மீது வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காகத் தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.


 அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகள் அனைத்தையும் சுசிற்சர்லாந்து நடுவண் அரசின் குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது.


 சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்ததற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக விளக்கத்தையும் அளித்துள்ளது.

ஞானசார தேரருக்கு ஆறு மாதச் சிறை!

பௌத்த பிக்குவுக்கு சிறைபொதுபல சேனா என்ற அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று, வியாழக்கிழமை, தீர்ப்பளித்தது.இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஆறு மாதம் வீதம் ஒரே நேரத்தில், இந்தத் தண்டனையை கழிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார். காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலியகொடவின் மனைவி சந்தியா எக்நெலியகொடவிற்கு அவதூறாக பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக இந்த பௌத்த பிக்கு மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி, ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதவான், வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார்.குற்றவியல் சட்டம் 386 மற்றும் 486 என்ற பிரிவுகளின் கீழ் துன்புறுத்தியமை, அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு இந்தத் தண்டனையை விதிப்பதாக நீதவான் அறிவித்தார். ஒரு குற்றத்திற்கு ரூபாய் 1,500 வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு ரூபாய் 3,000 அபராதம் விதிக்கப்பட்டது. சந்தியா எக்நெலியகொடவிற்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார். இந்த நட்ட ஈட்டை வழங்காவிடின், அதனை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாத கால சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதவான் குறிப்பிட்டார். நீதவான் தீர்ப்பை வாசித்த பின்னர், குற்றவாளிக்கூண்டில் நின்ற ஞானசார தேரர், தனது கருத்தைத் தெரிவிக்க சந்தர்ப்பமளிக்குமாறு கூறியதுடன் ''நீதித்துறை மட்டுமே இருக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.இதற்கு வாய்ப்பளிக்க முடியாது எனக் கூறிய நீதவான், தேவையெனில், தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்யுமாறு கூறினார். இதன்பின்னர், ஞானசார தேரரை சிறைச்சாலை பேருந்தில் ஏற்ற அழைத்துவந்தபோது அங்கு பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட தேரர் பலர் கூடியிருந்ததுடன், அங்கு சற்று பதற்றமும் ஏற்பட்டது. பொது பலசேனா என்ற அமைப்பும், அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இலங்கையில் சர்ச்சைக்குரிய தரப்பாகவே கடந்த காலம் முதல் பார்க்கப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

நன்றி!பிபிசி தமிழ்

12 ஜூன் 2018

பாவப்பட்ட பணத்தை தவராசாவின் வீட்டின் முன் எறிந்த மாணவர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில்,கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை, அவரது வீட்டின் முன்னால் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர். கடந்த மே மாதம் 18 ஆம் திகதி,முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாண சபையினால் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வுக்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500 ரூபாய் பணம் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார். ஆனாலும் அந்த பணத்தையும் சேர்த்தே, நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தவராசாவுக்கு வழங்குவதற்காக ஒரு ரூபாய் வீதம் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர்.எனினும் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதன் பின்னர் முதலமைச்சரிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது, அவைத்தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர், மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டோம்.ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் அப்பணத்தை பொட்டலமாக கட்டிய மாணவர்கள் ‘பாவப்பட்ட பணம்’ என எழுதி எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இல்லாத நிலையில், பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கு முன்னால் எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் இன்றைய மாகாணசபை அமர்விலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது தமிழரின் அடிமைப்புத்தி!

விஸ்வமடு பகுதியில் இராணுவ அதிகாரி கேணல் பந்து இரத்னபிரியவிற்கு கண்ணீர் மல்க முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் பிரியாவிடை கொடுத்திருப்பது எமது மக்களின் சபலபுத்தியைத் தான் காட்டுகின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ' நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு இராணுவ அதிகாரியை தோளில் சுமந்து கொண்டு செல்வது தமிழ் மக்களின் அடிமைப்புத்தியைத்தான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றது. இவர் நல்லவர், அவர் நல்லவர் என சாதாரண கிராம மக்கள் இதை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் முன்னாள் போராளிகள் இதனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என வெடித்துச் சிதறி வீரச்சாவை தழுவிக்கொண்ட ஐம்பதாயிரம் மாவீரர்களுக்கு செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதை கருதுகின்றேன். அவர் ஒரு அதிகாரி, நல்லவராக அல்லது நேர்மையாக நடந்து கொள்ளலாம், ஆனால் நீங்கள் இவ்வாறு செய்வதென்பது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச்செல்லும். ஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம், தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம் அது வேறு விடயம். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு, விழா எடுத்து, தோளில் சுமந்துகொண்டு செல்வது என்பது எங்களுடைய அடிமை புத்தியைத்தான் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

10 ஜூன் 2018

திருமலை அரசியற்றுறை பொறுப்பாளர் ஐங்கரன் மாரடைப்பால் சாவடைந்துள்ளார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர் திரு ஐங்கரன் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் சாவடைந்தார். மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் , தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவராவார் .

நன்றி:பதிவு

08 ஜூன் 2018

ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் தமிழர் வெற்றி!


கனடா- ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக  ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.  ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத்துக்கு நேற்று தேர்தலில், இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க்  தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார்.
கனடா- ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத்துக்கான நேற்றைய தேர்தலில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு, 16,224 வாக்குகள் கிடைத்துள்ளன. தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பெலிசியா சாமுவெல், 15,261 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம். 963 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார். லிபரல் கட்சி வேட்பாளர் சுமி சான் 8785 வாக்குகளையும், பசுமைக் கட்சியின் வேட்பாளர் பிரியன் டி சில்வா 1014 வாக்குகளையும், பெற்றுள்ளனர். இதற்கிடையே இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஒன்ராரியோ சட்டமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்வர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது. தேசிய ஜனநாயக கட்சி 39 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாமிடத்திலும், லிபரல் கட்சி 7 ஆசனங்களுடன் மூன்றாமிடத்திலும், பசுமைக் கட்சி 1 ஆசனத்துடன் நான்காமிடத்திலும் உள்ளன.

01 ஜூன் 2018

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்!

புளியங்கூடல் செருத்தனைப்பதியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08.06.2018 காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இனிதே நடைபெறவுள்ளது.21.06.2018 வியாழக்கிழமை 14ம் நாள் வேட்டைத் திருவிழாவும் 23.06.2018 சனிக்கிழமை 16ம்  நாள் தேர்த் திருவிழாவும் 24.06.2018 ஞாயிற்றுக்கிழமை 17ம்  நாள் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 25.06.2018  திங்கட்கிழமை 18ம்  நாள் பூங்காவனத் திருவிழாவுடன் அம்பாள் ஆலய இவ்வாண்டின் வருடாந்த திருவிழா நிறைவு பெறவுள்ளது.விழா தொடர்பான அறிக்கை ஆலய அறங்காவலர் சிவஞானச்செல்வம் செந்தூரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.