பக்கங்கள்

15 டிசம்பர் 2018

மகிந்த இராஜினாமா செய்தார்!


மகிந்த ராஜபக்‌க்ஷஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் நடந்த மத வழிபாடுகளுக்கு பின்னர், மகிந்த ராஜபக்ஷ ராஜினாமா கடித்தில் கையெழுத்திட்டார். தேசிய ஸ்திரதன்மையை நிலைநாட்ட தனது தந்தை பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக பிபிசியிடம் தெரிவித்தார் நாமல் ராஜபக்ஷ. இதன்மூலம் இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றும் வரும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிரதமர் யார்? இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமராக மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன பிபிசிக்கு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையேயான டிசம்பர் 14ஆம் தேதி நடந்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.திங்கட்கிழமை புதிய அரசாங்கம் பதவியேற்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக, இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்தார்.ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ளும் எந்த எதிர்பார்ப்பும் தனக்கு இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தச் சந்திப்பின்போது தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.எனினும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கக்கூடாது என ஜனாதிபதி தெரிவித்தாரா எனக் கேட்டபோது, ''அப்படி கூறவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எந்தவொரு உறுப்பினரும் இதற்கு ஒத்துழைக்கக்கூடாது'' என்றே கூறியதாக லக்ஸ்மன் யாபா தெரிவித்தார்.இருப்பினும், மகிந்த ராஜப‌க்ஷ பதவி விலகுவது குறித்தோ, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பார் என்பது குறித்தோ ஜனாதிபதி செயலகமோ, ஜனாதிபதி ஊடகப் பிரிவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

06 டிசம்பர் 2018

இரும்புக் கம்பியுடன் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள்!

மன்னார்- மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று 112 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற போது, இரண்டு கால்களும் இரும்பு கம்பியுடன் இறுக்கக் கட்டப்பட்ட நிலையில், இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது. சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடய பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

02 டிசம்பர் 2018

புலிகளின் புலனாய்வுப் பிரிவே பொலிஸாரின் கொலைக்கு காரணமாம்!


மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், நேற்று மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் எனவே அவர்களைப் பழிவாங்கவே விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸார் இருவரையும் சுட்டுக்கொன்றதாகவும் பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் என பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. இக் கொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக மட்டக்களப்புக்கு சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, குறித்த நிகழ்வை நடத்துவதில் சிக்கல் தன்மை நிலவியமையினால், குறித்த இரண்டு பொலிஸ் அலுவலர்களும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸ்தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. 48 வயதுடைய குறித்த நபரை சந்தேகத்துக்குரியவர் என கிளிநொச்சி வட்டக்கச்சி - ஹட்சன் வீதியில் வைத்து நேற்றைய தினம் சிறீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.