பக்கங்கள்

23 செப்டம்பர் 2019

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடக அறிக்கை!

நீதிமன்ற தீர்ப்பை மீறி இந்து ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்ட பௌத்த பிக்குவின் பூதவுடல்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
23-09-2019
ஊடக அறிக்கை.

புத்த பிக்குவின் உடல் சைவக் கோவிலின் வளாகத்தில் எரியூட்டப்பட்டமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் பொது மக்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இடம்பெறவுள்ள கண்டனப் போராட்டத்திற்குப் பூரண ஆதரவு.
முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்றுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய வளவை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த புத்த கோவிலின் பிக்கு உயிரிழந்த நிலையில் இவரது உடலை பிள்ளையார் ஆலய வளவினுள் தகனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினால் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. ஞனசாரதேரர் தலைமையிலான சிங்கள பௌத்த சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முன்னிலையில் நீதி மன்றின் உத்தரவை மீறி பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிப் பகுதியில் தகனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது செயலைத் தடுப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறக நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களை குறித்த பொலிஸ் அதிகாரியும், பொலீசாரும் இணைந்து அச்சுறுத்தியதுடன், பிக்குகளின் அடாவடித்தனமான செயற்பாட்டிற்கும் உறுதுணையாகச் செயற்பட்டிருந்தனர். நீதி மன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடலைத் தகனம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோதமான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு அங்கு திரண்டிருந்த தமிழ் மக்களுடன் இணைந்து சட்டத்தரணிகள் முயன்றபோது சட்டத்தரணி சுகாஸ் உட்பட நான்கு பேர் பிக்குகளினால் கடுமையாகத் தக்கப்பட்டுள்ளனர். சைவசமயத்தவர்களின் புனிதத் தலங்களில் ஒன்றான நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணியருகில் பிக்குவின் உடலம் எரிக்கப்பட்டமைக்கும், சட்டதரணி சுகாஸ் மற்றும் பொது மக்கள் மூவர் தாக்கப்பட்டமைக்கும் எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாளை செவ்வாய்க்கிழமை (24-09-2019) காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவு பழைய ஆஸ்ப்பத்திரியடி (உண்ணாப்பிலவு) முன்பாக ஒன்று கூடி பேரணியாக கச்சேரி செல்ல தமிழர் மரபுரிமைப் பேரவை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கண்டனப் போராட்டத்திற்குப் பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைத்துத் தமிழ் மக்களையும் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

மறு பிறப்பில் கூட ராஜபக்சக்கள் இருக்கும் இடத்தில் பிறந்து விடக்கூடாது!

கொள்ளையர்கள் மற்றும் கொலைக்காரர்களான ராஜபக்சவினரிடம் தான் ஒரு போதும் சரணடையப் போவதில்லை எனவும் மறு ஜென்மத்தில் கூட ராஜபக்சவினர் பிறக்கும் இடங்களில் பிறக்கக் கூடாது எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். அதேபோல தான் நன்றி கெட்ட ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை எனவும் அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தமக்கு அரசியலை தொடருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தால், அந்த கட்சிக்கு தாம் செய்த தவறுகளை உணர்ந்து அனைத்து தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இதை பயன் படுத்திக்கொள்வேன் எனவும்  தெரிவித்துள்ளார்.

22 செப்டம்பர் 2019

சர்ச்சைக்குரிய பிக்குவின் உடல் அடக்கத்திலும் சர்ச்சை!

புற்றுநோயினால் மரணமான பௌத்த பிக்குவின் உடலை நாளை காலை நீதிமன்றம் கூடி உத்தரவு பிறப்பிக்கும் வரை, பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது என முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதpவான் உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு பழைய செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்று மகரகம வைத்தியசாலையில் மரணமடைந்தார். மரணமடைந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு கொண்டுவந்து இறுதிகிரியைகளை மேற்கொள்வதற்கு இராணுவம் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடை கோரி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சுதர்சன் முன்னிலையில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது . இதன்படி நாளை காலை 9 மணிக்கு விகாரை தரப்பினரையும் பிள்ளையார் ஆலய தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நாளையதினம் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றால் கட்டளை ஒன்று ஆக்கும்வரை குறித்த பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது எனவும் - அதுவரையான காலப்பகுதியில் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் கடமையில் ஈடுபடவேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தநிலையில் இறந்த பௌத்த பிக்குவின் சடலம் பழைய செம்மலை நீராவியடியில் ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது . சிங்கள மக்கள் சிங்கள மாணவர்கள் பொதுஜன பெரமுன கட்சியினர் உள்ளிட்டவர்கள் பௌத்த பிக்குவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

18 செப்டம்பர் 2019

திலீபன் வழியில் வருகின்றோம்...!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து - வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் ஏற்பாடு
செய்யபட்டுள்ளது. எதிர்வரும் 21.09.2019 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகும் நடை பயணமானது, தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பயணத்துடன் யாழ்ப்
பாணத்தை சென்றடையும். அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு நிகழ்வு ஏற்பாட்டு குழுவினர் கோரியுள்ளனர்.

14 செப்டம்பர் 2019

பின்லாந்து கல்விமுறை பற்றிய ஒரு பார்வை!

எப்படி தம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு நாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது என்கிறார் சுவீடனில் நானோ தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய் அசோகன். மாணவர்களின் திறனை மேம்படுத்துவது போலத்தான் பின்லாந்து கல்வி முறை உள்ளதே அன்றி மாணவர்களையே மதிப்பிடுவது போல இல்லை என்கிறார் பின்லாந்தில் பணியாற்றி வரும் செந்தில்கண்ணன். பின்லாந்து கல்வி முறை குறித்து பல நேர்மறையான கருத்துக்களை நாம் பெரிதும் கேட்டிருப்போம். சமீபத்தில் தமிழக கல்வியமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து கல்வி முறை குறித்து ஆராய அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். செந்தில் கண்ணன் பின்லாந்தில் மாற்றுக் கல்விக்கான தளத்தில் செயலாற்றி வருகிறார். விஜய் அசோகன் தாய்மொழி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கல்விக்காக கொண்டாடப்படும் பின்லாந்து கல்விமுறை குறித்தும், பள்ளி நுழைவுத் தேர்வுகள் குறித்தும் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.பின்லாந்து கல்வி முறை குறித்து பல கட்டுக்கதைகள் இந்தியாவில் உலவுகின்றன. குறிப்பாக இங்குத் தேர்வு இல்லை, ரேங்க் கார்ட் இல்லை என பலர் பல்வேறு விதமாக தங்களுக்கு பிடித்தபடி பேசி வருகிறார்கள். ஆனால், இவை அனைத்துமே பாதி உண்மைதான் என்கிறார் செந்தில்கண்ணன்."பின்லாந்து பள்ளிகளில் தேர்வு நடக்கும். ஆனால், அது மாணவர்களை மதிப்பிடுவது போல இருக்காது. ஒரு மாணவரை இன்னொரு மாணவரோடு ஒப்பிடுவதற்காக இருக்காது. ஒரு மாணவருக்கு என்ன சிறப்பாக வருகிறது, எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் அறிந்து கொள்வதற்காகவே தேர்வுகள் நடத்தப்படும். அதே நேரம், ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண் அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லப்படும். எக்காரணத்தைக் கொண்டும் மற்ற மாணவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள். யாரையும் யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்பதில் மிக தெளிவாக இருப்பார்கள்" என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் செந்தில்கண்ணன்.செந்தில்கண்ணன் பின்லாந்து கல்வி முறை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். "பின்லாந்து கல்வி குறித்துப் பேசுபவர்கள் அது ஏதோ அதன் பாடத்திட்டத்தால் அந்நாடு சிறந்து விளங்குகிறது என்று எண்ணுகிறார்கள். இது தவறு. உண்மையில் பின்லாந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் அந்நாட்டிற்கு உள்ள சமூக பிரக்ஞைதான். அவர்களுக்கு கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்து தெளிவான புரிதல் இருக்கிறது" என்கிறார்.பின்லாந்து கல்வி முறை குறித்து விவரிக்கும் செந்தில் கண்ணன், "பின்லாந்தில் குழந்தைகளுக்கான டேகேர் பள்ளி ஒரு வயதிலேயே தொடங்கிவிடும். இதில் கட்டாயம் சேர்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. விருப்பம் இருந்தால் சேர்க்கலாம். அதுபோல இது இலவசமும் இல்லை. குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். அரசு மானியமும் தருகிறது" என்கிறார். மேலும் அவர், "டே கேர் என்றவுடன் ஏதோவென்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது நம் ஊர் பால்வாடி போலத்தான். ஆனால், அதே நேரம் அங்குக் கற்பிக்கும் முறை மற்றும் கற்பிக்கப்படும் விஷயம் நம்மூர் பால்வாடி போல அல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையானதாகவும், சமூகத்திற்குத் தேவையானதாகவும் இருக்கும். அதாவது நடைப்பயிற்சி, நீச்சல், சாலை விதிகளை மதிப்பது, தனித்துவத்தை இழக்காமல் சமூகத்துடன் கலந்திருப்பது ஆகியவை போதனையாக அல்லாமல் நடைமுறை பயிற்சியாக கற்பிக்கப்படும்" என்று கூறுகிறார்."முறையான பள்ளியானது ஆறு வயதில்தான் அங்கு ஒரு குழந்தைக்கு தொடங்குகிறது. அந்தக் கல்வியும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள், தயக்கமற்று இருப்பது குறிப்பாக தற்சார்பு வாழ்க்கையை கற்பிப்பதாக உள்ளது. குறிப்பாக மாணவர்கள், தனக்கு என்ன தேவை? தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது? என்பதை புரிந்துகொள்ள பின்லாந்து கல்வி முறை வழிவகை செய்கிறது. நுழைவுத் தேர்வு பின்லாந்து பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், மத்தியிலிருந்து ஒருவர் சொல்லி நடக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு இல்லை. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் அங்கு நுழைவுத் தேர்வுகள் இல்லை. சில பள்ளிகளே தங்களுக்குத் தேவையான போது, ஏற்றவாறு பாகுபாடு இல்லாமல் நுழைவுத் தேர்வுகளை நடத்துவார்கள்" என்று தெரிவிக்கிறார்.சுவீடன் கல்வி முறையும் இப்படியானதாகவே உள்ளதாகக் கூறுகிறார் அங்கு பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த யாசர்."நம் அன்றாட வாழ்வுக்கு என்ன தேவையோ அதைக் கற்பிக்கிறார்கள். அரசுக்கு மனு எழுதுவது எப்படி?, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவது, பருவநிலை மாற்றம் என்றால் என்ன? அது எப்படி நம் சாப்பாட்டுத் தட்டிலேயே தொடங்குகிறது. இவை அனைத்தையும் நடைமுறை பயிற்சியில் தொடக்கப்பள்ளியிலேயே கற்பிக்கிறார்கள். குறிப்பாக வாழ்க்கை குறித்து அவநம்பிக்கையை விதைக்காமல், வாழ்தல் குறித்த நம்பிக்கையையும், சக மனிதர்கள் மீது பாசத்தையும் ஏற்படுத்துவதாக இங்கு கல்வி உள்ளது" என்கிறார்.சீனா முதல் அமெரிக்கா வரை பல நாடுகளில் பணிநிமித்தமாக தங்கி இருக்கிறேன். எந்த நாடும் மாணவர்களை பள்ளி நோக்கி ஈர்க்க என்னவெல்லாம் செய்யலாமென யோசிக்கிறதே அன்றி அவர்களை பள்ளிக்கு வராமல் தடுப்பதற்காக செயலாற்றவில்லை என்கிறார். ஐரோப்பா கல்வியில் சிறந்து விளங்க காரணம். அவர்கள் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தருவதுதான் என்கிறார் விஜய் அசோகன்,மேலும் அவர், "தாய்மொழியில் கல்வி கிடைக்காததால்தான் பலர் பள்ளியைவிட்டு இடைநிற்கிறார்கள் என்கிறது யுனெஸ்கோ. உலகெங்கும் 40 சதவீத மாணவர்களுக்கு குறிப்பாக ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் தாய் மொழியில் கல்வி கிடைப்பது இல்லை. இதன் காரணமாக அவர்கள் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

நன்றி:பிபிசி தமிழ்

12 செப்டம்பர் 2019

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அணிதிரள்வீர்!


எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.  இது தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- தமிழர் தம் மரபுசார் வாழ்நிலங்கள் விளைபுலங்கள் வன்கவர்வு செய்யப்பட்டு தமிழர் மரபில் அந்நிலங்களிற்கு வழங்கப்பட்டு வந்த காரண இடுகுறி பெயர்கள் மாற்றப்பட்டு சிங்கள புனை பெயர்கள் இடப்பட்டு திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் கேட்பாரற்று மேற்கொள்ளப்பட்டு இதன் மூலம் இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழரின் இனப்பரம்பல் கோலம் இன விகிதாசாரம் என்பவை திட்டமிடப்படடு சிதைக்கப்படுகின்றன. தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சாட்சிகளான வணக்கத்தலங்கள் தகர்க்கப்பட்டு பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதை தடுக்க முடியாத அரசியல் கையறு நிலையில் தமிழினம் தவிக்கின்றது. தமிழர் தாயகப் பிரதேசத்துடன் இணைந்த கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களின் தான்தோன்றித்தனத்தை கட்டுப்படுத்தாது அதற்கு தூபமிடுவதாகவே அரசியந்திரம் செயற்பட்டு வருகின்றது. இதனால் தமிழ் மீனவர்களின் அன்றாட வாழ்வு வினாக்குறியாகியுள்ளது. அரசியல் கைதிகள் கேட்பாரற்று தசாப்தங்கள் கடந்தும் சிறைக்கூடங்களில் சித்திரவதைகளை அனுபவித்து வர இறுதி யுத்தத்தின் இனப்படுகொலைஞர்கள் தண்டனைகள் எதுவுமின்றி ஆட்சி பீடத்தின் அதிகாரக் கதிரைகளை அழகுபடுத்துகின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்கள் 931 நாட்களைக் கடந்துவிட்ட போதும் காத்திரமான முடிவுகள் எதுவும் கிடைத்து விடாத கையறு நிலையில் இலங்கைத்தீவின் இரண்டாம் தரப் பிரஜைகளாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்றிற்கு உட்படுத்தப்பட்டு தான் வாழும் தன் மரபுசார் நிலத்தில் மெல்ல மெல்ல இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்ற அபாய நிலையின் விளிம்பில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. நிரந்தரமான, காத்திரமான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட்டாலன்றி இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பு வரிதாக்கப்பட்டு விடும் என்பது அரசியல் பொது .வெளியில் அனைவராலும் உணரப்பட்ட போதிலும் ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பில் போர் ஓய்ந்து போன கடந்த ஒரு தசாப்தம் ஆறப்போடல்கள், இளுத்தடிப்புக்கள் உடன் கடந்து போயிற்று. எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் தமிழினம் வீழ்ந்து விடாது விழ விழ எழும் என்பதை சிங்கள பேரினவாத சக்திகளிற்கு உணர்த்தவும். தமிழ் இனத்தின் நிலையையும் கோரிக்கைகளையும் சர்வதேசத்திற்கு இடித்துரைக்கவும், அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழினம் இவ் எழுக தமிழில் ஒன்றுபட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

09 செப்டம்பர் 2019

யாழில் சஜித்தும் கூட்டமைப்பும் சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரும், சஜித் பிரேமதாசவுடன் அமைச்சர் எரான் விக்ரமரத்தினவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் என்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதென இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.