பக்கங்கள்

22 டிசம்பர் 2020

தமிழீழ ஆதரவாளர்"அழைத்தார் பிரபாகரன்"அப்துல் ஜப்பார் காலமானார்!

தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். 1980களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அப்துல் ஜப்பார். முதன் முதலாக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தமிழகம்- கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டியை தமிழில் வர்ணனை செய்தார்.1982-ம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியையும் தமிழில் வர்ணனை செய்தார் அப்போது ஜப்பார். அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், அப்துல் ஜப்பாரை நேரில் அழைத்து பாராட்டினார். பின்னர் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக ஐபிசி தமிழ் வானொலிக்காக பயணியாற்றினார். 2004-ம் ஆண்டு லண்டனில் உலகக் கிரிக்கெட் போட்டிகளை தமிழில் வர்ணனை செய்தார். 2007-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ESPN - STAR CRICKET தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். மொத்தம் 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர் அப்துல் ஜப்பார்.அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனையை பெரிதும் நேசித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சமாதான காலத்தில் அப்துல் ஜப்பாரை தமிழீழத்துக்கு அழைத்து விருந்து அளித்து உபசரித்தார். 'அழைத்தார் பிரபாகரன்' எனும் நூலில் தமிழீழ பயணம்,தேசியத் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்புகளை எழுதியவர் அப்துல் ஜப்பார். பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையான அப்துல் ஜப்பார் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவர் ஐரோப்பாவில் இயங்கி வந்த தமிழ் தேசியத் தொலைக்காட்சியான ரி.ரி.என் தொலைக்காட்சியிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.


அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கும் வகையில் கூட்டமைப்பின் ஆவணம்!

அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகறது. அவர்களால் மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் நாம் ஒருபோதுமே கையொப்பமிடமாட்டோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைப் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். “இத்தகைய விடயங்களை பிடிகொடுக்காமல் நாசூக்காக செய்வதற்கு பழக்கப்பட்டவராக சுமந்திரன் இருந்தாலும் அவரின், இத்தகைய போக்குகளை ஆரம்பத்திலிருந்தே எங்களைப் போன்றவர்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வந்திருக்கின்றோம். ஆனாலும் அத்தகைய செயல்பாடுகளையே அவர் இன்றைக்கும் செய்து வருகின்றார். வரவு – செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி நாளில் சுமந்திரன் என்னோடும் எமது கட்சியின் செயலாளரோடும் கதைத்திருந்தார். அப்போது, ஜெனிவா அமர்வில் இந்த முறை இரண்டு வருட கால அவகாசம் முடிவடைகின்ற நிலையிலே அந்த உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பாக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான மகஜரை தயாரித்துள்ளது. இதனை ஒரு பொது மகஜராக, ஏனைய தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் புத்துஜீவிகளும் ஏற்று கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஆவணமாக வெளிவருவது தான் பொருத்தமாக இருக்குமென்று கூறி எம்மிடம் அதன் பிரதியொன்றை வழங்கினார். இதன் பின்னர் எம்முடைய அமைப்பு எங்கள் சட்ட ஆலோசகர்களிடமும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் செயலாற்றுபவர்களுடனும் பேசியதன் பிற்பாடு நாங்கள் அந்த வரைபை நிராகரிக்கும் நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டுள்ளோம். 7 பக்கங்கள் கொண்டதாக அந்த அறிக்கை இருக்கின்றது. அதில், பெரும்பாலானவை கூட்டமைப்பு முன்னர் எடுத்த விடயங்களை நியாயப்படுத்துகின்றன. மேலும், இப்படியெல்லாம் செய்தும்கூட தமிழ் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை மிகவும் கவனமாக நாங்கள் படித்தோம். அதை முழுமையாக நாம் தொகுத்துப் பார்த்தபோது மீண்டும் ஒருமுறை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குகின்ற கோணத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாகத் தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாகத்தான்பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான பொறுப்புக் கூறல் கிட்டும் என்ற விடயத்தை நாங்கள் இங்கு மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலிலும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்திருக்கின்றோம். ஆகவே, அந்தப் பிண்ணணியில் சுமந்திரனும் கூட்டமைப்பும் தயாரித்த அந்த அறிக்கையில் நாங்கள் கையொப்பம் இட முடியாது. இந்த நிலைமை சுமந்திரனுக்கே நன்றாகத் தெரியும்” என்றார்.

11 டிசம்பர் 2020

ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் எங்கே?நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார் கஜேந்திரன்!

இறுதிக்கட்டப் போரில் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றையதினம் வரவு - செலவுத் திட்டத்தின் நிதி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வினா எழுப்பினார். "இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். இந்தத் தினத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், சிறைகளில் வாடும் பிள்ளைகளை நினைத்துக் கதறும் பெற்றோர் என வடக்கு, கிழக்கு எங்கும் அவலக்குரலே கேட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் போராட்டத்தோடு நாங்கள் கைகோர்க்கும் அதே நேரத்தில் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளிலே அடைத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகவே காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் இலங்கை அரசால் உருவாக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏமாற்றப்பட்டு தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். காணாமல்போனவர்கள் இறந்து விட்டார்கள் என்று உறவினர்களை ஒப்புக்கொள்ள வைத்து அவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கும் முயற்சிதான் நடைபெறுகின்றது. வடக்கு, கிழக்கில் முழுமையான இனவாதக் கோணத்திலேயே நிதி அமைச்சின் திட்டங்கள் அமைந்துள்ளன. தொல்பொருள் திணைக்களம் என்பது உலக நாடுகளிலே கலாசார அமைச்சுக்களின் கீழ் உள்ளன. ஆனால், இலங்கையில் அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கோடிக் கணக்கான நிதியை நிதி அமைச்சு மூலம் ஒதுக்கிக் கொடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தை சிங்கள மயமாக்குகின்ற, பௌத்த மயமாக்குகின்ற செயற்பாடுகள் தான் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

04 டிசம்பர் 2020

பாராளுமன்றில் தனித்து மோதிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

பிரபாகரனை கொல்ல வேண்டும் என்பதற்காக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதே, போர் குற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரைச் சந்தித்தேன். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை வெளியேற்றி அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் நான் பத்து தடைவைகளுக்கும் அதிகமாக இதுகுறித்துப் பேசினேன். பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்துப் பேசினோம். கடல் மார்க்கமாக அவர்களை ஏனைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காரணத்தினால் தாமதமானது. பின்னர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல பொதுமக்களையும் மீட்டுள்ளதாகவும், புலிகளின் கட்டுப்பாட்டில் எந்தவொரு பொதுமகனும் இல்லை, அனைவரையும் மீட்டுள்ளோம் எனவும் தொலைக்கட்சியில் அறிவிப்பு விடப்பட்டது. அதனைக் கேட்டு நான் அச்சப்பட்டேன். ஏனெனில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதே நான்கு இலட்சத்து அறுபதாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் இருந்தனர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அரச தரப்பின் கணக்கெடுப்பு, அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் கணக்கெடுப்பு என அனைவரதும் எண்ணிக்கைக்கு அமைய அதிகளவில் மக்கள் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருக்கையில் பொதுமக்களை எப்படியேனும் வெளியேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் எனது தொடர்புகளைப் பயன்படுத்தி, நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பயன்படுத்தி அரச தரப்புடன் பேசி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால், அது நடக்கவில்லை” என்றார். அப்போது குறுக்கிட்டு ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் சரத் வீரகேசர, “நீங்கள் சபையை தவறாக வழிநடத்துகின்றீர்கள். மூன்று இலட்சம் மக்களை பிரபாகரன் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார். நாங்கள் அவர்களைக் காப்பாற்றினோம்” என்றார். இதன்பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா, “நாங்கள் ஒவ்வொரு தாக்குதலின் போதும் அதிகளவான பொதுமக்களைப் பாதுகாத்தோம். நீங்கள் பொய்களைக் கூறி சபையை தவறாக வழிநடத்த வேண்டாம். நாம் மக்களை மீட்ட நேரங்களில் நீங்கள் அந்தப் பகுதிகளுக்கு வரவில்லை” என்றார். இந்நிலையில், மீண்டும் உரையாற்றிய கஜேந்திரகுமார், “போராட்டம் தொடங்கிய வேளையில் நான்கரை இலட்சம் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். ஆனால், 17 ஆயிரம் பொதுமக்களே அங்கு இருந்ததாக அரசாங்கம் கூறியது. உணவு மற்றும் மருந்துகளை வெறுமனே 17 ஆயிரம் மக்களுக்கு மட்டுமே அனுப்பினார்கள். இதுதான் உண்மை. மூன்றரை இலட்சம் மக்கள் பின்னர் முகாம்களுக்கு வந்தனர். ஆகவே, இலக்கங்களில் அரசாங்கம் பொய்களைக் கூறிக்கொண்டுள்ளது. இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒன்றரை இலட்சம் மக்களுக்கு என்னவானது என்றே தெரியவில்லை. 164ஆயிரம் மக்களை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை 54 இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான வீசா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு வீசா வழங்கப்படவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த 54 அதிகாரிகளும் அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்க வேண்டும். ஆனால், அவர்கள் குற்றவாளிகள். இதனால்தான் இந்த நிலைமை உருவாகியுள்ளது. நீங்கள் இந்த நிலைமைகளை நினைத்து வெட்கப்பட வேண்டும். இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் இந்த அமைச்சை இனவழிப்பு அமைச்சு, தமிழர்களுக்கு எதிராக அமைச்சு என்றே நினைக்கின்றோம். அமைச்சிற்குப் பொறுப்பான சரத் வீரசேகர சற்று முன்னர் இந்த சபையில் ஒன்றைக் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றார். இதனை நினைத்து வெட்கப்பட வேண்டும். அதேபோல், மஹிந்த சமரசிங்க அண்மையில் இதே சபையில் ஒன்றைக் கூறினார், பொதுமக்களைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் வந்த வேளையில் அதனை அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவித்தார். பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என்றாராம். இதுதான் போர்க் குற்றம். ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக இலட்சக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றமையே போர்க் குற்றமாகும். இன்றும் நாட்டில் உள்ள பாதுகாப்பு தளங்களில் அளவுக்கு அதிகமானவை வடக்கு கிழக்கிலேயே உள்ளது, இவர்களின் எதிரிகள் தமிழர்கள் என்பதே இவர்களின் நிலைப்பாடாகும். விடுதலைப் புலிகளின் பெயரைக் கூறி தமிழர்களை இன அழிப்புச் செய்துள்ளீர்கள். தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டது. நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதுவே, நாளை உங்கள் இனத்திற்கு எதிராகத் திரும்பும். இதனை நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அரக்கத்தனமான ஆட்சியை நடத்தும் உங்களுக்கு நான் இதனை மீண்டும் கூறி பதிவு செய்துகொள்கிறேன். தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் அரசாங்கம் தோற்றுவிட்டது. இது நாட்டின் சகல வளர்ச்சிக்கும் பாதிப்பாக அமையும்” என்றார். இதன்போது குறுக்கிட்ட சரத் வீரகேகர, “இவர் முழுமையாக பொய்களைக் கூறுகின்றார். புலம்பெயர் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இவர் பேசிக்கொண்டுள்ளார். நாம் பொதுமக்களைப் பாதுகாத்தோம். உலகத்தில் பொதுமக்களை மீட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும். சர்வதேசமே அதனை ஏற்றுக்கொண்டது. எமது இராணுவத்திற்கு தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டும் எனவும், உலகிற்கே நாம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் சர்வதேச நிபுணர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரபாகரன் முன்னிலையில் வாக்குறுதி எடுத்தவர்கள். அவர்களைத் தடுக்க வேண்டும் என்பது சரியானது” என்றார். இதையடுத்து உரையாற்றிய கஜேந்திரக்குமார், “நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையென்றால் ஏன் சர்வதேச விசாரணைக்குத் தயங்குகின்றீர்கள். நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ளவதை விடவும் தைரியம் இருந்தால் சர்வதேச விசாரணைக்குச் செல்லுங்கள். ஏன் அதற்கு அஞ்சுகின்றீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, “கஜேந்திரகுமார் எம்.பி.யின் உரையில் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமில்லாத சகல கருத்துக்களையும் நீக்க வேண்டும். இவர்கள் பிணங்களை விற்று வாழ்பவர்கள். சர்வதேச டொலர்களுக்காக இவர்கள் பேசிக்கொண்டுள்ளனர்” என்றார். இதனையடுத்து சபையில் சிங்கள உறுப்பினர்களிடையே கடும் விமர்சனம் ஏற்பட்டதுடன் பின்வரிசையில் இருந்த சிங்கள உறுப்பினர்கள் கடும் வார்த்தைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை விமர்சித்தனர்.