பக்கங்கள்

30 ஆகஸ்ட் 2017

புலிகளின் பெயரில் வவுனியாவில் பிரசுரங்கள்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில் பல இடங்களில் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு விடயங்களை முன்வைத்து குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒன்றில், “தமிழீழத்தில் ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி தவறிழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றைய துண்டுப்பிரசுரத்தில், வவுனியாவுக்கான முக்கிய அறிவித்தல்! என்ற தலையங்கத்தில், “தமிழீழத்திற்காக உயிரிழந்தவர்கள் கண்ட கனவுகள் உண்மையாகும் நேரம் வந்து விட்டது. இன்னும் நாங்கள் முற்றாக அழிந்து விடவில்லை.” போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

28 ஆகஸ்ட் 2017

மண்டைதீவு கடலில் படகு கவிழ்ந்து மாணவர்கள் பலி!

யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பரப்பில் இன்று பிற்பகல் படகு கவிழ்ந்து, ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கிப் பலியாகினர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்டைத்தீவு கடற்பரப்பில் இளைஞர்கள் 7 பேர் படகில் இருந்த வேளை அது மூழ்கியுள்ளது. கடலில் மூழ்கியோரில் ஒருவர் மாத்திரம் நீந்தி, கரையை வந்தடைந்தார். ஏனையோரில் ஐவரின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டன. தீவிர தேடுதலின் பின்னர் மற்றையவரின் சடலமும் மீட்கப்பட்டது. இன்று கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்ய முற்பட்டபோது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மீட்கப்பட்டோரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு- நந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18 , நாகசிலோஜன் சின்னதம்பி (உரும்பிராய்) 17 , தனுரதன் (கொக்குவில்) 20 , பிரவீன் (நல்லூர்) 20 ,தினேஷ் (உரும்பிராய்) 17 ,தனுசன் (சண்டிலிப்பாய்) 18,என தெரிய வந்துள்ளது.

27 ஆகஸ்ட் 2017

கம்பவாரிதி ஜெயராஜின் செயலுக்கு கண்டனம்!


சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை கம்பவாரிதி ஜெயராஜ் கேலிச் சித்திரமாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் தனது செயலுக்காகச் சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தனது இணையத்திலிருந்து குறித்த படத்தை நீக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சைவ மகாசபை வலியுறுத்தியுள்ளது.
சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை கம்பவாரிதி ஜெயராஜ் கேலிச் சித்திரமாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் தனது செயலுக்காகச் சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தனது இணையத்திலிருந்து குறித்த படத்தை நீக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சைவ மகாசபை வலியுறுத்தியுள்ளது.    இது தொடர்பாக அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அம்மை அப்பர்களான சிவன் - உமை இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை இலங்கை ஆட்சியாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ஒப்பிட்டுக் கேலிச்சித்திரமாக்கித் தனது கட்டுரையொன்றில் பயன்படுத்தியுள்ளார். இந்தச் செயல் சைவத் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளது. இதை அவர் புரிந்து கொண்டு சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், தனது இணையத்தளத்திலிருந்து குறித்த படத்தை அகற்ற வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

19 ஆகஸ்ட் 2017

ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து தண்ணீர் மட்டும் அருந்துகிறார் முருகன்!


வேலூர் ஜெயிலில் முருகன் ஜீவசமாதி: கோவிலில் அமர்ந்து நீண்ட நேரம் தரிசனம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தைமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் இன்று காலை முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர். முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு சிறை வாழ்க்கையை தொடர விரும்பவில்லை என்றும் சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புவதாகவும் முருகன் சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தும் கடிதத்தை முருகன் நேற்றைய தினம் முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பிவைத்துள்ளார். தோற்றத்திலும் சாமியார் போலவே காவி உடை, தலையில் நீண்ட முடி என்று காட்சியளிக்கும் முருகன், கடந்த ஜூலை 26ம் தேதி முதல் முருகன் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் முருகன் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13 ஆகஸ்ட் 2017

இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Ähnliches Fotoஇந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிவில் ஏற்பட்டுள்ளது. சுமத்திரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை அவதான மையம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இடர் முகாமைத்துவத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி, சுமத்திரா தீவில் அருகில் 6.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவொரு எச்சரிக்கை மாத்திரமே. சுனாமி ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை. இலங்கையின் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம். எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.தொடர்ந்தும் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து நிலமையினை அவதானித்துவருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்புஇந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளுக்கு அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.சுமாத்திரா தீவில், 6.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சுனாமி நிச்சயமாக ஏற்படும் என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்தார்.இது தொடர்பான அறிவித்தல்களை ஊடகங்கள் வாயில்களாக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் இதனால், மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.சுமாத்திரா தீவில், 35 கிலோமீற்றர் ஆழத்திலேயே, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.