பக்கங்கள்

30 டிசம்பர் 2013

ராதிகா சிற்சபையீசன் யாழ்ப்பாணத்தில்!

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.அத்துடன் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு செயற்படும் பல அமைப்புக்களையும் சந்தித்து அவர் பேச்சு நடத்தியுள்ளார். இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் இவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமுள்ளிட்ட பல பகுதிகளையும் நேரினில் சென்று பார்வையிட்டார். வலி.வடக்கு பிரதேசம் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களை, கூட்டமைப்பு வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் நேரினில் அழைத்து சென்று காண்பித்தார். நாளை முல்லைதீவிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே ராதிகா சிற்சபேசனது யாழ் பயணம் தொடர்பாக அவரை இராணுவப் புலனாய்வு பிரிவினர் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 டிசம்பர் 2013

இன அழிப்பு அரசினது புலிப் பூச்சாண்டி!

pathu1லங்காநியூஸ் இணையம் அண்மையில் பரப்பிய ஒரு செய்தியை ஆளாளுக்கு தமது வசதிக்கேற்ப திரித்துக்கொண்டிருக்கும் சூழலில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் தன் பங்கிற்கு திரித்திருக்கிறார். அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் முன்னாள் தளபதி ஒருவரை கொண்டு புதிய விடுதலைப் புலிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களால் தம்போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்றும் கூறியிருக்கிறார். நல்ல விடயம். இப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான். தமது உயிருக்கு ஆபத்து என்றவுடன் அந்த செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கூட உறுதிப்படுத்தாமல் தமது பதவிநிலைகளையும் மறந்து பகிரங்கமாக பேசும் இவர் போன்றவர்கள் மக்கள் பிரச்சினையில் தலைக்குமேல் வெள்ளம் போன பின்பும் காக்கும் மவுனத்தையும் கலைத்து கொண்டால் நல்லது. லங்காநியூஸ் இணையமும்சரி அதைக் காவுபர்களும்சரி தற்போது விக்கினேஸ்வரனும் கூட ஒரு தவறான புரிதலை தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்து உருவாக்க முற்படுகிறார்கள். சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கும் கொலைக்கும்பலுக்கு ஏன் விடுதலைப்புலிகள் என்று பெயரிடுகிறார்கள்? இன விடுதலைக்காக எந்த சமரசமுமின்றி கடைசிவரை போராடி மடிந்தவர்கள் புலிகள். முள்ளிவாய்க்காலில் வைத்து அடுத்து வரும் தலைமுறைக்கு ஒரு தெளிவான வரலாற்றை விட்டு சென்றிருக்கிறார்கள். மாண்டவர்கள் போக சிறைப்பிடித்த போராளிகளில் சிலரை தமது தேவைக்கு சிங்களம் பயன்படுத்துவதையும் நாம் அறிவோம். கொடும் சித்திரவதைகளினாலும் தமது குடும்பத்தினரின் உயிர்களை பணயமாக வைத்து செய்யும் அச்சுறுத்தல்களினாலும் சில போராளிகள் சிங்களத்தின் நிகழ்ச்சிநிரலின்படி இயங்கவேண்டிய கட்டாயம். இருந்தும் இதுவரை அப்படியான எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மே 18 இற்கு பிறகு கேணல் ராம் போன்றவர்களை வைத்து தொடங்கப்பட்ட நாடகம் தற்போது கேணல் பதுமனில் வந்து நிற்கிறது. இடையில் வெளியாக தெரிந்தும் தெரியாமலும் பலர் இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் வந்தார்கள். ஆனால் போராட்டம் குறித்த தெளிவான புரிதலும் அறிதலும் உள்ள மக்கள் தொகுதிக்குள் இந்த நிகழச்சிநிரல் செயல்திறனற்று போனதே யதார்த்தம். இப்போது கேணல் பதுமன் விடயம்கூட ஒரு ஊகம்தான். அது உண்மையாயினும் முன்னைய நிகழ்வுகளைப்போல் செயலிழக்குமே தவிர துளியளவும் சாத்தியமில்லை. ஒரு வேளை அப்படி ஒரு ஆயுதஅணி உருவானால்கூட அதற்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்? அது சிறீலங்கா துணை இராணுவக்குழு அல்லது ஒட்டுக்குழுவே. இதற்கு ஏன் புலிகளின் பெயரை பாவிக்கிறார்கள் என்பதுதான் இங்கு கேள்வி? புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துபோன கருணாவை நமது மக்கள் ‘கருணா ஒட்டுக்குழு’ என்றுதான் விளித்தார்களே ஒழிய ‘புலிகள்’ என்று ஒருபோதும் அழைக்கவில்லை. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புலிகள் தவிர ஏனைய குழுக்கள் அனைத்தும் வேறுபாடுகளின்றி ஏதோ ஒரு கட்டத்தில் தமது கொள்கைகளிலிருந்து விலகி சிறீலங்கா மற்றும் இந்திய இராணுவ சீருடையை தரித்தவையே.! புலிகள் எந்த தருணத்திலும் அத்தகைய ஒரு நிலை எடுத்ததில்லை. மே 18 இற்கு பிறகு எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புலிகளின் தலைமைப்பொறுப்பை ‘கைப்பற்ற’ முற்பட்ட கேபியை ‘கேபி குழு’ என்று மக்கள் விளித்தார்களே ஒழிய புலிகளின் ஒரு அங்கமாக பார்க்கவில்லை. மக்களின் கணிப்பை கேபி பொய்யாக்கவில்லை. தனது துரோகத்தை தினமும் அம்பலப்படுத்தியபடி சிறீலங்காவின் செல்லப்பிள்ளையாக அவர் இன்று வலம்வருகிறார். கேணல் ராமை கொண்டு மாவீரர் அறிக்கைவிடுவித்த சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலையும் பெரும் இக்கட்டான புறயதார்த்த நிலையில் நின்றபோதும் அம்பலப்படுத்தி தகர்த்தெறிந்த மக்களுக்கு தற்போது பதுமன் விவகாரம் ஒரு பொருட்டேயில்லை. கேணல் ராம் மட்டுமல்ல பதுமன் கூட ஒரு தலைசிறந்த போராளி. அவர் மனமறிந்து விடுதலைப்போராட்டத்திற்கு துரோகம் செய்ய மாட்டார். அதையும் மீறி சிறீலங்கா இராணுவம் அவரை வற்புறுத்தி இயங்க வைத்தால் அது ‘பதுமன் ஒட்டுக்குழுவே’ தவிர அது ‘புலிகள்’ அல்ல. விக்கினேஸ்வரன் மட்டுமல்ல சில ஊடக பொறுக்கிகளும் சிறீலங்கா துணை இராணுவக்குழுக்களை ‘புலிகள்’ என்று அழைப்பதை நிறுத்திக்கொண்டால் நல்லது. வரலாற்றை படைக்க முடியாத நீங்கள் வரலாற்றை திரிக்காமலாவது இருக்கலாம். புலிகளுக்கும் எலிகளுக்கும் வேறுபாடு தெரிந்தவர்கள் மக்கள். மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். சில ஊடக பொறுக்கிகளுக்கும் சில தமிழ் அரசியல்வாதிகளுக்கும்தான் புலிக்காய்ச்சல் பிடித்து பிதற்றுகிறார்கள். இவர்கள்தான் சிங்களத்தின் புலிப்பூச்சாண்டி நிகழச்சிநிரலின் காரணகர்த்தாக்கள். ஆயுதப்போராட்டத்திற்கான எந்த தேவையும் இல்லாத களயதார்த்தத்தை உணர்ந்து புலிகள் இராஜதந்திர போராட்டத்தை முன்னெடுத்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் கைகளில் ஆயுதம் ஏந்தும் நிலை வரும்போது அதை மக்களே முதலில் அறிவிப்பார்கள். சிங்கள ஆட்சியாளர்களோஇ ஓட்டுப்பொறுக்கிகளோ, ஊடகப்பொறுக்கிகளோ இது குறித்து அறிவிக்கும் இழிநிலையில் தமிழீழ விடுதலைப்போராட்டமும் இல்லை தமிழீழ மக்களும் இல்லை.

ஈழம்ஈநியூஸ்

24 டிசம்பர் 2013

சம்பந்தனுக்கு மகிந்த ஆலோசனை வழங்கினாராம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொண்டு பிரிவினைவாதக் கொள்கைகளுடன் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், அரியநேந்திரன் ஆகியோரை கட்சியிலிருந்து புறந்தள்ளிவைக்குமாறு மகிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக கூட்டமைப்பின் உயர்மட்டத் தரப்பு தகவல் ஒன்றின் மூலம் தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக சபாநாயகர் ஒழுங்கு செய்திருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபோது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, தமிழ்க் கூட்டமைப்புத் தலைவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக் கூறப்படுகிறது. கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் நீரை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக, சிறீதரன் எம்.பி. உள்ளிட்ட தரப்பினர் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாகவும், இது அவ்வளவு நல்லதல்ல என்றும் மகிந்த ராஜபக்‌ஷ சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.இரணைமடு குளம் விவகாரதில் சிறீதரன் எம்.பி. உள்ளிட்ட தரப்பினர், உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டு, தமிழ்க் கூட்டமைப்பை நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் எனவும் மகிந்த ராஜபக்‌ஷ எச்சரித்துள்ளார்.குறிப்பாக மாவிலாறு விவகாரத்தில் இறுதியில் நடந்தது என்ன என்பது நினைவிருக்கிறதுதானே, இதுபோன்ற நிலைமை இரணைமடு குள விவகாரத்தில் இடம்பெறாது பார்த்துக் கொள்ளுங்கள் என மகிந்த ராஜபக்‌ஷ மறைமுக எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரியவருகிறது.அத்துடன், அண்மையில் சிறீதரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, இவ்வாறான பிரிவினைவாதம் பேசும் தரப்பினரை கட்சியில் முன்னிலைப்படுத்துவது நல்லதல்ல எனவும் கூறியுள்ளார். எவ்வாறாயினும், தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்தும் அல்லது பிரித்தாளும் சூழ்ச்சியாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்த விஷமத்தனமான கருத்துக்களை சம்பந்தன் தலையில் போட்டதாக கூட்டமைப்பின் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தெற்கில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி,சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைப் பிளவுபடுத்திய மகிந்த ராஜபக்‌ஷ தரப்பினர், மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமானின் வாக்கு வங்கியை சிதைக்கும் முயற்சியிலும் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளமையும், மிக நீண்டகாலமாக தமிழ்க் கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றமையும் அனைவரும் அறிந்ததே.

20 டிசம்பர் 2013

கூட்டமைப்புக்குள் சுயநலவாதிகள் என முதல்வர் சாடல்!

கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களது சுயநலம் கட்டுங்கடங்காது செல்கின்றது. எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார் வடக்கு மாகாணசபையினது முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன். இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான சந்திப்பொன்றினை நடத்திய அவர் அங்கு உரையாற்றுகையிலேயே இக்குற்றச்சாட்டினை எழுப்பியிருந்தார். எமது கட்சியின் அங்கத்தவர்களே தமக்குள் அடிபட்டுக்கொண்டு கட்சியின் வரவு செலவுத்திட்டங்களை முறியடித்து வருகின்றார்கள் என்றால் எமக்கிடையே ஏதோ குறைபாடு இருக்கின்றதென்று அர்த்தம். பொதுவாக பதவியிலிருக்கும் ஒருவருடன் ஒத்துப்போக முடியாது போனால் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரலாம். அல்லது ஒத்துப்போக முடியாதவர் தமது பதவிகளை ராஜினாமாச்செய்யலாம். அதை விடுத்து எமது கட்சி சார்பில் கொண்டுவரும் வரவு செலவுத்திட்ட ஆவணத்தை தோற்கடிப்பது மன்னிக்க முடியாத குற்றம். ஏனெனில் அதில் குறைகள்; இருந்தால் ஏற்கனவே அதனை பேசி தீர்த்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறான நடவடிக்கைகள் எடுத்து தமது வரவு செலவுத்திட்டத்தை தாமே தோற்கடித்தவர்கள் வெட்கப்பட வேண்டியவர்கள் எனவும் அவர் தனதுரையினில் தெரிவித்தார்.

19 டிசம்பர் 2013

கடத்தப்பட்டவரை நெடுந்தீவுக்கு கொண்டு சென்ற கும்பல்!

வவுனியாவை சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தடுத்து வைத்து பிரான்ஸில் இருக்கும் அவரது மகனிடம் ஒரு கோடி ரூபா கப்பம் பெற முயற்சித்த வடக்கில் செயற்பட்டு வரும் அரசியல் குழுவை சேர்ந்த சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். வவுனியா குருக்கள்புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த மார்கண்டு ஶ்ரீஸ்கந்தராஜா என்ற 56 வயதான நபரை கடத்திச் சென்று இவர்கள் இவ்வாறு கப்பம் பெற முயற்சித்துள்ளதாக வவுனியா மற்றும் மன்னாருக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமசிங்க நேற்று தெரிவித்தார். கடந்த 13 ம் திகதி மார்க்கண்டு சிறிஸ்கந்தராஜாவின் வீட்டுக்கு சென்ற குழுவினர் குடும்பத்தினரின் விபரங்களை கேட்டு எழுதிக்கொண்டு தண்ணீர் பம்பு ஒன்றை தருவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை பெற்றுக்கொள்வதற்காக 14 ஆம் திகதி வவுனியா நகருக்கு வருமாறு அறிவித்துள்ளனர். இதனடிப்படையில் சிறிஸ்கந்தராஜா 14 ஆம் திகதி வவுனியா நகருக்கு சென்ற போது அங்கு வான் ஒன்றில் வந்த பொருட்களை வழங்கும் அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்கள் எனக் காட்டிக் கொண்ட நபர்கள், பொருட்கள் கிளிநொச்சியில் வழங்கப்படுவதாக கூறி அவரை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் கிளிநொச்சிக்கு அழைத்து சென்ற அவர்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் நெடுந்தீவில் இருப்பதாக சிறிஸ்கந்தராஜாவை அங்கு அழைத்துச் சென்று இவ்வாறு தடுத்து வைத்து கப்பம் கோரியுள்ளனர். சிறிஸ்கந்தராஜாவின் மகன் பிரான்ஸில் விபத்துக்குள்ளாகி உடல் ஊனமுற்றிருப்பதாகவும் இதற்கான அவருக்கு ஒரு கோடி ரூபா இழப்பீடு கிடைக்க உள்ளதாகவும் இந்த பணத்தை பெறுவதற்காகவே அவரை சந்தேக நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவத்திற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள சிலருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. சில தினங்கள் நெடுந்தீவில் ஒரு வீட்டில் சிக்கியிருந்த சிறிஸ்கந்தராஜா அவரது பாதுகாப்பு நிறுத்தப்பட்டிருந்த இளைஞர்களிடம் நட்புறவாக பழகி நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து வெளியேறி படகு மூலம் பருத்தித்துறைக்கு வந்து அங்கிருந்து பஸ்ஸில் ஏறி வவுனியாவுக்கு தப்பி வந்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்க குறிப்பிட்டார். இவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வானை கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

18 டிசம்பர் 2013

தண்ணீர் போதாது என்கிறார் சிறீதரன்!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டுவருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நிலவிவந்த பனிப்போர் இன்று பகிரங்கமாக மேடை ஒன்றில் வெளிப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் பல்லாயிரம் விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் எனத் தெரிவித்தார் பாராரளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி கல்வி வலயம் நடாத்திய ´மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலை விழா´ இன்று சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ´வடமாகாண முதலமைச்சர் கேட்பது இரணைமடுத் தண்ணீரை அவர் தாகமாக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இரணைமடுக் குளம் 34 அடி நீரைக் கொண்டது. ஆனால் மேலதிக இரண்டு அடி நீரைக் கூட்டி அதனைத்தான் தாங்கள் கொண்டு செல்வதாக கொண்டு செல்பவர்கள் சொல்கிறார்கள். கிளிநொச்சியில் 34 ஆயிரம் ஏக்கருக்கு நீர் தேவை இருக்கிறது.ஆனால் எண்ணாயிரம் ஏக்கருக்கு மட்டுமே நீர்பாய்ச்ச முடிகிறது. அந்த எண்ணாயிரம் ஏக்கரை 16 ஆயிரம் ஏக்கராக மாற்ற முடியுமா? என விவசாயிகள் கேட்கிறார்கள். மேலதிக நீர் என்பது 34 ஆயிரம் ஏக்கருக்கு காலபோகம், சிறுபோகம் ஆகியவற்றுக்கு நீர் வழங்கிய பின்னர் இருப்பது. இங்கு மீதம் இல்லை. அவ்வாறு மீதமிருந்தால் கொடுக்கலாம். இரணைமடுக் குளத்தில் தற்போது 34 அடி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 12 அடி தண்ணீர் தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எங்கே இருக்கிறது மேலதிக நீர்´ என கேள்வியும் எழுப்பினார். இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அதற்கு இவ்வாறு பதிலளித்துப் பேசினார். ´செயற்திட்டங்கள் பற்றிப் பேசும்போது உணர்ச்சி வயப்படுவதில் பிரயோசனம் இல்லை. அது உள்ளத்திலிருந்து வரவேண்டும். அறிவு பூர்வமாக இந்தச் செயற்திட்டம் வடமாகாண மக்களுக்கு நன்மை பயக்கிறதா? என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட விடயத்தை நாங்கள் பேசி ஆராய்ந்த பின்னர்தான் நான் தம்பியிடம், நீங்கள் தண்ணீர் கொண்டு வருவீர்களா? இல்லையா? என்று கேட்டேன். இரணைமடுக் குளத்தில் 12 அடி தண்ணீர் இருந்தால் அதை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. 32 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அது யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படும்.´ எனவும் முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். இந்த நிகழ்விற்கு இவர்களோடு, வடமாகாண விவசாய அமைச்சர், பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், சாவகச்சேரி நகராட்சி மன்றத்தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை, தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

17 டிசம்பர் 2013

கருணாநிதி தமிழகத்து ராஜபக்ஷ:ராஜபக்ஷ இலங்கையின் கருணாநிதி – நாஞ்சில் சம்பத்

கருணாநிதி தமிழகத்து ராஜபக்ஷ என்றும் ராஜபக்ஷ இலங்கையின் கருணாநிதி என்றும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்து பேசினார். அ.தி.மு.க ஆட்சியின் இரண்டாண்டு சாதனை மற்றும் ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான மனோகரன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், எம்.எல்.ஏ பரஞ்சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், “எம்.ஜி.ஆர். 11 ஆண்டு காலமும், ஜெயலலிதா 12 ஆண்டு காலம் நிறைவு செய்து இன்று 13வது ஆண்டில் ஜெயலலிதா அடி எடுத்து வைத்துள்ளார். இன்று கருணாநிதி, இலங்கைத் தமிழருக்கு ஆதரவா தீர்மானம் வாசிக்குறாரு. காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லன்னு பொதுக்குழுவில் அறிவித்திருக்கிறார். உண்மை என்னவென்றால் அந்த ரெண்டு கட்சியுமே கருணாநிதியை சேர்த்துக்கொள்ள தயார் இல்லை. தனிச்சு விடப்பட்டவர் இன்னிக்கு இவர் தனியா போறதா சொல்றாரு. உங்க நடிப்பை மக்கள் மறக்க மாட்டாங்க. பிரதமர் மன்மோகன் சிங் 23 பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கியவர். அவர் ஒரு முறை விமானத்தில் நியூயார்க் போனாராம். டெல்லியில் வைத்து அவரிடம் என்ன சாப்பாடு வேண்டும் என்று பணிப்பெண் கேட்டாராம். ஆனால், விமானம் நியூயார்க்கில் தரை இறங்கும் வரைக்கும் மௌனமாக இருந்தாராம். மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது ஒன்றும் செய்யாமல் சும்மா வேடிக்க பார்த்த கருணாநிதி இன்றைக்கு ஈழ மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். 1 லட்சத்து 76 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர் அசஞ்சு கூட கொடுக்கல. திருச்சி, ஊட்டினு இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுத்தார். தமிழகத்தில் கருணாநிதி குடும்ப ஆட்சி நடப்பதை போல, இலங்கையில் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோட்டாபாய ராஜபக்ஷன்னு ஒரு குடும்ப கூடமே ஆட்சி செய்து. கருணாநிதி தமிழகத்து ராஜபக்ஷ, ராஜபக்ஷ இலங்கையின் கருணாநிதி, இந்த இரண்டு பேருக்கும் வித்தியாசம் இல்லை. அம்மாவைப்போல் சட்ட சபையில் தீர்மானம் போடாத கருணாநிதி, தன்னுடைய மகளை அனுப்பி ராஜபக்சேவிடம் பரிசு வாங்கிட்டு வந்து பொக்கிஷமா பாதுகாக்கிறார் என்றார்.

16 டிசம்பர் 2013

ஆக்கிரமிப்பு வேலியை தகர்த்தெறிந்தார் ரவிகரன்!

ravikaranமுல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கபட்ட நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தடாலடி போராட்டமொன்றை பூர்விக தமிழ் குடிகள் நடத்தியுள்ளன. இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் தமிழ் மக்களுடைய 20 ஏக்கர் விஸ்தீரணமான பூர்வீகநிலங்களை தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் படையினரது ஒத்துழைப்புடன் அபகரிக்க முற்பட்டுள்ளார். செம்மலை கிழக்கு நாயாறுப்பகுதியில் சிங்கள இனத்தவரான குணபால என்ற நபரே செம்மலையில் வசிக்கின்ற தமிழரான இராமலிங்கம் என்பவரிடம் கடற்கரை ஓரமாக சிறியதொரு நிலப்பரப்பினை காசுகொடுத்து கொள்வனவு செய்துள்ளார். அதன்பின்னர் குறித்த நபர் தான் கொள்வனவு செய்த சிறிய துண்டுக்காணியுடன் சேர்த்து அப்பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் சுமார் 20 ஏக்கர் விஸ்தீரணமான காணியைச்சுற்றி எல்லை வேலியடைக்கின்ற முயற்சியில் இறங்கியுளார். இக் காணி அபகரிப்பிற்கு அப்பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் உதவியும் குறித்த நபருக்குக் கிடைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாணசபை அங்கத்தவரும் முல்லைதீவு மீனவ சங்க பிரமுகருமான து.ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து நேற்றைய தினம்; அப்பகுதியைப் பார்ப்பதற்காக பொதுமக்கள் சகிதம் சென்றிருந்த நிலையினில் குறித்த குடியேற்றவாசி அறிந்துகொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையினில் பிரதேச மக்கள் குறித்த நபரின் வேலி கட்டைகளைப் பிடுங்கி எறிந்து ஆவேசத்துடன் எறிந்துவிட்டு புதிய எல்லைகளை அமைத்துள்ளனர்.

15 டிசம்பர் 2013

சிறீலங்காவிற்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது-மன்னார் ஆயர்

"மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்காமல் தான் தோன்றித்தனமாகச் செயற்பட்டு வரும் இலங்கை அரசுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் பேரதிர்ச்சி காத்திருக்கின்றது" என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் எச்சரிக்கை விடுத்துள்ளார். "தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்காவிடின் சர்வதேச சமூகத்தால் இலங்கை அரசு தூக்கியெறியப்படும் காலம் தொலைவில் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள சுற்றுநிரூப ஆவணத்தை இலங்கை அரச தரப்பினரும், சிங்கள இனவாதிகளும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் கருதி ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் நேற்றுத் தெரிவித்ததாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும், மனித உரிமை மீறல்கள், உயிர் பறிப்புகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணையை உடன் நடத்த வேண்டும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குரிய நிர்வாகப் பொறுப்பை தமிழ் மக்களிடம் அளிக்கவேண்டும், அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவேண்டும், வடக்கு, கிழக்கில் சிவில் ஆளுநர்களை நியமிக்க வேண்டும், தேவையற்ற இராணுவத் தலையீடுகளை நிறுத்த வேண்டும், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யவேண்டும், இறந்தவர்களை நினைவுகூர அனுமதிக்கவேண்டும், காணாமற்போனோர் தொடர்பில் தீர்வுகாணப்படவேண்டும் என பல முக்கிய விடயங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் எனக் கோரி கடந்த வாரம் கத்தோலிக்க ஆயர் பேரவையானது சுற்றுநிரூப ஆவணத்தை வெளியிட்டுள்ளது. ஆனால், நாட்டின் நலன் கருதி கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள இந்த ஆவணத்தை இலங்கை அரச தரப்பினரும், சிங்கள இனவாதிகளும் கண்டபடி விமர்சிக்கின்றனர். இலங்கை அரசு, மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்காது தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு வருவதால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அதற்கு அதிர்ச்சி காத்திருப்பது உறுதியாகின்றது. அண்மையில் இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, பிரிட்டன் பிரதமர் கமரூன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பெயானி மற்றும் அமரிக்காவின் உயர்குழுவினர் ஆகியோர் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், போரால் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும், தமிழ் சிவில் சமூகத்தினரையும் நேரடியாகச் சந்தித்து தகவல்களை திரட்டிக்கொண்டு சென்றுள்ளனர். எனவே, உள்நாட்டில் நடைபெற்ற மனிதப் பேரவலங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயாதீன விசாரணையை நடத்திப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க இலங்கை அரசு உடன் முன்வரவேண்டும். இல்லையேல் சர்வதேச விசாரணையை இலங்கை அரசு எதிர்கொண்டே தீரும். அத்துடன் தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்கி அவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து நிம்மதியாக வாழும் சூழ்நிலையை இலங்கை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் - என்றார்.

14 டிசம்பர் 2013

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு தினம் இன்று!

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்ட பாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணைவியினையும் இணைத்துக் கொண்ட ஒரு மூத்தஅரசியல் போரளியாக,ஒரு மதியுரைஞராக, தத்துவ ஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப் போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார். பரந்து வாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜ தந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கி மதிப்பளித்தார். தாயகத்தில் போர் உக்கிரம் பெற்ற கால கட்டப் பகுதிகளில் தாயகத்தில் இருந்து கொண்டு அரசியல் செயற்பாடுகளை நகர்த முடியாத சூழலிலும் உடல் நலத்தினை கருத்தில் கொண்டும் கடற்புலிகளின் சிறப்பு பாதுகாப்புடன் கடல் வழியாக பன்னாட்டிற்கு சென்று பன்னாடுகளுக்கு தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்து கூறி, 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முதன்மை வகித்தார். ஸ்ரீலங்கா அரசின் பல மறை முக எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விடுதலைப் பற்றுக் கொண்டவராக அன்று இரணைமடு குளத்தில் விமானத்தில் வந்திறங்கி தனது அரசியல் சக்தியினை ஸ்ரீலங்கா அரசிற்கு தெரியப்படுத்தினார். அதனை தொடர்ந்து தாய்லாந்து தொடக்கம் ஜெனீவா வரையான பலசுற்று பேச்சுவார்தைகளில் பங்கொடுத்து தமிழ் மக்களின் அரசியல் வேட்கையினை உலகிற்கு எடுத்துக்கூறி ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களை தனக்கு அடுத்த அரசியல் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுத்த பெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களையே சாரும் . தமிழீழ மண்ணில் பலகல்விக் கூடங்களையும் அரசியல் நிர்வாக அலகுகளின் அலுவலகங்களையும் திறந்து வைத்தும் பல போராளிகளுக்கு அரசியல் வகுப்புக்களை கற்பித்த எங்கள் ஆசானாக என்றும் அவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பார். ஸ்ரீலங்கா அரசு போர்நிறுத்த மீறல்களை மேற்கொண்டு தமிழர் தாயகப் பரப்பில் அத்துமீறிய போர் நடவடிக்கையினை மேற்கொண்ட கால கட்டப்பகுதியான 2006ம் ஆண்டு காலகட்டத்தில் உடல் உபாதையால் பாதிப்புற்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு மார்கழி 14ம் தேதி தமிழ்மக்களை விட்டு பிரிந்து சென்றார். தாய்மண்ணின் விடியலில் நாளும் அயாராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து மாவீரர்களுடன் தமிழீழக் காற்றில் கலந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

‘புலிகளின் தாகம் ! தமிழீழத் தாயகம் !!

13 டிசம்பர் 2013

மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நமக்கு தெளிவுகளை அளித்திருக்கிறது!

ஒரு இனப்படுகொலையை மறைத்து அதை போர்க்குற்றம் என்று மட்டும் சுருக்கிப் பேசிவரும் சர்வதேசம், அறிவுசீவி வர்க்கத்தினை புறந்தள்ளி இருக்கிறது. இது 2009க்கு பின்பு நமக்கு கிடைத்த குறிப்பிடத் தக்க வெற்றி. போர்க்குற்றம் என்பதாக மட்டுமே சுருக்கினால் நமது விடுதலை என்பது எட்டாக்கனியாக மாறும் என்பதை 2011இல் ஐ.நா அறிக்கை வெளியான உடனேயே முன்வைத்தோம்.. போர்க்குற்றம் என்கிற பதத்தினை ஏற்க முடியாது என்று பேசிய பொழுது மே17 இயக்கத்தினை தனிமைப்படுத்தும் செயல் வெகுவேகமாகவே நடந்தது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு பின்னர் உலகின் மிக முக்கிய மனித உரிமையாளார்கள், சிந்தனையாளார்கள், செயல்பாட்டாளர்கள் என பல்வேறு நாடுகளில் இருந்து நீதிபதிகளாக வந்தவர்கள் ஆழமாக ஆராய்ந்த பின்னர் இதை ’இனப்படுகொலை’ என அறிவித்திருக்கிறார்கள். இது முக்கியமானது. வரலாற்று சிறப்பு மிக்கது. அரசாங்கத்திடம் இருந்து உரிமைகளை மக்களிடத்தில் சேர்க்கவேண்டும் என்று இந்த வாதங்களை வைத்து அவர்கள் பேசியது மறக்க இயலாதது. இத்தாலி, ஜெர்மனி, ஆர்ஜண்டீனா, துருக்கி, ஆர்மீனியா, பர்மா எனப் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களும், சிங்கள தோழர்களும், இங்கிலாந்தில் இருந்து வந்த பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தமிழீழ அறிஞர்களும், தனிப்பட்ட செயல்பாட்டாளர்களும், தமிழீழத்தில் இருந்து வந்திருந்த களமுனையில் செயல்பட்டவர்களுமாக ஆதாரங்களையும், வாதங்களையும் அடுக்கினார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியாவின் மீதான குற்றச்சாட்டுகளும், வரலாற்று-பொருளாதார-அரசியல் ரீதியான பின்னனிகளும் விரிவாக அலசப்பட்டன. இனப்படுகொலைக்கான சட்டங்கள், அளவுகோள்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை சென்றது. ஆதாரங்கள்-சாட்சியங்கள் என பல்வேறு தகவல்களை மூன்று நாட்களும் இரவு பகல் என ஆராய்ந்தார்கள். தீர்ப்பு வழங்கப்படுவதற்கான முன் தினம் ஆரம்பித்த விவாதம் அதிகாலை 5 மணிவரை நீடித்தது. பின்னர் ஏகமனதாக இனப்படுகொலை என்கிற முடிவிற்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் வந்து சேர்ந்தார்கள்.. அமெரிக்க -இங்கிலாந்தின் பங்களிப்பினை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தவர்கள், இந்தியாவின் பங்களிப்பு பற்றி சற்று வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் கவனித்தார்கள். நேரடி சாட்சியங்கள், மற்றும் ஆதாரங்களை இனப்படுகொலைக்காகவும், இங்கிலாந்து, அமெரிக்காவிற்காக்வும் ஆய்வினை செய்த கால அளவு இந்தியாவினைப்பற்றிய விவாதத்திற்கு முழுமையாக நீதிபதிகளுக்கு கிடைக்காமல் போயிற்று.. ஆதாரங்களை வரலாற்று ரீதியான பின்னனியில் இருந்து சமீப கால நிகழ்வு வரையில் ஆவணமாக அளித்திருந்தோம்,. இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு என்பதும், இனப்படுகொலைக்கான ஆதரவு என்பதுவும், அதன் இனரீதியான பின்னனியில் இருந்து, சாதிய ரீதியான அர்த்தங்களையும், தனது பிராந்திய நலனுக்கு ஆதரவானதாகவும், தமிழீழ அரசு 2002இல் இருந்து கட்டி எழுப்பிய அரசு வழிமுறை தமக்கு பெரிதும் ஆபத்தானது என்றும் பல்வேறு வாதங்களின் அடிப்படையில் இந்தியாவின் பங்களிப்பு ஆவணங்கள் முன்வைத்தோம். இந்த அடிப்படையும் பங்கேற்பிற்கான ஆதாரங்களையும் பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் முன்வைத்திருந்தோம். இதனை முழுமையாக ஆராய்வதற்கும், அறிவதற்கும், விவாதிக்கவும் நேரம் போதாமையாக இருந்ததால் உடனடியாக முடிவிற்கு வர இயலாமல் போனது. ஆனால் இந்தியா இனப்படுகொலையில் துணை செய்தத்தற்கான குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை பதிவு செய்தார்கள். இந்தியாவின் பங்களிப்பு என்பது ஒரு அதிர்ச்சியாகவே சர்வதேச அறிஞர்களுக்கு இருந்தது என்பது எங்களுக்கும் ஒரு அதிர்ச்சியே. இந்தியா தனது கோர முகத்தினை மறைத்து செய்து வரும் பிரச்சாரம் உடைபடும் இடமாக தேசிய இனசிக்கலே இருக்கிறது. நீதிபதிகளில் ஒரு சிலரால் இந்தியாவின் சாதிய பிரச்சனையின் பின்புலத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய ஆளும்வர்க்கத்தின் சாதிய பின்புலம், ஊடகம்-அதிகாரவர்க்கம்-நீதித்துறையின் சாதிய பின்புலம் இந்தியாவின் கொள்கை முடிவுகளில் தாக்கம் செலுத்துகிறது என்பதை ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். ஆனால் பிறருக்கு இது சென்று சேராத விடயமாக இருந்தது. நவநீதம் பிள்ளையின் சாதியத்திற்கு எதிரான ஐ.நா செயல்பாட்டு அறிக்கை அதன் முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ள வைத்தது. சாதிய ரீதியாக தமிழீழப்படுகொலையில் இந்திய ஆளும்வர்க்கத்தின் பங்கினை எடுத்து முன்வைத்திருந்தோம். இதனை இந்தியாவின் ராணுவ உதவிகள், களமுனை உதவிகள், ராஜ தந்திர ரீதியான உதவிகள், செயல்பாடுகள், ஆயுத உதவிகள், சர்வதேச நிருவனங்களை திசை திருப்புதல்கள், நேரடி பங்களிப்புகள் என பல்வேறு ஆதாரங்களை விரிவாக, ஆழமாக பதிவு செய்திருந்தோம்... இந்த புகைப்படத்தில் இருக்கிற விசாரணைக்குழுவின் தலைவர் திரு. டெனிஸ் ஹாலிடே, ஐ.நாவின் துணை பொதுச்செயலாளார் பொருப்பில் இருந்தவர். ஈராக்கின் மீது பொருளாதார தடை விதித்த பொழுது அதைக் கண்டித்து பதவியை ராஜனிமா செய்தவர். எங்களிடம் இவர் நீண்ட நேரம் இந்தியாவின் பங்களிப்பினைப் பற்றி விரிவாக பேசிக்கொண்டிருந்தார். எளிமையான்வராகவும், மனித நேயம் மிக்கவராகவும், மக்கள் உரிமையை புரிந்து கொள்பவராகவும் நல்ல தோழனாக பழகினார். இந்தியா சென்றதற்கு பின்னரான பாதுகாப்பு பற்றி பேசினார். அதை தாம் கவனிக்கவும் செய்வோம் என்றார். விசாரணை நாட்களில் ஆவணத்தினை ஆராய்ந்தும், சரிபார்த்தும், பிற வழிகளில் தகவல்களை சரிபார்த்தும் நிலைப்பாடு எடுக்கும் பொழுது போராடும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் ஆகச்சிறந்த மனித உரிமை செயல்பாட்டாளார்களே.. சிங்கள தோழர்களின் ஆழமான அர்பணிப்பும், உழைப்பும் ஆச்சரியப்படவும், வெட்கப்படவும் வைத்தது. அவர்களுடைய இதே உழைப்பினை எங்களால் ஏன் மூன்று ஆண்டுகளாக செய்யமுடியவில்லை என்பதே வெட்கப்பட வைக்கிறது. மூன்று வருட உழைப்பு வீண்போகவில்லை என்றாலும் இன்னும் அதிகமாக உழைத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது... இந்த ஆவணப்படுத்தலில் உழைத்த பல்வேறு தோழர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

வடக்கிற்கு சிவில் ஆளுநர் நியமிக்கப்படவேண்டும்-திஸ்ஸ விதாரண

'வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை விரைவில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடும்' என வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சிரேஷ்ட அமைச்சரும் சமசமாஜக் கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண ஆதரவு தெரிவித்துள்ளார். 'தமிழர்களின் விருப்பத்தைப் போன்றே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் விரைவில் அமுல்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்வர வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார். வடமாகாண சபையில் இராணுவ ஆளுநரை உடனடியாக பதிவியிலிருந்து நீக்கி அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 'வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சமசமாஜக் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உரிமையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கே இருக்கின்றது. அவர் தான் வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து இராணுவ ஆளுநரைப் பதிவியிலிருந்து நீக்கி சிவில் ஆளுநரை நியமிக்க முன்வர வேண்டும். வடக்கைப் பொறுத்த மட்டில் சிவில் ஆளுநர் ஒருவரே சிறந்தவராவார். அப்போதுதான் அங்குள்ள வர்களின் சுதந்திரமும் நிம்மதியும் பூரணமாக்கப்படும். இதை ஜனாதிபதி புரிந்து செயற்பட வேண்டும். ஆகவே மிக விரைவில் வடக்கில் சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.

12 டிசம்பர் 2013

ஊடகவியலாளருக்கு கட்டுப்பாடு ஏன்?சி.வீ.கே.விளக்கம்!

வடமாகாணசபை உறுப்பினர்களது பாதுகாப்பு முக்கியம் அதனால் ஊடகவியலாளருக்கு கட்டுப்பாடுஎன்கிறார் சிவஞானம்வடமாகாண சபை உறுப்பினர்களது பாதுகாப்பு மிக முக்கியம். அதனாலேயே ஊடகவியலாளர்களிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் திட்டமிட்ட வகையில் அவமதிக்கப்பட்டமை மற்றும் அவர்கள் கடைமைகளிற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டமை ஆகியவற்றினை கண்டித்து பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்த வரவு-செலவுத்திட்ட விவாத செய்தி சேகரிப்பினை இன்று பகிஸ்கரித்திருந்தனர். அரச ஆதரவு ஊடகங்கள் சார்ந்த ஒரு சிலரே அங்கு செய்தி சேகரிப்பிற்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்நிலையில் ஊடகவியலாளர்கள் திட்டமிட்ட வகையில் அவமதிக்கப்பட்டமை மற்றும் அவர்கள் கடைமைகளிற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் வி.ஐ.பி பாஸ்களுடன் சந்தேகத்திற்குரிய வெளிநபர்கள் நடமாடுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார். அதற்குப் பதிலளிக்கையிலேயே வடமாகாண சபை உறுப்பினர்களது பாதுகாப்பு மிக முக்கியம். அதனாலேயே ஊடகவியலாளர்களிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் கூறினார். எனினும் ஊடகவியலாளர்களது புறக்கணிப்பு விவகாரம் மாகாணசபை உறுப்பினர்களிடையே கடும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் கட்சி கூட்டத்தினில் உரையாடவுள்ளதாகவும் சில உறுப்பினர்கள் நேரடியாக வருகை தந்து அங்கு பிரச்சன்னமாகியிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

11 டிசம்பர் 2013

சிறீலங்கா ஜனாதிபதிக்கு புத்தபெருமான் நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டும்!

சிவாஜிலிங்கம் 
சிறிலங்கா ஜனாதிபதிக்கு புத்தியே இல்லை, புத்த பெருமானாவது அவருக்கு நல்ல புத்தியினைக் கொடுக்க வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் கிண்டல் அடித்துள்ளார். சிவாஜிலிங்கத்தின் இந்தக் கருத்தினைக் கேட்டு சபையில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டனர்.நேற்று செவ்வாக்கிழமை வடக்கு மாகாணசபையின் அமர்வு இடம்பெற்றது. இவ்வமர்வில் விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மக்களுக்காக போராடி உயிர்நீர்த்த அமரர் முன்னாள் ஜனாதிபதி நெல்ஷன் மண்டேலாவின் இறுதிக் கிரிகைக்காக சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவிற்கு புத்தி கிடைக்க வேண்டும். புத்த பெருமான் அவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஜனாதிபதிக்கு எதிராகவோ அமைச்சர்களுக்கு எதிராகவோ இங்கு உரையாற்றக் கூடாதென சபை முதல்வர் சீ.வீ .கே.சிவஞானம் குறிப்பிட்டபோது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம்"அவரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இதனைக் குறிப்பிடவில்லை, ஆண்டவன் அவருக்கு அருளைக் கொடுக்க வேண்டும் ஏன்ற நோக்கத்தினாலேயே இதனை நான் இங்கு குறிப்பிடுகின்றேன்" என்று தெரிவித்தார்.

10 டிசம்பர் 2013

சிறீலங்கா அரசு பாரிய இனப்படுகொலையில் ஈடுபட்டது!

தமிழர் தாயகம் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஜெர்மனியின் பிறேமனில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ரோம் நகரை தலைமையமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், கடந்த மூன்று தினங்களாக இந்த விசாரணையை முன்னெடுத்தது. இதன் இறுதி நாளான இன்று சிறிலங்காவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிலங்கா அரசாங்கம் பாரியளவில் மனித படுகொலையில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் குற்றச் செயல்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச மனித உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்காசமாதானத்திற்கான அயர்லாந்து பேரவை ஆகியன இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கு தொடர்பான முதலாம் கட்ட விசாரணை 2010ம் ஆண்டில் டப்ளினில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முதல் தடவையாக நீதிமன்றமொன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே மற்றும் புலம்பெயர் தமிழர்களும் இந்த நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நிரந்தர மக்கள் நீதிமன்றின் இந்தத் தீர்ப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

திருமலையில் முகமூடி அணிந்தவர்கள் தாக்குதல்!

திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் போன தங்களுடைய உறவுகளை கண்டறியும் குழு இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது திடீரென வந்த இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.இதனையடுத்து பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. முகமூடி அணிந்து வந்தவர்களே இவ்வாறு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது. சம்பவத்தில் காயமடைந்த காணாமல் போன உறவுகளை கண்டறியும் குழுவின் அமைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

09 டிசம்பர் 2013

விழி பிதுங்கும் வேலணை பிரதேச சபை தலைவர்!

தோழர் கமல் அவர்களின் உத்தரவுகளை தலை மேல் ஆணையாக நினைத்து செயல்ப்பட்ட தமக்கு சிக்கல்கள் முன்னே வந்து நிற்கின்றன என்கிறார் வேலணை பிரதேசசபை தலைவர். இங்கு தான் பொறுப்பாளராக நிலைத்து நீடிக்க வேண்டும் என்றால் தோழர் கமல் அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதையும் அவர் சொல்லும் வேலைகளையும் செய்து தானே ஆகவேண்டும்.வேலணையில் நடைபெற்ற நாம் செய்த பல அசாதாரண வேலைகள் வெளிப்படும் ஆபத்து கமல் மூலம் ஏற்பட்டால் நாம் திண்ணையை காலி செய்துவிட்டு ஓட வேண்டியது தான்.கூட்டமைப்பு தீவகத்தில் கால் ஊன்றுவதை தடுப்பதற்காக நிசாந்தனின் தீவிர விசுவாசியான வேலணை வங்களாவடி அதிகாரி என்று அழைக்கப்படும் சதாசிவம் லோகேஸ்வரனின் கதையை முடித்தபடியால் தான் என்னால் வேலணை பொறுப்பை தக்க வைக்க முடிந்தது.ஆனால், நெடுந்தீவில் ராஜீவ் கூட்டமைப்பின் விந்தனின் ஆதரவாளர்கள் சிலரை கமல் சொன்னது போல் செய்யாமல்விட்டது. ரஜீப் செய்த மிகப்பெரிய பிழை.புங்குடுதீவு யாழ் வர்த்தகர்கள் பலரிடம் கமல் கப்பம் பெற்றது தொடர்பில் கமலுக்கும் ரஜீபுக்கும் இடையில் பிரச்சனை நீருபூத்த நெருப்பாக நெடுங்காலம் இருந்து வந்தது.கமல் எங்களை மாட்டிவிட்டால் பலபிரச்சனைகள் வெளியாகிவிடும். நாங்கள் விசாரணைகளில் உண்மைகளை வெளிவிடுவதை தவிர வேறு வழி எமக்கு இல்லை. என தனக்கு நெருங்கிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரிடம் ஆதங்கத்துடன் தெரிவித்தார் என இணையமொன்றில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

சிங்கக் கொடியை நிராகரித்தார் ஐங்கரநேசன்!

News Serviceவடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கென ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க பாடசாலையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அன்றைய நிகழ்வில் அவரைத் தேசியக்கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அந்த அழைப்பை அவர் நிராகரித்தார். அதன்பின்னர் தேசியக்கொடியை மடு வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜே.அன்ரனியும், பாடசாலைக்கொடியைத் திருமதி சரோஜினி ரவீந்திரனும் ஏற்றி வைத்தார்கள். அங்கு மாகாணக்கொடிக்கென கொடிக்கம்பம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் பின்னர் இடம்பெற்ற பிரதம விருந்தினர் உரையின்போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையினை அனைத்துத் திணைக்களங்களுக்கும் விடுத்துள்ளார். இதேவேளை, இலங்கையின் தேசியக்கொடியில் வாளேந்திய சிங்கம் நிற்கும் வரையில் தமிழர்களின் தேசியக்கொடியாகவும் அதனைக் கருதமுடியாது. அத்துடன் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான தேசிய அடையாளமாக சிறுத்தையே பொருத்தமானது என்றும் அவர் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கூறி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

08 டிசம்பர் 2013

நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பி.முற்றாக வெளியேற்றம்!

நெடுந்தீவுப் பிரதேச சபை தவிசாளர் றெக்சியன் படுகொலையைத் தொடர்ந்து, அந்தக் கொலை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் (ஈ.பி.டி.பி) சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் நேற்றுத் திடீரென வெளியேறினர். அங்கிருந்த கட்சி அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் நெடுந்தீவை விட்டு வெளியேறினர். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றத ஈ.பி.டி.பி குழுவின் தலைமையில் இந்த மூடுவிழா நேற்று நடத்தப்பட்டது. அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின், ஊர்காவற்றுறைப் பிரதேச சபை தலைவர் என்.ஜெயகாந்தன் மற்றும் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர். நெடுந்தீவில் இருந்து ஈ.பி.டி.பியினர் வெளியேறிய அதே நேரத்தில் தீவகத்தில் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய கட்சி அலுவலகங்களை இழுத்து மூடுவது எனவும் அக்கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சகோதரப் படுகொலையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஈடுபட்டதை அடுத்து தீவக மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் எதிர்ப்பு உணர்வலைகளே ஈ.பி.டி.பியின் இந்த முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலையைக் கண்டித்து வந்த ஈ.பி.டி.பியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் அதே சகோதரப் படுகொலையில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் விசனத்தையும் கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஈபிடிபியினரை நெடுந்தீவில் இருந்து வெளியேறக் கூடாது என்று வலியுறுத்தி அங்குள்ள அவர்களது சில ஆதரவாளர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் எனவும் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

07 டிசம்பர் 2013

விசா மறுப்பால் அவதிப்படுகிறார் ஜகத் டயஸ்!

தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தம்மை ஓரம் கட்ட முயற்சிப்பதாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் படையினருக்கு சூழ்ச்சித் திட்டங்களை கட்டவிழ்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கான வீசா மறுக்கப்பட்டமை ஓர் சாதாரண விடயமாக கருதப்பட முடியாது எனவும் அவர் அங்கலாய்த்துள்ளார். இம்மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜகத் டயஸ் வீசா கோரி விண்ணப்பித்த போதிலும், வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி படையினரை தண்டிக்க சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் ஜகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக உலகின் ஏனைய நாடுகளில் போராடிய படையினருக்கு எதிராக இவ்வாறான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள ஜகத் டயஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய படையினரை தண்டித்து, பயங்கரவாதிகளை பாதுகாக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வீசா மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து கருத்து வெளியிட முடியாது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

06 டிசம்பர் 2013

மாவீரன் நெல்சன் மண்டேலா காலமானார்!

காவியநாயகன் நெல்சன்
தென் ஆபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா காலமானார். சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த மண்டேலா தனது 95ம் வயதில் காலமானார். நிறவெறிக்கு எதிரான அரசியல் போராட்டங்களுக்காக மண்டேலா தனது இளமைக் காலத்தின் 27 ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1990களில் சிறையிலிருந்து விடுதலையான மண்டேலா, தேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக போட்டியிட்டு முதல் கறுப்பின ஜனாதிபதியாக தெரிவானார். இந்த தேசம் மிக தலைசிறந்த பிரஜையை இழந்து விட்டது என தற்போதைய ஜனாதிபதி ஜெகோப் சூமா தெரிவித்துள்ளார். மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மண்டேலாவின் வீட்டுக்கு எதிரில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் குழுமி தங்களது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர். 1993ம் ஆண்டில் மண்டேலா நோபள் சமாதான விருதினைப் பெற்றுக்கொண்டார். 1994ம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மண்டேலா 1999ம் ஆண்டு கட்சித் தலைமைப் பதவியை துறந்தார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் மண்டேலாவின் மறைவிற்கு ஆழந்த இரங்கலை வெளியிட்டுள்ளனர்.

05 டிசம்பர் 2013

இலங்கை போர்குற்றம் குறித்து ஜெர்மனியில் விசாரணை!

இலங்கை மீதான போர்குற்றம் பற்றி ஜெர்மனியில் 7-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது. இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் என்ற பெயரில் சிங்கள ராணுவம் தமிழ் இனத்தையே அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டார்கள். தமிழ்ப் பெண்களை பிடித்துச் சென்ற ராணுவம் அவர்களை ஈவு இரக்கமின்றி கற்பழித்து கொன்றது. ராணுவம் பிடித்துச் சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கதி என்ன என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. போருக்குப்பின் அமைதி ஏற்பட்டாலும் தமிழர்கள் தங்கள் வீடு, நிலம் போன்றவற்றை இழந்து தவிக்கிறார்கள். இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகளை லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இது மேற்கத்திய நாடுகள் கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இலங்கை மீதான போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால் பக்கத்து நாடான இந்தியா இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. இந்த நிலையில் இத்தாலியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று இலங்கை ராணுவத்தின் மீதான போர்குற்றம் தொடர்பான வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்காக ஜெர்மனியில் தனி கோர்ட்டு அமைக்கப்பட்டு 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) விசாரணை தொடங்குகிறது. 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 10-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இத்தாலி அமைப்பு சார்பில் வடக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜூட் லால் பெர்னாண்டோ என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். 10 பேர் சாட்சியம் அளிக்கிறார்கள். இந்த வழக்கில் இலங்கையில் 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான சர்வதேச நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

04 டிசம்பர் 2013

வட மாகாண எதிர்க் கட்சித் தலைவராக கே.தவராசா?

வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தவராஜா நியமிக்கப்படலாம் என தெரிய வருகிறது. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வட மாகாண சபையின் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தொடர்பு பட்டிருப்பது உறுதியாகி இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.12.13) நெடுந்தீவினைச் சேர்ந்த லண்டன் சசிந்திரன் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று (03.12.13) நள்ளிரவு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினராலும், றெக்ஷிசனின் மனைவி ஊர்காவற்றுறை பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டிருந்தனர். மூவரும் இன்று (04.12.13) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களினை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இவரது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகலாம் என்ற சூழலில் இவருக்கு அடுத்த நிலையில் விருப்பு வாக்குகளைப் பெற்ற தவராசா மாகாண சபை உறுப்பினராகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் எதிர் கட்சி தலைவர் என்ற பெயரை அடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் அரசாங்கத்துடன் நெருக்கமாகி இருப்பவருமான அங்கயன் ராமநாதன் மாகாண சபையில் தனது முக்கியத்தையும் முன்னிலைப்படுத்த முனையும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அதிகாரம் எந்த வகையில் இருக்கும் என்பதனை பொறுத்தே இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.

சர்வதேச விசாரணை வேண்டும்!

சிறிலங்காவில் 2006ம் ஆண்டு சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட (ACF) பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்களது படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனக் கோராப்பட்டுள்ளது. பிரான்சினை தளமாக கொண்டு இயங்கும் பட்டினிக்கு எதிரான அமைப்பு, டிசெம்பர்-10 அனைத்துலக மனித உரிமைகள் நாளினையொட்டி தலைநகர் பரிசில் இயங்கும் மெட்ரோ தொடருந்தது ( Odeon ) நிலையத்தில் பரப்புரையொன்றினை மேற்கொண்டிருந்தது. மனிதநேயப்பணியாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்படுவதான அகண்ட காட்சிப்படம் பலரது கவனத்தினைப் பெற்றிருந்ததோடு, அனைத்துலக விசாரணை வேண்டி ஒப்பங்களும் குறியீட்டுரீதியாக பெறப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பங்கெடுத்து தங்களது தோழமையினை தெரிவித்துக் கொண்டதோடு , அனைத்துலக விசாரணைக்கு ஒப்பமிட்டுக் கொண்டிருந்தனர். இதேவேளை இப்படுகொலை தொடர்பில் 28 பக்கங்கள் கொண்ட ஆவணக் கையேடொன்றினை வெளியிட்டுள்ள ACF அமைப்பு, தனது பணியாளர்கள் முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை சிறிலங்கா அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

03 டிசம்பர் 2013

விவாதத்திற்கு பயந்து ஓடி ஒளிந்த தூதர்!

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து நடத்தப்பட்ட குழு விவாதத்தில் பங்கெடுக்க விடுக்கப்பட்ட அழைப்பை பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிஸ் நிராகரித்து விட்டார். புரொன்ட்லைன் கிளப்பில் நடந்த இந்த குழு நிலை விவாதத்தில், சிறிலங்காவின் முடிவுறாப் போர் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் பிரான்செஸ் ஹரிசன், சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களின் தயாரிப்பாளர் கலும் மக்ரே, சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனை முகாமையாளர் சோனியா ஸ்கீற்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு கருத்து வெளியிட்ட கலும் மக்ரே, “சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த விசாரணைகளிலும் நம்பகத்தன்மை இல்லை. சிறிலங்காவுக்கு விசாரணை ஆணைக்குழுக்களை நியமிக்கும் நீண்ட முடிவற்ற வரலாறு உள்ளது. வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இன்னும் பல ஆணைக்குழுக்களை நாம் பார்க்க முடியுமென நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக தென்னாபிரிக்காவின் உதவியுடன் போலியானதொரு உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என நினைக்கிறேன். கடந்த காலங்களில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதன் அடிப்படையில், எந்த விசாரணையும் போலியானதாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது குறித்து கருத்து வெளியிட்ட கலும் மக்ரே, இப்போது நாம் அழுத்தங்களை தொடர வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.சி.எவ்.ஊழியர்களை படுகொலை செய்தது சிறிலங்காப் படைகளே!

பிரெஞ்சு தொண்டு நிறுவனமான, ஏ.சி.எப் 2006ல் இலங்கையில் தனது உள்ளூர் ஊழியர்கள் 17 பேரைக் கொன்றது இலங்கைப் பாதுகாப்புப் படையினர்தான் என்று குற்றம் சாட்டியிருக்கிறது. தனது ஊழியர்கள், முழங்காலிட வைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைக் கொன்ற கொலையாளிகளை இலங்கை அரசு இது வரை பாதுகாத்து வருகிறது என்றும் கூறுகிறது. இந்தத் தகவல் நேரில் கண்டவர்களிடமிருந்தும், ரகசிய ஆவணங்களிலிருந்தும், ராஜிய வட்டாரங்களிலிருந்தும் தனக்குக் கிடைத்துள்ளதாக அது கூறுகிறது. இந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.

நன்றி:பி.பி.சி 

02 டிசம்பர் 2013

சிதம்பரத்தின் தேர்தல் பேச்சு அம்பலப்படுத்தியது சிறிலங்கா!

இலங்கையில் இணைந்த வடக்கு-கிழக்கு பிராந்தியத்தில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பெற்று கொடுக்கப்படும் என்ற இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு இலங்கை அரசு காட்டமான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். 'இலங்கை தனி இறையாண்மை கொண்ட ஒரு நாடு, இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், 'வாக்கு சேகரிக்கும் நோக்குடன்' அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்துக்களை இலங்கை பெரிய அளவில் கணக்கில் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தமிழோசையிடம் தெரிவித்தார். 'அமைச்சர் சிதம்பரம் தேர்தல் வாக்குகளுக்காக பேசிய கருத்துக்களை இலங்கை கணக்கில் எடுக்காது' என்கிறார் இலங்கை அமைச்சர் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்ற அமைச்சர், ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன செய்துகொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாகவே வடக்கு கிழக்கு பிராந்தியம் இணைக்கப்பட்டதாகவும் கூறினார். பின்னர், வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னர், அதுபற்றி பேச எவருக்கும் உரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். 'முதலில் இந்தியாவின் பிரச்சனையை தீருங்கள்' 'எங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த கழிப்பறைகள் இருக்கின்றன. முதலில் அவர்களை அவர்களின் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கச்சொல்லுங்கள். எங்கள் நாட்டுப் பிரச்சனைகள் பற்றி அவர்கள் பேசவேண்டியதில்லை. அவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்றும் இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த் கூறினார். 'கனவுலகில் இருந்துகொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் சிதம்பரத்தை முதலில் இங்கு வந்து நிலைமையை பார்க்கச் சொல்லுங்கள். தென்னிந்தியாவை விட வடக்கு-இலங்கையிலுள்ள மக்கள் நல்ல வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்' என்றும் இலங்கை அரசாங்கம் சார்பில் பேசவல்ல அதிகாரியான சுசில் பிரேம்ஜயந்த் தமிழோசையிடம் கூறினார்.

01 டிசம்பர் 2013

புங்குடுதீவில் கொல்லப்பட்டவர் தொடர்பில் ஒருவர் கைது!

ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் . பிடரிப் பகுதியில் காயமிருந்தமையினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுது , அவரது தலையிலிருந்து துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டது.தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரதேச சபைத் தலைவர் இறப்பதற்கு முன்னர் பயணம் செய்த ஆட்டோவில் இருந்த நபர் தொடர்பில் விசாரணையினை ஆரம்பித்திருந்தனர்.இந்நிலையில் நெடுந்தீவினைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.இதேவேளை இக்கொலை ஈ.பி.டி.பியின் உள்முரண்பாடாக இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஐ.நா.பிரதிநிதி இலங்கைக்குள் நுழைய அனுமதி!

சர்வதேச அழுத்தத்துக்குப் பணிந்துள்ள இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு இணங்கியுள்ளது. இதனையடுத்து உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி நாளை திங்கட்கிழமை 02.11.13) இலங்கை செல்கிறார். அவர் மறுநாள் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது. இதில் இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட இலங்கை அரசு, ஐ.நாவின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும், மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஏற்கமாட்டோம் என்றும் கூறிச் சர்வதேச அழுத்தத்தை நிராகரித்திருந்தது. இந்த நிலையில் சர்வதேச விசாரணைக்கான காலக்கடுவை பிரிட்டன் நிர்ணயித்துள்ள வேளையில் சர்வதேச அழுத்தத்துக்குப் பணிந்து ஐ.நாவின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு அரசு இணங்கியுள்ளது. நாளை திங்கட்கிழமை இலங்கை செல்லும் ஐ.நா அதிகாரி பெயானி, மறுநாள் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்ட அரச அதிபர், யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோரை அவர் சந்திப்பதுடன், வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள கோணப்புலம் நலன்புரி நிலையத்துக்கும் செல்வார். இதன் பின்னர் எதிர்வரும் புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் அவர், அங்கு அரச அதிபரையும், இராணுவத் தளபதியையும் சந்தித்துக் கலந்துரையாடுவார். கொழும்பில் இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார். இவரது இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.